Friday 28 February 2014

எனக்கென ஒரு நண்பனிருந்தான்...



எனக்கென ஒரு நண்பனிருந்தான்...

எப்படி அவனெனக்கு அறிமுகமானான்
என்பது நினைவிலில்லை.
ஆனால் அது ஒரு மழைக்கால காட்சியாய் இருக்கிறது.
வெயிலென்பது கொஞ்சம் கொஞ்சமாய்
களவு போய் கொண்டிருந்த காலமது.

களத்துமேட்டின் மேல் காளைகள் ஓய்வெடுக்க,
வயல்வரப்புகள் நீர் நிறைத்து கொண்டிருந்தன...
சலசலக்கும் ஓடைகளுக்கிடையில்
கப்பல் ஓட்டி களைத்திருந்த நேரத்தில்
எங்கிருந்தோ வந்தவன் சிநேகமாய் புன்னகைத்தான்.

வசீகரிக்கும் கண்கள் காந்தமாய் கவர்ந்திழுக்க,
அவன் வகிடெடுக்கா உச்சந்தலை
கொஞ்சமாய் கலைத்து விட சீண்டியது.
சிற்சில சம்பாசனைகளுக்குள் 
அவனென்னை கவர்ந்தே விட்டான்...

கரம் பற்றிக்கொள்ளென விரல் பற்றி
ஒரு பறவையாய் சிறகு விரிக்க வைத்தான்...
மரக்கிளையொன்றில் இறக்கி விட்டு
தனந்தனியாய் பறந்திட செய்தான்...

சிறு கல் கண்டு மிரண்டோடிய என்னை
மலைகள் அழகென உள்ளங்கால் பதித்திட செய்தான்...
பஞ்சு மிட்டாய் இதுவென
மேகம் நடுவில் முகம் புதைத்து சிலிர்க்க வைத்தான்...

தாய் விட்டு பிரிந்த
அணில் பிள்ளைகள் கண்டெடுத்து
தாயாய் என்னை கொஞ்சம் மாற்றிப் பார்த்தான்...
தவழத் தடுமாறும் நாய் குட்டிகள் கொஞ்ச வைத்து
சேயாய் நானும் மாறிடச் செய்தான்..

வயல் வெளிக்குள் நாற்று நட்டோம்...
புல் வெளிக்குள் பூ பறித்தோம்...
மழை வந்து விட்டுச் சென்ற
தூறல்களை வழியெங்கும் சிதறடித்தோம்...

பேசும் கதைகளுக்கு குறைவில்லை
களைப்புகள் என்றும் நெருங்குவதில்லை...
தோளில் நிம்மதியொன்றை புதைத்து வைத்து
நான் இவன் நிழலென நகலெடுத்தேன்...

நண்பன் இவனென இறுமார்ந்த வேளையில் தான்
ஓர்நாள், மொட்டை மாடியில், நிலாவொளியில்
தென்னங்கீற்றுகளின் சாட்சியாக
அவன் காணாமல் போயிருந்தான்....

இன்றிவன் என் துணைவனாகி, என் மகளுக்கு
அம்பாரி சுமக்கும் யானையாகி விட்டிருந்தான்...

Tuesday 25 February 2014

இணையமும் குழந்தைகளுக்கான பாதுகாப்பும்...


இணையம் அதாங்க, இந்த இன்டர்நெட் வந்த நாள்ல இருந்து வீட்டுக்குள்ளயே முடங்கி இருந்த பெண்கள் வீட்டுக்குள்ள இருந்தே வெளி உலகத்த எட்டிப் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. தங்கள உற்சாகப்படுத்தி, தங்களோட திறமைகள ஊக்குவிக்கவும் ஆட்கள் இருக்காங்கங்குற ஒரு நம்பிக்கை அவங்கள கொஞ்சம் கொஞ்சமா ஸ்ட்ரெஸ்ல இருந்து வெளி வர ரொம்பவே உதவி பண்ணியிருக்கு. இருந்த இடத்துல இருந்துகிட்டே தங்களுக்கான உரிமைகளுக்கு ஓங்கி குரல் குடுக்க முடியுது அவங்களால.

சரி, அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நான் இப்போ பேசப்போற விஷயம், பேஸ் புக்ல ஆங்காங்கே தட்டுப்பட்ட, தட்டுப்படுற, தட்டுப்படப்போற விசயத்த வச்சி சொல்ல வரேன். இத படிச்சுட்டு யார் சொன்னா எப்போ சொன்னான்னு யாரும் கேள்வி கேக்காதீங்க, காரணம், இத இன்னார்தான் சொல்லனும்ன்னு அவசியம் இல்ல, கொஞ்சம் கூர்ந்து கவனிச்சா நம்ம கண்ணுல அடிக்கடி தென்படும்.

அதாவது, ஒரு பொண்ண அசிங்கப்படுத்தணும்னு முடிவு பண்ணிட்டா, அவங்கள பத்தி, அதுவும் அவங்க கேரக்டர் பத்தி கதை கட்டி விடுவாங்க. அதையும் மீறி சில பேரு அவங்க போட்டோவ சுட்டு ஒண்ணு பேக் ஐ.டி தொடங்குவாங்க, இல்லனா கண்ட கண்ட பேஜ்ல போட்டு, அசிங்க அசிங்கமா கமன்ட் போட வைப்பாங்க.

இதனால அவமானப்பட்டு கூனி குறுகி போறது பொண்ணுங்கதான்னாலும் இதே பிரச்சனை ஆண்களுக்கு வேற மாதிரி இருக்கு. ஒரு ஆணை பிடிக்கலனா, ஒண்ணு, அவங்க ஐடிய ஹேக் பண்றாங்க, இல்ல, அவங்களோட படங்கள வச்சி புதுசா ஒரு ஐ.டி உருவாக்குறாங்க. அந்த ஐ.டில இருந்து பெண்களோட இன்பாக்ஸ்ல தப்பு தப்பா பேசினா போதும், சம்மந்தப்பட்ட ஆளோட இமேஜ் டோட்டல் டேமேஜ்.

ஆக மொத்தத்துல, ஒரு பொண்ண அசிங்கபடுத்தணும்னாலும் சரி, ஒரு ஆணை அசிங்கப்படுத்தனும்னாலும் சரி, பகடைகாயா யூஸ் ஆகுறவங்க பொண்ணுங்க தான்.

ஆனா இப்போலாம் காலம் மாறியாச்சுங்க. பெண்களும் இப்போ தைரியமாகிட்டாங்க. ஒருவேளை நம்மள பத்தியோ இல்ல நம்மோட போட்டோவையோ தப்பா யூஸ் பண்ணினா தைரியமா எதிர்கொள்ளலாம்ங்குற துணிச்சல் அவங்களுக்கு இருக்கு. இன்னிக்கி நிறைய பேர், இந்த மாதிரி பிரச்சனைல மாட்டி, அதுல இருந்து வெளி வந்தும் துணிச்சலா அவங்க போட்டோ போட்டுட்டு இருக்காங்க.

ஐயையோ, அந்த தைரியம் எல்லாம் எனக்கு கிடையாதுமா, நான் என் போட்டோவ போடமாட்டேன் அப்படின்னு பதறி கிட்டே நீங்க இன்னொரு முடிவு எடுக்கலாம். அப்படி என்ன முடிவுன்னு கேக்குறீங்களா?

நம்ம போட்டோ போட்டா தான பிரச்சன, நம்ம குட்டி பசங்க போட்டோ போடலாமேன்னு அப்படின்னு புத்திசாலித்தனமா நினைப்பீங்க. அதுவும் நம்ம வீட்ல பொம்பள புள்ளைங்க இருந்தா நமக்கு பெரும தான். அவங்கள விதவிதமா அலங்கரிச்சு அழகு பாக்குறதோட இல்லாம, இப்போ லேடஸ்ட் பேஷனா அவங்கள விதவிதமான ஷாட்ஸ்ல போட்டோ எடுத்து அத எல்லாம் பேஸ் புக்ல போட்டு விட்டுடுறீங்க.

சரி, அதனால என்ன, சின்ன குழந்தைகள்னா பல பேரும் ரசிக்கத்தானே செய்வாங்கன்னு கேக்குறீங்க தானே? ஆமாங்க, அந்த போட்டோக்களுக்கு லைக் கொட்டும். வாவ், க்யூட், அழகு செல்லம், அம்முகுட்டின்னு கமண்ட்ஸ் பறக்கும். நமக்கும் ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கும்.

ஆனா இத எல்லாம் மவுனமா ஒரு ஓநாய் கூட்டம் நாக்க தொங்கபோட்டுட்டு கவனிச்சுட்டு இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? உங்க குழந்தையோட போட்டோவில கண்ணியமா ஒரு கமன்ட் போட்டுட்டு அந்த ஓநாய் திருட்டுத்தனமா அந்த போட்டோவ டவுன்லோட் பண்ணலாம். டவுன்லோட் பண்ணது மட்டுமில்லாம அதுக்குன்னே இருக்குற கண்ட கண்ட சைட்டுகள்ல அந்த போட்டோவ அப்டேட் பண்ணும் அந்த கேடுகெட்ட ஜென்மம். இதுக்காகவே அந்த பக்கமாவே சுத்திட்டு இருக்குற பல பிணந்தின்னி கழுகள் உங்க குழந்தையை கொத்திக் குதறலாம், அதுவும் ரொம்ப ரொம்ப வக்கிரமா...

அந்த மாதிரி சைட்ஸ் இருக்கான்னு அதிர்ச்சி எல்லாம் அடையாதீங்க, கண்டிப்பா இருக்கு. இதெல்லாம் வெட்ட வெட்ட துளிர்க்குற காளான் கூட்டங்கள். 

இந்த மாதிரியான சைட்டுகளை பற்றி நாம புகார் பண்ணவே முடியாதான்னு ஏங்குறீங்களா? நாமளால இத எல்லாம் செய்ய முடியாதான்னு தவிக்குறீங்களா, கண்டிப்பா உங்களாலான உதவிய, பங்களிப்ப நீங்க பண்ணலாம். அதுக்கு நீங்க முதல்ல போக வேண்டிய சைட் இது தான் 

ASACP | Association of Sites Advocating Child Protection - Report Child Pornography

இங்க போய் நீங்க நீக்கியே ஆகணும்ன்னு நினைக்குற குழந்தைகள் தொடர்பான பாலியல் சம்மந்தப்பட்ட பேஜஸ் ரிப்போர்ட் பண்ணலாம். 

சரி, உங்களான பங்களிப்ப கண்டிப்பா நீங்க குடுங்க. இப்போ கொஞ்சம் நான் சொல்றத காது குடுத்து கேக்கலாம் தானே....

முதல்ல நாம ஒரு விஷயம் புரிஞ்சிக்கணும். எந்த விஷயமாவும் இருக்கட்டும், எதுக்கெடுத்தாலும் இந்த சமூகத்தையே குறை சொல்லி பழகிட்டோம் நாம. பிரச்சனைன்னு ஒண்ணு வந்தா அடுத்தவங்கள ஈசியா கைகாட்டி பழி போட்டுடுறோம். ஏங்க, நான் தெரியாம தான் கேக்குறேன், இந்த சமூகம்னா என்ன? ஏன், அதுல நாம இல்லையா?

இந்த மாதிரி தவறான நடத்தை உள்ளவங்கள கண்டிக்குறது எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு நம்மள தற்காத்து கொள்ள வேண்டியது முக்கியம் இல்லையா? அதுவும் நம்மோட சந்தோசத்துக்காக, கைதட்டலும் பாராட்டும் வேணும்ங்குரதுக்காக ஒண்ணுமே தெரியாத நம்மோட பிஞ்சு குழந்தைய நாமளே பலியிடலாமா?

மறுபடியும் சொல்றேன், இத சரி பண்ணவே முடியாதான்னு கேட்டீங்கனா, போராடலாம், நம்மால முடிஞ்ச அளவு போராடலாம், ஆனா நாமளே அந்த பிணந்தின்னி கழுகுகளுக்கு இரை போடக் கூடாது. நான் சொல்றது புரிஞ்சுதுன்னா நல்லதுங்க, இல்லனா அனுபவிச்சு தெரிஞ்சுக்கோங்க. ஏன்னா அனுபவத்த விட சிறந்த ஆசான் வேற யாரும் கிடையாது பாருங்க...

பிஞ்சு குழந்தைகளை எட்ட நின்னு பூவாகவே பாத்து மகிழ்வோம், பறித்தும் கொடுக்க வேண்டாம், நுகர்ந்தும் பாக்க வேண்டாம்...

நான் தெளிவா இருக்கேங்க... நீங்களும் தெளிவா இருந்தா சந்தோசம்...

 

Monday 24 February 2014

வா.... வந்தென் வலி விரட்டி செல்...



கவ்வி பிடிக்கும் பயமொன்று ஏனோ
அவசரகதியில் தொற்றிக்கொண்டது.
ஜன்னலோர கம்பிகள் துணையுடன்
தைரியம் பூசிக்கொள்ள துடிக்கிறேன்...

கற்பாறை ஒன்று நெஞ்சக்கூட்டுக்குள்
விழுந்து நொறுங்க...
ரெத்த நாளங்களின் வாசனை
இன்னும் பயம் தூவி செல்கிறது...

இன்னதென்று வரையறுக்க முடியாமல்
தலை பாரம் சுமந்து கொள்கிறது.
கண்களோ உறக்கம் தொலைந்து
கண் திரை மறைக்கின்றன...

உள்மன கூச்சல்
நெஞ்சம் பிளந்து வெளிப்பட தயாராக...
உன் மடி தேடி சுருண்டுக் கொள்ள
ஏங்கி தவிக்குது இதயத் துடிப்பு...

வந்து விடேன்... உன் கைகளால்
என் முதுகு பற்றிக் கொள்...
நெஞ்சக்குளிக்குள் முட்டுக் கொடுத்து
என் உயிர் கொஞ்சம் தாங்கு...

உன் மார் கற்றை முடிக்குள்
கொஞ்சம் முகம் புதைத்துக் கொள்கிறேன்...
கழுத்தோடு கைகள் பூட்டி
உன் உயிரோடு பிணைத்துக் கொள்கிறேன்...

என் உள்ளங்கைக்குள்
உன்னால் ஓர் அழுத்தம்...
உன்னோடு நானிருக்கிறேன் என்று
இதம் கொடுத்து செல்லும்...

வா... வந்தென் வலி விரட்டிச் செல்...
அப்படியே உனக்குள் புதைந்து
என்னை மறந்துக் கொள்கிறேன்...

Sunday 23 February 2014

சக்தியும் கார்த்திக்கும்


சக்தி- இந்த பெயர நினச்ச உடனே எனக்கு சந்தோசம் துக்கம்ன்னு மாறி மாறி தொண்டை அடைக்குது.

அவன் இப்போ இல்லன்னு ஆன உடனே எல்லாருமே எனக்கு ஆறுதல் சொல்ல ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க...

அதுல சிலர், சக்திக்கும் அவங்களுக்கும் உள்ள தொடர்ப எல்லாம் நினைவு படுத்தி அவங்கள அவங்களே தேத்திகிட்டு என்னையும் ஆறுதல் படுத்தினாங்க.
............................................................................

இதுல முக்கியமா கார்த்திக் என்கிட்ட என்ன சொன்னார்ன்னு பாப்போமா?
.............................................................
காயத்ரியோட குணநலன்களைப் பற்றிய பரிச்சயம் உடையவனாகவும்.. அவரின் அக்கறைக்குரியவனாகவும் இருப்பதின் காரணத்தாலே...

இந்த நாளோட வருத்தத்தை உங்கள் எல்லாரையும் போல வெளிக்காட்டிக்கொள்ள வாய்ப்பில்லாதவனாய் மௌனப்பட்டுக் கொண்டேன்.

வீட்டு வாசல்ல ஒரு அணில் இறந்துடுச்சு மக்கான்னு காயு சொன்ன போதும் வருத்தப்படாதேன்னு ஓரிருவார்த்தையில் சமாதானப்படுத்திவிட்டேன்.

மறுநாள் ஒரு குட்டி அணில் தன் தாய் செய்து வைத்த கூட்டிலிருந்து தவறி விழுந்துட்டு மக்கா... என்கூடவே இருக்குன்னு ஆனந்தப்பட்டு அதற்கு பெயர் வைக்கக் கேட்டாள்...

ஆணா பெண்ணா என்று தெரியாத அணிலுக்கு சக்தி எனப் பொதுப்பெயரிட்டேன். உண்மையாகச் சொல்வதெனில் காயுவுக்கு முழுக்க முழுக்க சக்தி ஒரு சக்தி டானிக்.

அவனோடான செல்லச்சீண்டல்கள், கீச்சுக்குரலொலின்னு தனக்காக ஒரு உலகத்தையே வடுவமைச்சுகிட்டாங்க...

அப்போதே ஒரு பயம் இருந்தது.. தன் சுயத்தின் பெயரால் அவன் மரங்களையும் வேர்பட்டைகளையும் தேடி இடம்பெயர்ந்துவிட்டால் எப்படித் தாங்கிக்கொள்வாள்... தாயில்லாப் பிள்ளைகளைச் சமாதானப் படுத்துவது அத்தனைச் சுலபமில்லை.

அதிலும் அன்பின் முழுமொத்த உருவமாகி நிற்குமிவளை எப்படிச் சமாதானப்படுத்தவோ! அதனாலேயே எனக்கான ப்ரியத்தை வெளிக்காட்டாமல் அவளது செல்ல சக்தியை... சமைத்து தின்பேன் பாரெனச் சீண்டிவைப்பேன்.

என் பிள்ளை இவனடா! என்றோடுவாள்.

நல்லவேலையாக காலம் சக்திக்கு ஒரு வலிகளற்ற மரணத்தை காயத்ரியினது கரங்களிலே தந்துவிட்டிருக்கிறதென்று சமாதானம் கொள்கிறேன்.

ஒரு வேளை அவன் தொலைந்து போயிருந்தால்.. முடிவுகளற்ற காரணங்களாலேயே பாவம் களைத்துப் போயிருப்பாள்.

உன் அப்பாவை நினைத்து எனக்கு பொறாமையுணர்ச்சி எழுகிறது பெண்ணே!

தக்கலைக்குப் போய்க் கொண்டிருந்த மனிதருக்கு தகவல் சொன்னதும் மருத்துவரை அழைத்துக் கொண்டு வந்து பரிசோதிக்கச் செய்தாராமே...

போகட்டும் அணிலென்று விடும் அப்பாவின் மகளாக நீ பிறந்திருக்கவில்லை என்பதே ,நீ உயிர்களிடத்து கொண்ட பிரியத்தின் காரனத்தை புரிதலாக்குகின்றது.

சக்தி! அவன் பெயரில் பெரும் அன்பும் பாசமும் எனக்குண்டு... stuart little - பார்த்துக்கொண்டிருந்தவன் நம் சக்திக்கும் இப்படி உடை நெய்யக் கேட்டேன் நினைவிருக்கிறதா உனக்கு...

நாம் கேட்டால் செய்யமாட்டான் நீயே கேளென்று கிரிதரனிடத்தில் ஸ்டூவர்ட் லிட்டில் போல் சக்தி லிட்டில் என அட்டைப் படம் வடிவமைக்க அறிவுறுத்தினதெல்லாம் அவன் மேலுள்ள அன்பின் பெயராலென கொள்வாய்.

போ பைத்தியமே! உன்னை சமாதானமே செய்ய முடியாதென்பது எனக்குத் தெரியும்.. ஆயினும் வேடிக்கையாய் உனக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தேன். நீயும் அமைதிப்பட்டு திடமானவளாய் நடித்துக்கொண்டிருந்திருக்கிறாய்.

கைகள் நடுங்கியதாய் எழுதி கரைந்தழுகிறாய்.. கண்கள் இருளடைந்து கட்டாந்தரையில் நினைவுதப்பி மயங்கி விழுந்த பேதையே உனக்கான ஆறுதல் நிச்சயமாய் என்னிடமில்லை ஆகையால் அழுது தீர்த்துவிடு.

என்ன பெண்ணிவள் இப்படி இருக்கிறாள்  என விமர்சிப்பவர்கள் விமர்சித்துவிட்டுப் போங்கள். அதுபற்றி கவலையில்லை.. இங்கே சக்திக்கு மட்டும் தான் புரியும் காயத்ரி என்று ஒரே ஒருத்திதான் உலகில் இருக்கிறாள் என்பது..

எனக்கொரு சின்ன திருத்தமும் உண்டு.. அதாவது...
இயற்கையோடு வாழும் உயிர்கள் நம்மோடு வாழும் போது பூரணவாழ்வைப் பெறமுடியாது அல்லது.. அதன் தன்மையிலிருந்து விலகிய வாழ்க்கையில் அதன் சுயம் இழக்கப்பட்டுவிடுமென்று..

இந்த விஞ்ஞான அஞ்ஞான விளக்கங்களில் எல்லாம் நம்பிக்கை கொள்ளாதே காயத்ரி.. உனக்கு தெரியும்ல சக்திக்கும் உனக்குமான உறவு.. இந்த விஞ்ஞானம் பச்சைப் புல்லில் இருக்கும் மாங்கனீசு பசுவின் உடலில் பாலாகி எப்படி கால்சியம் வருகிறது என்னும் கேள்விக்கு மாட்டை அறுக்கச்சொல்லும்..

அதற்கு உணர்வுகள் பற்றிய எந்த தெளிவும் இருக்கப் போவதில்லை... தெரியப் போவதுமில்லை. 
சக்தி சம்பாதித்து வைத்த மனிதர்கள் மீதெல்லாம் எனக்கு ஆச்சர்யங்களூக்கு அப்பாற்பட்ட கருணை மேலெழுகிறது. புகைப்படத்திலேயும், எழுத்துக்களின் சிலாகிப்பிலேயும் கண்டுணர்ந்த ஒரு உயிரிடத்தினில் நீங்கள் செய்த அன்பு... வார்த்தைகளின் விவரனைக்குள் அடங்காதது.

கவலையே கொள்ளாதேயுங்கள் சக்தியினை புதைத்த மண்ணீலே தென்னங்கன்று ஒன்று நட்டு வைத்திருக்கிறோம்.. நாளையே அது வானுயர வளர்ந்து கெழுந்ததும் அதன் மீதிலேறி விளையாடும் அணில்களெல்லாம் அவன் சாயலில் நீடூழி வாழ்கும்...

சியர்ஸ்... காயு...
...........................................................................

சக்தி, உனக்காக இங்க பிரார்த்தனை பண்ண நிறைய பேர் இருக்காங்கடா... நீ எங்கள விட்டுட்டு போயிருக்க வேணாம் செல்லம்...


சக்தி....



சில விசயங்கள கோர்வையா சொல்ல முடியாது, காரணம் நாம சொல்ல வர்ற விசயங்களுக்கு முன்னாடி நிறைய விஷயம் நடந்து முடிஞ்சியிருக்கும். இப்போ நான் சொல்லப்போற விசயமும் அப்படி தான்...

இத நீங்க படிக்குறப்போ உங்களுக்கு புரியாம போகலாம். காரணம், இது உங்களுக்கு முன்பின் சம்மந்தமே இல்லாத ஒரு விசயத்தோட இறுதிப்பகுதி.  உங்களுக்கு தெரியவே தெரியாதுன்னு ஒரேயடியா சொல்லிட முடியாது, காரணம், இங்க இருக்குற நீங்க என்கூட பேஸ் புக்லயும் இருக்கீங்க.  புதுசா என்னை பத்தி தெரியாதவங்களும் இத படிங்க, படிச்சிட்டு நீங்க விடுற ஒரு பெருமூச்சு என் சக்திய வாழ்த்திட்டு போகும்.

சக்தி யாருன்னு தெரியாதவங்க இந்த லிங்க்க படிச்சுட்டு மேற்கொண்டு படிச்சா புரியும்னு நினைக்குறேன்.

ஆமா, நேத்து என் சக்தி என்னை விட்டுட்டு போய்ட்டான். அவனுக்கும் எனக்குமான உணர்வுகள நான் இன்னும் முழுசா எங்கயும் பதிவு பண்ணல, அதுக்கு முன்னாடி இறுதி கட்டத்துக்கு வந்துட்டேன்...

கூடிய சீக்கிரம் எங்க ரெண்டுபேரோட வாழ்க்கைய பதிவு பண்றேன். இப்போ தொடர்ந்து படிங்க...
........................................................................

சக்திய தேடிகிட்டே முழிச்சு எப்.பி வந்தப்போ கார்த்திக் என்னை tag பண்ணின நோட்டிபிகேசன் வந்துச்சு. அங்க போய் பாத்தா ஷேர்க்கான் அண்ணாவோட "உறங்கும் முன் ஒரு வார்த்தை" இருந்துச்சு. அதுல என்ன எழுதி இருந்துதுனா

"மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒரு நாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதி விலக்கு அல்ல" ன்னு எழுதியிருந்துச்சு.

அப்புறம் கார்த்தி "விதைத்தது அன்பென்றாலும் விளைவது கண்ணீர் துளிகளே அனேக இடங்களில்" ன்னு சொல்லியிருந்தார்.

ஆமா, இதனாலயே நேசிப்புங்குற வார்த்தைய நான் எப்பவும் கொஞ்சம் தள்ளியே வச்சிருப்பேன். நான் மட்டுமில்ல, வீட்ல எல்லாருமே அன்பை அள்ளி கொட்ட கூடியவங்கதான்னாலும் எல்லாருமே செண்டிமென்டல் இடியட்ஸ்.... எல்லாருமே அன்பை கொஞ்சம் தள்ளியே வச்சிருக்கோம்.

சக்திய என் கிட்ட கொண்டு வந்து குடுத்த தம்பி, அப்புறம் ரெண்டு மூணு நாள் எட்ட நின்னே பாத்துட்டு போவான். அதுக்கப்புறம் நேத்து தான் சக்திய உயிரில்லாம பாத்தான். சக்திய கைல வாங்கி அவன தடவி குடுத்தப்போ சக்தியோட உண்மையான ஸ்பரிசம் அவனுக்கு கிடச்சியிருக்காது. ஒரு விறைத்து போன உடல் தான் அவன் விரல்களுக்கு தட்டுபட்டுருக்கும். என் தம்பியோட ஏக்கம் எனக்கு புரியாம இல்ல. அன்பை வெளில காட்டாமலே அடக்கி வச்சி பழகிட்டவன் அவன். வீட்ல உள்ளவங்க கிட்ட தான் அப்படி. மத்தப்படி சொந்தக்காரங்க கூட அவன் சந்தோசமா பேசி சிரிக்கும் போது எட்ட நின்னே நான் சந்தோஷ கண்ணீர் விட்டுருக்கேன். வாட்ஸ் அப் வந்த பிறகு தான் நாள் முழுக்க அவனோட மெச்செஜ் ராத்திரி பகல்ன்னு தூங்க விடாம சத்தம் போட்டுட்டே இருக்கும். அவன் சந்தோசம் கெட்டுற கூடாதுன்னே நான் அந்த கும்பலோட ஐக்கியமாகுறது இல்ல. நேத்து சக்தி செத்து போயிட்டான்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருந்தான். அவன் வாட்ஸ் அப் ப்ரோபைல் பிக்சர்ல என்னிக்கோ ஒரு நாள் நான் ஷேர் பண்ணின சக்தியோட ஒரே ஒரு போட்டோ இருந்துச்சு.

அப்பா, எப்பவும் எட்ட நின்னே பழக்கப்பட்டவங்க. என்கிட்ட சக்தி இருக்கான்னு மட்டும் தான் தெரியும். அவன பாத்ததே இல்ல. அப்பப்போ அவனுக்கு வாழப்பழம், ஆப்பிள், கொய்யா, சப்போர்ட்டான்னு விதம் விதமா தந்துட்டு போவாங்க. சமைக்கும் போது தேங்காய் சில் எடுத்துட்டு வந்து ரூம்ல வச்சுட்டு போவாங்க. மறக்காம காலைலயும் சாயங்காலமும் அவனுக்கு பசும்பால காய்ச்சி ஆற வச்சுட்டு போவாங்க. அவன் உருவம் எப்படி இருக்கும்ன்னே தெரியாத அவன் மேல அப்பாவுக்கு இருந்த அன்பு எப்படி பட்டதுன்னா, அவனுக்கு உடம்பு சரியில்ல, ஹாஸ்பிடல் கொண்டு போகணும்ன்னு சொன்ன உடனே முக்கியமான வேலையா கிளம்பி போயிட்டு இருந்தவர் அப்படியே திரும்பி வந்து கையோட டாக்டரயும் கூட்டிட்டு வந்துட்டார்.

அவ்வளவு துடிச்சுட்டு இருந்தாலும் சத்தம் கேட்டு சக்தி பாய்ஞ்சு போய் ஒளிய ட்ரை பண்ணினான். அவன கைக்குள்ள வச்சு கெட்டியா பொதிஞ்சு வச்சு தான் ஹாலுக்கு கொண்டு போய் டாக்டர் கிட்ட காட்டினேன். அப்போ தான் அப்பா முதல் முதலா சக்திய பாத்தாங்க. ஏனோ உடனே முகத்த திருப்பிட்டு வேலை இருக்குற மாதிரி வெளில போய்ட்டாங்க. சக்தி நிரந்தரமா தூங்கின உடனே அப்பா கிட்ட தான் கொண்டு போய் குடுத்தேன். அப்போ தான் அப்பா கண்ணுல அந்த ரெண்டு துளி கண்ணீரை பாத்தேன்.

அப்புறம், நீங்க. உங்களுக்கு அவன தெரியாதுன்னு என்னால சொல்ல முடியாது. காரணம், அவன உணர்வு பூர்வமா எல்லாருமே அறிஞ்சு வச்சிருக்கீங்க. நேத்து அவனுக்காக பிரார்த்தனை பண்ண இத்தன பேர் இருந்தீங்களே... நான் எப்படி இதுக்கெல்லாம்............. லவ் யூ ஆல்...

என்ன செய்றதுன்னே தெரியாம பதட்டத்துல இருந்தப்போ என்னை கூப்பிட்டு என் கூடவே பதறி துடிச்ச பானு, பிறந்தநாள் அதுவுமா கலங்கின கவி, உன் குரலை கேக்க சக்தியில்லன்னு சொன்ன பிரகாஷ் அண்ணா, ஆறுதல் சொன்ன பிரபா அண்ணா, சக்தி போட்டோ போட்டா ஏன் என்னை tag பண்ண மாட்றீங்கன்னு சண்டைக்கு வர்ற மணிகண்டன், சக்தின்னு சொன்ன உடனே அணில் போட்டோவா போடுற சாதிக் அலி அண்ணா, சக்திக்கு பெயர் வைக்க தூண்டின பிரகாஷ் குமார் தமிழ்வாசி அண்ணா, அப்புறம் சந்திரசேகர் அண்ணா, தமிழ் அருவி அக்கா, ஆச்சி, மீரா இன்னும் எவ்வளவோ பேர்... ம்ம்ம்ம் மச்சி மச்சின்னு எப்பவும் சக்திய சிலாகிக்குற யுவ கார்த்திக்.... உங்க எல்லாருக்கும் நான் என்ன பண்ண போறேன்... என் அன்பை குடுக்குறேன், தூரத்துல இருந்தே....

கார்த்திக், எனக்கு தெரியும். சக்தி பத்தி நீங்க கிண்டல் பண்ணினாலும், நீங்க அறிஞ்சோ அறியாமலோ அவன் மேல உள்ள அன்ப அப்பப்போ கொட்டியிருக்கீங்க. உங்களுக்கு வேற என்ன சொல்லன்னு தெரியல, ஆனா என்ன சொல்லுவேன்னு உங்களுக்கு தெரியும்... லவ் யூ கார்த்திக்
.....................................................................

என் சக்தி எவ்வளவு அழகு பாருங்களேன்... 





Friday 21 February 2014

குட் மார்னிங்.... (1)


ரொம்ப நாள் ஆகிடுச்சுல கதை சொல்லி....

அதனால கொஞ்சம் டெரரான ஏரியாவுக்குள்ள தைரியமா நுழைவோமா?

அப்படியே சைலென்ட்டா வாங்க, மூச்சு விடுற சத்தம் கூட வெளில கேக்க கூடாது...

ஒரே கும்மிருட்டா இருக்கா, அப்படியே எல்லாரும் ஒரே நேரத்துல வலது கால் எடுத்து வைங்க... ம்ம்ம்ம் இப்போ லெப்ட்டு...

முன்னாடி நிக்குறவங்க கொஞ்சம் கைய முன்னாடி நீட்டுங்க... எதோ நீளமா வழவழன்னு தட்டுப் படுதுல அதான் மலப்பாம்பு.

ஹே.... நோ... இப்படி பேய் தனமா வீல்ன்னு கத்தக் கூடாது, அப்புறம் மலப்பாம்ப கழுத்துல விட்ருவேன்... அப்படியே சைலென்ட்டா வரணும், புரியுதா?

அவ்வ்வ்வ் அதென்ன தந்தியடிக்குற சத்தம் கேக்குது, பயந்தீங்கன்னா உள்ளுக்குள்ளயே பயந்துக்கணும். இப்படியா பயத்துல பல்ல தந்தியடிக்க விடுறது...(எனக்கே சாவு பயத்த காட்ட ட்ரை பண்றாங்க பரமா...)

கொஞ்சம் தள்ளி நில்லுங்கப்பா, எல்லாரும் பயத்துல புளி மூட்ட மாதிரி அப்பிகிட்டு....

சரி, சரி, அடுத்த ஸ்டெப் எடுத்து வைங்க, ஹலோ முன்ன நிக்குறது யாரு? மலப்பாம்ப தொட்டு தடவினது போதும், கொஞ்சம் முன்னாடி நகருங்க...

என்னது காலு நகர மாட்டேங்குதா, கிளம்புங்கங்க.... இல்லனா மலப்பாம்பு கடிச்சுடும்...

போச்சா, போச்சா, கடிச்சிடுச்சா.... அதுவும் பெருவிரல் பாத்து நறுக்குன்னு கடிச்சிடுச்சா? நான் தான் அப்பவே சொன்னேன்ல....

ஐய்யய்யோ, ஏன் எல்லாரும் ஓடுறீங்க, திரும்பி வாங்க, இன்னும் நிறைய இருக்கு பாக்க....

ஹஹா... அந்த இடத்த விட்டு வெளில வந்தும், ஏன் உங்க மூஞ்சி எல்லாம் இப்படி வேர்த்து கொட்டுது? பயந்துட்டீங்களாக்கும்?

அது சரி, நீ ஏன் கடைசி வர பயப்படவே இல்லன்னு கேக்குறீங்களா?

ஹிஹி, நீங்க சுத்தி பாத்ததே என்னோட ரூம் தான். அது மலப்பாம்பு இல்ல, புடலங்காய அங்க கட்டி தொங்க விட்டதே நான் தான்...

நறுக்குன்னு கடிச்சி வச்சது நம்ம சக்தி செல்லம்....

ஹிஹி.... ஏமாந்துட்டீங்களாக்கும்.... சரி சரி, போங்க போங்க ஒரு குட் மார்னிங்க வாங்கிட்டு வேலைய போய் பாருங்க...

குட் மார்னிங்....
.....................................................................

ஹஹா என்ன இதுன்னு குழம்பிட்டீங்களாக்கும்....

எப்பவுமே பேஸ் புக்ல கத சொல்லியே குட் மார்னிங் சொல்ல பழகிட்டேனா, அதான் உங்களையும் இம்சை பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.

நான் அப்பப்போ எப்.பியில போடுற ஸ்டேடஸ் நீங்களும் படிக்கணும்ல... அதான் இப்போ ரெண்டே ரெண்டு சாம்பிள் படிச்சுட்டு போங்க... மீதி, இன்னொரு நாள் பார்ட் பார்ட்டா வரும்....
................................................................................

இப்போ கொஞ்சம் குளுகுளுன்னு ஒரு கதை பாருங்க.... 
.........................................................................

இது ஒரு குளிர் காலை நேரம். போர்வைக்குள்ள தூங்கினாலும் குளிர் வெடவெடக்க வைக்குது. இந்த குளிர்ல ஒரு வாக்கிங் போனா எப்படி இருக்கும்? வாங்களேன் போய் பாப்போம்....

எதுக்கும் ஒரு போர்வை எடுத்துக்கலாம். குளிருக்கு இதமா இருக்கும். அப்படியே போய் வாசல் கதவை திறப்போம்.

அவ்வ்வ்வ் வெளில மழை பெய்யுது பாருங்களேன். அதனால ஓடிப் போய் கைல குடையும் எடுத்துப்போம்.

ஓகே, இப்போ மெதுவா தெருவுல இறங்கி நடப்போம்.

பாருங்களேன், இந்த மழைல ஒரு சேவல் நனஞ்சிகிட்டே நடந்து போகுது. செகப்பு கலரு சேவல்ன்னு சொன்னாலும், அது செக்கசெவேல்ன்னு இருக்காது. கருப்பும், செவலையும் கலந்த ஒரு நிறம். மழைல நனைஞ்சு இருந்தாலும் அதோட வால் பளபளப்பு குறையவே இல்ல.

இது கிராமமில்லையா, பெரும்பாலும் நம்மள கடந்து போறவங்க தினமும் நிலத்துல உழைக்குற மக்களா தான் இருக்காங்க. குடை யூஸ் பண்றதெல்லாம் ரொம்ப கம்மி. இவங்க மழை கிட்ட இருந்து எப்படி தப்பிக்குறாங்க பாத்தீங்களா? சொசைட்டில கிடச்ச யூஸ் பண்ணின பிளாஸ்டிக் உர சாக்குகள ஒரு பக்கமா கிழிச்சி விட்டு அத எடுத்து போர்த்தியிருக்காங்க.

இப்போ எனக்கு இந்த குடைய பாத்தா ஏனோ அந்நியமா தோணுது. சரி, அவங்க அப்படியே வேலைக்கு போகட்டும். நாம, இந்தா திண்ணையில ஒரு பாட்டி கால் நீட்டி உக்காந்துட்டு வெத்தலை இடிச்சுட்டு இருக்காங்க பாருங்க, குடைய மடக்கி வச்சுக்கிட்டு அவங்க கிட்ட போவோம்...

இனி பாட்டி வாய தொறந்தா ஊர்ல உள்ள பல கதைகள் சொல்லுவாங்க. அதனால நான் சைலென்ட் ஆகிக்குறேன். அதுக்குமுன்னாடி எல்லாருக்கும் குட் மார்னிங் சொல்லணும்ல...

குட் மார்னிங்........
......................................................................................

ஹஹா இனி குட்டியா ஒண்ணு
....................................................................

மனுசங்கள பொருத்தவரைக்கும் இது ஒரு இரண்டாம் உலகம். இந்த உலகத்து அன்போ, சந்தோசங்களோ, சுக துக்கங்களோ மனுசங்களுக்கு (பெரும்பாலும்) புரியவே புரியாது. ஆனா, அங்க உள்ள ஜீவன்களோட உணர்வுகளா நாமளும் மாறிப் பாத்தா அந்த அற்புத உலகம் நம்மோட கண்ணுக்குள்ள தெரியும்...

ஆமாங்க, இந்த விலங்குகளோட உலகம் ரொம்ப அழகானது. அவங்களுக்கும் உணர்வுகள் உண்டு. அவங்களுக்கும் பிடிக்காத விசயங்கள கண்டா கோபம் வரும், சுயம் சீண்டப்படும் போது ரவுத்திரம் வரும், மனசுக்கு பிடிச்சவங்கள கண்டா காதல் வரும்.. அதுவே ஒருத்தங்க பிரிஞ்சி போய்ட்டா சோகமும் வரும்....

கண்ணால பேசி, செய்கையால அன்பை உணர்த்துற அந்த ஜீவன்கள நாமளும் நேசிப்போம். நேசிச்சா மட்டும் பத்தாது, புரிஞ்சுப்போம்...

குட் மார்னிங்...
..........................................................................
இப்போதைக்கு இது போதும், நீங்க பொறுமையா படிச்சுட்டு கமன்ட் போட்டு வைங்க.... குட் மார்னிங் கூட சொல்லலாம்....
வர்ட்டா...... (தொடரும்)



Monday 17 February 2014

தேவதை பிறந்தாள்





காத்திருப்புகள் யுகமாய் கரைய
சந்தோஷ திகிலொன்று லப்டப்படிக்க
சிறகில்லாமல் கால்கள் பறக்க
காக்க வைத்த தேவதையொருத்தி
இதோ பூமிதனில் ஜனித்துவிட்டாள்

உற்சாகம் துள்ளி குதிக்க
மனதெங்கும் சாரலடிக்க
மாமனின் ஆசியோடு
முதல் சுவாசம் உள்ளிழுத்துக் கொண்டாள்

கீதமிசைக்க குயில்கள் வந்துசேர
நடனமிட மயில்கள் தோகை விரிக்க
வருணனின் ஆசியோடு
தன் சங்கீதத்தை துவக்கி விட்டாள்

வானத்து விண்மீன்களே
வந்தெங்கள் தேவதையை பாருங்கள்
வனத்தின் மான்குட்டிகளே
அவளோடு விளையாட வாருங்கள்

சின்ன சின்ன பாதம் கொண்டு
எட்டி உதைக்கும் அழகினை பருகுங்கள்
ஆதரவாய் பற்றிப் படரும்
அந்த ஐவிரல்களில் இதழ்கள் பதியுங்கள்

புன்னகை என்றும் அவளின்
உதட்டோடு உறையட்டும்
சந்தோசம் என்றும் அவளின்
மனதோடு நிலைக்கட்டும்

இவள் இனி
பரபர உலகந்தனில் அழகியலை ரசிக்கட்டும்
சுயம் சார்ந்து தலைநிர்ந்து நிற்கட்டும்
வேண்டும் கலைகள் கற்று
மனம் நிறைந்து வாழட்டும்

வாருங்கள் வாருங்கள்
மலர்ச்சியோடு உற்சாகம் ததும்ப
வாழையடி வாழையாக
இவள் குலம் தழைக்க
வாழ்த்துவோம் வாருங்கள்...

.

Friday 14 February 2014

காதல்



- காதல்

இந்த ஒரு வார்த்தைக்குள்ள ஏகப்பட்ட அர்த்தங்கள் ஒளிஞ்சி கிடக்கு.

அன்பு, பாசம், நேசம் எல்லாமே இதுக்குள்ள தான் அடக்கம்.

காதல்ன உடனே ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தான் வரணும்ன்னு இல்ல, முதல்ல நாம நம்மள காதலிக்கணும். நம்ம சுற்றி இருக்குறவங்கள காதலிக்கணும். நம்மள நேசிக்குரவங்கள காதலிக்கணும். இயற்கைய காதலிக்கணும். நேர்மைய காதலிக்கணும்.

சரி, அதெல்லாம் இருக்கட்டும். இன்னிக்கி வேலன்டைன்ஸ் டே...அதாங்க, காதலர் தினம். இது மனசளவுல ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுகிட்டு ஒருத்தர ஒருத்தர் நேசிக்குற, ஆணுக்கும் பெண்ணுக்குமான தினம்.

இந்த நாள்ல அவசர அவசரமா காதலிக்காதீங்க, அப்படினா இந்த நாளுக்கு ஒரு பயனே இல்லாம போயிடும். முதல்ல காதல்ன்னா என்னான்னு புரிஞ்சுக்கோங்க...

ஒரு ரோஜா குடுத்து ப்ரொபோஸ் பண்ணி, நாலு நாள் பைக்ல சர் சர்ர்னு சுத்திட்டு, அஞ்சாவது நாள் பிரேக் அப் சொல்லிக்குறது காதலில்ல....

ஏகப்பட்ட கட்டுகதைகள் சொல்லி எதோ ஒரு வகைல அவங்கள வலைல விழ வச்சி, சாதிச்சிட்டோம்ன்னு இறுமாறுறதும் காதல் இல்ல...

பிரச்சனைன்னு வந்த உடனே ஒருத்தர் மேல ஒருத்தர் பழி போட்டுக்குறதும், எதிரிய விட வெறுக்குறதும் காதல் இல்ல...

எந்த கஷ்டம் வந்தாலும், ஒருத்தர ஒருத்தர் விட்டுக் குடுக்காம, அவங்கள மட்டும் நேசிக்காம, அவங்களோட ஆசைகள், விருப்பங்கள், லெட்சியங்கள் எல்லாத்தையும் நேசிச்சுகிட்டு, தடுமாறுற நேரத்துல நானிருக்கேன்னு ஆதரவு குடுத்து அரவணைச்சுகிட்டு, நெற்றியில முத்தம் குடுக்குற அத்தனை காதலர்களுக்கும் என்னோட காதலர் தின வாழ்த்துகள்...