Friday 23 December 2016

சுயபச்சாதாபமும் பழிகளும்



நேத்து எனக்கும் என் lab assistant- க்கும் நிறைய வாக்குவாதம்.

தனக்கு பாத்து வச்ச மாப்பிளை சரியில்லன்னும் வேணும்னே சதி செய்து நாசம் பண்ணி தன்னோட குடும்பத்து ஆளுங்க தன்னை நடுத்தெருவுல விட்டுட்டாங்கன்னு புலம்பிகிட்டே இருந்தாங்க.
இடையிடைல “அவ மட்டும் சந்தோசமா இருக்கா. எப்பவும் என் அண்ணன்கிட்ட போன்ல பேசிகிட்டே இருக்கா. நானும் இப்படி மாப்பிள்ளை கூட பேசணும்னு ஆசைப்படுறேனே, ஆனா நான் இப்படி பாதிக்கப்பட்டு இருக்கேனே”னு அண்ணன் மனைவி மேல ஆவேசம் வேற.

இத்தனைக்கும் இவங்கள காத்திருந்து ஸ்கூட்டில கூப்ட்டுட்டு ரெண்டு பேரும் ஒண்ணா தான் காலேஜ் வராங்க.

" யாரும் வேணும்னே யாரையும் நாசமா போகணும்னு நினைக்க மாட்டாங்க. நீங்க நல்லா இருக்கணும்னு நினச்சி பண்ணினது இப்படி ஆகிடுச்சு. "நடந்தது நடந்தாச்சு, முதல்ல அடுத்தவங்கள குறை சொல்றத நிறுத்துங்க. அப்பதான் வாழ்க்கைல உருப்பட முடியும்" னு சொன்னதும் "எப்பவும் ஈஈஈ்னு இளிச்சுகிட்டு இருக்குற உங்களுக்கு என் கஷ்டம் புரியாது"ன்னு பட்டுன்னு சொல்லிட்டாங்க.
சரிதான், இனி வாயக்குடுத்தா நமக்கு தான் அசிங்கம்னு வாய மூடிகிட்டு Bell அடிச்சு பிள்ளைங்க வரவும் class எடுக்க ஆரம்பிச்சேன்.

கொஞ்ச நேரத்துல dehydration, low bp- னு எனக்கு படபடன்னு மயக்கமா வர "madam கொஞ்சம் கேண்ட்டீன்ல சுடு தண்ணி வாங்கிட்டு வாங்களேன்"னு கேக்க "அதெல்லாம் என்னால முடியாது"னு சொல்லிட்டாங்க. நான் நாக்கு குழறி மெதுவா சாய்றத பாத்த பிள்ளைங்க தான் ஓடி போய் சுடு தண்ணி வாங்கி குடுத்து கூடவே இருந்து பாத்துக்கிட்டாங்க. இத்தனைக்கும் ஒழுங்கா படிக்குறது இல்ல, ஒரு practical உருப்படியா பண்றது இல்லன்னு அப்ப தான் திட்டி தீத்துருந்தேன்.

இன்னிக்கி lab- ல நுழைஞ்சதும் “ஹிஹி... தண்ணி வாங்கி தரலைன்னு கோபமா”ன்னு கேட்டாங்க. நான் கொஞ்சம் முறைச்கிகிட்டே seat –ல போய் உக்காந்துகிட்டு class adjustment, official phone calls-ன்னு வேலைய பாக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நேரத்துல மனசுக்கு என்னவோ தோண, அவங்கள பாத்தேன். என்னையே பாத்துகிட்டு இருந்தாங்க. பட்டுன்னு சிரிச்சுட்டு, “உங்களுக்கு கொழுப்பு கொஞ்சம் ஓவரா போச்சு, காலைல சாப்ட்டீங்களா இல்லையா, இல்லனா முதல்ல போய் சாப்டுங்க போங்க”ன்னு சொன்னேன். அது வரைக்கும் உம்ம்முனு இருந்த அவங்க முகம் பிரகாசமாகி, சரின்னு போய்ட்டாங்க.

Practical பண்ண வந்த பிள்ளைங்க இத கவனிச்கிட்டே இருந்தாங்க. “ஏன் மேடம் அவங்ககிட்ட பேசுனீங்க? எல்லாம் நீங்க வச்சு குடுக்குற இடம். நாங்க கவனிச்சுட்டு தான் வரோம், அவங்க உங்கள நிறைய எதிர்த்து பேசுறாங்க, மதிக்க மாட்டேங்குறாங்க, எங்ககிட்ட கூட ரொம்ப கோபப்படுறாங்க மேடம்”ன்னு சொல்லவும் “நேத்து நானும் தான் உங்கள நிறைய திட்டினேன், ஆனாலும் நீங்க எனக்கு help பண்ணுனீங்க தானே, அப்படி வச்சுக்கோங்க இதையும். நடந்து முடிஞ்ச சம்பவங்களுக்காக கோபப்பட்டுகிட்டே இருந்தா அப்புறம் வாழ்ந்து என்ன பிரயோஜனம்”ன்னு கேட்டுகிட்டே, “சரி சரி, வேலைய பாருங்க, வந்துட்டாங்க கதை கேக்க”ன்னு மறுபடியும் திட்டி தொரத்தி விட்டுட்டேன்.

என் lab assistant மாதிரியான பெண்கள் அநேகம் பேர் இங்க இருக்காங்க. வாழ்க்கைல அவங்களுக்கு வர்ற stress, அதனால தொடர்ந்து வர்ற மன அழுத்தங்கள். ஏன், நானே கூட இந்த வகையறா தான். நிறைய கோபம், நிறைய அழுகைன்னு ஏதோ ஒரு சூழல்ல சிக்கி, அதுல இருந்து வெளிவர போராடிகிட்டு இருக்குற ஒரு சராசரியான மனுஷ ஜென்மம் தான் நானும்.

ஒருத்தங்க மேல ஒரு பழிய போடுறதுக்கு முன்னாடி, அவங்க என்ன நிலைமைல இருக்காங்க, இத அவங்க செய்திருப்பாங்களா, அப்படியே செய்திருந்தாலும் எதுக்காக செய்திருப்பாங்கன்னு அவங்கள சார்ந்து அவங்க மனநிலைல இருந்து யோசிச்சோம்னாலே பல நேரம் பல misunderstanding சரியா போக வாய்ப்பு இருக்கு. எனக்கு என் lab assistant பத்தி தெரியும். அதனால அவங்கள என்னால adjust பண்ண முடியுது. என்னைப் பத்தி பசங்களுக்கு தெரியும், என் நண்பர்களுக்கு தெரியும், அதனால அவங்களால என்னை adjust பண்ணி போக முடியுது அவ்வளவு தான்.

ஆனா இதெல்லாம் எத்தனைபேருக்கு சரியா புரியும்னு நம்மால சொல்ல முடியாது. காரணம் இயலாமையும் ஆற்றாமையும் அதிகம் ஆகிடுச்சுனா நாம உடனே கைல எடுக்குற ஆயுதம், நம்மோட நிலைமைக்கு காரணகர்த்தாவா அடுத்தவங்கள கைக்காட்டுறது தான்.

“என் வாழ்க்கைய கெடுத்ததே அவன்/ அவள் தான்”ன்னு ரொம்ப ஈசியா அடுத்தவங்கள கைகாட்டிகிட்டு நம்மோட இந்த நிலைமைக்கு நாம காரணம் இல்லன்னு நமக்கு நாமே சமாதானம் செய்துக்குறோம். ஆக மொத்தத்துல பெரும்பாலும் நம்மோட கற்பனைப்படி நாம எப்பவும் நல்லவங்களாவே இருப்போம். ஆனா நமக்கு ஒரு பெரும் பிரச்சனை இருக்கும். அதாவது நம்மள தவிர்த்து எல்லாருமே கெட்டவங்களா இருப்பாங்க, எப்படா நம்ம காலைவாரி விடலாம்னு காத்துகிட்டு இருப்பாங்க. 

இப்படி அதீத கற்பனைகுள்ள சிக்கிகிட்டவங்களால அவ்வளவு சீக்கிரம் அதுல இருந்து வெளிவர முடியாம போய்டுது.

தன்னோட கஷ்டங்களுக்கு யார் மேலயாவது பழி போடுறவங்க அடுத்து நாடுறது கோவில் பூசாரிகளையும் ஜோசியக்காரர்களையும் தான். சில பேர் ஒரு படி மேல போய் சாமி மேலயே பழி போடுவாங்க. “என் வாழ்க்கைய கெடுத்தது முத்தாரம்மன் தான், அவ தான் என்னை நாசம் பண்ணிட்டா. என்னை வாழ விடாம பண்ணிட்டா”ன்னு எல்லாம் காதுல விழுறப்ப பாவம் இந்த அம்மன்மார்கள்ன்னு அவங்களுக்காக பரிதாபப்பட மட்டும் தான் முடியுது என்னால. மிஞ்சி மிஞ்சி போனா எனக்கு அத குடு, இத குடுன்னு அவங்கள disturb பண்ணாம இருக்கேன். பாவம், மேல குறிப்பிட்ட என் lab assistant மாதிரியானவங்ககிட்ட மாட்டிகிட்டு முழி பிதுங்கி இருக்குற முத்தரம்மன நான் வேற தொல்லை பண்ணனுமா என்ன?

பெண்கள்ல இன்னும் சில வகைகள் உண்டு. இந்த மாதிரி stress, depression –ல இருக்குறவங்கள உக்கார வச்சு நல்லா கதை கேட்டுகிட்டு, “ஐயோ பாவம், நீ எவ்வளவு நல்லவ. உன் மாமியார்/ புருஷன் இவ்வளவு மோசமானவங்களா? உன்னால தான் இதெல்லாம் சமாளிக்க முடியுது, உனக்கொரு விடிவு வராதா”ன்னு ரொம்ப பரிதாபப்படுவாங்க. சிலபேரு இன்னும் ஒரு படி மேல போய் “அந்த கோவிலுக்கு போனா பரிகாரம் பண்ணலாம், இந்த சோசியர்கிட்ட போனா நல்ல பலன் உண்டு”ன்னு ஏத்தி விடுவாங்க. அவங்க அந்தப் பக்கம் போனதும், அவங்கள பத்தின கேலிகளும் கிண்டல்களுக்கும் அவங்களுக்கு நல்ல time pass –சா இருக்கும்.

இந்த விசயத்துல தான் நான் ரொம்ப முரண்படுவேன். அவங்களா என்கிட்ட ஏதாவது சொல்ல வந்தா காது குடுத்து கேக்காம இருக்க மாட்டேன். கேப்பேன். ஆனா நிறைய குறுக்கு விசாரணை பண்ணுவேன். தப்பு பெரும்பாலும் இவங்க பெயர்லயே இருக்கும். “நீங்க செய்றது தப்பு”ன்னு முகத்துக்கு நேரா காரண காரியங்களோட விளக்கிடுவேன். ரொம்பவே argue பண்ணிட்டு இருந்தா, “போங்க, போய் வேலைய பாருங்க”ன்னு தொரத்தி விடுவேன். பெரும்பாலும் நான் அவங்ககிட்ட முகத்துல கடுமை தான் காட்டியிருக்கேன். அப்படியும் ரெண்டு பேரும் மறுபடியும் புன்னகையோட வலம்வர முடியுதுனா அவங்களுக்கு என் மேல ஏதோ ஈர்ப்பு, இவங்க என்னவோ சொல்ல வராங்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்.

ஒரு தடவ வாய்விட்டே கேட்டேன், “இவ்வளவு திட்டியும் எப்படி என் பின்னாலயே வரீங்க”ன்னு. “நான் நல்லா இருக்கணும்னு நீங்க மனசார நினைக்குறீங்க. அது எனக்கு நல்லா புரியுது”ன்னு சொன்னாங்க.

அவ்வளவு தான் வாழ்க்கை. அவ்வளவு தான் புரிதல். 

என்ன கஷ்டம் வந்தாலும் “ஐயோ என் நிலைமை இப்படி ஆகிபோச்சே”னு சுய இரக்கமோ அனுதாபமோ நம்ம மேலே நமக்கு வந்துடவே கூடாது. அதுல மட்டும் சரியா இருந்துடணும். அந்த விசயத்துல நான் வரம் வாங்கி வந்துருக்கேன்.

Tuesday 13 December 2016

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றமும் நானும்



போன வாரத்துல திடீர்னு ஒரு போன் கால்.

“எம்மா, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பா பத்தாம் தேதி ஒரு மீட்டிங் இருக்கு. அதுக்கு போய்ட்டு வாயேன்”ன்னு சொன்னது சாட்சாத் எழுத்தாளர் பொன்னீலன் தான்.

“ஏதாவது மீட்டிங் போனா என்கிட்டயும் சொல்லுங்க, நானும் வரேன்”ன்னு நான் தான் அவர்கிட்ட சொல்லி வச்சிருந்தேன்.

“சரி, நான் போறேன், அது எங்க நடக்குது”ன்னு நான் கேட்டதும், “நீ போறியனா என்னெயும் கூட்டிட்டு போய்டேன், நானும் உன்கூட வந்துடுறேன்”ன்னார்.

“ஹப்பாடா, நல்லவேளை, வழி தெரியாம நாகர்கோவில்ல திணற வேணாம், தப்பிச்சோம்”ன்னு மனசுல நினச்சுட்டே, “ஐயோ கண்டிப்பா கூட்டிட்டு போறேன், எத்தன மணிக்கு உங்கள கூப்ட வரணும்”ன்னு விவரம் எல்லாம் கேட்டுகிட்டேன்.

அவர்கிட்ட சொன்ன மாதிரியே அஞ்சு மணிக்கு அவர் வீட்டு வாசல்ல போய் நிக்க, அவர் கூட அவர் மனைவியும் வந்தார். ஏற்கனவே ரெண்டு மூணு நாள் அவர் வீட்டுக்கு போயிருக்குறதால அவங்க கூடவும் நல்ல அறிமுகம். அதுவும் பத்து நாள் முன்னால வீட்டுக்கு போனப்ப அவங்க போட்டு தந்த டீ பிரமாதம். பொன்னீலன் சாருக்கு குடுக்காம நாங்க மட்டும் குடிச்சுட்டு வந்துருந்தோம்.

“சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலுக்கு போறா, அவள செட்டிகுளத்துல இறக்கி விடணும்மா”ன்னு இவர் சொன்னதும் பரஸ்பரம் சிரிச்சுகிட்டே சரின்னு தலையாட்டிகிட்டேன். கார்ல வர்றப்ப ரோடும், அத உடச்சி போட்டுருக்குற விதத்தையும் பத்தி தான் பேசிகிட்டே வந்தோம். அவங்கள இறக்கி விட்டுட்டு நாங்க அப்படியே டதி ஸ்கூல் பக்கத்துல இருந்த ஓய்வு பெற்றோர் சங்கம் இருந்த இடத்துக்கு போனோம்.

அது சா. தேவதாஸ் அவர்களோட இரண்டு நூல்கள் பத்தின கருத்தரங்கம்.

தலைமை கவிஞர் நட. சிவக்குமார்.

சா. தேவதாசோட “கால்வினோ கதைகள், கட்டுரைகள், நேர்முகம்” புத்தகத்த விவரிச்சு ஹச். முஜீப் ரஹ்மானும், “மரண தண்டனையின் இறுதி தருணங்கள்” பற்றி சிவசங்கர் எஸ்.ஜே அவர்களும் பேசினாங்க. கடைசியா உரை சா. தேவதாஸ்.

கவிஞர் நட. சிவகுமார் பேசினப்ப கால்வினோ கால்வினோனு நிறைய பேசினார். கால்வினோவோட ரெண்டு குட்டி கதைகளையும் சொன்னார். கால்வினோவோட காதலன்னும், அவர படிச்சி வாழ்ந்தவன்னு பெருமையா பேசினார். ஹச். முஜீப் ரஹ்மானுக்கும் அவருக்கும் உள்ள நட்பை பத்தி பேசினார். கால்வினோ இல்லனா தன்னோட மூளை செத்துப் போயிருக்கும்னு சொன்னார். நிஜமாவே எனக்கு அவர் சொன்ன ரெண்டு கதைகளோட முடிவுல என்ன சொல்ல வந்தாங்கன்னு புரியவே இல்ல. என்னை மாதிரி ஆட்களுக்கு அவங்க இவ்வளவு பரவசப்பட்டு சிலாகிச்ச கால்வினோவோட அருமைகள கொஞ்சம் புரிய வச்சிருக்கலாம்.

ஹச். முஜீப் ரஹ்மான் பேசினப்ப, எவ்வளவு தான் நாம இதிகாசங்கள படிச்சிருந்தாலும் உலக இலக்கியம் படிச்சா தான் ஒரு விரிவான பார்வை கிடைக்கும்னு சொன்னார். கால்வினோவ தெரிஞ்சுக்கணும்னா க்யூபாவ அறிஞ்சிருக்கணும், லத்தீன் மொழிய அறிஞ்சிருக்கணும், லத்தீன் பாரம்பரியத்த அறிஞ்சிருக்கணும், இத்தாலிய அறிஞ்சிருக்கணும், இத்தாலிய எழுத்தாளர்களை அறிஞ்சிருக்கணும், அப்ப தான் கால்வினோ பத்தி அறிஞ்சிக்க முடியும்னு சொன்னார்.

ரியலிசம் என்னும் எதார்த்தவாதம் சமூகத்தில் உள்ளதை உள்ளப்படி காட்டுற விதம். ரியோ-ரியலிசம் விளிம்பு நிலை மக்களை காட்டுகின்ற முறை. இதுல இலத்தீன் அமெரிக்க பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் ஒரு புதிய மாய யதார்த்தம்ங்குற முறையை பயன்படுத்தி உலகத்துக்கு அறிமுகப்படுத்தினவர் கால்வினோ. அதனாலேயே இத்தாலிய வரலாற்றில் கால்வினோ ரொம்ப முக்கியமானவர்னு ஹச். முஜீப் ரஹ்மான் சொன்னார்.

கால்வினோ கதைகள, புத்தகங்கள நாலு பக்கத்துக்கு மேல யாராலும் படிக்க முடியாதுன்னு அடிக்கடி சொல்லிட்டே இருந்தார். ஏன்னா அந்த முறையே ஒரு அதிர்ச்சிகரமான முறையாம். இப்படியான முறைல கதை சொன்னா அத எப்படி வாசகர்கள் ஏத்துக்குவாங்கங்குற கேள்வி ஆசிரியருக்கு இருந்துருக்கணும், ஆனா அந்த காலகட்டத்துல லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவோட ஏகாதிபத்தியத்தால நிறைய பாதிக்கப்பட்டதுனும், அப்படி பாதிச்சதால தான் வித்யாசமான கதைகள் எல்லாம் அமைஞ்சதுனும், மேற்கத்திய நாடுகள் இலக்கிய தரங்கள்ல சிறந்து விளங்கினதால அவங்களால அத புரிஞ்சுக்க முடிஞ்சுதுனும் சொன்னார்.

அரசுக்கு எதிரான, ஸ்தாபனங்களுக்கு எதிரான கதைகள கால்வினோ நேரடியா சொல்லாம மாற்று விஞ்ஞான முறை மூலமாகவும் விர்சுவல் பிக்சன் மூலமாகவும் வேற முறைகள்ல சொல்ல ஆரம்பிக்குறார். இத ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அவருடைய குரலா பதிவு செய்றார். அவர் எந்த மாதிரியான எழுத்தாளர், அவருடைய தேடல்கள் என்னவா இருந்துச்சுங்குற விவரங்கள் எல்லாமே சா. தேவதாசோட “கால்வினோ கதைகள், கட்டுரைகள், நேர்முகம்” புத்தகத்த படிச்சதுக்கு அப்புறம் தான் புரிய ஆரம்பிச்சதுனும், கால்வினோவோட இன்னும் நெருக்கமாக இந்த புத்தகம் உதவிச்சுன்னும் ஹச். முஜீப் ரஹ்மான் தெரிவிச்சார்.

அடுத்து “மரண தண்டனையின் இறுதி தருணங்கள்” பற்றி சிவசங்கர் எஸ்.ஜே பேச வந்தார். மனுசர் நிஜமாவே நிறைய சுவாரஸ்யங்களோட பேசினார். பாக்தாத் அழகி ஒருத்தியை காதலிக்குற மூணு பேர் பத்தின கதை சொன்னார். காதலனோட வேலை காதலிச்சுட்டே இருக்குறது தான். அத தவிர்த்து மாயாஜாலங்களை செய்பவன் காதலனாக முடியாதுன்னு சொன்னார். ஒரு மரண தண்டனை கைதி எப்படி தப்பிக்குறார், எப்படி வீட்டுக்கு போறார், கடைசி காட்சியில தூக்குல போடப்படுறார் அப்படிங்குற ஒரு குறும்படம் பத்தி சொல்லிட்டு, “மரண தண்டனையின் இறுதி தருணங்கள்” பற்றி பேச ஆரம்பிக்குறார்.

அந்த புத்தகத்துல பதினோரு கட்டுரைகள் இருக்குறதாவும் மரணத்தண்டனைக்கான சட்டத் திருத்தத்துக்கான அவசியம் பத்தியும் பேசினார். பேரறிவாளன், யாகூப் மேனன் பற்றி பேசி, மரணத் தண்டனையை எதிர்த்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய அவசியத்த எடுத்து சொன்னார்.

பிறப்பும், இறப்பும் யாராலயும் முன்பதிவு செய்யவே முடியாது. ஆனா தனியறைல அடைக்கப்பட்ட, மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒருவனின் மனநிலை என்னவாயிருக்கும்?. சிவசங்கர், ஒரு பத்து நிமிஷம் தனித்துவிடப்பட்ட தன்னோட சொந்த அனுபவத்த சொல்லி, அது எத்தனை கொடுமையானதுன்னு உணர வச்சார். மனிதன் ஒரு சமூக பிராணி, இந்த விலங்குக்குள்ள பல விலங்குகள் இருக்கும். இப்படியான மனுசன மறுபடியும் ஒரு விலங்கு நிலைக்கு கொண்டு போறது தான் மரணத்தண்டனை, ஆயுள் தண்டனைய விட மிக கொடுமையானது மரணத் தண்டனைனு விவரிச்சார்.

இன்னிக்கி இந்தியாவுல ஜாதி அடிப்படையான தண்டனைகள் தான் அதிகம்னும், கொடுக்கப்படுற தண்டனைகள்ல 94 சதவிதத்த தலித் மக்களும், பாட்டாளி மக்களும் தான் அனுபவிக்குறாங்கன்னு புள்ளி விவரங்கள் சொன்னார்.

இந்திய இறையாண்மைக்கு எதிரான விசயங்கள், பயங்கரவாத தாக்குதல், கூட்டு மனசாட்சின்னு மரண தண்டனைக்கு ஆதரவா பேசுறவங்க சொல்லலாம், ஆனா தண்டனைகள் குடுத்துட்டா மட்டும் குற்றங்கள் குறைஞ்சிடுமா? அப்படின்னு கேள்விகள் கேட்டுட்டு, இங்கிலாந்துல நூற்று அம்பது திருடர்கள பொதுவெளில தூக்குல போடுறப்ப, வேடிக்கை பாக்க வந்த மக்கள்கிட்டயே திருடின திருடர்கள் பத்தி சொல்லி, அதனால குற்றங்கள் தண்டனைகளால ஒரு போதும் குறைக்க முடியாதுன்னு சொன்னார்.

சா. தேவதாஸ் கடைசியா பேசினப்ப, கால்வினோவோட பள்ளி நாட்கள்ல முசோலினி சர்வாதிகாரியா இருந்ததாகவும் அவர கிண்டல் பண்ணி கால்வினோ ஒரு கவிதை எழுதினதாகவும், இளமை காலத்துல பாசிசத்துக்கு எதிரா தன் நண்பனோட சேர்ந்து இயங்கினதாவும் சொன்னார். மக்கள் மேல தனக்கிருந்த அக்கறையையும் நலனையும் வேறு கலைவடிவங்கள்ல சொல்ல முடியாத நிலைல எழுத்து மூலமா, புனைவுகள் மூலமா, இலக்கியம் மூலமா குடுத்ததால கால்வினோவ தனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னார்.

அடுத்ததா, “மரண தண்டனையின் இறுதி தருணங்கள்” பத்தி பேசுறப்ப, ஒரு சட்டவாதி எடுக்க வேண்டிய ஒரு விசயத்த ஒரு இலக்கியவாதி ஏன் எடுக்கணும்னா ஒரு அரசியல் சார்ந்த பிரச்சனைய ஒரு இலக்கியவாதி கைல எடுக்குறப்ப அவங்களால அத வேற கோணத்துல அணுக முடியும்னு சொன்னார்.

தீவிரவாத செயல்கள எடுத்துகிட்டா கூட, பலம் உள்ளவங்க தப்பிச்சிடுவாங்க, அப்பாவிகளும், நேரடி சம்மந்தம் இல்லாதவங்களும் தான் பாதிக்கப்படுறாங்க. மனித உரிமை அடிப்படைல மரணத்தண்டனை என்பது இருக்க கூடாது. ஏன்னா, அது குற்றவாளிக்கு எந்த வித சந்தர்ப்பமும் தர்றது இல்ல. அவன ஒரு நல்ல மனுசனா மாறுறதுக்கு வாய்ப்பு குடுக்காம அரசு கொலை செய்து விடுது. மனித உரிமையை ஆதரிக்குற எல்லா நாடுகளும் மரண தண்டனைய எதிர்க்குது. இந்த நேரத்துல மரணதண்டனைய ஆதரிக்குறது சரியில்லங்குறது தான் ஒரு இலக்கியவாதியோட பார்வைன்னு சொல்லி உக்காந்தார்.

கூட்டம் முடிஞ்சதும் ஒவ்வொருத்தருகொருத்தர் அறிமுகம் பண்ணிகிட்டாங்க. பொன்னீலன் சார் எனக்கு நிறைய பேரை அறிமுகப்படுத்தி வச்சார். ஆனா முதல் சந்திப்புங்குறதால தலையசைச்சு சிரிக்க மட்டும் தான் என்னால முடிஞ்சுது.

இந்த கூட்டத்துல வந்தவங்கள்ல மொத்தமே ரெண்டு பெண்கள் தான். ஒண்ணு நான். இப்ப தான் எட்டிப்பாக்கவே செய்துருக்கேன். இன்னொருத்தங்க உஷா தேவி. அவங்களும் இந்த கூட்டத்துக்கு இப்ப தான் முதல் தடவையா வந்துருக்காங்களாம். மலையாளத்துல மூணு புத்தகம், தமிழ்ல ரெண்டு புத்தகம் எழுதி முடிச்சாச்சு. அதுவும் அவரோட “பள்ளத்தில் இருக்கும் வீடு” சிறுகதை தொகுப்புக்கு கலை இலக்கிய பெருமன்றம், புதுகோட்டை சார்பா விருது கிடைச்சிருக்கு.

மொத்தத்துல கூட்டம் கலைஞ்சு, கார்ல ஏறி வீட்டுக்கு வந்துட்டு இருந்தப்ப நிறைய பிரமிப்பு. இறை நம்பிக்கை, கூட்டம் பத்தின அலசல்ன்னு பேசி களைச்சு, பொன்னீலன் சார அவர் வீட்ல இறக்கி விட்டப்ப, “உனக்கு ஒரு புது உலகத்த அறிமுகப்படுத்தி இருக்கேன். அத நீ கூர்ந்து கவனிச்சுக்கோ. இதுல உனக்கு தேவையானத மட்டும் கிரகிச்சுட்டு, மத்தத சேமிப்புல வை”ன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள போனார்.

அடுத்தடுத்து இன்னும் என்னோட பயணத்த தொடரணும்ன்னு முடிவு எடுத்துட்டு நானும் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.





Tuesday 20 September 2016

அடுத்து நேரப் போறது என்னன்னு தெரியாது

நான் யூ.ஜி பண்ணினப்ப தான் அவங்கள பாத்தேன். கருப்பா, ஒல்லியா இருப்பாங்க. அவங்க நடை உடை பாவனைல ஒரு மிடுக்கு இருக்கும். அவங்க சேலை கட்டுற விதமே அத்தனை பிரமிப்பா இருக்கும். ஆங்கிலம் அவங்க நுனி நாக்குல விளையாடும்.

அவங்கள பொருத்தவரைக்கும் பொண்ணுங்க நல்லா படிச்சா அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதோட அவங்களுக்கு இன்னும் நிறைய திறமைகள் இருந்தா சொல்லவே வேணாம், அவ்வளவு இஷ்டம். செமினார் க்ளாஸ் எடுக்குறதுல எனக்கு ரொம்ப இஷ்டம்ங்குறதால நான் எப்பவும் அவங்களுக்கு செல்லம். அடிக்கடி என்னை க்ளாஸ் எடுக்க சொல்லி அவங்க கவனிச்சுட்டு இருப்பாங்க. என் கூட இன்னொருத்தியும் உண்டு. நான், அவ, அவங்க மூணு பேரும் தான் மாத்தி மாத்தி க்ளாஸ் எடுத்துட்டு இருப்போம்.

இப்படி இருக்குறப்ப ஒரு நாள் காலேஜ்ல இருந்து டூர் கூட்டிட்டு போனாங்க. போன இடத்துல நாங்க மூணு பேரும் தான் ஒரு ரூம்ல தங்க வேண்டிய சூழ்நிலை. அன்னிக்கி ராத்திரி மூணு பேருமே தூங்கல. விடிய விடிய மேடம் அவங்க கதைய சொல்லிட்டே இருந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் பிரமிப்போட அத கவனிச்சுகிட்டே இருந்தோம். இது நாள் வரைக்கும் வெறும் ஆசிரியையா இருந்த அவங்கள நாங்க தோழி ஆக்கிகிட்டது அன்னிக்கி தான்.

அவங்க அப்பா ஒரு கவர்மென்ட் வெட்னரி டாக்டர். வேலைக்கு போன இடத்துல இவங்கள விட ரெண்டே வயசு பெரிய பெண் (பதினாறு வயசு)கிட்ட தப்பா நடந்து, அந்த பொண்ணு கர்ப்பம் ஆகி, ஊர்ல எல்லாரும் சேர்ந்து அவருக்கே அந்த பொண்ணை கட்டி வச்சுட்டாங்க. இவங்க அம்மாவுக்கு பைத்தியம்னு சொல்லி ரெண்டு வருஷம் ரூமுக்குள்ள அடச்சு வச்சு, ஒரு நாள் அவங்களும் செத்துப் போய்ட்டாங்க.

மிரட்சியோட கேட்டுகிட்டு இருந்த எங்கள பாத்து அவங்க சொன்னாங்க, “ஊர்ல எல்லோருக்கும் எங்க அம்மாவ விச ஊசி போட்டு கொன்னது எங்க அப்பான்னு தெரியும். என்னையும் சாட்சி சொல்ல கூப்பிட்டாங்க. அம்மா செத்தப்ப எனக்கு பதினாறு வயசு. என் தங்கச்சிக்கு பத்து வயசு. அந்த நிலைமைல என் அப்பாவ நான் காட்டி குடுத்தா அவர் ஜெயிலுக்கு போய்டுவார், நாங்க ரெண்டுபேரும் யாருமே இல்லாத அநாதை ஆகியிருப்போம். ஊர்ல யாருமே உதவிக்கு வந்துருக்க மாட்டாங்க. அதனால எங்க அம்மா பைத்தியம் முத்தி தான் செத்து போனாங்கன்னு சாட்சி சொல்லிட்டேன்”னு அவங்க சொன்னதும் மனசு கனத்து போச்சு.

அப்பாவ ஜெயிலுக்கு போகாம காப்பாத்தி விட்டாலும் அப்புறம் அவர் மேல இருந்த வன்மம் அவங்களுக்கு கூடி போச்சு. அப்பாவோட அத்தனை சொத்தையும் ஊர்காரங்க, சொந்தக்காரங்க சாட்சியா வச்சு தன்னோட பெயர்ல எழுதி வாங்கிகிட்டாங்க. இதனாலயே அவங்க ஒவ்வொரு பரீட்சை நேரத்துலயும் அவங்க அப்பா புக்ஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டு, சொத்தை எழுதி குடு, அப்போ தான் புக்ஸ் தருவேன்னு மிரட்டுவாராம். நல்லா படிக்குறவங்க, அதனாலயே படிக்காமலே பரீட்சை எழுத பழகிட்டாங்களாம்.

விரும்பி ஒருத்தர் கல்யாணம் பண்ணிக்குறேன்னு பொண்ணு கேட்டு வந்தப்ப அவங்க எம்.எஸ்.சி படிச்சுட்டு இருந்துருக்காங்க. அவங்க படிப்புக்கு எந்த தடையும் வரக்கூடாதுன்னு கட்டளை போட்டுக்கிட்டு தான் கல்யாணமே பண்ணிகிட்டாங்களாம். கல்யாணத்துக்கு அடுத்த நாள் யூனிவர்சிட்டி எக்ஸாம். அதையும் போய் எழுதி இருக்காங்க. தங்கச்சிக்கு பதினெட்டு வயசு வந்ததும் அவங்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரிச்சு குடுத்து கல்யாணமும் முடிச்சு வச்சிட்டு அப்புறம் ஒரு பங்கை அப்போவோட ரெண்டாவது மனைவி மூலமா பிறந்த தம்பிக்கே திருப்பி குடுத்துட்டாங்க.

“அன்னிக்கி நான் இப்படி ஒரு முடிவை எடுக்கலைனா நானும் என் தங்கச்சியும் சின்னாபின்னமாகி இருப்போம்”னு சொல்ற அவங்கள பாத்தா எங்களுக்கு நிஜமாவே மலைப்பா இருக்கும். ஒவ்வொரு மாசம் பீரியட்ஸ் நேரத்துல மரண அவஸ்த்தைப்படுவாங்க. பொண்ணுங்கனா இத விட எவ்வளவோ கஷ்டங்கள் உண்டு. இதெல்லாம் ஜுஜுபின்னு சொல்லுவாங்க. கிட்டத்தட்ட மனோ தைரியத்த அதிகமா நான் கத்துகிட்டது அவங்க கிட்ட தான்.

திடீர்னு ஒரு நாள் வேற வேலைக்கு போறேன்னு சொன்னாங்க. அழுதுகிட்டே பிரியாவிடை குடுத்தோம்.

அப்புறம் அவங்கள பத்தி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டோம். திடீர்னு அவங்க மால்தீவ்ஸ்ல இருக்காங்கன்னு செய்தி வரும். அடுத்து இந்தோனேசியான்னு சொல்லுவாங்க. அப்புறம் ஒரு நாள் அவங்களுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சுன்னு சொன்னாங்க. என்னால அத ஜீரணிக்கவே முடியல. ஆனா செய்தி உண்மை தான்னு எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட பெண் ஒருத்தி சொன்னப்ப நொறுங்கி போனேன்.

எப்படி பட்ட பெண் அவங்க. கிட்டத்தட்ட அவங்க பாடம் எடுத்த எல்லோருக்குமே அவங்க தான் ரோல் மாடல். கல்யாணம் ஆகி, ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகி, குடும்பத்து பிரச்சனை அவங்கள எப்படி எல்லாம் புரட்டி போட்டுருக்கு.

எனக்கு அவங்க கணவரையும் தெரியும். கிட்டத்தட்ட எனக்கும் அவருக்கும் ஒரே மாதிரியான ரசனை. நான் வீட்ல மீன் வளர்த்துட்டு இருந்தேன். ஒரு நாள் எதேச்சையா வீட்டுக்கு வந்த அவர் நான் மீன்கள பராமரிக்குற விதத்த பாத்துட்டு நானும் மீன் வளர்க்க போறேன்னு கிளம்பிட்டார். உனக்கும் என் வீட்டுக்காரருக்கும் வேற வேலையே இல்ல. மீன் வளர்க்குறேன்னு என் உயிரை வாங்குறார்னு என்கிட்ட சிரிச்சுகிட்டே சலிச்சுப்பாங்க மேடம். எப்பவும் வீட்டுக்காரர விட்டுக்குடுத்தது இல்ல, அவரும் அப்படியே தான்.

நம்ம சமுதாயத்துல தான் ஒரு ஆணும் பெண்ணும் நிம்மதியா இருக்க, காதலோட இருக்க அவங்க ரெண்டு பேர் மட்டும் சம்மந்தப்பட்டா போதாதே, குடும்பம், உற்றார், உறவினர்னு ஆளாளுக்கு சொல்ற மாதிரி தானே குடும்பம் நடத்த வேண்டியது இருக்கு. காதலிக்கவும் வேண்டியிருக்கு.

ஆக, ஒரு காதல் முடிவுக்கு வந்துடுச்சு. அவங்களுக்கும் பைத்தியம் முத்தி போய்டுச்சு. ஒன்னரை வருஷம் முன்னாடி வரைக்கும் அவங்கள பத்தி அரைகுறையா கேள்விபட்டுட்டு இருந்தோம். அப்புறம் அவங்க என்ன ஆனாங்கன்னு எங்களுக்கு தெரியவே இல்ல.
.............

இன்னிக்கி எங்க காலேஜ் பிரின்சிபால்கிட்ட ஒரு கையெழுத்து வாங்க அவங்க வீட்டுக்கு நானும் என்னோட சூப்பர் ஜூனியர் பொண்ணும் போயிருந்தோம். போயிட்டு திரும்பி வர்றப்ப தான் அவர பாத்தோம். மேடத்தோட அப்பா. கார விட்டு இறங்கி போய் பேசலாம்னு சொன்னா அவ. எனக்கோ அவர் மேல இருந்த வெறுப்பு துளியும் குறையல. வேண்டா வெறுப்பா காரை விட்டு இறங்கி முகத்தை வேற பக்கமா திருப்பிகிட்டு நின்னேன்.

அவ போய் பேசிட்டு இருந்தப்பவே அவர் என்கிட்ட வந்துட்டார். நீ இன்னாரோட பொண்ணு தானே, உங்க வீட்டு மாட்டுக்கு ஊசி எல்லாம் போட உங்க வீட்டுக்கு அடிக்கடி வருவேன்னு சொன்னார். வலிய வந்து பேசுறவர்கிட்ட பேசாம எப்படி போக? ஒப்புக்கு மேடம் நல்லா இருக்காங்களான்னு கேட்டேன். உடனே மளமளன்னு ஆரம்பிச்சுட்டார்.

அவ கத உனக்கு தெரியுமாமா, அவளால நான் நிறைய கஷ்டப்பட்டுட்டேன்னு அவர் கண்ணு கலங்கி போச்சு. அத்தன வயசான மனுஷன், என்ன தான் அவர பத்தி தப்பா கேள்விப்பட்டுருந்தாலும் அவர் கண்கலங்கினத பாத்து மனசு பதறி போச்சு. மேடம் இப்ப எப்படி இருக்காங்க, எங்க இருக்காங்கன்னு கேட்டேன்.

“She is perfectly alright”னு தான் முதல் வார்த்தையே சொன்னார். மனநிலை ரொம்ப பாதிக்கப்பட்டு நட்டநடு ராத்திரியில ஊர்ல ஒரு கோடில இருந்து மறுகோடிக்கு அலறிகிட்டே ஓடுவாங்களாம். பாக்குற சுவர்ல எல்லாம் அவங்க பெயர் எழுதி முன்னால Dr னு போட்டு வைப்பாங்களாம். எத்தனையோ நாள் பக்கத்து போலிஸ் ஸ்டேசன்ல ராத்திரி நேரம் போய் கலாட்டா பண்ணி, நிறைய தடவ அரெஸ்ட் பண்ணி உள்ள வச்சிருக்காங்களாம்.

“நான் ஒரு ஆத்தீகன்மா. எனக்கு தெய்வ நம்பிக்கை எல்லாம் சுத்தமா கிடையாது. மனசாட்சிய மட்டும் நம்புறவன். ஆனா வாழ்க்கைல எல்லாத்தையும் இழந்துட்டு ஏதோ ஒரு வழி பிறந்துடாதான்னு ஏக்கத்துல இருந்தப்ப, பக்கத்து ஊரு பூசாரி என்னை வலுக்கட்டாயமா அவரோட கோவிலுக்கு இழுத்துட்டு போனார். உங்க பொண்ணு புத்திக்கு எதுவுமே இல்ல, செய்வினை கோளாறு தான். நான் சரி பண்றேன்னு சொல்லி கொஞ்சமா திருநீறு, குங்குமம் வச்சு சின்னதா பூஜை பண்ணினார். அன்னிக்கே அவ சென்னை போய்ட்டா. மறுபடி அவ திரும்பி வந்தப்ப அப்படியே மாறி இருந்தா. இன்னிக்கி அவ ஒரு காலேஜ்ல வேலை பாக்குறா. டிபார்ட்மென்ட் ஹச்.ஓ.டி அவ. காலேஜ் வைஸ்-ப்ரின்சிபால் கூட”ன்னு அவர் சொன்னதும் என் முகம் எல்லாம் மலர்ந்துடுச்சு. கூட இருந்தவள பாத்தேன், அவளும் அப்படியே ஒரு பரவச நிலைல தான் இருந்தா.

எனக்கு இந்த செய்வினை, பூசாரி எதுவுமே காதுல விழல. எத்தனையோ வைத்தியங்கள் மத்தியில ஏதோ ஒரு வகைல அவங்க சரி ஆகிட்டாங்க. என்னோட மேடம் நல்லா இருக்காங்க. அது போதும்.

அவங்க பிள்ளைங்க எங்க இருக்காங்கன்னு இழுத்தேன். இதோ, பொண்ணு என் கிட்ட தான் சின்னதுல இருந்தே வளருறா. அப்படியே அவ அம்மா மாதிரி. புக் எடுத்து படிக்கவே மாட்டா, ஆனா மார்க் தொன்னுத்து எட்டுக்கு கீழ குறையாதுன்னு சொன்னப்ப அவர் முகத்துல அத்தன பெருமை. இதோ, இதான்மா எங்க வீடுன்னு சொல்லி, அந்த பொண்ணையும் கூப்பிட்டு எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். தாத்தா இடுப்பை கட்டிக்கிட்டு அந்த சின்னப் பொண்ணு சிரிச்ச சிரிப்புல ஒரு நிறைவு இருந்துச்சு. அவ தலைய அவர் வருடி விட்டதுல ஒரு ஆன்ம நெருக்கம் இருந்துச்சு. என்னோட அத்தனை தவறுகளுக்கும் பிராயசித்தமா இவள நான் வளர்த்துட்டு இருக்கேன்னு அவரே சொன்னார்.

அடியே செல்லமே, உனக்கு ஒரு லவ், உன் அம்மாவுக்கும் ஒரு லவ்.

மேடத்தோட நம்பர் குடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு வீட்டுக்கு வந்தோம். அவ இன்னும் என் மேல கோபமா தான் இருக்கா. நான் நம்பர் குடுத்தேன்னு சொல்லிடாதீங்கன்னு சொல்லி அனுப்பி வச்சார் அவர்.

வீட்ல வந்து உக்காந்து யோசிச்சுகிட்டே இருக்கேன். அவங்களுக்கு கால் பண்ணலாமா வேணாமான்னு. இல்ல வேணாம். வாழ்க்கைல நானும் ஒரு நாள் ஜெய்ச்சுட்டு பெருமிதமா தான் அவங்க கிட்ட பேசணும். அப்ப தான் நான் அவங்க மாணவிங்குறது சரியா இருக்கும்.

........................

Monday 29 August 2016

விக்கி டோனார் (Vicky donor) - திரைவிமர்சனம்



படம்: விக்கி டோனார். ரொம்ப நாள் முன்னால இந்த படம் பாத்தேன். அப்பவே மனசுல ஒரு தாக்கத்த உண்டாக்கின படம். ஆனா ஏனோ அத பத்தி எழுதாம விட்டு போய்டுச்சு.

வழக்கம் போலவே எனக்கு ஹீரோ பேரு, ஹீரோயின் பேரு எதுவும் தெரியாது. அதுவும் நன்மைக்கே. கதை மாந்தர்களா மட்டுமே அவங்கள என்னால பாக்க முடிஞ்சி, கதையோட ஒன்றி போக அதுவும் ஒரு காரணம்.

கதை ரொம்ப சிம்பிள்.

எந்த விதமான கமிட்ஸ்மென்ட்லயும் சிக்கிக்க விரும்பாத ஹீரோ. ஆர்ப்பாட்டமே இல்லாம அவன் காதலிக்குற பொண்ணு, அவனயும் தன்னோட வயசான மாமியாரையும் பராமரிக்குற அவனோட அம்மா, அல்ட்ரா மாடர்னா யோசிக்குற அவனோட பாட்டி. இவங்கள சுத்தி நடக்குறது தான் கதை.

கதாநாயகன் விக்கி ஒரு கொடையாளி. அதனால அவனுக்கு கிடைக்குற பணம், அப்புறம் அதனால அவன் படுற கஷ்டம், அதுக்கு பிறகு அவன் நிலைமை என்னன்னு சொல்றது தான் படம்.

சரி, கதாநாயகன் என்ன கொடையாளினு சொல்லலயே, அவன் ஒரு ஸ்பேர்ம் அதான் விந்து கொடையாளி.

படம் ஆரம்பிக்குறப்பவே டாக்டர் கிட்ட இன்னும் தன்னோட மனைவி ஏன் கற்பமாகலன்னு விவாதம் புரியுற கணவனை காட்டுறாங்க. ஒரு குழந்தை எப்படி உருவாகுதுன்னு டாக்டர் அவங்களுக்கு விளக்குற காட்சி எல்லோருக்கும் சேர்த்து தான்.

இந்த படத்துல மக்களோட பேராசையையும் கூட சொல்லி இருக்காங்க. சச்சின் போல பையன் வேணும், ஐஸ்வர்யா போல பொண்ணு வேணும்னு இன்னைய காலக் கட்டத்துல குழந்தை பெத்துக்குரத கூட கமேர்சியல் ஆக்கிடுறாங்க.

தான் ஒரு டைவேர்சி, முதல் ராத்திரியே வீட்டை விட்டு வந்துட்டேன்னு சொல்ற ஹீரோயின் ஆய்ஸ்மா கிட்ட விக்கி சொல்ற பதில் எனக்கு பிடிச்சிருந்துச்சு. அவனுக்கு அவ யாரா, எப்படி இருந்தாலும் பரவால, சிங்கிளா இருந்தாலும் ஓகே, டபுளா இருந்தாலும் ஓகே, டைவேர்ஸ் ஆகியிருந்தாலும் ஓகே. “உன்னை பாத்த நிமிசத்துல இருந்து நீ இல்லாம வாழ முடியாதுன்னு தோணிச்சு. நீ எப்படி இருந்தாலும் ஓகே. உன்னை பாக்கும் போதெல்லாம் உன்னோட புன்னகைக்கு நான் பொறுப்பா இருக்கணும்னு தோணிச்சு. நீ என் கூட இல்லாத பொழுதுகள் நகரவே இல்ல”ன்னு அவன் சொல்ற இடம் சூப்பர்.

நான் இந்த படத்துல ரொம்ப ரசிச்சது ரெண்டு வித்யாசமான இனங்களோட பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், பிடிவாதங்கள். ஹீரோ பஞ்சாபி, ஹீரோயின் பெங்காலி. ஒருத்தங்கள பத்தி இன்னொருத்தங்க வச்சிருக்குற கருத்துகள், எண்ணங்கள், எல்லாம் தாண்டி எப்படி ரெண்டு குடும்பமும் ஒண்ணா இணையுதுன்னு சொல்ற இடங்கள் எல்லாமே நான் ரொம்ப ரசிச்சேன். அதுவும் அந்த கல்யாண சீன்ஸ் அசத்தல்.

ஒரு பஞ்சாபி பையன எல்லாம் மருமகனா என்னால ஏத்துக்க முடியாதுன்னு காச் மூச்ன்னு கத்துற அப்பாகிட்ட கூலா பக்கத்துல வந்து “அவன எப்போ மீட் பண்ண போறீங்க”ன்னு ஆய்ஸ்மா கேக்குறது அசத்தல். அது கண்டிப்பா ஒரு டிப்பிகல் அப்பாவையும் மகளையும் நம்ம கண்ணு முன்னால நிறுத்திடும். அவ அப்படி கேட்டதும் பக் பக்னு வாயடைக்குறவர் தான், அடுத்த சீன் ஒபென்னிங் ஹீரோ வீட்ல எல்லாரும் காப்பி குடிக்குற சீன் தான். டைரக்டர் டச். அடுத்து பெரிய சண்டை நடக்கும்னு நினைக்குற நம்ம எதிர்பார்ப்புல பூச்சாண்டி காட்டிடுறார்.

பிடிச்ச, ரசிச்ச டயலாக்ஸ்னு பாத்தா, நிறைய இருக்கு. ஆனாலும் “அடுத்தவங்களுக்கு விந்து குடுக்குறது, யாருனே தெரியாத குழந்தைங்களுக்கெல்லாம் அப்பா ஆகுறது எல்லாம் நம்ம கலாச்சாரத்துல ஒத்துக்க முடியுமா நீங்களே சொல்லுங்க”ன்னு விக்கியோட அம்மா, அவன் பாட்டி கிட்ட கேக்குறப்ப, “அதெல்லாம் என்னால சொல்ல முடியல, ஆனா ஒரே ஒரு விஷயம் சொல்ல முடியும். குழந்தை இல்லாத எத்தனையோ பேருக்கு இன்னிக்கி குழந்தை இருக்குதுனா அதுக்கு காரணம் விக்கி”ன்னு அவங்க சொல்ற இடம் சூப்பர்.

இன்னொரு இடம், தன்கிட்ட தான் ஒரு ஸ்பேர்ம் டோனர்னு ஏன் சொல்லலன்னு கோவிச்சுட்டு போற ஆய்ஸ்மாவ பாத்து அவ அப்பா கேள்வி கேக்குற இடம். “இப்ப பிரச்சனை அவன் உன்கிட்ட இத மறைச்சான்ங்குறதா, இல்ல நீ அம்மா ஆக முடியல, அவன் அப்பா ஆகிட்டான்ங்குறதா?ன்னு கேட்டு அவள அப்படியே நிலைகுலைய வைக்குறார்.

அதே மாதிரி மாமியாருக்கும் மருமகளுக்கும் உள்ள அந்த கெமிஸ்ட்ரி. அல்ட்ரா மாடனா யோசிக்குற மாமியார், மாமியாருக்காகவும் மகனுக்காகவும் மாடா உழைக்குற மருமகள். ரெண்டு பேரும் சேர்ந்து உக்காந்து தண்ணியடிச்சுட்டு பேசுற இடம் எல்லாமே அவங்க ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்குற ஒட்டுதல காட்டுது. இதுவே தமிழ் படங்கள்ல காட்டியிருந்தா என்னாகியிருக்கும்ங்குற யூகத்த உங்ககிட்டயே விட்டுடுறேன்.

உங்கம்மா குடிப்பாங்களான்னு கேக்குற ஆய்ஸ்மாகிட்ட, “அப்பாவோட மரணத்துக்கு பிறகு, அவங்க ரொம்ப தனிமைல வாடினாங்க. அவங்க ஸ்ட்ரெஸ் போக ஒண்ணோ ரெண்டோ பெக் அடிச்சு பழகிட்டாங்க”ன்னு சொல்ற இடமாகட்டும், “கல்யாணம் ஆகி நீ ஒரு தடவ கூட செக்ஸ் வச்சுக்கலையா”ன்னு ஆய்ஸ்மாகிட்ட ஆச்சர்யமா கேக்குற இடமாகட்டும், ஆய்ஸ்மாவுக்கு குழந்தையே பிறக்காதுன்னு தெரிஞ்சதும் அவன் காட்டுற முகபாவமாகட்டும், விக்கி தான் எப்பவும் கூல்ங்குறத நிரூபிச்சுகிட்டே இருப்பான். அதே மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடி விக்கிய எதிர்க்குற ஆய்ஸ்மாவோட அப்பா, அப்புறம் மருமகனுக்கு காட்டுற சப்போர்ட் அசத்தல்.

இந்த விந்து கொடை அளிக்குறது எல்லாமே அறிவியல் சார்ந்த விஷயம், அதுல தப்பே இல்லன்னு புரிய வைக்க எடுக்கப்பட்ட படம். அதுல பலவிதமான கருத்துக்கள். இது ஹிந்தி படம்ங்குறதாலயோ என்னவோ, இதுல விந்து வேணும்னு கேட்டு வர்ற எல்லாம் ஜோடிகளுமே ரொம்ப தைரியமா கிளினிக் வராங்க. அதுலயும் பெண்கள் முகங்கள்ல ஒரு நிமிர்ந்த பார்வை, தெளிந்த கண்ணோட்டம் தெரியுது. எனக்கு விந்து தேவை, இத விந்து வங்கில வாங்கிக்குறதுல தப்பேயில்ல அப்படிங்குற சரியான கண்ணோட்டத்த இந்த படத்துல அவங்க நடத்தைகள் மூலமாவே டைரக்டர் காட்டிடுறார்.

டாக்டர் கிளினிக்ல குழந்தைகளோட கூடியிருக்குற ஐம்பத்தி மூணு குடும்பங்களையும் பாத்து “அவங்க எல்லாரும் சந்தோசமா இருக்காங்க, அவங்களோட குடும்பம் குழந்தைகளோட முழுமையா இருக்கு, ஆனா எனக்கு ஏன் அப்படி ஒரு முழுமை இல்ல”ன்னு ஆயிஸ்மா சோகத்தோட ஒரு கேள்வி கேக்குறா. “இதோ நீ கேக்குற இதே கேள்விய தான் இங்க கூடி இருந்த எல்லாருமே ஒரு காலத்துல கேட்டாங்க. இதே உணர்வு தான் அவங்களுக்கும் இருந்துச்சு. ஆனா விக்கி அவங்க வாழ்க்கைல வந்த பிறகு அவங்க வாழ்க்கையே சந்தோசமா மாறிடுச்சு. ஏன்னா இந்த குழந்தைகள் எல்லாம் விக்கியோட விந்துல இருந்து உருவாக்கப்பட்டவை”ன்னு டாக்டர் சொன்னப்ப விக்கியும் ஆய்ஸ்மாவும் காட்டுற உணர்ச்சி, கண்ணீர் எல்லாம் நமக்கும் தொத்திக்குது. நாலு வருசத்துல அம்பத்து மூணு குழந்தைங்க. அடேங்கப்பா....

இந்த படத்தோட க்ளைமாக்ஸ் அப்படி இருந்துருக்கலாம், இப்படி இருந்துருக்கலாம்னு நானா பல யூகங்கள யோசிச்சுட்டே இருந்தேன். ஆனா நாம நினைச்ச கிளைமாக்ஸ் எல்லாம் படத்துல வைக்க முடியாதுல, சரி விடுங்க, டைரக்டர் வச்ச க்ளைமாக்ஸ்கே ஓகே சொல்லிடுவோம். ஆனாலும் ஆய்ஸ்மாவுக்கு குழந்தை பிறக்காதுங்குறதால ஒரு வாடகை தாய் மூலமா குழந்தை பெத்துகிட்டதா முடிச்சி இருந்துருக்கலாம். ஏன்னா, ஆய்ஸ்மாவோட கருக்குழாய்கள்ல தான் அடைப்பு இருக்கும். அவளால ஒரு ஆரோக்கியமான கரு முட்டையை உருவாக்க முடியுமே. இப்படி ஒரு க்ளைமாக்ஸ் வச்சிருந்தா, விந்து கொடை, வாடகை தாய் ரெண்டையும் ஆதரிச்ச மாதிரி இருந்துருக்கும்.

ரொம்ப நாள் முன்னால தமிழ்ல வாடகை தாய் பத்தி ஒரு படம் வந்ததா ஒரு நியாபகம். ஆனா அது என்ன படம்னு பெயர் நியாபகத்துல இல்ல. கடைசியில புருசன விட்டுட்டு அந்த குழந்தையோட அவ போறதா படம் முடியும். நம்மோட லெவல் எல்லாம் இவ்வளவு தான் யோசிக்க முடியுது. புருசன காப்பாத்த பணம் வேணும். அதுக்காக வேற வழியே இல்லாம ஒரு குழந்தைய வயித்துல சுமக்குறா. ஆனா முடிவு, யார காப்பாத்த அவ அத செய்வாளோ அவனே அவள ஏத்துக்க மாட்டான். இதயே ஒரு பாசிட்டிவ் முடிவா குடுத்துருந்தா எவ்வளவு நல்லா இருந்துருக்கும்? “விக்கி டோனார்” அப்படி ஒரு பாசிட்டிவான படம்.

Sunday 28 August 2016

பொது கழிப்பறை - public toilet




ஒரு வருஷம் ஆகிப் போச்சு நாப்கின் பத்தி நான் எழுதி. கிட்டத்தட்ட நிறைய பேர் கிட்ட இருந்து நிறைய பாசிட்டிவ் கருத்துகள், விமர்சனங்கள். இப்போ ரெண்டுமூணு நாளா மறுபடியும் அத ஷேர் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. எல்லாம் மார்க்கோட “ஆன் திஸ் டே” மார்க்கத்தால தான். தேங்க்ஸ் டு மார்க்.

இது பத்தி எழுதணும் எழுதணும்னு நானும் ஒரு வாரமா நினச்சுட்டு தான் இருக்கேன், ஆனா இருக்குற சோம்பேறித்தனம் எழுத விடுறதே இல்ல. ஆனா பாருங்க, நேத்து விகடன்ல வந்த நியூஸ் இன்னிக்கி என் கண்ணுல பட்டுச்சு “மாணவர்களே கட்டிய கழிப்பறை – மலைக்க வைத்த மனித நேயம்”ங்குற தலைப்புல.

இதுக்கு முன்னாடியே ப்ரெண்ட்ஸ் சில பேரு பேசிட்டு இருக்குறப்ப இந்த பப்ளிக் டாய்லட் பத்தி கொஞ்சம் எழுதேன்னு கேட்டாங்க. இந்த கழிப்பறை பத்தி எல்லாம் எனக்கு பேச தகுதி இருக்கா இல்லையான்னு சரியா தெரியல, ஏன்னா அதிகமா நான் வீட்டை விட்டு வெளில போறதே இல்ல. அதோட, பொது இடங்கள்ல இருக்குற கழிப்பறைகள் எல்லாம் பயன்படுத்தினதே இல்ல, ஒரு ரெண்டு மூணு சம்பவங்கள் தவிர்த்து.

எனக்கு தெரிஞ்சி முதலாவது சம்பவம் ஒரு பஸ்ஸ்டாண்ட்ல வச்சு நடந்துச்சு. கூட வந்த ப்ரெண்ட்ஸ் எல்லாம் அவசரம்னு போனாங்களேன்னு நானும் போனேன். பக்கத்துலயே போக முடியல, அவ்வளவு நாத்தம். மூக்க புடிச்சுட்டு உவ்வேன்னு எட்டிப் பாக்காமலே ஓடி வந்துட்டேன். கண்டிப்பா எட்டிப்பாத்துருந்தா அலங்கோலம் தான். இதுல பப்ளிக் டாய்லெட்ல சில வாசகங்களும் போன் நம்பர்களும் வேற மூஞ்ச சுளிக்குற மாதிரி இருக்குமாம்.

அடுத்ததா மென்சஸ் பிரச்சனை வந்தப்ப அதுக்காக ஸ்கேன் பண்ண போயிருந்தோம். இந்த ஸ்கேன் உடம்புல வேற எந்த பகுதினாலும் ஈசியா எடுத்துரலாம், ஆனா இந்த வயித்துல, அதுவும் கர்ப்பப்பைல எடுக்குறது எல்லாம் கர்ண கொடூரம். வயிறு முட்ட தண்ணி குடிச்சிருக்கணும். அதுவும் கர்ப்பப்பை முழுக்க தண்ணி நிரம்பி நிக்கலனா ரிபோர்ட் ஒழுங்கா வராது. கஷ்டப்பட்டு எப்படியோ ஸ்கேன் எடுக்க ஒத்துழைச்சு வெளில வந்தா, ஒரு அடி கூட நகர முடியாது. அப்படியே அங்கயே பாத்ரூம் போய்ட்டா என்னன்னு தோணும். அட, அங்கேயாவது பாத்ரூம் எல்லாம் சுகாதாரமா இருக்குமான்னு பாத்தா அதுவும் கிடையாது.

அதுக்காக நான் ஸ்கேன் செண்டர்கள குறை சொல்றேன்னு அர்த்தம் கிடையாது. எனக்கு நேர்ந்த அனுபவம் வேற. ஸ்கேன் செண்டர் மாடியில. பாத்ரூம் கீழ இருந்துச்சு. அதுவும் கொஞ்ச தூரம் ஒரு சந்துக்குள்ள வேற போகணும். பாத்ரூம் எல்லாம் போகாம அப்படியே வீட்ல போய் பாத்துக்கலாமான்னு யோசிக்க கூட முடியல, காரணம் அவ்வளவு அவஸ்த்தை. சரின்னு தத்தி தாவி பாத்ரூம் போய், கதவ தொறந்தா, உவேக்... அப்படியே மூத்திர வாடை.

வேற வழியே இல்லன்னு உள்ள மெல்ல எட்டிப்பாத்தா, யாரோ ஆய் போயிட்டு அரைகுறையா தண்ணி விட்டுட்டு அப்படியே போயிருக்காங்க. உள்ள கால் கூட எடுத்து வைக்க முடியாத நிலைமை. ஆனா அங்கயே தண்ணி, விளக்குமாறு எல்லாம் இருந்துச்சு. பாத்து பதமா கால் எடுத்து வச்சு, முதல்ல தண்ணிய பாத்து பாத்து விட்டு, அப்புறம் விளக்குமாறு எடுத்து லேசா கழுவி விட்டு, எல்லாம் கிளீன்ன்னு ஆனதுக்கு அப்புறம் தான் என்னால நிம்மதியா பாத்ரூமே போக முடிஞ்சுது.

இதுல இருந்து நான் சொல்ல வர்ற விஷயம் என்னன்னா, சில பொது கழிப்பறைகள், பள்ளிகள்ல தண்ணி வசதியே இருக்காது. இங்க தாராளமா தண்ணி வசதி இருந்தும் உள்ள காலடி எடுத்து வைக்க முடியல. அட, நாம போன ஆய நாமளே கழுவக் கூடாதாக்கும். நமக்கு காரியம் முடிஞ்சுதா, ரைட்டு, அடுத்தவன் எப்படி போனா நமக்கென்னங்குற மனோபாவம். எனக்கு அன்னிக்கி விளக்குமாறு எடுத்து கழுவி விட ஒரு நிமிஷம் கூட ஆகி இருக்காது. சுத்தம் ஆகிடுச்சு. இப்படியே கிடக்கட்டும் ஒண்ணுக்கு தானே போகணும்னு நினச்சு நானும் அப்படியே மூக்க புடிச்சு போயிட்டு வந்துருந்தா இன்னும் நாறி இருக்கும். அதுக்காக எல்லாரும் பப்ளிக் டாய்லெட்ட கழுவுங்கன்னு நான் சொல்லல. நீங்க போனா, தண்ணி வசதி எல்லாம் இருந்தா, சுத்தமா கழுவி விட்டுட்டு வாங்கன்னு தான் சொல்றேன்.

அப்புறம், நான் எல்லாரையும் மொத்தமா எல்லாம் குறை சொல்லல. நிறைய பேருக்கு இந்த சமூக அக்கறை இருக்கத் தான் செய்யுது. ஏன், நான் போன பாத்ரூம்ல எனக்கு முன்னால பாத்ரூம் போயிட்டு வந்த ஆணுக்கு கூட அந்த சமூக அக்கறை இருந்துருக்கு. அதனால தான் அவர் ஆய் போயிட்டு தண்ணி விட்டுட்டு போயிருக்கார். ஆனா அவருக்கு எப்படி தண்ணி விடணும்னு தெரியல. ஒரு பக்கெட் தண்ணியையும் அப்படியே அது மேல வேகமா விட்டு எல்லாத்தையும் சிதறடிச்சுட்டு போயிருக்கார். பாத்ரூம் நாறிடுச்சு.

நான் பிறந்து வளர்ந்தது, இருக்குறது எல்லாமே கிராமம் தான். அப்போ எல்லாம் டாய்லெட்ங்குற வார்த்தையே யாருக்கும் தெரியாது, அப்புறம் எங்க டாய்லெட்ல போக? எல்லாம் திறந்தவெளி புல்கலைக்கழகம் தான். வீட்ல சொல்லிட்டு போகணும்னா “அம்மா நான் பூமிக்கு உரம் போடப் போறேன்”ன்னு சொல்லிட்டு போக வேண்டியது தான்.

அப்படி தான் ஒருநாளு வீட்ல சொல்லிட்டு வாழைத் தோப்புக்குள்ள ஒதுங்கி இருந்தேன். ஏழு எட்டு வயசுல கை துறுதுறுப்பு சும்மா இருக்காதே. ஒரு குச்சிய எடுத்து பக்கத்துல இருந்த கரையான் புற்றை நோண்டிகிட்டு இருந்தேன். திடீர்னு உள்ள இருந்து ஒண்ணு சீறிக்கிட்டு வந்துச்சு பாருங்க.... அரண்டு, மெரண்டு அங்க இருந்து ஓட்டம் புடிச்சவ தான், அப்புறம் கொஞ்ச நாள் அம்மா முந்தானைய புடிச்சுகிட்டே தான் எங்கயும் வெளில போறது.

அதுக்கப்புறம் அந்த ஜந்துவ தோட்டத்துல அரசல்புரசலா பாத்து அப்பப்ப ஹாய் சொல்லி இருந்தாலும், ஆய் போகணும்னா எங்க ஆயா துணை வேணும். இதுனால எங்க அம்மாவுக்கும் பாட்டிக்கும் என்னால ஏகப்பட்ட டார்ச்சர். ஆக, ஒரு பாம்பினால் எங்க வீட்ல பாத்ரூம் கட்டியே ஆகணும்னு நிலைமை உருவாகிச்சு.

அப்பா கொஞ்சம் யோசிச்சு, ரெண்டு பாத்ரூம் கட்டலாம்னும், ஒண்ணு வீட்டுக்கு உள்ளேயும், இன்னொன்னு வெளியேயும்னு முடிவு பண்ணினார். ரெண்டு பாத்ரூம் இருந்தாலும் எல்லாரும் பொதுவா ஒரே பாத்ரூம தான் யூஸ் பண்றது. இதுல கொஞ்ச நாள் எனக்கு வித்யாசம் தெரியல. ஏன்னா நான் எழுந்து வர எப்படியும் காலைல எட்டு மணி ஆகிடும். அம்மா அதுக்குள்ள பாத்ரூம் எல்லாம் நல்லா கிளீன் பண்ணி போட்ருவா.

அப்போ நான் அஞ்சாவது படிச்சுட்டு இருந்தேன்னு நினைக்குறேன். திடீர்னு ஒருநாள் சீக்கிரமே எழுந்து பாத்ரூம் போன நான் அலற ஆரம்பிச்சுட்டேன். அவ்வளவு அசிங்கம். எல்லா இடமும் சிதறி கிடக்கு. “யார் போனா, வந்து கிளீன் பண்ண சொல்லுங்க”ன்னு அலறல். சத்தம் கேட்டு எட்டிப் பாத்த அப்பா, “நான் தான் போனேன், நல்லா தண்ணி விட்டுட்டு தான் வந்தேன், அலறாத”ன்னு சொல்ல, அப்ப தான் இவங்க எல்லாம் எப்படி தண்ணி விடுறாங்கன்னு புரிஞ்சுகிட்டேன்.

அப்புறமா அப்பாவ தனியா வெளி பாத்ரூம் துரத்தி விட்டது எல்லாம் தனி கதை. தம்பிய தனியா கூப்ட்டு, பாத்ரூம் எப்படி யூஸ் பண்ணனும், எப்படி சிதறாம தண்ணி விடணும்னு டியூசன் எடுத்தது எல்லாம் தனியோ தனிக்கதை. ஆக, இத நான் ஏன் சொல்ல வர்றேன்னா, பாத்ரூம் எப்படி யூஸ் பண்றதுன்னு கூட தெரியாமலே இன்னமும் சிலபேர் இருக்கத் தான் செய்றாங்க. நாம என்ன பண்றோம்னு எல்லாரும் ஒரு தடவ யோசிச்சுப் பாத்துக்குறது நல்லது.

ரொம்ப சமீபத்துல என்னோட ப்ரென்ட் ஒருத்தி தன்னோட பையன பக்கத்துல இருக்குற அரசாங்க பள்ளியில சேர்த்துருக்குறதா சொன்னா. அஞ்சு வயசு ஆகிடுச்சு, இன்னமும் வாயத்தொறந்து பேசல. இங்க சேர்த்தா நல்லா இருக்கும்னு சொன்னாங்க, சேர்த்தேன், இப்ப பரவால, ரெண்டு மூணு வார்த்தை பேசுறான். முன்னாடி ரொம்ப சேட்டை பண்ணுவான், இப்ப பொறுப்பா அவனே பல்லு விளக்குறான்ன்னு அவ பெருமையா சொன்னா. ஆனாலும் உற்றாரும் உறவினரும் இப்படி ஒரு ஸ்கூல்லயா சேர்ப்பன்னு தினமும் கேட்டு ரொம்ப டார்ச்சர் பண்றாங்களாம். நமக்கு தான் அடுத்தவங்க என்ன பண்றாங்க, ஏது பண்றாங்கன்னு பாத்து, அதுல ஆயிரம் நொரநாட்டியம் சொல்றது தான் அல்வா சாப்டுற மாதிரி ஆச்சே.

சரி, இப்ப இந்த டாபிக் கீழ, இந்த விஷயம் ஏன் வந்துச்சுன்னு சொல்றேன். அவ அந்த ஸ்கூல அவ்வளவு சிலாகிச்சு சொன்னாலும், வருத்தப்படுற ஒரு விஷயம் ஒண்ணு இருக்கு. அது தான் அங்க இருக்குற டாய்லெட். பக்கத்துல போனாலே நாறுது. பையனால அங்க நிம்மதியா போக முடியல. பலநாள் உக்காந்த இடத்துலயே பயந்து போயிடுறான். இல்லனா அடக்கி வச்சுட்டு வீட்ல வந்து அவஸ்த்தப்படுறான்னு சொன்னா.

“இதுக்கெல்லாம் என்ன தான் வழி”ன்னு கேட்டேன். இப்ப நாங்களே பாத்ரூம் கிளீன் பண்ண தேவையான சாதனம் எல்லாம் வாங்கி குடுத்து, அத கழுவி விடவும் ஒரு ஆள் வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம். பையன் இப்ப பேச ஆரம்பிச்சுட்டான். அவன் நடவடிக்கைகளும் மரியாதையா மாறி இருக்கு. இந்த பாத்ரூம்க்காக அத எல்லாம் இழக்க நாங்க தயாரா இல்லன்னு சொன்னா. அதோட, மத்த பிள்ளைங்களும் நிம்மதியா பாத்ரூம் போவாங்களேன்னு அவ சொன்னப்ப நிஜமாவே பெருமையா இருந்துச்சு. அவ நினைச்சிருந்தா மத்தவங்க பேச்சை கேட்டுட்டு ஒரு ஹை-டெக் ஸ்கூல்ல கொண்டு போய் சேர்த்துருக்க முடியும். ஆனா அவ பையனுக்காக ஒரு ஸ்கூல் சூழ்நிலையையே மாத்தி இருக்கா.

இப்ப நான் காலைல படிச்ச நியூஸ்சுக்கு வர்றேன். தன்னோட நண்பனுக்காக நாகப்பட்டினத்துல மாணவர்களால ஒரு கழிப்பறைய கட்ட முடிஞ்சுச்சுனா, தன்னோட மகனுக்காக ஒருத்தி ஸ்கூல் பாத்ரூம்ம கிளீன் பண்ற பொறுப்ப எடுத்துருக்கானா, நம்மால முடிஞ்ச அளவு நாம ஏன் பண்ண முடியாது? அட, அட்லீஸ்ட் நாம போற பொது கழிப்பறையையாவது கொஞ்சம் சுத்தமா வச்சுக்க முடியாதா?

இன்னும் நிறைய எழுதலாம் தான். ஆனா அதெல்லாம் இன்னொரு நாள் பாத்துக்கலாம். இன்னமும் ஒதுங்க ஒரு கழிப்பறை இல்லாம ஆத்தங்கரை, குளத்தங்கரை, ரோட்டு பக்கம்னு ஒதுங்குற ஜனங்க எவ்வளவோ பேர் இருக்காங்க. கிராமம் தாண்டி நகரம்னு வந்தா அவசரத்துக்கு ஒதுங்க மண்ணு கூட கிடையாது. முதல்ல கிளீன் இந்தியான்னு சொல்ற நம்ம அரசாங்கம் ஸ்டெப்ஸ் எடுக்குதோ இல்லையோ, நாம ஏதாவது ஸ்டெப்ஸ் எடுக்கலாம். இதுக்கு என்னென்ன பண்ணலாம்னு ஆக்கபூர்வமா நாம யோசிக்க ஆரம்பிச்சாலே அடுத்தகட்ட செயல்முறை சுலபமா இருக்கும்.

Thursday 25 August 2016

வெறும் முத்தமென்று நினைத்தாயா?





அதை வெறும் முத்தமென்று நினைத்தாயா?

என் கோபம், வெறுப்பு,
ஆற்றாமை அத்தனையையும்
கூர்முனை கொண்டு குத்தி கிழித்து விட்டது...

உன் முத்தம் ஒவ்வொன்றாய் என்னை
சேர்ந்த பொழுது நான்
சில்லு சில்லாய் உடைந்து கொண்டிருந்தேன்...

முத்தமிட்டு நீ அப்பால் சென்றதும்
ஓ-வென நான் வெடித்து சிதறியதை
நீ அறிவாயா?

என் உணர்வுகள் கட்டப்பட்டுள்ளன...

என் கண்கள் பொய்யாய் மலர
கற்றுக் கொண்டுள்ளன...

உன் முன் எவ்வகை உணர்வை
காண்பிப்பதென்ற எந்த தெளிவையும்
எடுக்க முடியாதவளாய் நான்
சித்தம் கலங்கி நிற்கின்றேன்...

உன்னிடம் கேட்பதற்கோ என்னிடம்
ஏராளமாய் கேள்விகள்
கொட்டிக் கிடக்கின்றன...

கண்சிவந்து கோபப்பார்வை பார்த்து
நான் அவற்றையெல்லாம் உன்
கண்பார்த்து கேட்க வேண்டும்...

ரவுத்திரம் கொண்டு உன்னை
அடித்து தாக்கும் ஆத்திரமெனக்கு...

இருந்தும் என்ன பயன்?

என் கண்ணீரின் காரணகர்த்தாவாகிய
நீ தான் இந்த முத்தங்களையும் இட்டு சென்றாய்...

உன் மேல் நான் கோபமாய் இருக்கிறேன்...

உன் தலை மயிர் பற்றி
உன்னை ஆவேசமாய் பிடித்து தள்ள வேண்டும்...

என் கோபங்கள் அத்தனையும் சேர்த்து
உன்னோடு மல்லுகட்ட வேண்டும்...

ஆவி சேர அணைத்து உன்னை
முத்தத்தாலயே சாகடிக்க வேண்டும்...

எத்தகைய கொடுங்கோலன் நீ?

செய்வதெல்லாம் செய்து விட்டு
ஒரே ஒரு முத்தத்தால்
மொத்தமாய் என்னை வீழ்த்தி
மீண்டுமென்னை பேதையாக்கி விடுகிறாய்...

இருக்கட்டும்...

இந்த முத்தங்களின் போதை தெளியட்டும்...

நான் கோபமாய் வருகிறேன்,
இரு கைகள் கொண்டு கன்னம் பொத்தி 
உன்னை மீண்டும் சந்திக்க....

Tuesday 16 August 2016

அன்புள்ள சூர்யாவுக்கு



சூர்யா,

நீ என் பையன். உனக்கு இப்ப பதினோரு வயசு. ஆனா அந்த வயச மீறுன மெச்சூரிட்டி உனக்கு உண்டு. இந்த லெட்டர் நான் எழுத வேண்டிய அவசியமே இல்ல. ஆனாலும் எழுதுறேன். ஏன் தெரியுமா?

எத்தனையோ பெத்தவங்க அவங்க பிள்ளைங்களுக்கு செய்றது எல்லாமே தியாகம்னு நினச்சு தான் செய்றாங்க. பிள்ளைங்களுக்காகவே செய்றாங்க. ஆனா எப்பவும் உனக்காக இவ்வளவு கஷ்டப்பட்டேன்னு சொல்லாம விட்டுடுறாங்க. இதனால தான் அவங்க படுற கஷ்டம் எல்லாமே பெத்த பிள்ளைங்களுக்கு தெரியாமலே போய்டுது.

எனக்கு தெரியும், நான் அம்மான்னு உனக்கு எந்த கடமையும் செய்யல. ஏன்னா, அதுக்கான பொறுப்பு எனக்கு அளிக்கப்படல. நீங்க என் கூட தான் இருக்கணும்னு நான் ஆசைப்பட்டப்ப எல்லாமே கைமீறி போய்டுச்சு. அது ஏன், எப்படின்னு உனக்கு கண்டிப்பா தெரியப்படுத்துவேன்.

மொவனே, எனக்கு உன்னையும் உன் அக்காவையும் கண்டா பயம். எப்படி உன் அப்பாவ பாத்து நான் நடுங்குவேனோ அப்படியான ஒரு பயம்.

அடுத்தவங்கள அதிகாரப்படுத்தி, காயப்படுத்துற எந்த குணமும் கடைசி வரைக்கும் நிலைக்கப் போவதே இல்ல மொவனே. உன் அம்மா, அதான் நான், யாரையும் காயப்படுத்துனது இல்ல, ஆனா உன் தாத்தாவோட அதிகாரத்தோட வாழ்ந்தவ. அவ கிட்ட எது வேணா இல்லாம போயிருக்கலாம், ஆனா தன்மானம்னு ஒண்ணு நிறைய இருந்துச்சு. ஆனா அத எல்லாத்தையும் உங்க கிட்ட நான் இழந்துட்டேன். எனக்கு பெத்த பிள்ளைங்க கூட வேணாம்னு நான் முடிவுக்கு வந்ததே இதனால தான்.

இத படிக்குறப்ப உனக்குள்ள ஒரு ஏளனம் எழலாம். உங்க கிட்ட நான் எவ்வளவோ அவமானப்பட்டுட்டேன். இன்னிக்கி உச்சகட்டமா அப்படி ஒரு அனாதைத்தனத்தோட நான் ரோட்டுல நின்னேன்.

உனக்கு தெரியுமா, பத்து வயசுல உனக்கு இருக்குற இந்த சுதந்திரம் முப்பது வயசுல உன் அம்மாவுக்கு இல்ல. என்னை இன்னமும் சின்னப்புள்ளையா நினச்சு வீட்டுக்குள்ள பூட்டி வைக்குற என் அப்பா. ஏதோ ஒரு காலம் விடியும், என்னிக்காவது நானும் சுதந்திரமா வாழுவேன், வாழணும்ங்குற ஆசையோட தான் ஒரு வேலைக்காக ஓடி ஓடி அப்ளிகேசன் போட்டுட்டு இருந்தேன்.

அப்ளிகேசன்னா ரொம்ப சாதாரணமா நினைச்சுடாத. எப்போ நான் வேலை தேட ஆரம்பிச்சேனோ அப்ப தான் நான் என்னையே புதுசா புரிஞ்சுகிட்டேன்.

உனக்கு அம்மாவ பத்தி என்ன தெரியும்? அவளுக்கு ஒண்ணுமே தெரியாது, அவ ஒரு லூசு, அவ ஒரு பைத்தியக்காரி, ஆங், முந்தாநேத்து சொன்னியே சூனியக்காரி, இதெல்லாம் தானே.

ஆனா நான் சொல்லட்டுமா உன் அம்மா யாருன்னு?

வாழ்க்கைல எத்தனையோ அவமானப்படுத்தல், போராட்டங்களுக்கு இடையில அவ ஒரு டாக்டரேட். பி.ஹச்.டி முடிச்சவ.

இதுவரைக்கும் தான் கஷ்டப்பட்டு படிச்சத எல்லாம் ரொம்ப சுலபமா எல்லாரும் புரியுற மாதிரி மூணு புக் எழுதினவ.

அவ இதுவரைக்கும் இன்டர்நேசனல் அளவுல வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் இருபத்தி ஒன்பது.

ஒன்பது தடவ இண்டர்நேசனல், நேசனல் கான்பரென்ஸ்ல மேடையேறி பேசி இருக்கா.

ஏழு கான்பரென்ஸ் படிக்குற காலங்கள்ல கலந்துகிட்டு இருக்கா.

தான் வேலை பாத்த காலேஜ்ல ஒரு நேசனல் கான்பரன்ஸ், ரெண்டு மாவட்ட அளவு நிகழ்ச்சிகள் முன்ன நின்னு நடத்தி இருக்கா.

எடிட்டர் பதவியையும் அவ விட்டு வைக்கல. அவ காலேஜ் மேகசீன் எடிட்டர் அவ தான். அது மட்டும் இல்ல, வேலை பாத்த காலேஜ்ல அவ அட்மிசன் கமிட்டி மெம்பர். இன்னும் சொல்றேன் கேளு, அவ டிபார்ட்மென்ட் ஹச்.ஓ.டி அவ தான்.

ஸ்கூல், காலேஜ் லெவல்ல அவ வாங்குன பரிசுகள் பெரும்பாலும் எல்லாமே முதல் பரிசுகள் தான். கிட்டத்தட்ட பதினேழு பரிசுகள். எல்லாமே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, சிறுகதைகளுக்கு வாங்கினது தான். இதுல யூனிவேர்சிடி அளவுல இளைய சமுதாயம் பத்தி எழுதின கட்டுரைக்கு முதல் பரிசு, கன்னியாகுமரி மாவட்ட அளவுல எட்டாவது படிக்குறப்பவே அவ எழுதின சிறுகதைக்கு முதல் பரிசு.

அவளுக்கு எத்தனை ப்ரெண்ட்ஸ் உண்டுன்னு உனக்கு தெரியுமா? அவள ரொம்ப ரொம்ப நேசிச்ச ப்ரெண்ட்ஸ் அவங்க எல்லாரும்.

நேத்து என் மாணவி ஒருத்தி உன் கிட்ட என்னை பத்தி சொன்னாளே, “உன் அம்மா தான் எங்க எல்லாருக்குமே ரோல் மாடல்”ன்னு. நீ கூட நக்கலா இவளா, இத நான் நம்ப மாட்டேன்னு சொன்னியே, ஆனா அது தான் உண்மை சூர்யா.

என் ப்ரெண்ட்ஸ், எனக்கு பாடம் கத்து குடுத்த ஆசிரியர்கள், என் ஸ்டுடென்ட்ஸ் எல்லாருமே என்னை தான் ரோல் மாடலா சொல்லுவாங்க.

உன் அம்மாவுக்கு பயம்னா என்னனே தெரியாது தெரியுமா? தனி ஆளா குத்த வர்ற கோவில் கிடாவுல இருந்து மிரண்டு வர்ற மாடு வரைக்கும் அடக்குவா. அவளுக்கு பறவைகள், விலங்குகள் பாசம் புரியும். அதோட பாஷை புரியும்.

இப்படி எல்லாம் இருந்த உன் அம்மா இன்னிக்கி ஒரு உதவாக்கரையா இருக்க யார் காரணம் சூர்யா?

இந்த ஆணாதிக்க சமூகம்.

முப்பத்தாறு வயசுலே படம் பாத்தல. அதுல ஒரு கேள்வி வருமே, ஒரு பெண்ணோட எக்ஸ்பயரி டேட்ட முடிவு பண்ணுறது யாருன்னு?

அப்படி தான் என்னோட எக்ஸ்பயரி டேட்ட முடிவு பண்ணினது மூணு பேரு.

முதல்ல காசுக்காக மட்டுமே என்னை கட்டிகிட்ட உன் அப்பா. என்னை பைத்தியக்காரியாக்கி அத்தன சொத்தையும் சுருட்டிடணும்னு பக்காவா ப்ளான் போட்டு, கடைசி கட்டத்துல வெறி புடிச்சு இன்னமும் என்னை கொலை பண்ண சுத்தி சுத்தி வர்றவன்.

அடுத்து, காசு பணத்த இழந்துடுவோம்னு பயந்து உன் அப்பா கிட்ட இருந்து என்னை மீட்டு, எங்க அவனால என்னோட உயிருக்கு ஆபத்து வந்துடுமோன்னு என்னை பூட்டி வச்ச என் அப்பா. அவருக்கு இந்த சமூகத்தின் மேலான பயம்.

அடுத்ததா நீ.

உனக்கு கண்டிப்பா நியாபகம் இருக்காது, ஆனா எனக்கு இருக்கு. நீ, நான், அக்கா மூணு பேருமே மெத்தைல படுத்துக்கிட்டு நம்மோட ஆசைகள் என்ன என்னனு பெரிய பெரிய கனவுகளோட பேசிப்போம். நமக்கு இந்த உலகத்தையே சுத்தி வர ரொம்ப ஆசை. சாதாரண மக்களோட மக்களா கலந்து வாழ ஆசை. எல்லோரையும் நேசிக்க ஆசை. இப்ப வரைக்கும் என்னோட ஆசைகள் இவ்வளவே தாண்டா மொவனே.

ரெண்டு பிள்ளைகள வளர்க்க முடியாதுன்னு என்னை வளர்த்தவங்க கிட்டயே உன்னை தூக்கி குடுத்தது என்னோட தப்பு. சூர்யா, உன்னை விட்டுருக்க கூடாது மொவனே. உன் அக்காவையும் உன் தாத்தாகிட்ட விட்டுருக்க கூடாது. இப்போ உங்கள மீட்டெடுக்கவே முடியாத பாவி ஆகிட்டேன்.

இன்னிக்கி நடந்த சம்பவம் தான் என்னை இத எழுத வைக்குது. நான் வேலை தேடி அப்ளிகேசன் போட்டுட்டு இருக்கேன்னு சொன்னேன் இல்லையா, அதனால எனக்கு ஏகப்பட்ட மன உளைச்சல், உடல் வலி. எல்லாம் சேர்ந்து தான் என் உடல்நிலைய ரொம்ப படுத்திடுச்சு. எத்தனையோ நாள் என்னை அறியாமலே மயங்கி விழுந்துருக்கேன். என் உடல் நிலை பத்தி உனக்கு தெரியப்படுத்தாம போனது என்னோட தப்பு தான். ஆனாலும் ஒரு நாள் நீ இருக்குறப்ப மயங்கி விழுந்தப்ப நடிக்குறேன்னு சொன்ன. அதெப்படி உன்னால அவ்வளவு அழகா நடிக்க முடியுதுன்னு நக்கல் பண்ணின. சரி அத எல்லாம் விடு.

நான் ரொம்ப அவசரமா வெளில போக வேண்டியது இருந்துச்சு. கதவ தொறந்து விடச் சொல்லி உனக்கு நான் போன் பண்ணினேன். ஆமா, ஒரு அம்மாவா இருந்தும், எனக்கு என்ன தேவை, எனக்கு எவ்வளவு காசு வேணும்ன்னு நான் உங்க கிட்ட தான் கெஞ்சி கேக்கணும். என்னோட தேவை அவசியமா இல்லையா, எனக்கு காசு கொடுக்கலாமா வேணாமா, என்னை வீட்டை விட்டு திறந்து விடலாமா வேணாமான்னு முடிவெடுக்குற எல்லா அதிகாரமும் இருந்தது உன் கையில. உன் தாத்தா, அதான் என் அப்பா அப்படி தான் உன்னை பழக்கி வச்சிருக்கார். ஏன்னா, வீட்டுக்கு அடுத்த ஆம்பிள்ளை நீ தானாம். நீ தான் அம்மாவ இனி கவனிச்சுக்கணுமாம்.

நான் உன்னை கூப்ட்டுகிட்டே இருக்கேன். அப்ளிகேசன் அனுப்ப எனக்கு கடைசி நாள். கட்டுகட்டா ஜெராக்ஸ், பிரிண்ட் அவுட் எல்லாமே எடுத்தாகணும். நீ வரவே இல்ல. அப்படி நீ இந்த நேரம் வீட்டை விட்டு வெளில போக வேணாம்னு கோபமா சொல்லி போனை வச்சிடுற.

பின் வாசல் வழியா தட்டு தடுமாறி போய், அவ்வளவு பெரிய கேட்டை தொறந்து நான் வெளில ரோட்டுல நின்னப்ப என் நிலை, உங்க நிலை எல்லாம் நினச்சு ஓ-ன்னு அழுதேன் சூர்யா. பெத்த பிள்ளைங்க கூட எனக்கு இல்ல சூர்யா.

எனக்கு பயமா இருக்குடா. எல்லாருமே நல்லா இருக்கணும்னு ஆசைப்படுவேன். அத்தனைபேருக்கும் நான் புத்திமதி சொல்லுவேன். ஆனா என் பிள்ளை நீ இப்படி தாறுமாறா நடந்துக்குறத நினச்சு எதுவுமே செய்ய முடியாம கைய பிசஞ்சுகிட்டு இருக்கேன்.

உனக்கு என் மேல மிகப்பெரிய கோபம் இருக்கலாம்.

என்னை சூனியக்காரின்னு சொல்லலாம்.

ஒரு அம்மாவுக்கான எந்த பொறுப்பையும் நான் செய்யலன்னு சொல்லலாம்.

ஆனா உன் அம்மாவுக்கு தெரிஞ்ச சூர்யா, அவ கைய விட்டு போய்ட்டான். அவ கிட்ட காசுக்காகவும், தன்னோட தேவைகள நிறைவேத்திக்குறதுக்காகவும் மட்டுமே வருவான். அவனுக்கு சைக்கிள் வேணுமா அம்மாகிட்ட வருவான், மீன் வேணுமா அம்மா கிட்ட வருவான், இன்னும் என்னென்ன வேணுமோ அத எல்லாம் வாங்க அம்மாகிட்ட வருவான். எப்போ எல்லாம் அவளால அத அவனுக்கு குடுக்க முடியலையோ அப்போ எல்லாம் அவ அவனுக்கு சூனியக்காரி ஆகிடுவா. இத்தனைக்கும் அவன் வயசு பதினொன்னு.

ஆனா ஒண்ணே ஒண்ணுடா மொவனே,

இந்த உலகத்துல கோழைகளும், பயந்தாங்கொள்ளிகளும் வாழவே முடியாது. அவங்கள இன்னும் அடிமைப்படுத்தி வைக்கவே இந்த சமூகம் மட்டுமில்ல பெத்த பிள்ளைங்களும் விரும்புவாங்க.

டேய், இதுவரைக்கும் நான் கஷ்டப்படுறேன்னு யார்கிட்டயும் புலம்பினதே இல்லடா. சாக கிடந்த கதை எல்லாம் கூட ஒரு சாகசமா தான் எல்லாருக்கும் சொல்லிட்டு வந்துருக்கேன். இப்பவும் அதே தான். இத எல்லாம் நான் ஒரு சாகசமா தான் எடுத்துக்கப் போறேன். ஆனாலும் உன்னால ஒரு கணம் நான் நிலைகுலைஞ்சு நின்னது உனக்கு தெரியணும்ல, அதுக்கு தான் இந்த லெட்டர்.

ஒரே ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன் சூர்யா. ஒவ்வொரு உடல் உறுப்பா நான் இழந்துட்டு வந்தாலும், என்னோட கணையத்த நான் இழந்த நேரம், வீட்ல வந்து உக்காந்துட்டு இருந்தேன். நீ என் வயித்துல எட்டி உதச்ச. தையல் விட்டு என் குடல் எல்லாம் வெளில தெரிஞ்சுது. அப்போ கூட காலைல தினமும் ஆஸ்பத்திரி போய் மருந்து போட்டுட்டு, அதே வயித்தோட சேலை கட்டிக்கிட்டு வேலைக்கு ஓடுவேன். வீட்டுக்கு வந்து ஐ என் குடல் தெரியுது பாருன்னு டார்ச் அடிச்சு பாத்து சிரிப்பேன். வாழ்க்கை அவ்வளவே தாண்டா மவனே, கஷ்டம்னு நினச்சா கஷ்டம், சாகசம்னு நினச்சா சாகசம்.

நீ ஒரு அற்புதமான குழந்தை தெரியுமா? உன்கிட்ட நிறைய திறமைகள் உண்டு. அத எல்லாம் பாத்து நான் மலைச்சு போயிருக்கேன். நீ நல்லா வரணும் சூர்யா.

இப்ப கூட நான் உங்ககிட்ட இருந்து தப்பிச்சு போக நினைக்குறதுக்கான காரணம் ரொம்ப சிம்பிள்.

நாளைக்கு இவ என் அம்மான்னு நீங்க நெஞ்சு நிமிர்த்தி நிக்கணும். நிக்க வைப்பேன்.

Saturday 13 August 2016

செல்பியும் காதலும்




நான் என்னையே கொண்டாடத் தொடங்கியிருக்கிறது ஒரு எட்டு மாசமா தான். எப்பவுமே என் மேலயோ என் உருவம் மேலயோ நான் அக்கறை எதுவும் எடுத்துகிட்டதேயில்ல. ஆனா வழக்கத்துக்கு மாறா இப்பல்லாம் செல்பியா எடுத்து தள்ளிகிட்டு இருக்கேன்.

இந்த மூஞ்சிய அந்த கோணத்துல எடுத்தா நல்லா இருக்குமோ, இந்த கோணத்துல எடுத்தா நல்லா இருக்குமோன்னு வித விதமான செல்பிக்கள் அதெல்லாம். அதெல்லாம் பத்தாதுன்னு, வித விதமா எடிட் பண்ணி அத வேற ரசிக்க ஆரம்பிச்சிருக்கேன்.

இந்தா ரெண்டு நாள் முன்னால எந்த விதமான எடிட்டும் பண்ணாம இருக்குற மூஞ்சிய அப்படியே வாட்ஸ் அப்ல அப்லோட் பண்ற அளவு தைரியம் வந்திருக்கு.

இந்த தைரியத்துக்கு பின்னணியில அவ இருந்தா. ஆமா, நான் அவளுக்கு செய்த துரோகம் ஒண்ணு என்னை கூனி குறுகி போக வச்சிருந்துச்சு. அதுல இருந்து வெளிவரவே முடியாத அளவு குற்ற உணர்ச்சியில அழுதுகிட்டே இருந்தேன். அப்ப தான் முதல் முதலா நான் அப்லோட் பண்ணியிருந்த என்னோட போட்டோ ஒன்னை வாட்ஸ் அப்ல பாத்துட்டு அவ கிட்ட இருந்து அந்த மெஸ்சேஜ் வந்துருந்துச்சு. “அசத்துற அக்கா, அடி தூள்”னு. “அடியே செல்லமே, லவ் யூ, உம்மா”ன்னு பதில் அனுப்பி வச்சுட்டு கொஞ்சம் கொஞ்சமா நான் உடைஞ்சு அழ ஆரம்பிச்சிருந்தேன். அதுல எனக்கான குற்ற உணர்ச்சி கரைஞ்சுகிட்டே வந்துச்சு.

இந்த கண்களும், கன்னங்களும், கூடவே அந்த தலைமுடியும் எந்த விதமான கவனிப்பாரும் இல்லாம எப்படியோ சிதஞ்சி போய் இருந்துச்சு. கண்ணாடியே பாக்க மறந்த மூஞ்சிய தடவி பாத்தா சொரசொரப்பு. ஆங்காங்கே கருப்பு திட்டுக்களோட இருந்த மூஞ்சிய கொஞ்ச நேரம் வருடிட்டே இருந்தேன். திடீர்னு நான் அழகா இருக்குற மாதிரி தோண ஆரம்பிச்சுது.

அதோட கூடப்பொறந்தவளோட உற்சாக முகம். நீ என் அக்காக்கா. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்ன அவ வார்த்தைகள். எனக்கே நான் ரொம்ப ரொம்ப அழகா தெரிய ஆரம்பிச்சேன். ஆமா, நான் நிஜமாவே ரொம்ப அழகி தான். யார் இல்லன்னு சொன்னது?

இந்த செல்பி மோகம் எனக்கு அவளால தான் வந்துச்சு. ஒவ்வொரு தடவையும் புதுசு புதுசா போட்டோ எடுத்து போடுறப்பவும் “அழகி”ங்குற எழுத்து உற்சாக குரலா என் காதுல வந்து விழும். கூடவே சில பல டிப்ஸ்களும்.

இப்படி தான் நேத்து உள்ளது உள்ளபடி ஒரு போட்டோவ அப்லோட் பண்ணியிருந்தேன். “பொட்டு எங்கக்கா? பொட்டு வச்சு போட்டோ போடு”ன்னு கட்டளை அந்த பக்கம் இருந்து.

நான் எடுக்குற போட்டோவுல எல்லாம் என் நெத்தியில இருக்குற பொட்டு எப்பவுமே போட்டோஷாப் செய்யப்பட்டது தான். ஆமா, நான் நெத்தியில பொட்டே வைக்குறது கிடையாது.

இந்த பொட்டு நான் ஏன் வைக்க மாட்டேங்குறதுக்கு எல்லாம் ஒரு ப்ளாஸ்பேக் இருக்கா இல்லையான்னு தெரியாது, ஆனா எனக்குன்னு ஒரு நண்பன் இருந்தான்.

.......................................

நம்ம சொந்த வீட்டுக்குள்ள வந்து உக்காந்துக்கிட்டு நம்மள பாத்து ஒருத்தர் “வாங்க, வாங்க”ன்னு வரவேற்றா எப்படி இருக்கும்? எனக்கு அப்படி தான் இருந்துச்சு என் அப்பா மேனேஜ்மென்ட்ல இருந்த காலேஜ்லயே வந்து என்கிட்டயே “ஹாய் ஐயம் ஸோ அண்ட் ஸோ. வெல்கம் டு அவர் டிபார்ட்மென்ட்”ன்னு கை பிடிச்சு குலுக்கின போது.

எனக்கு அவன பிடிச்சுதா இல்லையான்னு தெரியாது, ஆனா அவன் பெயர் பிடிச்சு இருந்துச்சு. அந்த ஸோ அண்ட் ஸோ பெயர் தான் எந்த தயக்கமும் இல்லாம அவனுக்கு கைகுடுக்க வச்சுது.

அதுக்கப்புறம் பெரும்பாலும் நாங்க ஒண்ணாவே தான் சுத்திட்டு இருப்போம். பொண்ணுங்க எல்லாம் அவன மாதவன் மாதவன்னு தான் கூப்டுவாங்க. அவனுக்குமே அந்த திமிரு உண்டு, நாம ரொம்ப அழகா இருக்கோம்னு. அடிக்கடி அதட்டி வைப்பேன், சினிமா மோகத்துல மிதக்காதன்னு.

அவன் பிறந்தநாளுக்கு அவனையே வரைஞ்சு குடுக்கப் போறேன்னு நான் சொன்னப்ப விழுந்து விழுந்து சிரிச்சான். அடேய், நான் ஏதோ சுமாரா வரைவேன்டான்னு கெஞ்சி எல்லாம் பாத்தேன். ஒரே ஒரு போட்டோ குடுடான்னு அவன் பின்னால அலைஞ்சேன். ம்ஹும், பய அசரவே இல்ல. அவன் அம்மா தான் அதான் போட்டோ கேக்குறால, குடேன்ன்னு சொன்னாங்களாம். ஒருவழியா போட்டோ கிடைச்சிடுச்சு.

ரெண்டு நாள் தூங்காம உக்காந்து அவன வரைஞ்சேன். அம்மா வேற திட்டிப் பாத்துட்டு ஓய்ஞ்சு போய்ட்டா. கடைசியா அவன் பிறந்தநாளுக்கு காலேஜ்ல எல்லார் முன்னாலயும் கேக் வெட்டி, என் கிப்ட்ட பிரிச்சி பாத்தவன் அசந்துட்டான். ஹே... ஹேன்னு ஒரே கூச்சல். தேங்க்ஸ்டி, தேங்க்ஸ்டின்னு அம்பது தடவையாவது சொல்லி இருப்பான். அப்ப என்னை ரெண்டு கண்களும், அவன ரெண்டு கண்களும் கண்காணிச்சத நாங்க கவனிக்கவே இல்ல.

ரொம்ப வளவளன்னு அறுக்காம நேரே விசயத்துக்கு வரேன். வழக்கமா காலேஜ்ல நான் நடுவுல உக்காந்துட்டு இருந்தேன்னா, வலது பக்கம் அவனும் இடது பக்கம் அவளுமா உக்காந்து இருப்பாங்க.

நடுவுல என்னை வச்சுகிட்டு, எனக்கே தெரியாம கிட்டத்தட்ட ஒரு வருசமா அதுங்க ரெண்டும் கண்ணும் கண்ணும் நோக்கிட்டு இருந்துருக்குதுங்க. விஷயம் தெரிய வந்தப்ப எனக்கு ஒரே அதிர்ச்சி தான். அடேய், எரும எரும இப்படி போய் மாட்டிகிட்டியேடான்னு அவன குனிய வச்சு குமுறனும் போல இருந்துச்சு. ஆனா, “எங்க அவள வேணாம்னு நீ சொல்லிருவியோன்னு தான் உன் கிட்ட விசயத்த சொல்லவே இல்ல. நீ மட்டும் நோ சொல்லி இருந்தா உன் நட்பையே நான் தூக்கி போட்ருப்பேன்”ன்னு அவன் சொன்னதும் நான் அமைதியாகிட்டேன். காதல், எங்க யார்கிட்ட எப்படி வரும்னு சொல்லவே முடியாதுல.

எனக்கு அவளோட முந்தைய ரெண்டு காதல் பத்தி தெரியும். ரொம்ப ஈசியா அன்புக்கு அடிமையாகுற அவ குணம் தெரியும். அத விட அவளுக்கு எது ரொம்ப ரொம்ப பிடிக்கும்னும் தெரியும். அதனாலயே அந்த காதல் அவங்களுக்குள்ள செட் ஆகாதுன்னும் தெரியும்.

திடீர்னு ஒரு நாள் கால் பண்ணி இருந்தான். இன்னும் ஒரே வாரத்துல உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்றேன்னு. அடுத்த நாளே அவள் அப்பாவும் என் அப்பாவும் பிசினஸ் மூலமா தெரிஞ்சவங்கங்குற முறைல அவ கல்யாண பத்திரிக்கை எங்க வீடு தேடி வந்துச்சு.

கல்யாணத்துக்கு போயிட்டு வந்த அப்பா, “பொண்ணு முகத்துல என்னமா ஒரு லெட்சுமி களை. சிரிச்ச முகம். மாகாலெட்சுமி மாதிரி இருக்கா”ன்னு சொன்னப்ப நான் புன்னகை புரிஞ்சுகிட்டேன். அப்புறம் ஒரு நாள் அவன் அவ எப்படி இருக்கான்னு என் கிட்ட விசாரிச்சு தெரிஞ்சுகிட்டான்.

..............

நான் அந்த பொட்டு விசயத்த அப்படியே விட்டுட்டு என்னென்னவோ பேசிட்டு இருக்கேன்ல, அப்பவே சொன்னேனே, ரெண்டு கண்கள் என்னை கவனிச்சுட்டே இருந்துச்சுன்னு. இப்ப நாம அந்த கண்களுக்கு சொந்தக்காரனுக்கு வருவோம்.

கிட்டத்தட்ட ஒரு வருஷம் இவன் என்னை தூரமா இருந்தே கவனிச்சுட்டு வந்தவன். நான் சொன்னேனே என் வலது பக்கம் அவன், இடது பக்கம் அவள்ன்னு, இவன் எப்பவும் எனக்கு எதிர நேரே உக்காந்துட்டு இருப்பான்.

ரெண்டாம் வருஷ தொடக்கத்துல தான் நான் இவன கவனிக்க ஆரம்பிச்சேன். இவன் கூட நெருங்கவும் ஆரம்பிச்சேன். “அடேய்”ன்னு அதட்டலா கூப்ட்டு, எங்களோட அரட்டைல இவனையும் வம்படியா சேர்த்துப்பேன்.

ஒரு நாள் கவிதைன்னு எதையோ ஒண்ணை கிறுக்கிகிட்டு வந்து நீட்டினான். வாங்கி படிச்சுட்டு ஒண்ணும் புரியல போன்னு திருப்பி குடுத்தேன். கோபமா அத கசக்கி குப்பைல எறிஞ்சான்.

ஒரு நாள் எல்லோரும் உக்காந்து பேசிட்டு இருக்குறப்ப அவ சொன்னா என்ன வேணா செய்வேன்னு சொன்னான். பக்கத்துலயே ப்ராக்ட்டிக்கலுக்காக வச்சிருந்த பேக்டீரியா கலவை இருந்துச்சு. எடுத்து குடிடான்னேன். எந்த தயக்கமும் இல்லாம குடிச்சுட்டான்.

யாருக்கு எல்லாம் தண்ணி அடிச்சி பழக்கம் உண்டுன்னு ஒரு நாள் பார்மசி க்ளாஸ்ல சார் கேட்டப்ப, இவன் மட்டும் தான் எழுந்து நின்னு, நான் அடிப்பேன், ஆனா இப்ப விட்டுட்டேன்னு என்னை பாத்துகிட்டே சொன்னான்.

அம்மை வந்து பதினஞ்சு நாளா நான் காலேஜ் பக்கம் போகலன்னதும் அவன் தாடி வளத்துட்டு திரிஞ்சதாவும், எனக்காக தினமும் கோவிலுக்கு எல்லாம் போய் பிரார்த்தனை பண்ணினதாகவும் கேள்விப்பட்டேன். நான் லீவ் முடிஞ்சி போனப்ப அவன காணோம். மறுநாள் உள்ளங்கைல திருநீறு கொண்டு வந்து நீட்டினான். முதல் வருஷம் கோவில் பிரசாதம்னு நான் குடுத்த அரவணைய தொடவே மாட்டேன்னு அடம் பிடிச்சவன், எதுக்காக எனக்காக கோவிலுக்கு போனான்னு அப்ப கூட நான் புரிஞ்சுக்க விரும்பல.

நான் அவன் கூட தோள்ல கைபோட்டு திரிஞ்ச காலம் எல்லாம் தூரமா நின்னு புன்னகையோட பாத்துட்டு நின்னவன் இவன். கொஞ்சமே கொஞ்சம் இவன் மேல எனக்கும் ஏதோ பூக்க தொடங்கின நேரம் ஒரு நாள் எனக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தம்னு புரிஞ்சுகிட்டேன்.

இந்த பையன உனக்கு பிடிச்சிருக்கான்னு அப்பா கேட்டப்ப, இல்லப்பா, இவனுக்கும் எனக்கும் செட் ஆகாது, நீங்க வேற பையன பாருங்கன்னு சொல்லிட்டேன்.

காரணம் கேட்ட அப்பாவுக்கு, அவன் மதத்த காரணமா காட்டிட்டு நான் மவுனமாகிட்டேன்.

அப்ப இருந்து இப்ப வரைக்கும் நான் பொட்டு வச்சதே இல்ல.

அந்திம ஆசைகள்



அந்திம காலம்
நெருங்கி விட்டதை
புத்தி உணர்த்திக் கொண்டே இருக்கிறது...

உன்னைப் பார்க்காமலே என்
இறுதி யாத்திரை துவங்கி விடுமென
எச்சரிக்கை மணி
ஒலிக்கத்துவங்கி விட்டது...

அன்றொரு நாள்
நான் கண்ட கனவொன்றை உனக்கு
நினைவுறுத்த விரும்புகிறேன்...

என்னை காண வந்து என்
கல்லறையை நீ வருடி விட்டது
போலமைந்த கனவு அது...

உன் கண்களில் ஈரம் துளிர்த்ததாவென்ற
தெளிந்த சித்திரம்
என்நினைவிலில்லை...

ஆயினும் நீ
அழுதிருக்க கூடும்...

நீர்கோர்த்து வீங்கிருக்கும்
என் விரல்களை சற்று
எட்டிப்பாரேன்...

நீ வருடிய விரல்களே தான்.
ஏனோ திறன்களற்று ஏக்கத்தோடு
மீண்டும் உன் கை வருட
காத்துக் கிடக்கின்றன...

ஒரு வேளை நீயென்னை
மீண்டுமொருமுறை சந்திக்க
நேராமலே கூட போகலாம்.

அன்றென் கடைசி ஏக்கம்
எதுவென அறிந்து கொள்ள நீ
தவிப்பாயென தெரியுமெனக்கு...

இதோ உயிலினை போல்
உனக்காக இங்கென் ஆசைகளை
செதுக்கி வைக்கிறேன்.

உன்னை மீண்டும் மீண்டும்
கண்டுவிட வேண்டுமென்ற
பேராவல் எனக்கு...

ஆவி கலங்க சேர்த்தணைக்க வேண்டுமுன்னை...

பின்பு பெருங்குரலெடுத்து ஒரு அழுகை...

என் மொத்தமும் நீ தானென
உன்னோடு ஒரு வாழ்க்கை...

உன் கண்கள்....
உன் உதடுகள்...
உன் விரல்கள்...
உன் மார்பு...
உன் இதழ் முத்தம்...
மொத்தமாய்...

Thursday 11 August 2016

கபாலி - நான் உணர்ந்தது





அந்த நாள் எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. ரொம்ப பரபரப்பா கிளம்பி, டிக்கட் கிடைக்காதுன்னு எல்லாரையும் அலற விட்டு, கடகடன்னு டிக்கெட் வாங்கிட்டு தியேட்டர் உள்ள போய் உக்காந்து சுத்தி முத்தி பாத்தா, உள்ள இருந்தது மொத்தமே பதினோரு பேரு. அதுலயும் நாங்க மட்டுமே ஆறு பேர் இருந்தோம். அந்த படம் – கோச்சடையான்.

நேத்தும் அந்த நாளுக்கு கொஞ்சமும் பரபரப்பு குறையாத நாளு. அஞ்சே காலுக்கே போய்டணும், இல்லனா பார்க்கிங் இடம் கிடைக்காது, படத்துக்கு டிக்கெட் கிடைக்காதுன்னு நானா ஸெல்ப் பரபரப்பு அடஞ்சுகிட்டேன். ஆறு மணியாகியும் கிளம்பாதவங்களுக்கு எல்லாம் போன் போட்டு, போச்சு, போச்சு, இன்னிக்கி படம் பாக்கவே முடியாதுன்னு சாபம் எல்லாம் போட்டேன்.

ஆறே காலுக்கு தியேட்டருக்கு வெளில காலடி எடுத்து வச்சா, ஒரு காக்கா, ஈ, பூனை கூட அந்த இடத்துல இல்ல. ஒருவேளை இன்னிக்கி ஷோ கிடையாதோன்னு மலங்க மலங்க முளிச்சவள கைத்தாங்கலா கூட்டிட்டு போய் ஒரு சீட்ல உக்கார வச்சாங்க. இதுல சீட் நம்பர் வேற பாத்து உக்காரணுமாம். போன நாலு பேரோட, வேற யார் தலையாவது தெரியுதான்னு பரிதவிப்போட தேட ஆரம்பிச்சேன். ஹப்பாடி, எனக்கு முன்னாடி நாலஞ்சு சீட் தள்ளி ஒரு ரெண்டு பேரு உக்காந்துட்டு இருந்தாங்க...

...................................................

ஆக, மொத்தத்துல படம் ஒரு மொக்கை அப்படின்னு நான் சொல்லுவேன்னு உடனே முடிவு பண்ணிடாதீங்க. ஏன்னா படம் ஆரம்பிச்ச வேகத்துல நான் அப்படி தான் முடிவு பண்ணி வச்சிருந்தேன். யோவ், என்னையா இன்ட்ரோ சீன் அது? ஒரு உப்பு, மொளகா காரம் எதுவும் இல்லாம டொய்ங் டொய்ங் டொய்ங்னுகிட்டு.... ரஜினா யார் தெரியுமா? அவர் எப்படி பட்ட மாஸ் தெரியுமா? அவருக்கு எப்படி பட்ட இன்ட்ரோ குடுக்கணும் தெரியுமா?

அந்த பறவைய தொறந்து விட்டாரே, அப்படியே படபடன்னு அத்தன கூண்டோட கதவையும் தொறந்து விட வேணாமா? ஹே, தலைவருடான்னு நாங்களும் கை தட்டி இருப்போம்ல...

சரி, விடுங்க, என் கவல எனக்கு. ஆனா நான் க்ளாஸ் எடுக்குறப்பவே பிள்ளைங்ககிட்ட புலம்புற விஷயம் இது. நான் ரொம்ப சுயநலமா இருக்கேன். என் வீட்ல பறவைய அடச்சு வச்சி வளர்க்குறேன். அந்த பாவத்த போக்கிக்க, அதுகள வெளில தொறந்து விட்டா அதால வாழ முடியாதுன்னு எனக்கு நானே சாக்கு போக்கு சொல்லிக்குறேன்னு.

இந்த படத்துல ரஜினி என் செவுட்டுலயே அறையுற மாதிரி சொல்லிட்டார், வெளில போய் பொழச்சுக்குறது அதுங்க சாமார்த்தியம், ஆனா அடைச்சு மட்டும் வைக்க கூடாது, அது வெளில கஷ்டப்படுறத விட கொடுமையானதுன்னு. உண்மை தானே.

......................................

அப்புறம், படம் பாக்குறப்ப ஐயோ இந்த சீன் மொக்க, அந்த சீன் படு மோசம்னு எல்லாம் மனசுக்குள்ள நிறைய ஹிண்ட்ஸ் எடுத்து வச்சிருந்தேன். அப்படியே படம் முடிச்சு வந்ததும் நம்ம எழுத்துல அதெல்லாம் பெரிய சூரி மாதிரி காட்டிடணும்னு நினைச்சுகிட்டே வந்தேனா, படம் நீண்டுகிட்டே போக போக எல்லாமே மறந்து போச்சு. இப்ப எனக்கு என்ன எழுதன்னு தெரியலயே....

.............................................

எனக்கு ஒரு சந்தேகம்டே, தமிழ் நேசன் கூட நம்மாளு எத்தன காலம் இருந்தாரு? எத்தன நாள்ல அவரு பெரிய ஆளா வந்தாருன்னு. ஏன்னா, பிளாஷ் பேக் ஆரம்பிச்சு, தமிழ்நேசன் கூட போறப்பவே அந்த புள்ள மாசமா இருக்கு. அதுவும் ரஜினி சார்ஜ் எடுத்தப்ப அது வயிறு பானை சைஸ்ல இருக்கு. ஐ மீன், வாட்ஐ மீன், அது பிரசவ காலத்துலயே தான் இருக்கு. முன்னாடி எல்லாம் தமிழ் சினிமாவுல ஒரே பாட்டுல ஹீரோ பெரிய ஆளா வந்துடுவார். இங்க புதுசா, ஒரே ஒரு பெரிய வயித்த காட்டிகிட்டே ஹீரோவ டானா மாத்திடுறாங்க.

ஆனா சும்மா சொல்லக்கூடாது, அந்தப் புள்ள குமுதவல்லி அழகு, நடிப்பு எல்லாம் செம. குட்டி குட்டி டயலாக்ஸ் தான். ஆனாலும் அந்த பார்வை, அந்த புன்னகை, அடியே திமிர் புடிச்சவளே...

நாலு நாள் முன்னாடி தான் எனக்கு திடீர்னு படையப்பா நியாபகம் வந்துச்சு. மின்சார கண்ணாபாட்டுல “ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன், என் பாதத்தில் பள்ளிக் கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்”ன்னு ரம்யா கிருஷ்ணன் பாடுறப்ப செம கெத்தா இருக்கும். நான் இப்படியான ஆணை தான் விரும்புறேன். அவனை ஆளுறது தான் என் பெண்மைக்கு அழகுன்னு சொல்ற விதம் எல்லாம் அத்தன அட்டகாசம். இங்க குமுதவல்லி அதே திமிரோட தான் திரியுறா. பாரேன், எப்படி பட்ட ஆணை நான் ஆண்டுக்கிட்டு இருக்கேன்னு.

..............................................

ஆங், சொல்ல மறந்துட்டேனே, யார்யா அது ஜீவா? உடனே அட்டகத்தி தினேஷ்ன்னு மொக்க போட்ராதீங்க, ஆளு செம கலக்கல். ரஜினிய பாத்ததும் ஒரு மாதிரியா தலைய குனிச்சுகிட்டு, கண்ண அங்கயும் இங்கயும் உருட்டிகிட்டு, ஒரு மாதிரி வெறப்பா நிக்குற ஸ்டைல் ஆகட்டும், முந்திரி கொட்டை மாதிரி பாய்ஞ்சு பாய்ஞ்சு யாரும் ரஜினிய நெருங்க விடாம தடுக்குற ஸ்டைல் ஆகட்டும் ஆளு கொன்னுட்டாரு.

...................................................

அப்புறம் அந்த பொண்ணு. டானுக்கே டான். ஐ மீன் அவ்ளோ பெரிய ரஜினிய கொல்ல வர்ற புள்ள. அந்த புள்ள எப்படியா இருக்கணும்? சும்மா டாம் டீம்ன்னு நின்னு பின்னி பெடலெடுக்க வேணாமா? ஆரம்பத்துல அத காட்டுன தோரணைய அப்படியே டம்மி பீஸ் ஆக்கிட்டீங்களே மக்கா. ஐயோ அப்பா, ஐயோ அப்பான்னு பயந்துகிட்டே இருக்கு. நான் இருக்கேன்பா உனக்கு, நான் இருக்குறப்ப எவனும் உன்னை தொட முடியாதுன்னு தில்லா திமிரோட இருந்துருக்க வேணாமா அது. அடப்போங்கப்பா, பொண்ணுனா இப்படி தான்ன்னு சொல்லிட்ட மாதிரி இருக்கே.

...................................................

எனக்கு படங்கள்ல இந்த சண்டை காட்சிகள், கொலை பண்ற சீன்ஸ் எல்லாம் வந்தா வயித்த கலக்கிடும். கண்ண அங்க இங்க திருப்பி, அத பாக்காம அட்ஜஸ்ட் பண்ணிடுவேன். என்னமோ அப்படியே வளந்துட்டேன்னா, ஆனா பாருங்க, இந்த படத்துல க்ளைமாக்ஸ் சீன தான் வச்ச கண்ணு எடுக்காம பாத்துகிட்டே இருந்தேன். ஏன்னா, மொத்த படத்துலயும் அதுல தான் ரஜினி மாஸா தெரிஞ்சாரு. பட்டு பட்டுன்னு துப்பாக்கிய எடுத்து அவர் சுடுற ஸ்டைல் இருக்கே... (ஆக, கதைல உயிர்விட்ட கேரக்டர்கள் என்னை மன்னிக்க) கலக்கல்டா, ரஜினிடா, கபாலிடா... இன்னும் நிறைய டா.... டா.... டா... டா....

............................................

இன்னும் வேற ஏதாவது சொல்லணுமான்னு தெரியலயே.... கொஞ்சம் யோசிக்கலாம்னு பாத்தாலும் துப்பாக்கிய எடுத்து ரஜினிய பொட்டு பொட்டுன்னு சுட்டுடுராங்களே...

ஆங், இருங்க, நான் இந்த சமூகத்துக்கு கருத்து ஏதாவது சொல்லாம போய்ட்டா தப்பாகிடாதா?

படம் முடிச்சுட்டு வர்றப்ப எனக்குள்ள ஏகப்பட்ட குழப்பங்கள். ஏன், படம் நல்லா தான இருக்கு. ஆனா ஏன் நமக்கு பிடிக்கல, இதுல எத நாம குறை சொல்ல முடியும்? நம்ம இஷ்டத்துக்கு அவங்க படம் எடுக்க முடியுமா? அவர் பெஸ்ட் தானே அவர் குடுத்துருப்பார்ன்னு ஏகப்பட்ட யோசனைகள். இங்க நான் அவர் அவர்ன்னு சொன்னது டைரக்டர்ன்னு எடுத்துக்கோங்க. நிஜமாவே நல்ல ஒரு முயற்சி தான். நான் இந்த இடத்துல அமிதாப்ப வச்சு பொருத்தி பாத்தேன். பிக்கு மாதிரியான படங்கள்ல கூட அமிதாப் எவ்வளவு அழுத்தமா பொருந்தி போய்டுறார். அதே மாதிரி இந்த படத்துல ஏன் ரஜினி பொருந்தி போக கூடாது?

வேற ஒண்ணுமே இல்ல, ரஜினினா நமக்கு ஒரு எதிர்பார்ப்பு, அவர் இப்படி தான் இருக்கணும், அவர் இப்படி தான் இன்ட்ரோ ஆகணும், அவர் இப்படி தான் ஸ்டைலா பாக்கணும்ன்னு எல்லாம் நமக்குள்ள ஒரு ஸ்கெட்ச் போட்டு வச்சிருக்கோம். அதுல இருந்து நம்மால மீள முடியல. இது ஆரம்பம் தான, போக போக இப்படி ஒரு ரஜினிய பழகிப்போம்னு நம்புறேன். ஆக மொத்தத்துல ரஜினி படம்னு நினச்சு பாக்கப் போனா பல்ப் தான். அதே நேரம் அந்த இடத்துல வேற யாரையாவது பொருத்தி பாத்தா, படம் ஓகே. இன்னொரு தடவ பொறுமையா உக்காந்து படத்த பாக்கணும். வித்யாசமான ரஜினிய ரசிக்க கத்துக்கணும்.

..............................................



திடீர்னு ரஜினிய இப்படி எல்லாம் ஏத்துக்க நமக்கு மனசு வருமா என்ன?

இந்தா பிக்கு படத்துல அமிதாபுக்கு இருந்த மாதிரி ரஜினிக்கு மலசிக்கல் இருக்குன்னு சொன்னா நாம ஒத்துப்பமா? அட, இத எழுதுன இந்த நிமிஷம் அந்த கேரக்டர் ரஜினி பண்ணினா எப்படி இருக்கும்னு யோசிச்சு பாத்தேன். செம. என் பார்வைல ரஜினி சரியா பொருந்துறார். யாராவது ஒரு டைரக்டர் பிக்குவ தமிழ்ல எடுத்து, அதுல ரஜினிய நடிக்க வைங்க சார், உங்களுக்கு புண்ணியமா போகும்.

...............................................................


ஹலோ டைரக்டர் சார்,

அதென்னங்க சார், படத்துல தமிழன், தமிழ் அப்படி இப்படின்னு செம தீம் வச்சிருக்கீங்க, ஆனா அந்த பாட்டு எல்லாம் கேளுங்க, எல்லாருமே நாக்கை கடிச்சுட்டு தான் பாடவே ஆரம்பிக்குறாங்க. த்த... த்த...ன்னு கட்ட நாக்குலயே பாடுறாங்க. அவங்க நாக்குல எதாச்சும் வசம்பு தடவி விட்ருக்க கூடாதா? பாவம்ல தமிழ். எமெர்ஜன்சி வார்ட்ல இருக்கு, போய் கொஞ்சம் அத காப்பாத்த ட்ரை பண்ணுங்க....

காபாலிக்கு தான் போதை மருந்து கடத்துற பழக்கம் இல்லையே, அப்புறம் எப்படி அவரோட ஸ்கூல் கேம்பஸ்குள்ளயே, அதுவும் அவர் கண் எதிர்லயே அந்த பொண்ணுக்கு போதை மருந்து சப்ளை செய்யப்படுறத கண்டிக்காம பாத்துக்கிட்டே இருக்கார்?

அப்புறம், அந்த ப்ளாஷ் பேக்லயே நீங்க சொல்ல வந்த கருத்துக்கள சொல்லி இருக்கலாம், சும்மா சும்மா, கோட் கோட்னே பேசுறீங்களா, எனக்கே அந்த கோட்ட கிழிச்சி எறிஞ்சுட்டு பைத்தியக்காரி ஆகிடலாம் போல இருந்துச்சு. இந்த தமிழன்ங்குற தீம் இருக்கே.... அய்யய்யோ, இன்னும் சொல்லணும் போல இருக்கே, ஆனா இந்த இணைய போராளிகள் பொங்கிடக் கூடாதே... அதனால நான் பேசாம பாப்கார்ன் சாப்பிடவே போய்டுறேன்....

........................................

கட்ட கடைசியா ஒண்ணு, படம் முடிச்சுட்டு வெளில வந்தப்ப, கூட வந்த பொடிசுங்க ரியாக்சன கவனிச்சேன். இந்த பீசா சாப்ட்டுட்டு காக்கா முட்டைங்க ரெண்டு பேரும் ஒரு ரியாக்சன் விடுவாங்களே, சேம் ரியாக்சன், சேம் டயலாக்....

........................................

ஆமா, நான் இப்ப என்ன தான் சொல்ல வரேன், படம் நல்லா இருக்கா இல்லையா? அது தெரியாம தான நானே அப்பவே போறேன்னு போறேன்னு எண்டு கார்ட் போட்டும் இங்கனயே சுத்திகிட்டு இருக்கேன்....

.................................

Tuesday 26 July 2016

களவாணித்தனங்கள்




வாசிக்குற அனுபவம் ரொம்ப சின்ன வயசுல எனக்கு உண்டு. அப்போ எல்லாம் ஸ்கூல் லைப்ரரில இருந்து புக் எடுத்துட்டு வந்து படிப்பேன். அப்புறம் ஒரு கட்டத்துல வீட்ல இருக்குறதுக்கே நேரம் இல்லாம ஊர் சுத்த ஆரம்பிச்சதும் அந்த பழக்கம் அடியோட அழிஞ்சு போச்சு.

ஸ்கூல் நாட்கள்லயும் சரி, யூ.ஜி படிக்குறப்பவும் சரி, தமிழ் மேல ஒரு தனி பற்று இருந்தது உண்மை தான். ஆனாலும் எனக்கு பிடிக்காத ஒண்ணு மனப்பாடம் பண்றது. அதனாலயே தமிழ்லயும் சரி இங்கிலீஷ்லயும் சரி, எப்பவுமே மார்க் எழுபதுக்கு மேல தாண்டாது. இந்த செய்யுள் எல்லாம் மனப்பாடம் பண்ணனும்ல...

ப்ளஸ் டூ படிக்குறப்ப ஒரு தமிழ் சார் இருந்தார். ஒருத்தர உருவத்த வச்சு கிண்டல் பண்றது எல்லாம் தப்பு தான், ஆனா ஒரு தடவ அவர் ஒரு செய்யுள் நடத்தினார். அந்த செய்யுள் ஒரு ஆளை உருவகப்படுத்தி இருக்கும்.

பனங்கொட்டை மாதிரி தலை, பனை நார் மாதிரி மீசை, குள்ள உருவம்னு அவர் எம்பி எம்பி பாடம் எடுத்தப்ப அவரையே அவர் வர்ணிச்ச மாதிரி தோணிச்சு. “அதாவது சார், உங்கள பாத்தா அவர பாக்க வேண்டியது இல்ல, அப்படியே இருக்கீங்க”ன்னு கவுண்டர் குடுத்ததுல அவர் ஒரு மாதிரி என்னை முறைச்சு பாத்துகிட்டே இருந்தார். பாவம் அவருக்கு என்னை யார்னு அடையாளம் தெரிஞ்சிருக்காது.

காரணம், அப்பலாம் நான் ரொம்ப அமைதி. இருக்குற இடம் வெளில தெரியாது. கிட்டத்தட்ட எந்த நண்பர்களும் எனக்கு கிடையாது. நான் பாட்டுக்கு ஒரு இடத்துல சோகமா தேமேன்னு உக்காந்துட்டு இருப்பேன். அதுக்காக அது தான் என்னோட குணம்னு தப்பு கணக்கு போட்டுடாதீங்க, பத்தாவது வரைக்கும் படிச்ச ஸ்கூல்ல போடாத ஆட்டம் கிடையாது, அடிக்காத லூட்டி கிடையாது. அட, எப்பவும் டென்த் ரிசல்ட்ல சென்டம் வாங்கிட்டு இருந்த எங்க ஸ்கூல்ல முதல் தடவையா நாலு பேரு பெயில் ஆனது எங்க பேட்ச்ல தான். அந்த அளவு கோச்சிங் கிளாஸ் வச்சாலும் கொட்டமடிப்போம்.

ப்ளஸ் ஒன் ஸ்கூல் மாறி போனதாலயும் அத்தன வருஷம் ஒண்ணா சுத்தினவங்க பிரிஞ்சி போன சோகத்துலயும் இருந்து மீள எனக்கு கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆச்சு. அதனாலயே அந்த தனிமை வாசம். எனக்கென்னவோ அவங்கள தவிர வேற யாரையும் ப்ரெண்ட்ஸ்சா ஏத்துக்க மனசு வரலன்னு தான் சொல்லணும்.

ஆங், நான் தமிழ் க்ளாஸ்ல நடந்தத பத்தி சொல்லிட்டு இருந்தேன்ல, அன்னிக்கி என்னை கவனிச்சவர் தான், தினமும் என்னை எழுப்பி விட்டு கேள்விகளா கேட்டு கொன்னுடுவார். எப்பவுமே பாடத்த நான் உன்னிப்பா கவனிக்குற பழக்கம் இருந்ததால நானும் பதில் சொல்லி தப்பிட்டு இருந்தேன். அப்படி தான் திடீர்னு ஒரு நாள் திருக்குறள்ல ஒரு அதிகாரம் பெயரை சொல்லி, எல்லா செய்யுளையும் சொல்லுன்னு சொல்லிட்டார்.

என்னதான் நான் மேத்ஸ் குரூப்னாலும் தமிழும் இங்கிலீஷ்சும் எல்லோருக்கும் பொதுங்குறதால சயின்ஸ், கம்யூட்டர் சயின்ஸ், காமேர்ஸ்னு எல்லா பேட்ச் பிள்ளைங்களும் க்ளாஸ் ரூம்ல இருப்பாங்க. அத்தன பேர் முன்னாலயும் அன்னிக்கி ஒரு மணி நேரம் நின்னுகிட்டே இருந்தேன். சாருக்கு என்னை பழி வாங்கிட்ட திருப்தி. அடுத்த நாள் திருக்குறள்ல வெறும் செய்யுள் மட்டும் டெஸ்ட்னு வேற சொல்லிட்டார்.

செய்யுள் பகுதி கூடவே வேற கேள்விகளும் இருந்தா, அத எழுதி எப்படியாவது பாஸ் ஆகிடுவேன். இங்க எல்லாமே மனப்பாடம் பண்ணனும்னா எப்படி? எப்படியும் பெருசா முட்டை தான் வாங்கப் போறேன்னு தெரிஞ்சி போச்சு. சும்மாவே அவருக்கு நம்ம மேல காண்டு, இதுல முட்டை வேற எடுத்தா அத்தன புள்ளைங்க முன்னாலயும் அவர் திங்கு திங்குன்னு எம்பி குதிப்பாரே.

ச்சே, வெட்கம், அவமானம், வேதனைன்னு பீல் பண்ணி உடனே அந்த திருக்குறள படிச்சிருப்பேன்னு தான நினைக்குறீங்க, அதான் இல்ல. இதுல இருந்து தப்பிக்க என்ன பண்றதுன்னு என்னோட கிரிமினல் மூளை யோசிக்க ஆரம்பிச்சது. ஒரு பக்கம் எனக்குள்ள ஒரு நல்லவ உக்காந்துட்டு, “நீ யோசிக்கவே செய்யாத, தயவு செய்து எப்படியாவது திருக்குரள படிச்சு சொல்லிட்டு நல்லப் பிள்ளையா உக்கார பாரு”ன்னு அறிவுரை சொல்ல ஆரம்பிச்சா. ஆனா அத எல்லாம் கேக்குற நிலைமைல நான் இல்ல. வீட்ல வந்தும் பனங்கொட்டை வாத்தியார என்ன செய்யலாம்னு யோசிச்சுகிட்டே இருந்தேன். திடீர்னு ஒரு முடிவுக்கு வந்து தூங்கிட்டேன். அதுவும் அன்னிக்கி நான் ரொம்ப நல்லா குறட்டை விட்டேன்னு வேற தம்பி பஞ்சாயத்து பண்ணினான்.

அடுத்தநாள் வழக்கம் போல ஸ்கூல் போனேன். அதுவும் வழக்கத்துக்கும் அதிகமா அமைதியாவே போனேன். மூஞ்சிய தொங்கப் போட்டுட்டு டெஸ்ட் பேப்பர்ல சைன் எல்லாம் வாங்கிட்டு என் இடத்துல வந்து உக்காந்தேன்.

சார் என் பக்கத்துல வந்து நின்னுகிட்டார். நீ எப்படி என்கிட்ட இருந்து தப்பிக்குறன்னு பாப்போம்னு பார்வை வேற.

நான் பாட்டுக்கு முதல்ல ஜியாமெட்டரி பாக்ஸ் எடுத்து டெஸ்க் மேல வச்சேன். அத தொறந்து, பென்சில், ஸ்கேல், பென், ரப்பர்ன்னு எல்லாம் ஒண்ணொண்ணா எடுத்து அடுக்க ஆரம்பிச்சேன். சார் அதுக்குள்ள ஒரு ரவுண்டுஸ் போயிட்டு வந்துட்டார். இங்க நான் அமைதியா எழுத ஆரம்பிச்சிருந்தேன்.

அவனவன் ஷூகுள்ள பிட் வச்சு எழுதுறான், பொண்ணுங்க மடியில பிட் வச்சு எழுதுறாங்க, சில பேர் டெஸ்ட் பேப்பருக்கு உள்ள வச்சு பாத்து பாத்து எழுதுறாங்க, சார் க்ளாஸ்ல கால்வாசி பேரை பிட் அடிக்குறதா சொல்லி எழுப்பி விட்டு வெளில அனுப்பிகிட்டே இருக்காரு. ஆனாலும் பார்வை என்னை விட்டு அகலல.

ஒரு கட்டத்துல நான் எழுந்தேன். டெஸ்ட் பேப்பர அவர் கைல குடுத்தேன். மீதி இருந்த பேப்பர், பென், பென்சில், ரப்பர், ஸ்கேல் எல்லாம் எடுத்துட்டு வெளில போயிட்டேன்.

அடுத்த நாள் சார் பேப்பர் குடுத்தார். ஒரு மாதிரி அதிர்ச்சியில உறைஞ்சு போய் அவர் என்கிட்ட நீட்டுன பேப்பர்ல எத்தன மார்க் இருந்துருக்கும்னு நினைக்குறீங்க?

அப்படியே அச்சடிச்ச மாதிரி நூத்துக்கு நூறு.

அப்ப ஆ-ன்னு வாயப் பொளந்தவர் தான், அப்புறம் அதிகம் என்கிட்ட வம்பு வச்சுக்குறது இல்ல.

ஒருத்தி என்கிட்ட வந்து கை குடுத்தா. சூப்பர். நீ நல்லா படிப்பியான்னு கேட்டா. சிரிச்சுகிட்டேன். ஏதோ ப்ளஸ் டூ முடிக்குறதுக்குள்ள கொஞ்சமா பழையபடி சேட்டை பண்ண ஆரம்பிக்க இந்த சம்பவம் ஒரு காரணமா அமைஞ்சது.

அது மட்டுமில்ல, இதனால என்னோட ஞாபக சக்தி அதிகமாச்சு.

அதெப்படி எல்லாம்?னு ஷாக் ஆகாதீங்க.

ஆமா, நான் எப்படி அந்த நூத்துக்கு நூறு மார்க் வாங்கினேன்?

விஷயம் சிம்பிள்.

எல்லா பசங்களும் புள்ளைங்களும் அங்கங்கே பிட்டை ஒளிச்சு வச்சு கஷ்டப்பட்டு பாத்து பாத்து எழுதி மாட்டிகிட்ட நேரத்துல, நான் பதட்டமே இல்லாம பிட்டை என் டேபிள் மேலயே, அதுவும் விரிச்சு வச்சே அடிச்சுட்டு இருந்தேன். எந்த பேப்பரயும் திருப்பி திருப்பி பாக்கல, மடிய குனிஞ்சு பாக்கல, காலை குனிஞ்சி பாக்கல, அப்படியே கம்பீரமா நிமிர்ந்து உக்காந்து எழுதிட்டு இருந்தேன்....

ஆச்சா, இப்ப நியாபக சக்திக்கு வருவோம்.

அதுவரைக்கும் படிச்சத எல்லாம் எழுதி பாக்குற பழக்கம் இல்லாத நான் இப்படி பிட் அடிக்குற சாக்குலயாவது மனப்பாட பகுதிகள ஒரு தடவ எழுதிடுரதாலயும் பிட் அடிச்ச சம்பவம் இன்ச் பை இன்ச் என் மனசுல ரெகார்ட் ஆகிடுற காரணத்தாலயும் பப்ளிக் எக்சாமுக்கு செய்யுள் பகுதியையும் விட்டுடாம அட்டென்ட் பண்ணின காரணத்தாலயும் தமிழுக்கு இருநூறுக்கு நூற்றி தொன்நூறு மார்க் வாங்கினேன்.

ஹலோ ஹலோ, பிட் எல்லாம் மனப்பாட பகுதிகளுக்கு மட்டும் தான். அதுவும் நம்ம தமிழ் வாத்தியார் க்ளாஸ்ல மட்டும் தான். மத்தப்படி நமக்கு இந்த பிட் அடிக்குரதெல்லாம் சுத்தமா பிடிக்காது – வேற சில சம்பவங்கள சொல்ற வரைக்கும் இது தான் உண்மை. அதனால இதயே இப்போதைக்கு நம்பிட்டு இருங்க.

....................................................

அப்புறம் ஆரம்பிச்சதுக்கும் முடிச்சதுக்கும் சம்மந்தமே இல்லையேன்னு ரொம்ப யோசிக்காதீங்க. நான் இப்ப எல்லாம் புக் படிக்க ஆரம்பிச்சிருக்கேன்னு ஒரு வரி செய்திய சொல்லத் தான் முதல்ல எழுத ஆரம்பிச்சேன். அப்புறம் என்ன எழுதுறேன்னு எனக்கே புரியாம என் போக்குல எழுத ஆரம்பிச்சு நிமிர்ந்தா நிறைய விஷயங்கள் சொல்லணும் போல இருந்துச்சு. சரி, ரொம்ப எழுதினா படிக்குற நீங்க டயர்ட் ஆகிடுவீங்கங்குற ஒரே காரணத்தால, நான் செய்த களவாணித்தனங்கள பிட் பிட்டா அப்பப்ப எடுத்து விடலாம்னு முடிவு பண்ணி, இதுக்கு களவாணித்தனங்கள்னு லேபல் போட்டு வச்சிட்டேன்.

அப்படியே உங்க ஆதரவுகள குடுத்தீங்கனா செய்த மொத்த களவாணித்தனங்களையும் புட்டு புட்டு வச்சு என் பெருமைய நானே பேசிக்குவேன், நன்றி வணக்கம்.

Saturday 16 July 2016

மூன்றாம் நதி - என் பார்வையில்




எழுதுறத நான் கிட்டத்தட்ட நிறுத்திட்டேன்னு தான் சொல்லணும். எப்பவாவது திடீர்னு மனசுக்கு தோணினத எழுதி ப்ளாக்ல மட்டும் போஸ்ட் பண்ணிட்டு இருக்குற நேரம் மகேஷ் தான் அத படிச்சுட்டு அவனோட கருத்துக்கள அடிக்கடி சொல்லுவான். சொல்லப்போனா கிட்டத்தட்ட அவன் ஒரு கிரியாயூக்கி மாதிரி. நிறைய சோர்ந்து இருக்குறப்ப எல்லாம் அக்கா, வித்யாசமா ட்ரை பண்ணுங்க அக்கா, நல்லா எழுதி இருக்கீங்க அக்கான்னு எதையாவது சொல்லி உற்சாகமூட்டிகிட்டே இருப்பான்.

அப்படி தான் ஒருநாள் அவன் கிட்ட பேசிட்டு இருக்குறப்ப மூன்றாம் நதி பத்தி பேச்சு வந்துச்சுன்னு நினைக்குறேன். சரியா நியாபகம் இல்ல. அப்புறம் ஒரு நாள் மூன்றாம் நதிக்கு தன் நண்பன் எழுதின விமர்சனம் ஒண்ணை எனக்கு படிக்க தந்திருந்தான். அத படிச்சிட்டு மகேஷ் கிட்ட எனக்கு மூன்றாம் நதி படிக்க கிடைக்குமான்னு கேட்டேன்.

நான் இதுக்கு முன்னால படிச்ச நாவல்களோட ஆசிரியர்கள் பற்றி எனக்கு எந்த பரிட்சயமும் இல்ல. ஆனா வா. மணிகண்டன் அப்படி கிடையாது.

மூணு வருஷம் முன்னால முதல் முதலா ப்ளாக் ஒண்ணு ஆரம்பிக்கணும்னு நான் முடிவு பண்ணினப்ப மகேஷ் கிட்ட தான் உதவி கேட்டேன். ப்ளாக் ஆரம்பிச்சாலும் அடுத்து என்ன பண்ணனே தெரியாம முழிச்சுட்டு இருந்தப்ப ஒவ்வொரு படியா ஒவ்வொரு விசயத்தையும் பொறுமையா அவன் தான் எனக்கு கத்துக்குடுத்தான்.

வெறும் கவிதைகள மட்டும் தான் அந்த நேரம் போஸ்ட் பண்ணிட்டு இருந்தேன். அப்ப தான் சிலரோட ப்ளாக் லிங்க் எல்லாம் குடுத்து, இவங்க எழுதினதையும் படிங்க அக்கா, அதனால உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்னு சொல்லி அவன் குடுத்த முதல் ப்ளாக் லிங்க் வா. மணிகண்டனோடது. அப்போ இருந்து அவரோட ப்ளாக் என்னோட பாலோஅப் லிஸ்ட்ல இருக்கு.

நான் அவரோட எல்லா போஸ்ட்டும் படிப்பேன்னு பொய் சொல்ல விரும்பல. காரணம் வாசிக்குறதே எனக்கு பிடிக்காம இருந்துச்சு அப்போ. அது ஒரு அயர்ச்சிய குடுத்துச்சு. அந்த சூழ்நிலைல கூட அப்பப்ப வா. மணிகண்டனோட ப்ளாக் படிப்பேன். அவரோட நிசப்தம் அறக்கட்டளை பத்தியும் தெரிய வந்துச்சு. அப்பப்ப அவர் போஸ்ட்கு கமன்ட் போட நினச்சாலும் கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் முன்னாடி அதுல அந்த ஆப்சனே இல்ல. அதனால சைலென்ட்டா வாசிச்சுட்டு போயிருக்கேன்.

மகேஷ் எப்போ எல்லாம் என்கிட்ட போன்ல பேசுவானோ அப்ப எல்லாம் வா. மணிகண்டனை பத்தி ஒரு வார்த்தையாவது பேசாம விட மாட்டான். அவர் மேல அவனுக்கு பெரிய மதிப்பு உண்டுன்னு எனக்கு ரொம்ப நாள் முன்னாலயே புரிஞ்சுச்சு. அவரோட அறகட்டளை, வாசகர்கள் அவர் மேல வச்சிருக்குற நம்பிக்கைனு ஓயாம பேசுவான்.

ஒரு புத்தகம் போடணும் மகேஷ்னு நான் சொன்னப்பவும் வா. மணிகண்டன் போஸ்ட் லிங்க் ஒண்ணை எடுத்து குடுத்து இத படிங்க அக்கான்னு சொல்லுவான். எதுக்கு எடுத்தாலும் அவர உதாரணமா கொண்டு வந்து நிறுத்தாம விட்டது இல்ல மகேஷ். அப்படி தான் எனக்கு மூன்றாம் நதி புக் கிடைக்குமான்னு நான் கேட்டதும் என் கிட்ட இருக்கு அக்கா, நானே அனுப்பி வைக்குறேன்னு சொல்லி ஒரு நாலு புத்தகமும் (மூன்றாம் நதி, மசால் தோசை 38 ரூபாய், பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு, ஆவிப்பா) பத்து திருப்பதி லட்டும் வச்சு அனுப்பிட்டான். கிட்டத்தட்ட ஒன்னரை நாளுக்குள்ள அது என் கைக்குள்ள கிடைச்சதுல அவனுக்கு ஒரே ஆச்சர்யம். எனக்கு தான் திருப்பதி லட்டு ஒன்னே ஒண்ணு கிடைச்ச வருத்தம். பார்சல் வீட்டுக்கு வந்து, அப்புறமா என் கைக்கு வந்து சேருறதுக்குள்ள அப்பா எல்லாத்தையும் காலி பண்ணிட்டார்.

சரி விடுங்க, நான் நாவல பத்தி பேச வந்துட்டு இன்னும் ஆரம்பிக்கவே இல்ல பாருங்க.

இன்னிக்கி மதியம் தான் புத்தகத்த கைல எடுத்தேன். எனக்கு அந்த அட்டை வடிவமைப்பே வித்யாசமா பட்டுச்சு. முதல்ல பட்டுன்னு பிடிபடல, ஆனா என்னமோ வித்யாசமா இருக்கே இருக்கேன்னு திருப்பி திருப்பி பாத்துட்டு இருந்தேன். அப்புறமா திடீர்னு தடவி பாக்கனும்னு தோணிச்சு. அட, கருப்பு அட்டைல நீல கலர்ல ஒரு பொண்ணோட அவுட்லைனும், மூன்றாம் நதின்னு எழுத்தும் ஸ்டிக்கர் ஒட்டி இருக்காங்க. எனக்கு அது ரொம்ப வசீகரமா இருந்த மாதிரி தோணிச்சு.

இந்த நாவல் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றியதுன்னு முன்னுரை படிச்சு தெரிஞ்சிகிட்டேன். “பெரும் வேட்டைக் காடான இந்த உலகம் அவர்களைத் துரத்தித் துரத்தி வேட்டையாடிக் கொண்டிருக்கிறது” – முன்னுரைல இருந்த இந்த வார்த்தை எவ்வளவு சத்தியமானது.

சமீப காலமா எனக்குள்ள ஒரு யதார்த்தம் பிடிபட்டு அதிக வலியை குடுத்துகிட்டே இருக்கு. வா. மணிகண்டன் சொன்ன மாதிரி இந்த உலகம் ஒரு வேட்டைக் காடு. ஆனா இங்க விளிம்பு நிலை மனிதர்கள் மட்டும் தான் இரையாகுறாங்கன்னு சொல்ல முடியாது. எல்லாருக்குள்ளேயும் ஒரு வன்மம் இருக்கு. சந்தர்ப்பங்கள் கிடைக்குற நேரத்துல எல்லாம் அத பயன்படுத்தி வேட்டையாடி தன்னோட வன்மங்கள தீத்துக்குறாங்க மக்கள்.

ரெண்டு நாள் முன்னாடி தான் போஸ்ட் டாக்டோரியல் பெல்லோஷிப்க்காக ஒரு மெடிக்கல் சர்டிபிகேட் வாங்க அரசு மருத்துவமனைக்கு போக வேண்டிய சந்தர்ப்பம் வந்துச்சு. பெரும் கூட்டம். டோக்கன் குடுத்தவர் ஈவு இரக்கமே இல்லாம ஒவ்வொருத்தரையும் வார்த்தையால காயப்படுத்திட்டு இருந்தார். அவங்களோட ஊனத்த குத்திக்காட்டி போ போ, அப்புறம் வான்னு துரத்திட்டு இருந்தார். நாலு கால்ல தவழ்ந்து வந்து ஏமாற்றத்தோட திரும்பி தயங்கி தயங்கி தடுமாறிட்டு இருந்த ஒரு மனுசனை வச்ச கண்ணு எடுக்காம பாத்துகிட்டே இருந்தேன். எனக்கு இந்த மாதிரியான இடங்கள் தன்னம்பிக்கையை குலைக்கும் இடங்கள்ன்னு அங்க இருந்து ஒதுங்கியே இருப்பேன். என்னையும் ஒரு வயசான அம்மா “ஏம்மா நொண்டி, ஆயிரம் ரூபாய்க்கா வந்த”ன்னு கேட்டார். என் படிப்பு, என் அதிகாரம், என் சுதந்திரம், என் வீம்பு எல்லாம் தரைமட்டமான இடம் அது. அப்போ அவர் என்னை பார்த்த பார்வைல ஒரு குத்தல் இருந்துச்சு. அப்பவே அவர நாலு வார்த்தை கேப்பமான்னு நினச்சேன். அந்த இடத்துல ஒரு சலசலப்ப உருவாக்க நான் விரும்பல. முறைச்சு பாத்துகிட்டே இருந்தேன்.

என் கதைய விடுவோம், அந்த டோக்கன் குடுக்குறவர் ஒரு கட்டத்துல எழுந்து வெளில போக வேண்டிய கட்டாயம் வந்துச்சு. அவர் எழுந்து நடந்தார். அதுவும் கக்கத்துல ரெண்டு கட்டைகள் உதவியோட. அதிகாரங்கள் கைல இருந்தா யார வேணா காயப்படுத்தலாமா? ஒரு கணம் அந்த நாலு கால் மனுசன பாத்துட்டு அப்புறம் டோக்கன் குடுத்தவர் மேல குத்திட்டு நின்ன என்னோட பார்வை அவர காயப்படுத்தி இருக்கணும். என்னை ஏறிட்டுப் பாத்துட்டு தலைய குனிச்சுகிட்டார். யார் மேல இருந்த வன்மத்த இவர் இவங்க கிட்ட எல்லாம் காட்டிட்டு இருக்காரோ தெரியல. ஆனா என்னோட பார்வைக்கு பிறகு அவரோட அணுகுமுறைல ஒரு மாற்றம் தெரிஞ்சுச்சு. அடுத்து வந்த வயசான பாட்டிகிட்ட அவரே குனிஞ்சு என்ன விவரம்னு கேட்டு எழுதிட்டு, ஒரு ஓரமா அவங்க உக்கார இடமும் ஒதுக்கி குடுத்தார். இப்படி வேட்டையாடுற குணம் ஒவ்வொருத்தருக்குள்ளயும் இருந்துகிட்டு தான் இருக்கு.

எனக்கு சென்னை, ஹைதராபாத், பெங்களூர்ன்னு எந்த பெரு நகரங்களோட பரிச்சயமும் இல்ல. அதனாலயே அங்க வாழ்ற விளிம்பு நிலை மனிதர்கள் பத்தின எந்தவிதமான எண்ண ஓட்டங்களும் இல்ல. இந்த மென்பொருள் நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள் பற்றி கூட எனக்கு எந்த பிரக்ஞையும் கிடையாது. உண்மைய சொன்னா எனக்கு யார் மேலயும் எந்த பரிதாபமும் கிடையாது.

எனக்கு இந்த நாவல படிச்சப்ப ஒரு பெண்ணோட வாழ்க்கை மேலோட்டமா சொல்லப்பட்டுருக்குன்னு தான் மனசுல பட்டுச்சு. மகேஷ் பேசும் போது சொன்னான், “அய்யோ, அது பயங்கரம். அந்த பொண்ணு எப்படி எல்லாம் கஷ்டப்படுறா”ன்னு. இல்ல மகேஷ், எனக்கு இதுல எந்த கஷ்டமும் கண்ணுல தெரியல. காரணம் ஒரு பெண்ணோட கஷ்டம் எந்த இடத்துலயும் ஆழமா சொல்லப்படலங்குறது என்னோட கருத்து. ஆசிரியர் கூட சொல்லி இருக்கார் “இருந்தாலும் துளி தயக்கம் ஏதோவொரு மூலையில் எட்டிப் பார்த்தப்படியே இருக்கிறது”ன்னு. அந்த தயக்கம் வேற எதுவும் இல்ல, சம்பவங்கள விவரிச்ச முடிஞ்ச அவரால அவளோட உணர்வுகள விவரிக்க முடியலன்னு நான் நினைக்குறேன்.

என்னை கேட்டா, பவானியோட வாழ்க்கைல வந்த எந்த சந்தர்ப்பமும் அவள கீழ் நோக்கி தள்ளாது. அவ எந்த சூழ்நிலையிலயும் வாழ, தன்னை பொருத்திக்குற ஒரு ஆத்மாவா தான் என் கண்ணுக்கு தெரியுறா. சித்திகிட்ட இருந்து கிடைக்குற வசவு சொல் அவள தற்கொலைக்கு தூண்டுது. அதே நேரம் வருணோட நட்பு அவள அதுல இருந்து காப்பாத்துது. இதெல்லாம் இன்னும் ஆழமா சொல்லி இருக்கலாம். வாழ்க்கையோட ஒவ்வொரு நகர்வுலயும் பவானி வாழ்ந்துகிட்டே தான் இருக்கா. அதனால அவளோட கணவன் இறப்பு கூட “இதுவும் கடந்து போகும்” வகை தான். அவ அவளையே செதுக்க அவளுக்கு கிடைச்ச அடுத்த சந்தர்ப்பம் அதுன்னு எனக்கு தோணுது. கண்டிப்பா பவானி அவ குழந்தைய அநாதையா விட மாட்டா. இந்த வேட்டை உலகத்துல தன்னையும் தன்னோட குழந்தையையும் கண்டிப்பா அவ பொருத்திப்பா.

பெண்ணோட உணர்வுகள் தான் இங்க குறையுதுன்னு சொன்னேனே தவிர, சம்பவங்கள விவரிச்சிருக்குற விதம் பயங்கரம். லிங்கப்பா உடம்பு எரிஞ்சி, கரிஞ்சி விழுறத விவரிச்ச விதம், பால்காரர் கொலைய விவரிக்குற இடம் எல்லாம் அப்படியே காட்சிய கண் முன்னால கொண்டு வந்து நிறுத்திடுது. லிங்கப்பாவோட பவானியோட கடைசி பயணமும் கண் கலங்க வைக்குது. அந்த இடத்துல பவானியோட மனச, உணர்வ கொஞ்சம் ஆழமா சொல்லி இருக்கார் ஆசிரியர்.

பவானிக்காக இந்த நாவல்னு சொன்னா அத என்னால ஏத்துக்க முடியாது. இதுல முழுக்க முழுக்க ஆண்களோட கதை தான் சொல்லப்பட்டுருக்கு. அதுல முதலும் பத்தொன்பதாம் அத்யாயம் தவிர்த்து, பவானி ஒரு அங்கம் அவ்வளவே தான்.

பஞ்சம், கொலை, அதிகாரம், கம்யூட்டர் வர்க்கம்ன்னு ஆசிரியர் விவரிக்குற எல்லாமே யதார்த்தத்த உணர்த்துது. ஒரு நகரம் எப்படி தன்னோட கிளைகளை பரப்பி மனிதாபிமானம், சுகாதாரம் எல்லாத்தையும் அழிக்குது, எப்படி அது தன்னை இன்னொரு நிலைக்கு தயார் படுத்திக்குதுன்னு எல்லா விசயங்களையும் அழகா அடுக்கி இருக்கார் பா. மணிகண்டன். அத படிச்சுட்டு நாம இங்க சொகுசா இருக்கோமோன்னு ஒரு குற்ற உணர்ச்சி என் மனசுல வராம இல்ல. கடைசியா இந்த குற்ற உணர்ச்சி நான் பி.ஜி படிக்குறப்ப மும்பைக்கு இண்டஸ்ட்ரியல் விசிட் போனப்ப ஏற்பட்டுச்சு. அந்த அனுபவம் பத்தி இன்னொரு நாள் கண்டிப்பா எழுதணும்.



மூன்றாம் நதி – ஒரு பெண் அப்படிங்குற காரணத்தால இன்னும் இந்த நாவல்ல என்னோட எதிர்பார்ப்பு அதிகமா இருந்துருக்கலாம். அதனால கொஞ்சம் ஏமாற்றம்னு தான் சொல்லணும். மத்தப்படி எனக்கு தெரியாத ஒரு இடத்துல நின்னுகிட்டு மூச்சு முட்டின உணர்வு இத படிச்சதும். நகரம் பழகிக்கணும்.

Sunday 26 June 2016

நான்கு பெண்கள் கொலையும் ஒன்-இந்தியாவின் செய்தியும்



சமீப காலமா பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் அதிகரிச்சுகிட்டே இருக்கு. எங்க பாத்தாலும் அத பத்தின நியூஸ். காரசாரமான விவாதங்கள். அத எல்லாம் படிச்சா தலையே வெடிச்சுடும்.

பொதுவா இந்த மாதிரியான சம்பவங்கள பத்தி கேள்விப்பட்டதுமே ஒரு கையாலாகாததனம் என் மனசுல வந்து ஒட்டிக்கும். நாட்டுல நடக்குற எந்த அநீதிகளையும் எதிர்த்து நம்மால போராட முடியாது. ரெண்டுநாள் பாதிக்கப்பட்ட/கொல்லப்பட்டவங்கள நினச்சு மனசுக்குள்ள அவங்களுக்காக பிரார்த்தனை மட்டுமே பண்ணிக்க முடியும் என்னால. அத தவிர இப்போதைக்கு நான் எதுவும் செய்யப் போறது இல்ல. அப்புறம் எதுக்கு இந்த பொங்கல்கள் எல்லாம்னு எனக்கு நானே மவுனமா இருந்துடுவேன்.

ஆனா இன்னிக்கி நாலு பொண்ணுங்கள கொன்னுட்டு நாலு நாள் அந்த உயிரில்லாத உடம்புகள பாலியல் வன்புணர்வு செய்தவன் பத்தி ஒன்-இந்தியா (one India) பத்திரிக்கை வெளியிட்டு இருந்த செய்திய பாத்தேன்.

அத படிச்சதும் ஒரு மிகப்பெரிய கொடூர சம்பவத்த எப்படி கிளுகிளுப்பு சம்பவமா இவங்களால மாத்த முடிஞ்சுதுங்குற எரிச்சல்தான் என்னை இத எழுத வைக்குது.

முதல்ல பேஸ்புக்ல தான் அத பத்தின நியூஸ் என் கண்ணுல பட்டுச்சு. ஒன்-இந்தியா வெளியிட்டு இருந்த செய்திய ஷேர் செய்திருந்த பெண், ‘மாத்தி மாத்தி காறி துப்பிப்போம்”ன்னு தலைப்பு குடுத்து அத ஷேர் செய்திருந்தார். “கள்ளக்காதலி”, “காமக் கொடூரன்”ங்குற அடைமொழிகள் எல்லாம் பலமாவே இருந்துச்சு.

இது முதல் கணவனோட சாபம், இந்த மாதிரி வீட்டை விட்டு ஓடிப் போறவங்களுக்கு இது தான் நிலைமைங்குற மாதிரியான கமண்ட்ஸ்... சரி, இத எல்லாம் பேசி ஒரு பிரயோஜனமும் இல்ல, மொத்தத்துல ஒரு துர்சம்பவம் “த்தூ”ன்னு துப்பிட்டு அடுத்த வேலைய பாக்கப்போற அளவு தான் மக்கள் மனசுல பாதிப்ப ஏற்படுத்தி இருக்கு.

பெண்கள போகப்பொருளா மட்டும் நினைக்குற இந்த சமூகத்துல பத்திரிக்கைகளும் அதையே தான் மக்களுக்கு போதிக்குதா?

நான் ஒன்-இந்தியாவின் அந்த செய்திய மட்டும் சொல்லல, அதே சம்பவத்த முன்னிறுத்தி அது வெளியிட்டு இருக்குற இந்த செய்தியையும் கொஞ்சம் பாருங்க. 



கிட்டதட்ட ஒரு கிளுகிளுப்பு ரேஞ்சுக்கு அந்த சம்பவத்த கதையா தனி தனி தலைப்பு போட்டு விவரிச்சி இருக்காங்க. இத மேம்போக்கா படிக்குற எல்லாருக்குமே தப்பு செஞ்சா இதான் தண்டனைங்குற ஒரு குரூர எண்ணத்த ஒன்-இந்தியாவோட இந்த கட்டுரை ஏற்படுத்த தவறவே தவறாது.

கிட்டத்தட்ட கொலையுண்ட பெண்ணை எவ்வளவு கீழ்த்தரமா சித்தரிக்கணுமோ அவ்வளவு கீழ்த்தரமா சித்தரிச்சி இருக்காங்க. கணவன விட்டுட்டு ஒரு பொண்ணு இன்னொரு ஆண் கூட போயிட்டாலே அவளோட பேரு “கள்ளக்காதலி”யாம்.

அந்த பெண்ணோட நிலைமை என்னனோ, எதுக்காக அவனோட போனாள்னோ கண்டிப்பா அவள தவிர வேற யாருக்கும் சொல்ற அருகதை கிடையாது. அவரவர் நியாயம் அவரவருக்கு மட்டும் தான். அந்த பெண் கொலை செய்யப்பட்டாள்ங்குற ஒரே காரணத்துக்காக எவ்வளவு ஈசியா இந்த பத்திரிக்கை அவள கள்ளக்காதலியா மாத்திடுது?

வெறும் உடல் சுகத்துக்காக ஒருத்தனோட போற எந்த பெண்ணும் தன்னோட குழந்தைகளையும் அவளோட கூட்டிட்டு போக மாட்டா. அதுவும் மூணு பேரும் வளர்ந்த, வயசுக்கு வந்த பெண் பிள்ளைங்க. அவன் மேல எத்தன நம்பிக்கை இருந்துருந்தா தன்னோட பிள்ளைகளோட எதிர்காலத்த அவன நம்பி அவ அவன்கிட்ட ஒப்படைச்சி இருப்பா?

இது காதலையும் தாண்டி, காமத்தையும் தாண்டி அவளுக்கு அவன் மேல இருந்த நம்பிக்கைய தான காட்டுது? அப்படி இருக்குறப்ப அந்த நம்பிக்கை உடையுறப்ப அவ எவ்வளவு உடைஞ்சு போயிருப்பா?

தான் பெத்த பிள்ளைய வன்புணர்வு செய்ய துடிக்குற ஒரு ஜந்துகிட்ட இருந்து தன்னோட மகள காப்பாத்துற தாய்க்கோழி ஸ்தானத்துல அவ எவ்வளவு பதபதச்சு போயிருப்பா? நம்பி வந்தவன் சுயரூபம் தெரிஞ்சி அவன தன் கிட்ட அண்ட விடாம துரத்தி அடிச்சது அவ தப்பா? இதுல அவ தவிக்க விட்டான்னு ஒன்-இந்தியா பதறுது. அடப்பாவிகளா, தன்னை நம்ப வச்சு கூட்டிட்டு வந்ததோட இல்லாம, தன்னோட பெண்ணையும் அனுபவிக்க நினைக்குற எந்த மனுஷன் கூட தான் ஒருத்தி படுப்பா? வேற போக்கிடமும் இல்லாம, தன் பெண்களையும் காப்பாத்த அவன தான் இல்லாத நேரத்துல அவன வீட்டுக்குள்ள விடாம தன் பிள்ளைகள பாதுகாத்த அவ தப்பானவளா?

தவிக்க விட்டதால மதம் கொண்ட யானை போல இருந்தானாம் அவன் – am sorry one-india. இதுக்கு நீங்க ஒரு மஞ்சள் பத்திரிக்கை நடத்தலாம். ஆனா அதுல கூட தயவுசெய்து வக்கிரங்கள விதைச்சுடாதீங்க.

அவ அப்படி அவன் கூட போயிருக்கவே கூடாதுங்குற வியாக்யானங்கள் பேச நிறைய பேர் இருப்பாங்க. நான் எப்பவும் சொல்றது தான், தலைவலியும் திருகுவலியும் அவங்கவங்களுக்கு வந்தா தான் தெரியும். முதல்ல அடுத்தவங்க வீட்ல என்ன கிளுகிளுப்பு சமாச்சாரங்கள் நடக்குதுங்குறத எட்டிப்பாக்குறத விட்டுட்டு அவரவர் வேலைய பாத்தாலே போதும்.

ஏன்னா அந்த so called கிளுகிளுப்பு சமாச்சாரத்துக்கு பின்னாடி ஒரு மிகப்பெரிய வலி இருக்கலாம், ஒரு துரோகம் இருக்கலாம், ஒரு வயிற்று பசியாக இருக்கலாம், ஒரு எதிர்கால ஏக்கம் இருக்கலாம், வாழத் துடிக்குற ஒரு இதயம் இருக்கலாம்.

நாப்பது பேர் முன்னால நடந்த ஒரு கொலை ஏற்படுத்திய பாதிப்புல ஒரு கால்வாசி பாதிப்பு கூட இந்த நாலு பெண்கள் கொலை ஏற்படுத்தலையா? ஏன், இந்த நாலு பேருமே கிளுகிளுப்பு கதை எழுதவும் பத்திரிக்கை சர்குலேசன் ஏத்துற காரணகர்த்தாவா இருக்குறதுக்கு மட்டும் தான் லாயக்கா?

முதல்ல பத்திரிகைகள் ஒரு குறைந்தபட்ச பத்திரிக்கை தர்மத்தையாவது பின்பற்றணும். இந்த சம்பவத்த வெறுமனே நியூஸ்சா போட்ருந்தா கூட போதும், ஆனா அத விட்டுட்டு தங்களோட பத்திரிக்கை சர்குலேசனுக்காக பிணங்களை வைத்து கிளுகிளுப்பு தேடுற மனோபாவத்த ஒன்-இந்தியா மாதிரியான பத்திரிக்கைகள் நிறுத்தினா நல்லது. நாலு பேரை கொன்ன கொலையாளி நாலு பேரை தான் கொன்னான், பாலியல் வன்புணர்வு செய்தான். ஆனா அத பாலியல் கதைகளாக்கி மக்கள் மத்தியில உலவ விடுற இந்த மாதிரி பத்திரிக்கைகள் இன்னும் பல பேர் மனசுல நடந்த சம்பவம் நியாயமானதேங்குற மனோபாவத்த விதைச்சி பல கொலையாளிகள உருவாக்கி விடுது. அப்படியே இல்லாட்டாலும் சம்பத்தோட வீரியத்த நீர்த்து போக செய்யுது. இந்த மாதிரியான பத்திரிக்கை செய்திகள படிச்சுட்டு ஜஸ்ட் லைக் தட், த்தூன்னு துப்பிட்டு, இதெல்லாம் சகஜம்னு எடுத்துகிட்டு அவரவர் அவரவர் வேலைய பாக்க போய்டுறாங்க.

இந்தா, இத எழுதிட்டு நானும், படிச்சுட்டு நீங்களும் அவரவர் வேலைய பாக்கப் போற மாதிரி...





Sunday 19 June 2016

கானகன் - நாவல் ஒரு சிலாகிப்பு



சின்ன வயசுல நான் அப்பாகிட்ட அடிக்கடி கேக்குறது “எனக்கு யானை குட்டி, புலி குட்டி, சிங்கக் குட்டி எல்லாம் வாங்கி தாங்கப்பா. நான் அத எல்லாம் வளப்பேன்”ன்னு தான்.

எப்பவும் சேட்டை செய்துகிட்டு எதையாவது வம்பு பண்ணிக்கிட்டு நான் சீறிகிட்டு பாக்குறப்ப எல்லாம் “அவ கண்ண பாரு, அப்படியே புலியோட கண்ணு. சும்மாவா பொட்ட புலிலா அவ”ன்னு அம்மா சொல்லுவா.

வீட்டுக்கே அடங்காம தனி ராஜாங்கம் நடத்திட்டு இருந்த அப்பா யானையாம். அவர் புள்ள நான் புலி.

இருபது வயசோட தொடக்கத்துல எனக்கு நிறைய தேடல் இருந்துது. அது கிட்டத்தட்ட ஒரு அடங்காத தாகம் மாதிரி எனக்குள்ள தகிச்சுகிட்டே இருந்துச்சு. வாழ்க்கைல எனக்கு எல்லாம் கிடச்சதா எல்லோரும் சொல்லிக்கிட்டு இருந்த நேரம் என் மனசு அதையும் தாண்டி என்னவோ வேணும்னு சொல்லிகிட்டே இருந்துச்சு. இன்னிக்கு வரைக்கும் எனக்கு அது புரியாத புதிராவே தான் இருந்துட்டு இருந்துச்சு.

ஜெயமோகனின் “காடு” படிச்சப்ப கொஞ்சமாய் எனக்கு என்ன வேணும்னு புரிய ஆரம்பிக்க, லெக்ஷ்மி சரவணக்குமாரோட “கானகன்” அத எனக்கு முழுசா உணர்த்துன மாதிரி இருக்கு.

என்னோட சின்ன வயசுல என்னை தொடர்ந்து சில கனவுகள் தொரத்திகிட்டே இருந்துச்சு. ஒண்ணு, ஒரு பெரிய மாட்டுக் கூட்டம். அதோட கொம்புகள்ல நான் மாட்டிகிட்டு அலைக்கழிஞ்சுகிட்டே இருப்பேன். போக போக அந்த கனவு எனக்கு ரொம்ப பிடிச்சுப் போக, மாட்டு கொம்புல பயணம் பண்றது ஒரு சாகசம்ன்னு பெருமையா நினைக்க ஆரம்பிச்சேன். இன்னொன்னு, வீட்டை சுத்தி உலவுற காட்டு மிருகங்கள். நிஜத்துல அப்பாகிட்ட நான் வாங்கி கேட்ட விலங்குகளை எல்லாம் அப்பா கனவுல எனக்கு வாங்கி குடுத்தது. பயம் கலந்த பிரமிப்போட நான் அந்த விலங்குகள் மத்தியில வேடிக்கை பாத்துகிட்டே நிப்பேன்.

புத்தகங்கள கைல வச்சுகிட்டு அதோட வாசத்த முகர்ந்து பாக்குறது ஒரு தனி சுகம்னு இப்பல்லாம் எனக்கு புரிய ஆரம்பிச்சிருக்கு. கானகன் நாவல் படிச்ச உடனே என்னையறியாம அந்த புத்தகம் எங்கேன்னு கண் தேட ஆரம்பிச்சுது. எனக்கு அத வாசம் பிடிச்சு அந்த யானையையும் புலியையும் தழுவி கிடக்க ஆசை. ஆனா பாருங்க, என் துரதிஷ்டம், நான் படிச்சது pdfல. கானகனை வாசிக்க சொல்லி பரிந்துரைத்த நண்பனுக்கும் கேட்ட உடனே ஆன்லைன்ல பி.டி.எப். வாங்கி அனுப்பி வைத்த நண்பருக்கும் முதல்ல என் நன்றி. ஆனாலும் இன்னொரு தடவ அத புத்தகமா கைல வாங்கி தடவி பாக்கணும்.

என் வீட்டு விலங்குகள் பத்தின சுவாரசியங்களையும், அவைகளுக்கு இருக்குற உணர்வுகளையும் விவரிச்சு நான் விலங்குகளுக்கு நெருக்கமானவள்ன்னு சொன்னா சட்டுன்னு யாரும் அவ்வளவு எளிதா நம்பினது இல்ல. இவளான்னு புருவம் தூக்கி பாக்குறத உணர்ந்துருக்கேன். விலங்குகளை யாராவது வசியப்படுத்த முடியுமா? அதுகளுக்கு அவ்வளவு யோசிக்குற சக்தி இருக்கா? விலங்கு எப்பவும் விலங்கு தானே, நினச்ச நேரத்துல நாம வெட்டி சாப்பிடதானே அதெல்லாம் வளர்க்குறோம்னு கேப்பாங்க. எந்த விலங்கா இருந்தாலும் அதுக்கிட்ட பேச நமக்கு ஒரு பாஷை உண்டு. அது கண்களால பேசுற பாஷை. அத நாம எதுவுமே செய்ய மாட்டோம்னு அதுக்கு நாம குடுக்குற தன்னம்பிக்கை பாஷை. நான் உன்னை நேசிக்குறேன்னு சொல்ற பாஷை. அந்த உலகம் தனித்துவமானது, அத புரிஞ்சுகிட்டா கண்டிப்பா அதுல இருந்து மீண்டு வர மனசே வராது.

அப்படி தான் எனக்கு “கானகன்”னோட காட்டுக்குள்ள போயிட்டு மீண்டு வரவே முடியல.

இந்த நாவலுக்கு கிடைத்த விருது பத்தி எல்லாம் எல்லாரும் பேசிட்டு இருக்காங்க. எனக்கு அதுல சுவாரசியம் இல்ல. காரணம் நான் அது பத்தி எதுவுமே அறியாதவ. அதனால அதோட பெருமைகள் கூட எனக்கு தெரியாமலே போயிருக்கும். எனக்கு அதப் பத்தி எந்த கவலையும் இல்ல. ஆனா இந்த நாவல் எனக்குள்ள நிறைய கேள்விகள எழுப்பிச்சு. இந்த நாவல்ல வர்ற சில கதாபாத்திரங்கள் இப்படி எல்லோரும் இருந்துட்டா எத்தன நல்லாயிருக்கும்னு தோண வச்சுட்டே இருக்காங்க.

ஒரு இன மக்களோட வாழ்வாதாரத்த பத்தின நாவல் இதுன்னு பேஸ்புக்ல எங்கயோ ஒரு இடத்துல படிச்சேன். ஆனா அத பத்தி மட்டுமேயான நாவலா கண்டிப்பா எனக்கு தெரியல. இந்த நாவல் ஒரு இனத்த விவரிக்க கூடியதா இருக்கலாம், ஆனா அதையும் மீறி நிறைய விசயங்கள சொல்லிட்டு போகுது.

எனக்கு விலங்குகளோட வாழ்வியல பத்தியும் அதோட குணாதிசயங்கள பத்தியும் தெரிஞ்சுக்க பேராவல் உண்டு. இந்த நாவல் அந்த வகைல எனக்கு நிறைய தீனி போட்ருக்கு. விலங்குகளுக்கு உணர்வுண்டு. மனிதனை விட ஒரு தேர்ந்த வாழ்க்கை நெறியை வகுத்து அதுக்கு ஏத்தாற்போல வாழும் விலங்குகள உணர்வுகளே இல்லாத மனுசனால கண்டிப்பா புரிஞ்சுக்க முடியாது. இந்த நாவல்ல கதைமாந்தர்கள் வழியா விலங்குகள அழகா புரிய வைக்குறார் லக்ஷ்மி சரவணக்குமார்.

செனை மானை சுட்ட ஜெமீந்தார் முதல் கொண்டு இதுல வர்ற கதைமாந்தர்கள் ஒவ்வொருத்தரும் அவங்கவங்க பங்களிப்ப நிறைவாவே செய்துட்டு போய்டுறாங்க. காட்டையே தன்வசப்படுத்திய சடையனும், அவன் மகன் வாசியும் கூட எல்லாரையும் போல ஒரு கதாபாத்திரங்களா தான் வாழ்ந்துட்டு போறாங்க. காரணம், ஒவ்வொரு கதைமாந்தர்களையும் கதைக்கான அவங்களோட பங்களிப்பையும் அழகா செதுக்கி இருக்கார் நாவலாசிரியர். எனக்கு இதுல முரண்பட்டு தெரிஞ்ச விஷயம் தங்கப்பனோட குணாதிசயம். ஆரம்பத்துல ஒரு புலிய சுடுறப்ப அவனுக்கு வேட்டை மேல பெரிய ஆர்வம் இல்லன்னு சொல்லப்படுது. வேட்டை மேல இருந்த தாகத்தால தான் செல்லாயி அவன் கூட போனான்னு சொல்லப்படுது. கடைசில அவன் ஒரு கொடூரமான வேட்டைக்காரனா மாறிப் போயிடுறான். எது எப்படி இருந்தாலும் இந்த குழப்பம் எல்லாம் தூக்கி வீசப்பட வேண்டியவை. வீசியாச்சு.

அவ்வளவு மட்டும் தானா இந்த நாவல்ல இருக்கு. இல்லவே இல்ல. நாம பேசத் தயங்குற, ச்சீன்னு ஒதுக்குற விஷயங்கள் நிறைய இருக்கு இந்த நாவல்ல. அதுவும் ஒரு அழகியலோட! இது தான் வாழ்க்கை, இப்படி தான் வாழணும்னு நமக்கு பாடம் எடுக்குற மாதிரி.

ஒருத்தனுக்கு மூணு பொண்டாட்டினு சொல்றத வேணா இந்த சமூகம் ஏத்துக்கும். ஒருத்திக்கு ரெண்டு புருஷன்னு சொன்னா இந்த சமூகம் ஏத்துக்குமா என்ன?

பொண்டாட்டி மேல அளவு கடந்த ப்ரியம் வச்சிருக்குற சடையன், அவன் மேல அதே அளவு ப்ரியம் வச்சிருக்குற செல்லாயி அதை விட அதிகமா தங்கப்பன் மேல ப்ரியம் வைக்குறா. தங்கப்பனோட வாழ்ந்துட்டு இருந்தாலும் சடையனையும் அவ காதலிக்க தவறல. “உனக்கு ரெண்டு அப்பா”ன்னு பெருமையா தன்னோட மகள் கிட்ட அவ அறிமுகப்படுத்தி வைக்குறா. தங்கப்பன விட்டு விலகவும் முடியாது, அதே நேரம் சடயனையும் அவ கூட வச்சிருக்கணும்ங்குற அவளோட ஆசைக்கு ஒரு சபாஷ்.

மூணு பொண்ணுங்க ஒரு இடத்துல இருந்தா அங்க சண்டை வராம இருக்காது. ஆனா இங்க தங்கப்பனோட மூணு பொண்டாட்டிகளும் அவ்வளவு ஒத்துமையா இருக்காங்க. அதுவும் சடையனுக்கும் செல்லாயிக்கும் பிறந்த வாசி மேல தங்கப்பனோட மத்த ரெண்டு பொண்டாட்டிகளான மாரிக்கும் சகாயராணிக்கும் கொள்ளை அன்பு. இப்படி பட்ட குணாதிசயம் கொண்டவர்கள நாவல்ல மட்டும் தான் பாக்க முடியுமோ?

தங்கப்பன் கூடவே சுத்துற அன்சாரிக்கு தன்னை விட பலமடங்கு அதிக வயசுள்ள சகாயராணி மேல ஆசை. ஒரு கட்டத்துல சகாயராணி அன்சாரி கூட போக முடிவெடுத்து மாரி கிட்ட சொல்றப்ப, “நீயும் தான் இத்தன காலம் தங்கப்பனுக்கு மாடா உழச்சிட்ட, இனியாவது சந்தோசமா இரு”ன்னு அவ வழியனுப்பி வைக்குறா. “இப்பவும் நான் தங்கப்பன நேசிக்குறேன், ஆனாலும் நானும் மனுசி தானே”ன்னு சகாயராணி சர்வசாதாரணமா ஒரு கேள்விய வீசி விட்டு போறா. அன்சாரி கூட வாழ்ந்துட்டு தங்கப்பனுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகள்லயும் அவ கொறை வைக்கல.

அதே மாதிரி தான் இதுல வர்ற ஆண் கதாபாத்திரங்களும். சடையனுக்கும் செல்லாயிக்கும் பிறந்த வாசியை தன்னோட வாரிசா பாக்குற தங்கப்பன் ஆகட்டும், தான் நேசிச்ச பெண் தன்னோட அண்ணனை விரும்புறான்னு தெரிஞ்சதும் மனச தேத்திக்குற கட்டையனாகட்டும் எல்லாருமே இம்மியளவு கூட பிசகாம நம்ம மனசுல ஒட்டிக்கறாங்க.

சகாயராணிக்கும் அன்சாரிக்கும் இடைல ஏற்பட்ட உறவு தங்கப்பனுக்கு தெரியுமா தெரியாதான்னு நாவலாசிரியர் தெளிவுப்படுத்தல. ஆனாலும் அவனுக்கு தெரிஞ்சாலும் தன்னை ஒண்ணும் சொல்ல மாட்டான்னு சகாயராணி மூலமா உணர்த்துறார். அதே மாதிரி தான் தங்கப்பனுக்கு அன்சாரி மேல கரிசனம் அதிகமாகிப் போகுது. அன்சாரி இடத்துல சகாயராணிய பாத்துட்டு ஒரு புன்னகையோட கடந்து போறான்.

இங்க எத்தனை பேர் அடுத்தவங்க அந்தரங்கம் மேல ஆர்வம் காட்டாம இருக்கோம்? நமக்கு வேண்டியதெல்லாம் அடுத்த வீட்டு வம்பு தான். நீ இப்படி தான் இருக்கணும் அப்படி தான் இருக்கணும்னு ஆளாளுக்கு ஆலோசனைகள சொல்ல வந்துடுவாங்க. அவங்களுக்கு எல்லாம் செருப்படி குடுக்காமலே தன்னோட கதாபாத்திரங்கள் மூலமா யோசிக்க வச்சிருக்காரோ நாவலாசிரியர்ன்னு எனக்கு ஒரு கேள்வி வருது.

இங்க யாரும் யார் குடியையும் கெடுக்கல, யாரும் யாரையும் கட்டாயப்படுத்தல. அவரவருக்கு தேவையான வாழ்க்கைய அவரவர் வாழ்ந்துகிட்டே இருக்காங்க எந்த விதமான மன கசப்புகளுக்கும் இடம் குடுக்காம.

ஒரு விஷயம் சொல்லாம இருக்க முடியல, காடு நாவலோட கதாநாயகியான நீலி வெறும் கதாபாத்திரமா தான் என் கண்ணுக்கு தெரிஞ்சா. அவ ஒரு உயிருள்ள அழகு சிலை அவ்வளவே. அதனால தான் அவளோட முடிவு சட்டுன்னு இருந்தாலும் பெருசா மனச பாதிக்கல. ஆனா இங்க செல்லாயி, மாரி, சகாயராணி, குயிலம்மாள் மட்டுமில்லாம, வாசிய முதல் முதலா அனுபவிக்கும் ஜெமீந்தார் மனைவி, தங்கப்பன் தேடிப் போய் அவனை ஆளும் பெண்னு எல்லா கதாபாத்திரங்களும் நம்ம கூடவே வாழ்ந்துட்டு போய்டுறாங்க.

காதலும் காமமும் இல்லா வாழ்க்கை அர்த்தமற்றது. அந்த காட்டைப் போல அழகானவை. ரெண்டுமே கொண்டாடப்பட வேண்டியவை. துவேசிக்கப்பட வேண்டிய அவசியமே இல்ல.
......................................




பின்குறிப்பு: நாவல் வாசிக்க ஆரம்பிச்ச நேரம் எனக்கு நெருடியது எழுத்துப்பிழைகளும் அவசியம் இல்லாத இடங்கள்ல வர்ற முப்புள்ளிகளும். இதுல கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தா இன்னும் அதிகமா சந்தோசப்பட்டுருப்பேன்.