Monday, 12 November 2012

நீயாகி போகின்றாய்...!

என் சிந்தைக்குள் சல்லி வேறாய் 
புகுந்தென்னை சுக்குநூறாய் உடைத்தவனே ..
உன் ஆணிவேராய் வீற்றிருந்தேன்,
அறியாமல் நீ போனதேனோ?

சலனித்தறியாத தெளிர் நீராய்
நானிருந்தேன்... குட்டைக்குள் புகுந்து விட்ட
களிர் ஒன்றாய் சஞ்சலத்தை புகுத்தி விட்டாய்...!

வண்ணத்து பூச்சியென
வான்வெளியில் பறந்திருந்தேன்...
தேன் சுவைக்கும் வண்டாகி
என் இறகுகளை சிறையெடுத்தாய்...!

கற்றாழை காட்டுக்குள்ளே
வழிதெரியாமல் தவித்திருந்தேன்...
கட்டுவீரியன் புகுந்ததுபோல்
புகுந்தென் கண்கள் கவர்ந்து கொண்டாய்…!

பாலைவனம் நடுவே
பாவை என் முகம் நோக்கி
புழுதி காற்றை இறைத்து விட்டு
வெண்சாமரமும் வீசுகின்றாய்...!

வெள்ளை புறாவென உன்னை சரணடைய
பறந்தே வந்த என்னை...
போர்முனையில் நிற்க வைத்து
வேடிக்கை காட்டுகிறாய்...!

காரொன்று பொழிவது போல் 
பொழிந்து விட்டு
கானல் அதுவென 
காதோரம் கிசுகிசுக்கிறாய்...!

வார்த்தை ஜாலத்தால்
வான் முழம் அளப்பவனே...
என்னையே இழந்து நிற்கிறேன்
உன்முன் நிராயுதபாணியாய்...!

சில்லிட வைக்கும் தூறலாய் நான் சிலிர்ப்பதாகட்டும்
வெந்தணல் மேனியாய் நான் துடிப்பதாகட்டும்
எல்லாவற்றிக்குமான காரணகர்த்தா
நீயே... நீயேயென எங்கும் நீயாகி போகின்றாய்...!

2 comments: