என்னை எப்போ பாத்தாலும் நந்து கேக்குற ஒரு கேள்வி, “அது எப்படி அக்கா, உன்னால மட்டும் இந்த ப்ரகதிய ஈசியா அடக்க முடியுது? இந்த குருவிங்க உன்னை பாத்தா பயப்பட மாட்டேங்குது”ன்னு தான்....
அதுக்கு காரணம், நான் சின்ன வயசுல வாழ்ந்த சூழலா கூட இருக்கலாம்...
ஆடு மாடுகள்ன்னு மட்டுமில்ல, எந்த உயிரினமா இருந்தாலும் எங்க வீட்ல கண்டிப்பா அடைக்கலம் உண்டு. ரொம்ப சின்னப் புள்ளையா இருந்தப்ப, (சுமார் பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி) எங்க வீட்டை சுத்திலும் காடு தான் இருக்கும். ஒரு பக்கம் கொல்லாங்காடு, இன்னொரு பக்கம் பச்சை பசேல்ன்னு வயல், இன்னொரு பக்கம் மாந்தோப்பு, அது பக்கத்துல தென்னந்தோப்பு, அதுக்குள்ள சின்னதா ஒரு வீடுன்னு ஒரு தோப்பு வாழ்க்கை எங்களோடது.
இந்த தோப்புகள்ல கிடைக்குற விளைச்சல்கள எப்பவுமே முழுசா பறிச்சு எடுத்தது கிடையாது அப்பா. ஏன் இப்படி பண்றன்னு யாராவது கேட்டா, இங்க இருக்குற மத்த உயிர்களும் சாப்பிடனும் இல்லையான்னு கேப்பார். காய்ச்சு தொங்குற கொய்யா பழங்கள தேவைக்கு மட்டுமே பறிச்சு சாப்பிடணும். மீதி எல்லாம் அணில்களுக்கும், கிளிகளுக்கும் தான். நான் எப்பவுமே அணில் கடிச்ச, கிளி கொத்தின பழங்கள மரத்து மேலயே அதுவும் அதுங்க மத்தியிலயே உக்காந்து சாப்பிடுறது தான் பழக்கம். ஆரம்பத்துல என்னை கண்டா தலைதெறிக்க ஓடவும் பறக்கவும் தான் செய்யும்ங்க, ஆனா போக போக நம்மள எல்லாம் ஒரு பொருட்டாவே மதிக்குறது இல்ல. என்னோட தல மேலயும், கால்லயும் உக்காந்து பழம் சாப்பிடுரதே அதுங்களுக்கு வேலையா போச்சு.
கொய்யா மரத்து மேல உக்காந்து பாத்தா, பக்கத்துல தென்னந்தோப்புல தேங்கி நிக்குற தண்ணியில பூச்சி, புழு பிடிச்சி சாப்பிட வரும் கொக்குங்க வெள்ளை வெளேர்ன்னு தெரியும். கூடவே இடையிடைல தவுட்டு கொக்கும் இருக்கும். அப்புறம், அதிசயமா எப்பவாவது மீன் கொத்தி வேற வரும். இதுங்கள எல்லாம் வசியம் பண்ண ஒரு டெக்னிக் உண்டு. அது தான் குப்பைமேனி கீரை. எப்பவுமே நானும் தம்பியும் இந்த குப்பைமேனி கீரைய வேரோட பிடுங்கி எங்க பக்கத்துல வச்சுப்போம். அந்த வேரை எப்படியாவது எடுத்துடணும்ன்னு கொஞ்சம் கொஞ்சமா நம்ம கிட்ட ஒட்டி ஒட்டி வர ஆரம்பிச்சுடும்.
இதுங்க இப்படினா, பக்கத்து வீடு, மேல் வீடு, கீழ வீடுன்னு எல்லார் வீட்லயும் பூனைங்க இருக்கும். அதுங்களுக்கு குப்பைமேனி வேர்னா அவ்வளவு இஷ்டம். நம்ம மேல விழுந்து ஐஸ் வச்சு, செல்ல கடி கடிச்சுன்னு எப்படியாவது எங்ககிட்ட இருந்து அத புடுங்கிட்டு போய்டும்.
தோப்புக்குள்ள வளர்ந்து நிக்குற புற்கள திங்க வர்ற காட்டு முயல்களும் உண்டு. வெள்ளை வெளேர்ன்னு எல்லாம் இல்லாம சாம்பல் கலர்லயும், செவல கலர்லயும் இருக்கும். தோட்டத்துல போடுற காய்கறிகள பறிச்சு தின்னுட்டு ஓடிடும். கிழங்கு வகைகள்னா கேக்கவே வேணாம். முயல் கேரெட் சாப்பிடும்னு புக்ல மட்டும் தான் நான் படிச்சிருக்கேன். ஆனா இங்க உள்ள முயல்கள் எல்லாம் முட்டைகோஸ் சாப்பிடுமே தவிர கேரெட் தின்னு நான் பாத்தது இல்ல. குட்டி குட்டி காட்டு முயல்கள் தான் எப்பவுமே ஜாக்கிரதையா இருக்கும். நம்ம பக்கம் எட்டிக்கூட பாக்காது.
எங்க ஏரியால குயில்களும் உண்டு. காலை, மாலைன்னு நேரம்காலம் இல்லாம அங்கங்க குயில்கள் பாட்டு பாட கிளம்பிடும். நாங்க மட்டும் விடுவோமா என்ன, கூ.... கூ....ன்னு அதோட பாட்டுக்கு எசப் பாட்டு பாடுவோம். நானெல்லாம் ஒரு பாடகியா உருவெடுக்க இந்த குயில்கள் தான் காரணம். குயிலுக்கு அப்படி என்ன சாப்பாடு நாம குடுத்துற முடியும்? அதுக்கு தான் எங்க தோப்புல நாவல் மரங்கள் நின்னுச்சு. இந்த நாவல் மரத்துல தான் குயில் கூடு கட்டும்.
அடுத்து மண்ணுழுந்தி பாம்புங்க. கட்டையா உருண்டையா, விறகு கட்ட எடுக்க போகும்போது எல்லாம் உள்ள இருந்து நெளியும். ஐயோ பாம்புன்னு கதறாம, சூசூ....ன்னு விரட்டி விடுவோம். இந்த பாம்புக்கு பால் வச்சு வளக்கணும்ன்னு நான் ப்ளான் எல்லாம் வேற போட்ருக்கேன். ஒரு தடவ அசைய முடியாம கிடந்த பாம்ப அலேக்கா தூக்கி பால் கேனுக்குள்ள போட்ட பெருமை என்னையே சாரும்.
மண்ணுளுந்தி பாம்புனா தாங்க எனக்கு பயம் இல்ல, மத்தப்படி இந்த நல்ல பாம்பு, சாரை பாம்புன்னா ரொம்ப பயம். எப்ப எல்லாம் அதுங்க எதுக்க வருதோ அப்ப எல்லாம் அசையாம, பேஸ்மென்ட் கூட ஆடாம அப்படியே நிப்பேன். பாம்பு கண்ண விட்டு மறைஞ்சா போதும், விட மாட்டேனே, ஒரே பாய்ச்சலா பாய்ஞ்சு போய் ரூமுக்குள்ள கதவடச்சுட்டு அலறுவேன் பாருங்க, ஒரு அலறல்.... ஹிஹி... யாருக்கும் தெரியாது, நீங்களும் சொல்லிடாதீங்க...
தோப்புக்குள்ள நிறைய கரையான் புற்றுகள் உண்டு. கரையான் புற்றுக்குள்ள பாம்பு இருக்கும்னு பயமுறுத்தினாலும் தைரியமா கைய விடுரவ நான். அப்படியே கைய வெளில எடுக்கும் போது முட்டி வரைக்கும் கரையான் அப்பியிருக்கும். கடி தாங்க முடியாது. ஆனாலும் அத எல்லாம் பொறுத்துட்டு கெத்தா கரையான கொண்டு போற ஈக்காம்பெட்டிக்குள்ள போட்டு எடுத்துட்டு வருவோம். பின்ன, கோழி குஞ்சுகளுக்கு சாப்பிட குடுக்கணும்ல...
அப்படியே ராத்திரி ஆகிட்டா, ஒரு நார் கட்டில எடுத்து வெளில போட்டு அப்பாவ படுக்க வச்சு, அப்படியே ஜம்முன்னு அவர் வயித்துல ஏறி உக்காந்து, கதை கேட்டுட்டு இருப்போம். திடீர்னு க்கும்..க்கும்ன்னு யாராவது முனங்குற மாதிரி சத்தம் கேக்கும். அப்போதான் அப்பா அந்த பறவைய காட்டித்தருவார். எங்க தோப்புல நாட்டு தென்னை மரங்கள் தான் ரொம்ப அதிகம். அதோட நடுப்பகுதியில பெரிய ஓட்டைகள் இருக்கும். அதுக்குள்ள இருந்து ஒவ்வொருத்தரா வெளில வருவாங்க அவங்க... அவங்கனா, அதாங்க, ஆந்தைங்க. ரசிச்சு பாத்தா, இந்த ஆந்தைங்க ரொம்ப அழகா இருக்கும். நான் அப்பா மேல ஏறி உக்காந்தா இந்த அம்மாவுக்கு எப்பவுமே பொறாமை தான். மொறச்சு பாக்குற அம்மா மூஞ்சிய விட அந்த ஆந்த மூஞ்சி அழகா இருக்குப்பான்னு எப்பவும் அம்மாவ வம்பிழுத்துட்டே நட்சத்திரங்கள எண்ணிகிட்டு, நிலவ ரசிச்சுட்டு, அப்பா நெஞ்சுல அப்படியே தூங்கிப் போறது தனி சுகம்.
போற போக்குல தண்ணிதொட்டி பக்கத்துல மதமதன்னு கும்பலா நத்தைங்க, கால்கள் மேல ஏறி ஓடுற பூரான், க்ராக் க்ராக்ன்னு கத்துற தவளைங்க, ஒரு மாதிரி பயத்தை உண்டு பண்ற மரவட்டை, செவல நிறத்துல அழகா சிறகு விரிச்சு, கலர்கலரா சைட் அடிக்க வச்சு, நம்மள பின்னாலயே ஓடிவர செய்யும் பட்டாம்பூச்சிங்க, மழை நேரம் வீட்டை நிறைக்கும் ஈசல்கள், ராத்திரி ஆனா கிரிச்கிரிச்ன்னு சத்தம் போடுற பூச்சி, வண்டு வகைகள், பளிச் பளிச்ன்னு வெட்டிட்டு போற மின்மினி பூச்சிகள், இளநி குடிக்க வரும் மரநாய்கள், கொஞ்சமா பயமுறுத்தும் செம்புவம், அங்கங்கே கூடு கட்டுற சிட்டுக்குருவி இப்படி எப்பவுமே எங்களோட உலகம் அழகாவே இருந்துருக்கு...
இப்ப மட்டும் என்ன, நளன், தமயந்தி, குறிஞ்சி, ப்ரபா, மந்தாகினி, யுவா, மருதம், நெய்தல், கிரிஜா, ப்ரகதின்னு இப்பவும் அழகா தான் இருக்கு.... இது போக ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ராக்கள்.... சுத்தி முத்தி ரசிங்க பாஸ்.... வாழ்க்க தானா அழகாயிடும்...
வணக்கம்
ReplyDeleteஉண்மையில் இயற்கை ஒரு வரந்தான்... இயற்கைக்கு ஏற்றால் போல் இசைந்து நடப்பது மனித சுபாவம் அதற்கு நீங்கள் ஒரு உதாரணம்... அருமையாக சொல்லியுள்ளீர்கள்
கூ.... கூ....ன்னு அதோட பாட்டுக்கு எசப் பாட்டு பாடுவோம். நானெல்லாம் ஒரு பாடகியா உருவெடுக்க இயற்கைதான் காரணம்...
தங்களின் பதிவு வழிதான் அறிந்தேன் நீங்கள் ஒரு பாடகி என்று... வாழ்த்துக்கள்த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இயற்கையோடு இசைந்து நடந்தால் இனிமைதான்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
தம +1
இதுவல்லவோ வாழ்க்கை இது கிடைக்காமல் ஏங்கி தவிக்கும் நகர வாழ்க்கை நரக வாழ்க்கைதான் வாழ்த்துக்கள் சகோதரி .
ReplyDeleteஇனிமையான நினைவுகள்..... இயற்கை அன்னையின் மடியில் கிடந்தது போல ஒரு சுகம்......
ReplyDelete