Friday 30 November 2012

பித்துக்குளி மனம்...!

நடுநிசி தாண்டி நீண்டுக் கொண்டிருக்கிறது
உனக்கும் எனக்குமான ஊடலும் கூடலும்...!

சுவற்று பல்லியின் தடதடக்கும் சத்தம்
என்னை அரைமயக்கத்திலிருந்து விடுவிக்க செய்கிறது...!

உன்னைப்பற்றிய நியாபகங்கள்
தெளிவில்லாத புகைமூட்டமாய் என்னை சுற்றி
என் மூச்சு திணறவைத்து வேடிக்கை காட்டுகின்றன...!

நீ யார்? எப்படிபட்டவன்? எங்கிருக்கிறாய் நீ?
உன் குணம் தான் என்ன?
நல்லவனா? கெட்டவனா?
இதுவரை நான் யாதுமறியேன்...!

எங்கிருந்து வந்து
திடீரென என் மன சஞ்சலத்துள்
முழுதாய் நிறைத்துக்கொண்டாய்?

என்னை உன்னிடத்தில் ஈர்த்தது என்ன?
யோசித்து யோசித்துப் பார்க்கிறேன்...
விடைகள் சிறிதும் இரக்கமின்றி
தலைக்குள் தட்டாமாலை சுற்றுகின்றன...!

உன்னை பற்றிய நியாபக அலைக்குள்
வெறுப்புகளே அதிகம் மண்டிக்கிடக்கின்றன...!
பிடிக்கவில்லை என்று சொல்ல
ஆயிரம் காரணம் தெரிந்த எனக்கு
உன்னை நேசிக்க காரணமே இல்லாமல் போனதேனோ?

விருப்பக்காரணங்கள் ஏதுமின்றி
உன் இதயச்சுவரை உரசிப்பார்த்தவன்
எப்படி நானாயிருக்க முடியுமென்று
கேள்விகள் கேட்டுத்துளைத்தெடுக்கிறாய்...!
உன்னால் மீண்டும் கீறப்பட்டு ரணமான மனதில்
அதிகமாகவே இன்னும் வியாபிக்க துவங்குகிறாய்...!

யார் “டீ” போட்டு அழைத்தாலும்
அவர்களுடன் கலிங்கப்போர் நடத்தும் நான்,
அதை உச்சரிக்காத உன் உதடுகளை வெறுக்கிறேன்...!

“எங்கடி போயிட்ட” என்ற
உன் தவிப்பில் காதல் உணரும் நான்,
“சொல்லுங்க” என்ற உன்
மறுவார்த்தையில் மிரண்டு தான் போகிறேன்...!

என்னை தவிக்கவிடுவதன்
காரணங்கள் கேட்டாலும் சொல்லுவதில்லை
“இவன் இப்படித்தான்” என
உதடு பிதுக்கி கைகள் விரிக்கிறாய்...!

விரித்த உன் கைகளுக்குள்
அடைக்கலம் தேடி நான் தவித்திருக்க...
மறுபடி “வாடி என் தங்கமே” என அணைத்துக்கொள்கிறாய்...!

மனக்கண்ணாடியில் உன்னை நான்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்...
என்னைப் பற்றிய உன் எண்ணம் என்னவென கேட்கிறாய்...!
“உன்னை எனக்கு பிடிக்கவில்லை
அதை விட அதிகமாக பிடித்திருக்கிறது”
பித்துக்குளியாய் பிதற்றிக்கொண்டிருக்கிறேன் நான்...!

Saturday 17 November 2012

பயமறியா விடியல்...!


எங்கோ ஒலிக்கும் ஒரு ஈனஸ்வரம்
மயிர்க்கூச்சரிய செய்கிறது...!
உயிர் நேசம் வேண்டும் குரல்கள்
திசையறியா வகையில் தோன்றி பரிதாப முகம் காட்டுகின்றன...!

வெள்ளையுடுப்பு தேவதைகள் விரைந்துக் கொண்டிருக்கிறார்கள்...
கால்களில் சிறகு பூட்டி...!
அவர்களின் வேகம் மிஞ்சி
தடதடவென கடந்து செல்கிறது சக மனிதனின் உயிர்...!

க்ரீச்சிடும் ஸ்ரெச்சர் சத்தத்திலும் தொலைந்து போன
என்னையே தேடிக் கொண்டிருக்கிறேன் நான்...!
தனிமை புதிதில்லையென்றாலும் குறுகலாய்
கட்டப்பட்ட கைகள் என் மார்பு கூட்டுக்குள்
பாதுகாப்புத் தேடி அலைகின்றன...!

என்னை பற்றிய தேடல் ஒன்றில்
எனக்குள் இருக்கும் நான் விழித்துக்கொள்கிறேன்...!
நான் யார்? எதற்காக பிறந்தேன்?
என்ன சாதித்தேன்? என்ன சாதிக்கப் போகிறேன்?
நிச்சயித்து விட்ட பயணத்தில் தொக்கி நிற்கும் கேள்விகளாய் இவைகள்...!

செல்லும் பாதையின் தூரமோ அறிந்திட இயலாது...
ஆனால் பயணிக்கும் ஒவ்வொரு அடியிலும்
டெட்டால் வாசம் மீறிய ஆன்காலஜி வார்டுக்குள்
புன்னகை பூக்களை விதைத்துச் செல்லவே ஆசைப்படுகிறேன்...!

நாளை விடியாமல் போய் விடுமோ
என்று பயந்தே கண்விழித்திருக்கும் கண்கள் மத்தியில்
விடிந்து விட்டதாய் ஆதவனும் திரைசீலை விலக்கி
அறிவித்துவிட்டு போகிறான்...!

என் விடியல் வெளியே காத்துக்கொண்டிருக்க...
அதைநோக்கி மெதுவே அடியெடுத்து வைக்கிறேன் நான்…!


Monday 12 November 2012

நீயாகி போகின்றாய்...!

என் சிந்தைக்குள் சல்லி வேறாய் 
புகுந்தென்னை சுக்குநூறாய் உடைத்தவனே ..
உன் ஆணிவேராய் வீற்றிருந்தேன்,
அறியாமல் நீ போனதேனோ?

சலனித்தறியாத தெளிர் நீராய்
நானிருந்தேன்... குட்டைக்குள் புகுந்து விட்ட
களிர் ஒன்றாய் சஞ்சலத்தை புகுத்தி விட்டாய்...!

வண்ணத்து பூச்சியென
வான்வெளியில் பறந்திருந்தேன்...
தேன் சுவைக்கும் வண்டாகி
என் இறகுகளை சிறையெடுத்தாய்...!

கற்றாழை காட்டுக்குள்ளே
வழிதெரியாமல் தவித்திருந்தேன்...
கட்டுவீரியன் புகுந்ததுபோல்
புகுந்தென் கண்கள் கவர்ந்து கொண்டாய்…!

பாலைவனம் நடுவே
பாவை என் முகம் நோக்கி
புழுதி காற்றை இறைத்து விட்டு
வெண்சாமரமும் வீசுகின்றாய்...!

வெள்ளை புறாவென உன்னை சரணடைய
பறந்தே வந்த என்னை...
போர்முனையில் நிற்க வைத்து
வேடிக்கை காட்டுகிறாய்...!

காரொன்று பொழிவது போல் 
பொழிந்து விட்டு
கானல் அதுவென 
காதோரம் கிசுகிசுக்கிறாய்...!

வார்த்தை ஜாலத்தால்
வான் முழம் அளப்பவனே...
என்னையே இழந்து நிற்கிறேன்
உன்முன் நிராயுதபாணியாய்...!

சில்லிட வைக்கும் தூறலாய் நான் சிலிர்ப்பதாகட்டும்
வெந்தணல் மேனியாய் நான் துடிப்பதாகட்டும்
எல்லாவற்றிக்குமான காரணகர்த்தா
நீயே... நீயேயென எங்கும் நீயாகி போகின்றாய்...!

Saturday 10 November 2012

புன்னகை மறந்த தருணங்கள் ...!

இரவின் நீளம் நீண்டுக் கொண்டே போகிறது
என்னை பற்றிய உன் நினைவு
தொலை தூரம் போய் விட்டதால்...!

‎"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""''தொல்லை பேசியாய்" தொலைபேசி,
உன் அழைப்பு இன்றி…
முள் படுக்கையில் தவம் செய்கிறது…!

லெட்சியமில்லாத வாழ்க்கை ஒன்றை
உன் பாராமுகம் பரிசளித்து
கிங்கரனாய் சிரிக்கிறது…!

மழலை விட்டொழிந்த பந்தைப்போலே
என்னை நீ விட்டெறிந்து சென்று விட்டாய்...!
நானோ சிறகொடிந்த பறவையொன்றாய்
போக்கிடமின்றி தவிக்கிறேன்...!

நீயில்லாத கனவுகள் வெற்று காகிதம் போல...
கிறுக்கபடாத உன் நினைவுகள் அங்கே
செதுக்கி செல்கிறது என் இதயத்தை...!

பேசவே தெரியாமல் என் மவுனங்கள்
உன்னோடு பேசிக்கொண்டிருக்கின்றன...!
உன்னோடு கைகோர்த்த தருணங்கள்
இன்னும் விலகாமல் பிசிறாய் நினைவில்...!

வசந்தத்தில் ஓர் நாள் அடித்தோய்ந்த
புயலாய் நீ... என் நினைவுகள் புகுந்து
இளமை வதம் செய்கிறாய்...!

ஆர்ப்பரிக்கும் ஆழிப்பேரலையாய் நீ...
ஆக்ரோஷ அலைகளின் நடுவே
சன்னமாய் ஒலிக்கிறது என் விசும்பல்...!

உனக்கான என் சோகங்களை
சிறு புன்னகையுடனே கடந்து செல்கிறேன்...!
இட்ட மை இட்டபடி இருக்க
கரைகிறது என் கண்ணீர் உனக்காக...!

Friday 9 November 2012

கோர்க்கத்துடிக்கும் ஆசைகள்...!

சுகமும் துக்கமும்
கலந்து விரைகின்ற மேகக் கூட்டத்திற்கிடையில்
துருவ நட்சத்திரமாய் நீ...!

அர்த்தமற்றதாய் கழிந்து செல்லும் நாட்காட்டியில்
உன் நினைவுகள் மட்டும்
ஏதோ ஒரு அர்த்தத்தை
கற்பித்துக் கொண்டிருக்கிறது...!

காற்றின் மெல்லிய உணர்வுகளோடு
உன் வாசம் தாங்கிய நினைவுகள்
என்னில் கண்ணாமூச்சி ஆடி
தோற்றுபோய் வெளிப்படுகிறது...!

சட்டென பெருமழையொன்று அடித்துவிட்டு
ஓய்ந்தது போல்
கனவுக்குள் நீ தோன்றி புன்சிரிப்பை தந்து விட்டு
கண்மணிக்குள் மறைந்து கொள்கிறாய்...!

பல நேரங்களில்
என் நெற்றிப்பொட்டில்
பதியப்படும் ஈரங்களில் தான்
உன் மொத்த அன்பும்
கொட்டிக் கிடக்கிறது...!

நீ பேசிய வார்த்தைகளை கோர்க்க நினைக்கிறேன்...
சடசடவென உதிர்ந்தே விடுகிறது
சற்றும் ஈரமில்லாமல்.....
மனம் மட்டும் குதூகலமாய்...!

காத்திருக்கிறேன்....
காத்தே கிடக்கிறேன்...
காதோரம் உன்னிடம் ரகசியம் சொல்ல...!


காத்திருக்கும் விடியல்...!

எட்டிப்பார்க்கும் சூரியனை கண்டு
கீழ் வானம் சிவந்திருக்க
கொண்டை சேவல் ஒன்று
துயில் கலைந்து கொக்கரித்த
இளம் குளிர் போர்வைக்குள்ளே
கனா ஒன்று கண்டேனடா...!

தெருவெங்கும் மாவிலை தோரணங்கள் நீண்டு வர,
தென்னை மரங்கள் தாளத்தோடு வரவேற்க
பெண்பார்க்க நீயும் வந்தநாள் அந்நாளடா...!

சீர்வரிசை தட்டுகள் இடைநிற்க
பெண்டுகள் உன்னை வழிகாட்ட
கதவிடுக்கின் ஓரம் நின்று இரகசியமாய்
உன்னை நானும் முழுதாய் ரசிக்கிறேனே...!

ஆவல் மின்னும் கண்களோ
உன்னை அள்ளி அள்ளி பருகிய பின்னும்
மேலும் மேலும் தாகம் திணித்து மருகியே நின்றதடா...!

மன்மதனின் பார்வையொன்றை இரகசியமாய்
என்னிடத்தில் நீ வீசி, உயிர் வதைத்த நொடி
உன்னை என்னில் கொண்டேனடா...!

வார்த்தைகளின்றி நானும் தடுமாற
நீயோ கண்கள் வழி கவி பேசி
குறுநகை ஒன்றில் என்னை வீழ்த்திவிட்டு
வேடிக்கையாய் நகைக்கிறாய்...!

அடுத்த மாதம் ஆடியாமே?
ஆவணியில் தேதி வைக்க
அவசரமாய் தாக்கல் ஒன்றை
இப்பொழுதே சொல்லி விடு...!

முந்தி வரும் கார்த்திகையோ
பிந்தி வரும் தை மாதமோ
மணநாளை நீட்டிவைத்து
உன்னோடு என் வாழ்நாளை 
தேய்ந்து போக வைக்காதே...!

உனக்கென்ன? வருகிறேன் என
முற்றத்து மையத்தில் நின்று
சைகை மொழி செய்தியொன்றை
நவிச்சியமாய் நவின்று விட்டு
ஊர்வலத்தில் தேராக
அசைந்தே சென்று மறைந்து விட்டாய்...!

நானல்லவோ வாசல் வழி
உன் பிம்பம் காண்பேனென
நிதம் நிதம் விழி நோக
பார்த்துக்கொண்டே தேய்கிறேன்...!

முறை சோறு ஆக்கிப்போட 
முறைமாமன் வந்து நின்றான்...
சுற்றத்தார் விருந்தோம்பலில்
உண்டு களித்த மயக்கத்திலும்
துரும்பாய் நான் போனேனடா...!

கரம் பற்றி என்னை நீ கரைசேர்க்கும் நாளுக்காய்
நாணம் ஒன்றே நகையாய் பூட்டி
நாயகி நானும் கனகாலம் காத்திருக்கிறேன்...!

ஆடி முடிந்து ஆவணியும் தவறாமல்
வந்து கொண்டே தானிருக்கிறது...! 
என்றோ நீ வருவாய்...! கனவில்லை நிஜம் தருவாய்...!


Thursday 8 November 2012

கனவுக்கு உயிர் கொடு...!

கரம் பற்றி அக்னி வலம் வந்து
என் வாழ்க்கை உள்வட்டதுள்
புகுந்து விட வரமொன்று கேட்பவனே...!

உன்னிடத்தில் நான் கேட்க
வரமொன்றும் வசமில்லை, மாறாக
வாழ்க்கையொன்று உள்ளது...!

எப்படி பட்ட வாழ்க்கை என
என்னோடு பயணித்து அறிந்து கொள்ள
வருகிறாயா?

வா....!

அதோ பச்சையம் இழந்து விட்ட
புதராய் மண்டிய நிலமொன்றை
ஆடுகள் மேய்கின்றனவே...!
அதை தாண்டிய எச்சில் காடுகள்
மிச்சமாய் நம்மை வரவேற்கின்றன...!

அங்கே…

பொறாமை சூழ்ந்த கண்கள் இல்லை...
புறம் பேசும் உதடுகள் இல்லை...
பொய்மை உரசும் செவிகள் இல்லை...
வஞ்சனை நினைக்கும் இதயமில்லை...

ஆதலால்...

மனித சஞ்சாரமற்ற அந்த அத்துவான
கானகதுள் புதிதாய் நம் சந்ததியொன்றை
ஆணிவேராய் பதியம் செய்வோம்...!

ஆம்...!

சுயம் ஒன்றை தொலைத்து விடா
சுயம்பு லிங்கங்களாய் அவர்கள்...!

மரித்து விட்ட மனிதம் அறியா
மகத்துவ மானிடராய் அவர்கள்...!

மோகன்ஜாதாரோ எல்லோரா மிஞ்சிய
நாகரீக பகலவனாய் அவர்கள்...!

அவர்களோடு...

சிந்துவெளி நாகரீகத்தின் ஆற்றுப் படுகையின் மேல்
மதங்களில்லா புது உலகை ஸ்ரிஸ்டிப்போம்...!

நான், எனது, மட்டுமில்லாது நாம் நமது என்ற
வார்த்தை பிரவாகங்கள் தாண்டிய
புத்தம்புது சிந்தனையை விதைப்போம்...!

பகிர்ந்தளிக்கும் விதியினை பிரபஞ்சம் தாண்டி
பரப்பி விட செய்வோம்...!

அடக்குமுறைகளும் ஆளுமைகளும்
பயணித்தறியா புதிய பாதையொன்றில்
தேசம் கடந்து நேசம் பரப்ப செய்வோம்...!

இவையெல்லாம்...

நடந்தேற இயலா கனவுகளாய் மரித்தே போகுமென
கூச்சலிடும் மானிடர் மத்தியில்

நான்...

நாளைய விடியலை காண்கிறேன்
உந்தன் துணையோடு...!