Tuesday, 7 April 2015

கன்னி பூசை





எங்க குடும்பத்த பொருத்தவரைக்கும் நாலுதலைமுறைக்கு முன்னால தாய்மாருங்க தாலாட்டுக்கும், கிழவிங்களோட காட்டுவழி கடைசி ஒப்பாரிக்கும் எப்பவும் குறையின்னு இருந்ததே இல்ல. பால் குடிக்குற பச்சப்புள்ளைங்கள்ல இருந்து, சிங்காரிச்சி நிக்கும் சமைஞ்ச புள்ளைங்க வரைக்கும் வயசு வித்யாசமே இல்லாம சாவு அள்ளிக்கிட்டுப் போச்சாம். வாழவேண்டிய வயசு, வாழ்ந்துகெட்ட வயசுன்னு எந்த வித்யாசமும் இல்லாம ஏதாச்சும் ஒரு துக்கச்செய்தி கேட்டு விடிஞ்சுட்டு இருந்த காலம் அது. தப்பிப்பொழைச்ச புள்ளைங்களை கண்ணுக்கு தூசியில்லாம முந்தானைக்குள்ள முடிஞ்சே வளத்துருக்காங்க.

அப்படி பொழைச்சவருதான் ராமைய்யா தாத்தா. அவர் உடம்பிறப்பா பொறந்த ஒன்பது உசிரும் நிக்கவேயில்ல. ராமைய்யா தாத்தாவுக்கு தலைச்சான் புள்ள ஆம்பளப் புள்ளையா பொறந்ததும் கொண்டாடவா இல்ல கொலை நடுங்கவான்னு தெரியாம குடும்பத்துல உள்ளவங்க எல்லாம் பரிதவிச்சுக்கிடந்தாங்களாம்.

ராமைய்யா தாத்தாவோட அய்யா இளையபெருமாள் நிலபுலன்களோட செல்வச் செழிப்பா இருந்தவரு. ராமைய்யா தாத்தா பிறந்து அஞ்சு வருஷம் கழிச்சு சுசீந்திரத்திலிருந்து இன்னொரு பொண்ண கல்யாணங்கட்டி மாட்டுவண்டியிலே கூட்டிக்கிட்டு வந்துட்டாராம். என் எடத்துல இன்னொருத்தி சக்காளத்தியான்னு முந்தியை அள்ளிமுடிஞ்சுட்டு புள்ளையை தூக்கிக்கிட்டு வீட்டைவிட்டு வெளியேறின வீராப்புக்கிளவிதான் ராமைய்யா தாத்தாவோட ஆத்தாக்காரியான பொட்டுக்கட்டி.

ஆத்தாவும் மகனும் ரெட்ட உசுரா காடழிச்சு, கழனி திருத்தி, களை பறிச்சு, பனைமரம் ஏறி கிளவி பாக்காத வேலை கிடையாது, தன்வயித்துப் பசி அடக்கி புள்ளைய தங்கமா வளர்த்திருக்கா. அரசனே ஆனாலும் புருசன் தப்பு பண்ணினா தூக்கி எறிஞ்சவ-ன்னு அக்கம் பக்கத்து ஊருல உள்ளவங்க எல்லாருக்கும் அவ மேல தனி மரியாதை. எடுபட்டவன் ஒருத்தனும் அவ இருந்த திசைபக்கம் தீண்டுனது கிடையாதாம். காட்டுல தனியா மேய்ச்சலுக்குப் போன புள்ளைகிட்ட பாய நெனைச்ச கள்ளனை பனைமட்டையாலே அடிச்சு நடுமுதுக ரெட்டையா பொளந்து விட்டிருக்கா! அன்னையிலிருந்து மேய்ச்சல்குடி ஆட்களுக்கு ஆச்சிகிட்ட மரியாதையோடு பக்தியும் சேர்ந்துடுச்சு.

தம் மகன் ராமைய்யாவை கூறுள்ள புள்ளையா வளத்து ஒரு கல்யாணத்தையும் பண்ணி வச்சு அவருக்கு ஒரு புள்ள இல்லையேன்னு வருத்தத்திலே பூமிக்குள்ள போன ஆச்சிக்கு இன்னைக்கும் அஞ்சுகிராமத்துக்கு கிழக்கே கோயிலெடுத்து கும்பிட்டுட்டு இருக்காங்க மேய்ச்சல்காரங்க. அவங்களுக்கு அவ காவல் தெய்வம். எங்களுக்கும் தான்.

ஆச்சிக்குப் பின்னும் உழைப்புகளை விடாம நிலபுலன்களை கொத்தி, கால்நடைங்க பராமரிச்சு பெரும்பணம் சேர்த்த ராமைய்யா தாத்தாவுக்கு பதிநாலு வருஷம் கழிச்சு பொறந்த பிள்ளைக்கு கணேசன்னு பேரு வச்சிருக்கார் ராமய்யா தாத்தா.

பிறப்பிலே முகத்தில் தெய்வக்களையாம். அப்படியே ஆச்சியை உரிச்சு வச்ச முகம். ஓங்கின காலோட பிறந்தவருன்னு சொல்வாங்க. உள்ளங்கையிலே சங்கு ரேகை ஓட அத்தனை ஊரு ஜோசியக்காரனும், செல்வமும் சினைமாடும் நிறைஞ்சு நிக்கும் வீடா உன் வீடிருக்கும்ன்னு குறிசொல்லிப் போயிருக்காங்க. சொன்னபடியே சினைப்பசு மொத ஈத்தே கிடாரிக்கன்னு ஈனிருக்கு. அடுத்த அஞ்சாறு வருசத்தில் வீட்டில் வரிசையா தொட்டில் கட்டவேண்டி இருந்துச்சாம், எங்கம்மா அன்னரதி, நாராயணன் மாமா, வைகுண்டம் மாமா, சாருமதி சித்தி, விஜயா சித்தின்னு எல்லாரும் அடுத்தடுத்து பொறந்தவங்க தானாம்.

ஆறு புள்ளை பெத்தாலும் ராமைய்யா தாத்தா முகத்தில் ஏதோ ஒரு கவலைக்குறி இருந்துட்டே வந்ததுருக்கு. அது எதனாலன்னா, கணேசன் மாமா பிறந்தப்ப “இந்த குடும்பத்துக்கே குலசாமி இவன் தான், ஊரறிய உலகறிய பெரியவனா வருவான், ஆனா பதினாலு வயசுல கண்டம் ஒண்ணு தொரத்துது, அத தாண்டிக் காப்பாத்தனும் ராமய்யா இந்த கொடியவிட்டுட்டா நம்ம வம்சத்துக்கு தொப்புள்கொடி எதுவும் நிலைக்கொள்ளாது”ன்னு பொட்டுக்கட்டி ஆச்சி கனவா வந்து சொல்லிட்டு போயிருக்கு.

ஒன்னரை வயசுல சரளமா பேச ஆரம்பிச்சு, அஞ்சு வயசுல தோப்பு கணக்கு, வயல் பகுமானம் வீட்டோட நிர்வாகம் முழுசும் நடத்துற அளவுக்கு திறமையாம் கணேசன் மாமாவுக்கு. எப்பவும் தாத்தா அவரைமட்டும் தோள்லயே தூக்கி சுமந்துருக்காங்க. மத்த புள்ளைங்களை ஆச்சி சுமந்திருக்கு.

பதினோரு வருசமா உள்ளுக்குள்ள துக்கத்தையும், கண்ணுக்குள்ள கண்ணீரையும் ஒழிச்சு ஒழிச்சு வளர்த்துக்கிட்டாங்களாம். கணேசன் மாமாவுக்கு பத்து வயசானப்ப மதமதன்னு வீட்டுக்குள்ள மத்த அஞ்சு புள்ளைங்களும் தவழ்ந்து ஓட ஆரம்பிச்சுட்டாங்க. அம்மா அதுல மூத்தப் பொண்ணுங்குறதால அம்மா மேல கணேசன் மாமாவுக்கு கொள்ள ஆசை. ஆசை ஆசையா அம்மாவ கைல தூக்கி கணேசன் மாமா வச்ச பேரு தான் அன்னரதி. வீட்டுக்கு வந்த முதல் லெட்சுமின்னு அம்மாவ அவர் தாங்கு தாங்குன்னு தாங்கியிருக்கார்.

ராமைய்யா தாத்தாவோட மனபாரமும் தோள்பாரமும் இறங்கும் நாளும் வந்துருக்கு. எண்ணி பதினோராவது வயசு முடியுற அன்னைக்கு கிணத்தடியில் குளிச்சு, என்னைக்குமில்லாமல் திருநாமம் போட்டுக்கிட்டு ஆச்சியோட படத்துக்குமுன்னாடி போய் உட்கார்ந்துட்டு வில்லா விறைச்சு துள்ளியிருக்கார். சுத்தி உட்கார்ந்து சாமிகும்பிட்டுட்டு இருந்தவங்க தாவிப்புடிக்க அருள்வாக்குமாதிரி ”ஏ மக்கா நான் எங்கயும் போகலலே ஒவ்வொரு பூஜைக்கும் தவறாம வருவேன் இந்த கொடி என்னைக்கும் வாடாது. நான் இருக்கேம்மக்கா காவலா”ன்னு சொல்லி அடங்கிட்டார்.

அண்ணனுக்கு என்ன ஆச்சுன்னு அவ்வளவா விபரம் தெரியாட்டியும் அம்மாவுக்கும் நாராயணன் மாமாவுக்கும் தன்னோட அண்ணன் தெய்வமாகிட்டார்ன்னு பரிபூரண நம்பிக்கை. கணேசன் மாமாவை மூத்த புள்ளையா மட்டும் பாக்காம கடவுளாவே பாக்க ஆரம்பிச்சுட்டாங்க மொத்த குடும்பமும். தலைச்சான் புள்ளைய பறிகுடுத்த ராமைய்யா தாத்தாவுக்கு அந்த அஞ்சு புள்ளைங்களும் அடுத்து மேலும் நாலு புள்ளைங்க. பத்து புள்ளைங்கள பெத்து, அதுல ஒண்ண பறிகுடுத்து ஆலமரமா தழைக்க ஆரம்பிச்சுடுச்சு பொட்டுக்கட்டி குடும்பம்.

இன்னைக்கும் பொட்டுகட்டி குடும்பத்துல ஒரு வழக்கம் உண்டு. யாராவது கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி செத்து போய்ட்டா அவங்கள கன்னியா நினச்சு வருசத்துக்கு ஒருதரம் அவங்களுக்கு பிடிச்சது எல்லாம் படையல் வச்சு பூசை கொடுக்குறது. கணேசன் மாமா இறந்தப்போ இதே பூசையெல்லாம் செஞ்சு அவரை நடுவீட்டுக்குள்ளே அடக்கம் பண்ணி இருக்காங்க. தலைச்சாம்புள்ளையை வெளியெடத்துல புதைச்சா மலையாள மந்திரவாதிங்க யாரும் தலையோடை எடுக்க தோண்ட வருவான்னு அப்போ இருந்த பயத்தின் காரணமா இந்த ஏற்பாடு.

வருஷம் ஓடிட்டே இருக்க, எங்கம்மா பெரியமனுசியாகி இருக்கா. வயசுக்கு வந்த பொட்டப் புள்ளைக்கு படிப்பு எதுக்குன்னு வீட்டுக்குள்ள முடக்கி வைக்குற காலம் அது. ஆனா அந்த வருஷம் கன்னிபூஜை பண்றப்ப தம்பி நாராயணன் மேல கணேசன் மாமா சாமியா இறங்கி, என் தங்கச்சிய வீட்டுக்குள்ள வச்சிராதீங்க, அவ படிக்கட்டும்னு சொன்னாராம். புள்ள படிக்கட்டும்னு மாமாவே சொன்னதுக்கப்புறம் மறுவார்த்த யாரும் பேசல. அதுக்குப்பிறகு தான் அம்மா படிப்புக்காக படியிறங்கி போக முடிஞ்சது.

தான் விரும்பினவரையே கட்டிக்கணும்ன்னு அம்மா ஒத்த ஆளா பிடிவாதம் பிடிச்சப்ப கணேசன் மாமா தான் சாமியா வந்து இந்த கல்யாணத்த நடத்தி வைங்கன்னு சொன்னதாவும், அதுவரைக்கும் கொலை வெறியோட இருந்த குடும்பம் மனசு மாறி அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கல்யாணம் பண்ணி வச்சதாவும் அம்மா சொல்லுவா. அம்மாவோட விசயங்களுக்காக ரெண்டு தடவ மட்டுமே கணேசன் மாமா சாமியா வந்து பேசினார்ன்னு கேள்விப்பட்டப்ப இதுல ஏதாவது திட்டமிட்ட சதி இருக்கும்னு அம்மாவை சந்தேகக் கண்ணோடு பாத்துருக்கேன்.

ஆனா விஷயம் அதோட முடியல. நாராயணன் மாமாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க அப்போ உள்ள வந்தவங்கதான் சங்கரி மாமி. அவங்க காலடி எடுத்து வச்ச வருசத்துல இருந்து கணேசன் மாமா நிரந்தரமா அவங்க உடம்புல இறங்கி வருசா வருஷம் எல்லாருக்கும் வாக்கு சொல்ல ஆரம்பிச்சுட்டார். கண்ண உருட்டி, சின்ன புள்ள மாதிரி அழுது, கம்பீரமா நிமிர்ந்து பார்வை பார்த்துன்னு மாமி பண்ற எல்லா சேட்டைகளையும் பாத்து, மாமி என்னமா நடிக்குறாங்கன்னு அறியாத வயசுல விழுந்து விழுந்து சிரிச்சிருக்கேன்.

ஆனா அந்த நேரம் மாமி பண்ற ஒரு காரியம் மனசுக்குள்ள கிலிய உண்டு பண்றது உண்மை. கன்னி பூஜை பண்ற நேரம் சாயங்காலம் ஆறு மணிக்கு ஆரம்பிக்கும். அங்கங்கே இருக்குற சொந்தம், பந்தம்னு எல்லாரும் ஒண்ணா தாத்தாவோட வீட்ல கூட ஆரம்பிப்போம். கண்ணாமூச்சி, தொட்டு விளையாட்டு, நொண்டி விளையாட்டு, கிளியாந்தட்டுன்னு சின்னவங்க கூட பெரியவங்களும் சேர்ந்து வீட்டையே அதகளப்படுத்திட்டு இருப்போம். மாமாக்கள்ல யாராவது ஒருத்தங்க, தென்னை மரம் ஏறி முத்துன தேங்காய் பறிச்சுட்டு வந்து குடுத்தா வீட்டு பொம்பளைங்க அத உரிச்சு, எண்ணெய் காய்ச்சுவாங்க. சுட சுட அடுப்புல கக்கன்னும் எண்ணையுமா பிரிஞ்ச பதத்துல கொதிச்சுட்டு இருக்கும். இன்னொரு பக்கம் பச்சரிசி இடிச்சி, கருப்பட்டி போட்டு பிசைஞ்சு, கொதிக்க கொதிக்க பணியாரம் ரெடி ஆகிட்டு இருக்கும். இன்னும் சில பேர் சுக்கும் இன்னும் சிலதுகள போட்டு குடிக்க பானகாரம் செய்வாங்க, அடுத்தப் பக்கம் எல்லா பழங்களையும் துண்டு துண்டா நறுக்கி, தேன் ஊத்தி, பஞ்சாமிர்தம் ரெடியாகிட்டு இருக்கும்.

அதே நேரத்துல வீட்ல பெரிய மாமா மீதம் உள்ள பழங்கள், பலகாரங்கள், உடுப்பு, இன்னும் பல ஐட்டங்கள அடுக்கி கணேசன் மாமா முன்னாடி படைப்பாங்க. தீபாராதனை காட்டி, சாம்பிராணி புகைச்சதும் மாமி ஆவேசம் வந்த மாதிரி ஓடி வருவாங்க. கொஞ்ச நேரம் அழுவாங்க, யார் என்னன்னு பாக்காம எல்லாரையும் கட்டிபிடிச்சு, கைய புடிச்சு பாத்து சிரிப்பாங்க. உங்கள எல்லாம் பாக்க ஓடி வந்தேன்னு சொல்லுவாங்க. என்னை தூக்கி கொஞ்ச வந்தா ஒதுங்கி போவேன். “எலேய் மக்கா அன்னம், கேட்டியா, இவ என்ன மாதிரிலே”ன்னு என்னை பாத்து சிரிப்பாங்க. எனக்கு எல்லாமே நாடகத்தனமா தான் படும். எல்லாரையும் நலம் விசாரிப்பாங்க. இந்த வருஷம் அறுப்பு இப்படி பண்ணுங்க, கிழக்க கடலை போடுங்க, தெக்க கெழங்கு போடுங்கன்னு எல்லா அட்வைசும் பண்ணுவாங்க. கணேசன் மாமாவுக்கு கக்கன் (தேங்காய் பால்ல இருந்து எண்ணெய் எடுக்கும் போது பிரிஞ்சி வர்ற பகுதி) ரொம்ப பிடிக்குமாம். மாமி, அடுப்பு சட்டியில கை விட்டு சுட சுட எடுத்து தின்னுவாங்க. வெந்துட்டு இருக்குற பணியாரத்த பாதி வேக்காடுல கைய விட்டு எடுத்து தட்டுல வச்சு எங்களுக்கு தருவாங்க.

அடுத்தடுத்து வந்த வருசங்கள் எங்க குடும்பத்த தலைகீழ புரட்டி போட்டுச்சு. மாமாக்கள், சித்திகள்ன்னு எல்லாருக்கும் கல்யாணம் ஆக, சண்டை, பொறாமைன்னு குடும்பத்துக்குள்ள இருந்த ஒற்றுமை சிதறி தான் போச்சு. தாத்தா வீடு ஆள் இல்லாம தனியா இருந்துச்சு. ஆனாலும் வருசாவருசம் எல்லாரும் அங்க கூடுவோம். பெரிய மாமி இந்த காலகட்டங்கள்ல எல்லாரோடும் பகையாகி போனாங்க. குடும்பத்துல யார் கூடவும் பேச மாட்டாங்க.

ஒவ்வொரு வருஷம் கன்னி பூஜையப்பவும் மாமிய தவிர வேற எல்லாரும் அங்க கூடிடுவோம். மாமி இல்லாமலே பூஜை ஆரம்பிக்கும். தீபாராதனை காட்டி, சாம்பிராணி போட்டதும் மாமி அவங்க வீட்ல இருந்தே அழுதுட்டே ஓடி வருவாங்க (ரெண்டு வீட்டுக்கும் தூரம் கிட்டத்தட்ட ரெண்டு கிலோமீட்டர்). வந்தவங்க, வழக்கம் போல எலேய் மக்கான்னு கட்டிபிடிக்க தொடங்கிடுவாங்க. அந்த நேரம் அவங்க மனசு தெளிஞ்ச நீரோடையா இருக்கும். எல்லார் மேலயும் அவங்க காட்டுற அக்கறை, நெகிழ்ச்சி, அறிவுரைன்னு சங்கரியா இதுன்னு எல்லாருக்கும் ஆச்சர்யமா இருக்கும். “சங்கரி (அவங்க தான்) மனசு பொறாமை பிடிச்சது. இந்த குடும்பத்துக்குள்ள அவள சேக்காம இருங்கடே, அதான் உங்களுக்கு நல்லது. அவ புத்தினால தான் அவ புள்ள ஓடி போய் சீரளியுரா”ன்னு அவங்களே மாமாவா வந்து சொல்லுவாங்க.

அப்படி தான் அந்த வருஷம், கொதிக்க கொதிக்க பலகாரத்த எடுத்து சின்ன மாமா கைல குடுத்து, நீயும் வந்துருவலே என்கூடன்னு சொல்லிட்டு மயங்கி விழுந்துட்டாங்க. மாமா கைல எண்ணெய் பட்டு பொத்து போச்சு. ஆனா மாமி எழுந்து வந்தப்ப ஒரு காயம் இல்ல. அந்த வருசமே சின்ன மாமா செத்துப் போனாங்கன்னு நான் சொல்லத் தேவையில்லன்னு நினைக்குறேன்.

இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு அம்மாவ தனியா கூட்டிட்டு போய் அழு அழுன்னு அழுதாங்க. அம்மா வந்தப்ப முகம் இறுகி இருந்துச்சு. அப்படி அம்மாவ நான் பாத்ததே இல்ல. அதுக்கப்புறம் அம்மா ரொம்ப உறுதியா இருந்தா. அவ கண்ணுல கண்ணீர நான் பாத்ததேயில்ல. எப்பவாவது கணேசன் மாமா பத்தி பேசுவா. மாமாவுக்கு சட்டை வேணுமாம்ன்னு சொல்லுவா. எடுத்து குடுப்பா. முக்கியமா என்னை கண்ணுக்குள்ள வச்சு பாத்துகிட்டா. ரெண்டே வருசத்துல தலைல இடி விழுந்தாப்புல எங்கள விட்டுட்டு அவ அண்ணன் கூடவே போய்டா.

கடந்த ரெண்டு வருசமா அடுத்த வாரிசுங்க, அதான் நாங்க தலையெடுக்க ஆரம்பிச்சுட்டோம். யார் ஒற்றுமையா இருக்காங்களோ இல்லையோ நாங்க ஒற்றுமையா இருக்கோம். ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் எல்லாரும் கூடி அன்பை பகிர்ந்துக்குறோம். சங்கரி மாமி மட்டும் இன்னமும் வீட்டை விட்டு வராமலே இருக்காங்க...

இந்த வருசமும் என் குடும்பத்துல கன்னிபூசை உண்டு. வராத மாமியும் வருவாங்க... எல்லாம் கணேசன் மாமா செயல்...

14 comments:

  1. வணக்கம்
    படித்த போது கவலையாக உள்ளது... இறப்பு என்பது இறைவன் எழுதிய எழுத்து..
    ஒற்றுமை எப்போதும் பலம்...கன்னிப்பூசை வழிபாடு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்--

    ReplyDelete
    Replies
    1. இதுல வருத்தப்பட எதுவும் இல்ல அண்ணா.... பிறப்பும் இறப்பும் சகஜம் தானே..... தேங்க்ஸ் அண்ணா உங்க பாராட்டுக்கு

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இது தங்களது குடும்ப விடயங்களா ? இல்லை கதையா ? படிக்கும்போது சிறிது பய உணர்வுடன் கூடிய யதார்த்தம் இருந்தது.
      தமிழ் மணம் 3
      எனது பதிவு அ.அ.அ.

      Delete
    2. ரெண்டும் மிக்ஸ் பண்ணி எழுதினது.... ஆனாலும் உண்மை அதிகமா இருக்கு... ஓட்டு போட்டதுக்கு தேங்க்ஸ் அண்ணா

      Delete
  3. அருமை, அருமை..! மிக யதார்த்தமான நடை. காட்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் திறன். மெய்சிலிர்க்க வைக்கிறது கன்னி பூஜை.
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. ஹஹா ரசிச்சதுக்கு தேங்க்ஸ் :) கி.ரா ஐயாவோட கதைசொல்லி இதழ்ல இந்த கதை வந்திருக்கு

      Delete
  4. கன்னி பூசை அறியாத செய்திகள்அறிந்தேன்
    தம +1

    ReplyDelete
  5. நல்லோர் ஆசி இருக்க என்றும் சுபம்... ஒற்றுமை என்றும் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி அண்ணா

      Delete
  6. திகில் கதை படித்த உணர்வு.. தங்கச்சி சொல்றதால நம்பாம இருக்கவும் முடியல. அதே சமயம் இதுபோன்ற நம்பிக்கைகள் மனதால ஏத்துக்கவும் முடியல.. :)

    ReplyDelete
    Replies
    1. சில நேரம் அந்த மாதிரி அனுபவங்கள் வரும் போது நம்பாம இருக்க முடியல அண்ணா.... ஆனா நம்மை மீறியும் சக்திகள் இருக்கு, ஆன்மாவுக்கு அழிவில்லைங்குறத நான் நம்புறேன்

      Delete
  7. ungal thalaimuraiai oruka kaval
    theivamaga kondatuvathu sirapu. ganesh mama ipavum varagala? apdi
    varagana unga padiva moondravathu kan fb page la poduga. kalikatu
    idikasam padithathu pol oru unarvu. vaalthukal. yan munurai
    thuketega...

    ReplyDelete
    Replies
    1. அந்த முன்னுரை கதைக்கு பொருத்தம் இல்லாதத போல இருந்ததால தூக்கிட்டேன். கணேஷ் மாமா போன வருசம் கூட வந்தார். இந்த வருசமும் வருவார் கண்டிப்பா

      Delete