Tuesday 22 December 2015

உன்னை மட்டுமே


அத்தனை வடுக்களையும்
தாங்கிக் கொண்டிருக்கிறேன்...

புரையோடி போயிருந்த நேரத்திலெல்லாம்
உன் தோள் சாய்ந்து
ஒரு புன்னகை உதிர்க்க
முடிந்திருந்த என்னால்
இன்று வடுக்களாகிப் போன
இத்தடங்களை பார்த்து
கண்ணீர்விடவே முடிகிறது...

ஆறாக்காயமொன்று இதயத்துள்
அறுத்துக் கொண்டிருக்கிறது...
இச்ஜென்மம் பத்தாத தாகமாய்
ரணம் வேண்டுமென்று பெருங்குரலெடுத்து
பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்...

கத்தியின் கூர்மையை
ருசி பார்க்கவேண்டும்...
ஓலமாய் வெளிப்படும் காற்றலை
உன் பெயரையன்றி
வேறெதை தாங்கி வரும்?

வலிகள் புதியதல்ல...
இருந்தும்
கண்கள் குளமாகும் தருணங்கள் அத்தனையிலும்
உன்னை மட்டுமே நிரப்பிக் கொள்கிறேன்...

உன்னை மட்டுமே...


.

Wednesday 9 December 2015

சென்னை மழை - எனக்கு தெரிஞ்ச ஹீரோக்கள்




கொஞ்ச நாளாவே பலப்பல சோதனைகள். எதையுமே எழுதவும் தோணல. அப்போ தான் சென்னைல மழைன்னு சொன்னாங்க. நான் கூட மழைனா ஏதோ கொஞ்சம் தண்ணி தேங்கும், ரோட்டுல வண்டி எல்லாம் போக கஷ்டப்படும் அவ்வளவு தான்னு விட்டுட்டேன். காரணம் மழைன்னு சொன்னாலே எனக்கு மனசுக்குள்ள உற்சாகம் மட்டும் தான் வரும். ஆனா முதல் தடவையா இந்த மழை என்னை ரொம்ப பயமுறுத்திடுச்சு.

நவம்பர் மாசம் பெய்த மழைல சென்னை கொஞ்சம் திணறினாலும் முப்பதாம் தேதி வரை மழைய பத்தின வேடிக்கை போஸ்ட் எப்பி-ல நிறைய பாக்க முடிஞ்சுது. மழை கவிதைகளும், கிண்டல்களும் கேலிகளும் டிசம்பர் ஒண்ணாம் தேதில இருந்து நிறம் மாற தொடங்கிச்சு.

“மழையைக் காரணம் காட்டி அலுவலகத்தில் முன்கூட்டியே வீட்டுக்குச் செல்ல அனுமதியளித்திருக்கிறார்கள். கடந்தமுறைதான் படுக்கையில் தள்ளிவிட்டது. இந்தத் தடவை மழைக்கு வீட்டில் கிடந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. எங்கேனும் வெள்ளபாதிப்பு உள்ள பகுதிகளுக்குச் சென்று முடிந்த உதவிகளைச் செய்யலாமென்று நானும் நண்பனும் திட்டமிட்டுக்கொண்டோம். இம்மாதிரி உதவிகளுக்காகச் செல்லும் குழுவினர் யாரும் இருந்தீர்களானால் இணைந்துகொள்வோம். அல்லது ஆற்றுப்பகுதிகள், தாழ்வான பகுதிகளில் இயன்றதைச் செய்துகொண்டிருப்போம்”ன்னு கார்த்திக் போஸ்ட் பாத்ததும் அவர் தான் இந்த மாதிரியான சூழ்நிலைகள்ல ஹெல்ப் பண்ண முன்னாடி போய் நிப்பாரே, அது போல தான் இதுவும் இருக்கும். மனசுக்கு பிடிச்சத அவர் பண்றார்ன்னு நினச்சுட்டு சும்மா இருந்துட்டேன்.

அப்புறம் தான் எனக்கு தெரிஞ்சுது சென்னைல பெய்த மழை cloud buster-ன்னு. சாதாரணமா ஒரு நாள்ல பெய்ய வேண்டிய 60mm மழைக்கு பதிலா 590 mm பெய்தா எப்படி இருக்கும்? அதுதான் சென்னையால தாக்குப் பிடிக்க முடியாம போச்சு. இன்னும் கொஞ்சம் கூடுதலா பெய்திருந்தா சென்னையே மூழ்கிப் போயிருக்கும்னு சொன்னப்ப நான் ரொம்ப ரொம்ப அதிர்ச்சியாகிட்டேன். பின்ன சென்னைய சுத்தி இருக்குற 926 ஏரிகளும் நிரம்பி கடல்ல கலந்தா சென்னை நிலைமை அவ்வளவு தான்னு என்னை ரொம்ப பயமுறுத்திட்டாங்க. நூறு வருசங்களா இப்படி ஒரு மழைய சென்னை சந்திச்சதே இல்லையாம்.

என்ன நீ, எவ்வளவு பெரிய விசயத்த எதுவுமே தெரியாத மாதிரி ரொம்ப சாதாரணமா எழுதிட்டு இருக்கன்னு கேக்காதீங்க. காரணம், குமரி மாவட்டத்துல ஒரு பாதுகாப்பான இடத்துல இருந்துட்டு, இதுவரைக்கும் இந்த மாதிரி எந்த விதமான அசம்பாவிதங்களையும் அனுபவிக்காத, அதோட சீரியஸ்னஸ் புரியாத ஒரு பொண்ணா என்னை நினைச்சுப் பாருங்க, நான் அப்படி தான் மழையை விரும்புற மனநிலைல இருந்தேன்.

அதே டிசம்பர் ஒண்ணு. மழை நிலவரங்கள் பத்தி ஒவ்வொருத்தரும் போஸ்ட் போட ஆரம்பிச்சாங்க. விசயம் கொஞ்சம் சீரியஸ்ன்னு புரிய ஆரம்பிச்சது. என்னால அப்பப்ப இங்க என்ன நிலவரம்னு எட்டிப்பாக்கத் தான் முடிஞ்சுதே தவிர, வேற எதுவும் பண்ண முடியாத சூழ்நிலை. எத்தனையோ பேர் நிறைய போஸ்ட் போட்டும், ஷேர் பண்ணியும், பாதிக்கப்பட்டவங்களுக்கும் அவங்கள தேடுறவங்களுக்கும் இடைல இணைப்பு பாலமா செயல்பட்டாங்க. தரைதளம் மூழ்கி, அப்படியே முதல் தளமும் மூழ்கிப் போய்டுச்சுன்னு கேள்விப்பட்டப்ப நிலைமை ரொம்ப சீரியஸ்னு புரிய ஆரம்பிச்சுது. பிரசவ வலில துடிக்குற பெண்கள், உடனே உதவி வேணும்னு ஒவ்வொருத்தரும் பதறினத பாத்தப்ப எதுவுமே செய்ய முடியாம உக்காந்த இடத்துல இருந்தே பிரார்த்தனை மட்டும் தான் பண்ண முடிஞ்சுது. நல்ல வேளையா அவங்க காப்பாற்றப்பட்டு பிரசவிச்ச நியூஸ் ஆறுதல் சம்பவம்.

வெள்ளத்துல இருக்குறவங்கள காப்பாத்தினா மட்டும் போதாது, அவங்களுக்கு அடைக்கலம் மட்டும் குடுத்தாலும் பத்தாது, எல்லாத்தையும் மழைல தொலைச்சுட்டு நிக்குற மக்களுக்கு சாப்ட சாப்பாடு வேணும், உடுத்திக்க மாத்து துணி வேணும், கொட்டுற மழை குளிர்ல போர்த்திக்க போர்வை வேணும், ஒரு அவசர ஆத்திரத்துக்கு ஒதுங்க ஒரு இடம் கூட வேணும். இப்படி எத்தனையோ வேணும் வேணும்கள்.

கரண்ட் இல்லாம, மொபைல்ல சார்ஜ் இல்லாம, வெளியுலக தொடர்பே இல்லாம அடுத்து என்ன நடக்குமோன்னு பயத்தோடவே கடக்குற தருணங்கள் இருக்கே. அது எப்படி இருக்கும்னு அனுபவிச்சவங்க மட்டும் தான் உணர முடியும். அப்படி ரெண்டு ராத்திரிகள் கடந்து போனா?

சென்னை மட்டுமில்லாம கடலூர்லயும் பாதிப்பு ரொம்ப ரொம்ப அதிகம்னு கேள்விப்பட்டு மனசு ரொம்ப சோர்ந்து போய்டுச்சு. நம்மால தான் எதுவும் செய்ய முடியல, அட்லீஸ்ட் ஆறுதல் கிடைக்குற மாதிரி ஏதாவது நியூஸ் கிடைக்குமான்னு தேடி தேடி நான் பாலோ பண்ணிட்டு இருந்த டீம் தான் கார்த்திக் புகழேந்தி, கிரிதரன் கிரி, கவிமணி டீம்.

முதல் நாளில் ஏதாவது உதவி செய்யலாமேன்னு எதேச்சையா களத்துல இறங்கினவங்க நிலைமையோட வீரியத்தன்மைய பாத்துட்டு ஆறு நாள் வேலைக்கு போகாம பாதிக்கப்பட மக்கள் இருக்குற ஒவ்வொரு இடமா தேடி தேடிப் போய் முழுவீச்சுல மக்களுக்கு உதவி செய்ய இறங்கிட்டாங்க.

மவுண்ட் ரோடு, தேனாம்பேட்டை, அடையார், வேளச்சேரி பகுதிகள்ல சுத்தி சுத்தி உதவி பண்ணின இவங்க, அன்னிக்கு ராத்திரியே ஊராப்பாக்கம் கொஞ்ச பேர் தண்ணியில சிக்கியிருக்காங்கன்னு கேள்விப்பட்டு மீட்பு குழுவுக்கு தகவல் சொல்லி, மறுநாள் காலைல நாலு மணிக்கு அவங்கள மீட்க ஏற்பாடு செய்துருக்காங்க.

அவங்க கண்ணுல பட்ட சாப்பாடு இல்லாதவங்களுக்கு சாப்பாடு குடுத்து, மனநலம் பாதிக்கப்பட்டவங்க, வயசானவங்க, தேவைப்பட்டவங்களுக்கு எல்லாம் போர்வைகள் குடுத்து தண்ணில சிக்கின வாகனங்கள மீட்க உதவி பண்ணி, மூணு மணி நேரம் தண்ணிக்குள்ள இறங்கி நின்னு சிக்கியிருந்த மக்கள கரையேற உதவி தன்னிச்சையா முதல்ல செயல்பட ஆரம்பிச்சவங்க, அடுத்த நாள் அதாவது மூணாம் தேதி காலைல சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள சந்திச்சு, அவரோட ஆசீர்வாதத்தோட இன்னும் சிலர் (லதா அருணாச்சலம், திருமதி கெளரி, அனிதா, ஞானி) உதவியோட தியாகராயநகர் பகுதியில தண்ணீர் பாட்டில்கள், உணவு பொட்டலங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், போர்வைகள் குடுத்துருக்காங்க.

அடுத்தடுத்த நாட்கள்ல தி நகர், மேற்கு மாம்பலம், ஹௌசிங் போர்ட், துரைப்பாக்கம், திருவான்மியூர், மத்திய கைலாஷ், அடையார், வடசென்னை, மணலின்னு ஒவ்வொரு இடமா போய் உதவிகள் பண்ணிட்டு இருந்தாங்க. அந்த நேரத்துல மக்களோட தேவைகள் உணவும் தண்ணிப்பாக்கெட்டும் மட்டுமில்லன்னு தெரிஞ்சுகிட்டவங்க டீம்ல உதய சங்கர், ஸ்ரீதேவி செல்வராஜன், வில்லன், தமிழ்ச்செல்வன் ஆகியோரும் இணைய, மக்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்கள திரட்டி விநியோகிக்க தயாராகிட்டு இருக்காங்க. இதுக்கு அவங்களுக்கு உறுதுணையா நிறைய நல்ல உள்ளங்கள் தங்களோட பெயர கூட வெளில சொல்லாம உதவிட்டு இருக்காங்க. தனிநபரா களத்துல இறங்கினதுல இருந்து, இப்ப ஒரு குழுவா இந்த நட்பு கூட்டணி உருவாகியிருக்கு.

இந்த தனிக் குழு வாலண்டியரா யார் கூடவும் இணையல. ஏன்னு காரணம் கேட்டா, “எங்க நட்புவட்டம் “தண்ணில இறங்கிப்போய்”ன்னு........ சொல்லும்போதே அடுத்த கரையில் மூட்டைகளைக் கொண்டு போய் சேர்க்கிறவர்கள். சோறு தண்ணி இல்லாமல் வேலைபார்த்துவிட்டு கிளம்பும்போது, "இருக்கட்டும்டா வீட்ல போய் சாப்டுக்குறேன்னு" கையத் துடைச்சுட்டு போய்டும் குணாதிகள். பத்துரூபாய் அந்தக்கடையில் கம்மியா கிடைக்குதுன்னு எட்டு போன்கால் போட்டு தன் காசை செலவு செய்து விசாரித்தலைந்து பொருட்கள் வாங்கித் தருகிறவர்கள். ஐந்தாவது நாளாக வேலைக்குப் போகலையே என்றால் பார்த்துக்கலாம் விடு என்று அட்டைபெட்டிகளை அடுக்குகிறவர்கள். இவர்களோடு ஒண்ணுமண்ணா வேலை பார்க்கும் அந்நியோன்யம் எல்லோர்கிட்டவும் செட்டாகுமான்னு தெரியலை. தவிர இங்கே முடிவெடுக்கும் பொறுப்பு துறப்பெல்லாம் கிடையாது. இன்னார்க்கு ஒரு தேவை இருக்கு கொடுக்கணும்ன்னு தோணுதா கொடுத்துட்டு போய்ட்டே இருப்பாங்க. நோ ஆர்க்யுமெண்ட்ஸ். அப்புறம் பண உதவி செய்பவர்கள். "சத்தம் மூச்" வெளியில் விடாமல், எப்பவோ கொடுத்த அக்கவுண்ட் நம்பரை நினைவு வச்சு,"இந்தாங்க கார்த்தின்னு" உழைச்சு சம்பாதிச்ச காசை நம்பி கையில் கொடுக்குறாங்க. அவங்க நம்பிக்கையை காப்பாத்தணும்ல. அதுமட்டுமில்லை வாலண்டியர் தேவைன்னு போஸ்ட் போட்டா நூறு ஷேர் போகிறது. இரண்டு கால் வருகிறது. சத்யம் தியேட்டரில் ஐந்து டிக்கெட் வைத்திருக்கிறேன் என்றால் நாற்பது மெஸேஜ் வாட்சப்பில் குவிகிறது. இணையத்தில் வாலண்டியராக வரிந்துகட்டிக்கொண்டுச் செயல்படுவதும், அழுக்குத்தண்ணீரில் மூட்டை முடிச்சுகளோடு இறங்குவதும் வேறு வேறு என்று தெளிவாகப் புரிந்தவர்களோடு ஒன்று சேர்ந்திருப்பது நல்லதில்லையா!”ன்னு கேள்வி எழுப்புறார் கார்த்திக் புகழேந்தி.

அடுத்தடுத்து இன்னும் நிறைய விஷயங்கள் பேசணும்... அத தொடர்ந்து எழுதுறேன். 

இப்போதைக்கு இந்த டீம் மக்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்கள சேகரிச்சு வழங்குறதுல மும்முரமா இருக்கு.

அந்த லிஸ்ட்ல சத்து மாத்திரைகள், சத்து மாவு, மாற்று உடைகள், உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், போர்வை, நாப்கின், உள்ளாடைகள், இருமல் மருந்து, ஸ்டவ் இப்படி சில அத்யாவசிய பொருட்கள் அடங்கியிருக்கு.

பேஸ்புக்ல இந்த டீமுக்கு இருக்குற ஹாஷ்-டாக் #‎MIHY‬


வாழ்த்துவோம், முடிஞ்சா கைகொடுப்போம்...



அழைக்க:
கிரி : 9941146404, 9884543039
உதய சங்கர் : 9940232560
ஜெகதீஷ் : 9566249725
தமிழ்ச்செல்வன் : 9500030200
கார்த்திக் புகழேந்தி : 9994220250
கவிமணி : +91 9003984963 ; +91 7092702365

Saturday 21 November 2015

பிக்கு (piku) - திரைவிமர்சனம்



ஒரு சின்ன நூல். அதுல முடிச்சும் இல்ல, முடிவும் இல்ல. ஆனா ஒரே சிக்கல். அது தான் “பிக்கு”. படத்துல எப்ப எல்லாம் சாப்பாட்டு சீன் வருதோ அப்பலாம் மலச்சிக்கல் பத்தியே பேசுறாங்க. அதுவும் மஞ்சக் கலர் பச்ச கலர்ன்னு கலர்கலரா பேசுறாங்க. அப்புறம் டெல்லில இருந்து கோல்கத்தா போறாங்க. போற வழிலயும் மலச்சிக்கல் பத்தியே பேசுறாங்க, கோல்கத்தா போயும் அதே தான் பேசுறாங்க.

ஆத்தீ... எங்கள விட்டுரு, இப்படியே தப்பிச்சு ஒடிருறோம்ன்னு தான சொல்றீங்க, படத்துல கூட ஒருத்தர் அப்படி தான் எஸ்கேப் ஆவார். ஆனா நான் விட மாட்டேன், இப்படி வந்து உக்காருங்க, நான் பேசணும்.

இந்த படத்துல யாரும் யாரையும் பெரிய அளவுல தூக்கி வச்சி கொண்டாடுறது இல்ல,

மனச பிசையுற சீன், செண்டிமெண்ட் சீன்னு எதுவும் கிடையாது. ஆனா ஒருத்தருக்கொருத்தர் நிறையவே சார்ந்து இருக்காங்க. அது தேவைகளின் அடிப்படையில் தான் இருக்குதே ஒழிய உணர்வுகள் சார்ந்ததா இல்ல.

புரியும்படியா சொல்லணும்னா முதல்ல சொன்னேனே மலச்சிக்கல் பத்தியே பேசுறாங்கன்னு. ஆனா அதையும் தாண்டி நிறைய விசயங்கள பேசுறாங்க. எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாம பெரிய பெரிய விசயங்கள போகுறப்போக்குல சொல்லிட்டுப் போய்டுறாங்க.

குறிப்பா சொல்லணும்னா “உன்னோட செக்சுவல் லைப் ஆரோக்கியமா தானே போயிட்டு இருக்குன்னு பிக்கு கிட்ட அவளோட சித்தி கேக்குற கேள்வி. “it’s a need”-ன்னு ஒரே ஒரு டயலாக் தான். அதப் பத்தி பேசுறது பெரிய விசயமே இல்லங்குற மாதிரியான காட்சி அது.

இதுல என்ன ஆச்சர்யம் இருக்கப் போகுதுன்னு கேட்டீங்கனா, இதுல பிக்கு கதாநாயகி. அதுவும் ஒரு வாட்டி கூட கல்யாணம் ஆகாத முப்பதுகள்ல இருக்குற கதாநாயகி. அவளுக்கு செக்ஸ் தேவையா இருக்கு. அத அவளோட குடும்பத்துல இருக்குற ஒருத்தர் கூட மறுக்கல. ரொம்ப ஈசியா, கேசுவலா எடுத்துக்குறாங்க. அவளோட சித்தி மூணு கல்யாணம் செய்தவங்க.

செக்சுவல் தேவைக்கு மகள் ஒருத்தரை தேர்ந்தெடுப்பத அனுமதிக்குற அப்பா பாஸ்கோர், அவள் அதுக்கான நிரந்தர தீர்வா கல்யாணம் பண்ணிக்கலாமானு யோசிக்குறப்ப வெகுண்டுப் போயிடுறார். அவரை பொருத்தவரைக்கும் புத்தி கம்மியா இருக்குறவங்க மட்டுமே கல்யாணம் பண்ணிப்பாங்க. தன்னோட மனைவி அவளுக்குன்னு எந்த குறிக்கோளும் இல்லாம தன்னோட மொத்த வாழ்நாளையும் அவருக்காக செலவிட்ட மாதிரி அவர் மகளும் இருக்கக் கூடாதுன்னு சொல்றார்.

அதுல என்ன தப்பு இருக்குன்னு பிக்குவோட சித்தி கேக்குறப்ப, எல்லாமே தப்பு தான். நீங்க எல்லாம் உங்க சுய அடையாளத்த இழக்குறீங்க, உங்க புத்திய இழக்குறீங்க, சுயமரியாதைய இழக்குறீங்க, அறிவை இழக்குறீங்க, எல்லாத்தையும் அக்னி முன்னாடி இழந்துட்டு உங்க வாழ்க்கைய வாழுறீங்க. இது முட்டாள்த்தனம் தானேன்னு எதிர்க்கேள்வி கேக்குறார்.

கல்யாணத்துக்கு அப்புறம் வாழ்ந்த வீட்டை விட்டு, இன்னொருத்தன் வீட்டுக்கு போய், அங்க அவன் வீட்டையும் அவனையும் கவனிச்சுட்டு வாழுறது அர்த்தமே இல்லாம இருக்கு. உன்னை பெத்தது நான் தான், சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் உன்னை கைவிடலை, அப்போ என்னோட வயசு காலங்கள்ல நீ என்னை நல்லா கவனிச்சுக்கணும் தானே, நீ எப்படி எனக்கு குழந்தையோ அப்படி தான் நான் இப்போ உன்னோட குழந்தை. நான் உனக்கு என்ன செய்தேனோ, அத நீ எனக்கு திருப்பி செய்ன்னு என்னா அசால்ட்டா சொல்றார்.

மகளோட அந்தரங்கத்துல கூட தலையிடுற அப்பா, அதுவும் அவ கூட சும்மா பேசிக்கிட்டு இருந்தவர் கிட்ட போய் “நீ இவள கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறியா”ன்னு கேக்குறார். அவரும் “நல்ல பொண்ணா இருந்தா ஏன் பண்ணிக்கக் கூடாது”ன்னு திருப்பி கேக்க, “இவ விர்ஜின் இல்ல, இவளுக்கு சொந்தமா பிசினஸ் இருக்கு. அதனால அவ பினான்சியலாவும் செக்ஸ்சுவலாவும் சுதந்திரமானவ. தன்னுடைய தேவைக்காக ஒரு எமோசனல் பார்ட்னரை தேடிகிட்டு இருக்கா. உன்னைப் பொறுத்தவரை இவ நல்ல பொண்ணா”ன்னு தயக்கமே இல்லாம கேக்குறார். இவர் உங்களுக்கு அப்பான்னு சொன்னா நம்பவே முடியலன்னு ஒருதடவ ஒருத்தர் பிக்குகிட்ட சொல்லுவார், நம்மாலயும் தான் நம்ப முடியாது.

மனசுல இருக்குற விசயங்கள கொட்டித் தீக்கவும் வாய்விட்டு கதறி அழவும் எல்லாருக்கும் எமோசனல் பார்ட்னர்ஸ் தேவைப்படத் தான் செய்றாங்க. ஆனா எத்தன பேருக்கு இப்படி வாய்க்கும்னு சொல்ல முடியாது தானே. அப்படி வாய்ச்சுட்டா அந்த எமோசனல் பார்ட்னருக்காக எதையும் இழக்க தயாரா இருப்பாங்க. அதனாலதானோ என்னவோ பாஸ்கோர் பிக்குவுக்கு எமோசனல் பார்ட்னர் தேவையில்லன்னு முடிவு பண்ணிட்டார் போல.

தன்னோட பொண்ணு உறவு வச்சிருக்குற பையனுக்கு தன்னைப் போலவே மலச்சிக்கல் பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சு தான் அவர் அவள கல்யாணம் பண்ண விட மாட்டார்னும், தன்னோட பொண்ணு எந்த ஆணுக்கும் ஊழியம் செய்றத தன்னால அனுமதிக்க முடியாதுன்னும் அவர் அப்படி சொன்னதா அவர நியாயப்படுத்தியிருப்பாங்க.

அப்பாவுக்கு பிறகான இனி வர்ற நாட்கள உங்களால சமாளிக்க முடியுமான்னு கேள்வி கேக்கப்படுறப்ப “என் அப்பா என்னை எல்லா சூழலிலும் சமாளிக்க கத்து தந்துட்டு போயிருக்கார்”ன்னு பிக்கு சொல்லும் போது மனசு ரொம்பவே கனத்துப் போகுது...

மேல சொன்ன விசயங்கள பத்தி விவாதிச்சா கண்டிப்பா ஒரு தப்பான இம்ப்ரசன் தான் வரும். ஏத்துக்கவே முடியாத இந்த மாதிரியான விசயங்கள பாஸ்கோரா வர்ற அமிதாப் ரொம்ப ஈசியா வார்த்தைகள்ல சொல்லிட்டுப் போய்டுறார்.

நான் இந்த படத்துல எதையும் சரி, தப்புன்னு சொல்ல வரல, ஆனா எனக்கு என் பாட்டியோட பெத்தவங்க நியாபகத்துக்கு வந்தாங்க.

ஆமா, அவங்க என் அம்மாவோட தாத்தா பாட்டி. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து ரெண்டு பேரும் தோல் சுருங்கி, நடை தளர்ந்து போயிருந்தாலும் கிண்டலுக்கும் கேலிக்கும் குறைச்சலே இருக்காது. அந்த பாம்பட கிழவிக்கு தினமும் எண்ணெய் பண்டம் வாங்கிட்டு போற கிழவர், பக்கத்துல பக்கத்துல உக்காந்துகிட்டு ஒருத்தர ஒருத்தர் உரசிட்டே சீண்டிக்குற பாங்கு. வெத்தல இடிச்சு குடுத்துகிட்டே பொண்டாட்டிய “நீ ரொம்ப ரொம்ப அழகுடி”ன்னு வெக்கப்பட வைக்குற கிழவர். “ம்க்கும், அதான் தெரியுமே, ஊருல அத்தன பசங்களும் என் பின்னால தான சுத்துனானுவ”ன்னு மொகரைய இடிக்குற கிழவி. தொண்ணூத்தாறு வயசுல கிழவர் செத்தப்ப ஒரே மாசத்துல அவர் பின்னால போய்ட்டா அந்த ஜாக்கட் போடாத பாம்படக் கிழவி....

இவங்க எல்லாம் தேவைகள் அடிப்படைல தான் குடும்பம் நடத்தினாங்களா?

தேவைகளின் அடிப்படையில் எல்லாத்தையும் அணுகத் துவங்கிட்டா அங்க கண்ணீரும் இருக்காது, கூடவே சீவனும் இருக்காது.


.

Sunday 15 November 2015

தூக்கம் வராத போது....



காலங்காத்தாலயே முழிப்பு தட்டிடுச்சு. பயங்கர குளிர். அடுத்து என்ன செய்றதுன்னு ஒண்ணும் தோணல. எதுவுமே தோணலனா அப்படியே படுத்து மறுபடியும் தூங்கிட வேண்டியது தானேன்னு நீங்க கேக்குறது எனக்கு புரியுது. நானும் வேற ஏதாவது பண்ணியிருப்பேன்னு நீங்க நினைக்குறீங்களா? கண்ணை இருக்க மூடிட்டு அப்படியே படுத்துட்டேன்.

கொஞ்ச நேரத்துலயே என்னமோ தோண, அப்படியே வாசல் பக்கமா உத்துப் பாக்குறேன். என்னவோ நெளிஞ்சிட்டு இருக்கு. மெல்ல எழும்பிப் பக்கத்துல போய் பாக்குறேன். ஆக்டோபஸ் மாதிரியும் இல்லாம, வேற எது மாதிரியும் இல்லாம உருவமே இல்லாம இருக்கு அது. என்னடா இதுன்னு அதையே பாத்துட்டு இருக்கேன். திடீர்னு அது துடிக்க ஆரம்பிக்குது.

எனக்கு என்னப்பண்றதுன்னே தெரியல. இப்ப இத கை வச்சு தொடலாமா? தொட்டா கடிக்குமா? ஏன் இது இப்படி துடிக்குது, இதுக்கு என்னாச்சுன்னு ஒரே கேள்வி மனசுல. அப்பத்தான் அது உடம்புல இருந்து ஒண்ணு தனியா கழண்டு விழுது. அந்த உருவமும் துடிப்பு அடங்கி அமைதியாகிடுச்சு. கீழ விழுந்தது என்னன்னு மெதுவா கைல எடுத்துப பாத்தேன். அட, முத்து. உருண்டையா, கொஞ்சம் பெருசா, பளபளன்னு இருக்கு.

முத்தையே பாத்துட்டு இருந்தேனா,இப்ப மறுபடியும் அந்த உருவம் துடிக்க ஆரம்பிக்குது. எனக்கு இப்ப பயம் ஒரு பக்கம், ஆவல் ஒரு பக்கம். மறுபடியும் முத்து வருமான்னு நினச்சுகிட்டு அதையே பாத்துட்டு இருக்கேன். இந்த தடவ வந்தது ஒரு சின்ன யானை பொம்மை. அதுவும் நேர்த்தியா அச்சு அசல் யானை மாதிரியே இருந்துச்சு.

அடுத்தடுத்து அது துடிக்க, மான் கொம்பு, ஜவ்வாது, குங்குமப்பூ, சந்தனக்கட்டைன்னு என்னென்னவோ வந்து விழ ஆரம்பிச்சுது. எனக்கு இப்போ பயம் சுத்தமா போய்டுச்சு. அது ஒவ்வொரு தடவ துடிக்கும் போதும் மெதுவா கை வச்சு தடவிக் குடுக்குறேன். நல்ல சாப்ட்டா தொடவே அவ்வளவு நல்லா இருந்துச்சு.

அப்புறம் ரொம்ப நேரம் அது துடிக்கவே இல்ல. சரி எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு நினச்சு நான் வெளில வந்து விழுந்த பொருட்கள மறுபடியும் பாக்குறேன். எல்லாம் அங்கங்க சிதறிக் கிடக்கு. அப்ப தான் கண்ணுல அது படுது. ஒரு பை. என்ன இது, பை மாதிரி இருக்குன்னு மெல்ல எடுத்துப் பிதுக்கிப் பாக்குறேன்.

உள்ள என்னமோ நெளியுது. எனக்கு வேற சுத்தமா பயம் போய்டுச்சா, அது என்னன்னு பாத்துடணும்னு ஒரே ஆவல். அப்படியே பைக்குள்ள கைய விட்டு அத வெளில எடுக்குறேன்.

அட, அந்த பெருசை போலவே இது குட்டி. அப்படினா அந்த உருவம் குட்டிப் போட்டுருக்கு. அதுக்கு தான் அது அப்படி துடிச்சிருக்கு. குட்டிய எடுத்து அது கிட்ட காட்டினேன். அது சந்தோசத்துல அங்கயும் இங்கயுமா அசைஞ்சு டான்ஸ் ஆடிச்சு.

அதுக்கு ஏதாவது பேர் வைக்கணும்னு தோணிச்சு. பேர் வைக்கணும்னாலே நான் உங்க கிட்ட தான கேப்பேன். அதனால ஓடி வந்து லேப்டாப் எடுத்து ஆன் பண்ணி, டைப் பண்ண உக்காந்தேன். இன்னொரு தடவ அத பாப்போம்னு நினச்சு திரும்பிப் பாக்குறேன், அத காணோம். கூடவே அந்த குட்டியையும் காணோம்.

ஒரு மாதிரி ஷாக்ல, சரி எழுதுவோம்னு நினச்சு, கீ-போர்ட்ல டைப் பண்றேன், எழுத்து எதுவும் ஸ்க்ரீன்ல வரல. என்னடா இதுன்னு லேப்டாப்ப தொட்டுப் பாக்குறேன், இப்ப லேப்டாப்பயே காணோம்.

அப்படியே நெஞ்சை பிசையுற மாதிரி இருந்துச்சு. கொஞ்சம் தண்ணிக் குடிச்சா நல்லாயிருக்கும்னு தோணிச்சு. என்னது இது, பக்கத்துல வச்சிருந்த தண்ணி பாட்டிலையும் காணோம்? அந்த முத்து, மான் கொம்பு, யானை பொம்மை, சந்தனக்கட்டை, ஜவ்வாது இதெல்லாம் அங்கயே தான் இருக்கு.

அத எல்லாம் எட்டி எடுக்கலாம்னு கைய கொண்டு போய் பக்கத்துல போறேன், திடீர்னு தூக்கி வாரிப் போட்டு சட்டுன்னு எழுந்து உக்காந்துட்டேன். அட, அப்ப இதெல்லாம் கனவா? அடப் போங்கப்பா, நான் மறுபடியும் தூங்கப் போறேன்...


.

Saturday 14 November 2015

அனுமதி வேண்டும்



மனம் உன்னைத் தான் தேடிக்கொண்டிருக்கிறது...
உதடுகள் இல்லையென்று
பொய் கூற துடித்துக்கொண்டிருக்கின்றன...

உன் ஈரத்தின் பாரம் தாங்காமல்
உன்னிடமே குடை சாய்கிறதென் மனம்.

உன்னோடு கொஞ்சம் கரம்கோர்த்து
பாரம் குறைக்கவாயென்று கேட்கத்துடிக்கும்
மனதிடம் ஏதேதோ சொல்லித்
தட்டிக்கழிக்கப் பார்க்கிறேன்...

தானே சுரந்து நிற்கும் கண்களுக்கு
அணை போடும் வழியென்னவென்று
உன்னிடத்தில் ஒரு பதிலிருக்கலாம்...

எப்படி கேட்பதென்று தெரியவில்லை
ஆயினும் கேட்டுத்தான் ஆக வேண்டும்...

இல்லையில்லை, கேள்விகள் பயனற்றவை...
அதற்கான பதில்களும் அவசியமற்றவை...

கொஞ்ச நேரம் உன்னோடு மவுனித்திருக்கிறேனே...
அனுமதி கிட்டுமா?

Thursday 5 November 2015

தூமைத் துணி



அந்த கல்யாண வீடு கலகலப்பாய் இருந்தது. ஒரு வாரம் முன்பே ஊரையே அடைத்து பந்தல் போட்டிருந்தார்கள். பத்து வருடமாய் தவமாய் தவமிருந்து ராக்காயி பெற்றெடுத்த ஒரே மகனான தவசிக்கல்லவா கல்யாணம்.

தட்டான்விளைக்காரியான ராக்காயி வாக்கப்பட்டு லெவிஞ்சிபுரத்துக்கு போன போது ஊரில் அவ்வளவு மழை. அப்பன் ஆத்தாவயும் ஒண்ணுமண்ணா பழகின ஊரையும் விட்டுவிட்டு வந்தது முதலில் அவளுக்கு அலுப்பைக் கொடுத்தாலும் அந்த மண்ணோடு அவளும் சீக்கிரமே ஐக்கியமாகி போயிருந்தாள். கோலப்பன் தலையாரி மகன் என்பதால் ராக்காயிக்கு ஊரில் பெருமதிப்பு. ஊரில் எங்கு விசேசமென்றாலும் அவளைத் தான் முன்னிறுத்துவார்கள்.

எல்லாம் நாலஞ்சு மாசம் தான். அதன் பிறகு ராக்காயி போகுமிடம் எல்லாம் “ஏன்த்தா, விசேசம் ஏதும் உண்டா?”, “இன்னுமா ஒரு புழு பூச்சி உண்டாவல” என்பது போன்ற விசாரிப்புகளை எதிர்க்கொள்ள ஆரம்பித்தாள். மருமகளை தலைமேல் தூக்கி வைத்துத் திரிந்த பேச்சியம்மா மட்டும் மருமகளை ஒரு வார்த்தை கடுத்து சொன்னதில்லை.

“ஊரு ஆயிரம் சொல்லுமாத்தா. அந்த மாகாளி கண்ணத் தொறந்தா எல்லாம் தானா சரியா போவும். நீ கெடந்து சங்கடப் படாத” என்று பேச்சியம்மா அவளை சமாதானப்படுத்தினாலும் என்னவோ அது தன்னோட பெருமைக்கு ஏற்பட்ட இழுக்கு என்றே நினைத்து கோவில் கோவிலாக ஓடிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு மாதம் மாதவிடாய் வரும்போது இருட்டு அறைக்குள் ஆங்காரமாய் அரற்றிக் கொண்டிருப்பாள்.

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, பத்து வருடங்கள் ஒவ்வொரு கோவில் படியாய் ஏறி இறங்கி, அக்கம் பக்கம் இருக்கும் வைத்தியர்கள் எல்லாரிடமும் காசிரைத்து, ஒருவழியாய் ஜனித்தவன் தான் தவசி. தவமாய் தவமிருந்து பெற்ற மகனுக்கு ஒரு விசேசம் என்றால் பெருமை இருக்கத் தானே செய்யும்.. தான் மாமியார் ஆகப் போகிற சந்தோசம் அவள் ஆட்டத்தில் எதிரொலித்தது.

“ஏலேய் முத்தையா, எங்கலே போன, அடுப்பங்கரைல ஆத்தா உன்ன தேடிகிட்டு கெடக்கு” பேச்சியம்மா குரலைக் கேட்டதும் மடித்திருந்த இடுப்பு வேஷ்டியை கால் வரை அவிழ்த்துவிட்டுவிட்டு சமையலறை நோக்கி ஓடினான் முத்தையா.

கையை கட்டிக் கொண்டு பவ்யமாய் நின்றுக் கொண்டு “ஆத்தா கூப்ட்டியளா?”

“என்னலே, கண்ணாலத்துக்கு இன்னும் நாலு நாலு தான் கெடக்கு. வேல கீல எல்லாம் ஒழுங்கா நடக்குவா?”

“அதெல்லாம் நல்லா போயிட்டு இருக்கு ஆத்தா. ஐயா இல்லாத கொற தெரியாத அளவு நம்ம சொந்தகாரவுங்க எல்லா வேலையும் இழுத்துப்போட்டுட்டு செய்றாவ”

“என்னவோ போலே. மூர்த்தத்துணி எடுக்கப் போன எளயவ பழஞ்சீல மாதிரி ஒண்ண தூக்கிட்டு வந்துருக்கா. ராக்காயி மருமவன்னா சும்மாவாலே. அப்படியே பந்தல்ல ரதி மாதிரி ஜொலிக்கண்டாமா?”

முத்தையா பதில் ஏதும் சொல்லாமல் தலையை சொறிந்துக் கொண்டு நின்றிருந்தான். பின், அவர்கள் வீட்டு விவகாரமெல்லாம் வேலைக்காரனாகிய அவனுக்கு எதற்கு? கொழுந்தன் பொஞ்சாதிய குறை சொல்லவில்லை என்றால் ராக்காயிக்கு தூக்கம் வருவதில்லை.

ஆச்சு. அப்படியும் இப்படியுமாய் தடபுடலாய் கல்யாணமும் நடந்து முடிந்தாயிற்று. நாகர்கோவில் பொண்ணு. பெயர் அமுதா. பார்க்க அப்படியே ரதி மாதிரி தான் இருந்தாள். படித்தப் பிள்ளை வேற. தவசியையும் அமுதாவையும் ஜோடியாக பார்த்தவர்கள் அத்தனைப் பேரும் சொல்லிக் கொண்டது இது தான்.

“தறுதலக்கு வந்த வாழ்வ பாருடே. கொரங்கு கைல பூமாலைய குடுத்துருக்கான் பொண்ண பெத்தவன். இனி அந்தப் புள்ள என்ன பாடுப் படப் போவுவோ?

ஊரார் என்ன பேசிக்கொண்டிருந்தால் கண்ணப்பனுக்கு என்ன. தலையாரி குடும்பம். ஊருக்குள் பாதி தோப்பும் துறவும் அவர்களுடையது தான். ரெண்டு ப்ளசர் கார் இருந்தும் புல்லட்டில் பகட்டாய் ஊர் சுற்றும் மாப்பிள்ளை. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர நாலஞ்சு வேலையாட்கள். பெண் பார்த்து சம்மந்தம் முடிவு செய்த அன்றே பத்து பவுனில் மருமகளுக்கு காசுமாலை போட்ட மாமியார்காரி. “கட்டுன துணியோட பொண்ணை குடுப்பேய், நாம் பாத்துகிடேன் எம் மருமவள” என்று வாயெல்லாம் பல்லாய் சிரித்த ராக்காயியை பார்த்து பெண்ணை குடுக்க மாட்டேனென்று மூஞ்சியில் அடித்தார்ப்போல் சொல்லவா முடியும்? தவிர தலையாரி குடும்பத்திற்கு பெண் கொடுக்க அசலூர் ஆட்கள் எல்லாம் நான் முந்தி, நீ முந்தி என்று வரிசையில் நிற்க, தன் பெண்ணுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்ததில் எந்த தகப்பன் தான் பெருமைக் கொள்ளாமல் இருப்பான். “ஊர்க்காரப்பயப்புள்ளைவளுக்கு வேற என்ன சோலி. பொறாமைல போட்டுக் குடுத்துட்டு திரிவானுவ” இப்படித் தான் அரசல் புரசலாய் காதில் விழுந்த சேதிகளையெல்லாம் புறம்தள்ளி விட்டிருந்தார். தாயில்லா புள்ளைய கஷ்டமேப் படாமல் நல்லதொரு சம்மந்தத்திற்கு கட்டிக் கொடுத்த திருப்தி அவருக்கு.

“போட்டோ எடுக்கணும், அப்படியே கொஞ்சம் நெருங்கி நில்லுங்க” போட்டோக்காரனின் கட்டளைக் கேட்டு பொண்டாட்டி தோளில் கைப்போட்டு “ஈஈஈ” என்று இளித்தான் தவசி. ராக்காயி தூரத்தில் நின்று மகனையும் மகனின் முதலிரவு அறையையும் மேற்பார்வைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ராத்திரி முழுதும் உறக்கம் வரவில்லை ராக்காயிக்கு. “எல்லாம் நல்லபடியா முடிஞ்சி ஊரே மெச்ச ஒரு புள்ளைய பெத்துக் குடுத்துரனும் எம்மருமவ. அதுக்கு நீ தானாத்தா தொண இருக்கனும்” குலதெய்வத்தை வேண்டிக் கொண்டே தூங்கியும் போனாள்.

முதலிரவு அறை திறக்கப்படும் சத்தம் கேட்டு நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உக்கார்ந்தாள். கசங்கிப் போய் சோம்பல் முறித்துக் கொண்டு வந்த அமுதாவைப் பார்த்து “ஏங் ஆத்தா, இவ்வளவு சீக்கிரம் எழும்பிபுட்ட. செத்த நேரம் நீயும் ஒரங்கியிருக்கலாம்ல, பாரு அந்த கழுத மூதி எப்படி மலந்து கெடந்து ஓரங்குவுன்னு. அவசரத்துக்கு பொறந்தவன், ராத்திரி ஒண்ணும் மொறட்டுத்தனம் பண்ணலயே, பூ மாறி தான பாத்துகிட்டான்?” என்றாள்.

அமுதாவுக்கு வெக்கம் பிடுங்கித் தின்றது. “போங்கத்த” என்று சிணுங்கியவாறே வலது பெருவிரலை வாயில் கடித்தப்படி வெட்கத்தோடு அடுப்படிக்கு ஓடலானாள்.

“என்ன இந்தப்புள்ள இப்படி வெக்கப்படுது?” ராக்காயிக்கு மகனை நினைத்து பெருமையாய் தான் இருந்தது.

“பத்தே மாசத்துல பொறந்து வருவாம்லே என் சிங்கக்குட்டி” நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு விறகெடுக்க கிணத்தடி வரை சென்று திரும்பியவள் உள்ளே அமுதாவை சீண்டிக் கொண்டிருந்த தவசியை பார்த்ததும் சுருக்கென்று முள் தைத்தவள் போல் முகம் சுளித்தாள்.

“என்னலே, கல்யாணம் ஆன மறுநாளே இந்த ஆத்தா மொகம் தொரைக்கு மறந்துப் போச்சோ. முழிச்சதும் எங்கிட்ட தான வந்து நிப்ப. இப்ப பொண்டாட்டி முந்தி சொகமா இருக்கோ. இந்தா, ஏ மூதேவி, அவுத்துப் போட்டு எந்திரிச்சி அப்படியே இங்கன வந்து நிக்க. குளிச்சி சுத்தபத்தமா வரணும்னு கூட ஓங் ஆத்தாக்காரி சொல்லித் தரலியா?”

“சவத்த மூதி, கெட்டிகிட்டு வந்த அன்னிக்கே புள்ளைய முந்திக்குள்ள மொனைய பாக்குறா. எங்க வந்து எவ சொத்த புடுங்கலாம்னு நிக்கா. இழுத்து வச்சி கொண்டைய அறிஞ்சிர மாட்டேன்” ஆத்திரத்தோடு கொண்டையை அவிழ்த்து விட்டு பின் முடிந்து கொண்ட மாமியார்காரியைப் பார்த்து வெலவெலத்துப் போய் நின்றுக் கொண்டிருந்தாள் சற்று முன் முகமெல்லாம் வெட்கம் பிடுங்க சிவந்திருந்த அமுதா.

மெல்ல தவசியை ஏறெடுத்துப் பார்த்தாள். அவனோ “விடு ஆத்தா, புது பொண்டாட்டி. கொஞ்சம் ஆசப்பட்டுட்டேன்” என்றவாறே ஆத்தாவின் குரலில் ஆட்டுக்குட்டியாகி அவள் முந்தியை பிசைந்துக் கொண்டிருந்தான். கண்கள் குளமாக விருட்டென்று குளியலுக்கென்று வைத்திருந்த தடுப்பில் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

“ந்தா... புதுசா கட்டிக்கிட்டதுங்க. இளந்தாரி ஜோடிங்க. அப்படி இப்படி தான் இருக்கும். நீ ஏன் இப்படி பூட்டு போடணும்னு கெடந்து அடிச்சிக்குற. விடாத்தா. நாளும் கிழமையும் போனா எல்லாம் அலுத்துப் போவும்” பேச்சியம்மாளின் குரலை ராக்காயி காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. அதன் பின் ராக்காயிக்கு மருமகளைக் கண்டால் ஒரு இதுதான். என்ன ஒன்று, அந்த குடும்பத்து வாரிசு அவள் வயிற்றில் வளர்ந்தாக வேண்டுமேயென்று மகனோடு இரவு மட்டும் படுக்க அனுப்பி வைப்பாள். மற்ற நேரங்களில் அவள் பார்வை மீறி தவசியால் அமுதாவை நெருங்கவே முடியாது.

கல்யாணம் முடிந்து இருபது நாட்கள் ஓடி விட்டிருந்தன. என்னதான் மாமியார்காரி கரிச்சுக் கொட்டினாலும் விருந்து, மறுவீடு, சொந்தக்காரங்க வீடு என்று அலைந்ததில் அமுதா சந்தோசமாகவே இருந்தாள். கல்யாண விருந்துக்கு தன் ஒண்ணுவிட்ட சித்தி வாங்கிக் கொடுத்த புதுத்துணியை உடுத்தியபடி வீட்டு வாசலை மிதித்தவள் காலுக்கிடையில் சட்டென்று உணர்ந்தாள் அந்த வித்தியாசத்தை.

“வீட்டு விலக்காவி போச்சு போலயே” என்றவாறே விறுவிறுவென முன்னறையைக் கடந்து படுக்கையறைக்குள் நுழைந்து அந்த பொட்டலத்தை கையில் எடுத்தவள் மீண்டும் போன வழியே திரும்பி வந்து கழிவறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

“மூணாது வீட்டு மருமவ பொட்டப்புள்ளைய பெத்துப் போட்ருக்கா. என்னதாஞ்சொல்லு, தலைச்சான் புள்ள ஆம்பள புள்ளையா பொறந்தாதான் நமக்கெல்லாம் மருவாத” எதிர்த்தவீட்டு பரிமளத்திடம் பேசியபடியே முன்னறையை கடந்த ராக்காயி கண்களில் பட்டது அமுதாவிடமிருந்து வழிந்திருந்த ரெத்த துளிகள்.

“எந்த எளவெடுத்தவ இத செஞ்சான்னு தெரியலயே. ஏளா, ஏ மேனாமினுக்கி, என்னட்டி இது? நாசமா போறவளே, ஏன்ளா ஏங் வூட்ல வந்து எளவெடுக்க? த்தூத்தேறி, பிள்ளைய பெத்துத் தருவான்னு பாத்தா தூமைய கொண்டு வந்து நடு வீட்ல வடிச்சி வச்சிருக்கா” தீயில் போட்ட வத்தலாய் வெடித்துப் புகைந்துக் கொண்டிருந்தவள் கழிவறைக்குளிருந்து அவசர அவசரமாய் வெளி வந்துக் கொண்டிருந்தவளைக் கண்டதும் இன்னும் ரவுத்திரமானாள்.

“அய்ய அய்ய அய்யோ... இந்த கொடுமைய கேப்பாரு ஆருமில்லியா? ஆம்பளயும் பொழங்குற இடத்துல தூமைய தூக்கிகிட்டு போறாளே” ஒப்பாரி வைத்தவள் கண்கள் அமுதாவின் கைகளில் இருந்த பொட்டலத்தின் மேல் நிலைத்தது. வெடுக்கென்று அதை கையில் வாங்கியவள் மறுகணம் அதை உதறி வீசினாள். “பெரிய தொர வீட்டு மகாராணி. இவ சாமானம் பஞ்சி தான் வேணும்னு கேக்குதாக்கும். யேம்ளா, கொப்பன் காச எல்லாம் இந்த கண்றாவிய வாங்கித் தான் கரச்சியோ? காலேசில போயி இதத் தான் படிச்சிட்டு வந்தியா? இன்னும் என்னென்ன கருமாந்த்ரத்த நான் பாக்க வேண்டியிருக்கோ ஐயோ கடவுளே” அப்படியே தரையிலமர்ந்து கையை வீசி வீசி ஒரு பாட்டம் அழ ஆரம்பித்தாள்.

அமுதாவிற்கு தான் என்ன தவறு செய்தோம் என்றே முதலில் புரியவில்லை. ஏழையாக இருந்தாலும் பெண்ணை சுதந்திரமாக வளர்த்திருந்தாள் வளர்மதி. மாதாமாதம் மாதவிடாய் நேரங்களில் துணி வைப்பதால் தொடை எல்லாம் அறுத்து, சிவந்து மகள் படும் இன்னல்களைப் பார்த்து வருத்தப்பட்டவள் நாப்கின் பாக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்தாள். “பொட்டப்புள்ளைக்கு என்னத்துக்கு இவ்வளவு செல்லம்” என்று கண்ணப்பன் முணுமுணுத்தாலும் மனைவியின் செயல்களுக்கு குறுக்கே நிற்க மாட்டான். அமுதாவினால் மாதவிடாய் நேரங்களில் பூஜையறை தவிர்த்து வீட்டில் சுதந்திரமாய் சுற்றித் திரிய முடிந்தது. ஓட்டு வீட்டுக்குள் அந்த மூன்று நாட்களும் நினைத்த இடத்தில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வலியில் உருள முடிந்தது. அதனால் தான் வளர்மதி தீராத காய்ச்சலில் போய் சேர்ந்த பிறகும் கண்ணப்பனே மகள் படும் பாட்டைப்பார்த்து வலிக்கு ஓமத்தண்ணியும் ரெத்தப்பாட்டுக்கு நாப்கினும் வாங்கிக் கொடுத்து பழகியிருந்தான். அக்கம் பக்கம் பாட்டி வைத்தியம் கேட்டுக் கொண்டு வந்து வெந்தயமும் கொத்தமல்லியும் வாங்கிக் கொடுத்தான்.

ஒரு கை நிறைய கொத்தமல்லி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து வெறும்வயிற்றில் தண்ணீரை குடித்ததில் அமுதாவுக்கு மாதவிடாய் நேரங்களில் உருவாகும் வாயுத்தொல்லை மட்டுபட்டிருந்தது. பச்சை முட்டையை அப்படியே உடைத்து குடுத்தால் இழந்து போன ரெத்தம் ஊறி, வலி அறவே இருக்காது என்று பக்கத்து ஊர் பாம்படக்கிழவி சொன்னதைக் கேட்டு மகள் சுருண்டு படுத்திருந்தால் நாளுக்கொன்று என்று ஐந்து நாட்டுக்கோழி முட்டை வாங்கிக் கொண்டு கொடுப்பதையும் வழக்கமாக்கி கொண்டிருந்தான்.

கல்லூரி படித்தக்காலங்களில் தன் சோட்டுக் பெண்களுக்கு அமுதா தான் மருத்துவச்சி. “இந்தா, உனக்கு ஜலதோஷம் பிடிக்காதுனா வலி இருக்குற நேரத்துல உள்ளங்கை அளவு வெந்தயத்த எடுத்து வாய்ல போட்டு டபக்குன்னு தண்ணி விட்டு முழுங்கு, வலி போய்டும்” என்று அவள் சொன்னதைப் போல் செய்து நிவாரணமடைந்த வசந்தி அவளை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடியிருக்கிறாள். அப்படிப்பட்டவளைத் தான் இதோ மாமியார் இப்படி கரித்துக்கொட்டிக் கொண்டிருக்கிறாள். செய்வதறியாது திகைத்து, பின் சற்று நிதானித்து, “அவசரத்துல கீழ சிந்தினத கழுவாம போயிட்டேன்த்த, இந்தா கழுவிடுறேன்”. முற்றத்திற்கு ஓடிச் சென்று விளக்குமாறும் வாளி நிறைய தண்ணீரும் எடுத்துக் கொண்டு வந்தவளை அப்படியே எரித்து விடுவதைப் போல் பார்த்தாள் ராக்காயி.

“போதும் தாயி, நீ பண்ணி கிழிச்சதெல்லாம். பண்ற காரியத்த பாத்தா ஊர் மேயுற நாயாவுல இருப்ப போலிருக்கு. ஏம்ளா, இப்படியாளா விசுக்குவிசுக்குன்னு தூமய தூக்கிகிட்டு நடுவூட்ல ராவுவ? இஞ்சேரு, அடக்க ஒடுக்கமா இருக்குறதா இருந்தா இங்கன கெட. இல்ல, பொட்டிய தூக்கிக்கிட்டு இப்பவே கொப்பன் ஊட்டுக்கு போயிரு” என்றவள் பின்புறமாக பார்த்து “ஏளா, குருவாத்தி, அந்த தூமய கழுவி விட்டு கொஞ்சம் மாட்டு மோள தொளிச்சி வுடு. இந்த நாசமா போறவ வந்து வீடே வெளங்காம போச்சி” என்றபடி பக்கத்து வீட்டை நோக்கி நடந்தாள்.

அப்படியே திரும்பி பார்த்தவள் “இந்தா, நீ பாட்டுக்கு சிங்கிடி சிங்கிடின்னு உள்ளார வந்துறாத. தூம நிக்குற வரைக்கும் அங்குட்டும் இங்குட்டும் லாந்துரத வுட்டுட்டு பொறக்கால இருக்குற அறைக்குள்ள அடைஞ்சு கெடந்துக்க. ஏ, ந்தா, இந்த பஞ்சி வச்சிக்குற பழக்கத்த இன்னோட மறந்துரு. ஓம் புருஷன் கிழிஞ்ச வேட்டி அந்தா அந்த தேங்காப் பத்தயத்துல போட்டு வச்சிருக்கேன், குருவாத்திய விட்டு எடுத்துக் கேட்டு, அத கிழிச்சு வச்சுக்க. இப்படி ஆம்பளைங்க பொழங்குற கக்கூசுக்குள்ள போவாத. பின்னால ஒரு ஓல மறைப்பு இருக்குலா, அதுக்குள்ள போயி துணி மாத்து. எளவெடுத்தவளே, தூமத் துணிய நாலு பேரு பாக்குற மாதிரி வெளில காயப்போடாத, உள்ளயே தொவச்சிப்போடு. எங்கருமம், இப்படி ஒருத்திய புடிச்சிகிட்டு வந்துருக்கேன்” தலையிலடித்துக் கொண்டே நடையை கட்டினாள்.

அமுதா இடிந்து போய் அப்படியே அமர்ந்து விட்டாள். தவசியிடம் சொல்லலாமென்றால் எங்கே, அவளை வீட்டுக்குள் விட்டால் தானே. அவனும் ஆத்தா பேச்சைக் கேட்டு இவள் என்னவானாள் என்று எட்டிக் கூட பார்க்கவில்லை. எப்படியோ அப்படியும் இப்படியுமாய் ஐந்து நாட்களை வலியோடு கழித்து விட்டு அடுத்த மாதம் தாய் வீட்டில் தங்கலாம் என்றிருந்தவள் தலையில் அடுத்த இடியை இறக்கினான் கண்ணப்பன்.

“இந்தா பாராத்தா, கட்டிக்கிட்டு போன இடத்துல அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். நீ இங்க இருக்குற மாதிரியே சொகுசா அங்கயும் இருக்கணும்னு நினச்சா எப்படி? கொஞ்சம் அசஞ்சு குடுத்து போத்தா. இந்த அப்பனால முடிஞ்சது நாலு பச்ச முட்டையும் கொத்தமல்லியும் தான். வாங்கித் தாரேன், நீ எப்படியாவது சமாளிச்சுக்க”

“தாயி, பொண்ணா பொறந்த பொறப்பு நாய் பொழப்பாத்தா. இந்தா எம்மருமவ இந்த ஆட்டம் போடுறாளே, பத்து வருசமா புள்ள இல்லாமத் தான் கெடந்தா. மாசாமாசம் அவளுக்கும் வழியத்தான் செஞ்சுது. வேளாவேளைக்கு கஞ்சிய காய்ச்சி குடுத்து, அவள நல்லா தான் பாத்துக்கிட்டேன் நானும். உன்னைய மாதிரி அவளுக்கு கஷ்டமா இருக்காது தாயி. இம்முடுகூண்டு துணிய கிளிச்சி வச்சானா ஒரு நாளைக்கு தாங்கும். ரெண்டு நாளைக்கு மேல தூமப் படாது. அவளுக்கு அஞ்சு நாளும் நீ வலில துடிக்க துடிப்பு எங்க தெரியப் போவு? வாத்தா, இந்த கஞ்சிய குடிச்சிட்டு செத்த நேரம் ஒரங்கிப்பாரு” பேச்சியம்மா தான் அமுதாவுக்கு கிடைத்த ஒரே ஆறுதல்.

சரியாக ஆறாவது மாதம். நாளெல்லாம் பெய்திருந்த மழையில் அந்த ஓலை மறைப்பு கரையான் தட்டிப் போயிருந்தது. கரையான்களோடு தேளும், கரப்பான் பூச்சியும் இன்ன பிற ஜீவராசிகளும் அங்கே தான் மழைக்கு ஒதுங்கியிருந்தன. போதாதகுறைக்கு கொஞ்சம் பலகைகளை வேறு மழைக்கு ஒதுக்கி போட்டு வைத்திருந்தார்கள். துணி மாற்றும் பொழுது யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பதற்றம் வந்திருந்தது அமுதாவிற்கு. தவசியிடம் சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆசை வந்தால் மட்டும் அணைக்க வருபவன். ஒவ்வொரு மாதமும் துணியை வைத்து வைத்து தொடை எல்லாம் புண்ணாகி அவள் படும் அவஸ்தையை கூட கண்டுக்கொள்ளாதவன். வாஞ்சையாய் ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லாதவன்.

அமுதாவிற்கு வலி சுருக்சுருக்கென்று தைத்தது. கறைப்பட்டு விட்ட பாவாடையை லாவகமாய் கழட்டி கல்லில் போட்டு விட்டு துண்டைக் கட்டிக் கொண்டு கிணற்றில் வாளியை இறக்கி நீர் இறைக்க துவங்கினாள்.

“ஏட்டி மேனாமினுக்கி, எங்களா போன? போனா போன இடம்னு கதியா கெடக்க வேண்டியது. சீக்கிரம் வாளா”

“போச்சு. மாமியாக்காரி கூப்பாடு போட ஆரம்பிச்சுட்டா. இனி வந்து தொவைக்கலாம்” என்று நினைத்தப்படி அவசரம் அவசரமாக சேலையை உடுத்தி, பொந்துக்குள் சொருகி வைத்திருந்த தூமைத் துணியை மடித்து கால்களுக்கிடுக்கில் சொருகிக் கொண்டு “ந்தா வந்துட்டேன்த்த” என்றவாறே விரைவாக நடக்கலானாள்.

மடித்து வைத்திருந்த துணிக்குள் குஞ்சும் குளுவானமுமாய் குடும்பம் நடத்திய தேள் இப்பொழுது நெளிய ஆரம்பித்திருந்தது.


Thursday 29 October 2015

திக்சா.... சக்தியோட பறக்கும் வெர்சன்


கடந்த இருபத்தி ஆறாம் தேதி, அம்மாவ பாக்கப் போயிட்டு ஹோம்ல பசங்களோட படமும் பாக்கப்போயிட்டு மனசு நிறைய சந்தோசத்தோட வீட்டுக்கு வந்தா கீயா கீயா-ன்னு ஒரு மெல்லிய சத்தம்.

என்னடா இது, எங்க இருந்து இந்த சத்தம் வருதுன்னு யோசிச்சவ பக்கத்து பானைல பாக்குறேன், யுவா எதையோ கொத்திகிட்டு இருக்கான்... மனசுல டக்குன்னு ஒரு திகில். ஒரு வேளை அதுவா இருக்குமோன்னு...

நளன் தமயந்தி ஜோடி முட்டைப் போடுறது ரொம்ப ரேர். வாங்கிட்டு வந்த புதுசுல ஒரு முட்டைப் போட்டு அஞ்சு நாள்லயே கீழ தள்ளி உடச்சிடுச்சு. அப்புறமா ரொம்ப மாசங்கள் கழிச்சு ஒரு முட்டை போட்டுச்சு. அதுவும் குஞ்சு பத்து நாள் வளர்ச்சியடைஞ்ச நிலைல முட்டைக்குள்ளயே செத்துடுச்சு. அடுத்து ஒரு மாசம் கழிச்சு ரெண்டு முட்டைப் போட்டுச்சு...

அந்த நேரம் தான் யுவா-மந்தாகினி ஜோடிக்கு பாரதி பிறந்த நேரம். பாரதி கொஞ்சம் பெருசானதுமே மந்தாகினி வேற முட்டைப் போட ட்ரை பண்ணிட்டு இருந்துச்சு. உடம்பு ரொம்ப வீக்கா இருந்ததால நளன்-தமயந்தி கூட்டுல போய் உக்காந்த அது, அங்கயே ஒரு முட்டைப் போட்டுடுச்சு.

அப்புறமா, நளன்-தமயந்தி கூட்டுல இருந்து குஞ்சு சத்தம் கேக்க ஆரம்பிச்சுது. நானும் எத்தனைகுஞ்சுன்னு கூட எட்டிப்பாக்கல. சரி, எத்தனை பிறந்தாலும் சந்தோசம்தான், அத டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு விட்டுட்டேன்.

அஞ்சு நாள் முன்னாடி தான் தமயந்தி போட்ட முட்டைங்க ரெண்டும் கூமுட்டைங்கன்னும், மந்தாகினி போட்ட முட்டை பொரிச்சு ஒரு அழகான கருப்பு குஞ்சு இருக்குன்னும் தெரிஞ்சுகிட்டேன். அது மெல்ல பறந்து வந்து கூடு மேல உக்காந்துட்டு இருந்துச்சு. சரி, ராத்திரி நேரம் ஆகிடுச்சு, கூட்டுக்குள்ள விட்ருவோம்னு நான் தான் அத பிடிச்சு கூட்டுக்குள்ள விட்டுட்டு தூங்கினேன்.

மறுநாள் காலைல எல்லாருக்கும் இரையும் தண்ணியும் வச்சுட்டு கூட்டை எட்டிப்பாத்தேன். குஞ்சு உள்ள இருந்து அழகா எட்டிப்பாத்துட்டு இருந்துச்சு. சந்தோசமா சிரிச்சுட்டு அம்மாவ பாக்கப் போயிட்டேன்.

திரும்பி வந்து பாத்தப்ப யுவா எதையோ கொத்திகிட்டு இருந்துச்சா, சட்டுன்னு அய்யய்யோ ஒருவேளை குஞ்சா இருக்குமோன்னு பயம். ஓடிப் போய் பானைக்குள்ள எட்டிப் பாத்தேன். அதே தான். பயந்து அழக் கூட முடியாம பாவமா பாத்துட்டு இருக்கு. எப்படியோ கூட்டை விட்டு வெளில வந்தத இந்த யுவா கொத்தியிருக்கு. அது தவறி பானைக்குள்ள விழுந்திருக்கு. அப்படியும் விடாம யுவா அத கொத்தி கொதறிடுச்சு.

பதறிப்போய் பானைக்குள்ள இருந்து குஞ்சை வெளில எடுத்துப் பாத்தா ஒரே ரெத்த சகதி. முடி எல்லாம் யுவா கொத்தி பிச்சு எடுத்துடிச்சு. என்னப்பண்ணனே தெரியாம கண்ணுல கண்ணீர் முட்டிடுச்சு. மெதுவா அது உடம்புல இன்பெக்சன் வராம இருக்க ஆயில்மென்ட் தடவி ஒரு பானை எடுத்து, அதுக்குள்ள தேங்கா நார் எல்லாம் வச்சு கூடு மாதிரி பண்ணி அதுக்குள்ள அத வச்சேன்.

இனி திரும்ப கூட்டுக்குள்ள அத விட முடியாது. யுவா கொத்தியே கொன்னுடும். என்னப்பண்ணன்னு தெரியல. நந்துவ கூட்டிகிட்டு கடைக்கு போய் ஒரு செர்லாக் கவர் வாங்கிட்டு வந்து சிரிஞ்ச் மூலமா அதுக்கு கரைச்சு குடுத்தேன். அவசர அவசரமா வாங்கி தின்னுச்சு.

அடுத்தநாள் கொஞ்சம் ஆக்டிவ்வா இருந்துச்சு. இறகே இல்லாத சிறக ஸ்டைலா விரிச்சு சோம்பல் எல்லாம் முறிச்சு பானை மேலஉக்காந்து எல்லாத்தையும் பாத்துட்டு இருந்துச்சு. அத பாத்துக்குறதுக்காகவே காலேஜ் கட் அடிச்சுட்டு வீட்ல இருந்தேன். ஆனா சாயங்காலமே கொஞ்சம் சோர்வாகிடுச்சு.

அப்பப்ப எடுத்து கூட்டுக்குள்ள விட்டேன், நளனும் தமயந்தியும் இரை குடுத்துச்சு. ஆனா யுவா கொத்த பாய்ஞ்சு பாய்ஞ்சு வருது... இப்போதைக்கு எதையும் வேற கூட்டுல மாத்திப் போடமுடியாத நிலை. மந்தாகினி முட்டைப் போட்ருக்கா. அதனால பிடிச்சு மாத்தவும் வழி இல்ல. அதனால குஞ்சை மறுபடியும் நானே வச்சுகிட்டேன்.

எப்பவுமே ரெண்டுமூணு நாள் போனா தான் அதோட ஹெல்த் உண்மையான நிலவரம் தெரியும். அதுக்கு வாழ விதி இருந்தா வாழும், இல்லனா இயற்கைய உன்னால எதுவும் செய்ய முடியாதுன்னு மனசு சமாதானப்பட்டுக்கோன்னு சொன்னார்.

நேத்து, அதான்புதன் காலேஜ் போயே ஆக வேண்டிய நிலைமை. அத தனியாவிடவும் மனசு இல்ல. தம்பி வேற தோப்புக்கு போய்ட்டான். என்னப் பண்ணலாம்னு யோசிச்சு என் கூடவே அத காலேஜ் எடுத்துட்டுப் போயிட்டேன். அங்கப் போய் அழகா பானை மேல உக்காந்துட்டுப் பாத்துட்டு இருந்துச்சு. பிள்ளைங்க எல்லாம் ஹை குருவி ஹை குருவின்னு பாத்துட்டு இருந்தாங்க. சாயங்காலம் வந்ததும் நளன்- தமயந்திகிட்ட விட்டேன், அதுங்க சாப்பாடு குடுத்துச்சு.

அதோட நிலமைய பாத்தா முதல் நாள் விட ரொம்ப சோர்ந்து போயிட்டது நல்லாவே தெரிஞ்சுது. காயம் எல்லாம் வேலை செய்துன்னு புரிஞ்சுது. சரி, என் கூட இருக்குற வரைக்கும் இருக்கட்டும், அப்புறம் கடவுள் விட்ட வழின்னு முடிவு பண்ணி அதுக்கு திக்சான்னு பேரு வச்சாச்சு. திக்சானா சக்திய திருப்பி வாசிச்சா என்னவோ அதான். சக்தி இப்படித்தான என் கூடவே இருந்தான்.

இன்னிக்கி காலேஜ்ல வச்சு பானைய விட்டு வெளில வந்து என் கைக்குள்ள கைக்குள்ள வந்து பதுங்கிச்சு. சாயங்காலமா வீட்டுக்கு வந்தாலும் ஓடி வந்து டைப் பண்ண விடாம கைக்குள்ள வந்து தூங்குது.

முதல் நாள் அதோட காலுல இருந்த வலு இப்ப இல்ல. சரியா எழுந்து நிக்க முடியல. திக்சாவுக்கு என்ன வேணா ஆகலாம், ஆனா ஒரு அன்பான உயிர் என் நாட்களை கொஞ்சம் பொறுப்போட வச்சிருக்குன்னு நினைக்குறப்ப.....

பொதுவா  நான்  என்  வீடு  சம்மந்தப் பட்ட  போட்டோக்கள்  வெளில  போடுறது  இல்ல.  ஆனா  திக்சாவுக்கு  எல்லாருடைய  பிரார்த்தனையும்  வேணும்.   திக்சா  நம்ம  வீட்டுப்  பிள்ளையா  திரும்பி  வரணும். அதுக்கு  நான்  ஒரு  ஜோடி  வேற  செட்  பண்ணிக்  குடுக்கணும்... அதனால  மட்டுமே  அதோட  போட்டோவ  நான்  இங்க  போட்ருக்கேன்.  ப்ரார்த்திச்சிக்கோங்க...

லவ் யூ திக்சா..... நீ சீக்கிரம் சரியாகி, என் கூட சண்டை எல்லாம் போடணும். என்னை ரெஸ்ட் எடுக்க விடாம பறந்து பறந்து கொத்தணும்... சக்திக்கு அடுத்து என் சண்டைக்காரி நீதாண்டி... சீக்கிரமே  சரியாக எங்க எல்லோரோட பிரார்த்தனைகள்  திக்சா....


.

Wednesday 28 October 2015

அம்மாவின் நாள் இது



திங்கட்கிழமை. 26/10/2015. அஞ்சு வருஷம் ஆச்சு. ஒரு கஷ்டம் வந்தா நாள் போக போக அதெல்லாம் பழகிடும் மறந்துடும்னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு ஆரம்ப நாட்கள்ல பெருசா கஷ்டம் தெரியல. எனக்குள்ளயே ஒரு கட்டுப்பாட்ட போட்டுட்டு இறுக்கமா இருந்துட்டு இருந்துருக்கேன். ஆனா, இந்தா அஞ்சு வருஷம் ஆச்சு, இப்ப அதிகமா அவ நியாபகம் வருது. ஒரு சின்னக் குழந்தை போல அவ மடியிலயே சுருண்டுட முடியாதான்னு மனசு ஏங்குது. அதிகமான பாரம் மனச அழுத்துற மாதிரி ஒரு உணர்வு.

அந்த நாள் எனக்கு ஏனோ சரியா நியாபகம் வரவே மாட்டேங்குது. ஒரு வேளை மறக்க நினச்சு மறக்க நினச்சு மறந்துடிச்சோ என்னவோ. காலங்காத்தாலயே இட்லி வேணாம்னு அடம்பிடிச்சவள மிக்சர் தரேன், சிப்ஸ் தரேன்னு கொஞ்சி, ஏமாத்தி ஊட்டி விட்டுட்டு, வாசல்ல விளையாடிட்டு இருந்த ப்ரெண்ட்ஸ் கிட்ட என் பொண்ணைப் பாத்துக்கோங்கடா இந்தா வந்துடுறேன்னு சொல்லிட்டு போனவ தான். இன்னிக்கி வரைக்கும் அவள காணோம்.

சாவு பத்தி நான் எப்பவுமே பயந்தது இல்ல. ஆனா ஒரு மரணம் இத்தன வலிய குடுக்கும்னா, இத்தன கண்ணீரை குடுக்கும்னா, அப்படி ஒரு மரணத்த நான் வெறுக்குறேன்...

என்னன்னு சொல்ல?. எப்படியாவது இதுல இருந்து மீண்டு வரணும்னு தான் கொஞ்ச நாளாவே போராடிட்டு இருக்கேன். அதனால தான் ஞாயிற்றுக் கிழமை ராத்திரி அப்பா வந்து அம்மாவ பாக்க நாளைக்கு போறோம், நீ வரியான்னு கேட்டப்ப முதல்ல முடியாதுப்பா, நான் காலேஜ் போகணும்னு சொல்லிட்டேன். “சரி அப்படினா, உன்னை காலேஜ்ல விட்டுட்டு நாங்கப் போறோம்”னு அப்பாவும் சொல்லிட்டார்.

காலைல எட்டு மணிக்கு எழும்பினேன். மடமடன்னு பல் தேய்ச்சு குளிச்சு எட்டரைக்கு கிளம்பினேன். கிளம்பி வெளில வந்தா மாமா மாமி ரெண்டு குடும்பம், அப்புறம் அப்பா, தம்பி பாட்டி எல்லாரும் ரெடியா இருக்காங்க. பெரிய மாமா தான் “ஏன் அம்மாவ பாக்க வர மாட்டேங்குற? அம்மாவ போய் பாத்துட்டு அப்புறமா காலேஜ் போயேன்”னு சொன்னார். அப்பாவும் “மாமா சொல்றாங்கல, வாயேன்”ன்னு கூப்பிட, எனக்கும் மனசுக்குள்ள சின்னதா ஒரு ஆசை.

“சரி”ன்னு சொல்லிட்டு கார்ல போய் உக்காந்தேன். நான் முன் சீட்ல, தம்பி கார் ஓட்ட, அப்பாவும் பாட்டியும் பின்னால உக்காந்துகிட்டாங்க. ஊருக்குள்ள போனதுமே அம்மாவோட வாசம் அடிக்குற மாதிரி ஒரு பீல். அதென்ன மாயமோ, உதட்டுல தானே ஒரு புன்னகை வந்து உக்காந்துடுது. அதுவும் இந்த தடவ அம்மாவ சுத்தி குட்டியா ஒரு காம்பவுண்ட் கட்டி வச்சிருக்கிறதா தம்பி சொல்லியிருந்தான். வழக்கமா போற பாதைல போகாம ஒரு தெரு வழியா அம்மாவ பாக்கப் போனோம்.

போன உடனே அந்த காம்பவுண்ட் தான் கண்ணுல பட்டுச்சு. அம்மாவ என்னமோ ஜெயில்ல போட்ட மாதிரி. அப்புறமா, இதுவும் நல்லா தான் இருக்குன்னு மனச தேத்திகிட்டேன். அம்மாவ தடவிக் குடுக்குறப்ப அப்படியே கட்டிப் புடிச்சு “ஓ”ன்னு கதறணும் போல இருந்துச்சு. பொல்லாத வறட்டு திமிர வச்சுட்டு “நான் தைரியமானவ”னு எத்தன நாள் தான் மத்தவங்க முன்னாடி நடிச்சிட்டு இருக்குறது? அடக்கி அடக்கி வைக்க வைக்க தான், இந்தா இப்பவும் ஒரு விம்மலும் அழுகையும் கூடவே இருந்துட்டு இருக்கு.

அன்னிக்கும் அப்படித் தான், மாமா, மாமி, அப்பா, தம்பி எல்லார் முன்னாலயும் அழ வேணாம்னு அம்மாவ புடிச்சுட்டு அப்படியே அவ காலடியில உக்காந்துட்டேன். முந்தின நாளே தம்பி அங்க வந்து தரைல கிடந்த சருகு எல்லாம் கூட்டிப் பெருக்கியிருப்பான் போல. இடம் சுத்தமா கிடந்துச்சு. அதோட, அம்மாவ சுத்தி மண் எல்லாம் கொத்தி, புரட்டி போட்டுருந்துச்சு.

அப்பா மாமா எல்லாரும் சேர்ந்து, கொண்டு வந்த காய்கறி, பழம் எல்லாம் ஒரு வாழை இலைல அடுக்க ஆரம்பிச்சாங்க. மாமிங்க ரெண்டு பேரும் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருந்தாங்க. தம்பி மண் வெட்டி எடுத்து மண்ணை நிரப்பாக்கிகிட்டு இருந்தான். எல்லாமே ஒரு பத்து நிமிசத்துல பரபரன்னு நடந்து முடிஞ்சிடுச்சு. நான் அதுக்குள்ள ஒரு குட்டித் தூக்கமும் நிம்மதியா போட்ருந்தேன். அமைதியா இன்னொரு பத்து நிமிஷம் எல்லாரும் கண்ணை மூடிட்டே நியாபகங்கள்ல மூழ்க, தம்பி “அக்கா, அந்த தக்காளி விதைய எடுத்துட்டு வாயேன்”ன்னு கூப்ட்டான்.

மாமா, “இன்னொரு நாள் விதைக்கலாம்ல”ன்னு கேக்க, அவன் “இன்னிக்கே பண்ணிடலாம் மாமா”ன்னு சொல்லிட்டே என் கைல இருந்து தக்காளி விதைகள ஒரு பக்கமும், மிளகா விதைகள இன்னொரு பக்கமும் விதைச்சு, கொண்டு போயிருந்த தண்ணி எடுத்து விட்டான். கொண்டு போன பழங்கள் சிலத தம்பி அங்கயே வச்சுட்டான். எப்படியும் அணில், காக்கா, குருவின்னு வந்து சாப்பிடும்னு.

அப்புறமா என்னைப் பாத்து, “நீ காலேஜ் போறியா”ன்னு கேட்டான். “ஆமா, அப்படிப் போனா சாயங்காலம் வரைக்கும் நேரம் போய்டும்ல”ன்னு நான் சொன்னதும், “ஹோம்ல பிள்ளைங்களுக்கு சாப்பாடு வைக்குறோம், வாயேன்”ன்னு கூப்ட்டான். அட, அந்த பிள்ளைங்கள நான் மறந்தே போயிட்டேன். “சரி, அப்படினா இன்னிக்கி காலேஜ் கட் அடிச்சுட்டு பிள்ளைங்கள பாக்கப் போய்டுவோம்”னு முடிவு பண்ணி, “வரேன்”னு சொன்னேன்.

என்னை காலேஜ்ல விட்டுட்டு, அப்படியே டவுன் போய் கொஞ்சம் வீட்டுக்கு பர்சேஸ் பண்ணிட்டு அப்புறமா ஹோம் போகலாம்னு தான் அப்பாவும் தம்பியும் முதல்ல ப்ளான் வச்சிருக்காங்க. ஆனா நான் வரேன்னு சொன்னதும் அப்படியே நேரே ஹோமுக்கு போய்ட்டோம். அப்படி போறப்ப மணி கிட்டத்தட்ட பத்தே கால் ஆகியிருந்துச்சு. பசங்க எல்லாரும் ஸ்கூல் கட்டடிச்சுட்டு உக்காந்துட்டு இருக்காங்க.

“ஏய், என்ன எல்லாரும் இங்க இருக்கீங்க? ஸ்கூல் போகலயா? மதியம் தான சாப்பாடு”ன்னு தம்பி ரொம்ப உற்சாகமா பசங்க கிட்ட எல்லாம் பேசிட்டு இருந்தான். பாக்கவே அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு. பிள்ளைங்க நாலஞ்சு பேரு “அக்கா, எப்படிக்கா இப்ப இவ்வளவு அழகா இருக்கீங்க”ன்னு என்னையே சுத்திடுச்சுங்க. ஹஹா, நிஜமா ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. ஒருத்தி “உங்க முடி எப்படி இவ்வளவு அழகா இருக்கு”ன்னு கேக்குறா. மருதாணி பூசி வெள்ளை முடிய மறைச்ச கதைய அவ கிட்ட எப்படி சொல்ல?

சாப்பாடு எல்லாம் பின்னால ரெடி ஆகிட்டு இருந்துச்சு. பசங்க படிக்குறது எல்லாம் பக்கத்துலயே கவர்ன்மென்ட் ஸ்கூல் தான். அதனால சாப்பாட்டு நேரம் வந்தா போதும். இதுங்க என்னன்னா காலைலயே தம்பி வரான்னு தெரிஞ்சு கட் அடிச்சுட்டு இருக்குதுங்க.

திடீர்னு ஒருத்தன் தம்பிக் கிட்ட போய் “எங்கள புலி பாக்க கூட்டிட்டுப் போங்களேன்”னான். தம்பிக்கு என்ன தோணிச்சோ தெரியல, சரி போலாமான்னு சொல்லிட்டே மாமா வந்த குட்டி வேன்ல எல்லாரையும் ஏற சொன்னான். மாமாவையும் மாமியையும் எங்க கார் குடுத்து வீட்டுக்குப் போக சொல்லிட்டான். அப்பா பசங்க கூட வேன்ல ஏறிட்டாங்க.

எனக்கும் எல்லார் கூடவும் போக ஆசை. அப்பாவும் தம்பியும் என்னையே பாத்துட்டு இருக்க, “சரி, நானும் வரேன், ஆனா வேற ஏதாவது படம் பாக்கலாம்”ன்னு சொல்லிட்டே வேன்ல ஏறினேன். போன வாரம் தான் நந்து, நான் முருகேஷ் மூணு பேரும் “ருத்ரமாதேவி” பாக்கப் போயிருந்தோம். ஏண்டா வந்தோம்னு திக்குதிக்குன்னு நான் முழிச்சுட்டு இருந்தாலும் முருகேசும் நந்துவும் நல்லா என்ஜாய் பண்ணினாங்க. அதப் பத்தி கண்டிப்பா இன்னொரு போஸ்ட்ல எழுதுறேன்.

அங்க போனதும் “ருத்ரமாதேவி” போஸ்டர் பாத்துட்டு ஒருத்தன் புலி வேண்டாம், இதுக்கு போவோம்னு அடம்புடிக்க ஆரம்பிச்சான். பொம்பள புள்ளைங்களும் அனுஷ்காவ பாத்ததும் இங்க தான் போகணும்னு ஒரே அடம். என்னடா இது இப்படி வந்து மாட்டிகிட்டோமேன்னு நான் திருதிருன்னு முழிக்கேன். தம்பி தான் ஒருவழியா எல்லாரையும் சமாதானப்படுத்தி, ருத்மாதேவி பாக்கலாம்னு முடிவு பண்ணினான். வேற வழி, நானும் அவங்க கூடவே போய் உக்காந்தேன்.

படம் ஓட ஓட, அந்த புள்ளைங்களோட ஆர்பாட்டம், கைத்தட்டல், டான்ஸ் எல்லாமே மனசுக்கு அவ்வளவு உற்சாகத்த குடுத்துச்சு. படம் எல்லாம் டிவிலயே பாத்துப் பழக்கப்பட்டவங்க, இப்படி தியேட்டர்ல வந்து பாத்ததும் அவங்களுக்கு சந்தோசம் தாங்க முடியல. ஒருத்தி அவ தான் ருத்ரமா தேவின்னு இண்டர்வல் நேரத்துல நடிச்சு வேற காட்டினா. தம்பி எல்லாருக்கும் ஐஸ்க்ரீம் வாங்கிக் குடுத்தான். எந்தப் படத்த செம மொக்கப்படம்னு நான் தலைல அடிச்சு நொந்துகிட்டேனோ அந்தப் படம் இந்த தடவ நல்லாயிருந்த மாதிரி தோணிச்சு. ஒரு வேளை படத்த பாத்துட்டு இருக்காம இந்த புள்ளைங்கள பாத்துட்டு இருந்ததால அப்படி இருந்துருக்கலாம்.

ஒருவழியா படம் முடிஞ்சு கீழ வந்ததும் நாம ஹோட்டல்ல சாப்பிடப் போவோம்னு ஒருத்தன் சொல்ல, “டேய், அதான் வீட்ல பிரியாணி செய்றாங்கல, அங்க போய்டலாம்”னு தம்பி லைட்டா தலைல தட்டினான். “போங்கண்ணே. நான் ஹோட்டலுக்கு போனதே இல்ல”ன்னு அவன் சிணுங்கிக்கிட்டே சொன்னதும் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா போச்சு. மூணு வருசத்துக்கு முன்னாடியெல்லாம் பசங்கள அவுட்டிங் கூட்டிட்டு போயிருக்கேன். அப்ப எல்லாம் நாதன் சாரும் லதா அம்மாவும் (ஹோம் நடத்துறவங்க) சாப்பாடு ரெடி பண்ணியே தந்து விட்ருவாங்க. அதனால ஹோட்டல்ல எல்லாம் பெரும்பாலும் சாப்பிட்டது இல்ல. அப்படியே எப்பவாவது சாப்பிட்டாலும் அது ரோட்டோரமா இருக்குற சின்ன ஹோட்டலா தான் இருக்கும்.

தம்பிக்கும் அவன் அப்படி சொன்னதும் மனசு கஷ்டமா தான் இருந்துருக்கும். வீட்ல ரெடி ஆகிடுச்சுலடா, இன்னொரு நாள் கூட்டிட்டு வரேன்னு சொன்னதும் அறைகுற மனசா எல்லாம் தலையாட்டினாங்க. கடைசியில புள்ளைங்க ஏமாந்து போனது போல ஆகிடுச்சேன்னு சின்ன வருத்தம் மனசுக்குள்ள.

அங்க இருந்து கிளம்பி வீட்டுக்கு வந்தப்ப மணி ரெண்டரை ஆகிடுச்சு. பிரியாணி எல்லாம் ஆறிப் போய் நாதன் சாரும் லதா அம்மாவும் எங்களுக்காக காத்துக்கிட்டு இருந்தாங்க. அப்புறமா எல்லாரும் உக்காந்து சாப்ட்டுட்டு வீட்டுக்கு வந்தப்ப மனசு நிறைஞ்சு போய் இருந்துச்சு.

என்ன தான் நான் அன்னிக்கி ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்தாலும் எதையோ மிஸ் பண்ணின பீல் வீட்டுக்கு வந்ததும் சட்டுன்னு ஒட்டிகிச்சு. கார்த்திக் அடிக்கடி சொல்லுவார், “உனக்கு என்னமோ ஆகிடுச்சு, சோகத்த தூக்கி கொண்டாட ஆரம்பிச்சுட்ட”ன்னு. அது உண்மையா தான் இருக்குமோன்னு எனக்குள்ள நானே இப்ப அடிக்கடி கேள்வி எழுப்பிக்குறேன். ஏதோ ஒரு மவுனம், ஏதோ ஒரு தேடல் தொண்டைக்குள்ள விக்கிகிட்டேயிருக்கு.

வாழ்க்கைல எல்லா விதமான உணர்வுகளையும் அனுபவிச்சிருக்கேன். அழுக வந்தா கூட “ஓ”ன்னு அழுது கார்த்திக் உயிர எடுத்துட்டு நான் அந்தப் பக்கமா ஜாலியா சுத்திட்டு இருப்பேன். ஆனா சோகமா மட்டும் இருந்ததே இல்ல. அதனால தான் இப்ப மொத்தமா எல்லாத்துக்கும் சேர்த்து அனுபவிக்கிறேனோ என்னவோ?

என்ன ஒண்ணு, ஆறுதல் சொல்றவங்கள பாத்தா மட்டும் பத்தடி தள்ளியே நின்னுக்குறேன். அட, என் சோகம், நான் கொண்டாடுறேன், யாரும் தடுக்க வேணாமே.... எவ்வளவோ பாத்துட்டோம், இதையும் தான் பாத்துடுவோமே ஒரு கை....


.

Tuesday 27 October 2015

அட பைத்தியக்காரா...



அதோ அந்த படித்துறையில்தான்
கால்கள் நனைந்தபடி கைக்கோர்த்திருந்தோம்...

கொஞ்சம் புன்னகை,
கொஞ்சம் வெட்கம்,
நிறைய காதலுமாய்
சிணுங்கிக் கொண்டிருந்தேன்...

என்னை உனக்கு எவ்வளவு பிடிக்குமென்றால்
சிறு குழந்தைப் போல் கைவிரித்து
இவ்வளவு பிடிக்குமென்று சொல்லிவிடுவேன் தான்...

ஆனால் நீயோ
படங்கள் வரைந்து பாகங்கள் குறி
என்பதுபோல் தனித்தனி பட்டியலிட சொல்கிறாய்.

எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும்
முறைப்பையன் தான் கண்முன் வருகிறான்...
நானென்ன செய்வது?
பார்த்தாயா பார்த்தாயா கோபித்துக் கொள்கிறாய்...

அடப் போடா பைத்தியக்காரா
காதல் என்ன கணக்கு பரிட்சையா?
ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்துவதற்கு?

ஒரு திருட்டுப் பூனையின்
அத்தனை குணாதிசயமும்
உன்னிடத்தில் உண்டு.
மொத்தமாய் திருடிக் கொண்டாலும்
கோபிக்கவே முடிவதில்லை உன்னிடம்.

இதோ பார்த்தாயா?
தன்னந்தனியாய் உன் பெயரை
புலம்ப வைத்துவிட்டு
ரகசியமாய் சிரித்துக் கொள்கிறாய்.

ஒன்றும் விளங்கவில்லை போடா
நம் காதலைத் தவிர....

Friday 16 October 2015

தொட்டிக்குளியலும் குட்டித் தூக்கமும்



இந்தா ஒரு படம் இருக்குல. அந்த படத்த பாத்த உடனே மனசுக்குள்ள அப்படி ஒரு சந்தோசம். “ஹே..... நாங்க குளிக்கப் போறோம்னு டவ்வல தலைக்கு மேல கறக்கிகிட்டே ஓடுன காலம் எல்லாம் மடமடன்னு நினைவுகளா நான் முந்தி நீ முந்தின்னு மனசுக்குள்ள முட்ட ஆரம்பிச்சிடுச்சு. இப்ப எத முதல்ல எடுத்து விட, எத ரெண்டாவதா எடுத்து விடன்னு ஒரே கொழப்பம். அதனால நான் பாட்டுக்கு நினைவுகள சில்லற மாதிரி சிதறி விடுறேன், நீங்க அப்படியே பாலோ பண்ணிக்கோங்க...

நாம இப்ப இருபத்தியஞ்சு வருஷம் முன்னால போகப்போறோம். ரைட்டு விடுங்க, ஒரு மூணு வருசத்த கழிச்சுட்டு இருபத்திரண்டு வருசத்துக்கு முன்னால போவோம். அப்ப தான் எனக்கு கொஞ்சம் வெவெரம் தெரிஞ்ச வயசா இருக்கும்.

அப்ப எங்க வீட்டை சுத்தி எங்களுக்குன்னு ஏழு ஏக்கர் உண்டு. சித்தப்பாவோடதும் சேர்த்து பதினாலு ஏக்கர். அதனால வயல், தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, காய்கறி தோப்புன்னு தனித்தனியா பிரிச்சு ஒவ்வொரு வகை மரமும் நட்டு வச்சிருப்பாங்க. வயல் வரப்புலயும் பாத்தி வரப்புலயும் மாமரங்கள் நிக்கும். அப்படியே தோப்புக்கு ஓரமா போனா வருசையா கொல்லாமரங்கள். நடுநடுவுல சக்க மரங்கள். இதெல்லாத்துக்கும் தண்ணி அடிக்க ஒரு பம்பு செட்டு.

இந்த பம்பு செட்டு தான் எங்களுக்கு ஆட்ட பூமி. அதுவும் கிணறு பக்கத்துல மோட்டார் ரூம். மோட்டார போட்டா முதல்ல தண்ணி ஒரு சின்னத் தொட்டியில வந்து பாயும். அது நிரம்பி அடுத்து இருக்குற பெரிய தொட்டியில பாயும். தோப்புக்கு தண்ணியடிக்க அந்த சின்னத் தொட்டியே போதும். இந்த பெரிய தொட்டி எதுக்குனா மாடுகள குளிப்பாட்ட. கிட்டத்தட்ட அஞ்சு மாடுகள ஒரே நேரம் தொட்டிக்குள்ள இறக்கி, தொட்டி நிறைய தண்ணி நிரப்பி மாடுகள நீந்த விட்டு குளிப்பாட்டுவாங்க. நானும் தம்பியும் மாடுங்க மேல உக்காந்து வேடிக்கைப் பாத்துட்டு இருப்போம். பின்ன, தண்ணிக்குள்ள விழுந்தா கால் எட்டாது, தத்தக்கா பித்தக்கா கோவிந்தா தான்.

அப்பா மாடுகள எல்லாம் குளிப்பாட்டி முடிச்சதுக்கு பொறவு அரை தொட்டி தண்ணி போட்டு நாங்க ஆட்டத்த ஆரம்பிப்போம். தம்பிக்கு தண்ணினா பயம். ஒரு கை எடுத்து மூக்க பொத்திகிட்டே தான் முங்குவான். நான் அப்படி இல்ல, தம் கட்டி, அத்தபார்ன்னு முங்கி எழும்பிடுவேன்.

கொஞ்ச வருஷம் போனா, லீவு விட்டா போதும், ஊர்ல இருந்து மாமா பிள்ளைங்க, சித்தி பிள்ளைங்க, பெரியம்மா பிள்ளைங்க எல்லாரும் வந்து குவிஞ்சிருவாங்க. விடிஞ்சாலே போதும், பொடிசுங்க அத்தன பேரும் ஆளுக்கொரு துணியையும் டவலையும் எடுத்துகிட்டு குளிக்கப் போறோம்னு கிளம்பிடுவோம். பெரியவங்க எல்லாம் வீட்ல உள்ள சட்டிப் பானையெல்லாம் தூக்கிட்டு எங்க கூடயே கிளம்பிடுவாங்க. எதுக்கு? சமைக்கத் தான்.

பத்து பனிரெண்டு கிலோ கோழி, முட்டை, அஞ்சாறு கிலோ ஆட்டிறைச்சின்னு அன்னிக்கி சமையல் தூள் பறக்கும். தோப்புல கிடக்குற தென்னம்மட்ட, சில்லாட்ட, கதம்பல் எல்லாத்தையும் நாங்க பொறுக்கிட்டு வந்து குடுப்போம். அவ்வளவு தான் வேலை முடிஞ்சுது, நாங்க நேரா போய் தண்ணிக்குள்ள பாய்ஞ்சிடுவோம். அதுக்கப்புறமா, மெனுவை பொருத்து பிரியாணியோ, உளுந்தஞ்சோறோ ரெடி ஆகும். பெரும்பாலும் மீன் சமைச்சா அன்னிக்கி உளுந்தஞ்சோறு தான். இதுல அப்பா, மாமாக்கள்ன்னு பெரியாளுங்க எல்லாம் ஒரு துண்டையோ, பாயையோ பெட்ஷீட்டையோ புல்லுல விரிச்சி உறங்கிருவாங்க.

கண் எல்லாம் ரெத்த சிவப்பா, கை விரல்கள் எல்லாம் சுருக்கம் விழுந்து, பல் எல்லாம் கடகடன்னு தந்தியடிச்சாலும் தண்ணிய விட்டு ஒரு பயலும் புள்ளையும் வெளில வர மாட்டோமே. காலைல பத்து மணிக்கு தண்ணிக்குள்ள இறங்கினோம்னா மதியம் ரெண்டு மணிக்கு தான கரையேறுவோம். அதுவும் கடும் பசில சமையல் மணம் நாசிய தாக்கினா தான் உண்டு.

நான் எட்டாவது படிக்குறப்ப பம்பு செட்டு ரொம்ப தூரமா இருக்குன்னு அப்பா வீட்டு பின்னாலயே ஒரு தொட்டி கட்டினாங்க. அப்பவே நான் போட்ட கண்டிசன் ஒண்ணு தான், தொட்டி ரொம்ப பெருசா இருக்கணும், கிட்டத்தட்ட நீச்சல் குளம் மாதிரி, அப்படியே பக்கத்துல பாத் டப் மாதிரி ஒரு சின்ன தொட்டியும் வேணும்னு கேட்டேன். கிட்டத்தட்ட பதினஞ்சு பேர் தாராளமா உள்ள நின்னு குளிக்கலாம். அப்படி ஒரு தொட்டிய அப்பா கட்டினாங்க.

நானெல்லாம் சும்மாவே எங்கயாவது ப்ரண்ட்ஸ் கேங்கோட தான் திரிவேன், வீட்டு பின்னால தொட்டி வந்ததுக்கு அப்புறம் லீவ் நாள்னா எல்லாரும் அசம்பிள் ஆகுற இடம் அங்க தான். மொறுமொறுன்னு அம்மா தர்ற மிக்சர கொறிச்சுகிட்டே, தொட்டி மேல ஏறி உக்காந்துகிட்டு தண்ணிக்குள்ள ரெண்டு காலையும் விட்டு ஆட்டிகிட்டே கதை பேசுறது ஒரு சுகம். பாத்தாததுக்கு பக்கத்துலயே கொய்யா மரம். பசங்க எல்லாரும் கொரங்கு மாதிரி கொய்யா மரத்துல தான் ஏறிக்கிடப்பாங்க.

திடீர்னு யாராவது சவுண்ட் விடுவாங்க, “குளிப்பமா”ன்னு. அவ்வளவு தான் தொட்டில உக்காந்துட்டு இருக்குற அத்தனை பேரும் அத்தபார்ன்னு தண்ணிக்குள்ள பாய்ஞ்சிருவோம். அம்மாவுக்கு தான் கூடுதல் வேலை. பின்ன, நடுங்க நடுங்க குளிச்சிட்டு வர்ற எங்களுக்கு தலைத் துவட்ட டவல் குடுக்குறதுல இருந்து, சுட சுட காப்பியும் பஜ்ஜியும் குடுக்கணுமே.

காலேஜ் படிக்குறப்பவும் அதே கதை தான். குரூப் ஸ்டடின்னு எல்லாரையும் வீட்ல கூப்ட்டு வச்சுட்டு, நேரா வீட்டு பின்புறம் ஓடிருவோம்.

இப்படி ப்ரெண்ட்ஸ், ரிலேடிவ்ஸ் தவிர்த்து, இந்த தண்ணி தொட்டி என்னோட இன்னொரு உலகம். வாரத்துல அஞ்சு நாளும் அது தன்னந்தனியா என்னோட கட்டுப்பாட்டுல தான் இருக்கும். ஸ்கூல்/ காலேஜ் விட்டு வந்ததும் நேரே அங்க தான் போவேன். எனக்காக அந்த சின்னத் தொட்டி காத்துகிட்டு இருக்கும். அப்படியே மோட்டார போட்டு, தண்ணி நிரப்பி அதுல கால் நீட்டிப் படுத்தேன்னா அப்படி ஒரு உறக்கம் போடுவேன்.

யாராவது என்னைத் தேடி வந்தாங்கனா அந்த தண்ணித் தொட்டிக்குள்ள உறங்கிட்டு இருப்பா போய் பாருங்கன்னு தான் அம்மா சொல்லி விடுவா. முதல்ல பாக்குறவங்க எல்லாம் அதெப்படி தண்ணி மேல மிதந்துகிட்டே தூங்குறான்னு ஆச்சர்யமா பாத்துருக்காங்க. அப்புறம் அவங்களுக்கே பழகிப் போச்சு, புள்ளைய வீட்டுக்குள்ள காணோம்னா இங்க தான் தண்ணித் தொட்டிக்குள்ள ஊறிக் கிடப்பான்னு.



.

Tuesday 13 October 2015

காலேஜ் அலப்பரைகள்



சாயங்காலம் காலேஜ் விட்டு மாமா கூட கார்ல வந்துட்டு இருந்தேன். இன்னிக்கின்னு பாத்து ஒரே ட்ராபிக் ஜாம். வண்டி எல்லாம் மெல்ல மெல்ல ஊர்ந்து போய், ஒரு இடத்துல அப்படியே நின்னுடுச்சு.

திடீர்னு ஒரு குரல். ஹே.... டர்ஸ் அப்படின்னு. அட, யாருடா இது, நம்மள இப்படி யாரும் கூப்பிட மாட்டாங்களேன்னு பாத்தா அது என்னோட காலேஜ் மேட். ஐ மீன், க்ளாஸ் மேட். அவ கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு ட்ராபிக் நகர ஆரம்பிச்சதும் டாடா சொல்லிட்டு கிளம்பிட்டேன்.

ஆனா என்னோட நியாபகங்கள் பின்னோக்கி போச்சு. இருங்க, ஒரு டார்ட்டாய்ஸ் கொசுவர்த்தி சுருள் கொளுத்திக்குறேன், அப்ப தான் சிட்டிவேசனுக்கு சரியா இருக்கும்... சொய்ங்......

ப்ளஸ் டூ முடிச்சதும் பெருசா காலேஜ் போய் படிக்கணும், சாதிக்கணும்னு எல்லாம் ஆசைகள் இல்ல. எனக்குன்னு ஒரு ஸ்கூட்டி, ஜாலியா ஊர் சுத்தணும், விளையாட்டா காலேஜ் போகணும், இதான் ப்ளானே.

அப்பாகிட்ட சொன்னப்ப, சரி, போறது தான் போற, பிபிஏ ஜாயின் பண்ணு, அப்புறம் எம்பிஏ படிச்சு பேங்க் மேனேஜர் (ஞே) ஆகிடலாம்னு சொல்லிட்டார். நானும் அந்த கோர்ஸ் எனக்கு சுத்தமா பிடிக்கலனாலும் நல்லப் புள்ளையா சரி சரின்னு தலையாட்டிகிட்டேன்.

அங்க க்ளாஸ்ல போய் உக்காந்தா எனக்கு தெரிஞ்ச ஒரே சப்ஜெக்ட் தமிழும் இங்கிலீசும் தான். வேற எத பாத்தாலும் முட்ட முட்டையா கம்பி கோலம் போட்ட மாதிரியே ஒரு பிரம்மை.

சரி, இப்ப அது நம்ம பிரச்சனை இல்ல, நான் விசயத்துக்கு வர்றேன்.

நான் அந்த கோர்ஸ் படிச்சது வெறும் ஒண்ணரை மாசம் தான். அதுக்குள்ள அங்க பண்ணின அட்டகாசங்கள் தான் ஹை-லைட்டே...

என்னோட சத்தம் எப்பவும் ரொம்ப பலமா இருக்கும். யார் கிட்ட பேசினாலும் குரலை ஓங்கி தான் பேசுவேன். அதனாலயே என்னைப் பாத்து என்ன மைக்க முழுங்கிட்டியான்னு கேப்பாங்க. தூரத்துல என்னைப் பாத்தாலே “ஹே மைக்”ன்னு தான் ஆரம்பிக்கவே செய்வாங்க. அப்பலாம் எனக்கு கோபம் எல்லாம் வராது, ஒரே பெருமை தான். பின்ன, ஒரு பட்டப்பெயர் கிடைக்குதுனா சும்மாவா.

சத்தமா பேசினாலும் ஆரம்பத்துல கொஞ்சம் அடக்க ஒடுக்கமா தான் இருந்தேன். அப்ப பாத்து எங்க சீனியர்ஸ் வெல்கம் டே வச்சாங்க.

இங்க எல்லாம் வெல்கம் டேனா என்னன்னு பாத்தீங்கனா ஸ்டாப் கிட்ட பெர்மிசன் வாங்கிட்டு அவங்க முன்னாடியே ராகிங் பண்றது தான்.

பாவம் எங்க சீனியர் அக்காங்க எல்லாம் ரொம்ப நல்லவங்களா இருந்தாங்க. ஒரு துண்டு சீட்டுல பாட்டு படி, டான்ஸ் ஆடு, பாண்டி விளையாடுன்னு ரொம்ப ஈசியா தான் எழுதி வச்சிருந்தாங்க. அத நல்லா குலுக்கி நாம ஒரு சீட்ட எடுத்து அதுல இருக்குற மாதிரி பண்ணனும்.

என் கிளாஸ்மேட்ஸ் இருக்காங்களே, சரியான அழுவுனி புள்ளைங்க. இதுக்கே பயந்து நடுங்கி, அழுது வடிச்சுட்டு இருந்தாங்க.

அப்ப தான் ஒருத்திக்கு கோழி பிடிக்கணும்னு வந்துச்சு. அவ அந்த இடத்துலயே கண் எல்லாம் கலங்கி பொலபொலன்னு அழ ஆரம்பிச்சுட்டா. நான் பாத்தேன். அக்கா, நான் கோழி பிடிக்குறேன்னு சொல்லிட்டே, பா...பா....ன்னு பீல்ட்ல இறங்கிட்டேன்.

கோழினா சும்மா பிடிச்சுட முடியுமா என்ன? பறந்து பறந்துல போகும். நானும் அது பின்னாலயே ஓடி ஓடி, கடைசியா கோழிய சீனியர் அக்கா ஒருத்தங்க தலைல நிப்பாட்டி வச்சுட்டேன்.

அக்கா, அசையாதுங்கக்கா, கோழி உங்க தல மேல நிக்குது. கைய தூக்காதீங்க, தலைய திருப்பாதீங்கன்னு ஏகப்பட்ட கண்டிசன்ஸ். அந்தக்கா திருதிருன்னு முழிச்சுட்டு அசையாம நிக்குறாங்க. அப்புறம் கபால்ன்னு கோழிய பாய்ஞ்சு பிடிச்சுட்டு, கோழி உங்க தலைல ஆய் போய்டுச்சுக்கா, தொடச்சுக்கோங்கன்னு சொல்லிட்டு சீட்ல வந்து உக்காந்துட்டேன்.

அப்புறம் என்னை சீட்டு எடுக்க சொன்னப்ப பாட்டு பாடவும்னு தான் வந்துச்சு. நான் பாட்டுக்கு நடுவுல போய் நின்னு, ரெண்டு பக்கமா போட்டுருந்த ஷால கழட்டி ஒரு பக்கமா போட்டுட்டு சிவாஜி மாதிரி ஸ்டைலா நிமிர்ந்து நின்னு “யாருக்காக, இது யாருக்காக, இந்த காலேஜு இது யாருக்காக”ன்னு பாடி மறுபடியும் ஸ்டைலா ஒரு பார்வை பாத்துட்டு உக்காந்துட்டேன். அப்ப தான் “யாருடா இவ”ன்னு மொத்த டிபார்ட்மென்டும் என்னை திரும்பி பாத்துச்சு.

ஒரு மேடம் எடுக்குற பாடம் சுத்தமா புரியாது. அது என்ன சப்ஜெக்ட்னே எனக்கு இப்ப மறந்தும் போச்சு. அவங்க வாயத் தொறந்தாலே தாலாட்டு பாடுற மாதிரி தான் இருக்கும். அப்படி தான் ஒருநாளு பக்கத்துல ஒருத்தி நல்லா தூங்கிட்டு இருந்தா. எனக்கு அத பாத்து ஒரே கொட்டாவி கொட்டாவியா வர ஆரம்பிச்சிடுச்சு. “ஏவ், ஏவ்”னு ஒரே குனிஞ்சு உக்காந்து கொட்டாவி விட்டுட்டு இருக்கேன். திடீர்னு ஒரு குரல். “ஸ்டான்ட் அப் ஆன் தி பெஞ்ச், அண்ட் கெட் அவுட்”ன்னு. நான் பட்டுன்னு பெஞ்ச் மேல ஏறி நின்னுகிட்டு இப்படியே எப்படி வெளில போகன்னு அப்பாவியா கேட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சுது, அந்த ஸ்டான்ட் அப் ஆன் தி பெஞ்ச் பக்கத்து சீட்டுக்காரிக்கும், கெட் அவுட் எனக்குமாம். இதென்ன சொத்தா மை லார்ட், பங்கு பிரிக்குரதுக்கு?

மறுபடியும் அதே மேடம் தான். அவங்க எடுக்குறதே புரியாது, இந்த லெச்சனத்துல செமினார் வேற எடுக்க சொன்னாங்க. காலேஜ் போயே அப்ப பதினஞ்சு நாள் ஆகல, அதுக்குள்ள செமினார் எடுக்க சொன்னா எப்படி?

எல்லா புள்ளைங்களும் பயந்துகிட்டு வாயே தொறக்கல. எனக்கு அப்ப டாபிக் எதுவும் குடுக்கல. நம்ம பேரு ஆல்பபெட்டிகல்ல கடைசி பேருங்குறதால அப்புறமா டாபிக் குடுக்கலாம்னு விட்டு வச்சிருந்தாங்க.

முதல் நாள் செமினார் க்ளாஸ். எடுக்க வேண்டிய புள்ள எழுந்து நின்னு அழுகுது. அதுவும் கேவி கேவி அழுகுது. நம்ம செட்டுல ஒரு புள்ள அழுதா பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? மிஸ் நான் செமினார் எடுக்குறேன் மிஸ்ன்னு ரெடி ஆகிட்டேன். அவங்க என்ன நினச்சாங்களோ, சரி எடுன்னு சொல்லிட்டாங்க.

நான் பாட்டுக்கு முன்னாடி போனேன். சாக்பீஸ் எடுத்து ஏ+பி தி வோல் ஸ்கயர் ஈக்குவல் டூ ன்னு எனக்கு தெரிஞ்ச ஒரே கணக்கு பாடத்த எடுக்க ஆரம்பிச்சுட்டேன். இதுல காமடி என்னன்னா மேடம் உக்காந்துகிட்டு என்னையே பாத்துகிட்டு, நான் ஓவர் மேடம் சொன்னதும் போய் உக்காருன்னு சொல்லிட்டாங்க. ஆக மேடமுக்கே ஒன்னும் தெரியல சப்ஜெக்ட் பத்தி. நான் செமினார் முடிச்சுட்டு வந்து புள்ளைங்க கிட்ட இத சொல்லி சொல்லி ஒரே சிரிப்பு. மேடம், என்ன அதுன்னு மிரட்டி கேட்டதும் ஒருத்தி உளறிட்டா. உடனே நான் க்ளாஸ்ல இண்டீசென்ட்டா பிகேவ் பண்ணினேன்னு சொல்லி பிரின்சிபால்கிட்ட கொண்டு போய் விட்டுட்டாங்க

பிரின்சிபால் கிட்ட போனாலும் நாம அசருற ஆளா? முதல்ல அவங்கள புரியுற மாதிரி க்ளாஸ் எடுக்க சொல்லுங்க, அப்புறமா நாங்க வேணா செமினார் எடுக்குறோம், அதுக்கப்புறமா வேணா தூங்காமலும்  இருக்கோம்னு போர் கொடி தூக்கிட்டேன். அப்புறம் என்ன, அடுத்த நாள்ல இருந்து மேடம் விழுந்து விழுந்து படிச்சுட்டு வந்து க்ளாஸ் எடுத்தாங்க.

அதே மாதிரி இங்கிலீஷ் க்ளாஸ்க்கு செமினார் எடுப்பேன்னு அடம்புடிச்ச ஒரே ஆள் ஐயாம் தான். ஏன்னா, எல்லாம் தமிழ் மீடியம் பிள்ளைங்களா இருப்பாங்க, இங்கிலீஷ் கண்டா தெறிச்சு ஓடிருவாங்க. எனக்கு தான் நல்லா வருமே, அதான் பந்தாவுக்கு வீம்பா  செமினார் வேணும்னு கேப்பேன். ஆனா  அந்த  ஒன்னரை மாசத்துல  செமினார்  டாபிக்  கிடச்சும் என்னால செமினார்  எடுக்க  முடியலங்குறது  ஒரு பெரிய வருத்தமான விஷயம். 

எங்களுக்கு வாரத்துல ஒரு நாள் ப்ரீ ஹவர் உண்டு, அப்ப ஏதாவது விளையாட்டு ப்ராக்டிஸ் பண்ணுவோம், அப்ப எங்க பி டி மேடம் here one girl sitting, where going-னு கேட்டாங்க, நான் உடனே i go, she go madam, i come, she no come madam னு சொல்ல அவங்க u good girl ன்னு சொல்லி தட்டிக் குடுத்தாங்க பாருங்க, அவங்க  இங்கிலீஷ நினச்சு ஹாஹா கிரௌண்ட் விட்டு ஓடி வந்து அங்கயே விழுந்து விழுந்து சிரிச்சோம். இப்படி  எல்லாம்  படிச்சுக் குடுக்குறவங்கள கிண்டல் பண்ணக் கூடாதுன்னு யாரும்  சண்டைக்கு வந்துடாதீங்க. வயசு அப்படி. அதோட  படிச்சு குடுக்குற வாத்தியார் சரியா இருந்தா தான புள்ளைங்க சரியா இருப்பாங்க.

நான் படிச்சது லேடீஸ் காலேஜ். காலேஜ் உள்ள போகணும்னா மெயின் ரோட்டுல இருந்து இறங்கி ஒரு கிலோமீட்டர் நடந்து தான் போகணும். நான் ஸ்கூட்டில போவேனா, அதனாலயே சாயங்காலமானா ஸ்கூட்டில ரெண்டு ரெண்டு பேரா ஏத்தி ஒரு பத்து பேரை மையின் ரோட்டுல கொண்டு போய் விடுவேன். இப்படி நான் ட்ரிப் அடிக்குற இடத்துல தான் பசங்க நின்னுட்டு இருப்பானுங்க. நான் அங்கயும் இங்கயுமா மாத்தி மாத்தி ட்ரிப் அடிக்குறத பாத்துட்டு கொஞ்சம் கொஞ்சமா கிண்டல் பண்ண ஆரம்பிச்சானுங்க. நானும் கொஞ்ச நாள் கண்டுக்காம இருந்தேன்.

முதல்ல ஒருத்தன் லவ் லெட்டர் கொண்டு வந்து நீட்டினான். நானும் நல்லப்புள்ளையா அத வாங்கி அங்க வச்சே படிச்சு பாத்துட்டு, ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் கரெக்சன் போட்டு பத்துக்கு மூணு மார்க் வேற போட்டுக் குடுத்தேன்.

அப்புறமாவது அந்த பசங்க திருந்தினாங்களா, இல்லையே, என்னைப் பாத்து ஒருத்தன் விசில் அடிக்க ஆரம்பிச்சான். ரெண்டு மூணு நாள் முறைச்சுப் பாத்தேன், அப்புறமும் அடங்குற மாதிரி தெரியல, நேரா அவன் முன்னால ஸ்கூட்டிய கொண்டு போய் விட்டுட்டு செவுள்லயே விட்டேன் ஒரு அறை. பையன் பொறி கலங்கிட்டான். அவனுக்கு சப்போர்ட்டா ஒருத்தன் பாட்டு பாடி கிண்டல் பண்ணிட்டு இருப்பான். அவனுக்கு செருப்பை கழட்டி மாத்தி மாத்தி மொத்திட்டேன். அவ்வளவு தான் காலேஜ் முழுக்க நான் பிரபலமாகிட்டேன்ல. அதனால என்னோட பெயர் மைக்ல இருந்து டர்ஸ் ஆகிடுச்சு.

இன்னும் நிறைய அலும்பல்கள். சேட்டைகள். எல்லாம் ஒரு ஒன்னரை மாசம் தான். அப்புறம் தான் என்னோட வாழ்க்கைல டர்னிங் பாயின்ட்டா ஒரு சம்பவம் நடந்துச்சு. அந்த சம்பவத்த தான் இங்க அப்பப்ப சொல்லிட்டு வரேன்னே....

இப்படியாக தான், மைக் என்றும், டர்ஸ் என்றும் டெரரா அழைக்கப்பட்ட நான் உங்களால் இப்பொழுது காயு என்று அன்போடு அழைக்கப்படுகிறேன்.

இப்படிக்கு, அன்பும் பணிவும் மிக்க காயு.....


.

Saturday 10 October 2015

இது ஒரு நன்றி கூறல்





படம்: வெற்றிக்கோப்பையோட இருக்குறது பூங்கோதை அம்மா.

காலைல ஆறரை மணி. திடீர்ன்னு மகேஷ்கிட்ட இருந்து போன். தூக்கக் கலக்கத்தில் எடுத்து ஹலோ சொன்னேன். “அக்கா வாழ்த்துகள் அக்கா போட்டி முடிவுகள் அறிவிச்சுட்டாங்கன்னு” சந்தோசமா சொன்னான்.

அவன் வாழ்த்து சொன்னதவச்சு, அப்போ நமக்கு ரெண்டாவது இல்ல மூணாவது பரிசு கன்பார்ம்ன்னு முடிவெடுத்துக்கிட்டேன். ரிசல்ட் வந்த உடனே உங்க தலைப்பைத் தான் தேடுனேன் அக்கா. உங்களுக்குத்தான் முதல் பரிசுன்னு அவன் சொன்னதும் டக்குன்னு கொஞ்சம் ஃப்ரீஸ் ஆகிட்டேன். மனசுக்குள்ள ஒரு சந்தோசம்.

என்னோட துறை சம்பந்தமா நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன். ஆனா, என்னோட கவிதைக்கு முதல்முதலா பரிசுகொடுத்து அங்கீகரிச்சது எழுத்து டாட்.காம் தான். அதன்மூலமாதான் என்னோட கவிதைகள தானே பதிப்பிச்சு புக்போட முன்வந்தார் மங்காத்தா. அந்த புக் “தென்னங்கீற்றுகளின் சாட்சியாக”ன்ற பெயர்ல வெளியாகப்போகுது சீக்கிரமே.

என்னோட எழுத்துகளுக்கு ரெண்டாவதாகவும், பெரிய அங்கீகாரமாகவும் இந்த  கட்டுரைக்கு முதல்  பரிசு கிடைச்சிருக்கு. உலக அளவில் தமிழ் வலைப்பதிவர்கள் எல்லாருமா சேர்ந்து கலந்துகிட்ட/ நடத்தின கட்டுரை போட்டியில் பெண்கள் முன்னேற்றம் தொடர்பான தலைப்பில் இந்த பரிசு கிடைச்சது சந்தோசத்தோட இன்னொரு காரணம்.

இந்த பரிசு கிடைச்சதும் ஏழு மணிக்கு போன்ல கூப்ட்டு வாழ்த்து சொன்ன தமிழ்வாசி பிரகாஷ் அண்ணா, திண்டுக்கல் தனபாலன் அண்ணா, விஷயம் கேள்விப்பட்டு சந்தோசப்பட்ட பூங்கோதை அம்மா, திரு அண்ணா, ரொம்ப ரொம்ப சந்தோசப்பட்ட கார்த்திக், ஸ்டேடஸ் போட்டு ட்ரீட் கேட்ட யது நந்தன், உடனே வாழ்த்து சொல்லி இன்னும் நிறைய எழுதணும்னு ஊக்குவிச்ச நல்லினி அருள் எல்லாருக்கும் என்னோட நன்றி.

ஆங், அப்புறமா, அவங்க பிறந்தநாள் அதுவுமா எனக்கு கால் பண்ணி வாழ்த்து சொன்ன பாலா அம்மா, கட்டுரை பாத்து பாஸிட்டிவ் கம்மெண்ட் கொடுத்தவங்க, இன்னும் நல்ல தமிழ்ல எழுதனும்ன்னு என்னை ஊக்குவிச்சவங்க, நான் ஜெயிச்சதுக்கு தானே ஜெயிச்சதா நினைச்சு சந்தோஷப்படும் மகேஷ், இன்பாக்ஸ்க்குள்ள ஓடி வந்து, எனக்கு உன் மேல லவ் லவ்வா வருதே, யார்கிட்ட போய் சொல்லுவேன்னு துள்ளி குதிச்ச அருட்செல்வி குமரேசன், ட்ரீட் கேட்ட ப்ருந்தா ஆறுசாமி, விஷயம் கேள்விப் பட்டதும் வாழ்த்துகளா குவிச்சவங்க, இன்னும் நிறைய நிறைய சப்போர்ட் பண்ணும் எல்லாருக்கும் என்னோட பெரிய தேங்க்ஸ். என்னை கொஞ்சம் மெருகேற்ற உதவிய அந்த பெயர் தெரியாத ஆன்மாவுக்கு தனிப்பட்ட நன்றி.

அச்சச்சோ பாத்தீங்களா, நம்ம புதுகோட்டை வலைப்பதிவர் விழா குழுவினருக்கு தேங்க்ஸ் சொல்லல. அவங்களுக்கு  என்னோட ஸ்பெசலோ ஸ்பெசல் தேங்க்ஸ். பின்ன, எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க காரணமா இருந்துருக்காங்களே....

நாளைக்கு புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் வலைப்பதிவர்கள் திருவிழாவில் ஐயாயிரம் ரூபாய் பரிசும், வெற்றிக்கேடயமும் குடுக்குறாங்க. என்சார்பா பூங்கோதை அம்மா கலந்துக்கப் போறாங்க. மானே தேனே மாதிரி இடையில கார்த்திக் தன் பேரை போடலையே ஏன்னு கேட்டிருக்கார். பரிசுத் தொகையை அப்படியே உங்க அக்கவுண்ட்ல போட்டுட்றேன் கார்த்திக். ஒழுங்கு மரியாதையா எனக்கு வெப்சைட் ஆரம்பிச்சுக் கொடுத்துடுங்க.

ம்ம்ம் வேறென்ன சொல்ல.. ஏதாச்சும் மிஸ் ஆகி இருந்தா நாளைக்கு வந்து சொல்றேன். இப்போ குட்டித் தூக்கம் போடனும் கொர்ர்ர்ர்ர்ர்



.




Monday 28 September 2015

பானிப்பூரியும் மசால் பூரியும்



சாயங்காலம். மணி ஆறு பத்து. நான் பாட்டுக்கு பேஸ்புக்ல குரூப் மெஸ்சேஜ் போட்டுட்டு அப்படியே ராஜா ராணி படத்தை பாத்துட்டு இருந்தேன்.

திடீர்னு ஹோய்ன்னு ஒரு குரல். அதுவும் என் ரொம்ப பக்கத்துல. பட்டுன்னு ஒரு நிமிஷம் இதயத்துடிப்பு நின்னுடுச்சு. யார்ரா அது நம்ம பெட் ரூமுக்குள்ள நம்ம பக்கத்துலன்னு. பாத்தா பக்கத்து வீட்டுப் பொண்ணு. இவ எப்ப என் ரூம் கதவ தொறந்தா, எப்ப பக்கத்துல வந்தான்னு ஒண்ணுமே கவனிக்காம தேமேன்னு படத்தப் பாத்துட்டு இருந்துருக்கேன்னா பாத்துக்கோங்களேன்.

எங்கயாவது வெளில போவோமான்னு கேட்டா. இல்ல, இருட்ட ஆரம்பிச்சிடுச்சு. இனி வெளில போனா வீட்ல பாட்டி திட்டுவாங்கன்னு சொன்னேன். பாட்டி எங்கயோ போன மாதிரி இருந்துச்சே, இப்ப எல்லாம் வர மாட்டாங்கன்னு சொன்னா. அடப் பாவிகளா, என்னை விட பாட்டிய நீங்க அதிகமா வாட்ச் பண்ணுவீங்க போலயேன்னு நினச்சுட்டு, நான் அப்பா கிட்ட பெர்மிசன் கேக்கணும்னேன். என்ன நினச்சாளோ, சரி, நான் போயிட்டு வரேன்னு போய்ட்டா.

அவ பாட்டுக்கு சொல்லிட்டு போய்ட்டா. இப்ப என் மனசுக்குள்ள ஒரு ஆசை. வீட்டை விட்டு இப்படி ராத்திரி நேரம் வெளில கிளம்பி ரொம்ப நாள் ஆகிடுச்சே, போய் தான் பாப்போமான்னு. நந்து வீட்டுக்கு போன் அடிச்சேன், “அடியே வெளில போறேன், வரியா”ன்னு கேட்டு.

அடுத்த பத்தாவது நிமிசத்துல நந்துவும், அவ ப்ரெண்ட் முருகேசும் என் வீட்ல ஆஜர். இந்த கார் சாவி எங்கன்னு தெரியலயேன்னு நான் சொல்ல, அவ ஓடிப் போய் பாட்டி ஒளிச்சு வச்சிருந்த கார் சாவிய எடுத்துட்டு வந்துட்டா. வெளில போறோம், எதுக்கும் செலவுக்கு கொஞ்சம் காசு எடுத்து வைப்போம்னு இருநூறு ரூபாய பேக்ல இருந்து எடுத்து யார் கிட்டயோ குடுத்தேன்.

அப்புறம் மடமடன்னு கால்ல பேன்ட்-எய்ட் சுத்தி, ஒரு சுடிதார எடுத்து போட்டுட்டு ஆறரை மணிக்கு கிளம்பிட்டேன். வாக்கர் வச்சு, வாசலுக்கு வந்து, அங்க இருந்து படி இறங்கி, கார் செட்ல போய் கார எடுத்துட்டு வெளில வந்தோம்.

நல்ல மழை பெஞ்சு, அப்பவே கும்மிருட்டு பரவ ஆரம்பிச்சிடுச்சு. சரி, எங்கப் போகலாம்னு யோசிச்சா ஒரு ஐடியாவும் தெரியல. நந்து மெதுவா பானிபூரி சாப்பிடப் போவோமா அக்கான்னு கேட்டா. அதுவும் சரி தான், கடைசியா அத சாப்ட்டு ஒரு வாரம் ஆகிடுச்சுன்னு முடிவெடுத்து, மெயின் ரோட்டுல போனா என்ன த்ரில் இருக்கு, நாம ஊர் காட்டுக்குள்ளோட வண்டிய எடுத்துட்டு போவோம்னு முடிவு பண்ணி தெருவுக்குள்ள வண்டிய விட்டேன்.

வழக்கமா நான் கொக்கு, மைனா, காக்கா, வாத்து எல்லாம் பாக்கப் போற வழி தான். ஆனாலும் இருட்டா இருந்ததால அந்த குளக்கரையையும், வயக்காட்டையும் கொஞ்சம் வேகமாவே கடந்துப் போனேன். எதிர்ல வர்ற வண்டி எல்லாம் அவ்வளவு பாஸ்ட்டா வருது. கொஞ்சம் பாதைல இருந்து விலகினாலும் கடக்காலுக்குள்ள வண்டியோட விழ வேண்டியது தான். ஆனாலும் எப்படியோ வேகவேகமா எல்லாத்தையும் கடந்து சிட்டிக்குள்ள நுழைஞ்சு, பானிப்பூரி விக்குற வண்டிகிட்ட கொண்டு போய் காரை நிறுத்தினேன்.

சரி, காசு எங்கன்னு தேடினா காச காணோம். வீட்ல வச்சு யார் கிட்டயோ குடுத்தேனேன்னு ஒரே யோசனையா போச்சு. நந்துகிட்ட ஏய், காச உன்கிட்ட தான குடுத்தேன்னேன். அவ, நீ எங்க என்கிட்ட குடுத்த, நான் சாவி எடுக்கல போனேன்னா. முருகேசு, என்கிட்ட குடுக்கலன்னு படபடன்னு தலையாட்டினான். எப்பவுமே கார் டேஷ் போர்ட்ல ஐநூறு ரூபா எமர்ஜென்சி வச்சிருப்பேன். காசு எங்க போச்சுன்னு குழம்பிட்டே சரி, அந்த ஐநூறு ரூபாய வச்சு அட்ஜஸ்ட் பண்ண வேண்டியது தான்னு குழப்பத்தோடவே கார விட்டு இறங்கினேன். அந்த பய முருகேசு கலகலன்னு சிரிக்கான்.

என்னலேன்னு கேட்டா, காச என்கிட்ட தான் குடுத்த, எப்படியும் நீ மறந்துருவ, அதான் உன்னை டெஸ்ட் பண்ணினேன்ங்குறான் கொரங்கு. கிர்ர்ர்ர்.... காச வெடுக்குன்னு அவன் கைல இருந்து பிடிங்கிட்டு ஒரு முறை முறைச்சேன். அவன் அசராம வெவேவேங்குறான். இந்த பயல என்ன பண்ண. என்ன சொன்னாலும் நமக்கு தான் பல்ப் குடுப்பான். சரி மன்னிச்சு விட்ருவோம்னு நினச்சு மன்னிச்சு விட்டுட்டேன்.

எனக்கு ரெண்டு ப்ளேட் மசாலா பூரி, நந்துவுக்கு ஒண்ணு, முருகேசுக்கு ஒண்ணுன்னு ஆர்டர் பண்ணினேன். ஹலோ, அதென்ன உங்களுக்கு மட்டும் ரெண்டு, எனக்கும் வேணும்னு முருகேஷ் அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டான். முதல்ல இத தின்னுடா, அப்புறமா வாங்கித் தரேன்னு அவன் தலைல ஒரு குட்டு வச்சு, மசாலாபூரி தின்னு முடிச்சாச்சு. நந்து மெதுவா அக்கா பானிபூரின்னு இழுக்க, சரின்னு ஆளுக்கு ஒரு ப்ளேட் பானிபூரி ஆர்டர் பண்ணி அதையும் காலிப் பண்ணியாச்சு.

எல்லாம் முடிஞ்சு கிளம்பலாம்னு நினச்சா, முருகேஷ் மறுபடியும் மசாலா பூரி வாங்கித் தருவேன்னு சொன்னல, அத வாங்கிக் குடுன்னு அடம் பிடிக்குறான். எனக்கா, ஒரே கோவம். டேய், இந்தா பாரு, வாங்கித் தரத பத்தி ஒண்ணும் பிரச்சனை இல்ல, ஆனா எல்லாத்தையும் திங்கணும், தெரிஞ்சுதான்னு மிரட்டினதும் பய, நீ மட்டும் ரெண்டு ப்ளேட் தின்னல, சின்னப் புள்ளைக்கு வாங்கித் தராம ஏமாத்துறன்னு பொசுக்குன்னு கூட்டத்துல வச்சு மானத்த வாங்கிட்டான். சரி, சரின்னு அவனுக்கு இன்னொரு ப்ளேட் ஆர்டர் பண்ணினேன். ரெண்டு வாய் எடுத்து தின்னவன், எனக்கு போதும் இந்தான்னு என்கிட்ட நீட்டிட்டான்.

எனக்கு அத வாங்கி தின்ன ஆசை தான், ஆனாலும் மூணு ப்ளேட் மசாலா பூரி தின்னான்னு யார் கிட்டயாவது இவன் போட்டுக் குடுத்துட்டா மானம் மரியாத எல்லாம் போயிடுமேன்னு கொஞ்சம் யோசிச்சேன். அப்புறம், அட, இதெல்லாம் நமக்கு புதுசா என்னன்னு மானம் மரியாதைய எல்லாம் தூக்கி ஓரமா வச்சுட்டு மசாலா பூரிய ஒரு பிடி பிடிச்சேன். நந்து அக்கா எனக்கு சாக்லேட் வேணும்னு அடம்பிடிக்க, அதையும் வாங்கிக் குடுத்து வண்டிய ஸ்டார்ட் பண்ணினேன்.

அப்ப பாத்து கோவில் யானை ஒண்ணு க்ராஸ் ஆச்சு. ஹை யான யானைன்னு நந்து குதிக்க ஆரம்பிச்சுட்டா. ஆமா, இவ பெரிய அஞ்சலி பாப்பா, யானைய கண்டதும் சீன் போடுறான்னு முருகேசு அவள நக்கல் அடிக்க, போல, நான் யானைய போய் தொடப்போறேன்னு டக்குன்னு கார் கதவ தொறந்துட்டு ஓட ஆரம்பிச்சுட்டா.

ஏய், ஏய், நந்துன்னு நான் உக்காந்துட்டே கத்துறேன். முருகேசு எங்கன்னு பாத்தா பயத்துல கோழி குஞ்சு மாதிரி பதுங்கி போய் கிடக்கான் பின்னால உள்ள சீட்ல. ஹஹா... இந்தாடி, காசு குடுன்னு மிச்சம் இருந்த ஒரே அஞ்சு ரூபாயையும் அவ கிட்ட நீட்ட, ஓடிட்டு இருந்தவ அப்படியே திரும்பி வந்து காச பிடிங்கிட்டு மறுபடியும் யானை கிட்ட ஓடினா.

அப்புறமா, கொஞ்ச நேரம் யானைய தடவி பாத்து, அது துதிக்கைய எடுத்து அவ தலைல வைக்க, பிள்ளைக்கு சந்தோசம் தாங்கல. யானை அப்படியே நடந்து போய்ட்டே இருக்க, இவ திரும்பி திரும்பி பாத்து அதுக்கு டாட்டா காட்டிகிட்டே வந்தா.

இப்ப மணி ஏழரை. கும் இருட்டு. அப்படியே மெயின் ரோடு பிடிச்சு போனா பயம் இல்லாம வீடு போய் சேர்ந்துடலாம். ஆனாலும் என்னவோ ஒரு அசாத்திய துணிச்சல் மனசுக்குள்ள. மறுபடியும் வந்த வழியே போனா என்னன்னு. ரைட்டு, முடிவு எடுத்தாச்சு. இனி மாறக் கூடாது.

அந்த வழி மனுசங்க அதிகமா போகாத வழி. ஒரு சின்ன கார் போற அளவு தான் இடம் இருக்கும். எதுத்தாப்புல ஒரு வண்டி வந்துச்சுனாலே க்ராஸ் பண்ணி வர ரொம்ப கஷ்டம். இப்படி தான் போன வாரம் ஒருநாள் பகல் நேரத்துலயே ஒரு டூ-வீலர் மேல கொண்டு போய் மோதினேன். ஆனா தப்பு அவர் மேலங்குரதால ஒண்ணுமே சொல்லாம சாரி கேட்டுட்டு போயிருந்தார். இப்ப அங்க தான் போயிட்டு இருக்கேன். ஹெட் லைட் வேற டிம்மா வச்சுட்டு ஆம வேகத்துல தடக் தடக்ன்னு பதைபதைக்க ஓட்டிகிட்டு இருக்கேன். வழில ஆள் நடமாட்டமே இல்ல. வலது பக்கமா இருக்குற வயல்ல தண்ணி சலம்புர சத்தம். என்னடான்னு பாத்தா ரெண்டு நாய்ங்க பட்டுன்னு வண்டி குறுக்க ஓடி வந்துடுச்சு.

பட்டுன்னு பிரேக் அடிச்சு வண்டிய நிறுத்தினா இந்த முருகேசு ஊஊஊ....ன்னு ஊளை போடுறான். டேய், அடங்குடா, நாம இப்ப சுடுகாட்ட க்ராஸ் பண்ணப் போறோம், இரு இரு, பேய் கிட்ட உன்னை புடிச்சு குடுக்குறேன்னு சொன்னதும் பையன் பயத்துல கப்சிப்.

சுடுகாட்டை க்ராஸ் பண்ணும் போது கொஞ்சம் தூரமா உத்துப் பாத்தேன். எங்கயோ ஒரு விளக்கு வெளிச்சத்துல என்னவோ அசைஞ்ச மாதிரி இருந்துச்சு. ஒரு வேளை பேயா இருக்குமோ? அடி ஆத்தி.... வேணாம் காயு, பேய் எல்லாம் உனக்கு பிரெண்ட் தான், ஆனா இந்த நேரத்துல உனக்கு அந்த பிரெண்ட்ஷிப் தேவையான்னு எனக்கு நானே கேள்விக் கேட்டுகிட்டேன். வேணாம், வேணாம், எதுக்கும் நாளைக்கு காலைல வந்து பேய்க்கு ஹாய் சொல்லலாம்னு அப்படியே பார்வைய பாதைக்கு திருப்பி பொம்ம மாதிரி ஸ்டியரிங்க பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.

அடுத்து வந்தது குளம். இந்த பக்கம் குளம். அந்த பக்கம் வயல். அதுவும் அதள பாதாளத்துல இருக்கு. இருக்குறதுலயே அது தான் குறுகலான பாதை. ஒரு நிமிசப் பயணம். அத தாண்டிட்டேன்னா அப்புறம் ஊருக்குள்ள நுழஞ்சிடலாம். திடீர்னு முருகேசு அக்கா, வேகமா போக்கான்னான். அடேய், இருடா, நானே பயத்துல தவந்துட்டு இருக்கேன், இன்னும் கொஞ்சம் தான், தாண்டிடலாம்னு சொல்லிட்டு இருக்கும் போதே, நந்து ஹாஹான்னு சிரிக்க ஆரம்பிச்சுட்டா.

என்னடி, பேய் மாதிரி சிரிக்குறன்னு நான் கேட்டதும், வேகமா போனா, அப்படியே மேல போய்டலாம்க்கா. அங்க எல்லாம் நமக்கு ப்ரீ டிக்கெட். ப்ரீயோ ப்ரீன்னு மறுபடியும் சிரிக்குறா. வெளில இந்த சில்வண்டுங்க வேற கர்ட் கர்ட்ன்னு சத்தம் போடுதுங்க. அவ்வ்வ்வ், தெரியாம வந்துட்டோமோ, சரி, இன்னும் பத்தடி தானன்னு யோசிச்சுட்டு இருக்குறப்பவே எதுத்தாப்புல ஒரு ஆட்டோ. அய்யயோ, இப்ப என்ன பண்றதுன்னு வண்டிய அப்படியே நிறுத்திட்டேன். அப்புறம் ஆட்டோக்காரர் என்ன நினச்சாரோ, அவர் வண்டிய ரிவேர்ஸ் எடுக்க, நான் பாட்டுக்கு அந்த இடத்த கிராஸ் பண்ணி வந்துட்டேன்.

வீட்டுக்கு வந்ததும் பாட்டி, எங்க போய் தொலைஞ்சீங்கன்னு கத்துனாங்க. அக்காவோட பாய் ப்ரெண்ட பாத்துட்டு வரோம் பாட்டின்னு நந்து சொன்னா. ஆஹா, இது நல்ல ஐடியாவா இருக்கே. பிற்காலத்துல ஒரு நாள் உதவும்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன்.

பை நந்து, பை முருகேஷ்ன்னு சொல்லிட்டே ரூமுக்குள்ள வந்து கதவ அடச்சுட்டேன். ஒரு பொட்டப்புள்ள இப்படியா வீட்டுக்கு அடங்காம திரியுறதுன்னு பாட்டி குரல் கொஞ்ச நேரம் கேட்டுட்டு இருந்துச்சு.


நமக்கு எதுக்கு அதெல்லாம்.... கொர்ர்ர்ர்....


.

Thursday 24 September 2015

இதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல




ஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்நிலைல நான் ரொம்ப நாளாவே நான் பேசணும்னு நினைக்குற ஒரு தலைப்பு இது. சுய இன்பம் பற்றினது. இத வெளிப்படையா பேச இன்னும் இந்த சமூகம் ஒத்துக்குதான்னு தெரியல. ஆனா, அத பத்தி பேசிடலாம்னு இப்ப முடிவு பண்ணிட்டேன்.

அப்ப தான் நான் கல்லூரி முதல் வருடம் சேர்ந்துருந்தேன். கொஞ்ச நாள்லயே அங்க இருக்குற ரெட் ரிப்பன் க்ளப் உறுப்பினரா சேர்ந்தேன். தீவிர உறுப்பினர்கள்ங்குற முறைல எங்களுக்கு பல்கலைக்கழகத்துல வச்சு ஒரு கூட்டம் போட்டாங்க. அந்த கூட்டத்துல ஒரு துண்டு சீட்டு குடுத்தாங்க. பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்துறது எப்படின்னும் சுய இன்பம் பாவமல்லன்னும் சொல்லி அதுக்கான விளக்கமும் குடுத்துருந்தாங்க. அந்த வயசுல அத பத்தின எந்த எதிர்பார்ப்பும் இல்ல, தெரிஞ்சுக்கணும்னு ஆவலும் இல்ல, அவசியமும் இல்ல. ஆனா அந்த விஷயம் தப்பில்லன்னு மட்டும் மனசுக்குள்ள பட்டுச்சு.

அதுக்கப்புறமா எனக்கு வந்த சில உடல்நிலை பாதிப்புனால மாதவிடாய் பிரச்சனை நிறையவே வந்துச்சு. வயித்த கிழிக்குற மாதிரியான வலி. அப்படியே கத்திய எடுத்து வயித்த கிழிச்சு போட்டுட்டா என்னன்னு தோணும். மாசக் கணக்குல ரெத்தப்போக்கு நீடிக்கும். நடக்கவே முடியாம தலைசுத்தி படுக்கைலயே விழுந்து கிடப்பேன். அப்படி எனக்கு என்னதான் பிரச்சனைன்னு பாத்தா, எல்லாமே சரியா இருக்குன்னு தான் மருத்துவமனை அறிக்கைகள் காட்டும். கர்ப்பப்பை முதற்கொண்டு சூல்ப்பை வரைக்கும் எல்லாம் சரியா இருக்கும். தைராய்டு அளவுகள பாத்தா அதுவும் பிரச்சனைக்குரியதா இல்ல.

ஆனா மாதவிடாய் ஆரம்பிச்ச ரெண்டாவது நாள் பிரசவ வலி மாதிரியான ஒரு வலி உடம்பு முழுக்க பரவ ஆரம்பிக்கும். சுண்டுவிரல் அளவிலான ஒரு சதைப் பகுதி அறுந்துகிட்டு வெளில வந்தா மட்டும் தான் வலி குறைய ஆரம்பிக்கும். அந்த நான் ரொம்ப பயந்து போயிருந்தேன். இதென்ன கர்ப்பப்பை கிழிச்சு வெளில வருதோன்னு. அப்புறம் தான் என் அம்மா, சித்தி, பாட்டி எல்லாருக்குமே இந்த பிரச்சனை இருக்குறது தெரிய வந்துச்சு. அந்த சதைப் பகுதிய எடுத்து டாக்டர் கிட்ட காமிச்சா அவங்க பிரசவம் ஆனவங்களுக்கு தான இப்படி வரும், உனக்கு ஏன் இப்படி வருதுன்னு என் கிட்டயே திருப்பி கேப்பாங்க. அவங்க தான் இன்னொரு டாக்டர போய் பார்க்க சொன்னாங்க.

அவர் ஸ்கேன் எல்லாம் எடுத்து பாத்துட்டு, கர்ப்பபைல கருப்பை உச்சளிப் படலத்தோட (Endometrium) அடர்த்தி அதிகமா இருக்கு, ஹார்மோன் அளவு கம்மியா இருக்கு, நீ சுய இன்பம் பண்ண மாட்டியான்னு கேட்டாங்க. “இல்ல மாட்டேன், எனக்கு அப்படினா என்னன்னு கூட சரியா தெரியாது, அதுல இஷ்டமும் இல்ல”ன்னு சொன்னதும், அம்மாவ கூப்ட்டு பொண்ணுக்கு சொல்லிக் குடுங்க, இல்லனா சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சிடுங்கன்னு அறிவுரை சொல்லியிருக்காங்க.

மாதவிடாய் பிரச்சனை வர பல காரணங்கள் இருக்கலாம், அந்த காரணங்கள்ல இதுவும் ஒண்ணாம். அந்தந்த வயசுல அனுபவிக்க வேண்டியத அந்தந்த வயசுல அனுபவிக்கணும்ன்னு இதுக்கு தான் சொல்லியிருக்காங்க போல. குறிப்பிட்ட வயசு வந்ததும் கல்யாணம் பண்ணி வைக்குறதும் இதுக்குதான். ஆனா, எல்லாராலும் நினச்ச மாதிரி கல்யாணமும் பண்ண முடியாது. எல்லோருக்கும் வெற்றிகரமான வாழ்க்கை அமைஞ்சுடுறதும் இல்ல. சரியான வாழ்க்கைக்கு சரியான வாழ்க்கை துணை அவசியம். அப்படி அமையாத பட்சத்துல சுய இன்பம் தப்பில்ல - இது என் அம்மா எனக்கு கத்துக் குடுத்தது.

இத பத்தி நான் எழுதணும்னு முடிவு எடுத்த உடனே இணையத்துல என் மாதிரியான அனுபவம் உள்ளவங்க இருக்காங்களான்னு தேடித் பாத்தேன். ரொக்சனா பென்னெட்ங்குற பெண் இந்த கருப்பை உச்சளிப் படலத்தோட பிரச்சனைனால எவ்வளவு தூரம் பாதிப்புக்கு உள்ளானாங்க, அவங்களால ஏன் இயற்கை உடலுறவு பண்ண முடியாம போச்சு, எதனால அவங்களுக்கு சுய இன்பம் அவசியமாச்சுன்னு சொல்லியிருக்காங்க. ஹார்மோன் சுரப்பு சரியில்லாதவங்க, எதிர்பாலினம் மேல ஈர்ப்பு இல்லாதவங்களுக்கு எல்லாம் இந்த பிரச்சனை சர்வ சாதாரணமா வந்துடுது. அப்படியும் இல்லையா, சில நோய்களுக்கு மருந்து எடுக்கும் போது பக்க விளைவுகளாவும் வந்துடுது.

இந்த இடமகல் கருப்பை அகப்படலம் (endometriosis) வந்துடுச்சுனா, கல்யாணம் ஆகி குழந்தை உள்ள பெண்களா இருந்தா கர்ப்பப்பைய நீக்குறது தான் நிரந்தரத் தீர்வு. கல்யாணம் ஆகாத பெண்களா இருந்தா, அறுவை சிகிச்சை மூலமா இந்த கருப்பை உச்சளிப் படலத்த நீக்குறாங்க. அப்படி பண்ணினா ரெண்டுல இருந்து மூணு வருஷம் வரைக்கும் இந்த பிரச்சனை திரும்பி வராம இருக்கும்னு மருத்துவர்கள் சொல்றாங்க. ஆனாலும் அதுக்கு எந்த உத்தரவாதமும் குடுக்க முடியாது. இப்படி வலியும் வேதனையுமா அவஸ்தைப்படுறதுக்கு பேசாம சுய இன்பம் பண்ணிட்டு போய்டலாம். ஓரளவு இந்த பிரச்சனைல இருந்து தப்பிச்சிரவும் செய்யலாம்.
.................................................

சரி, முன்னப் பாத்தது உடல் ரீதியான பிரச்சனை. இதுல மனரீதியான பிரச்சனைகள் என்னென்ன வரும்?

பாலியல் உணர்வுங்குறது எல்லாராலும் சுலபமா கடந்து வர முடியாத விஷயம். இந்த உணர்வுகள் இல்லாத உயிரினமே கிடையாதுங்குறப்ப இத பத்தி பேச மட்டும் ஏன் தயங்கணும்னு தான் எனக்குப் புரியல. ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி, இந்த உணர்வு இயற்கையானது. அடுத்தவங்கள குறை சொல்லிட்டு இருக்குறவங்க தனக்கும் இந்த உணர்ச்சிகள் இருக்கும், அதையும் தான் பூர்த்தி செய்துட்டுதான் இருக்கோம்ங்குறத ஏனோ சுலபமா மறந்துடுறாங்க. சுய இன்பம்ங்குற வார்த்தைய கேட்டாலே முகம் சுளிக்குற எல்லாருக்குமே கலவி தேவையா தான் இருக்கு. வித்யாசம் என்னன்னா, அவங்களுக்கு ஒண்ணு அவங்களோட பாலியல் ஆசை நிறைவேற வழி இருக்கு, அதனால அத பூர்த்தி செய்ய முடியாதவங்கள பாத்தா என்னமோ தீண்டத்தகாதவங்கள பாக்குற மாதிரி தோணுறது, இன்னொரு வகை மனுசங்களுக்கும் இந்த பாலியல் ஆசைகள நிறைவேற்ற வழி இருந்திருக்காது, அதனால அடுத்தவங்கள திருத்துறேன்ங்குற பெயர்ல அவங்களே வார்த்தை பலாத்காரம் செய்துகிடுவாங்க. ஒரு பொதுவான விசயத்த, அதாவது நாம பண்ற விசயத்த அடுத்தவங்க பண்ணினா ஐயோ அம்மா, தப்புன்னு குதிக்குரத முதல்ல நிறுத்தினாலே போதும்.

ஆண்கள பொருத்தவரைக்கும் இந்த உணர்ச்சிகள கட்டுப்படுத்த முடியாதவங்க தான் தீவிர விளிம்புநிலைக்கு போய் அஞ்சு வயசு பொண்ணுன்னு கூட பாக்காம தூக்கிட்டு போய் கற்பழிக்குறான். ஐம்பது வயசு பெரியம்மாவையும் நாசம் பண்றான். நாம இங்க உக்காந்து அவனோட அத வெட்டணும், இத வெட்டணும், அவன் வீட்டு பொம்பளைங்கள இப்படி செய்தா தான் அவனுக்கு புத்தி வரும்னு நம்ம மனசுல இருக்குற வக்கிரங்கள கொட்டிகிட்டு இருக்கோம். யாராவது ஒருத்தர் அவன் இப்படி பண்ணக் காரணம் என்ன, அவன் மனசுல படிஞ்சு இருக்குற அழுக்க நீக்க நாம என்ன செய்துருக்கோம்ன்னு யோசிச்சிருக்காங்களா? சரி, அதெல்லாம் விடுங்க, கற்பழிக்கப்படுற பொண்ணையும் சேர்த்து இன்னும் இன்னும் கற்பழித்தவன் வீட்டு பெண்களும் வார்த்தை கற்பழிப்பு செய்யப்படுவாங்க நம்ம சமூகத்துல. இதெல்லாம் ரொம்ப தெளிவா கூச்சமே இல்லாம செய்வோம், ஆனா இந்த மாதிரியான பாலியல் உணர்வு தப்பு இல்லன்னும் அத எப்படி கட்டுப்படுத்துறதுன்னும் சொல்லிக் குடுக்க மட்டும் தயங்குவோம். கேட்டா அதப் பத்தி பேசினா அசிங்கமாம், ஆபாசமாம். சொல்லிக் குடுக்கலாம் தானே நம்ம வீட்டு பசங்களுக்கு, இந்த பாலியல் உணர்வு இயற்கையானது. உன்னால கட்டுப்படுத்த முடியலனா சுய இன்பம் பண்ணிட்டுப் போ, எந்த பொண்ணையும் நாசம் பண்ணாதன்னு.

இந்த விசயத்த இன்னும் கொஞ்சம் ஆழமா போய் உணர்வு ரீதியா பாத்தோம்னா, ஆண்களை போல தான் பெண்களுக்கும் இந்த பாலியல் ஆசைகள் இருக்கு. சில நேரத்துல எதோ ஒரு காட்சி, இல்லனா நினைவு மனசுக்குள்ள பாலியல் ஆசைய தூண்டி விடும். அத அடக்கி வச்சுட்டு அடுத்த வேலைய பாத்துட்டு இருந்தா, அத பத்தின நியாபகத்துலயே சகஜமா இருக்க முடியாது. பதற்றம், பயம், கோபம் விரக்தி எல்லாம் இதுனாலேயும் தான் வருது. ஆண்கள் எப்படி அடக்க முடியாத காமத்த கற்பழிப்புல காட்டுறாங்களோ, அப்படி பெண்கள் தங்களோட பாலியல் ஆசை நிறைவேறாத தருணங்கள கோபத்துல காட்டுறாங்க. எதைப் பாத்தாலும் கோபம், என்ன செய்தாலும் கோபம். இதனால அவங்கள சார்ந்து உள்ளவங்க தான் பாதிக்கப்படுறாங்க. இந்த மாதிரியான ஆசைகள உள்ளயே வச்சுட்டு கோபமும் பதற்றமுமா திரியுறது பதிலா அடுத்தவங்கள பாதிக்காத, அடிமையாகாத, எல்லை மீறாத மாற்று வழி தப்பே இல்ல. சுய இன்பம் பண்ணி முடிச்சுட்டு அடுத்த வேலைய பாக்க போய்ட்டே இருக்கலாம்.

ரொம்ப சமீபத்துல முகநூல்ல ஒரு சண்டைய பாத்தேன். ஒரு ஆணும் பெண்ணும் அசிங்க அசிங்கமா திட்டி மாத்தி மாத்தி நிலைத் தகவல் போட்டுகிட்டே இருந்தாங்க. பாக்குறதுக்கே அத்தன அருவெறுப்பு. ஒருத்தர் மேல இன்னொருத்தர் சேறை வாரி இறைஞ்சதோட இல்லாம, அவங்கவங்க குடும்பத்து பெண்களையும் வார்த்தை கற்பழிப்பு செய்துட்டு இருந்தாங்க. இத எல்லாம் வேடிக்கைப் பாத்தவங்க அதுக்கும் மேல. அந்த ஆள தூண்டி விட கொஞ்ச பேர், இந்த பொண்ணை தூண்டி விட கொஞ்ச பேர். அநாகரீக வார்த்தைகளை பயன்படுத்ததன்னு அந்த பொண்ணுக்கு சொல்ல யாரும் இல்ல. எல்லாருமே விடாதீங்க, நாங்க இருக்கோம்ன்னு உசுப்பேத்திட்டு இருந்தாங்க. அதுவே அந்த பொண்ணுக்கு பெரிய பிரச்சனைன்னு வந்தா ஆளாளுக்கு ஓடி ஒளிஞ்சு, தனியா அந்த பக்கம் போய் இன்னொரு பொண்ணை பத்தி பேசிட்டு இருப்பாங்கங்குறது தான் நிதர்சனமான உண்மை. கெட்ட கெட்ட வார்த்தை ப்ரயோகத்துக்கு வக்காலத்து வாங்குறவங்க, உணர்வுப்பூர்வமா விளக்கம் குடுக்க நினச்சா ஆபாசம்னு சொல்லுவாங்க.

இப்படி இந்த நிறைவேறாத பாலியல் ஆசைகளால ஆண்கள நம்பி ஏமாந்து போற பெண்கள் எத்தனையோ பேர். ஆண்களும் சரி, பெண்களும் சரி, மாறிப் போன காலச்சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தங்களோட தேவைகள பூர்த்தி செய்ய இணையத்த பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. அதேநேரம் இன்றைய சூழ்நிலைல இந்த மாதிரி வேறு ஆண்களோட உறவு வைக்குற பெண்கள் அவங்களுக்கே தெரியாம பல விதத்துல பலருக்கும் பயன்படுறாங்க. அலைபேசி மூலமா நம்பிக்கையான ஒருத்தன் கூட தான் பாலியல் பேச்சுகள் வச்சுக்குறோம்ன்னு நினச்சா அவன் அந்த பக்கம் சத்தமா போட்டு அவ பேசிட்டு இருக்குறத நண்பர்கள் கூட உக்காந்து கூட்டமா கேட்டுட்டு இருப்பான். அத பதிவு செய்து இணையத்துல உலவ விடுவான். அதுக்கப்புறம் அந்த பெண்ணோட நிலைய நினைச்சுக் கூட பாக்க முடியாது. அத்தனை பேரும் அவங்கவங்க நிலை மறந்து அந்த பெண் மட்டுமே தப்பு செய்தவள்ன்னு ஆளாளுக்கு பேச ஆரம்பிச்சிடுவாங்க. வார்த்தை பலாத்காரம் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. கேலிகளும் கிண்டல்களுக்கும் நக்கல்களுக்கும் குறைவே இருக்காது. அதே மாதிரி தான் இணையத்துல முகநூல், ஜி-டாக் வகையறாக்களும். உள்டப்பியில பதிவு செய்யப்படுற வார்த்தை பிரயோகங்கள் அப்படி அப்படியே எத்தனை பேருக்கு வெட்டி ஒட்டப்படும்ன்னு சொல்ல முடியாது. இன்னும் விதவிதமான பிரச்சனைகள சந்திச்சவங்க எத்தனையோ பேரு.

எல்லாம் சரியா போயிட்டு இருக்குற வரைக்கும் தப்பில்ல, ஆனா பிரச்சனைன்னு வந்துட்டா பதிவு செய்யப்பட்ட பாலியல் பேச்சுகளும், பாலியல் உரையாடல்களும் (sex chatting) மிரட்டுறதுக்கு பயன்படும். பெண்கள் நிம்மதிய, வாழ்க்கைய தொலைக்குறது இந்த மாதிரி நேரங்கள்ல தான். ஒண்ணு அந்த பெண் விருப்பமே இல்லாம அவங்க மிரட்டலுக்கு பணிஞ்சு போகணும், இல்லனா தங்களோட வாழ்க்கைய முடிச்சுக்கணும். குடும்பத்த எதிர்க்கொள்ள முடியாம, மான அவமானம் தாங்க முடியாம இந்த மிரட்டல் தற்கொலைல வந்து முடிய வேண்டியதா இருக்கு.

உனக்கெதுக்கு இந்த அக்கறை, யாருக்குமே இல்லாத அக்கறைன்னு கேள்விகள் கேட்டா, பெண் என்பவள் வெறும் போதை பொருள் இல்ல, எல்லாரையும் போல் சிந்திக்கவும், சுதந்திரமா இருக்கவும் அவளுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமைய புரிய வச்சுட்டாலே குற்றவுணர்ச்சில இருந்து அவ தப்பிச்சிடுவா. அதுவும் இல்லாம கல்யாணம் ஆகி கணவனை இழந்தவங்க, கணவனை பிரிஞ்சி இருக்குறவங்க, சந்தர்ப்ப சூழ்நிலையான கல்யாணம் ஆகாதவங்க, குடும்ப பிரச்சனைகள்ல ரொம்ப பெரிய மன அழுத்தத்துல இருக்குற பெண்களுக்கு இது பெரிய ஆறுதல். உடனே எல்லா பெண்களும் சுய இன்பம் பண்ணனும்னு சொல்றீங்க, அதெப்படி நீங்க சொல்லலாம்னு சண்டைக்கு வந்துடாதீங்க, நான் எல்லாரும் கண்டிப்பா சுய இன்பம் பண்ணனும்னு சொல்லவே இல்ல. அதே நேரம், அப்படி பண்ண வேண்டிய கட்டாயம் வந்தா தப்பில்லன்னு தான் சொல்ல வரேன். அதென்னவோ கொலை குற்றம் பண்ற மாதிரி கூனி குறுகி போக வேண்டிய அவசியம் இல்லன்னு தான் திரும்ப திரும்ப சொல்ல வரேன்.

இப்போதைக்கு விடைபெறுறேன்....

....................................................................................

இந்த கட்டுரை என்னோட சொந்தப் படைப்பு. இந்த படைப்பு தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா- 215- புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் – 215” வகை- (3) பெண்கள் முன்னேற்றம் கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது.  இது இதுக்கு முன் வெளியான படைப்பு இல்ல, முடிவு வெளிவர வரைக்கும் வேற இதழ்கள்ல வெளிவராதுன்னு உறுதி அளிக்கிறேன். 

நன்றி
படம்: இணையம் (www.google.com) 


Saturday 12 September 2015

யாதுமாகியவன்


அந்தப் பாடல்
என் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது...
பகலில் கூட வானத்தை
வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

விம்மி முட்டி வெளிவரத் தயங்கிய கண்ணீரை
அணையுடைத்து வெளிக்கொண்டு வந்தவன்
ஒரு நாள் இதே வானத்தின் சாட்சியாய்
என் கைப்பற்றிக் கிடந்தான்...

அது ஒரு மொட்டை மாடியென்று
உங்களுக்கு சொல்லத் தேவையில்லை...
நிலாவெளிச்சத்தில் எங்களை
ரசித்துக் கொண்டிருந்த அந்த தென்னங்கீற்றுகள்
ஏற்கனவே உங்களுக்கு சாட்சி சொல்லியிருக்கும்...

யாரவன் உனக்கு?
இப்படி திடீரென ஒரு கேள்வியை
உங்களிடமிருந்து எதிர்க்கொண்டால்
நிச்சயம் திணறித் தான் போவேன் நான்...

யாதுமாகியவன் என்று ஒற்றை வார்த்தையில்
முடித்துக் கொண்டால்
புரிந்து கொள்வீர்களா என்ற ஐயம் எனக்கு...

ஏனென்றால் ஒரு தெய்வீக காதலனை நீங்கள்
உங்கள் கற்பனையில்
உருவகித்துவிடக் கூடாது பாருங்கள்...

இவன் என் சண்டைக்காரன்.
முணுக்கென்று கோபம் கொண்டு
நான் விட்டெரியும் தலையணைகளை
அலட்சியமாய் பிடித்து வெவ்வெவே என்பான்...

எதிர்வீட்டு பெண்களுக்கு கண்ஜாடை காட்டிவிட்டு,
என்னைக் கண்டதும் ஓடி ஒளிந்துக் கொள்வான்.
காது பிடித்து திருகினாலோ
பவ்யமாய் அப்பாவி முகம் காட்டுவான் கிராதகன்.

காட்டுக்கத்தலாய் நான் கத்திக் கொண்டிருக்கும் பொழுது
படக்கென்று ஒற்றை முத்தத்தால்
என்னை ஊமையாக்கிவிடும் பாதகன்...

என் பிசாசு, எருமை மாடு, கொரங்கு, ஹிப்போபொட்டாமஸ்...
இன்னும் இன்னும் நிறைய...

மற்றொரு நாள் இவன் யாரென்று கேட்டால்
என் பிள்ளை என்பேன்.
அவனோ என்னை குழந்தையாக்கி
தாலாட்டு பாடிக் கொண்டிருப்பான்...

இதோ அந்த பாடல் இன்னும் தொடர்ந்துக் கொண்டேதானிருக்கிறது...
"நான் உனை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழுமிந்த சொந்தம்...



.