Friday 22 August 2014

தம்பியும் நானும்....


சின்ன வயசுல நான் ரொம்ப வாலு. ஒரு இடத்துல இருக்கவே மாட்டேன். எப்பப் பாத்தாலும் மாட்டுதொளுவத்துல மாடுகளோட மல்லுக்கட்டிட்டு இருப்பேன், இல்லனா, கரையான் புத்துல பாம்பு இருக்கான்னு கை விட்டு தேடிட்டு இருப்பேன். இருபது வருசத்துக்கு முன்னாடி எங்க ஊரு காடு மாதிரி தான் இருக்கும். என்ன தான் வீடு பெருசா இருந்தாலும், வீட்டை சுத்தி கொல்லாங்காடு, வாழைத்தோப்பு, வயலுன்னு ஒரு கலவையா இருக்கும். வீட்டுக்கு பத்தடி தூரத்துலயே ஒரு மொட்டை கிணறு வேற உண்டு. அந்த கிணத்துல தண்ணி எல்லாம் கிடையாது. அதுக்கு உள்ள இருந்து வேப்பமரம், புளியமரம் அப்புறம் காடு மாதிரி புல்லு, செடிகள்ன்னு அடைஞ்சு கிடக்கும். அங்கயே தான் நிறைய கரையான் புற்றும் உண்டு.

சில நேரங்கள்ல மேய வர்ற ஆடு மாடுகள் கால் தவறி உள்ள விழுறதும் உண்டு. நான் வேற எப்பப்பாரு அங்கயே போய் இருப்பேனா, அப்பப்ப அங்க கடந்து போற பாம்புகள் எல்லாம் ரொம்ப பரிட்சயம் ஆகி போயிருந்தது. பாம்பை கண்டா அங்க இருந்து ஓட மாட்டேன். அப்படியே அசையாம உக்காந்துருப்பேன். பாம்பு கண்ணை விட்டு மறைஞ்சதும் ஒரு பயம் கப்புன்னு வரும் பாருங்க... ஒரே ஓட்டம் தான்... மூச்சிரைக்க நேரா ஓடி வந்து ரூம்ல மலங்க மலங்க முழிப்பேன். யாரும் பாக்கலனா ஓகே, ஆனா அம்மா பாத்துட்டா, ஹிஹின்னு ஒரு திருட்டு சிரிப்பு சிரிப்பேன் பாருங்க, அம்மா புருவம் உயர்த்தி, கொன்னுப்புடுவேன்னு ஆள்காட்டி விரலாலயே சைகை செய்வாங்க. சத்தம் போட்டு பாட்டிக்கு கேட்டுடுச்சுனா அப்புறம் பத்ரகாளி மலையேற நேரம் ஆகுமே...

தம்பி இதுக்கெல்லாம் ரொம்ப பயப்படுவான். அதனால அந்த பக்கமா விளையாட கூப்ட்டா, ம்ஹும்ன்னு சிணிங்கிக்கிட்டே அம்மா முந்தானைய புடிச்சுப்பான். ஆனா அந்த ஊமை குசும்பனுக்கு திங்க ஏதாவது முதல்ல குடுக்கலன்னு வைங்க, உடனே, நான் போய் மொட்டை கிணத்துல விழப்போறேன்னு மிரட்டுவான். அம்மாவுக்கு தெரியாதாக்கும் அவனை... சிரிச்சுகிட்டே அவனையே பாத்துட்டு இருப்பாங்க. நான் சும்மா இருப்பேனா, அப்படியாவது அவனை அந்த பக்கம் கூட்டிட்டு போய்டணும்ன்னு அவனுக்கு நிறைய அட்வைஸ் குடுப்பேன்.

டேய் தம்பி, அந்த பக்கம் எல்லாம் ஒண்ணும் பயம் இல்ல, நடந்தா ரெண்டே ரெண்டு விஷயம் தான் நடக்கும், ஒண்ணு உன்னை பாம்பு கடிக்கும். அப்படி பாம்பு கடிச்சா, ஓடி வந்துடாத, விஷம் தலைக்கு ஏறிடும். அதனால அங்க நின்னே ஒரு சத்தம் குடு, அக்கா போய் கத்தியும் துணியும் எடுத்துட்டு வரேன். துணி வச்சு காலை இருக்க கட்டிட்டு, இந்த கத்தியால வெட்டிட்டா, அப்புறம் பயமே இல்லன்னு அட்டகாசமா க்ளாஸ் எடுப்பேன். பையன் அப்பவே மிரண்டுடுவான்.

ஆனாலும் நாம விட மாட்டோம்ல, ரெண்டாவது, நீ தவறி அந்த கிணத்துக்குள்ள விழுந்துடுவ. அப்பா வீட்ல இருந்தா உடனே கயிறு போட்டு உன்னை தூக்கிடுவாங்க, அதுவே வெளியூர் போய்ட்டா நீ கவலைப்படாத, உனக்கு பிரட், இட்லி, சோறு எல்லாம் மேல இருந்தே தூக்கிப் போடுறேன். அப்பா வர்ற வரை நீ சாப்ட்டுட்டு இருக்கலாம்ன்னு சொல்லுவேன்...

ஏங்க, நான் சரியா தானே சொல்லியிருக்கேன். ஆனா இந்த பய, அம்மாவ இன்னும் இறுக்கமா கட்டிபுடிச்சுட்டு, பெருவிரல எடுத்து வாய்ல வச்சு சப்ப ஆரம்பிச்சுடுவான். போடின்னு தலைய வேற வெட்டி வெட்டி இழுத்துப்பான்...

தாயம் வச்சு விளையாடிட்டு இருப்போம். இவன் விளையாட வந்தா, இவனுக்கு பிடிச்ச தாயக்காய் தான் முதல்ல எடுப்பான். வேற யாரும் அத எடுத்துடக் கூடாது. அட, அது பரவால, அவனுக்கு மட்டும் தான் தாயம் விழணும்னு அடம்புடிப்பான் பாருங்களேன். சிரிப்பு சிரிப்பா வரும். இந்த பாம்பட்டை விளையாடுரப்ப பாம்பு அவனை கொத்திடக் கூடாது... ஆட்டத்த கலைச்சு விட்ருவான்.

ஆனா ஒண்ணு, எனக்கும் தம்பிக்கும் ரொம்ப ஒற்றுமையான ஒரு விஷயம் ஒண்ணு உண்டு. அதுவும் சாப்பிடுற விசயத்துல. எங்களுக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாட்டு ஐட்டங்கள் என்னலாம்ன்னு பாத்தீங்கனா, வறுத்த மற்றும் ஊற வச்ச புளியங்கொட்டை, புண்ணாக்கு வகைகள், அதுவும் புண்ணாக்குல கடலை புண்ணாக்கும் எள்ளு புண்ணாக்கும் தான் டாப். ருசி பின்னிடும். ஆனா இதெல்லாம் எடுத்து தின்னா பாட்டி நைநைன்னு தொனத்தொனத்தே காது ஜவ்வு கிழிஞ்சிடும். நாங்க போய்ட்டுவோம்னு பாட்டி மாட்டு தீவன ரூம்ல லைட் அணைச்சு வச்சிருப்பாங்க... இருட்டுக்கு பயந்து தம்பி அந்த பக்கமா வரவே மாட்டான்.

நமக்கு தான் அட்வஞ்சர்னா அல்வா சாப்பிடுற மாதிரியாச்சே... அந்த இருட்டுலயும் மோப்பம் பிடிச்சு, கடலை புண்ணாக்கையும் எள்ளு புண்ணாக்கையும் மடி நிறைய கட்டிப்பேன். அப்புறம் என்ன, நானும் அவனும் பெட் ரூமுக்கு போய் கட்டுலுக்கு அடியில உக்காந்து வெளுத்து கட்டிருவோம்.

இதுல சில நேரம் பாட்டிகிட்ட நான் மாட்டிக்குறதும் உண்டு. அப்போ மடியில இருக்குற புண்ணாக்க தட்டி விட்ருவாங்க. அம்மா தான், ம்க்கும்... புள்ள இருட்டுல பயம் இல்லாம போறாளேன்னு சந்தொசப்படுவீங்களான்னு பாட்டிக்கிட்ட ஒரு வெட்டு வெட்டிகிட்டு, கை நிறைய புண்ணாக்கு ஒளிச்சு கொண்டு வந்து தருவாங்க... உன்னை போல ஒரு தாய் எங்களுக்கு மட்டும் தான் கிடச்சிருக்கா அம்மா....

அப்புறமா, அம்மாவுக்கே கோபம் வர வைக்குற மாதிரி நாங்க பண்ற காரியம்னா, அது கருப்பட்டி காப்பில புண்ணாக்கும் தவுடும் கலந்து விட்டுறது தான். அம்மா எப்பவும் ஒரு பெரிய பானை நிறைய கருப்பட்டி காப்பி போட்டு வச்சிருப்பாங்க. விறகடுப்புல அது எப்பவும் கதகதப்பா இருக்கும். வீட்டுக்கு வர்றவங்க, தோட்டத்துல வேலை செய்றவங்கன்னு எல்லாரும் அப்பப்ப வந்து குடிச்சுட்டு போவாங்க. சில நேரம் காப்பி பானைக்குள்ள எட்டிப்பாத்தா காப்பி குறைவா இருக்கும். உடனே நானும் தம்பியும் சேர்ந்து தவுடு எடுத்துட்டு வந்து அது உள்ள போட்டு தண்ணியும் கலந்து விட்ருவோம். யாராவது காப்பி குடிக்கலாம்னு வந்து கப்புல எடுத்து வாய்ல வச்சா..... ஹஹா... அப்புறம் என்ன, அம்மா கட்ட கம்ப எடுத்துட்டு தம்பிய தான் தொரத்துவாங்க. நாம தான் ஏதாவது மரத்து மேல ஏறி எஸ்கேப் ஆகிடுவோம்ல...

இப்படி ஏகப்பட்ட சேட்டைகள்... இன்னொரு நாள் இன்னும் கொஞ்சம் சொல்றேன்...

ஆனா ஒண்ணு, இப்போதைய எனக்குள்ள நிறையவே மாற்றம். எடுத்துட்டு இருக்குற மெடிசின்ஸ்னால சில நேரம் ரொம்ப டென்சன் ஆகிடுவேன். காட்டுக்கத்தல் போட ஆரம்பிச்சேன்னா நானே தான் சட்டுன்னு முழிச்சுட்டு நிறுத்தணும். அப்படி தான் ஒருநாளு இங்க ஒரு பாட்டி கூட வாக்குவாதம் ஆகி, அவங்க சொன்ன வார்த்தைகள் கேட்டு பி.பி எகிறி, ஒரு கட்டைய எடுத்து வீசிட்டேன். அது நேரா போய் என்னோட மீன் தொட்டியில பட்டு, கண்ணாடி உடைஞ்சு, தண்ணி எல்லாம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு.

சத்தம் கேட்டு, ஓடி வந்த அப்பாவும் தம்பியும் முதல்ல பண்ணினது, மீன் தொட்டில இருந்த மீன் எல்லாத்தையும் தனியா பிடிச்சு போட்டது தான். அவங்களுக்கு தெரியும், மீனுக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்புறம் நாலு நாளைக்கு அழுதுட்டே இருப்பேன்னு. மறுநாள் காலைல பதினோரு மணிக்கு நான் ரூம் கதவை தொரக்குரப்ப அதே மீன் தொட்டி, புது கண்ணாடியோட ரெடி ஆகிட்டு இருக்கு. தம்பி தான் உள்ள பிளாஸ்டிக் செடி எல்லாம் அடுக்கிட்டு இருக்கான்.

இவன் பொறுமைசாலியா? பொறுப்பாளியா?

Friday 8 August 2014

ரக்க்ஷா பந்தன்... தம்பியும் நானும்


தம்பி பொறந்தது வீட்ல தான். அவன் பொறந்தப்போ அழவே இல்லையாம். எல்லாரும் புள்ள செத்து போச்சுன்னு முடிவு பண்ணிட்டு அவனை புதைக்க குழி வெட்ட கிளம்பிட்டாங்களாம். அப்போ தான் எங்க ஊரு நர்ஸ் சந்தேகம் வந்து அவனோட தொப்புள் கொடிய வெந்நீர்ல போட்டு பாத்துருக்காங்க. சூடு தாங்காம பய கொஞ்சம் நெளிஞ்சிருக்கான். அப்புறம் என்ன, அவனை புதைக்க கொண்டு வந்த கார்ல அவன ஹாஸ்பிட்டல் தூக்கிட்டு போயிருக்காங்க. நெஞ்சு முழுக்க சளி அடச்சு போயிருந்த அவன அழ வைக்கவே ஒரு நாள் ஆகிடுச்சாம்...

சின்னப் புள்ளைல தம்பி குண்டு குண்டுன்னு கட்டையா உருளி மாதிரி இருப்பான். எப்பவும் கண்ண உருட்டிட்டு, வாய்ல ஒரு கூழாங்கல்ல போட்டு குதப்பிட்டே இருப்பான். அந்த பய சிரிச்சா அதிசயம் தான்... சிரிப்புனா என்னதுன்னு நம்ம கிட்ட கேப்பான். அவ்வளவு அமுக்குணி பய...

அப்புறம் ஸ்கூல் போக ஆரம்பிச்சப்போ நான் ரொம்ப சீன் போடுவேன். நம்ம பழக்க வழக்கம் எல்லாம் பசங்க கூட தானே.. அவங்க கூட மங்கட்டைல இருந்து கதை விட, இவனை பேக் தூக்கிட்டு போய் என் க்ளாஸ்ல வைக்க சொல்லிடுவேன். அப்புறம் என்ன, நான் சிக்ஸ்த் படிக்குற வரைக்கும் அவன் தான் என் பேக் சுமப்பான். நான் ஜாலியா அவன் பின்னால நடந்து போவேன்.

எப்பப்பாரு அம்மா மடியில தான் படுத்து தூங்குவான். அட, பாத்ரூம் போகணும்னா துணைக்கு அம்மா போகணும். அவ்வளவு பயந்தாங்கொள்ளி.... ராத்திரி தூங்கும் போது எனக்கும் அம்மாவுக்கும் தான் சண்டை வரும். அப்பா என்னோட முகத்த பாத்துட்டு தான் தூங்கணும்னு எப்பவும் சண்டை பிடிப்பேன். அம்மா அவங்க பக்கமா தான் தூங்கணும்னு சண்டைக்கு வருவாங்க... இதனாலயே அப்பா ரெண்டு கையையும் ஆளுக்கொண்ணா தலையணையா தந்துட்டு விட்டத்த பாத்துட்டே தூங்கிடுவாங்க... ஆனா இவனுக்கு அந்த பிரச்சனையே இல்ல. அம்மா முந்தானை மட்டும் இருந்தா போதும். அத சுருட்டி வாய்ல வச்சுட்டே தூங்கிடுவான்.

வீட்ல ஏதாவது அப்பா சாப்பிட வாங்கிட்டு வந்தா போதும். நான் தான் முதல் ஆளா பாய்ஞ்சு போய் அத பிடிங்கிப்பேன். இவன் உடனே மூஞ்சி எல்லாம் அழுவுற மாதிரி வச்சுகிட்டு சிணுங்கிகிட்டே அம்மாகிட்ட ஓடிடுவான். அப்புறம் என்ன, என் தலைல ரெண்டு கொட்டு விழும். பண்டம் பங்குக்கு போய்டும்... கிர்ர்ர்ர்....

ஆனா ஒண்ணு, சின்ன வயசுல இருந்தே அவனால தோல்விய தாங்கிக்க முடியாது. விளையாட்டுல கூட தோத்துப் போகபோறான்ன்னு தெரிஞ்சா உடனே அழுக வந்துடும். நானும் கொஞ்சம் அவன் கிட்ட போக்கு காட்டிட்டு அப்புறம் விட்டுக் குடுத்துடுவேன். அட, நம்ம தம்பி தான, அவன் கிட்ட தோத்துப் போனா தான் என்ன?

ரெண்டு பேரும் குடுமி பிடிச்சு எல்லாம் சண்டை போட்டதே இல்ல. அவனுக்கு ஏதாவது தேவைனா நான் அத விட்டுக் குடுத்துட்டு போய்டுவேன். எனக்கு எது தேவைன்னு அவனுக்கு தெரியாது. நான் அவன் கிட்ட காட்டிக்க மாட்டேன். அதனாலயே அவன் கொஞ்சம் சுயநலவாதியா வளந்துட்டான். அவன் பொருள யாரும் எடுக்கக் கூடாது. அப்படி எடுத்துட்டா சண்டைக்கு எல்லாம் வர மாட்டான், ஆனா மூஞ்சி வாடி போயிடும்.

பத்து வயசுக்கு அப்புறம் நாங்க ரெண்டு பேரும் தான் பெஸ்ட் பிரெண்ட்ஸ். அம்மாவுக்கு ரெஸ்ட் குடுத்துட்டு அப்பா, நான், தம்பி மூணு பேரும் சமையல் அறைக்குள்ள புகுந்துடுவோம். ஐயோ ஐயோன்னு அம்மா அலறுற வரைக்கும் சமையலறை தூள் பறக்கும். பாத்திரங்கள் உருளும். ஒரு முட்டை அவிக்க பத்து பாத்திரம் வாஷ் பேசின் போக வேண்டி வரும். அப்புறம் அப்பா கூட நாங்க சமையலறைக்குள்ள கூட்டு சேரக்கூடாதுன்னு அம்மா தடா போட்டுட்டாங்க... அப்பா ஒத்த ஆளா நின்னு எங்களுக்கு சமைச்சுப் போடுவார்.

அடுத்து ரெண்டு வருசத்துல சமையலறை எங்க ராஜ்ஜியம் தான். கேசரி, பால்பாயாசம், அல்வா, வடை ன்னு சின்ன சின்னதா ஆரம்பிச்சு அதிரசம், முறுக்கு,  முந்திரி கொத்துன்னு முன்னேறி பிரியாணில வந்து நின்னோம். எங்க ரெண்டு பேர் சமையலையும் நாங்களே சாப்ட்டுடுவோம். அம்மாவும் அப்பாவும்  டேஸ்ட் வேணா பாக்கலாம். அவ்வளவு தான். அப்புறம் ஒரு நாள் பீசா செய்றோம்னு ஆரம்பிச்சோம். எல்லாம் நல்லா தான் வந்துச்சு. அந்த பேஸ் செய்ய ஈஸ்ட் அதிகமா போட்டுட, வாய்லயே வைக்க முடியல, அம்மே....

தோட்டத்துக்குள்ள விளையாட போறப்பவும் சரி, மழைல நனையுறப்பவும் சரி, ரெண்டு பேரும் ஒண்ணாவே விளையாடுவோம். அப்பா கோவில் கணக்கு எழுதி வச்சிருக்குற டைரி எடுத்து ஒரு நாள் நாங்க கப்பல் விட.... அன்னிக்கி தான் அடி வெளுத்துட்டாங்க... அவ்வ்வ்வ்.... அப்பவும் நான் அய்யோ ஐய்யோன்னு அடி விழுறதுக்கு முன்னாலயே கத்தி கதறி ஊரை கூட்ட, அவன் வழக்கம் போல சத்தமே வராம கேவிட்டு தான் இருப்பான். கண்ணுல மட்டும் கண்ணீர் மாலை மாலையா கொட்டும். ஊர்ல உள்ளவங்க எல்லாம் ஒண்ணு கூடிட்டாங்க. இதுல ஒரு பாட்டி, உன் புள்ளைங்க ரெண்டும் தங்கங்க... பாரு ஒரு தடவ கூட அடிச்சுகிட்டது இல்ல... அவங்கள போய் நீ அடிச்சிட்டியேன்னு அப்பாவ பாத்து கேக்க, டொட்டடொட்டடொய்ங்... ஒரே செண்டிமெண்ட் சாங் தான்...

அப்புறமா அவன் டென்த் வந்தான். நான் லெவெந்த். புள்ள எப்பப்பாத்தாலும் படிப்பு தான். நான் வேற அவனை கிண்டல் பண்ணிட்டே இருப்பேன், படிச்சு கலக்டர் ஆக போறானாம்ன்னு... ஆனாலும் கண்டுக்கவே மாட்டான். எப்பப் பாத்தாலும் ரேடியோவ ஆன் பண்ணி கேட்டுட்டே படிப்பான். ஒரு நாள் ரொம்ப சின்சியரா படிக்குறானேன்னு பக்கத்துல போய் பாத்தா, அட, பக்கி.... உக்காந்தபடியே நல்லா உறங்கிட்டு இருக்கு... ஹஹா... இதான் அவன் அப்ப இருந்தே பண்ணிட்டு இருந்துருக்கான்.

அவனோட வசந்த காலம், அவன் பாலிடெக்னிக் போனப்ப தான். அங்க அவன் ஒரு தேவதைய பாத்தான். இவன விட வயசுல பெரியவ. அவ ப்ளஸ் டூ முடிச்சுட்டு மார்க் கம்மின்னு பாலிடெக்னிக் பஸ்ட் இயர் வந்தவ. பொண்ணுங்க கிட்ட பேசவே பேசாத என் தம்பி, சிரிச்சா வாய்ல இருந்து முத்து உதுந்துடும்னு சிரிக்காம இருந்த என் தம்பி கலகலன்னு சிரிக்க ஆரம்பிச்சது அப்போ தான். நக்கலும் நையாண்டியும் அவன் கூடப் பொறந்தது போல அவ்வளவு சரளமா வர ஆரம்பிச்சுது... இந்த ஊமை குசும்பனா இப்படி மாறிட்டான்னு நானும் அம்மாவும் வாய் பிளந்து பாத்துட்டே இருப்போம்.

அட, அம்மா கழுத்த பிடிச்சு தொங்கிட்டு, அம்மாவுக்கு முத்தம் குடுத்துட்டு, என்னை பாத்தா அப்படியே ஒரு வெக்க புன்னகை சிந்திட்டு, ஏதாவது ஒரு டூயட் பாட்ட பாடிட்டு திரிஞ்ச என் தம்பி அழகோ அழகு.

காலேஜ் விட்டு வீட்டுக்கு வந்தா அவ கிட்ட போன்ல பேசிட்டே இருப்பான், சனி ஞாயிறுல அவ வீட்டுக்கே வந்துடுவா. எப்பப் பாத்தாலும் அவ கூடவே சுத்திட்டு இருப்பான். ஆனா அவள லவ் பண்றதா எங்ககிட்ட சொன்னதே இல்ல. இப்படியே ஒரு வருஷம் ஓடி போச்சு. நான் ப்ளஸ்டூ முடிச்ச நேரம், திடீர்னு எனக்கு கல்யாணம்ன்னு பத்திரிகைய நீட்டிட்டா. இவன் எப்படி தான் அந்த ஆயிரம் இடியையும் மின்னலையும் ஒரு சேர தாங்கிகிட்டானோ என்னவோ? ஒரு வாரம் யார் கூடவும் பேசல. அப்புறம் அவ கல்யாணத்துல அவன் தான் ஓடி ஓடி எல்லா வேலையும் செய்தான். அவள ப்ளைட் ஏற்றி பறக்க விட்டுட்டு கிளி பறந்து போய்டுச்சுன்னு இங்க குட்டி பசங்க கிட்ட சொல்லிட்டு இருந்தான்.

ஒரு நாள் அம்மா கிட்ட நான் அதிகமா அன்பு வச்சா, ஏன்மா அவ என்னை விட்டுட்டு போயிட்டான்னு கேட்ருக்கான். அம்மா என்ன சொன்னாங்கன்னு தெரியாது, ஆனா எல்லாமே சகஜமா போயிட்டு இருந்த மாதிரி தான் இருந்துச்சு.


திடீர்னு ஒரு நாள் எனக்கு சின்னதா ஒரு ஆக்சிடென்ட். ஸ்கூட்டில போறப்ப எது மேலயோ இடிச்சு கீழ விழுந்து தலைல கொஞ்சமா அடி. அப்புறம் வந்த நாட்கள், மளமளன்னு எங்க வாழ்க்கைய புரட்டி போட்டுடுச்சு. ஐ.சி.யூல நான் துடிச்சத பாத்தவன், அப்படியே மவுனமா ஆனவன் தான். என் கிட்ட பேசுறதையே நிறுத்திட்டான். நான் பொழச்சு வந்தப்ப கூட ஏதோ பக்கத்து வீட்டு நோயாளிய பாக்குற மாதிரி எட்டி நின்னு பாத்துட்டு போயிடுவான்.

அம்மா எவ்வளவோ போராடி பாத்துட்டாங்க. ம்ஹும்... அவன் என் கிட்ட பேசவே இல்ல. எனக்கும் கொஞ்சம் கொஞ்சமா அவன் அப்படி இருந்தது பழகி போயிடுச்சு. அவனும் நானும் ஒரே வீட்ல இருந்தாலும் நான் கொஞ்சம் சிரிச்சா அவன் எழுந்து போயிடுவான். நான் இருக்குற இடத்துக்கே அவன் வர மாட்டான். அவன் ரூமே கதின்னு இருக்க ஆரம்பிச்சுட்டான். அவனுக்கு இப்போ ஒரே பேச்சுத் துணை அம்மாவா தான் இருந்தாங்க.

காலம் யாருக்காகவும் நிக்குரதில்ல. அம்மாவையும் இழந்து எல்லாம் முடிஞ்சி வீட்டுக்கு வந்தப்ப அவன் மவுனமாவே மாறிட்டான்.

அப்படியே இஞ்சினியரிங் படிக்க அவனை சென்னை அனுப்பிட்டாங்க அப்பா. அட்லீஸ்ட் அங்கயாவது அவனுக்கு பிரெண்ட்ஸ் கிடைப்பாங்கன்னு. வீட்டுக்கு வந்தா, வழக்கம் போலத் தான்...

ஒரு நாள் திடீர்னு அப்பா மாட்டுத்தொழுவத்துல வழுக்கி விழுந்துட்டாங்க. கால் ஸ்லிப் ஆகி, எலும்பு விரிசல் விட்டுடுச்சு. அந்த நேரம் பாத்து லீவுக்கு வந்தவன் தான்... அட, அட, அட... அப்பாவ அவன் தாங்கு தாங்குன்னு தான்குன அழகு இருக்கே....

அப்பாவுக்கு தனியா ஒரு பெரிய ரூம் ஒதுக்கி குடுத்தான். அப்பா ரெஸ்ட் எடுக்க கால் அமுக்கி விட்டான். அப்பாவுக்கு போர் அடிச்சா அங்கயே டி.வி. அப்புறம் நியூஸ் பேப்பர், நாவல்ன்னு வாங்கி குவிச்சுட்டான். ஒரு குழந்தைய போல எல்லா பணிவிடையும் அப்பாவுக்கு செய்தான். நான் பக்கத்துல போனா, நான் பாத்துக்குறேன்னு ஒரே வார்த்தைல என்னை தள்ளி வச்சிடுவான். ஆனா அப்போ வந்த அழுகை எனக்கு சந்தோசத்த தான் குடுத்துச்சு.

உலகத்துலயே கால் முறிஞ்சி போச்சுன்னு சந்தோசமா எல்லாருக்கும் போன் பண்ணி சொன்னா ஒரே அப்பா என் அப்பாவா தான் இருக்கும். அட, பேப்பர் போடுற பையன்ல இருந்து பால் கறக்குற அண்ணா, பக்கத்து ஊரு நாட்டாமை வரை எல்லாரையும் கூட்டி வச்சு, சந்தோசமா அரட்டை அடிச்சு, என் பையன் என் பையன்னு பெருமை பீத்திக்கவே என் அப்பாவுக்கு நேரம் சரியா இருந்துச்சு. விட்டா இவரு எழுந்திரிச்சு நடக்கவே மாட்டார்னு வாக்கிங் ஸ்டிக் வாங்கி குடுத்து நடக்க வச்சிட்டோம்.

மறுபடியும் ஒரு ஆறு மாசம் எனக்கு ஹாஸ்பிட்டல் வாழ்க்கை. இந்த தடவ அவன் என்னை விட்டு ரொம்ப ஒதுங்கி போகல. டாக்டர் ரூமுக்கு போறப்பவும் நர்ஸ் ஊசிப் போட வரப்பவும் அவன் என் கைய புடிச்சுகிட்டான். அந்த சீசன் முழுக்க அவன் வாங்கி குடுத்த தொப்பி தான் போட்டுகிட்டேன். பாத்து பாத்து எனக்காக வாங்கிட்டு வந்துருந்தான் மொட்டை மண்டை வெளில தெரியாதபடிக்கு.... ஹஹா...

சொந்த வீட்டை விட்டுட்டு வெளில வந்தப்ப அவன் அக்கறை என் மேல திரும்பியிருந்துச்சு. நான் எவ்வளவு உடைஞ்சு போயிருப்பேன்னு அவனுக்கு தெரியும். காரணம், அவனும் தானே உடைஞ்சு போயிருப்பான். சின்னதா ஒரு புன்னகை, எனக்காக அவன் வாங்கி கொண்டு தர்ற ஐஸ்க்ரீம், அக்கறையா சமைச்சு போடுற சிக்கன்...

சக்தி போனதுக்கு  அப்புறம் அவனுக்கு என் மேலான அக்கறை இன்னும் அதிகமாகிடுச்சு. எனக்காக அணில்கள் பின்னால போய் வீடியோ போட்டோ எடுத்துட்டு வந்து என் கிட்ட காட்டினான். அப்பா கூட சேர்ந்து என் உலகத்த இன்னும் அழகாக்க மீன் குளம் ஒண்ணு ரெடி பண்ணி தந்தான். நான் சமைக்கவே கூடாதுன்னு அப்பா கிட்ட சொல்லியிருக்கான். எனக்கு என்ன தேவைன்னு பாத்து பாத்து செய்றான்...

அவன் என் கூட பேசுற ஒவ்வொரு வார்த்தைலயும் தான் எவ்வளவு அன்பு இருக்கும்... "இந்தா, சரி, என்ன வேணும், பரோட்டா, ம்ம்ம்ம், சொல்றேன், சாப்டாச்சு..." ஏதாவது புரியுதா? இதெல்லாம் தான் அவன் என் கிட்ட பேசுற வார்த்தைகள்... அட, இவ்வளவாவது பேசுறானே...

இன்னிக்கி வாட்ஸ் அப்ல மாமா பசங்க கூட அவன் அடிக்குற அரட்டை குரூப் மெஸ்சேஜ்ல கேட்டுட்டே இருக்கும். இதுக்காகவே அப்பா மொபைல் நான் எடுத்து எனக்குன்னு வச்சுகிட்டேன். நான் யாருக்கும் மெசேஜ் பண்றதில்ல. அரட்டையிலயும் கலந்துக்குறதில்ல... ஆனா என் தம்பி கூட இருக்கேன், அவனோட ஒவ்வொரு சிரிப்பையும் சிரிச்சுட்டு.... ரசிச்சுட்டு....

அவன் ஏன் இப்படி இருக்கான்னு கேட்டா, அதுக்கு பதில் இருக்காது. ஏதோ ஒரு செண்டிமெண்ட் அவன் மனசுக்குள்ள. அவன் இப்படியே இருந்துட்டு போகட்டுமே.... அவனை அவன் போக்குல விட்ருவோம்...

அவன் பேரு என்னன்னு கேட்டா ஒரு செகண்ட் திணறி அப்புறமா தான் அவன் பேரை சொல்லுவேன். காரணம், இதுவரைக்கும் அவன நான் பேர் சொல்லி கூப்பிட்டது இல்ல, அவன் பேரை சொல்லி அடுத்தவங்க கிட்ட பேசிகிட்டதும் இல்ல. எனக்கு அவன் எப்பவுமே தம்பி தான். அப்படி தான் அவனை கூப்பிடுவேன். அவனும் அப்படியே தான்... நான் அவனுக்கு அக்கா தான்...

அவன் பெயர் உங்களுக்கு தெரியவே வேண்டாம்....