Tuesday 28 April 2015

ஆண் பெண் உறவு



கொஞ்ச நாளாவே இங்க நடக்குற விசயங்கள பாத்தா ஒண்ணும் சொல்றதுக்கில்ல. ஆளாளுக்கு ஒரு பொண்ணுனா இப்படி தான் இருக்கணும், அப்படி தான் இருக்கணும்னு அறிவுரை சொல்றாங்க. இவங்க கிட்ட எல்லாம் நாம வாக்குவாதம் பண்ணிக்கிட்டு இருந்தா தான் புடிச்ச முயலுக்கு மூணே கால்னு தலைகீழா நிப்பாங்க...

ஆனாலும் ஆண் பெண் உறவு, கற்பு சம்மந்தமான விஷயங்கள் பத்தி ஏனோ சொல்லணும்னு தோணுது.

இத நான் எழுதணும்ன்னு நினைக்குறதுக்கு காரணம் என் அம்மா. ஸ்கூல் படிக்குறப்ப ரொம்ப சுதந்திரமா இருந்தேன். பொதுவா இயற்கைய ரசிக்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும். கூடவே தனிமையும் பிடிக்கும். ஆனா அதுக்கு அப்புறம் ஏற்பட்ட உடல்நிலை கோளாறினால என்னால பகல்ல வெயில்ல வெளில போக முடியாது. தல சுத்தும். அதுக்காகவே இருட்ட ஆரம்பிச்சுட்டுனா காரை எடுத்துட்டு எங்கயாவது ஆத்தங்கரை, இல்ல குளத்தங்கரை ஓரமா நிறுத்திட்டு இருட்டுலயும் அத எல்லாம் ரசிச்சுட்டு இருப்பேன். ஏதாவது மரக்கிளை, இல்ல வரப்பு மேட்டுல உக்காந்துட்டு இருப்பேன்.



என்னோட சொந்தக்காரங்க எல்லாம் இதுக்காக நிறைய திட்டுவாங்க. அம்மா கிட்ட போய் ஒரு பொம்பள புள்ளைய இப்படி அந்தி நேரத்துல இப்படி தனியா வெளில விடுறியே, காலம் கெட்டுக் கிடக்கு. ஏதாவது ஒண்ணு ஆகிட்டா யார் பதில் சொல்லுவான்னு கேட்டா அம்மா அவங்க கிட்ட வெறும் புன்னகைய மட்டும் தான் பதிலா தருவா.

இதுவே ஏன்மா, அப்படி நிஜமாவே எனக்கு ஏதாவது ஆகி, என்னை எவனாவது ரேப் பண்ணி கொன்னுட்டா என்ன பண்ணுவன்னு கேப்பேன்.

“என் பொண்ணு சுதந்திரமா வளர்ந்தவ. அவளுக்குன்னு ஒரு மனசு இருக்கு. அவ எப்படி இருக்கணும்ன்னு அவளுக்கு தெரியும். அவளுக்கு தனிமை பிடிச்சிருக்கு. பகல்ல போக முடியாததால ராத்திரி போறா. அப்படி போறதால அவளுக்கு ஏதாவது ஆச்சுனா சம்பவம் நடக்குறதுக்கு அட்லீஸ்ட் ஒரு பத்து நிமிசத்துக்கு முன்னாடியாவது அவ சந்தோசமா இருந்துருப்பா. எனக்கு அவளோட அந்த சந்தோசம் தான் முக்கியம். இன்னொன்னு, அவளுக்கு அப்படி ஆகிடுச்சுன்னு அவள மூலைல உக்காந்து அழுதுட்டு இருக்க விட மாட்டேன். நல்ல சுடு தண்ணியில உடல்வலி போக குளிச்சுட்டு போய் வேலைய பாருன்னு அனுப்பி வச்சிடுவேன்னு சொல்லுவா. சரி, கொலை நடந்துடுச்சுனான்னு திருப்பிக் கேட்டா சாவு எப்ப வரும் எப்ப வரும்னு எதிர்பாத்துக்கிட்டு இருந்தவளுக்கு இப்ப சாவு வந்துடுச்சுன்னு நினச்சுட்டு போறேன்னு சொல்லுவா. அப்படி நடந்துடுமோ இப்படி நடந்துடுமோன்னு பயந்துகிட்டே வீட்டுக்குள்ள உயிரோட பூட்டி வச்சு தினம் தினம் கொல்லுறதுக்கு இருக்குற வரைக்கும் அவ சுதந்திரமா இருந்துட்டு போகட்டுமேம்பா...

ரேப் பண்ணினா அதெல்லாம் அசிங்கம்மா. அதெப்படி இன்னொருத்தன் நம்ம உடம்ப தொடுறத ஏத்துக்குறது? அதுக்கு செத்துப் போய்டலாம்மான்னு சொன்னா, நீ உன் பிரெண்ட்ஸ் கிட்ட எப்படி பழகுற? அவங்க கூட பைக்ல போற, மழைல கை புடிச்சுட்டு நனையுற, அவங்கள பாராட்டனும்னா தோள தட்டி சியேர்ஸ் சொல்ற, அதிகமான சந்தொசத்துலயும் உற்சாகத்துலயும் ஹக் பண்ணிக்குற, குரூப் ஸ்டடி நேரத்துல உன்ன மறந்து பசங்க தோள்ல சாய்ஞ்சு தூங்குற, அப்ப அதெல்லாம் அசிங்கம் இல்லையான்னு கேட்டா பக்குன்னு பதறிடும். ம்மா, அதெல்லாம் பிரெண்ட்ஸ்மா. அவன் ஒரு ஆண்ங்குற நெனப்பே எனக்கு வராதேன்னு நான் சொல்லுவேன். அதே மாதிரி ஒரு மிருகம், அதுகிட்ட இருந்து நீ தப்பிக்க போராடுற, முடியல, அதுக்காக அதையே நினைச்சுகிட்டா இருப்ப, மருந்து போட்டுட்டு காயம் சரியானதும் உன் வேலைய பாத்துகிட்டு தான போவன்னு கேட்டா ஆமான்னு சொல்றத தவிர வேற என்ன சொல்ல முடியும்?

ஆச்சர்யமா அம்மாவ நிறைய தடவ வச்சக் கண்ணு எடுக்காம பாத்துட்டே இருந்துருக்கேன். அவ வாய் வார்த்த இப்படி சொன்னாலும் என்னை கண்காணிச்சுகிட்டும், எனக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்னு வேண்டிகிட்டே தான் இருப்பா. ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கப் போகுதுன்னு தோணுற பட்சத்துல பதட்டமே இல்லாம எப்படி தப்பிக்க முயற்சி பண்ணணும்னு சொல்லிக் குடுப்பா. அதனால தானோ என்னவோ நான் வெளில போன நாட்கள்ல எல்லாம் ஒரு சின்ன சம்பவம் கூட நடந்தது இல்ல.

அம்மாவும் நானும் நிறைய விஷயங்கள் விவாதிப்போம். எனக்கு கல்யாணத்து மேல எல்லாம் நம்பிக்கை இல்ல அம்மா, ஆனா ஒரு பொம்பள புள்ளைய டெஸ்ட் ட்யூப் மூலமா பெத்துக்கணும்ன்னு ஆசையா இருக்குன்னு வெளிப்படையா அம்மா கிட்ட பேசுவேன். ஒரு வேளை நான் ஏதாவது தப்பு பண்ணிட்டு வயித்துல குழந்தையோட வந்தா நீ என்ன பண்ணுவன்னு கேள்வி கேட்ருக்கேன். அம்மாவுக்கு அபார்சன் பிடிக்காது. அதென்னமோ அந்த வார்த்தைய கேட்டாலே அம்மா அவ்வளவு நடுங்குவா. இதனால தெரிஞ்சே தான் இந்த கேள்விய நான் கேப்பேன்.

நீ பண்ணினது தப்பு. ஆனா அதுக்காக உன் வயித்துல வளர்ற குழந்தைய கலைக்க சொல்ல மாட்டேன். எங்கயாவது உன்னை கூட்டிட்டு போய் அந்த குழந்தைய பெத்துடுத்துகிட்டு அத வீட்டுக்கே தூக்கிட்டு வந்துடுவேன். உன்னையும் அப்படியே விட்டுற முடியாது. தப்பு செய்தா தண்டனை அனுபவின்னு சொல்லவும் முடியாது. அடுத்து உன்னோட நல்லது என்னன்னு யோசிப்பேன். உனக்கு என்ன இஷ்டமோ அது மாதிரி நீ இருந்துக்கோன்னு சொல்லுவேன்னு சொல்லுவா.

அம்மாவோட பேச்சுக்கள் எப்பவுமே என்னை எந்த சூழ்நிலையிலும் தயார் படுத்திக்குற மாதிரி தான் இருக்கும். எல்லாரும் ரொம்ப திமிர் பிடிச்சவன்னு அவள சொல்லுவாங்க. ஆனா என் அம்மா அத்தன அன்பானவ. கற்புங்கறது மனசுல இருக்கணும். ஒருத்தன நேசிச்சா அவன தவிர வேற யாரையும் மனசார கூட தொட நினைக்கக் கூடாதுன்னு சொல்லுவா. அதே நேரம் ஏமாற்றப் படுறோம்னு தெரிஞ்சா அவன தூக்கியெறியவும் தயங்கவே தயங்கக் கூடாதுன்னு சொல்லுவா.

அம்மாவ பொருத்தவரைக்கும் நம்மோட நிம்மதிய யார் பறிக்க நினைக்குறாங்களோ அவங்கள ஜெய்க்கவே விடக் கூடாது. அவங்களே நிம்மதியா இருக்குறப்ப, நாம இன்னும் அதிக நிம்மதியோட இருக்கணும்ன்னு சொல்லுவா.

இதே அம்மா குடும்பத்துக்காக நிறைய அட்ஜஸ்ட் பண்ணி போயிருக்கா. நிறைய விட்டுக் கொடுத்தல்கள். அத்தனை அன்பு. ஆனா ஒரு பொண்ணுனா இப்படி தான் இருக்கணும்ன்னு அவளுக்குள்ள நிறைய தீப்பொறி உண்டு. அத எல்லாம் எனக்கு ஊட்டி வளர்த்துருக்கா.

அடுத்து இந்த ஆண் பெண் உறவுங்குற தலைப்புக்கு வர்றேன். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இருக்குற அன்னியோன்யம் நான் பாத்து பாத்து வளர்ந்த ஒண்ணு. எல்லா ஆம்பளைங்க மாதிரி என் அப்பா மூஞ்சிய எப்பவும் வெறப்பா தான் வச்சிருப்பார். ஆனா அவரையும் அப்பப்ப சிரிக்க வைக்குற திறமைசாலி என் அம்மா.

அப்பா எப்பவும் வெளிலயே தான் சுத்திட்டு இருப்பார். ஆனா அம்மாவோட பீரியட்ஸ் டைம்ல மட்டும் அப்பா அம்மாவ விட்டு நகர மாட்டார். அவளுக்கு நாப்கின் எடுத்து குடுக்குறதுல இருந்து, வலில துடிக்குறப்ப கைய புடிச்சுட்டு இருப்பார். அவ வயித்துல வெந்நீர் ஒத்தடம் குடுப்பார். நானும் தம்பியும் இத எல்லாம் எட்ட நின்னு பாத்துகிட்டே இருப்போம். அப்பப்ப தம்பியையும் வெந்நீர் எடுத்து தரவும் நாப்கின் எடுத்துக் குடுக்கவும் துணைக்கு கூப்ட்டுப்பார்.

நான் வயசுக்கு வந்த பிறகு எனக்கு நாப்கின் வாங்கிட்டு வந்ததெல்லாம் அப்பா, தம்பி, அப்புறம் என் பிரெண்ட்ஸ், அதுவும் பசங்க தான். எந்த விதமான தயக்கமும் இல்லாம நாப்கின் வாங்கி கேக்குற துணிவு எனக்கு என் அம்மா கிட்டயிருந்து தான் வந்துச்சு. இது எல்லா பொண்ணுங்களுக்கும் நடக்குற இயற்கை நிகழ்வு. இத மறைச்சு வைக்கனும்னு எந்த அவசியமும் இல்லன்னு சொல்லுவா.

அதனால தானோ என்னவோ, கடுமையான ரெத்தப்போக்கும் வயித்து வலியும் எனக்கு இருந்தா, அப்பாவ தவிர யாரையும் நான் பக்கத்துல விட மாட்டேன். எனக்கு என் உடம்பை மத்தவங்க பாத்தா ஒரு மாதிரி இருக்கும். அது பொண்ணா இருந்தாலும் சரி. ஆனா அப்பா கிட்ட அந்த கூச்சம் வர்றதில்ல. எனக்கு அந்த நேரத்துல பணிவிடை செய்றது எல்லாம் அப்பா தான். பாட்டி இருக்காங்க, ஆனா அவங்களையும் நான் என் ரூமுக்குள்ள விட மாட்டேன். எனக்கு வெந்நீர் ஒத்தடம் குடுத்து, சில நேரம் கீழ சிதறி கிடக்குற ரத்தக் கட்டிய கூட வாரி பாத்ரூம்ல போடுவார் அப்பா. தம்பியும் என்னோட ரூம் எல்லாம் நல்லா கழுவித் தருவான். அதென்னவோ அவங்க கிட்ட எனக்கு வர்ற கம்போர்ட் வேற யார் கிட்டயும் வர்றதில்ல.

இத எல்லாம் நான் ஏன் சொல்றேன்னா, பொண்ணுங்க எல்லாரும் மனுஷ ஜென்மமே இல்ல, அவங்க அடிமைங்கன்னு நிறைய பேர் நினச்சுட்டு இருக்காங்க. பொண்ணுங்கள அடிமைப் படுத்துறது தான் தன்னோட ஆண்மைய நிரூபிக்குற வழின்னு திமிறிக்கிட்டு திரியுறாங்க. அவங்களுக்கு சொல்லணும்ல... என் வீட்டு ஆண்கள பாருங்கடான்னு...

ஒரு பொண்ணு ரெண்டு ஆண்கள காதலிச்சா அவ பேரு ப்ராஸ்ட்டிடுயூட்... அதுவே ஒரு பையன் பண்ணினா அவன் ப்ளே பாய்... காலை சுத்தின பாம்பு நான், என்னை பத்தி உனக்கு நல்லாவே தெரியும்னு மிரட்டுறான். அப்படினா அவன் கிட்ட மாட்டிகிட்டு அந்த பொண்ணு என்ன கஷ்டப்பட்டுருக்கணும்? எல்லாம் பேசித் தீர்த்து அடுத்த நாளே என் கூட படுத்தான்னு சொல்றான். அப்படினா எப்படி மிரட்டி அவள வர வச்சு அவள கட்டாயப் படுத்தியிருப்பான். இதோட நம்மள விட்டுவான்னு மிரண்டு கூட அந்த பொண்ணு போயிருக்கலாம். இந்த மாதிரி விஷயங்கள்ல பசங்க ஈடுபட்டா இன்னும் அவன் ஹீரோ தான். ஆனா சமூகத்துக்கும் வீட்டுக்கும் பயந்து இந்த கால சுத்தின பாம்பு சொல்றத எல்லாம் கேட்டு நடக்குற பொண்ணுங்க ப்ராஸ்ட்டிடுயூட்...

அடப் போங்கப்பா.... இவங்க எல்லாம் சொந்த வீட்டுக்குள்ள அவங்க வீட்டுப் பொண்ணுங்க கஷ்டப்பட்டாலும் வக்கிரமா தான் பேசுவாங்க.... மனசே இல்லாத ஜென்மங்க...

நிறைய எழுதிட்டேன்னு நினைக்குறேன். சில பேரு என்னடா இந்த பொண்ணு இத எல்லாம் எழுதுறாளேன்னு நினைக்கலாம். ஆனா இந்த மாதிரியான விசயங்கள ஆரோக்கியமா விவாதிக்காம அவள கொல்லணும் அவன வெட்டணும்ன்னு பேசுறவங்கள பாக்குறப்ப எல்லாம் ஆத்திரம் ஆத்திரமா வருது. ஒவ்வொருத்தரும் அடுத்தவங்கள குறை சொல்றதுக்கு முன்னாடி நம்ம மனசுல இருக்குற அழுக்கை நீக்கினா போதும். ஒழுக்கமும் கட்டுப்பாடும் தான்னால வரும்...


.

20 comments:

  1. Unmaiyai thelevaga eluthi irukega vaalthukal. aana unga aasai than venothama iruku. iruthalum elor kulum oru asai irukathan seiuthu.

    ReplyDelete
    Replies
    1. முதல்ல உங்க வாழ்த்துக்கு நன்றி. அப்புறம் என்னோட ஆசை நான் ஸ்கூல் பொண்ணா இருந்தப்ப தோணினது. பையோடெக்னாலஜி, நானோடெக்னாலஜி, டெஸ்ட் ட்யூப் பேபிங்குற வார்த்தை எல்லாம் கேட்டு மலைச்சு போயிருந்த நேரம். கல்யாணம் பண்ணாமலே இந்த முறைல குழந்தை பெத்துக்கலாம்னு தான் அந்த பருவத்துல தெரிஞ்சிகிட்ட விஷயம். அதனால அது மேல ஈர்ப்பு. வயசு ஆக ஆக அதெல்லாம் வெறும் பேன்டசி வார்த்தைகள்ன்னு புரிஞ்சு போச்சு. அப்புறமா அப்படி எல்லாம் நான் நினைச்சுப் பாத்ததே இல்ல....

      இந்த விசயத்த நான் ஏன் இங்க சொன்னேன்னா, அதெல்லாம் என்னன்னே தெரியாமலே அம்மா கிட்ட அத பத்தி எல்லாம் என்னால தைரியமா பேச முடிஞ்சுதுன்னு தான்

      Delete
  2. ஆண் பெண் உறவு குறித்த அற்புதமான பதிவு. பொதுவாகவே தன்னை சார்ந்திருக்கும் பெண்ணிடம் ஆண் நன்றாகவே நடந்து கொள்கிறான். பொது வெளியில்தான்.. அதிலும் சில ஆண்கள்தான் மோசமாக நடந்து கொள்கிறார்கள்.
    பெண்கள் பாய்ந்து நடுங்கும் அளவுக்கு ஆண்கள் மோசமானவர்கள் அல்ல என்றுதான் நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எல்லா ஆண்களும் மோசமானவங்கன்னு நான் சொல்லல. என் வீட்டிலும் சொந்தத்திலும் ஆண்கள் இருக்காங்க. அதுல நல்லவங்க கெட்டவங்க ரேசியோ பாத்தா நல்லவங்க தான் அதிகமா இருக்காங்க. அதே நேரம் ஆழ்மனம்னு ஒண்ணு இருக்கு, அதுல ஆண்கள் பெண்கள எப்பவுமே அவங்கள விட உயர்ந்த ஸ்தானத்துல வச்சுப் பாத்ததேயில்ல...

      எனக்கு ஒரு பிரெண்ட் இருந்தான். ரொம்ப நல்ல பையன். எங்க எல்லார் வீட்லயும் அவன நம்பி எங்கள தனியா எங்க வேணா அனுப்புவாங்க. அத்தனை நம்பிக்கைக்கு பாத்திரமானவன்.

      ஒரு தடவ எனக்கு ஒரு பிரச்சனை. ஒரு பொண்ணால. அவளால நான் தற்கொலை முயற்சி பண்ணி ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். அப்போ என்னைப் பாக்க வந்த அவன் சொன்ன அந்த வார்த்தை தான் என்னை தூக்கி வாரிப் போட்டுது... அவன் சொன்ன வார்த்தை இது தான் "உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குன அவள கதற கதற கற்பளிக்கணும் போல இருக்கு"ன்னு...

      எங்க இருந்து வந்துச்சு இந்த வன்மம்? அந்த வார்த்தைய கேட்டதுமே அவள நினச்சு பரிதாபமும் பதற்றமும் தான் வந்துச்சு எனக்கு... அந்த நிலைமைலயும் ஏண்டா உன் மனசுல இந்த வக்கிர புத்தின்னு கேட்டேன். அவனோ அவள எல்லாம் அப்படி தான் செய்யணும்னு மறுபடியும் சொல்றான்...

      பெண்கள் தப்பு செய்தா அதுக்கு அதிகபட்ச தண்டனை கற்பழிப்புன்னு பெரும்பாலான ஆண்கள் முடிவெடுத்துடுறாங்க... அதுக்காக அவங்க அத செய்றாங்கன்னு சொல்லல, மனசலவுலயாவது நினைக்குறாங்கன்னு தான் சொல்ல வர்றேன்

      Delete
    2. ***ஒரு தடவ எனக்கு ஒரு பிரச்சனை. ஒரு பொண்ணால. அவளால நான் தற்கொலை முயற்சி பண்ணி ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். ***

      Are you SERIOUS?!!

      How would that solve the problem?

      Delete
    3. எப்பவுமே நாம விளையாட்டு பிள்ளையாவே இருந்துட முடியாதே... அனுபவங்கள் தான் அறிவு முதிர்ச்சிய தரும். அப்படி தான் அவ எனக்கு பிரச்சனை குடுத்தா. அம்மாவோட அத்தனை ஆறுதலையும் அரவணைப்பையும் மீறி ஒரு அருவெறுப்பு. அவ பேசின வார்த்தைகளோட வீச்சம் தாங்க முடியாம அப்படி ஒரு முடிவு எடுத்தேன். தற்கொலை முயற்சினா அதிகமா பயப்பட வேணாம். நான் அப்போ ட்ரீட்மென்ட்ல இருந்தேன். அதுக்கு ஒத்துழைக்காம, மருந்து மாத்திரை, சாப்பாடு எதுவும் சாப்டாம, உடல்நிலை சீர்கெட ஆரம்பிச்சுது. கதைய பெருசா வளர்க்க வேணாம்னு தான் சுருக்கமா தற்கொலை முயற்சின்னு சொன்னேன்.

      பிரச்சனைய என் அம்மாவும் பிரெண்ட்ஸ்சும் தீர்த்து வச்சாங்க. சம்மந்தப் பட்ட பொண்ணே, அவள பத்தி எனக்கு நல்லா தெரியும், ஆனா அவள பழி வாங்க தான் அப்படி செய்தேன்னு அவளே வாக்குமூலம் குடுத்தா... இதை பத்தி விரிவா தேவைப்பட்டா தனிப் பதிவுல எழுதுறேன். இங்க வேணாம்...

      Delete
  3. ****ஒரு பொண்ணு ரெண்டு ஆண்கள காதலிச்சா அவ பேரு ப்ராஸ்ட்டிடுயூட்... அதுவே ஒரு பையன் பண்ணினா அவன் ப்ளே பாய்...***

    ஆண்களில் வேஷி என்கிற வார்த்தை இல்லாததால் ஸ்திரி லோலன் என்கிற இழிச்சொல்லும் உண்டு என்று நினைக்கிறேன். ரெண்டு பேருமே "ஒரே தரம்" தாங்க!

    ---------------------

    ***நிறைய எழுதிட்டேன்னு நினைக்குறேன். சில பேரு என்னடா இந்த பொண்ணு இத எல்லாம் எழுதுறாளேன்னு நினைக்கலாம். ***

    ஆம்பளைங்க எல்லாம் ரொம்ப பேசிட்டோம் இது பெண்கள் பேசும் தருணம். நெறையாப் பேங்கள், நாங்க கேக்கிறோம். நீங்க பேசினால்தான் எங்க மரமண்டைகளுக்குப் புரியும். I am serious here, not sarcastic! Please trust, me, GD!

    ReplyDelete
    Replies
    1. ஸ்த்ரி லோலன் ன்னு சொன்னாலும் அதையும் பெருமையா நினைக்குறவங்களும் இருக்காங்க. அவன யாரும் வெறுத்து ஒதுக்கி வைக்குறதில்ல... அவனுக்கு யாரும் பொண்ணு குடுக்க மாட்டேன்னு சொல்றதும் இல்ல... ஒரு அப்பாவி பொண்ணு அவன் கைல தாராளமா பொண்டாட்டிங்குற பேர்ல மாட்டிக்குறா...

      ஆனா, அதுவே ஒரு பொண்ணோட நிலைமை? அவளால வீட்டை விட்டு நிம்மதியா வெளில வர முடியுமா?

      அந்த பொண்ணு மோசம்னே வச்சுப்போம், அவ தப்பு செய்தவ தான், ஆனா திருந்திட்டா. இனிமேல நல்லபடியா வாழணும்னு நினைக்குறா... அவள வாழ விடுமா இந்த சமூகம்? அந்தா போறா _________, இதோ இவ தான் அந்த ________ன்னு தான அவள ஒவ்வொரு வார்த்தையாலேயும் கொல்லும்...


      Delete
    2. People make mistake.

      Step 1

      * We talk about morals, not to make mistakes. So we need some sort of moral preaching.

      Step 2:

      What if someone made a mistake?

      Now you need forgive and not harassing her pointing out the mistake. Because whatever happened is happened.

      That's how I like to approach.

      People includes you and me, GD.

      I live in a more civilized society, these things are happening casually around me. Nobody harasses anybody like that. It will take a while for Indian society to become like that. May be it will not happen in our lifetime.

      Delete
    3. அதை தான் நானும் சொல்ல வர்றேன்...

      இந்த சொசைட்டியை பொறுத்தவர செய்ற தப்ப ஒத்துக்குறது கூட குத்தம் தான். அத வச்சே நிம்மதிய பறிச்சுடுறாங்க.

      காலேஜ்ல, என்னோட ஸ்டுடென்ட்ஸ் அவங்க ப்ராக்டிகல்லயோ இல்ல ப்ராஜெக்ட்லயோ தப்பு பண்ணிட்டு என் கிட்ட வந்து நின்னா நான் சொல்றது இது தான், நடந்தது நடந்தாச்சு. அடுத்து இத சரி பண்றது எப்படின்னு யோசி, இல்ல புதுசா முதல்ல இருந்து ஆரம்பி. அத விட்டுட்டு வருத்தப்பட்டுட்டோ, குழம்பிகிட்டோ இருக்காதன்னு தான்... இது எல்லாத்துக்கும் பொருந்தும் வார்த்தைகள்... நான் நிதானமா கடைபிடிக்குற வார்த்தைகள்.

      தவறு செய்தது ஆணாயிருந்தாலும் சரி பெண்ணாயிருந்தாலும் சரி, அவங்க நிலைல இருந்து யோசிச்சுப் பாத்தா ஒரு குறைந்தபட்ச பரிதாபமாவது மிஞ்சும். ஆனா அது கூட அவங்களுக்கு தேவையில்ல. அவங்க போக்குல அவங்கள விட்டுடலாம். தானா புரிஞ்சுப்பாங்க.

      Delete
  4. ***நெறையாப் பேங்கள்,**

    should read as "நிறையப் பேசுங்கள்"

    ReplyDelete
    Replies
    1. இது நீங்கள் சொல்லாமலே புரிஞ்சுது. ஒரு ஆர்வத்துலயோ ஆக்ரோசத்துலயோ எழுதும் போது இப்படி பிழை வர்றது இயற்கை தானே

      Delete
  5. சகோதரி / பெண் பிள்ளை உள்ளவர்களுக்கு இதன் வலி தெரியும்...

    ReplyDelete
    Replies
    1. இன்னமும் தெரியாமல் இருக்குறவங்க நிறைய பேர் இருக்காங்க அண்ணா

      Delete
  6. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  7. காயத்ரி,

    அம்மா எவ்வளவு Forward ஆ இருந்திருக்காங்க, Great! நிச்சயம் அவங்களோட அந்த வழிகாட்டுதல் தான் உன்னை இவ்வளவு பக்குவத்தோடு பேச வச்சிருக்கு..

    எதனால உனக்கு ஆண் வர்க்கத்து மேலேயே ஒரு காழ்ப்புணர்ச்சி தோணிச்சின்னு தெரியல. உன்னை சுற்றிலும், நீ பார்த்து வளர்ந்த, அப்பா, தம்பி நண்பர்கள், வருங்கால கணவன் னு எல்லோருமே நல்லவங்களா, பெண்களை புரிஞ்சுக்கக் கூடியவங்களா தானே இருந்திருக்காங்க. அப்புறம் ஏன்?


    அதுக்காக ஆண்கள் எல்லோருமே நல்லவர்கள் ன்னு வாதிட நான் வரல. அதே சமயம் இந்த எண்ணம் பின்னாளில் எப்போதாவது நல்ல ஒரு ஆண் தெரியாம செய்யும் ஒரு தவறை பார்க்கும் போதும் அவனை தப்பான ஆளாக பார்க்கத் தூண்டும்.

    இன்றைய சமூகத்தில் (நான் பார்த்த வரைக்கும்) ஆண்கள் பெண்களை தன் சரிபகுதியாக ஏன் சிலர் அதற்கும் மேலாக தான் நடத்துறாங்க. அப்படி இல்லாதவங்களும் பெண்கள் 'பதமாக' எடுத்து சொன்னா புரிஞ்சு நடந்துக்கறாங்க. So மீதமிருக்கும் அந்த மைனாரிட்டி ஆண்களை விட்டுத் தள்ளிவிடுவோமே..!

    எல்லோரையும் பாசிட்டிவாவே பார்ப்போமே!

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, நான் எல்லா ஆண்களையும் தப்பா பேசல. அதே நேரம் நிறைய பெர்செண்டேஜ் அந்த மாதிரி இருக்காங்க. அட்லீஸ்ட் வார்த்தைகள்னாலயாவது அவங்க குரூரத்த காட்டிடுறாங்க. என்னோட வாழ்க்கைலயும் அப்படியான ஆள நான் சந்திச்சிருக்கேன். அதனால நிறைய மன உளைச்சலும் அடஞ்சிருக்கேன். என் காலேஜ் ஸ்டாப்ஸ் சொல்ற அனுபவங்கள், கல்யாணம் ஆன ஸ்டூடெண்ட்ஸ் சொல்ற அனுபவங்கள் எல்லாமே கேக்க சகிக்கவே சகிக்காத விசயங்களா இருக்கும்.

      "இப்படி கூடவா, இப்படி கூடவா"ன்னு மனசெல்லாம் கொதிச்சு, நிறைய நாள் தனிமைல அழுதுருக்கேன்.

      எனக்கு இங்க ஆண்கள் மேல மட்டும் கோபம் இல்ல. இந்த சமூகத்து மேலயே கோபம் உண்டு. சமூகம்னா ஆணும் பெண்ணும் சேர்ந்தது தானே...

      அந்த டேப் விசயத்துல கூட அந்த பொண்ணை பேசவே விடாம ஆக்ரோசமா அவங்க எல்லாம் பொங்கிட்டு இருந்தத கேட்டு நடுங்கிட்டு இருந்தேன். என் வயசை ஒத்த பெண் ஒருத்தி, அவ கிட்ட இத பத்தி வருத்தப் பட்டு பேசினப்ப, அவ "அவளுக்கு நல்லா வேணும், எப்படி அவ ஒருத்தன லவ் பண்ணிட்டு, அவன விட்டுட்டு இன்னொருத்தன லவ் பண்ணலாம்?ன்னு கேள்விக் கேட்டா. இதே பொண்ணுக்கு ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு பிரச்சனை வந்தப்ப நான் தான் ஹெல்ப் பண்ணினேன். இவங்க பாலிசியே பிரெண்ட்ஸ்ங்குற பேர்ல என்ன வேணா பண்ணிக்கலாம். ஹாக்கிங், கிஸ்ஸிங், ஏன், செக்ஸ் கூட தப்பு இல்ல. ஆனா லவ் பண்ணிட்டா மட்டும் அவன ஏமாத்தக் கூடாது... இது எந்த மாதிரியான மன நிலைனே எனக்கு புரியல. அடப்பாவி, அவளாவது லவ் பண்ணி தானே அவன நம்பி தப்பு பண்ணினா, எப்ப அவன் சரியில்லன்னு தெரிஞ்சுதோ அப்ப விலகினா. இன்னொருத்தன பிடிச்சுது அவன லவ் பண்ணினா. ஆனா நீ பண்ணினது என்னன்னு திருப்பி கேட்டேன். அந்த அதிரடிய அவ எதிர்பார்க்கல. இதே மாதிரியான ஒரு மெமரி கார்ட், அந்த பையன செவுள்லயே நாலு அறை விட்டு வாங்கிக் கொண்டு வந்து இவ மூஞ்சில வீசி எறிஞ்சிருக்கேன். இப்ப கேட்டேன், அந்த பையன் அந்த மெமரி கார்ட்ட உன் வீட்ல குடுத்துருந்தா இன்னிக்கி நீ அந்த பொண்ண காறித் துப்ப உயிரோட இருந்துருக்க மாட்டேன்னு. தலைய குனிச்சுக்கிட்டே ஒண்ணும் பேசாம இறங்கிப் போனா.

      இந்த சமூகமே அடுத்தவங்கள குறை சொல்றதுல தானே அண்ணா குறியா இருக்கு. அந்த நிலைல தன்னை பொருத்திப் பாக்க ஏன் நினைக்கவே நினைக்க மாட்டேங்குறாங்க?

      உங்க அனுபவத்துல நீங்க நல்ல ஆண்களையோ இல்ல பெண்களையோ பாத்துருக்கலாம் அண்ணா, நானும் அப்படி தான். என்னை சுத்தி இருக்குறவங்க நிறைய பேர் அத்தனை அன்பானவங்க. ஆனா, உலகம் உங்களையும் என்னையும் மட்டும் சுத்தி இயங்கல...

      ஆத்திரம் ஆத்திரம் ஆத்திரம்... சமூகத்து மேல அத்தனை ஆத்திரம் வருது. ஆனா எல்லாத்தையும் வாய் வார்த்தைலயோ இல்லை காழ்புணர்ச்சிலயோ காட்டி என்ன பயன்?

      புன்னகையோட தான் சுட்டிக் காட்ட வேண்டி இருக்கு. பாசிட்டிவாவே தான் பாக்க வேண்டியிருக்கு.

      இதனால தான் அண்ணா பதமா எடுத்து சொல்ல நினைக்குறேன், என்னோட எழுத்து மூலம்.

      Delete
  8. போலி வேஷமின்றி வெளிப்படையாக சொல்லும் தைரியம் உங்களுக்கிருக்கிறது. பல்லாண்டுகால ஆணாதிக்க மனோபாவம் மாற காலம் பிடிக்கும். உங்கள் அன்புத் தந்தைபோல் ஆண்கள் மாறவேண்டும். வருண் சொன்னதை ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
  9. உங்க அம்மாவின் வார்த்தைகளை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நல்ல வார்த்தைகளைச் சொல்லி தைரியமாக வளர்த்தியிருக்காங்க, இப்படித்தான் பெண் பிள்ளையை வளர்க்கணும்னு தோணுது. காயமானா மருந்து போடறோம், அதே மாதிரிதான் இதுவும்.

    வீட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. வாசிப்பவர்கள் இதைப் புரிந்துகொண்டு தத்தம் அம்மா, தங்கை, அக்கா, மனைவியிடத்தில் பரிவாக நடந்து கொண்டால் சிறப்பு.

    இதையெல்லாம் புரிந்து நடக்கும் ஆண்களும் இங்கே இருக்கவே செய்கிறார்கள். சில விஷ ஜந்துக்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

    இந்த மாதிரி ஃபார்வேடா எழுதும் பெண் எழுத்துக்கள் தான் இங்கு அவசியம்.

    ReplyDelete
  10. சூப்பர் அக்கா. இப்படி ஒரு அருமையான குடும்பம் கிடைக்க நீங்க ரொம்ப கொடுத்துவெச்சுருக்கீங்க. எனக்கும் உங்க குடும்பம் போலவேதான். முழு சுதந்திரம் இருக்கு. ஆனா நான் என்னைக்கும் அதை தவறா பயன்படுத்திக்கமாட்டேன். இப்படியெல்லாம் ஆரோக்கியமான கண்ணோட்டத்துல வெளிப்படையா எழுத ஒரு தனி தைரியம் வேணும். அந்த தைரியத்துக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete