Thursday 28 June 2012

வசப்படும் உணர்வுகள்...!



உணர்வுகள் உரசப்படா
வெற்றுக் காகிதத்தின் மற்றுமோர்
பக்கமாய் வாழ்க்கை சுழற்சி...!

ஆழியின் ஆக்கிரமிப்பு
மனசெல்லாம் சுழலச் செய்து
அஹிம்சை வெல்ல சபதமிடும்...!

வலிகள் சுமந்தே கதறிட்ட மனம்
கானல் கண்டு மயங்கிட துணியும்
காரணங்களே வேண்டாமல்...!

மனங்கள் மயங்கிடும் மாய
வலைக்குள் எதிர்ப்புகள் இல்லாமல்
வீழ்ந்து விடலாம், எழுர்ச்சி என்றோ?

நிலவு மறைக்கும் கார்மேகம் போலே
மறைந்தே கிடக்கின்றன
நமக்கான விடியல்...!

மழை பொழிந்ததும்
விடுபடும் நிலவாய்
வசப்படட்டும் வாழ்க்கை என்றும்...!

Tuesday 26 June 2012

நினைவெல்லாம் நீ...!


உனக்கென மடல் வரைய
ஆவலாய் வந்தமர்ந்தேன்...
மனம் முழுக்க உன் நினைவு
சுகமான அவஸ்தையாய்
உயிர் வருடி சென்றது...!

உதட்டோர புன்னகை
உன் பெயரை பலமுறை
உச்சரித்து புளகாங்கிதம் கொண்டு
அதரத்தில் பூ மலர செய்தது...!

என் ஆணவமும் அதிகாரமும்
இன்றென்னை அலட்சியம் செய்து
உன்னை நினைத்து
பனிக்கூழ் சுவைக் கூட்ட
மெல்ல மெல்ல உருக துவங்கின...!

யார் அழைத்தாலும்
நீயே அழைத்து போல்
பிரம்மை வந்து இம்சித்து
கொல்கிறது...!

சின்னத்திரையில் அலைபேசி
அழைத்தாலும் நீ எனை
அழைப்பதாய் எண்ணி
எடுத்து விட கை நீட்டுகிறேன்...!

உன் ஒற்றை குருஞ்செய்தி
வருமென காத்திருந்து
கண்கள் இன்னும்
வெறித்த வண்ணம் தவமிருக்கின்றன...!

ஒவ்வொரு துளிக் காத்திருப்பும்
என்னுள் ஒரு சமுத்திரத்தை உருவாக்கி
நியாபக அலைக்குள்
உன்னை சுருட்டி
என்னை வெளித் தள்ளியது...!


கரைந்து கொண்டே இருக்கிறது
உனக்காக நான் சேமித்து வைத்த
பொன்னான தருணங்கள்...!

மனமோ கோபத்தில் உன்னை
கடிந்துக் கொள்கிறது...
தவிக்க விட்ட உன்னை
பரிதவிக்க செய்ய
வீரியம் கொண்டு விட்டொழிந்தேன்
உனக்கும் எனக்குமான
காற்று வழி தூதை...!

இம்முறை நீ
அழைத்தே விட்டாய்...
தனிச்சை செயலாய்
கைபேசி பாய்ந்தெடுத்து
சொல்லுடா... என்கிறேன்
எதுவுமே நடவாதது போல்...!


Monday 25 June 2012

அக்றிணையில் ஒரு நேசம்...!


அக்றிணையில் ஒரு நேசமென
தலைப்பிட்டு காத்திருந்தேன்
கவியொன்று படைக்க...!

கண்முன் வந்து சென்றது
நேற்று தெருவோரம்
பார்த்த பூனைக்குட்டி...!
மியாவ்வென மிழற்றியபடியும்
அகதியாய் இருப்பிடம் தேடியபடியும்...!

ஆசையாய் அணைத்துக் கொண்டே
அதற்கோர் ஆதரவை
வேண்டிய ஆசை மகள்
மனம் கலங்கலாகாதென
தலையசைத்திருந்தேன் நானும்...!

கண்டெடுத்த பூனைக்குட்டி
காணாமல் போனதென
காலை முதல் அரற்ற துவங்கியிருந்தாள்
என் உதிரத்தில் உதித்தவள்...!

கண்கள் குளமாகி அழுதுதழுது
தேம்பிய அவள் முகம் பார்த்து
எனக்குள் எதுவோ பிசைய துவங்கியது...!

அட! திடீரென அவள் கையில்
தொலைந்து போன பூனைக் குட்டி...!

“ஏண்டா விட்டுட்டு போன?”
வண்டியில அடிபட்டா நசுங்கி
போய் செத்திருப்ப...
நாயும் கடிச்சிருந்தா
நார் நாரா கிளிஞ்சிருப்ப...

வாய் புலம்பல் தொடர்ந்த படி
ஒரு கையால் பிடித்துக் கொண்டு
மறுகையால் அது மிரள
தலை மேலே ஒரு குட்டு...!
மறுநிமிடம் வலிக்குமென பதறி
அடித்த இடம் தடவியபடி
தொடர்ந்து கொண்டிருந்தது அவள் புலம்பல்...!

ஏன் அழுகிறாள்? எதற்கு அடிக்கிறாள்?
புரியாமலே அவள் மடி சுருண்டது
பூனைக் குட்டி, அடைக்கலம் தேடி...!
கண்டுகொண்டேன் நானும்
அக்ரிணையில் ஒரு நேசத்தை...!


Saturday 23 June 2012

உன்னை அறிந்தேன்...!

மாய பிம்பங்கள் உடைத்து
உள்ளிருக்கும் உன்னை நான்
உரித்தே காண்கிறேன்...!

ரணங்களும் வேதனையும்
சேர்த்து பின்னிய வலையொன்றின்
தானே சிக்கிட்ட சில்வண்டாய் நீ...!

ஒவ்வொரு கணமும்
வேதனை மறைத்து பொய்மை பூசி
பிறர் மகிழ்வித்து நீ
தனியறையில் வீழ்ந்தே கிடக்கிறாய்...!

சாம்ராஜ்யம் காக்கும்
சர்வாதிகாரியான நீ
என்னிடம் மட்டும் மழலை முகம்
காட்டி அடம்பிடிக்கிறாய்...!

உன் ஆளுமை பண்பு
எனக்குள் மட்டும் ஏனோ
தன்னடக்கம் கொண்டு
பாசம் காட்டி நேசம் வேண்டுகிறது...!

பொதுவில் அறிமுகமாகும் போது
நாங்கள் என்றே அறிமுகபடுத்திக்
கொள்கிறேன் உன்னையும் சேர்த்து...!

சிலசமயம் என்னை மறைத்து நீயும்
பல சமயம் உன்னை மறைத்து நானும்
வெளிப்பட்டே உறைகிறோம்
மனசாட்சி என பெயரிட்டு...!



Monday 18 June 2012

உணர்வின் சங்கமம்...!!!


வேர்பிடித்து படரும் உணர்வெனும்
ஆலமரத்தின் சிறு விழுதுப் பற்றி
உயிரெழுச்சி செய்யும்
முயற்சியில் நான்...!

உணர்வுகளின் கலவைகளில்
சந்தோசம் கும்மாளமிடும்,
கிண்டல் புன்சிரிக்கும்,
வருத்தம் மவுனமாகும்
துக்கம் தொண்டையடைக்கும்...!

குரோதத்தையும் வஞ்சத்தையும்
நெருங்கிட இயலா
பாதாளச் சிறை தள்ளும்
தர்ம ராணியாகவும் நான்...!

அன்பெனும் விதைவிதைத்து
பாசமெனும் நீரூற்றி
நேசமென உரம் வார்த்து
வளர்ந்து விட்ட உணர்வுக் கூட்டம்
என் வாழ்க்கைத் தோட்டத்தின்
அழகான பசுஞ்செடிகளாய்...!

சோலைகளை தரம் பிரித்து
தனிக் கவனம் ஒவ்வொன்றிலும்...
நட்புச் சோலையில் வேப்பமரமாய்
சாமரம் வீசும் நான்
உறவு சோலையில் ரோஜாவாய்
மலர்கிறேன்...

மொட்டாகி பின் பூவாகி
காயாய் மாறிட்ட காதலை
பழமாய் கனியச் செய்யும்
சூத்திர தாரியாகவும் நான்...!

உணர்வுகளின் சங்கமத்தில்
தரமாய் அடுக்கப்பட்ட வாழ்வியல்
ஏடுகளை சுவை மாறாமல் ருசித்து விடும்
ஆவல் படர தொடர்ந்தே செல்கிறேன்...!




Sunday 17 June 2012

ஆளுமை

உன்னை காணாமல்
நான் அனத்திய நேரம்
பின்னின்று அணைத்தே
தவிக்க விட்டாய்...!

கண் நோக்கி
கண் சொருகும் தருணம்
அமிர்தமாய் உன் முத்தம்
கன்னம் வழுக்கி பக்கம் சாய்கிறது...!

விழித்துக் கொண்ட
காது மடல்கள்
உன் மூச்சுக் காற்றில் வெப்பமடைந்து
சிலிர்த்துக் கொண்டன...!

தொண்டை குழிக்குள்
ஏக்கப் பந்து ஏக்கம் தீராமல்
வெளியேற வழியின்றி
தவிக்கத் துவங்கியது...!

அதரம் சுவைக்கும்
உன் வேகம் கண்டு
சூடேறத் துவங்கிய உதிரம்
தேகமெங்கும் வெப்பம்
பாய்ச்சி சென்றது...!

இமைச்சிறைக்குள் அடைப்பட்ட
விழிகளோ உன் காந்தப் பார்வையில்
கிறங்கி முழுதாய்
உன்னை பருக முயன்றன...!

என்னை ஆளத்துவங்கிய
உன்னை வெல்லத்துடிக்கும்
ஆசையில் நான்
இன்னும் இன்னும் உன்னுள்
மூழ்கியே போகிறேன்...!

Thursday 14 June 2012

நட்பின் தவிப்பு...!


தென்றலின் தீண்டல் கூட
வெம்மையின் தன்மை
பேசிச் செல்கிறது இன்று...!

கேட்டு விட்ட வார்த்தையொன்றின்
வெப்பத் தாக்கம் புறஊதா
கதிர் தாண்டி
நெஞ்சடைத்து நின்றது...!

நரம்புகளின் துடிப்பில்
சப்த ஸ்வரங்களும் நடனமாடி
பின் அமைதி காத்து மிரட்டியது...!

நட்பின் மென் கோட்டின் மேல்
காதலென பாய்ந்து விட்ட
கத்தியொன்று கூர்த்தீட்டப் படாமல்
அறுந்து கொள்ள அனுமதி வேண்டுகிறது...!

ஒற்றை புள்ளி வைத்து
முற்றும் போட இதென்ன
பத்திரிகை தொடர் கதையா?

உணர்வும் கண்ணீரும்
புரிதலும் புன்னகையுமாய்
உருவம் கொடுத்த உன்னதமிது...!

நூல் அறுந்து படபடக்கும்
பட்டத்தின் தவிப்பை
என்னுள் தந்து விட்டு
எரியும் தணலின் கூர்நாக்குகளில்
உன் மென்பாதம் பதிக்கிறாயே...!

சிதைந்து விட்ட வலையென
விட்டு சென்று துவளாமல்
மீண்டும் முயல்கிறேன்
இன்னுமொரு வலை பின்ன...!

கரங்கள் பற்றி வலிமை கொடுப்பாயா?
நம் உறவின் பலமாய் பாலமுமாய்
எல்லாமுமாய் நிறைந்திருப்பவனே
எனக்கு உன் பதிலுமெங்கே?


தாவணி கனவுகள்...!

எண்ணிப் பார்க்கிறேன்...
அந்த சின்னஞ்சிறு
மழலைப் பருவத்தை...!

பயமறியாமல் கொய்யா மரமேறி
மாமர அணிலோடு மற்றொரு அணிலாய்
பழம் கொறித்து போட்டி போட்டதை...!

சவால் விட்டு நுனிமரமேறி
ஒடிந்து விழும் கிளையோடு
சேர்ந்தே விழுந்து அழுததை...!

காடு மேடென அலைந்து
பாட்டுக்கு எதிர்பாட்டு பாடும்
கருங்குயிலை தேடி அலைந்ததை...!

தோழமை புடைசூழ
மணல் வீடு கட்டி புது மனை புகுந்து
மணல் சோறு சாப்பிட்டதை...!

செல்லக் கோபத்தோடு
துரத்தும் தாயை ஓட விட்டு
மூச்சிரைத்ததும் பின்னால்
வந்து கட்டிக்கொண்டதை...!

தெருவோரமாய் தோழர்கள்
சேர்ந்து கோலிக்குண்டு
விளையாடி சண்டை போட்டு வந்ததை...!

தாவணி போட்ட
பள்ளிச்சிறுமிகளை
ஏக்கமாய் பார்த்ததை...!

எண்ண மறந்து விட்டேன்...
அந்த தாவணியே அவர்கள்
சிறைக்கதவுகள் என்பதை...!

இன்று என் ஆசைகள்
தாவணிக் கனவுகளாய்...!

Monday 11 June 2012

வாழ்க்கை புத்தகம்...!

வாழ்க்கை புத்தகம் எல்லாம்
நிரப்பி சென்ற அம்மா
வாழ்க்கையை நிரப்பாமல்
ஏனோ சென்று விட்டாள்...
நானும் ஓர்
வாழ்க்கை புத்தகம்
எழுத வேண்டுமென
நினைத்ததாலோ?????

கவிதை...

தென்றலும் இனிமையும்
மட்டுமல்ல,
தனிமையும் வெறுமையும் கூட
பிரசவிக்கும் அழகு குழந்தை
– கவிதை

நம்பிக்கை மட்டும் குறையாமல்...!

இன்று,
நாளை,
நாளை மறுநாள்......
எப்படி கடந்து கொண்டே இருக்கிறதோ
அப்படியே தொடர்கிறது வாழ்க்கை
- நம்பிக்கை மட்டும் குறையாமல்...!

என்றும் நமதாய்...!

நான், எனது,
நீ, உனது,
நாம், நமது...
இனி..
எனது உனதாய்,
உனது எனதாய்
என்றும் நமதாய்...!

நீ...!

நீ...!
எனக்கு தேவைப்பட்டதால்
என் மனச்சிறையில் சேமித்து வைத்தேன்...

நான்....!
உனக்கு தேவைப்படாததால்
உன் மனதிலிருந்து தூக்கி எறிந்தாய்...

நான், உனக்கு குப்பைத் தொட்டி,
நீ, எனக்கு அதில்
கண்டெடுக்கப்பட்ட கோமேதகம்...

அடம்பிடிக்கும் உள்ளம்...!

உன்னில் எனக்கு
எதிர்பார்ப்புகள் இல்லையென
வாய் சொன்னாலும்...
உன்னை தவிர
வேறு எதையும் எதிர்பார்க்க
மாட்டேனென அடம்பிடிக்கிறது
உள்ளம்...!

Sunday 10 June 2012

அன்புள்ள தம்பி...!

அன்புள்ள தம்பி,
நீ பிறந்த தினம்
மருத்துவமனை வாசலை
குறுக்கும் நெடுக்குமாய்
நடந்தே கடந்தேனாம் நான்...!

இவன் உனக்கு குழந்தையென
அம்மா கையளித்தபோது
இனம் புரியா உணர்வோடும்
ஏதோ ஒரு கலக்கத்தோடும்
உன்னை தீண்டிய தருணம்
நியாபக மின்னலை சற்று
உரசி விட்டுச் செல்கிறது...!

நீ என் கைபிடித்து
நடைபழகிய நாட்களும்...
அப்பா கொடுத்த மிட்டாயை
விழுங்க தெரியாமல் திணறிய நாட்களும்
இன்னும் என் நினைவு கூட்டுக்குள்
பத்திரமாய்...!

ஒன்றாய் அமர்ந்து அம்புலி மாமா
கதை படித்ததும்...
அம்மா இடுப்பில் சவாரி செய்ததும்...
மீன் குஞ்சென
தலைபிரட்டை பிடித்து வந்ததும்...
இன்னும் என்னென்னவோ சங்கதிகள்
நினைவுக் குதிரையில்
சவாரி செய்கின்றன...!

நினைவிருக்கிறதா உனக்கு???
உன்னை என்னிடம் அம்மா
விட்டுக் சென்ற நாள்...!

அன்றுமுதல் மெளனியாய்
போய் விட்ட உன்னை
ஏனோ நானும் கண்டுகொள்ளாமல்
விட்டதேனோடா...!

பாசப்பறவைகளாய்
கூடித் திரிந்த நாம்
இன்று சிறைப்பறவையாய்
ஒரே கூட்டுக்குள் வெவ்வேறு திசையில்...
கூண்டுக்குள் சிறைப்பட்டே
உன்னையும் சிறைப்படுத்தினேன்...!

வேணாம்டா நமக்குள்
இந்த முகமூடி...!
சொக்கட்டான் ஆடவும்,
தாயம் உருட்டவும்
ஒருகை குறையுது...
கை கொடுப்பாயா...!

வா...! வந்து விடு...!
அம்மாவின் கடமையை
கைவிட்ட என்னிடம் மறுபடி
கைப்பிடித்து நடைபழக
வந்து விடு...!

Saturday 9 June 2012

நிழலின் பிம்பம்

கண்ணாடி சிறைக்குள்
நின்று வேடிக்கை
பார்க்கிறேன் நான்...
விளையாட வேண்டுமென்றது மனம்...

அம்மா அழுவாளோ...
அப்பா அடிப்பாரோ...
தம்பி முறைப்பானோ...

ஹஹஹஹா வாய் விட்டு
சிரிக்கிறது மனசு
விம்மி விம்மி
அழுகிறது வாய்...

நானும் ஏன்
இந்த பட்டாம்பூச்சியாய்
பிறந்திருக்க கூடாது?
அம்மாவிடம் கேட்டேன்...

அதன் ஆயுசு குறைவு, நீ
தீர்க்க சுமங்கலியாக 
வேண்டுமென்றாள் அவள்...

மவுனமாக சிரித்துக் கொண்டேன்...
அப்படியும் கூட
அடுத்தவன் ஆயுளுக்காக
வாழ வேண்டுமாம் நான்...

Thursday 7 June 2012

சுமை தாங்கி கல்...!


நான்னெங்கே என அறிந்தும்
புரியாமல் கேட்பவனே
உனக்கேன் தெரியவில்லை
உன் வழித்துணையாய்
காலடி சுவடாய் நானிருப்பதை???

பகலில் மறையும்
நிலவென்றாய் என்னை...
சூரியனாய் மாறி உன்
விடியல் மலர காரணம் நானே...!

உன்னோடு சங்கமித்து விட்ட
வழிகளெங்கும்
உன் வலி சுமந்தே
சுமை தாங்கி கற்களாய்
நானும் உருமாறி போனேன்...!


Wednesday 6 June 2012

பட்டாம்பூச்சி உணர்வு...!


இதோ வந்துவிட போகிறதென
ஏழாம் அறிவு எச்சரிக்கும் முன்பே
எட்டிப்பார்க்க துவங்கியது வலி...!

கீழிருந்து மெதுவாக மேல்நோக்கி
வேகமாக நகர்ந்து விடத்துடித்த
பூரானாய் கிளை பரப்பத் துவங்கியது...!

“அம்மா” என்ற கேவல் அடுத்தநொடி
:ஐயோ”வென உச்சக்கட்டம்
அடையத் துடிக்கிறது...!

“விதி” உள்ளிருக்கும் அத்தனை
உணர்வுகளையும் சாகடித்து
“வலி” என்ற ஒன்றை மட்டும்
முன்னிருத்தி வேடிக்கை பார்க்கிறது...!

உயிர் பறிக்கும் வலி
சில நிமிடங்களே...
இதுவோ...
உயிர் வதைக்கும் வலியாகி
உதைத்தே உயிர் ருசிக்கிறது...!

செய்வதறியாது திகைத்தும்
துடிக்கும் கண்களை
சந்திக்கவும் இயலாத உறவுகள்
ஒரு கை பிடித்து மறுகை பிசைந்தே
என்னை யாசித்தே நின்றனர்...!

நான், எனது தேவை, எனது கடமையென
நானாய் இங்கு சுயநலம்
கொண்ட நொடி விருட்டென எழுகிறேன்
மேலும் மேலும்
வலி வதைத்து வலிமை பெற்றே...!

வேதனித்த வேளையிலும்
கவிதாகம் நெஞ்சடைக்க
பரவி விட்டிருந்த கரப்பான்
ஒரு மெல்லிய பட்டாம்பூச்சியாய்
சிறகடிக்கத் துவங்கியது...!

Tuesday 5 June 2012

இயற்கை விதி...!

காரிருள் விழித்து
பகலவன் மெதுவே
எட்டிப் பார்க்கத்
துவங்கியத் தருணம்...!

வைகறைப் பொழுதின்
ஆனந்த குளியலை
அனுபவிக்க எண்ணி
தூக்கம் கலைந்தேன் நானும்...!

இரவின் மடியில்
மயங்கிய கிறக்கத்தால்
கண்கள் சிவந்து வண்ணம்
பரப்பியிருந்தது செவ்வானம்...!

பச்சைப்பசேல் புல்வெளிகளெங்கும்
பனித்துளிகள் விண்வெளியின்
முகவரி கேட்டு முகாரி
பாடிக் கொண்டிருந்தன...!

தாயோடு கொஞ்சியபடி
அணில் பிள்ளைகள் நான்கு
கீச்சிட்டவாறே வெளியுலகம்
எட்டிப் பார்த்தன...!

ஒன்றன் வால்
பிடித்து மற்றொன்று
நேர்க்கோடும் வட்டமுமாய்
வாழ்வியல் பாடங்கள்
படிக்கத்துவங்கின...!

எங்கிருந்தோ பறந்து வந்த
வல்லூறு ஒரு நொடி
இடைவெளியில் ஒன்றின்
உயிர் பறித்துச் சென்றது...!

பதறித்துடித்த தாயின் மனம்
கத்தியும் கதறியும்
தொண்டை வறண்டே போனது...!

ஓடி ஒழிந்த பிள்ளைகள்
மூன்றும் தாய் நேசம்
வேண்டி நிற்க
மீண்டும் பயணிக்கத்
துவங்கியது அவற்றிற்கான
மற்றுமொரு விடியல்...!

ஆங்கே...
ஓங்கி வளர்ந்த
ஒற்றைப் பனை உச்சியிலே
பசியொடு தவித்திருந்த குஞ்சுகளை
பசியாற்றிக் கொண்டிருந்தாள்
வல்லூறு தாய்...!

"இயற்கை விதித்து வைத்த
விதியிது" பெருமூச்சின்
ஆயத்தத்ததோடு எனக்கும்
விடியத் துவங்கியது
இன்றைய பொழுது...!

Saturday 2 June 2012

ஏட்டுச் சுரைக்காயும் மரித்து விட்ட தளிரும்...


அன்று, உன்னை நான்
பார்த்த போது மலராத மொட்டாய்
பெரிய நந்தவனத்தில் தனித்த
தளிராய் நீ இருந்தாய்...!

கை நீட்டி என்னை நீ
அணைத்தப் போதுதான்
ஓர் உண்மை உரைக்கக் கண்டேன்...!
ஆம், மலரினும் மென்மையானவள் நீ...!

உன் தொடு உணர்வின் சிலுசிலுப்பில்
என் உள்ளம்தனை மைக்ரோ நொடியில்
கவர்ந்தே விட்டாய்...!
அன்றே என் வாழ்வின் வசந்தம் உணர்ந்தேன்...!

உன்னோடு பயணிக்கவும் சயனிக்கவும்
விருப்பம் கொண்டே
உன் வாசம் சுவாசித்தே
வாசல் புகுந்தேன்...!

உன் அறை நுழைந்த நான்
சற்று கலங்கியே போனேன்...
என்னை விட நீ அதிகம்
அணைத்ததும் விசுவாசித்ததும்
எழுத்துக்களும் கருத்துக்களும்
திணிக்கப் பட்டிருந்த
உன் புத்தகங்களை தான்...!

எதிர்கால வாழ்க்கைக்கு
அவசியம் தான்
அதற்காக நிகழ்கால நிஜங்களை
புறக்கணித்தல் எவ்விதம் நியாயம்?
இதோ உனக்காக காத்திருக்கிறேன்
நீ படித்து முடித்து எறிய போகும்
ஏட்டு சுரைக்காய் நூல்களை 
கண்டு எள்ளி நகையாட...!

திடீரென மார் பிடித்து கதறி
அடுத்த அரை நிமிடத்தில்
நீ மண்ணுலகம் பிரிந்த போதுதான்
அறிந்துக் கொண்டேன்
வாழ்க்கை நிச்சயமற்றது
என் ஆசைகளும் நிராசையானதென...!

மலரே, நீ சிந்த மறந்த
சிரிப்புக்களை கவர்ந்து
கொண்ட உன் மென் இதயம்
பாரம் தாங்கா காரணம்
நானறியேன்...!

மரண தாகம் கொண்டு
உன் உயிர் பருகிய எருமை வாகனன்
மரண ஓலத்தை மட்டும்
எங்களிடையில் விட்டுக் சென்றான்...!

வாய் விட்டு கதறும்
மக்கள் மத்தியில்
உயிரற்ற பொருளாய்
உன் வாசம் தேடி கதறுகிறேன்...!

இப்படிக்கு....
ஒரே ஒரு முறை
உன்னால் தீண்டப்பட்டு
மறுத்தீண்டலுக்காய்
இலவு காத்துக் கிளியாய்
உன் நேசம் கிட்டா
பொம்மைக் குட்டி...!


Friday 1 June 2012

மறுபாதியாய் நீ...!


இன்று தான் நீ
என்னில் உணர்த்திய
மாற்றம் அறிந்தேன்...!

வயிற்றை புரட்டி
வெளிவந்தது உன்
வருகைக்கான முதல் செய்தி...!

லேசாய் சுற்றிய தலையின்
நினைவுக்குள் நீ வந்து
என்னை கிறுகிறுக்க வைக்கிறாய்...!

என் உதிரத்தின் உயிராய்
நீ துளிர்த்து விட்ட செய்தியால்
நானும் இன்று புதிதாய் பிறந்தேன்...!

உன் உருவம் எதுவென அறியேன்...!
உன் நிறமும் யாதென நினையேன்...!
உன் பாலினம் பற்றிய நினைவு
எழும்போதெல்லாம் நீ என்னுள்
அன்றலர்ந்த பூவாய் சிரிக்கிறாய்...!

உன் தாத்தன் ரசிக்கும்
ஜான்சி ராணியில்
நீயே கதாநாயகியாய்
வீற்றிருந்து வீரம் காட்டுகிறாய்...!

உன் பாட்டி விட்டுச்சென்ற
அன்பு ஊற்றிலே நீ ஒரு
அன்னை தெரசாவாய்
உருவமேற்கிறாய்...!

உன்னை பதியமிட்டவன்
ரசிக்கும் வலைத்தளத்திலோ
கல்பனா சாவ்லாவாய்
கையசைக்கிறாய்...!

ஒரு மாமன் கற்பனையிலோ
நீ சாகசம் புரியும் டோராவாய்...!

தாய்மாமன் நேசிக்கும் பெண்மையிலோ
நீ நானாகவே அவர் மடியில்
சுட்டித்தனமும் குறும்புமாய்
பொக்கை வாய் மலர்கிறாய்...!

எனக்கோ நீ...
திருநெல்வேலியில் கண்டெடுத்த
வைரமுத்துவாய்...
என் கன்னம் ஈரப்படுத்தும்
மெல்லிய பனித்துளியாய்...

எப்படி சொல்வேனடி என் கண்ணே...!
நீ போதுமெனக்கு...!
என்னை ஒரு நிலை
உயர்த்தியவள் நீ...!
என்னின் மறுபாதியும் நீ...!
நான் ரசிக்கும் தேவதையும் நீ...!
இறைவன் அளித்த கொடையிலே
அவனுக்கே கிட்டாத நல்முத்தும் நீ...!