Saturday 21 March 2015

நட்பும் கற்று மற



ஒரு ஊருல ஒரு குயில் குஞ்சு இருந்துச்சு. அந்த கருங்குயில் பிறந்தது காக்கா கூட்டுல. அது பெருசாகுற வரைக்கும் காக்கா  குஞ்சுகளோடயும் காக்காவோடயும்  ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. அப்புறம் ஒரு நாள் அந்த கூட்டை விட்டு வெளியேறியே ஆகணும்ங்குற கட்டாயத்துல அது தனியா பறந்து போய்டுச்சு.

தனியா வந்த கருங்குயிலு ஒரு நாவல் மரத்து மேல போய் உக்காந்துகிட்டு கூ கூ...ன்னு சோகமா கூவிக்கிட்டு இருந்துச்சு. வழக்கமா நாவல் மரத்துல இளைப்பாற வர்ற பறவைங்க எல்லாம் மெதுமெதுவா இதுகிட்ட பேச ஆரம்பிச்சுதுங்க...

இப்படி போய்ட்டு இருந்தப்ப ஒரு முத்துக் குயிலு அதே நாவல் மரத்துக்கு வந்து சேர்ந்துச்சு. மத்த பறவைங்க கிட்ட பட்டும் படாமலும் பழகி வந்த கருங்குயிலு முத்துக் குயில பாத்து சந்தோசமாகிடுச்சு. அப்படியே ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ் ஆக, முஸ்தபா முஸ்தபான்னு பாட்டு பாடிகிட்டே மத்த பறவைங்களோட சேர்ந்து சந்தோசமா இருக்க ஆரம்பிச்சதுங்க ரெண்டு குயில்களும்.

ஒரு நாள், பக்கத்து அரச மரத்துல வாழ்ந்து வந்த வல்லூறு  நாவல் மரத்துக்கு வந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா மத்த பறவைங்க கூட பழக ஆரம்பிச்ச வல்லூறு, கருங்குயில் கிட்டயும் அன்பா பேச ஆரம்பிச்சுது. ஆனா முத்துக் குயில கண்டா  அதுக்கு பிடிக்குறது இல்ல...

வல்லூறு காட்டுன  அன்புல மயங்குன கருங்குயில் முத்துக் குயில ஓரம்கட்ட ஆரம்பிச்சுடுச்சு. முத்துக் குயிலும் வேற வழியே இல்லாம, வேற ஒரு இடத்துக்கு பறந்து போய்டுச்சு...

கருங்குயிலுக்கு இப்ப ஏக சந்தோசம், முத்துக்குயில பத்தி அந்த மரத்த தேடி வர்ற பறவைங்க கிட்ட எல்லாம் பொல்லாப்பு சொல்லிட்டு திரிஞ்சுது. கூடவே வல்லூறு வேற இருக்கு, அதோட ஆட்டத்துக்கு சொல்லவா வேணும்....

எல்லாமே நல்லா போயிட்டு இருக்குறதா நினைக்குற அந்த கருங்குயில் ஒரு விசயத்த மறந்துடுச்சு... அதாவது அது இப்போ பழகிட்டு இருக்குறது ஒரு வல்லூறு... வல்லூறு எப்பவுமே தன்னோட இன்னொரு முகத்த எப்ப காட்டும்னு சொல்ல முடியாது...

தான் பண்ணின துரோகம், உதாசீனம், இதெல்லாம் புரிஞ்சு ஒரு நாள் கருங்குயில் தனிமைல உக்காந்து அழும்போது அது கூட யாருமே இருக்கப் போறதில்ல... மத்த பறவைகளும் வேடிக்கை பாத்துட்டு அது வழில போய்டும்...

இப்படி தான் சில மனுசங்களும் இருக்காங்க. தன் கூட நெருங்கிப் பழகினவங்கள, திடீர்னு வந்து நட்பாகுற மனுசங்களுக்காக விட்டுக் குடுத்துடுறாங்க. மேம்போக்கா  பழகுறவங்கள காயப்படுத்த யோசிக்குறவங்க  உயிருக்கு உயிரா பழகினவங்கள காயப்படுத்த கொஞ்சமும் யோசிக்குறதே இல்ல... இதெல்லாம் ஒரு நாள் அவங்களுக்கும் நடக்கும்னு ஏனோ நினைச்சுப் பாக்க மறந்துடுறாங்க...

இப்ப நாம  என்ன பண்ணணும்னா நம்ம கிட்ட நட்பா இருக்குறவங்க கிட்ட நட்பா இருக்கணும். ஒருவேளை அவங்க நம்மள விட்டு பிரிஞ்சு போனா, அத பத்தி கவலப்பட்டுட்டு  இருக்காம, அந்த இடத்த விட்டு விலகிடணும்...

நட்பும் கற்று மறத்தல் நன்று...



.

Saturday 14 March 2015

சைட் அடித்தல் - ஒரு பிரதாப சரித்திரம்



அவன் அழகானவன்....

அதான் அழகானவன்னு சொல்லிட்டேன்ல அப்படின்னா கண்டிப்பா சைட் அடிச்சிருப்பேன்...
.....................................

நைட் சாப்பாட்டுக்கு கொத்துப் பரோட்டா கொண்டு வந்தப்ப நந்து தோனி பத்தி ரொம்பவே சிலாகிச்சுட்டு இருந்தா... கூடவே ஐ லவ் தோனி, ஹைய்யோ அவன் என்னா அழகுன்னு சிலிர்ப்பு வேற... முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ள இதுக்கு பேச்சைப் பாருங்க...
................................

கன்னாபின்னான்னு சைட் அடிக்குறதுல என் அம்மா கில்லாடி... அதுவும் அம்மா ஜடேஜாவோட பயங்கர ஃபேன். எனக்கு ஜடேஜா எல்லாம் நியாபகம் இல்லனாலும் அம்மா மூச்சுக்கு முன்னூறு தடவ ஜடேஜா பேரை சொல்லாம விட மாட்டா... எப்ப பாத்தாலும் என் கன்னத்த பாத்து, அப்படியே ஜடேஜா கன்னம் என் பொண்ணுக்குன்னு பச்சக் பச்சக்ன்னு முத்தம் குடுப்பா... அஞ்சு வயசுல எல்லாம் போமா, யாருக்கோ குடுக்க வேண்டிய முத்தத்த எனக்கு குடுக்குறன்னு சட்டுன்னு கைய வச்சு முத்தத்த துடச்சிடுவேன்...

நான் எய்த் படிக்குற நேரம் எல்லாம் அழகா (அது என்ன அழகுன்னு அம்மாகிட்ட தான் கேக்கணும், இங்க அழகுங்குறது ஒரு குறியீடு மட்டுமே) இருக்குற பசங்கள பாத்தா பையன் செம ஸ்மார்ட்ல... அவன் ஹேர் ஸ்டைல் பாரேன், ஹே அவன் டிரெஸ்ஸிங் சென்ஸ் பாரேன், ஸ்மார்ட்லன்னு தொணத்தொணத்துட்டே வருவா...

அம்மாவுக்கு இயற்கை பிடிக்கும், அழகு பிடிக்கும், அன்பு பிடிக்கும், நேசம் பிடிக்கும்.... எல்லாத்தையும் விட அவள் ஒரு குழந்தைத்தனமானவள்... அதனாலதானோ என்னவோ அப்பாவுக்கு அவள மட்டுமே ரசிக்கப் பிடிக்கும்...

நாங்க சேர்ந்து வெளில போறப்ப, அம்மா சைட் அடிச்சா, அப்பா உங்களுக்கு எந்த பொண்ணு அழகா இருக்குற மாதிரி தோணுதுன்னு கேப்பேன்.... எனக்கு எப்பவுமே உன் அம்மா மட்டும் தான் அழகுன்னு பதில் சொல்லுவார்... அம்மாவும் ஏய் என்னடி, என் புருசன மாத்தப் பாக்குறியான்னு எகிறுடுவா...

வேணாம் அன்னலெட்சுமி, பெருமாளுக்கு துரோகம் பண்ணாதன்னு நான் கலாய்ச்சா, ரெண்டும் ஜோடியா சேர்ந்துட்டு இத்துனூண்டு இருந்துட்டு பேச்சைப்பாருன்னு வலிய இழுத்துப் பிடிச்சு ஆளுக்கு ஒரு பக்கமா முத்தம் குடுப்பாங்க...
.........................................

எனக்கு அப்பா எல்லாம் சைட் அடிச்சாரான்னு இதுவரைக்குமே தெரியல... ஒருவேளை சைட் அடிக்குற உரிமை அப்பாவுக்கு மறுக்கப்பட்ருக்கலாம்.... லாம்... லாம்.... லாம்....

இந்த லாம்.... ஒரு குறியீடு, மறுக்கப்படலாம்ங்குறது யாருக்கும் சேர்த்துன்னு உங்க பார்வைக்கே விட்டுடுறேன்....



.

சக்தி - இறுதி நிமிடங்கள்



எப்ப இவனப் பத்தி எழுத ஆரம்பிச்சாலும் கை நடுங்க ஆரம்பிச்சுடுது. எப்படியாவது அந்த சம்பவத்த விவரிச்சுடணும்னு தான் நானும் முயற்சி பண்ணிகிட்டே இருக்கேன்...

எப்பவுமே சக்தி ராத்திரி என் முதுகுல தான் தூங்குவான். விடியற்காலைல எழும்பி கொஞ்ச நேரம் பிரிண்டர்க்குள்ள போய் தூங்கிட்டு வருவான்.

22 பிப்ரவரி 2014 - அன்னிக்கி வழக்கம் போல தான் விடிஞ்சுது. தூங்கிட்டு இருந்த இவன் எழும்பி பிரிண்டர்க்குள்ள போனான். அப்பாடான்னு கொஞ்ச நேரம் முதுகு மெத்தைல பட நிமிர்ந்து படுத்தேன். சட்டுன்னு பாய்ஞ்சு வந்தான். எலேய் கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுடான்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள காதுல கம்மல கடிக்க ஆரம்பிச்சுட்டான்.

அன்னிக்கி சனிக்கிழமை வேற. லீவ் நாள். எழுறதுக்கு மனசே இல்ல, ஆனாலும் இதுக்கு மேல தூங்கினா வேலைக்காகாதுன்னு எழும்பி, ஒரு ஆப்பிள் எடுத்து அவன் கிட்ட குடுத்து, இத தின்னுகிட்டு இரு, என்னை டிஸ்டர்ப் பண்ணாதன்னு சொல்லிட்டு படுத்தா, அவன் ஆப்பிளை திரும்பி கூட பாக்காம என் தோள் பக்கத்துலயே உக்காந்துட்டு இருந்தான்... செல்லம், சரி, வா, உன்னை போட்டோ எடுக்குறேன்னு அவன போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன்.

எப்.பி பிரெண்ட் ஒருத்தங்களுக்கு பர்த்டே. அதுக்காக அவன் கைல பூக்கொத்து எல்லாம் குடுத்து போட்டோ எடுத்து எப்.பி ல போஸ்ட் பண்ணிட்டு, காலைல பாட்டி கொண்டு வந்து தந்த ரெண்டு இட்லிய கஷ்டப்பட்டு முழுங்கிட்டு ப்ராஜெக்ட் விசயமா கொஞ்சம் வேலை இருக்குன்னு டைப் பண்ண ஆரம்பிச்சேன்.

சக்தி கொஞ்ச நேரம் என் விரல்கள பிடிச்சு விளையாடிட்டு இருந்தான். நிறைய வேலை இருக்குடா, ப்ளீஸ்டா, டைப் பண்ண விடுன்னு கெஞ்ச ஆரம்பிச்சதும் என்ன நினைச்சானோ லேப்டாப் பக்கத்துல போய் படுத்துட்டு கால நீட்டி சோம்பல் முறிச்சு தூங்க ஆரம்பிச்சான்.

திடீர்னு எழும்பி பிரிண்டர்க்குள்ள போனான். சரி போகட்டும்ன்னு நான் டைப் பண்ற வேகத்துல அப்புறம் அவன கவனிக்கல.

மதியம் சாப்பாடு வந்துச்சு. சாப்ட்டுட்டு கொஞ்சம் படுக்கலாம்ன்னு நினச்சு வந்து படுத்தேன். எங்க இவன காணோம்னு தேடிட்டே லேய் சக்தின்னு குரல் குடுத்த உடனே ஓடி வந்தான். வந்தவன் வழக்கம் போல முதுகுல தொத்திகிட்டான்.

எனக்கு முதுகுல நடக்குறப்ப ஒரு தள்ளாட்டம் தெரிஞ்ச மாதிரி பட்டுது. மோனே, அம்மா கிட்ட வான்னு கைய முதுகு பின்னால கைய விட்டு அவன கைல எடுத்தேன். என்னமோ மாற்றமா தெரிஞ்சுது எனக்கு.

என்னாச்சுடா செல்லம், உடம்பு சரியில்லையான்னு கேட்டுட்டு இருக்கும் போதே தடுமாற ஆரம்பிச்சான்.

டேய் சக்தி, என்னாச்சுடா, செல்லம் அம்மாவ பாரு, புள்ளைக்கு ஒண்ணுமில்லன்னு முதல்ல கார்த்திக்கு தான் போன் பண்ணினேன்.

கார்த்திக், சக்திக்கு என்னமோ ஆகிடுச்சுடா, பாரு அவன் உடம்பெல்லாம் நடுங்குதுன்னு ஓ...ன்னு அழ ஆரம்பிச்சேன். எ

கார்த்திக் தான், "ஏய், அவனுக்கு ஒண்ணும் ஆகாது, நீ அப்பாவுக்கு போன் பண்ணு, பக்கத்துல இருக்குற ஹாஸ்பிட்டல் கொண்டு போ"ன்னு சொன்னார்.

சரின்னு கட் பண்ணி அப்பாவுக்கு கூப்ட்டா, அப்பா எதோ வேலை விசயமா ரொம்ப தூரமா போயிட்டு இருந்தார். என் குரல் அப்பாவ என்னவோ பண்ணியிருக்கணும். அழாதன்னு சொல்லிட்டு, அடுத்த நிமிஷம் திரும்பி வீட்டுக்கு வர ஆரம்பிச்சுட்டார்.

தம்பிக்கு இந்த விஷயம் தெரியல, நான் ரூம்ல உக்காந்து சக்திய கைல வச்சுட்டு அவனையே பாத்துட்டு இருக்கேன். அவன் நிமிர்ந்து என் கண்ணை பாத்து என்னவோ சொல்ல நினைக்குறான்.

"ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்லடா செல்லம், எல்லாம் சரியாகிடும்"ன்னு அவனுக்கு ஆறுதல் சொல்ற மாதிரி எனக்குள்ளயே பினாத்திகிட்டு இருக்கேன். அவன கீழ விட்டா நடக்க முடியாம தடுமாறுறான். சரி, நீ என் கைக்குள்ளயே இருன்னு தூக்கி வச்சுகிட்டேன்.

கிட்டத்தட்ட நாப்பது நிமிஷம் கழிச்சு அப்பா வந்தாங்க. கூடவே டாக்டர். "அம்மு சக்திய கொண்டு வா"ன்னு ஹால்ல இருந்து குரல் குடுத்தாங்க.

தம்பி அப்ப தான் மாடில இருந்து கீழ இறங்கி வந்தான். அவனுக்கு புரிஞ்சிருக்கும். என் ரூம்க்குள்ள வந்து சக்திய கைல வாங்க வந்தான். சக்தி தான் எப்பவுமே யாரையுமே பாக்க மாட்டானே, ஓடிப் போய் ஒளிஞ்சுப்பான்ல, தம்பிய கண்டதும் ஓடி போய் ஒழிய ட்ரை பண்ணினான். "நானே எடுத்துட்டு வரேன்"னு அவன் கிட்ட சொல்லிட்டு, "வாடா, செல்லம், புள்ளைக்கு சரியாக தான டாக்டர் வந்துருக்கார்"ன்னு சமாதானப் படுத்தி, கைல பாதுகாப்பா வச்சு எடுத்துட்டு போனேன்.

சக்திய டாக்டர் கைல வாங்கினதும் அடம் புடிச்சான். தப்பிச்சு போக ட்ரை பண்ணினான். அவர் பாத்துட்டு, கொஞ்சம் சொட்டு மருந்து தந்து, குடுக்க சொல்லிட்டு, நோய் தீவிரமா தான் இருக்கு. இது இப்ப அணில்களுக்கு பரவிட்டு வர்ற நோய். பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டு போய்ட்டார்.

எனக்கு சக்தியோட அம்மா நியாபகம் தான் வந்துச்சு. நான் பாத்துப்பேன்னு நம்பிக்கைல தான அவன என்கிட்ட விட்டுட்டு அவ செத்துப் போனா... அந்த நம்பிக்கைய நான் காப்பாத்த வேணாமா?

எனக்கு கண்ணுல கண்ணீர் முட்டிட்டு வர ஆரம்பிச்சிடுச்சு. சொட்டு மருந்த குடுத்துட்டு நான் பாத்துக்குறேன்ப்பான்னு சொல்லிட்டு சக்திய எடுத்துட்டு ரூம்க்குள்ள வந்து கதவ மூடினேன். அப்பாவுக்கும் தம்பிக்கும் தெரியும், இனி என்னை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு...

அப்போ ஒருத்தங்க கால் பண்ணினாங்க. "காயு, சக்தி இப்ப எப்படி இருக்கான்?"ன்னு கேட்டதும், மருந்து குடுத்துருக்குன்னு சொன்னேன்.

பேசிட்டு இருக்கும் போதே, திடீர்னு அவன் உடம்பு துடிக்க ஆரம்பிச்சுது.

"சக்தி, செத்துடாதடா, அம்மா கிட்ட வந்துடுடா, வந்துடுடா... உனக்கு ஒண்ணும் ஆகலடா, நம்புடா"

என்னப் பண்றது நான்? என் கண்ணு முன்னால என் புள்ள உடம்பு தூக்கித் தூக்கிப் போடுது.

"ஐயோ என் புள்ள துடிக்குறான், டேய் டேய் டேய் போகாதடா, போகாதடா... போய்ட்டான் போய்ட்டான் போய்ட்டான்... சக்தி சக்தி சக்தி...."

அதுக்கு மேல என்னால பேச முடியல. போன் வச்சுட்டு அவனையே வெறிச்சுப் பாக்க ஆரம்பிச்சுட்டேன்.

திடீர்னு அசைய ஆரம்பிச்சான். “உனக்கு எதுவுமே ஆகாதுடா, முதல்ல அம்மாவ நம்புடா”

அப்படியே என் கண்ணையே பாத்தான். அவன முகத்துக்கு நேராத் தூக்கி சிரிச்சேன். அவன் மூக்குல என் மூக்க வச்சுத் தேய்ச்சேன். கண்டிப்பா போகணும்னா உடனே செத்துடுடா சக்தி...

கண்ணீர் மட்டும் கண்ணுல இருந்து வழிஞ்சுகிட்டே இருந்துச்சு. மனசு குமுற ஆரம்பிச்சது. “கடவுளே என் சக்திய கஷ்டப்படுத்தாத, அவன் செத்துருவான்னா, இப்பவே அவன கொன்னுரு”

அவ்வளவு தான் சக்தி மறுபடியும் துடிக்க ஆரம்பிச்சான். அவன் கால் எல்லாம் நீளமா நீட்டி விரைக்க ஆரம்பிச்சது. அமைதியா பாத்துகிட்டு இருந்தேன்.

போய்ட்டான்.

கார்த்திக்கு கால் பண்ணினேன். “கார்த்திக், சக்தி போய்ட்டான்”

“நீ அழாதடா செல்லம், பத்ரமா இரு ப்ளீஸ்”

“அவன் தூங்குறான் கார்த்திக், நான் அப்பா கிட்ட போய் அவன குடுத்துட்டு வர்றேன்”

“செல்லம், பத்ரம்டா... உனக்கு எதுவும் ஆகிடாம பாத்துக்கோடா, அவன் நம்ம கூட தாண்டா இருக்கான். நம்ம புள்ள வேற எங்க போய்ட போறான்?”

“ஆமாடா, சரி, நான் அப்புறம் பேசுறேன்”

அவனையே கொஞ்ச நேரம் பாத்தேன், மொபைல் எடுத்து என் சக்திய கடைசியா போட்டோ எடுத்தேன். நான் போட்டோ எடுத்தாலே கொஞ்சமும் போஸ் தராம அடம்புடிக்குற பய, அன்னிக்கி அமைதியா நான் போட்டோ எடுக்க எடுக்க டிஸ்டர்ப் பண்ணாம போஸ் குடுத்தான்.

கதவ தொறந்து, “அப்பா, சக்தி போய்ட்டான்ப்பா”

ஹாலுக்கு நடந்து போனேன். அப்பாகிட்ட குடுத்தேன், அப்பா கண்ணுல கண்ணீர். தம்பி கைய நீட்டினான்.

இதே தம்பி தான் அவன் குட்டியா இருந்தப்ப என் கைல கொண்டு வந்து தந்தான். அப்போ சக்தி துருதுருன்னு அவ்வளவு சுறுசுறுப்பா இருந்தான். என்னை விட தம்பிகிட்ட தான் அதிகமா ஒட்டினான். அன்னிக்கி தந்துட்டு போனவன் தான், இன்னிக்கி தான் சக்திய கைல வாங்குறான். அதுவும் உயிர் இல்லாம...

தம்பி, மெதுவா அவன தடவிக் குடுத்தான். கண்ணுல கொஞ்சம் ஈரம். சட்டுன்னு, “நான் தோட்டத்துல இவன கொண்டு போய் தூங்க வச்சுட்டு வரேன்”

மாமரம் ஒண்ணு வைக்கணும் தம்பி...

நாளைக்கு அம்மா தோட்டத்துல போய் எடுத்துட்டு வந்து வைக்குறேன்...

தம்பி போய்ட்டான். நான் ரூமுக்கு வந்து கதவை லாக் பண்ணினேன்.

கார்த்திக் கூப்ட்டார். “காயு, அவன் நம்ம புள்ள, எங்கயும் போகல, நம்ம கூட தான் இருக்கான் சரியா. நீ அழக் கூடாது. அத தாங்கிக்குற சக்தி எனக்கு இல்ல”

“இல்ல கார்த்திக், நான் அழவேயில்ல... நம்ம புள்ள தான, நம்ம கிட்ட தான் இருப்பான்”....

கட்டில்ல உக்காந்து தண்ணி குடிக்க பாட்டில கைல எடுத்தேன்.


தொப்........

முழிப்பு வந்தப்ப தரைல கிடந்தேன். மூஞ்சி எல்லாம் அடிபட்டு விண்விண்ணு வலிக்க ஆரம்பிச்சிருந்துச்சு. கைய ஊனி எழுந்திரிக்கலாம்ன்னு பாத்தா, கைய தூக்கவே முடியல...

கொஞ்சமும் அசைய முடியாம... எப்படியோ கஷ்டப்பட்டு கைநீட்டி மொபைல் எடுத்து அப்பாவ கூப்ட்டு... ஹாஸ்பிடல் போய் மூணு நாளா அவனையே நினைச்சுட்டு இருந்து, ஏதோ ஒரு புள்ளியில என் புள்ள என் கூட தான் இருக்கான்னு தெளிஞ்சு நாட்கள் வழக்கமான நாட்களா போக ஆரம்பிச்சிடுச்சு...

இப்பவும் என் புள்ள இங்க எல்லார் மனசுலயும் வாழ்ந்துட்டு தான் இருக்கான்... அவன புதைச்ச இடத்துல மாங்கன்னு நடலாம்னு நினச்சு, அது கிடைக்காம மறுநாள் மறுபடியும் சக்திய மண்ணோட தோண்டியெடுத்து, ஆழமா குழி வெட்டி, சக்திய தூங்க வச்சு, ஒரு தென்னம்பிள்ளைய நட்டு வச்சுட்டான் தம்பி. இன்னிக்கி சக்தி அந்த தென்னம்பிள்ள உடம்புல உயிர் சக்தியா ஓடிட்டு இருக்கான்...

அவன் ஏறி ஓடாத தென்னைமரமும் அவன் ரசிக்காத இயற்கையும் இன்னிக்கி அவன அன்போட பாத்துக்குது. என் புள்ள மேல இப்பவே அணில் குட்டிங்க ஏறி விளையாடுதுங்க....

என் புள்ள கண்டிப்பா சந்தோசமா இருப்பான்.



.

Friday 13 March 2015

பார்த்திக்காக -4



வாழ்க்கைல கடினமான பகுதின்னு
எதுவுமே இல்ல பார்த்தி...

பிரிவும் சங்கடங்களும்
எல்லாருக்கும் இயல்பானது தானே...

எப்பவுமே நாம நினச்சது எல்லாம்
நடக்கணும்னா எப்படி பார்த்தி,
வாழ்க்கைல ஒரு விறுவிறுப்பு வேணாமா?

இங்க பாரு, இப்போ நடந்துட்டு இருக்குறது
ஒரு அனுபவம்...
அத ரசிக்க கத்துக்கோ பார்த்தி...
சின்னப்புள்ள மாதிரி வருத்தப்பட்டுட்டு...
கண்ணத் தொடச்சுக்கோ...

நான் இங்க நல்லா தான் இருக்கேன் பார்த்தி...
சந்தோசமா இருக்கேன், காலேஜ் போறேன்
நல்லா சாப்டுறேன்...

உன்உள்ளங்கை தான் காணோம் பார்த்தி...
மனசு கனத்துப் போகும்போது
அது தான ஆறுதலா
என் கைய்யோட கை கோர்த்துக்க சொல்லும்...

எப்பவும் என் முதுகுல
நீ அழுத்திட்டு இருக்குறப்ப
இலவம் பஞ்சு மாதிரி
மனசு லேசாகிடும்ல பார்த்தி,
இப்ப உன் கை இல்லையா,
முதுகு பக்கமா பெரிய பாரம்
அழுத்துது பார்த்தி...

பார்த்தி, பார்த்தின்னு பாக்குற பக்கமெல்லாம்
நீ தான் தெரியுற பார்த்தி...
மத்தப்படி நான் நல்லா இருக்கேன் பார்த்தி...

நீ தான் சின்னப்புள்ள மாதிரி புலம்பிட்டே இருக்க...

காதலுடன்
-உன் ப்ரியம்வதனா

Wednesday 11 March 2015

நான் காயு பேசுறேன்...



எப்பவுமே எனக்கு பிடிக்காத, இல்ல பயப்படுற, இல்ல அலர்ஜி ஆக கூடிய வார்த்தைகளோட பயன்பாடுகள கண்டா அந்த இடத்துல இருந்து ஓடிடுவேன்...

அதென்ன அவ்வளவு பெரிய வார்த்தைகள்ன்னு கேக்குறீங்களா?
சாப்ட்டியா, தூங்குனியா, காலேஜ் போனியா மாதிரியான அதீத உரிமைகள்
உடம்பு இப்ப எப்படி இருக்கு, எல்லாம் சரியாகிடுச்சா, பயப்படாத, நாங்க இருக்கோம் அப்படிங்குற அக்கறை வார்த்தைகள்
அச்சச்சோ... ஐயையோ, ச்சோ ச்சோ அப்படியான உச்சுக் கொட்டுற வார்த்தைகள்

இதெல்லாம் சாதாரண வார்த்தைகள் தான? இத பாத்து நான் ஏன் பயப்படணும்னா அதுக்கு காரணம் இருக்கு.... இன்னொரு விஷயம், இந்த வார்த்தைகளுக்கே பயப்படுற நான், அதீத அன்பை பொழியுற உருகுற இடத்துலயும் இருக்கவா போறேன்? கண்டிப்பா மாட்டேன்.... எஸ்கேப் தான்...

சரி, நான் யாரு?

நான் காயத்ரி தேவி.... அப்படின்னு உங்களுக்கு எல்லாம் அடையாளப்பட்டவள். இந்த பேர் மேல எனக்கு தனி கிரேஸ் உண்டு. காரணம் என் அம்மா. என் அம்மா மட்டும் தான் என்னை காயுன்னு கூப்டுவா.... மத்தவங்கள பொருத்தவரைக்கும் ஒவ்வொரு பேரு. வீட்டுல பொதுப் பேரு அம்மு. நண்பர்கள் ஒரு மாதிரி கூப்டுவாங்க, நண்பிகள் ஒரு மாதிரி கூப்டுவாங்க, என்னோட கைட் வேற மாதிரி கூப்டுவாங்க...

ரொம்ப மொக்கப் போடுறேன்னு எனக்கே தெரியுது, இந்த பெயர் காரணம் ரொம்ப முக்கியமா என்ன?

என்னோட ஸ்கூல் லைப் நான் வரமா வாங்கிட்டு வந்த கிப்ட்ன்னு சொல்லலாம். அவ்வளவு சந்தோசம், அவ்வளவு ஆட்டம், அவ்வளவு அனுபவங்கள். என் வயசு பசங்க சினிமா போவாங்கனா எங்க குரூப் ஏதாவது கிராமத்துக்கு போவோம். நாங்க பேசாத சப்ஜெக்ட் கிடையாது. முக்கிய சப்ஜெக்ட் குடும்ப கட்டுப்பாடு பத்தினதா இருக்கும், கூடவே எயிட்ஸ், ப்ளட் டொனேசன், மது விலக்கு பத்தி மக்களோட மக்களா கலந்துப்போம். வயசுக்கு மீறின சிந்தனைகள், பேச்சுன்னு அப்பவே ரொம்ப சுத்துவேன். என்னோட பாட்டி சொல்லுவாங்க, இந்த பொண்ணு என்ன இப்படி அதீத வளர்ச்சியோட இருக்குன்னு.

எல்லாத்துக்கும் திருஷ்டி பொட்டு வைக்குற மாதிரி ப்ளஸ் டூ முடிச்சுட்டு காலேஜ் சேர்ந்து பத்து நாள் இருக்கும். சர் சர்ன்னு டூ-வீலர்ல பறந்துட்டு இருந்த காலம். ஒரு சின்ன ஆக்சிடென்ட்.

எதுக்கும் இருக்கட்டுமேன்னு தலைல ஒரு ஸ்கேன் எடுத்துப் பாத்துருவோம்ன்னு அம்மா சொல்ல, அடுக்கடுக்கா அதிர்ச்சி தாக்க ஆரம்பிச்சிடுச்சு.

நான் எப்பவுமே ஒரு அடாவடி. எனக்கு நானே பரிதாபப்பட்டுக்குறதுனா என்னன்னு எனக்கு தெரியாது. ஆனா இந்த அனுபவம் புதுசா இருந்துச்சு. செத்துப் போய்டுவேனோங்குற பயம். பதற்றம். அம்மா தான் கேட்டா, ஏன் செத்துப் போனா என்னத் தப்பு? சந்தோசமா செத்துப் போன்னு தைரியம் குடுத்தவ அவ தான்...

மாலிக்நன்ட் ப்ரைன் ட்யூமர். இந்த சினிமால எல்லாம் சொல்லுவாங்க, இன்னும் மூணு இல்ல ஆறு மாசம் தான்னு. அத கேக்குறப்ப என்னமோ பெரிய ஜோக் கேட்ட மாதிரி சிரிச்சிப்போம். ஆனா நிஜ வாழ்க்கைல கேக்கும் போது எனக்கு அம்மாவோட உள்ளங்கை மட்டும் தான் தேவைப்பட்டுச்சு. ராத்திரி நேரங்கள்ல அம்மா முதுகோட சேர்த்து அணைச்சிருப்பா. அது மாதிரியான சொர்க்கம் கிடைக்கவே கிடைக்காது, இந்த ராத்திரி கடைசி ராத்திரியா இருந்துரட்டும்னு நிறைய நாள் நினைச்சிருக்கேன்.

சர்ஜரி பண்ணினா பொழைக்க 20% சான்ஸ் இருக்கு, அதுவும் ஒரு வருசத்துக்கு தள்ளிப் போடலாம்னு டாக்டர்ஸ் சொன்னப்ப, நிறைய பேர் வேணாம்னு சொன்னாங்க. அம்மா தான், செத்தா இன்னிக்கே செத்துப் போ, இல்லனா என் புள்ளையா திரும்பி வான்னு சொன்னா... அவளுக்காக தான் நான் திரும்பி வந்தேன்னு சொன்னா, அது உண்மை தான்னு ஒத்துப்பீங்க தானே...

அப்புறமா வந்த ரேடியேசன், கீமோன்னு ஒரு வருஷம் வலி, வலின்னு வலிகளோடவே என்னை பழக்கி விட்டுடுச்சு. அதிதீவிரமா தலை வலிக்கும், கண்ணு சரியா தெரியாது, ஒரு மாதிரி வாமிட், கிடினஸ்... வெயில்-ல போகவே முடியாது. இத எல்லாம் தாண்டி நான் மறுபடியும் முதல்ல இருந்து காலேஜ் போனேன்.

எனக்கு பிடிச்ச விஷயங்கள்ல அதிதீவிரமா ஈடுபடுவேன். எனக்கான டார்ஜெட்கள நானே உருவாக்கிப்பேன். இதான் நான், என்னால எல்லாமே முடியும், முடியாதுங்குறது என் அகராதியிலயே இருக்கக் கூடாது. அத்தனை கஷ்டங்கள்லயும் கூட இருந்தது என்னோட அப்பா, அம்மா.... எனக்கான முழு சுதந்திரம் எனக்கு இருந்துச்சு. காலைல வெயில் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி காலேஜ் போய்டுவேன். சாயங்காலம் அஞ்சரை, வெயில் தாழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவேன். அந்த நேரம் காலேஜ் லைப்ரரி நிறைய யூஸ் பண்ணுவேன். நிறைய கத்துப்பேன். கார் டிரைவிங் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயம். சர்ர்ர்ர்ர்ர்ன்னு அதி வேகத்துல பறப்பேன்.

அப்புறம் மறுபடியும் தலைவலி. கழுத்து பின்பக்கமா நீர் கோர்த்துக்கும். மறுபடியும் வேர்கள் முளைக்க ஆரம்பிச்சிடுச்சு. இந்த தடவ சர்ஜரி இல்ல... ஆனா கீமோ எடுக்க வேண்டியதா போச்சு. அப்படி இதுவரைக்கும் மூணு கீமோ.... ஓவர் ஓவர்....

இதனால நிறைய சைட் எபக்ட். நியாபக மறதி. திடீர்னு ஒரு விசயத்த பத்தி பேசிட்டு இருப்பேன். அப்படியே மறந்துடுவேன். கேட்டுட்டு இருக்குறவங்க கிட்டயே என்ன, என்னன்னு திரும்ப திரும்ப கேப்பேன். கால்-ப்ளேடர்ல கல்லு சேர்ந்து, அத வேற ஒரு சுப வேளை சுப தினத்துல படக்குன்னு புடுங்கி எறிஞ்சாச்சு. அடுத்த டார்ஜெட் கர்ப்பப்பையா இருக்க, அது வேணும் இருக்கட்டும்னு மயக்கம், ப்ளீடிங், வலின்னு எல்லா மாசமும் அதிதீவிரமா போராடிட்டு இருக்கேன்.

நான் பொழைக்கவே மாட்டேன்னு வலி ஜீரணிக்க டாக்டர்ஸ் எனக்கு ட்ரக்ஸ் யூஸ் பண்ண சொல்லுவாங்க. அது ஏனோ, ரொம்ப பிடிவாதமா அத தள்ளி வச்சுட்டே வந்துருக்கேன். நாலஞ்சு தடவ எடுத்துருக்கேன்ங்குறது தனிக் கதையா இருந்தாலும் அதுல இருந்து வலுகட்டாயமா மீண்டுருக்கேன்.

கோபம், ஹிஸ்டீரியா எல்லாத்தையும் கடந்து இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா என்னை மீட்டுட்டு வர்றேன். இப்ப எல்லாம் வலினா என்னன்னு எனக்கு தெரியல... வலிக்குற நேரத்துல மட்டும் தான் கொஞ்சம் அழுக வருது, ஆனா அப்புறம் அத நினைச்சுப் பாத்தா அது ஒரு தனி ஜாலி.

இத எல்லாம் நான் ஏன் இப்ப சொன்னேன்? எனக்கே தெரியாது. உக்காந்தேன், எதோ ஒரு தீவிரத்துல டைப் அடிச்சேன், பேஸ் புக்ல போஸ்ட் பண்ணினேன். அவ்வளவு தான்... ஆனா இப்ப இத இங்க ப்ளாக்லயும் போஸ்ட் பண்ண ஒரு காரணம் இருக்கு. இனி நான் கடந்து வந்த பாதைகள உங்க கூட பகிர்ந்துக்க முடியும். வாசிக்குரவங்களுக்கு ஒரு தன்னம்பிக்கைய குடுக்க முடியும்... அதனால தான் என்னை பத்தி தீவிரமா பேசாம இருந்த நான் பேச ஆரம்பிச்சதா நினைச்சுக்குறேன்...

அப்புறம், எனக்கு அனுதாபங்களோ, ஆறுதலோ தேவையில்லைன்னு மறுபடியும் சொல்லிக்குறேன். காரணம், என்னோட சூல்நிலைகள, நான் ஈசியா கடந்து வந்துடுவேன், ஆனா இந்த வார்த்தைகள் சுருக்குன்னு முட்டுக்கட்டை போட்டுடும் அதனால தான்... ஏன் எதுக்கு இவளோட பதிவுகள் இப்படி இருக்கு, இவ என்ன சொல்ல வர்றான்னு நீங்க குழப்பிக்காம இருக்குறதுக்காக மட்டுமே இந்த பதிவு...

மத்தப்படி இதே அன்பு போதும், இதே விளக்கங்கள் போதும், வேற எந்த கேள்வியும் கேட்டுடாதீங்களேன் ப்ளீஸ்...
.


.

Tuesday 10 March 2015

பேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை

இந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு  போஸ்ட் போட்டேன்.  அது   இதோ,  இந்த  ரெண்டும்  தான்... இணையத்தில் பெண்கள் நிலை   இணையமும் குழந்தைகளுக்கான பாதுகாப்பும். அதுல நாம தெளிவா தான் எழுதியிருக்கோமானு கொஞ்சம் யோசிச்சு பாத்துகிட்டேன். அப்புறமா சில சம்பவங்கள உங்க கிட்ட பகிர்ந்துகிட்டா நீங்களும் எச்சரிகையா இருப்பீங்களேன்னு நினச்சு தான் மறுபடியும் அத பத்தி (அதாங்க பேஸ் புக் அனுபவம்) எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன். நடந்த சம்பவங்கள எழுதுறதுன்னு முடிவு பண்ணியாச்சு, ஏன் யாருக்கோ நடந்தத பத்தி எழுதணும்? எனக்கு நேர்ந்த சில அனுபவங்கள முதல்ல உங்க கிட்ட பகிர்ந்துக்குறேனே...

அது நான் பேஸ் புக் வந்த புதுசு. அப்போ நான் அம்மாவ இழந்து மனசு எல்லாம் வெறுமையா இருந்த நேரம். ஆதரவு தேடியும் அம்மா மடி தேடியும் மனசு அலைபாய்ஞ்சுட்டு இருந்த நேரம். அப்போ தான் இங்க ஒரு குரூப் ரொம்ப ஜாலியா, சந்தோசமா, ஒருத்தருக்கொருத்தர் கலாய்ச்சுகிட்டு இருந்தாங்க. நானும் அவங்க கூட போய் ஒட்டிகிட்டேன். நான் அங்க செல்ல பிள்ளை மாதிரி.

நான் பேஸ் புக் வந்தப்பவே அப்பா எனக்கு குடுத்த எச்சரிக்கை இது தான்

1. எந்த காரணம் கொண்டும் யாருக்கும் போன் நம்பர் குடுக்காத
2. உன்னை பத்தின தனிப்பட்ட தகவல்கள பரிமாறிக்காத
3. யாரையும் அதிகமா நம்பாத
4. எந்த சூழ்நிலையிலும் உன்னோட புகைபடத்த யார்கிட்டயும் குடுக்காத
5. உன் மனசுல எப்பவும் ஒரு எச்சரிக்கை மணி அடிச்சுட்டே இருக்கணும்
6. வெளி நபர்கள் யாரையும் வீட்டுக்குள்ள அனுமதிக்குற மாதிரி நடந்துக்காத

இது எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டுட்டு தான் நான் இங்க வந்தேன். ஆனா என் அம்மாவுக்கு என் மேல அபார நம்பிக்கை. என் பொண்ணு ரொம்ப தைரியசாலின்னு. ஆனா உண்மைல நான் அப்போ அன்புக்காக ஏங்குற பலஹீனம் உள்ள பெண்ணா தான் இருந்தேன்.

அந்த நேரத்துல தான் ஒருத்தர் அறிமுகமானார். என் அப்பா வயசு இருக்கும் அவருக்கு. நான் கூட அவர பெரிய மனுஷன்னு நம்பி என்னோட எல்லா டீடைல்ஸ் ஷேர் பண்ணிருக்கேன். அவர ஒரு உயர்வான ஸ்தானத்துல வச்சி, என்னோட பிரச்சனைகள் எல்லாம் சொன்னேங்க. அந்த வருஷம் எனக்கு பிறந்தநாள் வந்துச்சு. எனக்கு பிறந்தநாள் வாழ்த்தா ஒரு வீடியோ போட்டார். அப்போ அந்த வீடியோ போட தனக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு ஆனதுன்னும் என் கூட போன்ல பேச பல லெட்சம் செலவு ஆச்சுன்னும் (அத நான் வேற வாய தொறந்து ஆ... அப்படியானு மலைச்சு போய் கேட்டுட்டு இருந்தேன், பாருங்க நான் எவ்வளவு பெரிய முட்டாளா இருந்துருக்கேன்னு) சொன்னார். எல்லாமே எனக்காக தான் பண்ணினதாகவும் எனக்காக என்ன வேணா பண்ணுவேன்னும் சொன்னார். இதுக்கெல்லாம் காரணம் நீ என் பொண்ணு மாதிரின்னு அடிக்கடி சொல்லிக்குவார்.

அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா அவரோட அடக்குமுறை ஆரம்பிச்சுது. நான் பொதுவா எல்லாத்தையும் விட்டு குடுத்து போய்டுவேன். இங்க எல்லோரோட பிறந்தநாளுக்கும் வாழ்த்து போடுறத பாத்து எனக்கு போட்டோஷாப் கத்துக்கணும்னு ஆசை. அதனால நானும் பிறந்தநாள் வாழ்த்து போடணும்னு ஆசைப்பட்டேன். அப்போ அவர் பெயரோட என்னோட பெயர சேர்த்துப் போட சொன்னார். எல்லாத்துலயும் சுதந்திரமா இருந்து பழகினவ நான். ஆனாலும் அவர் சொல்றாரேன்னு அவர் பெயர சேர்த்து போட ஆரம்பிச்சேன்.

மெல்ல மெல்ல என்னோட எப்.பி பாஸ்வேர்ட் குடுன்னு கேட்டார். நான் தர முடியாதுன்னு சொன்னதுக்கு ரொம்ப சண்ட போட்டார். நானும் அப்படி என்ன ரகசியம் என்கிட்ட இருக்கு, போனா போகட்டும்னு குடுத்தேன். அப்புறமா தான் என்னோட ஐ.டியில இருந்து அவரே போஸ்ட் போட ஆரம்பிச்சார். நான் காலேஜ்ல இருக்கும் போது என்னோட ஐ.டில இருந்து போஸ்ட் வரும். ப்ரெண்ட்ஸ் நீ என்ன காலேஜ் போறதே இல்லையான்னு கேக்க ஆரம்பிச்சாங்க. எனக்கு இது ரொம்ப பெரிய பிரச்சனையா இருந்துச்சு. அப்புறம் ஒரு நாள் என்னோட பாஸ்வேர்ட் மாத்திட்டேன், அப்புறமாவும் அதை கேட்டு ரொம்ப ரொம்ப தொல்லை படுத்த அப்போ கூட எனக்கு புத்தி வராம மறுபடியும் குடுத்தேன்.

அடுத்த வருஷம் எனக்கு பிறந்தநாள் வந்துச்சு. என்னோட போட்டோவ போட்டு வாழ்த்து சொல்ல போறேன்னு சொன்னார். அப்படியே போடவும் செய்தார். நானோ என்னோட போட்டோ வெளில வரதுல எனக்கும் என் அப்பாவுக்கும் இஷ்டம் இல்ல, அதனால அந்த மாதிரி விளம்பரம் எனக்கு தேவ இல்ல உடனே அதை எல்லாம் ரிமூவ் பண்ணுங்கன்னு சொன்னேன். ஹப்ப்பா, அந்த ஆளு வானத்துக்கும் பூமிக்குமா குதிச்சார் பாருங்க, நான் மிரண்டு போய் நிக்குறேன். உன் அப்பன் என்ன உன்ன எவனுக்கும் கட்டிகுடுக்காம வச்சிருக்க போறானா? காலேஜ் போறியே, அங்க ஒருத்தனும் உன்ன பாக்க மாட்டானா, மூஞ்சில துணிய போட்டு பொத்தி விட்டா உன்ன டெய்லி காலேஜ் அனுப்புறான்னு வாய தொறந்தார் பாருங்க, அந்த ஆளு பேசுனதுல அப்படியே கூவம் ஸ்மெல்.



அப்போ தான் நான் உசார் ஆனேன். இருபது வயசு வர அன்ப கொட்டி கொட்டி வளத்த நம்ம அப்பாவுக்கு தெரியாதா, நமக்கு எது நல்லதுன்னு. அந்த ஆளு நல்லவரா இருந்துருந்தா என்ன சொல்லி இருக்கணும்? உன் அப்பா பேச்சை கேளுன்னு தானே. அது மட்டுமில்லீங்க, இந்த உலகத்துல நான் நேசிக்குற முதல் மனுஷன் என் அப்பா, அவர தப்பா பேசினா நாம விட முடியுமா? ஆனா அந்தாள அவ்வளவு தூரம் பேச விட்டது என் தப்பு தானே. அமைதியா விலகிடலாம்னு முடிவு பண்ணினா, அப்புறம் அந்த ஆளு தொடர்ந்து பண்ணின டார்ச்சர்ஸ் சொல்லி மாளாது. மவுனமா அந்த ஆளு சொன்னத கேட்டுக்குற மாதிரி அமைதியா போயிட்டேன்.

வீட்ல அப்பா எனக்கு கல்யாணத்துக்கு மாப்பிளை பாத்தாங்க. எனக்கு அதுல துளியும் விருப்பம் இல்ல. நான் வேற சும்மா இருக்காம அந்த ஆளு கிட்ட எனக்கு வீட்ல இருக்க இஷ்டம் இல்ல, எங்காவது போக போறேன்னு சொன்னேன். சொன்னதோட நான் அந்த விசயத்த மறந்தும் போயிட்டேன். அந்த ஆளோ அவர் மனைவி கிட்ட போய் காயத்திரி இனி நம்ம வீட்ல தான் இருக்க போறா, அவளுக்கு தேவையான வசதிய செய்து குடுன்னு சொல்லி இருக்கார். அவங்க எனக்கு போன் பண்ணி, உன் அப்பா உன்னோட நல்லதுக்கு தானே சொல்லுவாங்க, பையன் பாத்தா பாக்கட்டும், உனக்கு பிடிச்சா ஓகே சொல்லு, இல்லனா வேணாம்னு சொல்லு, அத விட்டுட்டு வீட்ட விட்டு வரணும்னு நினைக்குறது தப்புன்னு அட்வைஸ் பண்றாங்க. 

என்னடா இது, நாம எதோ ஒரு விரக்தியில தானே சொன்னோம், அதுக்கு இப்படி ஒரு ஏற்பாடானு பக்குனு ஆகிடுச்சு. அப்படி நான் வீட்டை விட்டு வந்தா என் அப்பா உயிருக்கு உத்தரவாதமில்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும். அந்த ஆளுகிட்ட சொன்னேன், என் அப்பாவுக்கு என் மேல உயிரு, நான் அப்படி எல்லாம் வீட்டை விட்டு வர மாட்டேன்னு. உடனே அந்தாளு என்ன சொன்னார் தெரியுமா? உன் அப்பன் ஒரு நாளு சாக வேண்டியவன் தானே, அவனுக்கு ஒண்ணும் ஆகாது, நீ கிளம்புன்னு சொல்றார். எப்படி இருக்கும் பாருங்க, நான் வர முடியாதுன்னு ஒரே வார்த்தையில சொல்லிட்டேன். அதுக்கு அடுத்த வார்த்தை இதையெல்லாம் என் பொண்டாட்டி தான் உனக்கு சொல்லி குடுத்துருப்பா, ஊருக்கு போனதும் அவளுக்கு நிச்சயம் தண்டனை உண்டுன்னு. இப்பவும் நான் பயந்துட்டேங்க, பாவம், இவரால ஏன் மம்மி (அவர் மனைவியை நான் மம்மின்னு தான் கூப்பிடுவேன்) பாதிக்கப்படணும்ன்னு சரி, சரி, இப்போ வீட்ல பிரச்சனை இல்ல, பிரச்சனை வந்தா பாத்துக்கலாம்னு முற்றுப்புள்ளி வச்சேன்.


என்னோட நிம்மதி போச்சு, ஒவ்வொரு நிமிசமும் அந்த ஆளு மிரட்டுறது தான் கண்ணுக்குள்ள நின்னுகிட்டே இருந்துச்சு. அடுத்த பிரச்சனையா அப்பா நான் எல்லோருக்கும் வாழ்த்து அட்டை அவர் பேரோட சேர்த்து போடுறத பாத்துட்டு, அது வேணாம்டா, யாரவது தப்பா நினைப்பாங்கன்னு சொன்னாங்க. நானும் சரிப்பான்னு சொல்லிட்டு அப்படி போடுறத நிறுத்திட்டேன். அந்த ஆளு கிட்டயும் சொல்லிட்டேன். இப்போ மறுபடியும் குதிக்க ஆரம்பிச்சார். அப்படினா நீ இனி யாருக்கும் வாழ்த்து அட்டை போட கூடாதுன்னு. இது என்னங்க நியாயம்? என்னோட மொத்த சுதந்திரத்தையும் பறிச்சு என்னை ஒரு அடிமை நிலைமைக்கு கொண்டு போன அந்த ஆள கண்டு நான் ஏன் அவ்வளவு பயந்தேன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு.

அந்த ஆளுக்கும் எனக்கும் பொதுவான நண்பர்கள்னு கல்யாணம் ஆன சில பெண்கள் இருந்தாங்க. நான் பேசலனா அந்த ஆளு அவங்க எல்லோருக்கும் போன் பண்ணி தொல்லை குடுத்துருக்கார். அவ எங்க, அவள என்கிட்ட பேச சொல்லுங்க அப்படி இப்படின்னு. அதுவும் ராத்திரி ஒரு மணி, ரெண்டு மணின்னு கால் பண்ணியிருக்கார். அவங்க கல்யாணம் ஆனவங்க, அவங்க வீட்ல அப்புறம் நிம்மதி இருக்குமா சொல்லுங்க? சரி, நம்மால ஏன் அவங்க எல்லாம் கஷ்டப்படனும்னு தான் நானே என்னை அவங்க எல்லோர்கிட்ட இருந்தும் விலக்கி கிட்டு அந்த ஆள் கிட்ட ஒரு அடிமை மாதிரி அவர் சொல்றதுக்கெல்லாம் தலையாட்ட வேண்டியதா போச்சு.

அந்த ஆளுக்கு ரொம்ப பண கஷ்டம்னு சொன்னாரு. அப்போ எனக்கு தெரிஞ்சவங்க ரெண்டு பேர்கிட்ட இருந்து கிட்டத்தட்ட எழுபதாயிரம் வரை வாங்கி குடுத்தேன். ஆனா அந்த ஆளு நான் வேணாம் வேணாம்னு சொல்லியும் ஒரு நாலு தடவ முன்னூறு முன்னூறு ரூபாய்க்கு மொபைல்க்கு டாப் அப் பண்ணி விட்டாரு. அதனால என்னை பிச்சைக்காரின்னு எல்லோர்கிட்டயும் போய் சொல்லி இருக்கார். நான் பண்ணினது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு இத படிக்குற உங்களுக்கு எல்லோருக்கும் புரிஞ்சு இருக்கும். என்னை திட்டோ திட்டுன்னு திட்ட நினைக்குற உங்களுக்கு ஒண்ணு சொல்லணும். நம்ம நாட்ல முக்கால் வாசி பேர் என்னை மாதிரி முட்டாளா தான் இருக்காங்க.

ஆனா எல்லாம் முட்டாள் தனமும் ஒரு நாள் முடிவுக்கு வரும்ங்க. எத்தனை நாள் தான் நான் அவருக்கு பயந்துட்டு இருப்பேன். என் வீட்ல விஷயம் தெரிஞ்சு, இதெல்லாம் சகஜம், அவன தூக்கி போடுன்னு சொன்னாங்க. இனி ஒரு நாளும் அவன கண்டு நீ பயப்படக் கூடாதுன்னு தைரியம் குடுத்தாங்க. அப்புறம் தான் எனக்கு பயம் தெளிஞ்சுது. என்னை சார்ந்த அந்த பெண்கள் எல்லார் கிட்ட இருந்தும் நான் ஒதுங்கிட்டதால அவங்களும் கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்கன்னு தான் நான் அடுத்தக் கட்டம் பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன்.

ரொம்ப கேர் புல்லா தான் அந்தாள டீல் பண்ண வேண்டியதா போச்சு. மறுபடியும் என்னோட பாஸ்வோர்ட் மாத்தினேன். அந்த ஆளு உடனே என்னோட ஈ.மெயில் மூலம் என்னோட பேஸ் புக் அக்கௌன்ட்டை ஹாக் பண்ணினார். பின் ரொம்பவே போராடி அந்த ஆள் கிட்ட இருந்து என்னோட பேஸ் புக் அக்கௌன்ட்டை மீட்டு அவரை ப்ளாக் செய்தேன். பின் ஏகப்பட்ட பேக் ஐ.டிக்கள் மூலம் அவர் உள் நுழைய பாக்கவே நான் எல்லோரும் பார்க்குற படி என்னோட வால் (wall) திறந்து விட்டேன். எனக்கு யார் மேலயும் பயம் இல்லைன்னு பிரகடனப்படுத்தினேன்.

அப்புறம் என்னங்க, அந்த ஆளு  என்னை கொலை செய்ய போறதாகவும், என்னோட ப்ரெண்ட்ஸ்சையும் கொலை செய்ய போறதாகவும் மிரட்டிகிட்டு இருந்தாராம். நான் எதையும் கண்டுக்குறது இல்ல. இந்த மாதிரி ஆளுங்களுக்கு பயந்தா நம்மோட வாழ்க்கையே போயிடும்னு நல்லா தெரிஞ்சுகிட்டேன். அதே மாதிரி ஆள் தெரிஞ்சு பழகணும், வெள்ளையா இருந்தா மட்டும் அது பாலாகிடாதுன்னும் புரிஞ்சுக்கிட்டேன்.  நாம இன்னொரு கதைய இன்னொரு நாள்ல பாக்கலாம்.

Monday 9 March 2015

காட்டான் பசங்க


எங்களோட காலேஜ் இருக்குற இடம் ஒரு சோ கால்ட் பட்டிக்காடு. இங்க படிப்பறிவே இல்லாத பீச் மக்கள் அதிகம். ப்ளஸ் டூ முடிச்சுட்டு பஸ்ட் இயர் படிக்க வர்ற பசங்க, பொண்ணுங்கன்னு அத்தன பேருக்கும் இங்கிலீஷ் மட்டுமில்ல தமிழே தகராறு தான்.

இங்க பசங்கள எல்லாம் பாத்தா (எங்க பாசைல சொன்னா) காட்டான் மாதிரி இருப்பாங்க. காதுல கடுக்கன் போடுறதும், முன்னாடி ஸ்பைக் வச்சு பின்னால ரப்பர் பேன்ட் வச்சு கொண்டை போடுறதும் ஃபேசன்ன்னு நினைப்பாங்க. பென்சில் டிப் பேன்ட்ஸ், எப்படா இடுப்புல இருந்து நழுவி விழுவோம்ங்குற ரேஞ்ச்ல ஜட்டிய வேற காட்டிட்டு இருக்கும். கைல ஒரு நோட் வச்சுட்டு, அதையும் சுட்டுவிரல்ல சுத்தி விட்டுட்டே வாய்ல எதையாவது மென்னுட்டு நடப்பாங்க. ஆக மொத்தம், பாத்தாலே தறுதலைங்கன்னு தான் தோணும்...

எங்க டிபார்ட்மென்ட் ரிசேர்ச் டிபார்ட்மென்ட்ங்குறதால இப்படி எல்லாம் பசங்க க்ளாஸ் வர்றது ரொம்ப குறைவு. நான் பார்த்த பழகின பசங்க, பெண்கள மதிக்குறவங்களா, அவங்களுக்காக மாங்கு மாங்குன்னு ஹெல்ப் பண்றவங்களா தான் இருந்தாங்க. ஆனாலும் ஹீரோயிசத்த காட்டி ஆளுக்கு ஒரு ஜோடி செட்டு சேத்துக்குறவங்களும் உண்டு. அத விடுங்க, அந்த பசங்க தனி ரகம். அப்புறமா பாத்துக்கலாம்.

நான் மேல சொன்ன காட்டான் பசங்க ரேஞ்ச்ல ரெண்டு பசங்க இந்த வருஷம், அதாவது ஆறு மாசம் முன்னாடி வந்து சேர்ந்தாங்க. லேப் பக்கமா வந்தா என்னோட கைட் இந்த பசங்க கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இருங்கன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க.

அந்த பசங்க உள்ள வந்ததும் நான் மேலும் கீழும் பாத்தேன். இங்க வாங்கடான்னு கூப்ட்டேன். வாய்ல சுயிங்கம் போட்டு அசை போட்டுட்டே வந்தாங்க. வாய்ல என்னடான்னேன். ஒரு மாதிரி அலட்சியமா ஒரு நமட்டு சிரிப்பு சிரிச்சுட்டு அவங்க பாட்டுக்கு திரும்பி நடக்க ஆரம்பிச்சுட்டாங்க.

மரியாதையா இங்க வாங்கன்னு குரல உயர்த்தி கூப்ட்டேன். நான் ஒரு சீனியர், இங்க நின்னு கத்திகிட்டு இருக்கேன், அதென்னடா கொஞ்சமும் மதிக்காம நீங்க பாட்டுக்கு போறீங்க, முதல்ல மரியாத குடுக்க கத்துக்குங்க, அப்புறம் படிப்பு விசயத்த பாத்துக்கலாம்ன்னு சொன்னேன்.

அவங்க பாட்டுக்கு திரும்பி வந்தாங்க. அதுல ஒருத்தன், உங்க பேர் என்னன்னான். செம கடுப்பு, ஆனாலும் சொன்னேன். நீங்க தானா அது, எல்லா புள்ளைங்களையும் ரொம்ப கஷ்டப்படுத்துவீங்களாமேன்னான் (இதெல்லாம் மட்டும் சரியா தெரிஞ்சி வச்சிருப்பாங்க). சரி சரி போய் உக்காருங்க, நாளைல இருந்து லேப் கோட் போட்டுட்டு வரணும், இப்படி வாய்ல எதையும் போட்டு மெல்லக் கூடாதுன்னு சொன்னேன். நம்மள மதிக்கணுமே, அலட்சியமா போய், பொம்பள புள்ளைங்கள அப்படியே சரிச்சு ஒரு லுக் விட்டாங்க, எதுத்தாப்ல போய் உக்காந்துகிட்டாங்க.

இதெல்லாம் உருப்படவே உருப்படாது, யாரு இவங்களுக்கு அட்மிசன் போட்டதுன்னு கூட இருந்த கோ-ரிசெர்சர்கிட்ட புலம்ப தான் முடிஞ்சுது.

அடுத்த நாள் ஒருத்தன் மட்டும் வந்தான். கூப்ட்டேன். என்னை நோக்கி நடந்து வந்தான், முதல்ல வாய்ல இருக்குறத வெளில போய் துப்பிட்டு வான்னேன். ச்சையோன்னு ஒரு பீல் குடுத்துட்டு துப்பிட்டு வந்தான். கைல நீள ஸ்கேல் இருந்துச்சு, அத வச்சு அந்த ஸ்பைக் மேல வச்சு என்னடா இதுன்னேன். இதான் மேடம் பேசன்ன்னான். நல்லா முள்ளம் பன்னி மாதிரி இருக்கன்னேன். ஹிஹின்னு நெளிஞ்சான், அதென்னடா காதுல தொங்கட்டான்ன்னு அடுத்து கேட்டேன், ஸ்டைல் மேடம்ன்னான். முதல்ல அத கழட்டு, இப்படி எல்லாம் வரக்கூடாதுன்னேன். ரொம்ப நேரம் முடியாதுன்னு பிடிவாதம் பிடிச்சான். இங்க பாரு, ஒண்ணு அத கழட்டு, இல்ல இன்னொரு காதுலயும் துளை போட்டு கம்மல் மாட்டிக்கன்னேன்.

ரொம்ப யோசிச்சுட்டு, நேத்து தான் காது குத்தினேன், இப்ப கழட்டினா காதுல ஓட்டை அடைச்சுக்கும், ரெண்டு நாள் கழிச்சு கழட்டுறேன்னான். சரி போன்னு விட்டுத் தொலைச்சேன்.

அடுத்த நாள் இன்னொருத்தன கூப்ட்டேன், ஏண்டா, இந்த சட்டைய இன்னும் கொஞ்சம் வெட்டிட்டா ஜேக்கட் ஆகிடும்ல, அது இன்னும் ஃபேசன் ஆச்சேன்னேன். ஒரு மாதிரி நெளிஞ்சுட்டு இதான் என்கிட்ட இருக்குன்னான். ஏன் வேற சட்டை எடுக்குறதுக்கு என்னன்னேன். காசு வேணும்லன்னு பொசுக்குன்னு சொல்லிட்டான். எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. அந்த பசங்க மேல திடீர்னு ஒரு பாசம் வர அந்த இடம் தான் காரணமா ஆச்சு.

அடிக்கடி க்ளாஸ் கட் அடிச்சுட்டு ஏதாவது மரத்து மூட்டுல படுத்து கிடப்பாங்க. கூப்ட்டு சத்தம் போட்டா ஏதாவது முணுமுணுத்துட்டே க்ளாஸ் போய்டுவாங்க. . பொம்பள புள்ளைங்கள மதிக்கவே மாட்டாங்க. அவங்க மொழில சொல்லப் போனா பொட்டைன்னு பச்சையா சொல்லுவாங்க. ரெக்கார்ட் எழுதுனா பொட்டைங்க எழுதி தருவாங்கன்னு சொல்லுவாங்க. அப்படி சொல்லாதீங்கடா, அவங்களும் உங்க கூட படிக்குறவங்க தானேன்னு நாலஞ்சு தடவ அழுத்தியும் கோபமாவும் சொன்னதுக்கு அப்புறம் அப்படி சொல்றதில்ல.

அப்புறம் எது சொல்லிக் குடுத்தாலும் ஏணைக்கு கேணையா பேசுவாங்க. எது சொன்னாலும் எதிர்த்து கேள்வி கேப்பாங்க. சில நேரம் காட்டமா திட்டுனாலும் என்னையறியாம சிரிச்சுடுவேன். கொஞ்சம் கொஞ்சமா நான் சொல்றத எல்லாம் கேக்க ஆரம்பிச்சாங்க. க்ளாஸ் எடுக்கும் போது நோட்ஸ் எடுங்கடான்னு சொன்னா பென் இல்லைம்பாங்க. சரி, இந்தா எழுதுன்னு பென் எடுத்துக் குடுத்தா தெரியுதோ தெரியலையோ மத்த பசங்க, பொண்ணுங்கள விட அதிகமாவே சொல்றத அவங்களுக்கு தெரிஞ்ச மாதிரி எழுதி வச்சிருப்பாங்க.

போக போக, நான் ஏதாவது ப்ராக்டிக்கல் செய்ய சொன்னா ஒருத்தன் அப்படியே நின்னாலும், வாடா, போய் செய்வோம், மேடம் சொல்றாங்கலன்னு அடுத்தவன் இழுத்துட்டு போவான். சும்மா சொல்லக் கூடாது, பெர்பெக்ட் பசங்க. எங்க டிபார்ட்மென்ட்ல எங்க டீம்கிட்ட மட்டும் உரிமையா பழகுவாங்க. நான் திட்டினா சிரிச்சுட்டே போங்க மேடம்னு சொல்லிட்டு போகுற அளவு நெருங்கிட்டாங்க.

அப்படியே போயிட்டு இருந்தப்ப ஒரு நாள் காலேஜ்ல ஓணம் கொண்டாடினோம். எல்லா புள்ளைங்களும் பசங்களும் ஏதாவது பெர்பார்ம் பண்ணிட்டு இருந்தப்ப இவங்க ரெண்டு பேரும் நின்னு கமன்ட் அடிச்சுட்டு இருந்தாங்க. நீங்களும் ஏதாவது செய்ங்கடான்னு சொன்னதும் ரொம்ப கூச்சத்துல நெளிஞ்சாங்க. புள்ளைங்க எல்லாம் மேடம், இவன் நல்லா டான்ஸ் ஆடுவான்னு சொன்னதும், வந்து ஒரு டான்ஸ் ஆடுடான்னு அதட்டினேன். சான்சே இல்ல, பையன் அப்படி ஒரு பெர்பாமன்ஸ். சந்தோசத்துல கைத்தட்டி எனக்கு ஆனந்த கண்ணீரே வந்துடுச்சு. நல்லா கவிதை வேற எழுதுவானாம். கேக்கவா வேணும், அவன் மேல எனக்கு ரொம்ப பாசம் வந்துடுச்சு.

அப்புறம் கொஞ்ச நாள் அந்த பையன் காலேஜ் வரல. அவன் ஏன் வரலன்னு விசாரிச்சப்ப பீஸ் கட்டலன்னு தெரிஞ்சுது. அவன வர சொல்லுங்கடா, பீஸ் தான சமாளிப்போம்னு சொல்லி விட்டேன். ஒரு நாள் வந்தான். ஏண்டா, காலேஜ் சரியா வந்தா தான பாடம் எல்லாம் படிக்க முடியும், பீஸ் கட்டலன்னு பீல் பண்ணாதடா, ஏதாவது செய்ய முடியுமான்னு ட்ரை பண்றேன்னேன்.

அப்புறம் மெதுவா, அப்பா என்ன பண்றாங்கன்னேன். கடலுக்கு மீன் பிடிக்க போவார்ன்னான். அம்மா என்ன பண்றாங்கன்னேன். அவங்க வீட்ல தான். உடம்பு சரியில்ல, ஆஸ்த்மான்னு சொன்னதும் ரொம்ப கஷ்டமா போச்சு. எதுவுமே சொல்லாம உக்காந்து இருந்தேன். திடீர்னு உடைஞ்சு அழ ஆரம்பிச்சுட்டான். வீட்ல ரெண்டு தங்கச்சிங்க, ஒரு தம்பி. மூணு பேரையும் ஹாஸ்டல்ல கொண்டு போய் விட்டாச்சு. வீட்டுக்கு ஒரு கதவு கூட கிடையாது. அப்பங்காரன் குடிச்சுட்டு வந்து அம்மைய போட்டு அடிப்பான். அவனால ஒரு பிரயோஜனம் இல்ல, நான் தான் லீவ் நாள்ல வேலைக்கு போய் சம்பாதிக்குறேன்னான்.

இப்ப அவனையும் படிக்க வேணாம்னு அவன் அப்பா சொன்னாராம். இவனுக்கு படிக்க ஆச. ஆனா தங்கச்சிங்களுக்கும் தம்பிக்கும் ஏதாவது செய்யணும். அம்மாவ பாத்துக்கணும். என்ன பண்ணுவான் அவன்? சரி, உன் வீட்ல இருந்து யாரையாவது வர சொல்லு, நான் பேசுறேன், உன் பீஸ் நாங்க பாத்துக்குறோம், காலேஜ் மட்டும் ஒழுங்கா வான்னு சொல்லி விட்டேன். அவன் வரவேயில்ல.

மறுபடியும் ஆள் விட்டு வர சொன்னதுக்கு என் பீஸ் அவங்க கட்ட வேணாம், அடுத்த வருஷம் நான் உழைச்சு சம்பாதிச்சு படிச்சிக்குறேன்னு சொல்லி விட்ருக்கான். அவனுக்கு உதவி பண்ணியிருக்கலாம் தான், என்னோட கோ-ரிசெசர்ஸ் அவன திரும்ப கூப்பிடலாம்னு சொன்னாங்க. ஆனா அவனோட அந்த வீராப்பு எனக்கு பிடிச்சிருக்கு. அவனோட சுயம் அது. அத மதிக்கலனா எப்படி. அடுத்த வருஷம், அவன் மறுபடி வருவான்னு நம்பிக்கையோட இருக்கேன்.

இன்னொருத்தன், அவன் போனதுக்கு பிறகு கொஞ்ச நாள் வந்தான். ஒரு செமஸ்டர் அட்டென்ட் பண்ணினான். திடீர்னு முடி எல்லாம் வெட்டி, நகம் வெட்டி, க்ளீனா வந்து நின்னான். என்னடான்னு ஒரே ஷாக். ஆர்மில ஆள் எடுக்குறாங்க மேடம், நான் போறேன்னு சொன்னான். இங்கயே ஒழுங்கா டிசிப்ளினா இருக்க மாட்டியே, ஆர்மில போய் எப்படி இருப்பன்னு கேட்டேன். அதெல்லாம் இருப்பேன். நாட்டுக்காக தான எதையோ பண்ணிட்டு போறேன்னு போய்ட்டான்.

இவனுங்க எல்லாம் காட்டான் பசங்க தான். வெளில இருந்து பாத்தா அன்-எஜுகேட்டட் பெல்லோஸ். ஆனா ஒவ்வொருத்தருக்குள்ளயும் எதோ ஒரு தாகம் இருக்கு, வீராப்பு இருக்கு. சரியான வழிகாட்டல் இல்லனா இந்த மாதிரியான பசங்க நிலைமை தான் என்ன?

ஆனா ஒரு விஷயம் சொல்லுவேன், என்னை பொறுத்தவரை இந்த பசங்க ஹீரோஸ் தான்... அதுவும் பக்கா நேட்டிவிட்டி ஹீரோஸ்...

Wednesday 4 March 2015

டெல்லி ரேப் - பெண்கள் மீதான வார்த்தை வன்முறைகள்



எங்க திரும்பினாலும் டெல்லி ரேப் கேஸ் பத்தி தான் பேச்சா இருக்கு. நேத்தே அது சம்மந்தமான போஸ்ட்ட பாத்துட்டு நிறையவே டென்சன்ல புலம்பிட்டே இருந்தேன்...

என்ன தான் சொல்ல வராங்க இந்த ரேபிஸ்ட்களும், அதை பிரசுரிக்கும் மீடியாக்களும்?

பொண்ணுனா எப்பவுமே ஒரு வேட்டைப் பொருள். ஆண்கள் வேட்டைக்காரர்கள். வேட்டைப்பொருள் எப்பவுமே வெளில வரக் கூடாது, மீறி வந்தா வேட்டையாட முழு சுதந்திரம் வேட்டைக்காரர்களுக்கு உண்டுன்னு சொல்ல வராங்களா இவங்க?
எவ்வளவு தைரியம் இருந்தா, அவ ரேப் பண்ணும் போது எதிர்க்காம இருந்துருக்கணும், அப்படி இருந்திருந்தா அவள கொல்ல வேண்டிய நிலை வந்திருக்காது, எனவே இது ஒரு ஆக்சிடென்ட்ன்னு பேட்டி குடுத்துருப்பான்?

அதுலயும் ரேப் பண்றவங்களுக்கு மரண தண்டனை குடுக்கக் கூடாதாம், ஏன்னா, முன்னாடி எல்லாம் ரேப் பண்றவன் வெறும் ரேப் மட்டும் பண்ணிட்டு அய்யோ பாவம் பொழச்சு போகட்டும்னு உயிரோட விட்ருவானாம். இந்த தண்டனை நிறைவேற்றப் பட்டா அப்புறம் ரேப் பண்றவன், அவ காட்டிக்குடுத்துடுவாங்குற பயத்துல கொலை பண்ணிருவானாம். அதனால் அவனை தாராளமா ரேபிஸ்ட்டா சுதந்திரமா விடுங்க, கொலைகாரனா மாத்திராதீங்கன்னு சமுதாயத்துக்கு ஒரு உயரிய அட்வைசும் சொல்லியிருக்கான்.

இத பத்தி அவன திட்டி ஏகப்பட்ட எப்.பி போஸ்ட்ஸ்... சிலபேர், அவன் குடும்ப பெண்கள இழுத்து வக்கிரமாவும், சிலர் அமைதியான முறைல மனக்குமுறலையும் வெளிப்படுத்தியிருக்காங்க. ஸ்டேடஸ் மட்டுமே கவனத்துல கொள்ளாம கமண்ட்ஸ்ன்னு பாத்தா அவன் அம்மாவ அங்க இரும்பு கம்பி வச்சு அங்க குத்தி கிழிச்சா அவனுக்கு வலி தெரியும்னு ஒருத்தர் கமன்ட் போட்ருக்கார். ஏன்யா, அந்த பொண்ண கற்பழிச்சு கொன்னு, அது விதி அதோட முடிஞ்சு போச்சு. அவளுக்கு சப்போர்ட் பண்றேன்னு ஊர்ல இருக்குற பொண்ணுங்கள எல்லாம் வார்த்தை கற்பழிப்பு பண்ணி அற்ப சுகம் காணுற உங்கள எந்த லிஸ்ட்ல சேர்க்க? இதுல அவன் அக்கா தங்கச்சிங்கள அப்படி பண்ணணும், அப்போ இப்படி தான் பேசுவானான்னு அதிமேதாவித் தனமா கேள்வி கேட்டு அங்கயும் பொண்ணுங்கள தான் கற்பழிக்குறாங்க. அதான் அந்த வக்கீல் சொல்லிட்டான்ல, என் வீட்டு பொண்ணா இருந்தா அவள இழுத்துட்டு போய் எல்லார் முன்னாலயும் பெட்ரோல் ஊத்தி கொளுத்துவேன்னு... ரேப் பண்ணினா எதிர்த்து போராடக் கூடாது, ரேப் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தா அவள பெட்ரோல் விட்டு கொளுத்தணும்... பெண்களுக்கான அவனுங்க எண்ணங்களுக்கும் தர்மத்துக்கும் ஒரு சபாஷ்... அவனுங்க குடும்பத்துல பொறந்த பாவத்துக்கு இன்னும் அந்த பொண்ணுங்க எவ்வளவு தான் அனுபவிக்கணும் சொல்லுங்க....

இந்த கேஸ் சம்மந்தமா பொங்குற அத்தனை ஆண்/பெண்களுக்கும் என்னோட ஒரு ரிக்வஸ்ட்...

தயவு செய்து அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்றேன் பேர்வழினோ, இல்ல, அந்த ரேபிஸ்ட்ட திட்டணும்ங்குற சாக்குலயோ அவங்க வீட்டு பெண்கள தெருவுல இழுக்காதீங்க. அப்புறம் கற்பழிக்குற அவனுகளுக்கும் வார்த்தையாலயே கற்பழிச்சு, பலபேரையும் கற்பழிக்க தூண்டுற உங்களுக்கும் வித்யாசமே இல்லாம போய்டும்...
உங்கள் வார்த்தைகள சுயசோதனை செய்துக்கோங்க, வக்கிரம் உங்களுக்குள்ளயே எத்தனை நிறைஞ்சு ததும்புதுன்னு தெரிஞ்சிடும்...

இன்னொரு விஷயம், பெண் பிள்ளைகள கண்டிச்சு வளர்க்கணும், அவளுக்கு புத்தி சொல்லணும்னு சொல்ற சமூகம், அவன் தப்பு பண்ணினது பெண்களால தான்னு பழி போடுற சமூகம், ஆண் பிள்ளைகள் இனி நல்லவிதமா வளரணும்னு நல்லொழுக்கத்த சொல்லித் தர தயாரா இல்ல...

எண்ணங்களை நல்ல விதமாய் நினைப்போம், விதைப்போம், நடப்போம்... ஆண் பிள்ளையா இருந்தாலும் சரி, பெண் பிள்ளையா இருந்தாலும் சரி, பிறரையும் தன்னைப் போல் நேசிக்குற வித்தைய கத்துக் குடுப்போம்... இதுக்கு மேல வேற என்னத்த சொல்ல... இந்த சமூகத்துக்கிட்ட மவுனமா தான் போக வேண்டியிருக்கு...

Monday 2 March 2015

அனேகன் - பார்த்த கதை



நேத்து சாயங்காலம் வரைக்கும் சோம்பேறித்தனமா போன நாள், சாயங்காலம் ஆனதும் பக்கத்து வீட்டுப் பொண்ணு வந்து அக்கா, படத்துக்கு போவோமான்னு கேக்க கடகடன்னு பிசியாகிடுச்சு...

கொஞ்ச நாளாவே தியேட்டர் போய் படம் பாக்கணும்ன்னு ஆசை இருந்துட்டே இருந்துச்சு. இங்க குடும்பத்துல பசங்க படம் பாக்க போனாலும் ஏனோ, ஏதாவது ஒரு காரணத்தால என்னால போக முடியல... அதுவும் எப்பவும் இங்க செகண்ட் ஷோ தான் போறது. எல்லாம் எங்க குடும்பத்து மாமா பசங்க, சித்தி பசங்கன்னு ஒரு பதினஞ்சு இருபது பேர் கேங்கா போவோம். அதெல்லாம் ஒரு ஆறு மாசத்துக்கு முந்திய அழகிய கனாக்காலம். எப்ப இந்த கோச்சடையான தியேட்டர்ல பாத்துட்டு மெர்சலானோமோ (இதுக்கு அர்த்தம் அந்த அன்பு, காதல், நேசம்னு எல்லாம் அர்த்தம் இல்ல.... கிர்ர்ர்ர்... விடுங்க அந்த சோக கதைய என் வாயல சொல்லிட்டு) அப்பவே இன்றே கடைசி மாதிரி இவ்வளவு நாள் வேற எந்த படமும் பாக்காம நாள் ஓடி போச்சு...

படத்துக்கு போகணும்னு முடிவெடுத்த உடனே நந்து அம்மாவுக்கு கால் பண்ணி, அவள வர சொல்லுங்கன்னு சொல்லிட்டு, அப்பா கிட்ட போய் அப்பா, வாங்க படத்துக்கு போகலாம்னு கூப்ட்டேன். “என்னது, படத்துக்கா, நானா.... இந்த வயசான காலத்துல நான் எப்படி தியேட்டர் எல்லாம்.... நான் வரல, நீங்க எல்லாரும் தம்பிய கூப்ட்டுட்டு போங்க”ன்னு அப்பா முடியாதுன்னு சொல்லிட்டார்.

பத்து நாள் முன்னால தான டை எல்லாம் அடிச்சு, கிளாமரா போட்டோ எல்லாம் எடுத்தேன், அதுக்குள்ள வயசாகிடுச்சா, இந்த வார்த்தைய அப்பா இதுவரைக்கும் சொன்னதே இல்லையேன்னு இடுப்புல ரெண்டு கையையும் ஊனிக்கிட்டு, “என்ன மிஸ்டர் பெருமா, பொண்ணு கிண்ணு கெட்டுற மாதிரி ஏதாவது ஐடியாவா, வயசாகிடுச்சுன்னு சீன் போடுறீங்க.... எங்க அம்மாவுக்கு துரோகம் பண்ண நினச்சீங்க, கொன்றுவேன் கொன்னு”ன்னதும் அப்பாவுக்கு சிரிப்பு தாங்கல... “அட இன்னும் ஒரு பத்து நாள் பொறு, இந்த வாக்கிங் ஸ்டிக்க தூர எறிஞ்சுட்டு வரேன்”னார்... இதுக்கு மேல அப்பாவ கட்டாயப்படுத்த முடியல...

சரி, தம்பிய கூப்பிடலாம்னு பாத்தா, அவன் ஒரு நாளும் இல்லா திருநாளா பிரெண்ட்ஸ் பாக்கப் போறேன்னு கிளம்பிட்டு இருந்தான். சரிதான், அப்போ இன்னிக்கி ப்ரோக்ராம் கட்ன்னு நினச்சுட்டு சோகமா இருந்தப்ப தான் கிச்சனுக்குள்ள இருந்து பாட்டி வாய்ஸ், கடமுட கடமுடன்னு பாத்திரம் உருட்டுற சத்தத்தோட வருது. என்னன்னு கூர்ந்து கவனிச்சா “ ஊருல இல்லாத அதிசயமா பொட்ட புள்ளைய பெத்து வச்சிருக்கான். அது ஊருக்கு அடங்காம ராத்திரி நேரத்துல ஊர் சுத்த கிளம்புது”ன்னு ஒரே புலம்பல்....

சட்டுன்னு கோபம் தலைகேறிச்சு. நேரா அப்பா கிட்ட போனேன், “அப்பா, நான் தனியா படம் பாக்கப் போறேன், ராத்திரி பதினோரு மணி ஆகும் வீட்டுக்கு வர... என்னோட கார் சாவி எங்க”ன்னு கேட்டேன். அப்படியே மொபைல் எடுத்து அந்த பொண்ணையும் வர சொல்லிட்டு, கூடவே நந்து வீட்டுக்கும் கால் பண்ணிட்டு, முக்கியமான ஒரு போன் கால் பேசிட்டு இருக்கும் போதே, ரெண்டு பேரும் வந்து சேர்ந்துட்டாங்க.

கடகடன்னு கிளம்பி, கார் சாவிய எடுத்துட்டு, ஹப்பா..... எவ்வளவு நாள் கழிச்சு மூணு பொம்பள புள்ளைங்க வெளில தனியா போகப்போறோம்.... அப்பாவ ஓடிப் போய் கட்டிபிடிச்சு கன்னத்துல உம்மா குடுத்து தேங்க்ஸ்ப்பா சொல்லிட்டு, பாட்டி கத்தல் தூரமா தேய தேய காதுலயே வாங்காம எஸ்கேப்....

இன்னிக்கி சண்டே வேறயா, மால்-ல கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம். நாங்க போனப்ப அப்ப தான் ஒரு படம் விட்டு நிறைய பேர் கிளம்பிட்டு இருந்தாங்க (மொத்தம் மூணு தியேட்டர், சோ மூணு படம் அந்த மால்ல ஓடிச்சு). நான் வேற ரிவர்ஸ் எடுக்குறதுல செம டேலேன்ட், ரைட் போனா லெப்ட்ல போவேன், லெப்ட்ல போ-ன்னா ரைட்ல போவேன்... ஒரு ஸ்டேஜ்ல அசையவே முடியாம ஜாம் ஆகியாச்சு. எப்ப அங்க போனாலும் எங்கள பாத்தாலே சிரிச்சுட்டே பார்க்கிங் பண்ண அங்க உள்ள செக்யூரிட்டிஸ் ஹெல்ப் பண்ணுவாங்க. பின்ன, எப்பவுமே வாய் நிறைய புன்னகையோட தேங்க்ஸ் சொல்லுவோம்ல அவங்களுக்கு. இன்னிக்கி என்னடானா, ஒரு பதினஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க, அப்புறம் பார்க்கிங் ஒதுக்கி தரோம்னு சொல்றாங்க. நேரம் வேற ஆறரை ஆகிடுச்சு. அனேகன் ஆறரைக்கு தான் ஷோ-ன்னு சொன்னாங்க. என்னப்பண்ணலாம்ன்னு ஒரே யோசனை. அப்படியே ரோட்டுலயே காரை டூ-வீலர் பார்க்கிங் பக்கமா ஒதுக்கி, லாக் பண்ணிட்டு வசமா எஸ்கேப் ஆகிட்டோம்...

படம் தேர்ட் ப்ளோர்... கடகடன்னு ஸ்டெப்ஸ் ஏறிடலாம்னு பாத்தா, நந்து நான் லிப்ட்ல தான் வருவேன்னு ஒரே அடம். மூணு டிக்கெட் எடுத்து, தியேட்டர்குள்ள போகும்போது முதல் பாட்டு ஓடிட்டு இருக்கு.... பாட்ட வேற இடைல இருந்து பாத்தோமா, ஒரே கன்பியூசன்... சரி போக போக புரியும்னு மனச தேத்திகிட்டு படம் பாக்க ஆரம்பிச்சோம்...

ஆனா சும்மா சொல்லக் கூடாது, படத்துல கத என்னன்னு கேக்காம படம் பாத்தா முதல் பாதி செம கலகல... எப்பவும் உர்ர்ன்னு மூஞ்சி வச்சுட்டு படம் பாக்குற நானே கெக்கே பிக்கேன்னு சிரிக்கத் தான் செய்தேன்...

அம்மா கார்த்திக் ஃபேன். அதனாலயே எனக்கு கார்த்திக் பிடிக்கும். கார்த்திக் நடிச்சதுல ஏனோ எனக்கு பிஸ்தா ரொம்ப ரொம்ப பிடிக்கும். திரும்ப திரும்ப பாத்த படம். ஹப்பா இந்த வயசுலயும் கார்த்திக் என்ன ஸ்மார்ட்... ஐ லவ் யூ கார்த்திக்...

ஏம்பா, படம் ஆரம்பத்துல நல்லா தான போயிட்டு இருந்துச்சு. அது ஏன் சும்மா ஒளிஞ்சுட்டு இருந்த புள்ளைய கூட சுத்துற புள்ள பொம்ம மாதிரி வெறப்பா நடந்து போய் இந்தா இருக்காங்கன்னு கூடைய கைகாட்டிச்சு? ஆனா அதுல தனுஷ் மண்டைல பாயுற புல்லட் டப்ன்னு இதயத் துடிப்ப நிக்க வச்சுடுச்சு... எனக்கு மூஞ்சியெல்லாம் தொங்கிப் போச்சு.

தனுஷ எல்லாம் பாத்தாலே பிடிச்சுது, அந்த ஹீரோயின தான் பாக்க பாக்க பிடிச்சுது. படம் ஆரம்பிச்சப்ப நிஜமாவே தனுஷ் சொல்ற மாதிரி அது மொக்க பீஸ் தான், எவ்வளவு நேரம் வேணும்னாலும் பாக்கலாம்... ஹஹா... தனுஷ் அப்படி சொல்ற அந்த சீன் செம செம.... அய்யோ தனுஷ் என்னா ஸ்மார்ட் அதுல...

அப்புறம் கதை எல்லாம் என்னன்னு கேக்காதீங்க, செகண்ட் ஹாப் எனக்கு சொதப்பலா தான் பட்டுச்சு. அய்யே, எவ்வளவு ஸ்மார்ட் கார்த்திக், ஹீரோயின் ஜோடினப்ப சகிக்கல... கார்த்திக், நீங்க ஓல்ட் மேனா மட்டுமே வந்துருக்கலாம். ஆனா ஒண்ணு, கார்த்திக் மாதிரியே தனுஷ் இமிடேட் செய்ற இடத்துல எவ்வளவு ஸ்மார்ட்டா அத உக்காந்துகிட்டே ரசிப்பார் தெரியுமா.... கார்த்திக் எப்பவுமே கார்த்திக் தான்...

ஒரு வழியா சுமார் முப்பது நிமிஷம் பொறுமைய ரொம்ப சோதிச்சு, விட்டா போதும்னு படம் முடிஞ்சதும் வெளில ஓடி வந்து அப்படியே புட் கோர்ட்க்குள்ள என்ட்டர் ஆகிட்டோம்... நேரம் ஒன்பது முப்பது.

அப்படியே ஒரு பக்கெட் சிக்கன் ஆர்டர் பண்ணி, மூணு பேரும் மூச்சு முட்ட எல்லாத்தையும் தின்னு தீத்துட்டு வெளில வந்து பாத்தா வண்டி அனாதையா நடு ரோட்டுல நிக்குற மாதிரி நின்னுட்டு இருக்கு. சாரி செல்லம் லேட் ஆகிடுச்சுன்னு அதுகிட்ட சாரி கேட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணி, அப்படியே ரிவர்ஸ் எடுத்து, நேரா ரோட்டுல நூறு கிலோமீட்டர் வேகத்துல வண்டிய விட்டு வீடு வந்து சேர்ந்தப்ப மணி பத்தே முக்கால்... அதுவரைக்கும் யார் வீட்ல இருந்தும் ஒரு போன் கால் வரல.... உள்ள வந்ததும் அப்பா ஹால்ல உக்காந்து படம் எப்படி இருக்குன்னு கேட்டார். உங்க அளவு சைட் அடிக்குற மாதிரி யாரும் ஸ்மார்ட்டா இல்லப்பான்னு சொன்னேன்.

இப்படியே புள்ளைக்கு செல்லம் குடு... ஒரு நாள் அவ உன்ன அழ வைக்கப் போறான்னு பாட்டியோட வாழ்த்து மழைல நனஞ்சுட்டே நான் தூங்கப் போயிட்டேன்...

அனேகன், பாருங்க... நிறைய சிரிக்கலாம், போர் அடிச்சு போய் யாரையாவது அடிக்கலாம் போல கொலைவெறி ஆகலாம்... மொத்தத்துல கலவை தனுஷ் கிட்ட மட்டும் இல்ல, படத்துலயும் தான்...

.