Wednesday 26 December 2012

சங்கமிக்கும் பார்வைகள் (கடற்காதல் ) ...!

நினைவிருக்கிறதா உனக்கு?
பாய்மர கப்பல்கள் அணிவகுத்த நாள் ஒன்றிலே
உனக்கும் எனக்குமிடையில் நடந்த பார்வை பரிமாற்றங்கள்?

வேடிக்கை மும்முரத்தில் தோழிகள் பின்தங்க
எற்பாடு பொழுதிலே தனித்து விடப்பட்டு
தவிப்போடு தயங்கியே நானும் நடந்து வந்தேன்…!

துவைத்தறியா மேலாடை ஒன்றும்,
தலையிலே முண்டாசுமாய் நீ…

உன்னோடும் உன் வலையோடும் மோதிப்பார்த்து
வென்று விட்ட சுறா ஒன்று விட்டுச்சென்ற மிச்சங்களை
பொறுக்கி வலையென பின்னிக்கொண்டிருந்தாய்...!

என் சலங்கை ஒலியிலே கவனம் கலைந்து
இழையொன்று தவறிவிட
சுருக்கென கோபக்கனலை என்மீது வீசி நின்றாய்...!
ஒன்றுமறியாத நானோ என்னவோ ஏதோவென பதறித்தவிக்க
என் கண்களில் உவர்நீர் எட்டிப்பார்த்தது...!

என் கண்ணீர் கண்டதாலோ என்னவோ நானறியேன்,
வருணன் மழை அள்ளிச் சொரிந்தான்... நானோ
உன் முன் முழுதாய் நனைந்து நின்றேன்...!

ஒற்றை புருவம் தூக்கி அபிநயம் பிடித்து
நீ சிரித்த அந்த சிரிப்பில்
என் உதட்டோர புன்னகையை
உடனடியாய் களவாடிக் கொண்டாய்...!

உன் கூர்விழி அம்புகளால் என் இதயம் கிழித்து
உன் இதயம் உள்வைத்து என்னில் புதைந்து
என்னை உனக்காய் மாற்றியமைக்கிறாய்...!

தொலைத்து வந்த தோழியர்
மதி தொலைத்த என்னை கண்டெடுத்து
கைப்பிடித்து நகர்த்தி விட்டனர்...

நான் கடைக்கண் பார்வையொன்றை
உன்னிடத்தில் காவல் விட்டு
இதயமிழந்து புன்னை மர நிழலொன்றில்
என்றும் உனக்காய் தவமிருக்கத் துவங்கினேன்...!

உன்னில் நான் தொலைந்தேனென நான் நினைத்திருக்க
நீயோ என் விழி சொல்லும் சேதிக்காய்
கடல் காகம் தூது விட்டு கல்லுப்பின் மேல்
ஒற்றைக்கால் தவமிருந்திருக்கிறாய்...!

கார், கூதிர், முன்பனி, பின்பனியென
பெரும்பொழுதுகளும் கரைந்துவிட
இளவேனிற்லொன்றில் மீண்டும் நமக்குள் பார்வை சங்கமம்...!

தோழியொருத்தி விளரி இசைக்க என்னை மறந்து
உன்நினைவில் கானமிசைத்து கொண்டிருக்கிறேன் நான்...!
குறுகுறுக்கும் பார்வையொன்றில் எண்ணம் தடுமாற
என் கூந்தல் தாழையும் சரிந்தது...!

உன்முன் நான் இன்று என் முதுகுகாட்டி நிற்கிறேன்,
இருந்தும் முதுகோரம் உன் பார்வை வீச்சொன்றினால்
நாணம் கொள்ளச் செய்கிறாய்...!

இப்பொழுதல்லவா தெரிகிறது
மீன் பிடிக்க நீ வலை வீசும் போதெல்லாம்
என்னையல்லவோ தூண்டில் புழுவாய் துடிக்க விட்டிருக்கிறாய்...!

கடலலையில் வலை வீசி பழகிய நீ,
என் எண்ண அலைகளில் நீச்சல் கற்றுக் கொள்கிறாய்...!

இத்தனை பரவசங்கள் என்னுள் உன்னால்...
இன்று மூச்சுத்திணற வைத்து வேடிக்கை காட்டுகின்றன...!

எத்தனை பொழுதுகள் கழிந்தாலென்ன?
பாரேன், கடைக்கண் பார்வை வீசியறியா
கேணியொன்றின் தவளையாய் இருந்த என்னை
உன் காதல் சாம்ராஜ்யத்துள் பதுக்கி விட்டு
ஒன்றுமறியா குழந்தை போல்
அப்பாவியாய் ஒரு பார்வை பார்ப்பதை?

ஆனாலும் உனக்கு நினைவிருக்கிறதா?
நினைவு கிடக்கையில் கழிந்திடா பொழுதொன்றாய்
இன்னனும் நம் பார்வைகளின் சங்கமம் மோதிக்கிடப்பதை...!


Saturday 22 December 2012

மோகன கானம்....!


எங்கோ தோன்றிய ஒளி வட்டமாய் நீ...
என் பார்வை பறித்து வசியம் வீசி செல்கிறாய்...!
உன்னால் சுழலவிட்ட பம்பரமாய்
நான் உன்னை சுற்றியே நினைவிழந்து போகிறேன்...!

உன்னை கண்ட நிமிடம் நான்
ஆர்ப்பரிக்கும் அலைக்குள் சிக்கிக் கொண்டேன்...!
நீயோ தெளிந்த நீரோடை ஒன்றில்
என் மனமென்னும் மீன் கொத்திச் செல்கிறாய்...!

நான் போகும் பாதையில் பூக்களின் திசைமாற்றி
என் சுவாசம் முழுவதும்
நறுமண வாசம் வீசி செல்கிறேன்...!
எனக்கே தெரியாமல் என்னை ஊடுருவி சென்று
எப்படி ஆக்கிரமித்தாய் நீ?

மென்மை ஒன்றை உன்னில்
நான் கண்டவளுமில்லை...
அஹிம்சை ஒன்றை
உன்னிடத்தில் அறிந்தவளுமில்லை...!

உன் தோள் கண்டு உன்னோடு
மோகித்து விடவுமில்லை...
குரலோசை கேட்டு
உனக்காக சஞ்சலித்து விடவுமில்லை...!

இரவின் கரங்களுக்குள்
அடங்க மறுக்கும் நான்
உன் முரட்டு நெஞ்சத்துள்
புகுந்து விட துணிகிறேன்...!

கட்டுக்கடங்கா திசையெல்லாம்
சுழலும் காற்றாய் நான்...
சிறைபட்டு உன்னை
சிறையெடுக்க விரைகிறேன்...!

ஊர்க்குருவி ஒன்று கூவும் இசைகேட்டு
நீ கண் விழிக்கும் முன்னே
உன்னில் மூழ்கி விட முனைகிறேன்...!

தடைக்கல்லென என் நடைபாதை நுழைந்தவனே
கேள்விக்குறியாய் நீ மாறி பின்
பதிலே நீயுமாய் பதிந்து விட்ட கதை அறிவாயோ?

உன் கண்சிமிட்டல்களுக்குள்
தொலைந்து போன என்னை
தேடி தேடி மறுகுகிறேன்
நீ என்னுள் தொலைந்ததே அறியாமல்...!

Sunday 16 December 2012

உணராத பந்தம் இவள்...!

நீ இல்லாத என் நாட்கள் கிழித்தெறிந்த
காலண்டராய் கழிந்து கொண்டே இருக்கின்றன...
குளிரில் நடுங்கும் என் துவண்ட மேனியோ
இதுவரை உன் அணைப்பினை உணர்ந்ததே இல்லை...!

உன் முத்தங்களை பெற்றறியா முகத்திலோ
நாய்களின் எச்சில்கள்
ஏக்கம் தீர்த்துப் போகின்றன...!

திடீரென சூழ்ந்துக்கொள்ளும்
வெறுமைக்குள் புதைந்துக் கொண்டு
எதையோ தேடுவதைப்போல் தேடியிருக்கிறேன்...
நீ எப்படிப்பட்ட உணர்வளிப்பாய் என்றே தெரியாமல்...!

யோசித்து யோசித்து பார்க்கிறேன்,
எப்பொழுதெல்லாம் உன்னை நான்
உச்சரித்துப் பார்த்திருக்கிறேன் என்று...!

பசித்த வயிற்றோடு தெருத்தெருவாய்
சுற்றிய நாட்களில் கூட
“ஐயா காசு குடுங்க பசிக்குது” என்றே
கேட்டு பழகியிருக்கிறேன் நான்...!

சோறில்லையென விரட்டப்படும் போதும்
தெருவோர குப்பைத்தொட்டிகளில்
கண்கள் அலைபாய்ந்தே பழகி விட்டன...!

மாற்றுடுப்பு வேண்டுமென
மனம் தேடும் பொழுதெல்லாம்
மாடிவீட்டு கொடிகளை
அண்ணாந்து பார்த்து ஏங்கியிருக்கிறேன்...!

காய்ச்சல் வந்து வாய்க்குழறும் போதுகூட
வடிவில்லா ஒலியெழுப்பி
வெப்பத்தாக்குதலை எதிர்க்கொண்டு
பழகி விட்டேன் நான்...!

பருவம் எய்திய நாளில்
மிரட்சியோடு தேடியிருக்கிறேன்
அதுவும் உன்னை தான் என்றே அறியாமல்...!

வெறித்தப் பார்வை ஒன்றே
எப்பொழுதும் முந்தி நிற்கிறது
தாய் மடி முட்டும் கன்றுகளை பார்க்கும் பொழுதெல்லாம்...!

என் நிலையின் காரணகர்த்தா
விதியென நான் ஏற்றுக்கொள்வதுமில்லை...
நீதானென்று சபித்து விடவும் துணியவில்லை...!
என்னை ஜனனித்து நீ மரணித்துப் போனாயோ
இல்லை ஆகாது என வீசிவிட்டு சென்றாயோ?
தொலைத்துவிட்டு தினம் தேடி தேடி வேதனிக்கிறாயோ?

உனக்கென அடையாளமெதையும்
நீ எனக்காக விட்டுச்சென்றவளில்லை…
உன் குணம் பற்றிய எதிர்பார்ப்போ
நிலைப்பாடு பற்றிய பரிதவிப்போ
என்றுமே எனக்குள் சஞ்சலத்தை புகுத்தியதில்லை...!

நீ யாராய் இருந்தால் என்ன?
எனக்கு நீ அன்னியமானவள்...!

சூல் கொண்ட பெண்கள் கண்களுக்குள்
விழும்போதெல்லாம் வினோத ஜந்துவை
பார்ப்பது போல் வெறித்து விட்டு
பயணம் தொடர்கிறேன் நான்...!


Tuesday 4 December 2012

மாறாதிந்த மருதக் காதல்...!

சலசலத்து ஓடும் பொய்கை கரையிலே
நாரைகளும் அன்றில்களும்
தத்தம் பெடைகள் நிமித்தம்
அளவளாவிக் கொண்டிருந்தன…!

துள்ளிக்குதிக்கும் மீன்கள் பிடிக்க
அங்கே தாவிக் குதித்தது நீர்நாயொன்று…
எருமை கிடாக்கள் ஆற்றுநீர் பருக
அடைக்கலமாக ஒதுங்கியது தாரா கூட்டம்…!

இப்படியான...
முன்பனி காலத்தின் வைகறை பொழுதினிலே,
வயல் சூழ் மருதமொன்றின் நிலாவொளியில்
தன்னிலை மறந்து களித்திருந்தனர்
நெல்லரித்த தலைவியும்,
கிடாவிட்ட தலைவனும்…!

தலைவியின் பால் மாறா
மையல் கொண்ட தலைவன்
அவள் முகம் தாங்கி இங்ஙனம் வினவுகிறான்...!

தாமரை முகத்தாளே…!
தாவும் மரையின் மிரட்சியை கண்களில் கொண்டவளே…
கட்டுக்கடங்கா காளையென தறிகெட்டு திரிந்திருந்தேன்…
பாவை உன்னை கண்ட நொடி அடைந்து விட மோகம் கொண்டேன்…
மையல் விழி தையலே உன்னை சூழ்ச்சியால் கொய்ய விழைந்தேன்…
இட்டுகதைகள் பலபேசி உன்னை என்மடியில் வீழ வைத்தேன்…
மன்னிப்பாயா அஞ்சுகமே,
எத்தருணம் உன்னை என்னில் தருவித்ததென
தகுந்த காரணங்கள் உரைப்பாயோ?

மையிட்ட கண்ணுக்கு சொந்தக்காரி
காரிருள் கொண்டைக்காரி
கலகம் விளைவிக்கா தாபத்தோடு
தன் தலைவன் மடி சாய்ந்து கொட்டுகிறாள் வார்த்தைகளை…!

நீ ஐராவதமேறிய இந்திரனும் இல்லை,
கிரகங்கள் பீடிக்கும் சந்திரனும் இல்லை…
கற்பில் சிறந்த இராமனுமில்லை,
அழகில் சிறந்த மன்மதனுமில்லை…
வீரம் சொரிந்த அபிமன்யூ இல்லை,
விவேகம் நிறைந்த தருமனுமில்லை…
கலகம் புரியும் நாரதனுமில்லை,
காரணங்கள் வேண்டா கடவுளுமில்லை…

நீ ஊரனாய் இருந்திருந்தால் உன்பால்
எனதன்பு சாய்ந்து விடுமென சிந்தையில் சிந்தித்தாயா?
இல்லவே இல்லை கண்ணாளா…!
நீ வேந்தனே ஆயினும்
என்விழி வீச்சு உன் பக்கம் சாய்ந்திடாது...
பின் வேறென கவர்ந்ததென வினவுகிறாயோ?

சொல்கிறேன் கேள்...

ஆநிரை சூழ் நின் உலகிலே
நின் தனித்தன்மை ஒன்று கண்டேன்
யாதெனில் உனக்கு நிகர் நீயாய் நின்றாய்
கயல்விழியாள் எனக்கு எல்லாமுமாய் நிறைந்து நின்றாய்
நெஞ்சத்து பாசறையில் நீயே முழுதுமாய் என்னைக் கொண்டாய்
காரணங்கள் இனி கேட்டிடாதே,
காமுறுவோம் காலமெல்லாம்…!

கயமொன்றில் மலர்ந்திருந்த ஆம்பலும் வெட்கியது,
கழநியின் மேல் செந்நெல்லும் தலை தாழ்ந்தது,
இவர்களின் மாறா காதல் கண்டு...!

Monday 3 December 2012

திருடா...!


என் கனவு பிரதேசத்தில் 
கன்னமிட்டு நுழைந்து
தூக்கம் திருடி சென்றாயே திருடா…!

விழி வீசும் அம்புகளை தடுத்தே நான்
தனித்திருந்தேன்
வீச்சுத் திசைமாற்றி
எப்படி நீ குறுகுறுத்தாய்... திருடா...!

மனமென்னும் விசித்திரத்துள்
கனல் ஒன்று வைத்திருந்தேன்...
அசராமல் நீயும்
எப்படி அதை தீண்டி நின்றாய்... திருடா...!

லப் டப் கூச்சலிலிடும் இதயத்தில்
தரம்பிரித்து அடுக்கி வைத்தேன் ஏக்கங்களை ...
நான்கு அறைகளிலே எவ்வறையை
கள்ளமிட்டாய்… திருடா?

சின்ன சின்ன ஆசைகளுடன்
பெருங்கோட்டை ஒன்று கட்டிவைத்தேன்
என் மன்னவனாய் அனுமதியின்றி
எங்ஙனம் நீ குடியேறினாய்... திருடா?

சுவரும் வாசலும் இல்லா உணர்வுக்குள்
கள்ளச்சாவி போட்டு எதை திறந்தாய் திருடா?

சடசடவென கொட்டும் வார்த்தைகள் அனைத்தையும்
மொத்தமாய் அள்ளி
நிசப்தத்தை மட்டும் விட்டுச் செல்கிறாயே திருடா...!

உன் குண்டு கண்களுக்குள்
காந்தம் ஒளித்து வைத்து
என் நெற்றிப்பொட்டில்
வசியம் வீசுகிறாயே திருடா...!

கழுத்தோரம் மயிலிறகாய் இம்சித்து
புன்னகையை இதழ்களுக்கு பரிசளித்து
அவஸ்தையை அள்ளித்தெளித்து விட்டு
மறைந்து விடுகிறாயே திருடா...!

மொத்தமாய் என்னை திருடிக்கொண்டு
யாதுமறியாததுபோல் முகம் நோக்குகிறாயே திருடா...!

இனியும் நீ திருடக் கூடாதென்கிறேன்,
சரியென திருடிக்கொண்டே
தலையசைக்கிறாய் திருடா...!