Sunday 29 July 2012

சிதைக்கப்பட்ட தாய்மை...!

மனமென்னும் கண்ணாடியை
ஊடுருவி பார்க்க இயலா
இரும்பு நெஞ்சத்தவளே...!
கிள்ளையென நீ கையெடுத்து
கொஞ்ச வேண்டிய தங்க மேனியை
இதோ உனக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறேன்...
நன்றாக ஊடுருவிப் பார்...!

கட்டாயப் பிடியில் அறுத்தெறிந்த
உறவாய் உன்முன் உறைந்திருக்கும்
என்னை சற்றே கண்திறந்து
நீயும் பார்...!

உணர்வுகள் பிடுங்கி என் துடிப்பொழித்து
நீ செய்த ஒரு இரக்கமில்லா கொலை
என் கண்ணாடி மேனியை
ஊருக்கு இன்று அடையாளம் காட்டுகிறது...
ஒரு நிமிடம் விழியசைக்காமல்
வேடிக்கைப் பார்...!

உன் ஆலிங்கன ஆசைக்கு
மவுன சாட்சியாய் உதித்து விட்ட
என்னை மரத்துப் போய் நீயும்
மரிக்கச் செய்த நியாயமென்ன?

சிறு கத்தி கீறிய சுட்டுவிரல் கண்டு
துடிதுடிக்கும் நீ...
தாயென சுட்டிய இதயத்துடிப்படக்கி
மொத்தமாய் அறுத்தெறிந்தது ஏன்?

ஆசையோடு ஒருமுறை நீ
என்னை கையிலெடுத்து தான் பாரேன்...
என்ன... அருவருக்கிறதா? அருவருக்கிறதா?

மகவென ஆசையோடு
கொஞ்ச வேண்டிய என்னை
குருதிக் கூழ் என முகம் சுளித்து
வெறுக்கும் நிலைக்கு தள்ளியவளே...!

கருவறைக்கும் பாத்திக்கட்டி
பயிராய் வளர்ந்த என்னை
களைப்பறிக்கத் துணிந்து
ரெத்தமும் சதையுமாய்
களையென அறுத்தெறிந்தாயே
உன் உயிர் விதை நானென்பதை
மறந்து விட்டு...!

பார்...! உனக்கும் எனக்குமான
ஒரே சாட்சியான தொப்புள் கொடி கூட
உன்னோடான தன்னுறவை அறுத்தெறிந்து
என்னோடு தஞ்சமடைந்து விட்டது...!

என்னை பாரமென எண்ணி
மரணக்குழிக்குள் தள்ளியவளே...
மரணக்குழிக்குள் சென்றது நான் மட்டுமல்ல...
உன் தாய்மையும் தான்...!

Saturday 28 July 2012

மனசிலே மத்தாப்பு.....

நுரை ததும்பும் கடலலை நடுவே
அஸ்தமிக்கும் பகலவன் எதிர்த்து
எழுச்சி பயிலும்
மற்றொரு ஆதவனாய் நீ...!

நீர் அள்ளித் தெளிக்கும்
சிறகுகளின் படபடப்பாய்
உன் நினைவலைகள்
என்னுள் துடிதுடிப்பை தூவி செல்லும்...!

மாஞ்சோலை கிளிகளின்
கிள்ளை மொழி நெஞ்சை அள்ள
மத்தாப்பு சிதறலாய்
உன் கொஞ்சல் ஒலி
எதிர்பாட்டு இசைக்கிறது...!

சட்டென தெறிக்கும் சாரல் நடுவே
வெடவெடுக்கும் வெல்வெட் மலராய்
உன் ஒற்றை விரல் ஸ்பரிசம் ஒன்று
என்னை இம்சித்து சிரிக்கிறது...!

என் கட்டை விரல் ஒன்றை கேட்டுப்பார்...
கோலமிட்டு கோலமிட்டு
விரல் நகங்கள் தேய்ந்த கதை
ஓராயிரம் அது சொல்லும்...!

காத்திருக்க செய்தே காதலிக்க
வைக்கும் சாகசக்காரனாய் நீ...
என் ஒற்றை மனம் பதற
வெயிலில்லா கானகத்தில்
சுட்டெரித்து குளிரூட்டுகிறாய்...!



Wednesday 18 July 2012

உசிருக்குள்ள நீ தானே....

* ஒன் ஒத்தச்சொல்லில்
கிறங்கி போயி நானுங்கிடந்தேன்
# ஒங்கொலுசு சத்தம் காதில் மோதி
உசிர வறுத்து போனதே...

* ஒன் மீசக் குத்தும் குறுகுறுப்பில்
சொக்கிப் போனேனே...
ஒன் நெஞ்சு முடி கதகதப்பில்
கண் மயங்கி மாயம் செய்ததே...

# உசிரே உசிரே வானத்துல
நெலாவப் பிடிப்போம்...
நெலவ புடிச்சு புல்வெளியில்
பதியம் போடுவோம்...

* குட்டி குட்டி நெலவா வந்து
மண்ணில் பொறக்கும்...
உன்ன அப்பான்னு
சொல்லி சொல்லி உசிர எடுக்கும்...

# அட உசிரெடுக்கும் ராட்சசியே
உன்ன விடவா
நீ பெத்துப் போடும் தேவதைங்க
என்னை படுத்தும்?

# வானத்துல ஏறிப்போவோம்
விண்மீனு புடிக்க...
உன் கண்ணு ரெண்டும் போதும் பெண்ணே
நானும் மீனு புடிக்க...

* வெட்ட வெளி புல்வெளியில்
நானும் உன்னை அணைக்க...
வானமும் சந்திரனும்
வெக்கத்துல சிவக்க...

# மயிலே ஒன் நேசங்கண்டு
நானும் என்னை மறந்தேன்...
இந்த சென்மம் போதும் கண்ணே
எல்லா சென்மம் அறிஞ்சேன்...

* மாமா நான் கண்மூடி
நாளும் உன்னை ரசிச்சேன்
உன் உள்மூச்சு வாங்கி தானே
நானும் உசிர் வளத்தேன்...

Thursday 12 July 2012

சாரலடிக்கும் நேரம்...!


நாளை வருகிறேன் என்ற உன் குரல்
ஆயிரம் கவிதைகளை தோற்கடித்து
புதிதாய் ஒன்றை விதைத்து சென்றது...!

உன் வருகை தெரிவித்த கைபேசி
எண்ணிட இயலா முத்தங்களை
அரைநொடி பொழுதில் பரிசாய் பெற்று
இயக்கம் மறந்து மவுனமானது...!

உன் ராஜ வீதியில் உலாவரும்
ஒற்றை ராணியாய் கர்வம் கொண்டு
இதழோர புன்னகை ஒன்றை படர விடுகிறேன்...!

கண்ணாடி கூட கண்டிருக்குமோ
என் பல்வரிசையை...
இன்று வீட்டில் அனைவருக்கும்
காட்சிப் பொருளாகி வியக்க வைக்கிறது...!

அய்யோ செல்லமே,
உன்னை திட்டி கடிதமெழுதினேனே...
நாளை அவையெல்லாம் உன்
ரகசிய தீண்டலில் வீரியமிழக்க போகின்றன...!

பாரடா, உன் பெயரை
பல லட்சம் முறை உச்சரித்து
உன் கிண்டல் பேச்சுகளில்
நெஞ்சுருகி கொஞ்சுகிறேன்...!

உன் வருகை அறிந்த நொடி, உனக்குள் நான் தொலைந்து,
உன் கவிதை வரி ஒன்றை களவெடுத்துச் சொல்கிறேன்
உன் நேசம் கொண்டு நான் நனையும் பொழுதெல்லாம்
தூறல் ஏறியது என் வானம்”...!

கை விரித்து காத்தே கிடக்கிறேன்,
உன் சாரலில் நனையப்போகும் பொழுதுக்காய்...!



Monday 9 July 2012

தென்றலின் வெம்மை....!


இதமான தென்றல் வீசிடும்
கடற்கரை சாரலிலே
உன் மார்போடு நான்...!

அணைக்க துடிக்கும் கரங்கள்
ஏனோ இன்னும் என்னை
சிறைபடுத்தாமல் வெறித்தே
எங்கோ நோக்குகிறது...!

நீ அணைக்க போகும் தருணம்
நொடி பொழுதும் வீணாகலாகாதென
கண் மூடி நான் காத்தே கிடக்கிறேன்...!

நெஞ்சம் நிறைத்த கனவாய்
நீ என் உயிர் வருடி
கண்கள் வழி குறும்பு பார்வை
பார்த்து என் வெட்கம் ரசிக்கிறாய்...!

உன் ஆண்மை திமிரில்
இதமாய் குளிர் காயும் ஆசையில்
குருஞ்சிரிப்பாய் உன்னில்
லயித்தே போகிறேன்...!

நின்று விடாதா இத்தருணம்?
ஏக்கம் சேர்த்து நேரமும்
கூடவே கரைகிறது...
விடுபட விரும்பா சிறைப்பறவையாய்
நான் மட்டும் இன்னும் உனக்குள்...!

எல்லாமும் நீயே....!


தேசம் மறந்த நேசமும் நீ...!
வேசம் கலைத்த பாசமும் நீ...!
மவுனம் பேசும் பாசையும் நீ...!
கண்கள் காட்டும் காட்சியும் நீ...!

இன்பம் துய்க்கும் இசையும் நீ...!
துன்பம் மறக்கும் விசையும் நீ...!
ஆயுள் நனைக்கும் மழையும் நீ...!
அஹிம்சையாய் வதைக்கும் புயலும் நீ...!

மனம் விரும்பும் மஞ்சமும் நீ...!
தினம் நினைக்கும் நெஞ்சமும் நீ...!
உணர்வு வருடும் தென்றலும் நீ...!
என்றும் ஓயா அலையும் நீ...!

கனவில் இம்சிக்கும் ராட்சசனும் நீ...!
என்னை மீட்டெடுக்கும் ரட்சகனும் நீ...!
காதல் வாழ்வின் நாயகன் நீ...!
பயணம் தொடரும் சுவாசமும் நீ...!

Saturday 7 July 2012

நீ உணர்த்தும் நான்...


இப்பொழுதெல்லாம் “ஏந்த்ரிமா” என்ற
மழலை மிழற்றலோடு உன்னைக்
கொஞ்சியே என்
விடியல் விழிக்கிறது...!

நீ மட்டும் போதுமென்ற
உன் கெஞ்சல் வார்த்தை
என் பிராண வாயு நிறுத்தி
இதய இயக்கத்தை
கைப்பற்றி சிரிக்கிறது...!

உன்னோடு மவுனித்திருக்கும் வேளையில்
உன் முதுகோர வியர்வையாய்
கூடவே ஒட்டி விட துடிக்கிறேன்...!

உன்னிடத்தில் பயணிக்கும் போதெல்லாம்
என் தூரங்கள் ஒரு சாகசப் பட்சியாய்
விருட்டென கடந்து செல்கிறது...!

காத்திருந்து காத்திருந்தே
“கைப்பிடித்து பயணிப்பாயா” என
நீ கேட்ட நொடி பொழுது
நின்று விட்ட கடிகாரமாய்
இன்னும் என் மனத்துடிப்பில்...!

என் இதய துடிப்பு ஒவ்வொன்றும்
உன் உதடு உச்சரிக்கும்
என் பெயர் கேட்டே துடிக்க துவங்கி
உன் பெயரை பிரசவித்து
சுவாசம் நெருங்கி மூச்சிரைக்க வைக்கிறது...!

காதலை வார்த்தைகளால் வடிக்காமல்
காதலால் வடித்து, இம்சித்து
தூங்கும் என்னை அருகிலிருந்து
நீ ரசிப்பதற்காகவே மீண்டும் மீண்டும்
மீண்டும் மீண்டும் காதல் செய்கிறேன்...!









Tuesday 3 July 2012

மரிக்க இயலா அழிதல் தேடி


வியாபாரப் பொருளே
இங்கு வியாபாரியாய்...

பகடை காயின்
முகங்கள் காட்டும்
சுவாரசிய புதிராய்...

உணர்வுகள் அறுந்து
விலையாகும் நேரம்
ஏளனிக்கும் இதயம்...

இரையாகும்
ஒவ்வொரு கணமும்
பசி தேடும்
அடுத்த வேளை மனமாய்...

மவுனங்கள் வீழ்ந்து கிடக்கையில்
வக்கிர மனங்களின்
வன்மங்கள் பேசும்...

மரிக்க இயலா அழிதல் தேடி
விளக்கில் வீழும் விட்டில்களாய்...
மீண்டும் மீண்டும்..!