Showing posts with label வால்த்தனம். Show all posts
Showing posts with label வால்த்தனம். Show all posts

Friday, 16 October 2015

தொட்டிக்குளியலும் குட்டித் தூக்கமும்



இந்தா ஒரு படம் இருக்குல. அந்த படத்த பாத்த உடனே மனசுக்குள்ள அப்படி ஒரு சந்தோசம். “ஹே..... நாங்க குளிக்கப் போறோம்னு டவ்வல தலைக்கு மேல கறக்கிகிட்டே ஓடுன காலம் எல்லாம் மடமடன்னு நினைவுகளா நான் முந்தி நீ முந்தின்னு மனசுக்குள்ள முட்ட ஆரம்பிச்சிடுச்சு. இப்ப எத முதல்ல எடுத்து விட, எத ரெண்டாவதா எடுத்து விடன்னு ஒரே கொழப்பம். அதனால நான் பாட்டுக்கு நினைவுகள சில்லற மாதிரி சிதறி விடுறேன், நீங்க அப்படியே பாலோ பண்ணிக்கோங்க...

நாம இப்ப இருபத்தியஞ்சு வருஷம் முன்னால போகப்போறோம். ரைட்டு விடுங்க, ஒரு மூணு வருசத்த கழிச்சுட்டு இருபத்திரண்டு வருசத்துக்கு முன்னால போவோம். அப்ப தான் எனக்கு கொஞ்சம் வெவெரம் தெரிஞ்ச வயசா இருக்கும்.

அப்ப எங்க வீட்டை சுத்தி எங்களுக்குன்னு ஏழு ஏக்கர் உண்டு. சித்தப்பாவோடதும் சேர்த்து பதினாலு ஏக்கர். அதனால வயல், தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, காய்கறி தோப்புன்னு தனித்தனியா பிரிச்சு ஒவ்வொரு வகை மரமும் நட்டு வச்சிருப்பாங்க. வயல் வரப்புலயும் பாத்தி வரப்புலயும் மாமரங்கள் நிக்கும். அப்படியே தோப்புக்கு ஓரமா போனா வருசையா கொல்லாமரங்கள். நடுநடுவுல சக்க மரங்கள். இதெல்லாத்துக்கும் தண்ணி அடிக்க ஒரு பம்பு செட்டு.

இந்த பம்பு செட்டு தான் எங்களுக்கு ஆட்ட பூமி. அதுவும் கிணறு பக்கத்துல மோட்டார் ரூம். மோட்டார போட்டா முதல்ல தண்ணி ஒரு சின்னத் தொட்டியில வந்து பாயும். அது நிரம்பி அடுத்து இருக்குற பெரிய தொட்டியில பாயும். தோப்புக்கு தண்ணியடிக்க அந்த சின்னத் தொட்டியே போதும். இந்த பெரிய தொட்டி எதுக்குனா மாடுகள குளிப்பாட்ட. கிட்டத்தட்ட அஞ்சு மாடுகள ஒரே நேரம் தொட்டிக்குள்ள இறக்கி, தொட்டி நிறைய தண்ணி நிரப்பி மாடுகள நீந்த விட்டு குளிப்பாட்டுவாங்க. நானும் தம்பியும் மாடுங்க மேல உக்காந்து வேடிக்கைப் பாத்துட்டு இருப்போம். பின்ன, தண்ணிக்குள்ள விழுந்தா கால் எட்டாது, தத்தக்கா பித்தக்கா கோவிந்தா தான்.

அப்பா மாடுகள எல்லாம் குளிப்பாட்டி முடிச்சதுக்கு பொறவு அரை தொட்டி தண்ணி போட்டு நாங்க ஆட்டத்த ஆரம்பிப்போம். தம்பிக்கு தண்ணினா பயம். ஒரு கை எடுத்து மூக்க பொத்திகிட்டே தான் முங்குவான். நான் அப்படி இல்ல, தம் கட்டி, அத்தபார்ன்னு முங்கி எழும்பிடுவேன்.

கொஞ்ச வருஷம் போனா, லீவு விட்டா போதும், ஊர்ல இருந்து மாமா பிள்ளைங்க, சித்தி பிள்ளைங்க, பெரியம்மா பிள்ளைங்க எல்லாரும் வந்து குவிஞ்சிருவாங்க. விடிஞ்சாலே போதும், பொடிசுங்க அத்தன பேரும் ஆளுக்கொரு துணியையும் டவலையும் எடுத்துகிட்டு குளிக்கப் போறோம்னு கிளம்பிடுவோம். பெரியவங்க எல்லாம் வீட்ல உள்ள சட்டிப் பானையெல்லாம் தூக்கிட்டு எங்க கூடயே கிளம்பிடுவாங்க. எதுக்கு? சமைக்கத் தான்.

பத்து பனிரெண்டு கிலோ கோழி, முட்டை, அஞ்சாறு கிலோ ஆட்டிறைச்சின்னு அன்னிக்கி சமையல் தூள் பறக்கும். தோப்புல கிடக்குற தென்னம்மட்ட, சில்லாட்ட, கதம்பல் எல்லாத்தையும் நாங்க பொறுக்கிட்டு வந்து குடுப்போம். அவ்வளவு தான் வேலை முடிஞ்சுது, நாங்க நேரா போய் தண்ணிக்குள்ள பாய்ஞ்சிடுவோம். அதுக்கப்புறமா, மெனுவை பொருத்து பிரியாணியோ, உளுந்தஞ்சோறோ ரெடி ஆகும். பெரும்பாலும் மீன் சமைச்சா அன்னிக்கி உளுந்தஞ்சோறு தான். இதுல அப்பா, மாமாக்கள்ன்னு பெரியாளுங்க எல்லாம் ஒரு துண்டையோ, பாயையோ பெட்ஷீட்டையோ புல்லுல விரிச்சி உறங்கிருவாங்க.

கண் எல்லாம் ரெத்த சிவப்பா, கை விரல்கள் எல்லாம் சுருக்கம் விழுந்து, பல் எல்லாம் கடகடன்னு தந்தியடிச்சாலும் தண்ணிய விட்டு ஒரு பயலும் புள்ளையும் வெளில வர மாட்டோமே. காலைல பத்து மணிக்கு தண்ணிக்குள்ள இறங்கினோம்னா மதியம் ரெண்டு மணிக்கு தான கரையேறுவோம். அதுவும் கடும் பசில சமையல் மணம் நாசிய தாக்கினா தான் உண்டு.

நான் எட்டாவது படிக்குறப்ப பம்பு செட்டு ரொம்ப தூரமா இருக்குன்னு அப்பா வீட்டு பின்னாலயே ஒரு தொட்டி கட்டினாங்க. அப்பவே நான் போட்ட கண்டிசன் ஒண்ணு தான், தொட்டி ரொம்ப பெருசா இருக்கணும், கிட்டத்தட்ட நீச்சல் குளம் மாதிரி, அப்படியே பக்கத்துல பாத் டப் மாதிரி ஒரு சின்ன தொட்டியும் வேணும்னு கேட்டேன். கிட்டத்தட்ட பதினஞ்சு பேர் தாராளமா உள்ள நின்னு குளிக்கலாம். அப்படி ஒரு தொட்டிய அப்பா கட்டினாங்க.

நானெல்லாம் சும்மாவே எங்கயாவது ப்ரண்ட்ஸ் கேங்கோட தான் திரிவேன், வீட்டு பின்னால தொட்டி வந்ததுக்கு அப்புறம் லீவ் நாள்னா எல்லாரும் அசம்பிள் ஆகுற இடம் அங்க தான். மொறுமொறுன்னு அம்மா தர்ற மிக்சர கொறிச்சுகிட்டே, தொட்டி மேல ஏறி உக்காந்துகிட்டு தண்ணிக்குள்ள ரெண்டு காலையும் விட்டு ஆட்டிகிட்டே கதை பேசுறது ஒரு சுகம். பாத்தாததுக்கு பக்கத்துலயே கொய்யா மரம். பசங்க எல்லாரும் கொரங்கு மாதிரி கொய்யா மரத்துல தான் ஏறிக்கிடப்பாங்க.

திடீர்னு யாராவது சவுண்ட் விடுவாங்க, “குளிப்பமா”ன்னு. அவ்வளவு தான் தொட்டில உக்காந்துட்டு இருக்குற அத்தனை பேரும் அத்தபார்ன்னு தண்ணிக்குள்ள பாய்ஞ்சிருவோம். அம்மாவுக்கு தான் கூடுதல் வேலை. பின்ன, நடுங்க நடுங்க குளிச்சிட்டு வர்ற எங்களுக்கு தலைத் துவட்ட டவல் குடுக்குறதுல இருந்து, சுட சுட காப்பியும் பஜ்ஜியும் குடுக்கணுமே.

காலேஜ் படிக்குறப்பவும் அதே கதை தான். குரூப் ஸ்டடின்னு எல்லாரையும் வீட்ல கூப்ட்டு வச்சுட்டு, நேரா வீட்டு பின்புறம் ஓடிருவோம்.

இப்படி ப்ரெண்ட்ஸ், ரிலேடிவ்ஸ் தவிர்த்து, இந்த தண்ணி தொட்டி என்னோட இன்னொரு உலகம். வாரத்துல அஞ்சு நாளும் அது தன்னந்தனியா என்னோட கட்டுப்பாட்டுல தான் இருக்கும். ஸ்கூல்/ காலேஜ் விட்டு வந்ததும் நேரே அங்க தான் போவேன். எனக்காக அந்த சின்னத் தொட்டி காத்துகிட்டு இருக்கும். அப்படியே மோட்டார போட்டு, தண்ணி நிரப்பி அதுல கால் நீட்டிப் படுத்தேன்னா அப்படி ஒரு உறக்கம் போடுவேன்.

யாராவது என்னைத் தேடி வந்தாங்கனா அந்த தண்ணித் தொட்டிக்குள்ள உறங்கிட்டு இருப்பா போய் பாருங்கன்னு தான் அம்மா சொல்லி விடுவா. முதல்ல பாக்குறவங்க எல்லாம் அதெப்படி தண்ணி மேல மிதந்துகிட்டே தூங்குறான்னு ஆச்சர்யமா பாத்துருக்காங்க. அப்புறம் அவங்களுக்கே பழகிப் போச்சு, புள்ளைய வீட்டுக்குள்ள காணோம்னா இங்க தான் தண்ணித் தொட்டிக்குள்ள ஊறிக் கிடப்பான்னு.



.

Tuesday, 13 October 2015

காலேஜ் அலப்பரைகள்



சாயங்காலம் காலேஜ் விட்டு மாமா கூட கார்ல வந்துட்டு இருந்தேன். இன்னிக்கின்னு பாத்து ஒரே ட்ராபிக் ஜாம். வண்டி எல்லாம் மெல்ல மெல்ல ஊர்ந்து போய், ஒரு இடத்துல அப்படியே நின்னுடுச்சு.

திடீர்னு ஒரு குரல். ஹே.... டர்ஸ் அப்படின்னு. அட, யாருடா இது, நம்மள இப்படி யாரும் கூப்பிட மாட்டாங்களேன்னு பாத்தா அது என்னோட காலேஜ் மேட். ஐ மீன், க்ளாஸ் மேட். அவ கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு ட்ராபிக் நகர ஆரம்பிச்சதும் டாடா சொல்லிட்டு கிளம்பிட்டேன்.

ஆனா என்னோட நியாபகங்கள் பின்னோக்கி போச்சு. இருங்க, ஒரு டார்ட்டாய்ஸ் கொசுவர்த்தி சுருள் கொளுத்திக்குறேன், அப்ப தான் சிட்டிவேசனுக்கு சரியா இருக்கும்... சொய்ங்......

ப்ளஸ் டூ முடிச்சதும் பெருசா காலேஜ் போய் படிக்கணும், சாதிக்கணும்னு எல்லாம் ஆசைகள் இல்ல. எனக்குன்னு ஒரு ஸ்கூட்டி, ஜாலியா ஊர் சுத்தணும், விளையாட்டா காலேஜ் போகணும், இதான் ப்ளானே.

அப்பாகிட்ட சொன்னப்ப, சரி, போறது தான் போற, பிபிஏ ஜாயின் பண்ணு, அப்புறம் எம்பிஏ படிச்சு பேங்க் மேனேஜர் (ஞே) ஆகிடலாம்னு சொல்லிட்டார். நானும் அந்த கோர்ஸ் எனக்கு சுத்தமா பிடிக்கலனாலும் நல்லப் புள்ளையா சரி சரின்னு தலையாட்டிகிட்டேன்.

அங்க க்ளாஸ்ல போய் உக்காந்தா எனக்கு தெரிஞ்ச ஒரே சப்ஜெக்ட் தமிழும் இங்கிலீசும் தான். வேற எத பாத்தாலும் முட்ட முட்டையா கம்பி கோலம் போட்ட மாதிரியே ஒரு பிரம்மை.

சரி, இப்ப அது நம்ம பிரச்சனை இல்ல, நான் விசயத்துக்கு வர்றேன்.

நான் அந்த கோர்ஸ் படிச்சது வெறும் ஒண்ணரை மாசம் தான். அதுக்குள்ள அங்க பண்ணின அட்டகாசங்கள் தான் ஹை-லைட்டே...

என்னோட சத்தம் எப்பவும் ரொம்ப பலமா இருக்கும். யார் கிட்ட பேசினாலும் குரலை ஓங்கி தான் பேசுவேன். அதனாலயே என்னைப் பாத்து என்ன மைக்க முழுங்கிட்டியான்னு கேப்பாங்க. தூரத்துல என்னைப் பாத்தாலே “ஹே மைக்”ன்னு தான் ஆரம்பிக்கவே செய்வாங்க. அப்பலாம் எனக்கு கோபம் எல்லாம் வராது, ஒரே பெருமை தான். பின்ன, ஒரு பட்டப்பெயர் கிடைக்குதுனா சும்மாவா.

சத்தமா பேசினாலும் ஆரம்பத்துல கொஞ்சம் அடக்க ஒடுக்கமா தான் இருந்தேன். அப்ப பாத்து எங்க சீனியர்ஸ் வெல்கம் டே வச்சாங்க.

இங்க எல்லாம் வெல்கம் டேனா என்னன்னு பாத்தீங்கனா ஸ்டாப் கிட்ட பெர்மிசன் வாங்கிட்டு அவங்க முன்னாடியே ராகிங் பண்றது தான்.

பாவம் எங்க சீனியர் அக்காங்க எல்லாம் ரொம்ப நல்லவங்களா இருந்தாங்க. ஒரு துண்டு சீட்டுல பாட்டு படி, டான்ஸ் ஆடு, பாண்டி விளையாடுன்னு ரொம்ப ஈசியா தான் எழுதி வச்சிருந்தாங்க. அத நல்லா குலுக்கி நாம ஒரு சீட்ட எடுத்து அதுல இருக்குற மாதிரி பண்ணனும்.

என் கிளாஸ்மேட்ஸ் இருக்காங்களே, சரியான அழுவுனி புள்ளைங்க. இதுக்கே பயந்து நடுங்கி, அழுது வடிச்சுட்டு இருந்தாங்க.

அப்ப தான் ஒருத்திக்கு கோழி பிடிக்கணும்னு வந்துச்சு. அவ அந்த இடத்துலயே கண் எல்லாம் கலங்கி பொலபொலன்னு அழ ஆரம்பிச்சுட்டா. நான் பாத்தேன். அக்கா, நான் கோழி பிடிக்குறேன்னு சொல்லிட்டே, பா...பா....ன்னு பீல்ட்ல இறங்கிட்டேன்.

கோழினா சும்மா பிடிச்சுட முடியுமா என்ன? பறந்து பறந்துல போகும். நானும் அது பின்னாலயே ஓடி ஓடி, கடைசியா கோழிய சீனியர் அக்கா ஒருத்தங்க தலைல நிப்பாட்டி வச்சுட்டேன்.

அக்கா, அசையாதுங்கக்கா, கோழி உங்க தல மேல நிக்குது. கைய தூக்காதீங்க, தலைய திருப்பாதீங்கன்னு ஏகப்பட்ட கண்டிசன்ஸ். அந்தக்கா திருதிருன்னு முழிச்சுட்டு அசையாம நிக்குறாங்க. அப்புறம் கபால்ன்னு கோழிய பாய்ஞ்சு பிடிச்சுட்டு, கோழி உங்க தலைல ஆய் போய்டுச்சுக்கா, தொடச்சுக்கோங்கன்னு சொல்லிட்டு சீட்ல வந்து உக்காந்துட்டேன்.

அப்புறம் என்னை சீட்டு எடுக்க சொன்னப்ப பாட்டு பாடவும்னு தான் வந்துச்சு. நான் பாட்டுக்கு நடுவுல போய் நின்னு, ரெண்டு பக்கமா போட்டுருந்த ஷால கழட்டி ஒரு பக்கமா போட்டுட்டு சிவாஜி மாதிரி ஸ்டைலா நிமிர்ந்து நின்னு “யாருக்காக, இது யாருக்காக, இந்த காலேஜு இது யாருக்காக”ன்னு பாடி மறுபடியும் ஸ்டைலா ஒரு பார்வை பாத்துட்டு உக்காந்துட்டேன். அப்ப தான் “யாருடா இவ”ன்னு மொத்த டிபார்ட்மென்டும் என்னை திரும்பி பாத்துச்சு.

ஒரு மேடம் எடுக்குற பாடம் சுத்தமா புரியாது. அது என்ன சப்ஜெக்ட்னே எனக்கு இப்ப மறந்தும் போச்சு. அவங்க வாயத் தொறந்தாலே தாலாட்டு பாடுற மாதிரி தான் இருக்கும். அப்படி தான் ஒருநாளு பக்கத்துல ஒருத்தி நல்லா தூங்கிட்டு இருந்தா. எனக்கு அத பாத்து ஒரே கொட்டாவி கொட்டாவியா வர ஆரம்பிச்சிடுச்சு. “ஏவ், ஏவ்”னு ஒரே குனிஞ்சு உக்காந்து கொட்டாவி விட்டுட்டு இருக்கேன். திடீர்னு ஒரு குரல். “ஸ்டான்ட் அப் ஆன் தி பெஞ்ச், அண்ட் கெட் அவுட்”ன்னு. நான் பட்டுன்னு பெஞ்ச் மேல ஏறி நின்னுகிட்டு இப்படியே எப்படி வெளில போகன்னு அப்பாவியா கேட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சுது, அந்த ஸ்டான்ட் அப் ஆன் தி பெஞ்ச் பக்கத்து சீட்டுக்காரிக்கும், கெட் அவுட் எனக்குமாம். இதென்ன சொத்தா மை லார்ட், பங்கு பிரிக்குரதுக்கு?

மறுபடியும் அதே மேடம் தான். அவங்க எடுக்குறதே புரியாது, இந்த லெச்சனத்துல செமினார் வேற எடுக்க சொன்னாங்க. காலேஜ் போயே அப்ப பதினஞ்சு நாள் ஆகல, அதுக்குள்ள செமினார் எடுக்க சொன்னா எப்படி?

எல்லா புள்ளைங்களும் பயந்துகிட்டு வாயே தொறக்கல. எனக்கு அப்ப டாபிக் எதுவும் குடுக்கல. நம்ம பேரு ஆல்பபெட்டிகல்ல கடைசி பேருங்குறதால அப்புறமா டாபிக் குடுக்கலாம்னு விட்டு வச்சிருந்தாங்க.

முதல் நாள் செமினார் க்ளாஸ். எடுக்க வேண்டிய புள்ள எழுந்து நின்னு அழுகுது. அதுவும் கேவி கேவி அழுகுது. நம்ம செட்டுல ஒரு புள்ள அழுதா பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? மிஸ் நான் செமினார் எடுக்குறேன் மிஸ்ன்னு ரெடி ஆகிட்டேன். அவங்க என்ன நினச்சாங்களோ, சரி எடுன்னு சொல்லிட்டாங்க.

நான் பாட்டுக்கு முன்னாடி போனேன். சாக்பீஸ் எடுத்து ஏ+பி தி வோல் ஸ்கயர் ஈக்குவல் டூ ன்னு எனக்கு தெரிஞ்ச ஒரே கணக்கு பாடத்த எடுக்க ஆரம்பிச்சுட்டேன். இதுல காமடி என்னன்னா மேடம் உக்காந்துகிட்டு என்னையே பாத்துகிட்டு, நான் ஓவர் மேடம் சொன்னதும் போய் உக்காருன்னு சொல்லிட்டாங்க. ஆக மேடமுக்கே ஒன்னும் தெரியல சப்ஜெக்ட் பத்தி. நான் செமினார் முடிச்சுட்டு வந்து புள்ளைங்க கிட்ட இத சொல்லி சொல்லி ஒரே சிரிப்பு. மேடம், என்ன அதுன்னு மிரட்டி கேட்டதும் ஒருத்தி உளறிட்டா. உடனே நான் க்ளாஸ்ல இண்டீசென்ட்டா பிகேவ் பண்ணினேன்னு சொல்லி பிரின்சிபால்கிட்ட கொண்டு போய் விட்டுட்டாங்க

பிரின்சிபால் கிட்ட போனாலும் நாம அசருற ஆளா? முதல்ல அவங்கள புரியுற மாதிரி க்ளாஸ் எடுக்க சொல்லுங்க, அப்புறமா நாங்க வேணா செமினார் எடுக்குறோம், அதுக்கப்புறமா வேணா தூங்காமலும்  இருக்கோம்னு போர் கொடி தூக்கிட்டேன். அப்புறம் என்ன, அடுத்த நாள்ல இருந்து மேடம் விழுந்து விழுந்து படிச்சுட்டு வந்து க்ளாஸ் எடுத்தாங்க.

அதே மாதிரி இங்கிலீஷ் க்ளாஸ்க்கு செமினார் எடுப்பேன்னு அடம்புடிச்ச ஒரே ஆள் ஐயாம் தான். ஏன்னா, எல்லாம் தமிழ் மீடியம் பிள்ளைங்களா இருப்பாங்க, இங்கிலீஷ் கண்டா தெறிச்சு ஓடிருவாங்க. எனக்கு தான் நல்லா வருமே, அதான் பந்தாவுக்கு வீம்பா  செமினார் வேணும்னு கேப்பேன். ஆனா  அந்த  ஒன்னரை மாசத்துல  செமினார்  டாபிக்  கிடச்சும் என்னால செமினார்  எடுக்க  முடியலங்குறது  ஒரு பெரிய வருத்தமான விஷயம். 

எங்களுக்கு வாரத்துல ஒரு நாள் ப்ரீ ஹவர் உண்டு, அப்ப ஏதாவது விளையாட்டு ப்ராக்டிஸ் பண்ணுவோம், அப்ப எங்க பி டி மேடம் here one girl sitting, where going-னு கேட்டாங்க, நான் உடனே i go, she go madam, i come, she no come madam னு சொல்ல அவங்க u good girl ன்னு சொல்லி தட்டிக் குடுத்தாங்க பாருங்க, அவங்க  இங்கிலீஷ நினச்சு ஹாஹா கிரௌண்ட் விட்டு ஓடி வந்து அங்கயே விழுந்து விழுந்து சிரிச்சோம். இப்படி  எல்லாம்  படிச்சுக் குடுக்குறவங்கள கிண்டல் பண்ணக் கூடாதுன்னு யாரும்  சண்டைக்கு வந்துடாதீங்க. வயசு அப்படி. அதோட  படிச்சு குடுக்குற வாத்தியார் சரியா இருந்தா தான புள்ளைங்க சரியா இருப்பாங்க.

நான் படிச்சது லேடீஸ் காலேஜ். காலேஜ் உள்ள போகணும்னா மெயின் ரோட்டுல இருந்து இறங்கி ஒரு கிலோமீட்டர் நடந்து தான் போகணும். நான் ஸ்கூட்டில போவேனா, அதனாலயே சாயங்காலமானா ஸ்கூட்டில ரெண்டு ரெண்டு பேரா ஏத்தி ஒரு பத்து பேரை மையின் ரோட்டுல கொண்டு போய் விடுவேன். இப்படி நான் ட்ரிப் அடிக்குற இடத்துல தான் பசங்க நின்னுட்டு இருப்பானுங்க. நான் அங்கயும் இங்கயுமா மாத்தி மாத்தி ட்ரிப் அடிக்குறத பாத்துட்டு கொஞ்சம் கொஞ்சமா கிண்டல் பண்ண ஆரம்பிச்சானுங்க. நானும் கொஞ்ச நாள் கண்டுக்காம இருந்தேன்.

முதல்ல ஒருத்தன் லவ் லெட்டர் கொண்டு வந்து நீட்டினான். நானும் நல்லப்புள்ளையா அத வாங்கி அங்க வச்சே படிச்சு பாத்துட்டு, ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் கரெக்சன் போட்டு பத்துக்கு மூணு மார்க் வேற போட்டுக் குடுத்தேன்.

அப்புறமாவது அந்த பசங்க திருந்தினாங்களா, இல்லையே, என்னைப் பாத்து ஒருத்தன் விசில் அடிக்க ஆரம்பிச்சான். ரெண்டு மூணு நாள் முறைச்சுப் பாத்தேன், அப்புறமும் அடங்குற மாதிரி தெரியல, நேரா அவன் முன்னால ஸ்கூட்டிய கொண்டு போய் விட்டுட்டு செவுள்லயே விட்டேன் ஒரு அறை. பையன் பொறி கலங்கிட்டான். அவனுக்கு சப்போர்ட்டா ஒருத்தன் பாட்டு பாடி கிண்டல் பண்ணிட்டு இருப்பான். அவனுக்கு செருப்பை கழட்டி மாத்தி மாத்தி மொத்திட்டேன். அவ்வளவு தான் காலேஜ் முழுக்க நான் பிரபலமாகிட்டேன்ல. அதனால என்னோட பெயர் மைக்ல இருந்து டர்ஸ் ஆகிடுச்சு.

இன்னும் நிறைய அலும்பல்கள். சேட்டைகள். எல்லாம் ஒரு ஒன்னரை மாசம் தான். அப்புறம் தான் என்னோட வாழ்க்கைல டர்னிங் பாயின்ட்டா ஒரு சம்பவம் நடந்துச்சு. அந்த சம்பவத்த தான் இங்க அப்பப்ப சொல்லிட்டு வரேன்னே....

இப்படியாக தான், மைக் என்றும், டர்ஸ் என்றும் டெரரா அழைக்கப்பட்ட நான் உங்களால் இப்பொழுது காயு என்று அன்போடு அழைக்கப்படுகிறேன்.

இப்படிக்கு, அன்பும் பணிவும் மிக்க காயு.....


.

Wednesday, 15 July 2015

தீனி பண்டாரங்கள்



ரொம்ப நாள் அப்புறம் இன்னிக்கி தான் பரோட்டாவும் சிக்கனும் சாப்ட்ருக்கேன். அதுக்கான காரணத்த சொன்னா யாரும் சிரிக்கக் கூடாது சொல்லிட்டேன்.

சாயங்காலமா கார்த்திக்கும் எனக்கும் சண்டை. நான் பாட்டுக்கு கோபத்துல இருக்கேன், அவர் கிச்சிலி காட்டுற மாதிரி சமாதான கொடி காட்டிட்டு இருக்கார், நான் விடுவனா கோபத்துல திட்டிட்டு இருக்கும் போதே பரோட்டா நியாபகம் வந்துடுச்சு. உடனே இன்னொரு மொபைல கைல எடுத்து அப்பாவுக்கு கால் பண்ணினேன். ரிங் போய்ட்டே இருக்கு, அப்பா அட்டென்ட் பண்ணின மாதிரி இல்ல. சரின்னு நந்து வீட்டுக்கு கால் பண்ணேன். நந்து எடுத்துட்டு தாத்தா கடைக்கு போய்ட்டாங்கன்னு சொல்லிட்டா. விடுவனா, எப்பவும் அப்பா போய் இருக்குற கடைக்கு கால் பண்ணி அப்பா கிட்ட பரோட்டா வாங்கிட்டு வர சொல்லிட்டு தான் கார்த்திக் கூட சமாதானத்துக்கே வந்தேன். திங்குற விசயத்துல நான் என்னிக்கும் வஞ்சம் வச்சதே இல்லன்னு உங்களுக்கு எல்லாம் இப்ப நல்லா தெரிஞ்சிருக்கும்.

சின்ன வயசுல வீட்ல அம்மாவுக்கும் எனக்கும் எப்பவாவது பயங்கரமா சண்டை நடக்கும். அப்ப எல்லாம் நான் கோபத்துல மூஞ்சிய தூக்கி வச்சுப்பேன். சாப்பாட்டு நேரம் வந்ததும் அம்மா என்னை சாப்பிட வர சொல்ல மாட்டா. “எம்பொண்ணு ரோசக்காரி, இன்னிக்கி சாப்பிட மாட்டா”ன்னு சொல்லிட்டே மத்தவங்களுக்கு எல்லாம் தட்டு எடுத்து வைப்பா. நான் அப்படியே ஹால்ல சோபால உர்ர்ர்ன்னு உக்காந்துட்டு இருப்பேன்.

அம்மா, முதல் தோசைய சுட்டு அப்பா தட்டுல வைப்பா. நான் விடுவனா, விறுவிறுன்னு எழுந்து போய் அப்பா முதல் வாய் வைக்குறதுக்கு முன்னாடியே தட்டை பறிச்சு நான் திங்க ஆரம்பிச்சுடுவேன். அம்மா உள்ளுக்குள்ள சிரிச்சாலும் முறைச்சுட்டே இன்னொரு தட்டுல இன்னொரு தோசைய அப்பாவுக்கு கொண்டு வந்து வைப்பா. நான் விடுவனா, அதையும் தூக்கிடுவேன்.

வழக்கமா ரெண்டு தோசைக்கு மேல திங்க மாட்டேன். ஆனா சண்டைன்னு வந்துட்டா கோபம் தலைக்கேறிடும். அதனால கிட்டத்தட்ட ஏழு தோசைய பிடுங்கி பறிச்சு தின்னா தான் என் கோபம் அடங்கும். இதுல தோசைக்கு பதில் சப்பாத்தி, புட்டு, பூரி, தாளிச்ச கப்பக்கிழங்கு, கோதுமை ரவை எத வேணா போட்டு ஃபில் பண்ணிக்கலாம்.

அப்பவும் வெறும் தோசைய தின்னா நல்லாயிருக்குமா, கிட்சன் உள்ள புகுந்து மிக்சர் டப்பா, சிப்ஸ் டப்பா, ஜாங்கிரி, அதிரசம்னு இருக்குறத எல்லாம் பதம் பாப்பேன். அம்மா ஜாடைலயே தீனிப் பண்டாரம்ன்னு சொல்லுவா. விடக் கூடாதுன்னு பாட்டியோட பொறிக்கடலை, திரிச்சி வச்ச அவல், முறுக்கு, சீவி வச்ச பனங்கிழங்குன்னு உள்ளப் போகும்.

ஆனா தம்பி இதுக்கு நேர் எதிர். என்னை விட பெரிய தீனி பண்டாரம் அவன்தானாலும் கோபம்னு வந்துட்டா தொர ஒரு நாள் ஆனாலும் பச்சை தண்ணி கூட குடிக்க மாட்டாரு. யார் வீட்டுக்கு போனாலும் தம்பி எதையுமே சாப்பிட தயங்கி தயங்கி நிப்பான். நான் தான் தட்டோட எடுத்துட்டு வந்து திங்க ஆரம்பிப்பேன். சரி போனா போகுதுன்னு அவனுக்கும் எதையாவது எடுத்து நீட்டினா பயபக்கி கூச்சத்துல தொடக்கூட செய்யாம நெளிஞ்சுட்டு நிப்பான். அவன பாக்க வச்சு தின்னா பாவம்னு போனா போகுதுன்னு நானும் ஒரு முக்கா தட்ட காலி பண்ணிட்டு மிச்சம் வச்சிடுவேன். ஆனா வீட்டுக்குள்ள மட்டும் வாங்கிட்டு வர்றதெல்லாம் அவன் கிட்ட முதல்ல போயே ஆகணும். அப்புறமா தான் அம்மா அத வாங்கி ரெண்டு பேருக்குமா பங்கு வச்சு தருவா. கொரங்கு, அவன் பங்க எப்பவும் வச்சி வச்சி தின்னு என்னை வெறுப்பேத்துவான். நான் தான் எல்லாத்தையும் ஒரே வாய்ல போடுற ராகமாச்சே, அடுத்த நேரத்துக்கு திங்க ஒண்ணும் மிச்சம் இருக்காது. கொஞ்சம் தாலேன்னு கேட்டா மனசிருந்தா தருவான், இல்லனா மாங்கு மாங்குன்னு அழுது காட்டிக் குடுத்துடுவான்.

ஒரு நாளு இப்படி தான், தம்பி கிட்ட பக்கத்து வீட்டு பொண்ணு சண்டைக்கு போயிருக்கா. விஷயம் வேற ஒண்ணுமில்ல, அவ எங்க வீட்ல பூனை போட்ட குட்டி ஒண்ணை தூக்கிட்டு அவ வீட்டுக்கு போய்ட்டா. இவன் அவங்க வீட்டு வாசல்லயே நின்னு அழுதுட்டு நின்னுருக்கான். பூனைக் குட்டி வேணும்னும் கேக்கல. அந்த பொண்ணு அங்க இருந்தே குட்டிய தூக்கி காட்டி அளவம் (வெவ்வவே) காட்டிட்டு இருக்கா. அப்புறம் மூஞ்சிய பாரு மூஞ்சிய, நல்லா அனுமார் மாதிரி இருக்க, என் முன்னால நிக்காத போன்னு அவன திட்டியும் விட்டுருக்கா. அவனோ பூனைக்குட்டி கிடைக்காத வரைக்கும் அந்த இடத்த விட்டு நகருறதா இல்ல.

விசயம் இன்னொரு பக்கத்து வீட்டு பையன் மூலமா எனக்கு வந்துச்சு. நேரா அவ வீட்டுக்கு போனேன். தம்பிய பாத்தேன். பாத்துட்டே அவ வீட்டுக்குள்ள போனேன். அங்க கிட்சனுக்குள்ள நுழைஞ்சேன். நல்லா கருவாட்டு குழம்பு வாசனை அடிச்சுது. சுத்தி முத்திப் பாத்தேன். புள்ள பூனைக்குட்டிய தூக்கிட்டு வெளில போயிடுச்சு போல.

தம்பி வான்னு அவன் கைய புடிச்சு இழுத்து வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் ரெண்டு பேருமா சேர்ந்து கருவாட்டு குழம்பையும் சோத்தையும் சுத்தமா வழிச்சு சாப்ட்டோம். அடுத்து என்ன இருக்குன்னு பாத்தேன். ஒரு டப்பால கடலை முட்டாய், பொறி உருண்டை எல்லாம் இருந்துச்சு. கேக்கணுமா, டப்பா காலி. இனி இத இப்படியே விடக் கூடாதுன்னு அடுப்பு பக்கத்துல பப்படம் இருந்துச்சு. கூடவே எண்ணெய் சட்டியும். அடுப்ப பத்த வச்சு பப்படத்தையும் பொரிச்சு சாப்ட்டு காலிப் பண்ணினோம்.

அதுக்குள்ள அந்த புள்ள வீட்டுக்குள்ள வந்துடுச்சு. அய்யய்யோ இவங்க எல்லாத்தையும் திங்குறாங்கன்னு கூச்சல் போட்டா. முதல்ல எங்க பூனை குட்டிய குடு, அப்புறம் வெளில போறோம்னு சொன்னேன். ஓடிப் போய் கடவாப்பெட்டி (பனை ஓலைல செய்த பெரிய பெட்டி) வச்சு கமத்தி வச்சிருந்த பூனைக் குட்டிய எடுத்து நீட்டிட்டு இருங்க, அம்மா வரட்டும் சொல்லிக் குடுக்குறேன்னு அழுதா.

அவ அழுறத எல்லாம் யாரு கணக்குல எடுக்குறது, நமக்கு பூனைக் குட்டி தான முக்கியம். தம்பிக்கு அவ அழுறத பாத்து ஒரே சந்தோசம். அன்னிக்கி தான் நம்மள அழ வச்சவங்கள எப்படி அழ வச்சு பழி வாங்கனும்னு தம்பிக்கு க்ளாஸ் எடுத்தேன்.

வீட்டுக்கு வந்தா அப்பா சாப்பிடக் கூப்ட்டாங்க. நல்ல புள்ளைங்களா போய் டைனிங் டேபிள்ல உக்காந்து அம்மா பொரிச்சு தந்த பூரில நால ஒரு வெட்டு வெட்டினோம். சொல்ல மறந்துட்டேனே, அந்த கருவாட்டுக் குழம்பு படு சூப்பரு.



Friday, 29 May 2015

ரெட்டை ஜடை வயசு


அதென்னமோ இந்த வாரம் பேஸ் புக்ல  பின்னி கொண்டை வச்சு பூ சூடுற வாரம் போல... ஆளாளுக்கு ஜடைப் பின்னி தலைல பூ வைக்குறது பத்தி எழுதினாங்கனா நான் சும்மா இருக்க முடியுமா? அதனால நான் இப்ப ஒரு ப்ளாஸ் பேக் சொல்லியே தீருவேன், எல்லாரும் படிச்சுட்டு அவங்கவங்க ப்ளாஸ் பேக்கை சொல்லிட்டுப் போங்க.

இந்தா, மெழுகுவர்த்தி சுத்த ஆரம்பிச்சிடுச்சு.

சொயிங்.....
-----------------------------------------------------

அப்ப எனக்கொரு அஞ்சு வயசு இருக்கும். தலைல முடிய மொட்டையா பையன் மாதிரி வெட்டி விட்ருவாங்க. நான் வேற எப்பப் பாரு சட்டையும் டவுசரும் போட்டுட்டு பசங்க கூட்டத்துலயே திரிவேனா, நம்மள யாரும் பொம்பள புள்ளன்னு அடிச்சு சொன்னாலும் நம்ப மாட்டாங்க. அதுக்கப்புறமா தான் எங்க பாட்டி, பொம்பள புள்ளைக்கி ஒரு டோப்பாவாவது வச்சு விடுங்கடேன்னு சொல்ல, மஸ்ரூம் கட் எனக்கு அடையாளமா போச்சு.

செகண்ட் படிக்குறப்ப கூட படிக்குற புள்ளைங்க எல்லாம் ஜடை பின்னி ரிபன் கட்டிட்டு வர்றத பாத்து எனக்கும் ரெட்டை ஜடை போடணும்னு ஆசை வந்துடுச்சு. அவ்வளவு தான் முடி வெட்ட போக மாட்டேன்னு உருண்டு புரண்டு அடம் பிடிக்க, கொஞ்ச நாள்லயே நானும் ரெட்டை ஜடை போட்டு, அத மடிச்சு வேற கட்டி ஒரு மாதிரியா கெத்தா நடக்க ஆரம்பிச்சுட்டேன்...

ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்..... நம்ம பராக்கிரமம் எல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சுக்கலாம், இல்லனா கண்ணு பட்டுரும். இப்ப நீங்க எல்லாரும் ஒரு பனிரெண்டு வருஷம் பின்னாடி வந்து எங்க தோட்டத்துல நில்லுங்க...
-------------------------------------------

ஆங்... வந்தாச்சா, அந்தா பாத்தீங்களா அதான் ரோஜாத் தோட்டம். நம்ம ஆடு மாடுங்க எல்லாம் மேய்ஞ்சுற கூடாதுன்னு வேலி போட்ருக்காங்களா, அங்க கேட்டை தொறந்துட்டு உள்ளப் போவோம்.

இந்தா, இதான் பட்டன் ரோஸ், ரோஸ் கலர்ல அடுக்கடுக்கா, கொத்து கொத்தா பூத்து கிடக்கா, அந்த அது வெள்ளை பட்டன் ரோஸ். அந்தா அங்க ஆரஞ்ச், செகப்புன்னு பட்டன் ரோஸஸ் பாருங்க. அம்மாவுக்கு பட்டன் ரோஸ்னா ரொம்ப பிடிக்கும். அதான் நாலஞ்சு பட்டன் ரோஸ் நிக்குது.

தம்பிக்கு எப்பவும் பெங்களூர் வரைட்டி தான் பேவரைட். அதுலயும் ரெட் ரோஸ். கூடவே மஞ்ச ரோசாப் பூவும் சிரிக்குது பாருங்க.

இந்தா, இது பன்னீர் ரோஸ். என்னோட பேவரைட். அப்பாவுக்கும் இது ரொம்ப பிடிக்கும். தலைல கூட வைக்க வேண்டாம், அப்படியே பறிச்சு, பச்சையா திங்கலாம். வாசம் எப்படி இருக்கும்ங்குறீங்க, கும்ன்னு இருக்கும்.

அப்புறம், அந்தா, அங்க வெள்ளை, ஆரஞ்ச், ஆரஞ்ச் சிகப்புமா டபுள் கலர் எல்லாமே அழகோ அழகு.

இங்க எல்லாம் பூ பறிக்க அனுமதி உண்டுனாலும் ஊர்ல உள்ள புள்ளைங்க எல்லாம் ஒத்த ரோசாப்பூ வேணும்னு கேட்டு வந்தா, தம்பி தரமாட்டேன்னு தரைல உளுந்து பொரண்டு பொரண்டு அழுவான். அத்தன புள்ளைங்களும் அவனுக்கு படு ஐஸ் வைக்கப் பாப்பாங்க, பய மசிய மாட்டான். அய்யய்யோ, அவனப் பத்தி தனியா எழுதணும்ல நினச்சேன், ஹெலோ ஹலோ, தம்பியப் பத்தி நான் எழுதினத மறந்துடுங்க.

உங்கள நான் மல்லிகை தோட்டத்துக்கு கூட்டிட்டுப் போறேன். இந்தா இங்க நாலஞ்சு குத்து செடி நிக்குது பாத்தீங்களா, இதான் மல்லிகை செடி. செடி முழுக்க மொட்டா தான் இருக்கும். அப்புறம், அந்தா பிச்சி செடி, கனகாம்பரம் எல்லாம் நிக்குது பாருங்க. கனகாம்பரத்துல மஞ்சள், செகப்பு, ஆரஞ்ச், பச்சை, நீலம்ன்னு எல்லா வரைட்டியும் உண்டு. கூடவே டிசம்பர் பூவும்.

இந்த பூவெல்லாம் ஒட்டுமொத்தமா பறிச்சுட்டு வந்து நாலுகட்டு முத்தத்துல சொளவுல கொட்டி வச்சுட்டு ஊருல உள்ள பொம்பளைங்க எல்லாம் கால் நீட்டி உக்காந்து வம்பளந்துகிட்டே பூத் தொடுப்பாங்க.

லூஸ் விட்டு சாமிக்கி கட்டுறதுல இருந்து, சுத்தி கட்டுறது, சொட்டைப் போட்டு கட்டுறது, கால்ல கொக்கி போட்டு கட்டுறதுன்னு ஆளாளுக்கு டைப் டைப்பா கட்டுவாங்க.

அப்புறம் நாலு மணி பூ தோட்டம் முழுக்க பரவியிருக்கு பாத்தீங்களா, இது எல்லாம் வயலட் கலர். வெள்ளை, மஞ்சள், சிகப்பு எல்லாம் எங்க வீட்ல இல்ல.

அந்த வேலி ஓரத்துல நாட்டு செம்பருத்தி நிக்குதே, அதோட பூவ பறிச்சி தான் தலைக்கு வைக்க எண்ணெய் காய்ப்பாங்க. அப்படியே அந்த மருதாணி மரத்துல உள்ள இலையும் எண்ணெய் சட்டியில பொறியும்.

அப்பா, மருதாணி இலையை பறிச்சி, உருட்டி, வெயில்ல காய வச்சு, முத்துன தேங்காய அடிச்சு, துருவி, பால் பிழிஞ்சு, பெரிய உருளில விட்டு நல்லா வத்த காய்ச்சு, எண்ணெய் தனியா, கக்கன் தனியா பிரிஞ்சதும், உள்ளி, கருவேப்பிலை எல்லாம் போட்டு கூடவே காய வச்ச மருதாணி உருண்டைகளயும் போட்டு வைப்பாங்க. இன்னிக்கி வரைக்கும் நமக்கு எண்ணெய் காய்ச்சு தர்றது அப்பா தான்...
----------------------------------------------

கம்மிங் பேக் டு த பாயிண்டு.

இப்படி எல்லாம் எண்ணெய் காய்ச்சி, தலை நிறைய வச்சதால தானோ என்னவோ எனக்கு முடி கருகருன்னு நீளமா வளர ஆரம்பிச்சிடுச்சு. நம்ம சும்மாவே அராத்து, இதுல முடி வேற நீளமா இருந்தா கேக்கவா வேணும்?

தலைப் பின்னி விடத் தான் அப்பம்மா இருந்தாங்களே, ப்ரீ ஹேயர் விடுறதுல இருந்து, இறுக்கமா ஆயிரங்கால் பின்னல் வரைக்கும் போட்டு விடுவாங்க. முன்னால கொஞ்சம் முடிய மட்டும் தனியா வகிடு எடுத்து, அத அப்படியே சுருட்டி தொப்பி மாதிரி வச்சுட்டு, பின்னால குட்டி குட்டியா ஆயிரங்கால் பின்னல் போட்டுட்டு, அதுல பட்டன் ரோஸ் வச்சு அலங்கரிச்சு போனா அத்தன புள்ளைங்களும் ஆ-ன்னு வாயப் பொளக்கும். நதியா கொண்டை இன்னொரு ரகம்.

அப்புறம் இன்னொரு ஹேர் ஸ்டைல். அது என்னன்னா, அப்படியே மண்டைல அத்தன முடியையும் நேர் நேர் கோடு எடுத்து இருபத்து அஞ்சு, முப்பதா பிரிச்சுப்பாங்க, அப்படியே அதையும் மூணா பிரிச்சு பின்னிகிட்டே வந்தா, இந்த நைஜீரியன் பார்ட்டிங்க எல்லாம் எங்க பாட்டிகிட்ட ட்ரைனிங் எடுக்கணும். அப்படியே அத்தனையையும் பின்னி முடிச்சு, பின்னால வந்து ஒரு ரப்பர் பேண்டோ இல்ல, ரிப்பனோ வச்சு இறுக்கி கட்டுவாங்க. அதோட முடிஞ்சுதானா இல்ல, பின்னால கிடக்குற முடிய மறுபடியும், ஒரு பதினஞ்சு, இருபது பாகமா பிரிச்சு, அப்படியே முறுக்கி முறுக்கி, ஒரு கயிறு மாதிரி திரிச்சி, அப்படியே ரப்பர் பேண்டுக்குள்ள மடக்கி சொருகிடுவாங்க. அந்த நேரம் என்னை பாத்தா, இந்த ஆப்பிரிக்கன் அழகிங்க எல்லாம் மலைச்சி போய்டுவாங்க கேட்டீங்களா?

ஊருக்குள்ள ஒரு புள்ளையும் நம்ம ஹேர் ஸ்டைல்ல திரியக் கூடாது... எவளாவது அப்பம்மாகிட்ட வந்து அதே மாதிரி பின்னிட்டு போய்ட்டா, அன்னிக்கி அப்பம்மா க்ளோஸ். தூக்கிப் போட்டு மிதிக்க எல்லாம் செய்திருக்கேன் (அவ்வ்வ்வ் ஜாரி). ஆனாலும் என்னை அப்படி திமிரோட வளர்த்தது அப்பம்மா குத்தம் தான். அம்மா கைக்குள்ள நான் முழுசா போனதே சிஸ்த் வந்ததுக்கப்புறம் தான்.

அப்புறமா தான் நாம இந்த சமூக சேவை, அது இதுன்னு (அட நம்புங்கப்பா) பசங்க கூட அதிகமா சுத்த ஆரம்பிச்சுட்டேனா, ஒரு நாள் அவசரமா ஒருத்தருக்கு ரெத்தம் தேவை, வா, ஊருக்குள்ள போய் கேன்வாஸ் பண்ணி நாலஞ்சு பேர குண்டு கட்டா தூக்கிட்டு போகணும்னு பிரெண்ட் ஒருத்தன் அவசரப் படுத்தினான். இருடா, பின்னல்ல சிக்கு விழுந்திடுச்சு, அவுக்கவே முடியலன்னு பின்னல் கூட மல்லுக் கட்டிட்டு இருந்தேனா, உனக்கு மேக் அப் பண்ணவே அரை நாளு ஆவும், நான் மாலிய கூட்டிட்டுப் போறேன்னு அவன் கிளம்ப போக, அந்த மாலினி புள்ள வரவர எப்பப் பாத்தாலும் இந்த மூர்த்தி கூட ஒட்டிகிட்டு திரியுறா, அவள அவன் கூட அனுப்பலாமா?
பக்கத்துல இருந்த கத்திரிய எடுத்து ஒரே வெட்டா முடிய வெட்டிப் போட்டுட்டு, இந்தா வந்துட்டேன்னு கிளம்பி போயிட்டேன்.

அவ்வளவு தான், நமக்கும் அந்த அல்ட்ராசிட்டி ஹேர் ஸ்டைலுக்கும் ஏற்பட்ட காதல், பந்தம் பாசம் எல்லாத்துக்கும் ப்ரேக் அப் ஆகிப் போச்சு. அப்புறம் முடி வளர்ந்தாலும் ஒரு ஸ்டேஜுக்கு மேல வளர விட்டதில்ல.

ஆங்... அந்த பூ விசயத்த மறந்துட்டேனே, கனகாம்பரமும் மல்லிகையும் வச்சா எனக்கு உசிரே போற மாதிரி தலைய வலிக்குமா, அதனால அத எல்லாம் எப்பவோ டைவேர்ஸ் பண்ணிட்டேன். நமக்கு கூட மாட ஒத்தாசையா இருக்குறது இப்போதைக்கு பிச்சிப் பூ தான். அத எல்லாம் என் கையால தொடுத்து தலைல வச்சா தனி கெத்து தான்...

அவ்வளவு தான், வீர தீர ப்ரதாபங்கள் இப்போதைக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. எல்லாரும் போய் அவங்கவங்க வேலையைப் பாருங்க...டொயிங்.....
--------------------------------------------
அப்புறம், மேல சுத்தினது மெழுகுவர்த்தி இல்லையாம், கொசுவர்த்தி சுருளாம், இதெல்லாம் நமக்கு எங்க தெரியுது
--------------------------------------------

அட, ஆயிரங்கால் பின்னல்ன்னு கூகிள்ல தேடினா ஒத்த போட்டோ கூட சிக்கல, அதனால ஒத்த ஜடையோட ஒரு புள்ளைய சுட்டு கொண்டாந்து போட்ருக்கேன். புள்ள நம்ம அளவு அழகா இல்லனாலும், பாக்க எதோ சுமாரா இருக்குல....

Sunday, 22 February 2015

சக்தி - என் உலகம்


இந்தா டைப் அடிச்சுட்டு இருக்கேன்ல, இந்த கீ-போர்ட் இருக்குல, இது மேல தான் சக்தி எப்பவும் ஏறி உக்காந்துட்டு இருப்பான். நான் டைப் பண்ணினா என் விரல்கள ஓடி வந்து கடிப்பான். எப்பவுமே குட் மார்னிங் ஸ்டேடஸ் போட அவன வலது கைல பிடிச்சு வச்சுட்டு இடது கையால தான் டைப் பண்ணுவேன்.

சக்தி - போன வருஷம் புது வருஷத்துல எனக்கு கிடச்ச கிப்ட் அவன்.

அவன் அம்மா ரெண்டு நாள் முன்னாடியே எங்க வீட்டு ஹால்-ல வந்து எங்க கண்ணு முன்னாலயே செத்து போய்ட்டாங்க. விசாரிச்சா அணில்களுக்கு எல்லாம் ஒரு வகை நோய் பரவிட்டு இருக்குறதாகவும், தோட்டத்துல இது மாதிரி நிறைய அணில்கள் செத்து செத்து விழுறதாவும் சொன்னாங்க.

எப்படியோ சக்தி என் கிட்ட வந்து சேர்ந்தான். அவனுக்கு பெயர் வச்சதே இங்க எல்லாரும் திருவிழா மாதிரி கொண்டாடினோம். குட்டிப் பய, முதல் நாளே கூட்டுக்குள்ள படுக்க மாட்டேன்னு என் கைய கெட்டியா பிடிச்சுகிட்டான். கஷ்டப்பட்டு தான் அவன கூட்டுக்குள்ள தூங்க வச்சேன்.

ஒரு ரெண்டு மூணு நாள் நந்து, அவங்க அம்மா எல்லாம் வந்து பாத்தாங்க. சின்ன பையன்ல, அவனுக்கு அப்ப ஓடி ஒளிய தெரியல. ஆனா அதுக்கப்புறம் யார் வந்தாலும் ஓடி போய் என்னோட பிரிண்டர்குள்ள ஒளிஞ்சுப்பான்.

அய்யய்யோ, அந்த பய பண்ற அநியாயம் சொல்லி மாளாது. எப்ப பாரு சேட்டை சேட்டை சேட்டை... ஒரு நாய்க்குட்டி என்னவெல்லாம் பண்ணுமோ அத்தனையும் இந்த பயலும் பண்ணுவான்.
சக்தி எப்பப் பாத்தாலும் வாய நல்லா தொறந்து ஹாவ்...ன்னு கொட்டாவி விடுவான். என் கை மேல ஏறி உக்காந்து நக்கி வச்சுட்டே இருப்பான். நான் கீ-போர்ட் தோட்டா ஓடி வந்து அசையுற விரல்கள பிடிச்சு கடிச்சு விளையாட வருவான்.

எலேய் கொஞ்சம் என்னை ப்ரீயா விடுடானா எங்க கேப்பான். அப்படியே லேப் டாப் பக்கத்துல போய் நின்னுட்டு அங்க இருந்தே என்னை பாத்து ஒரு முறை முறைப்பான். அப்புறம் ஓடி வந்து மடில ஏறி, பரபரன்னு முதுகு வழியா தோள்ல ஏறி, அங்க இருந்துட்டு காதுல ரெண்டு கையையும் வச்சுட்டு கம்மலை கடிச்சுட்டு இருப்பான்.

வெளில லேசா சத்தம் கேட்டா போதும், விருட்டுன்னு பாய்ஞ்சு போய் பிரிண்டர்க்குள்ள பதுங்கிடுவான். அவனுக்கு இங்க பிடிச்சதெல்லாம் நான் மட்டுமா தான் இருந்தேன். என்னை கண்டா ஓடி வந்துருவான். அவனோட வீரம் எல்லாம் என் கிட்ட தான்... அவனுக்கு பல் முளைக்க குறுகுறுன்னு வரும் போதெல்லாம் என்னோட தலை மேல ஏறி உக்காந்துட்டு முடிய கர்க் கர்க்ன்னு கடிச்சு துப்பிடுவான். விடுடா விடுடான்னு அவன புடிச்சு கீழ தூக்கிப் போட்டாலும் அடுத்த செகண்ட் மறுபடியும் என் தலைல இருப்பான். அப்புறம் என்ன நினைப்பானோ, முடிய வெட்டி விட்ட இடத்த எல்லாம் நக்கி குடுப்பான்.

இந்த சக்கப் பழத்துக்கு நானும் சக்தியும் போடுற சண்டை இருக்கே... பக்கி, எப்பவும் கூடவே இருக்குற அவன், சக்கப் பழத்த கண்டா மட்டும் அத தூக்கிட்டு பீரோ மேல போய்டுவான். அங்க நின்னுட்டு என்னை பாத்து கேலியா சிரிச்சுட்டு இருப்பான். குசும்பு புடிச்சவன்.

அவனுக்குன்னு ஸ்பெசலா ஆப்பிள், கிரேப்ஸ், கொறிக்க பாதாம் பருப்பு, நிலக்கடலை எது குடுத்தாலும் இந்த விசயத்துல நாங்க ரெண்டு பேருமே பிடுங்கி பறிச்சு திங்குரதுல போட்டி தான் போடுவோம். அவனுக்கு ஒரு ஆப்பிளை குடுத்துட்டு நான் ஒண்ணை எடுத்து கடிச்சா, அவன் என் தோள்ல ஏறி நான் கடிக்குற ஆப்பிள தான் கடிப்பான். பொறாமக்காரன்.

ஒரு நாலஞ்சு நாள் தான் அவன் கூட்டுக்குள்ள படுத்துருப்பான். அப்புறம் எப்பவும் என் முதுல தான் அவன் தூக்கம். அவனுக்காக புரண்டு கூட படுக்க முடியாம தூங்காம நைட் முழுக்க முழிச்சி கிடப்பேன். அப்புறம் அதவே பழகிடுச்சு. நான் அசைஞ்சா அவனும் அதுக்கேத்த மாதிரி அசைஞ்சு அட்ஜஸ்ட் பண்ணிப்பான்.

எப்ப பாத்தாலும் என் விரல கடிச்சுட்டு, அப்படியே தோள் மேல ஏறி காத கடிச்சி, கம்மல கடிச்சி, கொஞ்சம் அசந்தா மூக்கையும் கடிச்சி வைக்குற சக்தி, பாசமா நாய்க் குட்டி மாதிரி நக்கியும் வைப்பான்.

எனக்கும் அவனுக்கும் ரொம்ப சண்டை வந்தா மட்டும் கோவிச்சுட்டு லேப்டாப் பக்கத்துல போய் படுத்துப்பான். அங்க இருந்துட்டே அவன் பண்ற சேட்டைய பாத்தா கோபம் போய் சிரிப்பு வந்துரும். அப்புறம் என்ன, விருட்னு மறுபடியும் தோள்ல ஏறிப்பான்...

நான் காலேஜ் போய்ட்டா ஜன்னல் மேல குரங்கு மாதிரி தொத்திட்டு இருப்பான். இப்பவும் ஜன்னல்ல ஏதாவது அசைவு தெரிஞ்சா சக்தின்னு ஒரு செகண்ட் மனசு அதிரத்தான் செய்யுது. கூடவே அந்த பயல நினச்சு ஒரு புன்னகையும்....

Friday, 25 April 2014

குளத்துக்கு போவோமா?


ஒரு குளம். அதுல தாமரை பூத்திருக்கு.

கொஞ்சம் சூம் போங்க....

அட, அங்க பாத்தீங்களா? தாமரை இலை மேல ஒரு மீன் படுத்து ரெஸ்ட் எடுக்குது. இன்னும் இன்னும் நல்லா தேடி பாருங்க, வேற வேற இலைகள்ல மீன்கள் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கலாம்...

அப்படியே கொஞ்சம் லெப்ட்ல திரும்புங்க. அந்தா குட்டியா, சின்னதா, கருப்பா இருக்குல, அது தான் நீர் கோழி... சூ சூ.... எப்படி...... படக்குன்னு தண்ணிக்குள்ள குதிச்சி முங்கிடுச்சு பாத்தீங்களா?

அப்புறம், அந்த கரைல நின்னு மீன் பிடிக்க ஒத்த கால்ல நின்னுட்டு இருக்கு பாருங்க கொக்கு... அது கழுத்தும் வாயும் மட்டும் ஏன் கருப்பு கலர்ல இருக்கு? இதுக்கு பேர் என்னன்னு யாருக்காவது தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க... பாருங்க, பாருங்க... ஒரே பாய்ச்சல், லபக்... ஒரு மீன் காலி...

ஸ்ஸ்ஸ்.... அப்படியே கொஞ்சம் back வந்து படியில ஏறிக்கோங்க. தண்ணி பாம்பு ஒண்ணு நீந்தி வருது. அது பாட்டுக்கு போகட்டும்...

அப்புறம், அந்த வாத்து கூட்டங்கள பாத்தீங்களா? எவ்வளவு ஜாலியா நீந்திட்டு போகுது. போச்... போச்.... அதுங்க போடுற சத்தத்துல மீன குறி வச்சிட்டு இருந்த மீன் கொத்தி பறந்து போயிடுச்சு. அந்தா, இடது பக்கமா பறந்து, அந்த கல்லு மேல உக்காருது பாருங்க... மயில் நிறத்துல, மீன் கொத்தி அழகா இருக்குல...

ஹே... கொஞ்சம் நல்லா கூர்ந்து பாருங்க, இதென்ன பறவை. குட்டியா கருப்பா, குச்சி காலு வச்சிகிட்டு, பாக்க சின்ன வயசு கோழி மாதிரி... எவ்வளவு வேகமா தாமரை இலை மேல நடந்து போகுது பாருங்க... அழகு அழகு... அது பேரு பிரவுன் க்ரேக்... தமிழ்ல பேர் தெரியல...

அப்படியே கொஞ்சம் குளக்கரை பக்கமாவும் திரும்புவோம் பாஸ்... அட, எவ்வளவு புற்கள்ல அழகழகா பூக்கள் பூத்திருக்கு பாத்தீங்களா?

நல்லா பாருங்க, அதுல ஒரு வெள்ளை கலர் பட்டாம்பூச்சி வந்து உக்காருதா? அது தான் உங்களுக்கு இன்னிக்கி குட் மார்னிங் சொல்லப் போகுது...

பட பட பட்டாம்பூச்சி குட் மார்னிங்....

Wednesday, 11 December 2013

இன்று ஒரு தகவல்


“முந்தைய நாளின் பகலுக்கு தொடர்ச்சியாய் வந்த இரவுக்கு ஓய்வு கொடுத்து என் இன்றைய பகல் வணக்கம் வரும் இரவுக்கான வரவேற்போடு”

அவ்வ்வ்வ் என்ன, எதுவுமே புரியலயா?

இது தாங்க நான் இன்னிக்கி உங்களுக்கு சொல்லி இருக்குற குட் மார்னிங்.

நல்லா கூர்ந்து கவனிச்சு பாருங்க, முடிஞ்சா கண்ணாடிய தொடச்சு விட்டுட்டு பாருங்க, முதல்ல புரியாத மாதிரி தான் இருக்கும், ஆனா எதோ புரியுற மாதிரி இருக்கும்.

இப்படி தான் நானும் புரியாம பல விசயத்தையும் உளறிக்கிட்டே இருக்கேன். ஆனாலும் எனக்கு சில விஷயங்கள் புரிஞ்சிடும். எனக்கு புரிஞ்ச உடனே, உங்களுக்கு குழம்பிடும்.

அப்படி தான் டெய்லி காலைல கிளம்புறது முன்னாடி எல்லாரையும் குழப்பி விட்டுட்டு போய்டணும்.

எப்படி தெரியுமா?

இந்தா நான் குழப்புறேன் பாருங்க, இன்று ஒரு தகவல் சொல்லி:

இன்று ஒரு தகவல் 1: திங்குறதுக்கே நேரம் இல்லாம அரக்க பறக்க பாஞ்சு போய் ஆபிஸ்லயோ, காலேஜ்லயோ, இல்ல ஸ்கூல்லயோ, அப்படியும் இல்லையா, குட்டி சுவரிலோ போய் உக்காந்தாலும் இன்றைய தினம் திங்கட்கிழமைதானாம்...


இன்று ஒரு தகவல் 2: கிளிக்கு வாய் சிகப்பா இருப்பதாலும், பொண்ணு மாப்பிள்ளைக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாலும் இன்றைய நாளில் விசேசமில்லை. இன்றைய நாள் செவ்வாயாக இருப்பதாலயே இன்று செவ்வாய் கிழமையாம்...


இன்று ஒரு தகவல் 3: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று யாரோ சொல்லி விட்டு சென்று விட்டதால், அந்த வாக்கை பொய்த்து போகாமல் காப்பாற்ற நகை வியாபாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட நாளே புதன் கிழமையாம்.


இன்று ஒரு தகவல் 4: கழிந்து விட்ட நேற்று புதன்கிழமை என்பதாலும், கழியப்போகும் நாளை வெள்ளிகிழமை என்பதாலும், இரண்டுக்கும் இடையில் இன்று மாட்டிக்கொண்டதாலும் இன்றைய நாள் வியாழன் கிழமையாம்...


இன்று ஒரு தகவல் 5: இன்று ஆங்கிலத்தில் Friday என்பதால், தமிழில் வெள்ளிக்கிழமை என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தினால் இன்றைய பொழுதின் பெயர் வெள்ளிக்கிழமையாம்...


இன்று ஒரு தகவல் 6: முந்தின நாள் அரக்கபரக்க வேலை செய்ததாலும், அடுத்த நாள் சோம்பேறியாய் தூங்க போற காரணத்தாலும், துன்பத்துக்கும் இன்பத்துக்கும் இடைல இடிப்பட்டு கழியப் போற இன்றைய நாளின் பெயர் சனிக்கிழமையாம்.


இன்று ஒரு தகவல் 7: மிகவும் சோம்பலாகவே விடிந்து விட்ட காரணத்தாலும், இன்னும் சூரியனை கூட பலபேர் பார்க்காத காரணத்தாலும், சில பல ஆடுகள், மாடுகள், கோழிகள் கொலையுண்ட காரணத்தாலும் இன்றைய கிழமைக்கு ஞாயிற்றுக்கிழமை என்று பெயராம்....!


என்ன, அப்படியே ஏழு நாளுக்கும் ஏழு தகவலா சொல்லியாச்சா, இத எல்லாம் ஒரே நாள்ல சொல்லிடாம, ஒவ்வொரு நாளா வந்து, ஒவ்வொரு தகவலா தெரிஞ்சுகிட்டு போங்க.


நான் இப்போ தகவல் சொல்லி ரொம்ப களைச்சு போயிட்டேன்.



ஹலோ, அந்த ஆப்பிள் ஜூஸ் எங்கப்பா?



.

Monday, 4 November 2013

பிசியான நாட்கள் - வலைச்சரமும் ப்ராஜெக்ட்டும்


பெருமதிப்பிற்குரிய பெரியோர்களே, பேரன்புக்குரிய தாய்மார்களே, ஆசை சகோதர சகோதரர்களே, அன்பு தோழர்களே...

அவ்வ்வ்வ் இதுக்கு மேல முடியல... நாம நம்ம ஸ்டைல்ல இறங்கிற வேண்டியது தான். நான் இப்போ உங்க கிட்ட என்ன சொல்ல வரேன்னு எனக்கே தெரியல, அதனால அங்கங்க நீங்க ஏதாவது பாயிண்ட்ட கண்ணால மோப்பம் புடிச்சுட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வந்துடுங்க...

அப்புறம், ஒரு வாரமா நான் ரொம்ப பிசி. ஓவர் பில்ட் அப் குடுக்காதனு நீங்க பிரம்ப தூக்கி ஜாடையா காட்டுறது தெரியுது, ஆனாலும் உண்மைய சொல்லாம இருக்க முடியாதே. நம்புங்க, இல்லனா அதே பிரம்ப பிடுங்கி உங்கள மிரட்டுவேன்..

சரி, சரி, அப்படி என்ன பிசினு நீங்க கேக்கலனாலும் நான் சொல்லித் தானே ஆகணும். அது என் கடமையாச்சே...

பொதுவா ப்ராஜெக்ட் சப்மிசன்னா அது எப்பவும் ஈவன் (even) செமஸ்டர்ல தான் வரும். அதனால கோர்ஸ் (course) முடிச்சுட்டு போறப்போ தான் இந்த ப்ராஜெக்ட் எல்லாம் சப்மிட் பண்ண வேண்டியிருக்கும். ஆனா இந்த தடவை திருநெல்வேலி மனோன்மணியம் யூனிவர்சிட்டி ரூல்ஸ்ச மாத்திட்டாங்க, அதனால ப்ராஜெக்ட்  ஆட்(odd) செமஸ்டர்லயே வச்சுட்டாங்க. சோ, போன மாசம், அதான் அக்டோபர் 31 ப்ராஜெக்ட் சப்மிட் பண்ண கடைசி நாள்.

நம்ம மாணவ செல்வங்களை தான் நமக்கு நல்லா தெரியுமே (என்னையும் சேர்த்து தான்), எப்பவுமே கடைசி நிமிசத்துல தான் எதையுமே செய்வோம். எல்லாம் முடிச்சுடலாம் முடிச்சுடலாம்னு அதீத நம்பிக்கை வச்சு கடைசி நிமிசத்துல அய்யோ அய்யோனு பதற வேண்டியது.

இங்க இன்னொரு விஷயம் சொல்லணும்ங்க. அதாவது சில கோர்சஸ்ல கைட்னு ஒருத்தங்க இருப்பாங்க, ஆனா ஸ்டுடென்ட்ஸ் வெளில போய் ப்ராஜெக்ட் செய்துட்டு வருவாங்க. காசு குடுத்து அவங்களே தீசிஸ் ரெடி பண்ணி குடுத்துடுவாங்க. கைடோட வேலை முடிச்சு வர்ற தீசிஸ்ல வலிக்காம கையெழுத்து போடுறது மட்டும் தான். உடனே அடிக்க வராதீங்க, இது தான் நாட்டு நடப்பு. எந்த இஞ்சினியரிங் காலேஜ்லாவது அவங்க சொந்த லேப்ல கைட் உக்காந்து சொல்லி குடுக்குராங்களா? சொந்த காலேஜ் காம்பஸ்குள்ளயே ப்ராஜெக்ட் முடிச்ச ஸ்டுடென்ட் உண்டா? இதே தான் இப்போ ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் காலேஜ்லயும் நடக்குது.

ஆனா என்னோட கோர்ஸ் அப்படி இல்ல, எங்க டிபார்ட்மென்ட்ல ஸ்டுடென்ட்ஸ் யாரையும் வெளில போய் வொர்க் பண்ண விட மாட்டாங்க. ரொம்பவே அட்வான்ஸ் வொர்க்னா மட்டும் வெளில போகலாம். நான் கூட என்னோட வொர்க்காக பெங்களூர், திருவனந்தபுரம்னு போனேன். இன்னும் ஒரு வருஷம் அங்க எல்லாம் வேலை இருக்கு. ஆனாலும் பெரும்பாலான வேலைகள காலேஜ் உள்ள தான் செய்யணும்.

நாங்க வெளில போய் முழு ப்ராஜெக்ட்டையும் பண்ணிக்குறோம்னு யாராவது கேட்டா எங்க எங்களோட தல என்ன சொல்லுவார் தெரியுமா? உங்க அப்பா அம்மா நிறைய சம்பாதிச்சு வச்சிருக்காங்கங்குறதுக்காக நீ வெளில போய் முப்பதாயிரம், நாப்பதாயிரம்னு காச இறைஞ்சு எதையாவது வாங்கிட்டு வந்து தலைல ஒண்ணுமே இல்லாத களிமண்ணா வெளில போக வேணாம், இங்கயே மூவாயிரம் நாலாயிரம் செலவு பண்ணி சின்ன விசயமா இருந்தாலும் எதையாவது கத்துக்கிட்டு போன்னு சொல்லிடுவார். அவர் கிரேட் தானே.... நான் கூட இத பத்தி நம்ம ஜீவா மேடம் கிட்ட கூட கேட்டுருக்கேன், நீங்க என்ன பண்ணுவீங்க உங்க காலேஜ்லன்னு. அவங்க கூட இதயே தான் சொன்னாங்க. அப்போ அவங்களும் கிரேட் தான்.

சரி, விஷயத்துக்கு வருவோம். இந்த மாதிரி உள்ளுக்குள்ளயே ப்ராஜெக்ட் செய்ய வைக்குறதால ஸ்டுடென்ட்ஸ் சில பேருக்கு கடுப்பு. காசக்குடுத்தோமா, ப்ராஜெக்ட் வாங்கினோமா, சப்மிட் பண்ணினோமான்னு இல்லாம, இதென்ன நாங்களே ப்ராஜெக்ட் பண்ணனும், நாங்களே எழுதணும்னு. இந்த பசங்க கூட ஓரளவு ஆர்வத்துல நாம சொல்லி குடுத்தா செய்வாங்கங்க, ஆனா பொண்ணுங்க இருக்காங்களே, முழு சோம்பேறிங்க. இது என்னோட அனுபவம் தான். நான் எல்லோரையும் சொல்லல, எனக்கு ஒரு ஸ்டுடென்ட் இருந்தா, அப்படியே என்னோட டிட்டோ மாதிரியே, அவ்வளவு ஆர்வம் அவளோட ப்ராஜெக்ட்ல. கைல 93% மார்க் வச்சிருக்கா, அப்படினா அவ எவ்வளவு ப்ரிலியன்ட் பாருங்க. அந்த பொண்ணு மட்டும் இல்லனா இந்த ஒரு வாரமா நான் ரொம்ப திணறி தான் போயிருப்பேன்.

இது கிராமத்து பக்கம். இங்க வர ஸ்டுடென்ட்ஸ் எல்லோரும் தமிழ் மீடியத்துல படிச்சிருப்பாங்க. யூ.ஜி பண்ணும் போது கூட தமிழ்லயே எழுதி பாஸ் ஆகிட்டு பி.ஜி வந்துடுவாங்க. இங்க வந்ததுக்கப்புறம் தான் அவங்க இங்கிலீஷ்னா என்னன்னே பாப்பாங்க. முதல் வருஷம் முழுக்க அவங்களுக்கு சின்ன சின்ன இங்கிலீஷ் வார்த்தைகள் கத்துக் குடுத்து, அவங்கள ட்டியூன் பண்ணி கொண்டு வரணும். இங்க தீசிஸ் முழுக்க முழுக்க இங்கிலீஷ்ல இருக்கும். இத அவங்கள விட்டு எழுத சொல்றது கொடுமைன்னு நீங்க நினைக்குறது கண்டிப்பா எனக்கு புரியுது.

ஆனாலும் வேற வழி இல்லையே, ரொம்பவே பொறுமையா தான் சொல்லிக் குடுக்கணும். நிறைய ரெபரன்ஸ் வாசிக்க வைக்கணும், அதுல அவசியமான பாயிண்ட்ஸ் எதுன்னு அவங்கள புரிஞ்சுக்க வைக்கணும். இப்படி தான் நான் எனக்குன்னு ஒதுக்குன ஆறு பேருக்கும் சொல்லிக் குடுத்தேன்.

நாம ஒரு ப்ராஜெக்ட் தனியா எழுதணும்னா ரொம்ப ஈசி, ஆனா அவங்கள எழுத வச்சு, அவங்க எழுதிட்டு வர விசயங்கள வாசிச்சு பாத்தா நமக்கு தலையும் புரியாது, காலும் புரியாது. ஏதாவது ஒரு செண்டென்ஸ்ல இருந்து துண்டு துண்டா எடுத்து போட்டுருப்பாங்க. இது என்னது, எங்க இருந்து பாத்து எழுதினன்னு கேட்டா அவங்களுக்கும் தெரியாது. அப்புறம் அவங்கள உக்கார வச்சு, மறுபடியும் அவங்க கைல இருக்குற ரெபரன்ஸ்ல நாம முழுசா வாசிச்சு, அந்த செண்டென்ஸ் கண்டுபிடிச்சு, இத இப்படி எடுக்க கூடாது, இப்படி எடுக்கணும்னு சொல்லி நிமிர்ரதுக்குள்ள முதுகு வளைஞ்சுடும்.

இது தான் மெண்டல் ப்ரெஸர்னு சொல்லுவாங்க. ஆனா நான் சில சமயம் ரொம்ப கடுமையா அந்த பிள்ளைங்கள எல்லாம் திட்டியிருக்கேன். அவங்கள பாத்தா எனக்கே பாவமா தான் இருக்கும். நான் ஏற்கனவே சொன்னேனே, ஒரு பொண்ணு மட்டும் ரொம்ப புத்திசாலின்னு அவ கூட ஒரு சோம்பேறி தான். அவளும் கடைசி நிமிசத்துல தான் எழுதவே உக்கார்ந்தா. அவளை நான் முடிச்சு விடவே ஒரு நாள் ஆச்சு. மீதி ஆறு நாள்ல அஞ்சு தீசிஸ் ரெடி பண்ணனும். என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல. நானே எழுதி குடுத்துடலாம் தான், ஆனா அப்புறம் யார் அந்த பிள்ளைங்களுக்கு சொல்லிக் குடுப்பா? வாழ்க்கைல இப்போ அவங்க கஷ்ட்டப்பட்டாலும் நாளைக்கு ஒரு நல்ல நிலைமைக்கு வரும் போது கண்டிப்பா நம்ம பெயர நினச்சு பாப்பாங்க.

அந்த ஒரு ஸ்டுடென்ட் பிரிலிமினரி வொர்க்ஸ் எல்லாம் பாத்துகிட்டா. நான் அப்புறமா வர கரெக்சன் எல்லாம் பாத்துக்கிட்டோம். அந்த ஒரு வாரமும் எல்லா பிள்ளைங்களும் என் வீட்ல தான் ராத்திரி தங்கினாங்க. தூக்கம் கூட யாருக்கும் கிடையாது. எனக்கு இருந்த மெண்டல் ப்ரெஸர்க்கு வடிகால் இந்த பேஸ் புக் தான். அப்பப்போ எட்டிப் பாப்பேன். பத்து நிமிஷம் பிரேக் எடுத்துப்பேன். அப்புறம் பேக் டு வொர்க்.

சாப்டுற சாப்பாட கூட மறந்து, அப்படியே நான் மட்டும் உக்காரல, அந்த பிள்ளைங்களும் தான். முதல்ல முரண்டு பிடிச்சாலும், அப்புறம் நான் சொல்லிக் குடுத்தத புரிஞ்சுகிட்டு, சரியா செய்யலைனா நான் சப்மிட் பண்ண விட மாட்டேங்குரதையும் புரிஞ்சுகிட்டு அவங்க என் வழில வர ஆரம்பிச்சுட்டாங்க. சந்தேகங்கள்னு வரும் போதெல்லாம் என்கிட்டயோ இல்ல, அந்த இன்னொரு ஸ்டுடென்ட்கிட்டயோ கேட்டு கேட்டு தெரிஞ்சுகிட்டாங்க. அந்த பொண்ணும் அவ வேலை முடிஞ்சுதுன்னு வீட்டுக்கு போகாம, எங்க கூடவே தங்கிட்டா.

இந்த நேரத்துல தான் வலைசரத்துல இருந்து எனக்கு ஆசிரியரா இருக்கீங்களான்னு அழைப்பு. அக்டோபர் 31-க்கு அப்புறம் நான் ப்ரீ தான், வேணும்னா அப்போ இருக்கவான்னு கேக்கலாம்னு ஒரு நிமிஷம் நினச்சேன், அப்புறம்,ச்சே ச்சே, வேணாம் வேணாம், நம்மள நம்பி கேக்குறாங்க, நம்ம கஷ்டம் நம்மோட, அதோட பயங்கர மெண்டல் ப்ரெஸ்ஸர்ல இருக்குறப்போ இது நமக்கு கண்டிப்பா நல்ல ரிலீப். கிடைக்குற கேப்ல எழுதிடலாம்னு நினச்சு தான் சரின்னு தலையாட்டிட்டேன். அப்படி நான் எழுதின பதிவுகள கண்டிப்பா நான் நியாபகார்த்தமா வச்சிருக்கணுமில்லையா?
அதெல்லாம் இது தான்...
   
இந்த நேரத்துல தீபாவளி வேற வந்ததால என்னோட பதிவுகள் நிறைய பேர போய் சேரலன்னு ஒரு சின்ன வருத்தம் மனசுக்குள்ள இருக்கத்தான் செய்யுது. ஆனாலும் எதோ என்னால முடிஞ்சத நான் பண்ணிட்டேன்ங்குற திருப்தியும் கூடவே இருக்கு.

இத்தன களேபரத்துக்கு நடுவுல வெற்றிகரமா ஆறு பேரையும் தீசிஸ் சப்மிட் பண்ணவும் வச்சுட்டேன். அதுவரைக்கும் என்னை பற்றி அவங்க என்ன நினச்சாங்கன்னு எனக்கு தெரியாது, ஆனா எல்லாம் சப்மிட் பண்ணிட்டு, பெருசா ஒரு பெருமூச்சோட சிரிச்சுகிட்டே, ரொம்ப தேங்க்ஸ் மேடம்ன்னு சொன்னாங்க பாருங்க, நான் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலன் கிடைச்சிடுச்சு.  

இதோ, இப்போ வேற ஒரு கைடோட ஸ்டுடென்ட், அவ எழுதினத ரீ-சப்மிட் பண்ண சொல்லிட்டாராம் அவளோட கைட். அவளுக்கு ஹெல்ப் பண்ண முடியுமான்னு என் கைட் கேட்டாங்க... நாம எப்போ இந்த விசயத்துல முடியாதுன்னு சொல்லியிருக்கோம், சரின்னு சொல்லிட்டேன். இதோ, அவ வந்துட்டா. அவளுக்கு சொல்லி குடுக்க வேண்டியத சொல்லிக் குடுத்துட்டு, அவள எழுத வச்சுட்டு, நான் இத எல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டு இருக்கேன்.


இப்போ வேலைய பாக்கணும், வர்ட்டா.... 

Wednesday, 23 October 2013

நான் வால்பொண்ணு இல்லீங்கோ.... ரொம்ப சமத்து


ஒரு நாளு, நல்லா தூங்கிகிட்டு இருந்தேன்.... திடீர்னு அம்மா “போர்த்திட்டு தூங்குறத பாரு, ஒரு பொறுப்பு வேணாம், ஒரு அக்கற வேணாம், நான் ஒருத்தி இருக்குறதால தான இப்படி எல்லாம் இருக்குற, எப்போ உனக்கு புத்தி வர போகுது... ஊரு ஒலகத்துல புள்ளைங்களும் இருக்காங்களே, ஒன்ன மாதிரியா இருக்குதுங்க, எவ்வளவு காலைலயே எழுந்து வேலைய பாக்குதுங்க... அட எரும மாடே இன்னுமா தூங்கிட்டு இருக்க, ஒன்ன சொல்லி தப்பில்ல... ஒன்ன செல்லம் குடுத்து வளத்தேன் பாரு என் தப்பு”