Friday, 28 February 2014

எனக்கென ஒரு நண்பனிருந்தான்...



எனக்கென ஒரு நண்பனிருந்தான்...

எப்படி அவனெனக்கு அறிமுகமானான்
என்பது நினைவிலில்லை.
ஆனால் அது ஒரு மழைக்கால காட்சியாய் இருக்கிறது.
வெயிலென்பது கொஞ்சம் கொஞ்சமாய்
களவு போய் கொண்டிருந்த காலமது.

களத்துமேட்டின் மேல் காளைகள் ஓய்வெடுக்க,
வயல்வரப்புகள் நீர் நிறைத்து கொண்டிருந்தன...
சலசலக்கும் ஓடைகளுக்கிடையில்
கப்பல் ஓட்டி களைத்திருந்த நேரத்தில்
எங்கிருந்தோ வந்தவன் சிநேகமாய் புன்னகைத்தான்.

வசீகரிக்கும் கண்கள் காந்தமாய் கவர்ந்திழுக்க,
அவன் வகிடெடுக்கா உச்சந்தலை
கொஞ்சமாய் கலைத்து விட சீண்டியது.
சிற்சில சம்பாசனைகளுக்குள் 
அவனென்னை கவர்ந்தே விட்டான்...

கரம் பற்றிக்கொள்ளென விரல் பற்றி
ஒரு பறவையாய் சிறகு விரிக்க வைத்தான்...
மரக்கிளையொன்றில் இறக்கி விட்டு
தனந்தனியாய் பறந்திட செய்தான்...

சிறு கல் கண்டு மிரண்டோடிய என்னை
மலைகள் அழகென உள்ளங்கால் பதித்திட செய்தான்...
பஞ்சு மிட்டாய் இதுவென
மேகம் நடுவில் முகம் புதைத்து சிலிர்க்க வைத்தான்...

தாய் விட்டு பிரிந்த
அணில் பிள்ளைகள் கண்டெடுத்து
தாயாய் என்னை கொஞ்சம் மாற்றிப் பார்த்தான்...
தவழத் தடுமாறும் நாய் குட்டிகள் கொஞ்ச வைத்து
சேயாய் நானும் மாறிடச் செய்தான்..

வயல் வெளிக்குள் நாற்று நட்டோம்...
புல் வெளிக்குள் பூ பறித்தோம்...
மழை வந்து விட்டுச் சென்ற
தூறல்களை வழியெங்கும் சிதறடித்தோம்...

பேசும் கதைகளுக்கு குறைவில்லை
களைப்புகள் என்றும் நெருங்குவதில்லை...
தோளில் நிம்மதியொன்றை புதைத்து வைத்து
நான் இவன் நிழலென நகலெடுத்தேன்...

நண்பன் இவனென இறுமார்ந்த வேளையில் தான்
ஓர்நாள், மொட்டை மாடியில், நிலாவொளியில்
தென்னங்கீற்றுகளின் சாட்சியாக
அவன் காணாமல் போயிருந்தான்....

இன்றிவன் என் துணைவனாகி, என் மகளுக்கு
அம்பாரி சுமக்கும் யானையாகி விட்டிருந்தான்...

4 comments:

  1. ரசனையான வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கடைசி இரண்டுவரிகள் நிஜமாகிவிட்டதால் சரி, இல்லையென்றால்? (2) அழகான கவிதை வரிகள். படிக்கிற இளைஞிகள் உணர்ச்சிவசப்பட்டுப் போகும் அபாயம் இருக்கிறது.

    ReplyDelete
  3. இது போன்ற வரிகள், ஒன்று - வாழ்ந்து விட்ட நிறைவில் வரும், அல்லது - வாழ நினைக்கும் ஏக்கத்தில் வரும்.
    வாழ்ந்து விட்ட நிறைவில் வந்ததாய் எண்ணி , வாழ நினைக்கும் ஏக்கத்துடன் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  4. கடைசி இரண்டு வரிகள் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு காயத்ரி! அதுதான் உன்னோட மொத்தக் கவிதையையும் ரொம்ப அழகாக்கிடுச்சும்மா! ரொம்பவே ரசித்தேன்!

    ReplyDelete