Thursday 10 January 2019

கடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை



கடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை
.....................................................
ஆசிரியர் சப்திகா
............................



முதல்ல கடலோடி கதைகள் எழுதின சப்திகாவுக்கு என்னோட வாழ்த்துகள். எழுதுறதுக்கு ஆர்வம் இருக்குற பலபேர் அத எழுதி புத்தகமாக்குற முயற்சியில ஈடுபடுறது இல்ல. சப்திகா அந்த ஆர்வத்த புத்தகமாக்கி இருக்கிறார். அந்த முயற்சிக்கு என்னோட பாராட்டுகள். ஒரு கதையை பத்து பதினஞ்சு பக்கம் எழுதி சிறுகதைன்னு சொல்றவங்க மத்தியில அறுபத்தி ஆறு பக்கங்கள்ல பத்து கதைகள குடுத்து சிறுகதைகள தன்னால திறம்பட எழுத முடியும்னு நிரூபிச்சு இருக்குறாங்க சப்திகா.

அதுமட்டுமில்லாம காலம்காலமா மக்கள்கிட்ட வாய்வழி புழங்கிகிட்டு இருக்குற கதைகள மீனவ மக்களோட வட்டார பேச்சு வழக்குலயே ஆவணப்படுத்துற அற்புதமான முயற்சியில ஈடுப்பட்டுருக்கார். முக்கியமா “போக்காளி குடும்பம்”த்தை சொல்லலாம். பேய், பிசாசு பூதம் பத்தியான கதைகள் காலாகாலமா நம்மோடவே உலவிட்டு வர்ற கதைகள். இப்படி மக்கள்கிட்ட இருக்குற நாட்டுப்புற கதைகளை ஆவணப்படுத்துறதுங்குறது பாராட்டுக்குரியது.

இனி கதைகள எடுத்துகிட்டா அது கிருஸ்தவ மத நம்பிக்கை கொண்டதாவும் அத உயர்த்தி பிடிக்குறதாகவும் அது மேல எழுத்தாளர் கொண்ட அதீத பற்றாவும் வெளிப்படுது. இது எழுத்தாளர் கிருஸ்தவரா இருக்குறது ஒரு காரணம்னா, இன்னொரு காரணம் குமரி மாவட்டத்துல மத அரசியல் மக்கள்கிட்ட அதிகமா செல்வாக்கு செலுத்துறது இன்னொரு காரணம். ஏன்னா ஒரு மதத்தை சார்ந்த ஒருத்தர் அவர் மதத்தை மட்டுமே சார்ந்து எழுதணும்னா மதம் தாண்டிய கருத்துகள் எதுவுமே வர முடியாது. ஆனா மதம் தாண்டிய கருத்துக்கள் தான் சமூகத்துல நல்ல விசயங்கள கொண்டு வருது.

எழுத்தாளர் சப்திகாவ பொருத்தவரைக்கும் அவர்கிட்ட மதம் சார்ந்த கருத்துகள் இருக்குறது எத குறிக்குதுனா குமரி மாவட்டத்துல மதம் சார்ந்த விசயங்கள் பெரிய அளவுல தாக்கம் செலுத்துறத குறிக்குது. அதை தாண்டிய பார்வை இன்னும் சப்திகாவுக்கு வரல.

ஒரு எழுத்தாளரோட கடமை என்னனா தான் காதால கேட்டது, தான் உணர்ந்தது, இத எல்லாத்தையும் மட்டும் மக்களுக்கு சொல்றது இல்ல. இதனால மக்களுக்கு என்ன பயன் வருது அப்படிங்குறதயும் சேர்த்து தான் எழுதணும். அப்படி எழுதலனா இவங்க ஒரு விசயத்த அப்படியே இன்னொருத்தருக்கு கடத்துறவங்களா மட்டும் தான் இருக்க முடியும். இதுவே எழுத்தாளர்ன்னு வரும் போது வெறும் அழகியலை மட்டும் சொல்லாம மக்களுக்கு அத பயனுள்ளதா மாத்துறதாகவும் இருக்கணும்.

இன்றைய சூழல்ல இந்தியாவும் தமிழ்நாடும் என்ன பிரச்சனைய எதிர்க்கொண்டுட்டு இருக்குதுனா மத பயங்கர வாதத்த எதிர்கொள்ளுது, கார்பரேட் கம்பனிகளோட நெருக்கடிகள எதிர்கொள்ளுது, இத அடிப்படையா கொண்ட சக்திகள் மக்கள்கிட்ட பண்ணிட்டு இருக்குற மோதல்கள எதிர்கொள்ளுது, முக்கியமா ஜாதி பயங்கரமா செல்வாக்கு செலுத்திகிட்டு இருக்கு, ஜாதிய அடிப்படையா கொண்டு அன்றாடம் கொலைகள் நடந்துட்டு இருக்க கூடியதா இருக்கு, இப்போ இருக்குற சமூக சூழல்கள், வேலை நெருக்கடிகள்னால குடும்பங்கள் சிதையுற போக்கு அதிகரிச்சுட்டு இருக்கு.

இந்த விசயங்கள மக்கள்கிட்ட கொண்டுப்போய் சேர்க்கணும், இந்த மாதிரியான சூழல்கள மக்கள் புரிஞ்சுக்கணும், புரிஞ்சுகிட்டு தங்களுக்கான வாழ்க்கைய ஒழுங்குப் படுத்திக்கணும்ங்குற அக்கறை பெரும்பாலான எழுத்தாளர்கள்கிட்ட இருக்கு. ஆனா அதே நேரத்துல குமரி மாவட்டத்துல அந்த சூழல் கம்மியா தான் இருக்கு. ஏன்னா குமரி மாவட்டம், அதோட விசேஷ தன்மை மதத்தை அடிப்படையா கொண்டிருக்குது. இங்க இருக்க கூடிய எல்லாமே வந்து மத தன்மையோட தான் இருக்குது. அது ஏழைகள் பணக்காரர்கள்னு இருந்தாலும் அப்படி தான் இருக்குது.

இதுக்கு காரணம் என்னன்னா பெரும்பாலும் இந்த மதங்கள் பாவ புண்ணியத்தையே தான் அடிப்படையா கொண்டு இயங்குது. புண்ணியம் செய்தவன் எல்லாம் பணக்காரனா இருப்பான், பாவம் செய்தவன் எல்லாம் ஏழையா இருப்பான்ங்குற எண்ணம் இருக்குறதால பணம் இருக்குறவன் அவனுக்கு துணையா இருக்குற கடவுளை தூக்கி பிடிக்குறதும் அந்த மதத்தை பரப்புறதும் இயல்பான ஒண்ணு. குமரி மாவட்டத்தை பொருத்தவரைக்கும் சர்சுகள், சர்சுகளோட சொத்துகள், பள்ளி, கல்லூரிகள் எல்லாமே மதத்தை வளர்த்து எடுக்குது. இந்த குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவங்களோட படிப்பு, வேலைன்னு வாழ்வாதாரத்துக்கு உத்திரவாதம் அளிக்கப்படுறதால மக்களும் மதத்தை கெட்டியா பிடிச்சுக்குறாங்க. அதனால தான் குமரி மாவட்டத்த பொருத்தவரைக்கும் அரசியல் அதிகாரத்த தீர்மானிக்குற இடத்துல கிருஸ்தவ மதத்துக்கு இருக்குது.

அப்படிப்பட்ட மதம் மக்கள்கிட்ட ஆழமா பிடிப்புகள ஏற்படுத்துறது தவிர்க்க முடியாதது. அந்த பிடிப்பு எழுத்தாளரையும் ஆட்டி வச்சிருக்குது. அவங்க கதைகள நாம வாசிக்குறப்ப கிருஸ்தவ நடவடிக்கைகள் எல்லாம் சரியானதாகவும், கிருஸ்தவ மதம் சொல்ற மூட நம்பிக்கைகள பெருமையாகவும் அதையே மற்ற மதங்கள் பண்ணுறப்ப அது மேல ஒரு அருவெறுப்போ இல்ல எள்ளலோ இருக்கக் கூடிய வகையில அது வெளிப்படுது. இது ஆரோக்கியமான போக்கு இல்லைங்குறது என்னோட கருத்து. சமூகத்துல பொறுப்பா எழுத வந்துட்டா மதங்கள் சொல்ற தவறான கருத்த உடைக்குறதா இருக்கணும்.

எழுத்தாளர் ஒரு பெண்ணா இருக்குறதால மதங்கள் சொல்லக்கூடிய கருத்துக்கள கெட்டியா பிடிச்சுக்குறாங்க. அதனால தான் வீட்ல மாமனார் மாமியார் என்ன பண்ணினாலும் அத சகிச்சுக்கணும், அவங்கள அனுசரிச்சு போகணும், அவங்கள சம்மதிக்க வைக்கணும், அவங்க சம்மதமில்லாம எதுவும் செய்ய கூடாது, சம்மதிக்க வைக்க என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு அவங்களால நினைக்க முடியுது. ஆனா இன்னிக்கி இருக்குற வாழ்க்கை முறையில ஒவ்வொருத்தரும் வெவ்வேற இடங்கள்ல ஓடி ஓடி உழைக்க வேண்டிய தேவை அதிகரிச்சுட்டு இருக்குறப்ப கூட்டுக் குடும்ப முறையினுடைய தேவை குறைஞ்கட்டு வருது.

இவங்களோட கதையில கூட்டுக்குடும்பத்துல ஏதோ ஒரு வகை புனிதம் இருக்குற மாதிரியும் அப்படி இல்லனா தங்களோட கவுரவம் குறைஞ்சி போயிடும்னு சொல்ற மாதிரியான தொனி வெளிப்படுது. எல்லா குடும்ப அமைப்பும் வாழ்க்கையோடு தான் இணைஞ்சி இருக்கும். வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட குடும்ப முறைன்னு எதுவும் கிடையாது. விவசாய குடும்பமா வாழ்ந்த காலங்கள்ல கூட்டு உழைப்பும் ஒத்துழைப்பும் அவசியமா இருந்துச்சு. இப்போ ஒவ்வொருத்தருக்கும் ஒரு விதமான படிப்பு, ஒரு விதமான வேலைன்னு இருக்குறப்ப எல்லாரும் ஒரே இடத்துல சேர்ந்து இருக்க முடியாது. அவங்களோட வருமானமும் வேற மாதிரி தான் இருக்கும். மாறுபட்ட வருமானத்த எல்லாரும் சேர்ந்து பகிர்ந்துக்குறது இப்போதைய சூழ்நிலைல சாத்தியப்படாது. ஏன்னா அந்தந்த வருமானத்த பொறுத்து தான் தங்களோட வாரிசுகள அவங்க தங்களோட தகுதிக்கேற்ப வளர்ப்பாங்க. இதெல்லாம் கூட்டுக்குடும்பத்த காலாவதியாக்கிகிட்டு இருக்குற முறை. ஆனாலும் இந்த கூட்டு குடும்ப முறை குமரி மாவட்டத்துல இன்னமும் நீடிக்குது. எல்லாரும் குறிப்பிட்ட எல்லைக்குள்ள சுருண்டுக்குறதும் அதிகமான வரதட்சணை வாங்குறதும் இங்க இருக்குறது. அதோட தாக்கம் தான் “மாமியார் தோரணை” கதைல வெளிப்படுது.

ஆவண படு கொலைகள், ஸ்டெர்லைட் பிரச்னை, மீத்தேன் ஹைட்ரோ கார்பன் பிரச்னை, இயற்கை சீரழிவு பற்றிய எழுத்துகள் குமரி மாவட்டத்துல பிரதிபலிக்குறது குறைவா இருக்கு. இங்க பெரும்பாலானோர் ஒரு வட்டத்துக்குள்ளயே இருக்குறோம். இன்னும் நாஞ்சில் நாடுங்குற ஒரு தனி ராஜ்யத்துக்குள்ள தான் இருக்குறோம். எழுத்தாளருக்கு தான் சார்ந்த சமூகத்தைப் பத்தி சொல்றதுல இருக்குற ஆர்வம் அதுல இருக்குற பிற்போக்கு எண்ணங்களையும் சேர்த்து பிரதிபலிக்குறது தான் யோசிக்க வைக்குது.

கடல் மீனவனுக்கு சொந்தமானது. மீனவர்கள் கடலுக்கு அதிபதியா இருந்தாங்க. ஆனா இன்னிக்கி பெரிய பெரிய முதலாளிகள் மீன்பிடியில செல்வாக்கு செலுத்த ஆரம்பிச்சுட்டாங்க. கடற்கரைகள் எல்லாமே சுற்றுலா தலங்களா, வணிக மண்டலமா மாற ஆரம்பிச்சிடுச்சு. மீனவ மக்களை அங்க இருந்து வெளியேற்றிக்கிட்டு இருக்காங்க. கடற்கரை பாதுகாப்பு சட்டம்ங்குற பெயர்ல கடற்கரை சார்ந்த வாழ்வாதாரம் அந்நியப்படுது. மீனவர்கள் துறைமுகத் திட்டம், அணுஉலை பூங்கா திட்டம் எல்லாம் மீனவர்கள் வாழ்க்கை முறைய அழிக்க கூடியது.

மீனவ மக்களிடமும் கிருஸ்தவ மக்களிடம் அன்பா இருக்குற எழுத்தாளர் பத்து கதைகளிலும் அவங்க பிரச்சனையை சரியா பேசலன்னு நினைக்குறேன். முதல் கதையான “கடலோடி” தவிர்த்து வேற கதைகள் எதுவும் சமூக பிரச்சனைகள பெருசா சொல்லல.

குமரி மாவட்டத்தை பொருத்தவரைக்கும் கிருஸ்த்தவ மதம் மீனவர்களோடு இணைஞ்சு இருக்கு. மீனவர்கள் சர்ச்சுகள நம்பித்தான் வாழ்க்கைய நடத்துறாங்க. அவங்களோட அதிகார மையமா சர்ச் இருக்குது. அதே நேரம் மீனவ மக்களுக்கு நிறைய பிரச்சனை இருக்கு. அணுஉலை தொடங்கி துறைமுகம் பிரச்சனைகள்ல இருந்து கடற்கரை பாதுகாப்பு மன்றம்ங்குற வகையில எல்லா இடத்துலயும் பிரச்சனை இருக்கு.

இந்த பிரச்சனைகள் எல்லாம் தீராததுக்கு காரணமும் இருக்கு. மீனவ மக்கள் குடும்ப பிரச்சனையையும் மீனவ சமூக பிரச்சனையும் தீத்து வைக்க சர்ச்சுகள தான் நம்புறாங்க. குமரி மாவட்டத்தில் கிருஸ்த்தவர்கள் அரச தீர்மானிக்குறதுல முக்கியமானவங்களா இருக்காங்க. அப்புறம் ஏன் இந்த பிரச்சனைகள் தீரல? ஏன்னா, சர்சுகள் சொத்துடைய நிறுவனங்கள். சொத்துடைய நிறுவனங்கள் அரசுடைய அங்கம். அரசு என்பதே சொத்துடைய நிறுவனங்களோட கூட்டதிகாரம் தான். அவங்க பிரதிநிதிகள் தான் செல்வாக்கு செலுத்துறாங்க. அதனால சர்ச்சுகள் அரசோட இணைஞ்சு தான் செயல்படும். மீனவர்கள பாதிக்குற எந்த விஷயத்தையுமே முழுசா தீர்த்து வைக்க முடியாத சூழல தான் சர்சுகள் உருவாக்கும். பணக்காரர்கள் பணக்காரர்களோட தான் சேருவாங்க. அதனால தான் பெரிய பெரிய மீன்பிடி நிறுவனங்கள் சாதாரண விசைப்பிடி படகுகள், கட்டுமரங்கள்ல தொழில் செய்றவங்களோட வாழ்வாதாரத்த அழிக்குறத கட்டுப்படுத்த முடியாத நிலைமை இருக்குது. நம்ம பிரச்சனைய நாமளே தீர்க்கணும்ங்குறது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி அதை மத்தவங்களோட சேர்ந்து தான் தீர்க்க முடியும்.

மக்களோட பிரச்சனையான நீட், ஜி.எஸ்.டி, பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு தொடங்கி, ஜாதி பிரச்சனைகள், கவுரவ கொலைகள்னு பல்வேறு பிரச்சனைகள் இருக்குது. ஆனா குமரி மாவட்டத்தை பொருத்தவரைக்கும் மதம் செல்வாக்கு செலுத்திட்டு இருக்குறது கவலையான விஷயம் தான். எல்லாத்தயும் கடவுளே தீர்ப்பார்ங்குற நம்பிக்கை இருக்குறதால இந்த பிரச்சனைகள சமூக பிரச்சனையாக எழுத்தாளர் சரியா புரிஞ்சுக்கல. தன்னோட “இரு மனம்” கதையில ரெண்டு வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் காதலிக்கும் போது “எங்களுக்கு எங்க மதம் முக்கியம்”னு மதத்தையே தூக்கிப் பிடிக்குறார். கடவுள்ங்குற இலக்கை அடைய எந்த பாதைல போனா என்னன்னு கேக்குற அதே சப்திகா காதலை விட மதம் பெரிசுன்னு சொல்ற கிருஸ்தவத்த பெருமையா பாக்குறார். மத பயங்கரவாதம் எப்படி மக்களிடையே செல்வாக்கு செலுத்திக்கிட்டு இருக்குங்குறதும் அவருக்கு புரியல.

அதே மாதிரி பாத்த உடனே ஒரு தெய்வீக காதல்ல விழ முடியும்ங்குற நம்பிக்கையும் அவருக்கு இருக்கு. தோற்றத்தை பாத்து ஒரு நொடியில வரக் கூடிய கவர்ச்சி எப்படி காதலாக முடியும்? இந்தக் கதை இன்னமும் குமரி மாவட்டத்துல தோற்றம் சார்ந்த கவர்ச்சி மிச்சம் இருக்குறத எடுத்துக் காட்டுது. இரண்டு மனங்களோட புரிதல் தான் உறுதியான காதலா பரிணமிக்க முடியும்.

இதையெல்லாம் உற்று நோக்க வேண்டியது எழுத்தாளர்களோட கடமை. சப்திகா இப்போ தான் எழுத தொடங்கி இருக்காங்க. அவங்களோட வளர்ச்சிங்குறது இந்த பிரச்சனைகள எல்லாம் உற்று நோக்குறது மூலமா தான் இருக்க முடியும். கிருஸ்தவ மத பின்புலம், மீனவ மத பின்புலத்த தாண்டி இந்த சமூகத்தோட அனைத்து மக்களோட பிரதிநிதியா இந்த எழுத்தாளர் வளரணும். அதுல இருந்து விசயத்த பாக்கணும்.

மக்கள்கிட்ட இருக்கக் கூடிய கதைகளையும் மக்கள்கிட்ட இருக்குற சாதாரண பிரச்சனைகளையும் வெளிப்படுத்த தெரிஞ்ச சப்திகாவுக்கு மக்கள்கிட்ட செல்வாக்கு செலுத்தக் கூடிய பிரச்சனைகள புரிஞ்சிகிட்டா அதையும் சிறப்பா வெளிப்படுத்த முடியும். அந்த ஆற்றல் சப்திகாவுக்கு இருக்குது. அவங்களோட கண்ணோட்டம் விரிவடையணும், ஒரு நல்ல படைப்புகள் அவங்ககிட்ட இருந்து வரணும், அது மீனவ மக்களுக்கு மட்டுமில்லாம எல்லாருக்கும் பயன்படணும். ஒரு சமூகத்துக்கான இலக்கியம்ங்குறது மற்ற சமூகத்தையும் ஆட்கொள்றதா இருக்கணும். அந்த வகையில அவங்களுக்கு அந்த திறமை இருக்குது. அது வளரணும்னு வாழ்த்துறேன்.

Saturday 5 January 2019

பெண்ணியத்துக்கு அளவு கோல் இருக்கா?



மதத்தை கடந்து வராத வரைக்கும் என்ன தான் பெண்கள் முற்போக்கு பேசி திரிஞ்சாலும் வீண் தான். எந்த மதமும் பெண்களுக்கு துணையா நிக்குறது இல்ல. மாறா அவள தெய்வமாக்கி, தியாகியாக்கி, புனிதமாக்கி காலடியில கிடக்க வைக்குது.

ஜாதி இன்னும் வெறி கொண்டு அவள் உணர்வுகள, உரிமைகள தட்டிப்பறிக்குது. கவுரவ கொலையும் பண்ணுது. 

ஆனா இந்த பெண் அடிமைத்தனமும் பெண்ணியமும் ஒரே அளவுகோலோட எல்லா பெண்களுக்கும் இருக்குதா?

மதங்கள் ஜாதிகள் அடுத்து பெண்களோட அடிமைத்தனத்துக்கு முக்கிய காரணியா இருக்குறது சொத்துக்கள். சொத்துள்ள எந்த பெண்ணும் அந்த சமூகத்துக்கும், குடும்பத்துக்கும் அடிமையாகி போறா. சுய முடிவுகள் எடுக்க முடியாதபடி அவள முதலாளித்துவ வர்க்கம் சொத்துக்காக அடிமைப்படுத்துது.

ஆக, மதங்களை கடக்குறது மட்டுமில்லாம பொருளாதார விடுதலையும் ஒரு பெண் அடையணும். இங்கயும் பொருளாதார விடுதலைங்குற வார்த்தையோட அளவுகோல் பெண்ணுக்கு பெண் மாறுபடுது.

சொத்துள்ள பெண் தன்னோட பொருளாதார விடுதலையா பெரிய பெரிய கார்பரேட் கம்பனிகள்லயும், அரசாங்க அலுவலகங்கள்லயும், தனியார் நிறுவனக்கள்லயும் உடல்வலி இல்லாத வேலையையே கவுரவமிக்க வேலையா எண்ணுறா. அதனால அவளால மனசளவுல திருப்தி அடைய முடியல. இதுவே உழைக்கும் வர்க்கத்த சார்ந்த பெண் ரொம்ப சுலபமா தனக்கான பொருளாதார தேவையை உடல் உழைப்பு மூலமா தீர்த்துக்குறா. அவளுக்கு கவுரவம் ஒரு பொருட்டல்ல, தன்னோட சுய மரியாதை மட்டுமே அவளோட இலக்கு.

என் உடல் என் உரிமைங்குற முழக்கம் சொத்துடமை பெண்களோட கண்ணோட்டத்துலயும் உழைக்கும் பெண்களோட கண்ணோட்டத்துலயும் மாறுபடுது. தன்னோட பொருளாதார தேவைக்காக ஒரு ஆணை சார்ந்திருக்கும் சொத்துடைய பெண் தன்னோட வசதி வாய்ப்புக்காக ஒருத்தனோட வாழ்ந்துகிட்டு என் உடல் என் உரிமைங்குற முழக்கத்த பிற ஆண்களோட உறவு வச்சுக்குறது மூலம் நிறைவேத்திக்க நினைக்குறா.

தனக்கான சொத்தை தைரியமா கேட்டு வாங்குற தைரியம் அவளுக்கு இருக்காது. மாறா, தன் மேலான சுய அனுதாபத்தையும் கழிவிரக்கத்தையும் ஆயுதமா பயன்படுத்த நினைப்பா. அப்படியே ஒரு உறவு முறிவை சுலபமா கையாண்டு மீண்டு வரது சொற்பமான பேர் தான்.

இதுவே உழைக்கும் பெண் உறவு முறிவை சுலபமா கடப்பா. என் உடல் என் உரிமைங்குற முழக்கம் அவளை பொருத்தவரைக்கும் சேர்ந்து வாழ இயலாதவனை தூக்கி எறிஞ்சுகிட்டு மனசுக்கு பிடிச்சவனோட அடுத்த வாழ்க்கையை நோக்கி நகர்தல். அவளுக்கு யாரையும் அண்டிப்பிழைக்க அவசியம் இருக்காது.

இங்க பெரும்பான்மையான சமூகம் உழைக்கும் வர்க்கம் தான். ஆக, அடுத்து பெண்கள் நகர வேண்டியது அரசியல்.

இதுவும் சொகுசு அடிமைத்தன வாழ்க்கை பழகிப்போன சொத்துடைய பெண் வீதிக்கு வந்து தன்னோட உரிமைக்காக போராட தயங்கவே செய்வா. அதுவே உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பெண் சுலபமா வீதிக்கு வந்து தன்னோட உரிமைக்காக போராடுவா.

என்னதான் சொத்துடைய சமூகப்பெண் உரிமைக்காக போராட தயங்கிவான்னு சொன்னாலும் படிச்சி, சமூக அறிவு பெற்று பல்வேறு மக்கள பாக்குற வாய்ப்பு அவங்களுக்கு இருக்கு. உழைக்கும் வர்க்கத்தோட பெண்கள் பிரச்சனை பெருசா, சொத்துடைய பெண்கள் பிரச்சனை பெருசான்னு அலச வேண்டியது வரும். அதனால போராட்டத்துக்கு வர்ற சொத்துடைய பெண்ணுக்கு முன்னால ஏகப்பட்ட சவால்கள் காத்துக்கிட்டு இருக்கும்.

அவங்க முன்னாடி பொதுவா எல்லா பெண்களோட பிரச்சனையையும் எடுத்து போராடுறதா, இல்ல தான் சார்ந்த சொத்துடைய பெண்களோட பிரச்சனை மட்டுமே பெண்கள் பிரச்சனைனு நம்பிட்டு இருக்குறதாங்குற கேள்வி முன்னால நிக்கும்.

தான் சார்ந்த சொத்துடைய பெண்களோட நலன் மட்டுமே பெருசுன்னு நினைக்குற பெண்கள் இந்த போராட்டத்துல தடுமாறுறாங்க. பெரும்பான்மையான பெண்களுக்கு என்ன பிரச்சனைனு யோசிக்குறவங்க சரியான இடத்த நோக்கி நகருறாங்க.

இப்படி, இந்த சவால்கள எதிர்கொள்ளாம பெண்ணுரிமைனு ஒண்ண தீர்க்கமா கண்டறிய முடியாது.

ஆக இங்க போராட்டம்ங்குறது மக்களோட மக்களா இணைந்து தான் செய்ய முடியும். பெண்ணுரிமை புரிஞ்சுக்க நாம எல்லா வர்க்கத்து பெண்களையும் புரிஞ்சுக்கணும்.

ஜாதி கடந்து, மதம் கடந்து, வர்க்கம் கடந்து, சுய சார்புள்ள அரசியல் படுத்தப்பட்ட பெண்ணே நமக்கு தேவை.