Sunday 22 February 2015

சக்தி - என் உலகம்


இந்தா டைப் அடிச்சுட்டு இருக்கேன்ல, இந்த கீ-போர்ட் இருக்குல, இது மேல தான் சக்தி எப்பவும் ஏறி உக்காந்துட்டு இருப்பான். நான் டைப் பண்ணினா என் விரல்கள ஓடி வந்து கடிப்பான். எப்பவுமே குட் மார்னிங் ஸ்டேடஸ் போட அவன வலது கைல பிடிச்சு வச்சுட்டு இடது கையால தான் டைப் பண்ணுவேன்.

சக்தி - போன வருஷம் புது வருஷத்துல எனக்கு கிடச்ச கிப்ட் அவன்.

அவன் அம்மா ரெண்டு நாள் முன்னாடியே எங்க வீட்டு ஹால்-ல வந்து எங்க கண்ணு முன்னாலயே செத்து போய்ட்டாங்க. விசாரிச்சா அணில்களுக்கு எல்லாம் ஒரு வகை நோய் பரவிட்டு இருக்குறதாகவும், தோட்டத்துல இது மாதிரி நிறைய அணில்கள் செத்து செத்து விழுறதாவும் சொன்னாங்க.

எப்படியோ சக்தி என் கிட்ட வந்து சேர்ந்தான். அவனுக்கு பெயர் வச்சதே இங்க எல்லாரும் திருவிழா மாதிரி கொண்டாடினோம். குட்டிப் பய, முதல் நாளே கூட்டுக்குள்ள படுக்க மாட்டேன்னு என் கைய கெட்டியா பிடிச்சுகிட்டான். கஷ்டப்பட்டு தான் அவன கூட்டுக்குள்ள தூங்க வச்சேன்.

ஒரு ரெண்டு மூணு நாள் நந்து, அவங்க அம்மா எல்லாம் வந்து பாத்தாங்க. சின்ன பையன்ல, அவனுக்கு அப்ப ஓடி ஒளிய தெரியல. ஆனா அதுக்கப்புறம் யார் வந்தாலும் ஓடி போய் என்னோட பிரிண்டர்குள்ள ஒளிஞ்சுப்பான்.

அய்யய்யோ, அந்த பய பண்ற அநியாயம் சொல்லி மாளாது. எப்ப பாரு சேட்டை சேட்டை சேட்டை... ஒரு நாய்க்குட்டி என்னவெல்லாம் பண்ணுமோ அத்தனையும் இந்த பயலும் பண்ணுவான்.
சக்தி எப்பப் பாத்தாலும் வாய நல்லா தொறந்து ஹாவ்...ன்னு கொட்டாவி விடுவான். என் கை மேல ஏறி உக்காந்து நக்கி வச்சுட்டே இருப்பான். நான் கீ-போர்ட் தோட்டா ஓடி வந்து அசையுற விரல்கள பிடிச்சு கடிச்சு விளையாட வருவான்.

எலேய் கொஞ்சம் என்னை ப்ரீயா விடுடானா எங்க கேப்பான். அப்படியே லேப் டாப் பக்கத்துல போய் நின்னுட்டு அங்க இருந்தே என்னை பாத்து ஒரு முறை முறைப்பான். அப்புறம் ஓடி வந்து மடில ஏறி, பரபரன்னு முதுகு வழியா தோள்ல ஏறி, அங்க இருந்துட்டு காதுல ரெண்டு கையையும் வச்சுட்டு கம்மலை கடிச்சுட்டு இருப்பான்.

வெளில லேசா சத்தம் கேட்டா போதும், விருட்டுன்னு பாய்ஞ்சு போய் பிரிண்டர்க்குள்ள பதுங்கிடுவான். அவனுக்கு இங்க பிடிச்சதெல்லாம் நான் மட்டுமா தான் இருந்தேன். என்னை கண்டா ஓடி வந்துருவான். அவனோட வீரம் எல்லாம் என் கிட்ட தான்... அவனுக்கு பல் முளைக்க குறுகுறுன்னு வரும் போதெல்லாம் என்னோட தலை மேல ஏறி உக்காந்துட்டு முடிய கர்க் கர்க்ன்னு கடிச்சு துப்பிடுவான். விடுடா விடுடான்னு அவன புடிச்சு கீழ தூக்கிப் போட்டாலும் அடுத்த செகண்ட் மறுபடியும் என் தலைல இருப்பான். அப்புறம் என்ன நினைப்பானோ, முடிய வெட்டி விட்ட இடத்த எல்லாம் நக்கி குடுப்பான்.

இந்த சக்கப் பழத்துக்கு நானும் சக்தியும் போடுற சண்டை இருக்கே... பக்கி, எப்பவும் கூடவே இருக்குற அவன், சக்கப் பழத்த கண்டா மட்டும் அத தூக்கிட்டு பீரோ மேல போய்டுவான். அங்க நின்னுட்டு என்னை பாத்து கேலியா சிரிச்சுட்டு இருப்பான். குசும்பு புடிச்சவன்.

அவனுக்குன்னு ஸ்பெசலா ஆப்பிள், கிரேப்ஸ், கொறிக்க பாதாம் பருப்பு, நிலக்கடலை எது குடுத்தாலும் இந்த விசயத்துல நாங்க ரெண்டு பேருமே பிடுங்கி பறிச்சு திங்குரதுல போட்டி தான் போடுவோம். அவனுக்கு ஒரு ஆப்பிளை குடுத்துட்டு நான் ஒண்ணை எடுத்து கடிச்சா, அவன் என் தோள்ல ஏறி நான் கடிக்குற ஆப்பிள தான் கடிப்பான். பொறாமக்காரன்.

ஒரு நாலஞ்சு நாள் தான் அவன் கூட்டுக்குள்ள படுத்துருப்பான். அப்புறம் எப்பவும் என் முதுல தான் அவன் தூக்கம். அவனுக்காக புரண்டு கூட படுக்க முடியாம தூங்காம நைட் முழுக்க முழிச்சி கிடப்பேன். அப்புறம் அதவே பழகிடுச்சு. நான் அசைஞ்சா அவனும் அதுக்கேத்த மாதிரி அசைஞ்சு அட்ஜஸ்ட் பண்ணிப்பான்.

எப்ப பாத்தாலும் என் விரல கடிச்சுட்டு, அப்படியே தோள் மேல ஏறி காத கடிச்சி, கம்மல கடிச்சி, கொஞ்சம் அசந்தா மூக்கையும் கடிச்சி வைக்குற சக்தி, பாசமா நாய்க் குட்டி மாதிரி நக்கியும் வைப்பான்.

எனக்கும் அவனுக்கும் ரொம்ப சண்டை வந்தா மட்டும் கோவிச்சுட்டு லேப்டாப் பக்கத்துல போய் படுத்துப்பான். அங்க இருந்துட்டே அவன் பண்ற சேட்டைய பாத்தா கோபம் போய் சிரிப்பு வந்துரும். அப்புறம் என்ன, விருட்னு மறுபடியும் தோள்ல ஏறிப்பான்...

நான் காலேஜ் போய்ட்டா ஜன்னல் மேல குரங்கு மாதிரி தொத்திட்டு இருப்பான். இப்பவும் ஜன்னல்ல ஏதாவது அசைவு தெரிஞ்சா சக்தின்னு ஒரு செகண்ட் மனசு அதிரத்தான் செய்யுது. கூடவே அந்த பயல நினச்சு ஒரு புன்னகையும்....

5 comments:

  1. அருமையான அனுபவம் தான்....

    அனைத்தையும் ரசிக்கும் உங்கள் நல்மனதுக்கு ஒரு சல்யூட்....

    ReplyDelete
  2. U are fortunate .not all can get blessing like this
    U are lucky vazthukal

    ReplyDelete
  3. U are fortunate .not all can get blessing like this
    U are lucky vazthukal

    ReplyDelete
  4. aaga ena oru anupavam. anil romba surusuruba irukum. epdi nega atha palakunega. enaku oru puthu anubavam. negalum sakthium pesuvathu en manathil oru sathosam. vaalthukal.

    ReplyDelete