இங்க பசங்கள எல்லாம் பாத்தா (எங்க பாசைல சொன்னா) காட்டான் மாதிரி இருப்பாங்க. காதுல கடுக்கன் போடுறதும், முன்னாடி ஸ்பைக் வச்சு பின்னால ரப்பர் பேன்ட் வச்சு கொண்டை போடுறதும் ஃபேசன்ன்னு நினைப்பாங்க. பென்சில் டிப் பேன்ட்ஸ், எப்படா இடுப்புல இருந்து நழுவி விழுவோம்ங்குற ரேஞ்ச்ல ஜட்டிய வேற காட்டிட்டு இருக்கும். கைல ஒரு நோட் வச்சுட்டு, அதையும் சுட்டுவிரல்ல சுத்தி விட்டுட்டே வாய்ல எதையாவது மென்னுட்டு நடப்பாங்க. ஆக மொத்தம், பாத்தாலே தறுதலைங்கன்னு தான் தோணும்...
எங்க டிபார்ட்மென்ட் ரிசேர்ச் டிபார்ட்மென்ட்ங்குறதால இப்படி எல்லாம் பசங்க க்ளாஸ் வர்றது ரொம்ப குறைவு. நான் பார்த்த பழகின பசங்க, பெண்கள மதிக்குறவங்களா, அவங்களுக்காக மாங்கு மாங்குன்னு ஹெல்ப் பண்றவங்களா தான் இருந்தாங்க. ஆனாலும் ஹீரோயிசத்த காட்டி ஆளுக்கு ஒரு ஜோடி செட்டு சேத்துக்குறவங்களும் உண்டு. அத விடுங்க, அந்த பசங்க தனி ரகம். அப்புறமா பாத்துக்கலாம்.
நான் மேல சொன்ன காட்டான் பசங்க ரேஞ்ச்ல ரெண்டு பசங்க இந்த வருஷம், அதாவது ஆறு மாசம் முன்னாடி வந்து சேர்ந்தாங்க. லேப் பக்கமா வந்தா என்னோட கைட் இந்த பசங்க கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இருங்கன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க.
அந்த பசங்க உள்ள வந்ததும் நான் மேலும் கீழும் பாத்தேன். இங்க வாங்கடான்னு கூப்ட்டேன். வாய்ல சுயிங்கம் போட்டு அசை போட்டுட்டே வந்தாங்க. வாய்ல என்னடான்னேன். ஒரு மாதிரி அலட்சியமா ஒரு நமட்டு சிரிப்பு சிரிச்சுட்டு அவங்க பாட்டுக்கு திரும்பி நடக்க ஆரம்பிச்சுட்டாங்க.
மரியாதையா இங்க வாங்கன்னு குரல உயர்த்தி கூப்ட்டேன். நான் ஒரு சீனியர், இங்க நின்னு கத்திகிட்டு இருக்கேன், அதென்னடா கொஞ்சமும் மதிக்காம நீங்க பாட்டுக்கு போறீங்க, முதல்ல மரியாத குடுக்க கத்துக்குங்க, அப்புறம் படிப்பு விசயத்த பாத்துக்கலாம்ன்னு சொன்னேன்.
அவங்க பாட்டுக்கு திரும்பி வந்தாங்க. அதுல ஒருத்தன், உங்க பேர் என்னன்னான். செம கடுப்பு, ஆனாலும் சொன்னேன். நீங்க தானா அது, எல்லா புள்ளைங்களையும் ரொம்ப கஷ்டப்படுத்துவீங்களாமேன்னான் (இதெல்லாம் மட்டும் சரியா தெரிஞ்சி வச்சிருப்பாங்க). சரி சரி போய் உக்காருங்க, நாளைல இருந்து லேப் கோட் போட்டுட்டு வரணும், இப்படி வாய்ல எதையும் போட்டு மெல்லக் கூடாதுன்னு சொன்னேன். நம்மள மதிக்கணுமே, அலட்சியமா போய், பொம்பள புள்ளைங்கள அப்படியே சரிச்சு ஒரு லுக் விட்டாங்க, எதுத்தாப்ல போய் உக்காந்துகிட்டாங்க.
இதெல்லாம் உருப்படவே உருப்படாது, யாரு இவங்களுக்கு அட்மிசன் போட்டதுன்னு கூட இருந்த கோ-ரிசெர்சர்கிட்ட புலம்ப தான் முடிஞ்சுது.
அடுத்த நாள் ஒருத்தன் மட்டும் வந்தான். கூப்ட்டேன். என்னை நோக்கி நடந்து வந்தான், முதல்ல வாய்ல இருக்குறத வெளில போய் துப்பிட்டு வான்னேன். ச்சையோன்னு ஒரு பீல் குடுத்துட்டு துப்பிட்டு வந்தான். கைல நீள ஸ்கேல் இருந்துச்சு, அத வச்சு அந்த ஸ்பைக் மேல வச்சு என்னடா இதுன்னேன். இதான் மேடம் பேசன்ன்னான். நல்லா முள்ளம் பன்னி மாதிரி இருக்கன்னேன். ஹிஹின்னு நெளிஞ்சான், அதென்னடா காதுல தொங்கட்டான்ன்னு அடுத்து கேட்டேன், ஸ்டைல் மேடம்ன்னான். முதல்ல அத கழட்டு, இப்படி எல்லாம் வரக்கூடாதுன்னேன். ரொம்ப நேரம் முடியாதுன்னு பிடிவாதம் பிடிச்சான். இங்க பாரு, ஒண்ணு அத கழட்டு, இல்ல இன்னொரு காதுலயும் துளை போட்டு கம்மல் மாட்டிக்கன்னேன்.
ரொம்ப யோசிச்சுட்டு, நேத்து தான் காது குத்தினேன், இப்ப கழட்டினா காதுல ஓட்டை அடைச்சுக்கும், ரெண்டு நாள் கழிச்சு கழட்டுறேன்னான். சரி போன்னு விட்டுத் தொலைச்சேன்.
அடுத்த நாள் இன்னொருத்தன கூப்ட்டேன், ஏண்டா, இந்த சட்டைய இன்னும் கொஞ்சம் வெட்டிட்டா ஜேக்கட் ஆகிடும்ல, அது இன்னும் ஃபேசன் ஆச்சேன்னேன். ஒரு மாதிரி நெளிஞ்சுட்டு இதான் என்கிட்ட இருக்குன்னான். ஏன் வேற சட்டை எடுக்குறதுக்கு என்னன்னேன். காசு வேணும்லன்னு பொசுக்குன்னு சொல்லிட்டான். எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. அந்த பசங்க மேல திடீர்னு ஒரு பாசம் வர அந்த இடம் தான் காரணமா ஆச்சு.
அடிக்கடி க்ளாஸ் கட் அடிச்சுட்டு ஏதாவது மரத்து மூட்டுல படுத்து கிடப்பாங்க. கூப்ட்டு சத்தம் போட்டா ஏதாவது முணுமுணுத்துட்டே க்ளாஸ் போய்டுவாங்க. . பொம்பள புள்ளைங்கள மதிக்கவே மாட்டாங்க. அவங்க மொழில சொல்லப் போனா பொட்டைன்னு பச்சையா சொல்லுவாங்க. ரெக்கார்ட் எழுதுனா பொட்டைங்க எழுதி தருவாங்கன்னு சொல்லுவாங்க. அப்படி சொல்லாதீங்கடா, அவங்களும் உங்க கூட படிக்குறவங்க தானேன்னு நாலஞ்சு தடவ அழுத்தியும் கோபமாவும் சொன்னதுக்கு அப்புறம் அப்படி சொல்றதில்ல.
அப்புறம் எது சொல்லிக் குடுத்தாலும் ஏணைக்கு கேணையா பேசுவாங்க. எது சொன்னாலும் எதிர்த்து கேள்வி கேப்பாங்க. சில நேரம் காட்டமா திட்டுனாலும் என்னையறியாம சிரிச்சுடுவேன். கொஞ்சம் கொஞ்சமா நான் சொல்றத எல்லாம் கேக்க ஆரம்பிச்சாங்க. க்ளாஸ் எடுக்கும் போது நோட்ஸ் எடுங்கடான்னு சொன்னா பென் இல்லைம்பாங்க. சரி, இந்தா எழுதுன்னு பென் எடுத்துக் குடுத்தா தெரியுதோ தெரியலையோ மத்த பசங்க, பொண்ணுங்கள விட அதிகமாவே சொல்றத அவங்களுக்கு தெரிஞ்ச மாதிரி எழுதி வச்சிருப்பாங்க.
போக போக, நான் ஏதாவது ப்ராக்டிக்கல் செய்ய சொன்னா ஒருத்தன் அப்படியே நின்னாலும், வாடா, போய் செய்வோம், மேடம் சொல்றாங்கலன்னு அடுத்தவன் இழுத்துட்டு போவான். சும்மா சொல்லக் கூடாது, பெர்பெக்ட் பசங்க. எங்க டிபார்ட்மென்ட்ல எங்க டீம்கிட்ட மட்டும் உரிமையா பழகுவாங்க. நான் திட்டினா சிரிச்சுட்டே போங்க மேடம்னு சொல்லிட்டு போகுற அளவு நெருங்கிட்டாங்க.
அப்படியே போயிட்டு இருந்தப்ப ஒரு நாள் காலேஜ்ல ஓணம் கொண்டாடினோம். எல்லா புள்ளைங்களும் பசங்களும் ஏதாவது பெர்பார்ம் பண்ணிட்டு இருந்தப்ப இவங்க ரெண்டு பேரும் நின்னு கமன்ட் அடிச்சுட்டு இருந்தாங்க. நீங்களும் ஏதாவது செய்ங்கடான்னு சொன்னதும் ரொம்ப கூச்சத்துல நெளிஞ்சாங்க. புள்ளைங்க எல்லாம் மேடம், இவன் நல்லா டான்ஸ் ஆடுவான்னு சொன்னதும், வந்து ஒரு டான்ஸ் ஆடுடான்னு அதட்டினேன். சான்சே இல்ல, பையன் அப்படி ஒரு பெர்பாமன்ஸ். சந்தோசத்துல கைத்தட்டி எனக்கு ஆனந்த கண்ணீரே வந்துடுச்சு. நல்லா கவிதை வேற எழுதுவானாம். கேக்கவா வேணும், அவன் மேல எனக்கு ரொம்ப பாசம் வந்துடுச்சு.
அப்புறம் கொஞ்ச நாள் அந்த பையன் காலேஜ் வரல. அவன் ஏன் வரலன்னு விசாரிச்சப்ப பீஸ் கட்டலன்னு தெரிஞ்சுது. அவன வர சொல்லுங்கடா, பீஸ் தான சமாளிப்போம்னு சொல்லி விட்டேன். ஒரு நாள் வந்தான். ஏண்டா, காலேஜ் சரியா வந்தா தான பாடம் எல்லாம் படிக்க முடியும், பீஸ் கட்டலன்னு பீல் பண்ணாதடா, ஏதாவது செய்ய முடியுமான்னு ட்ரை பண்றேன்னேன்.
அப்புறம் மெதுவா, அப்பா என்ன பண்றாங்கன்னேன். கடலுக்கு மீன் பிடிக்க போவார்ன்னான். அம்மா என்ன பண்றாங்கன்னேன். அவங்க வீட்ல தான். உடம்பு சரியில்ல, ஆஸ்த்மான்னு சொன்னதும் ரொம்ப கஷ்டமா போச்சு. எதுவுமே சொல்லாம உக்காந்து இருந்தேன். திடீர்னு உடைஞ்சு அழ ஆரம்பிச்சுட்டான். வீட்ல ரெண்டு தங்கச்சிங்க, ஒரு தம்பி. மூணு பேரையும் ஹாஸ்டல்ல கொண்டு போய் விட்டாச்சு. வீட்டுக்கு ஒரு கதவு கூட கிடையாது. அப்பங்காரன் குடிச்சுட்டு வந்து அம்மைய போட்டு அடிப்பான். அவனால ஒரு பிரயோஜனம் இல்ல, நான் தான் லீவ் நாள்ல வேலைக்கு போய் சம்பாதிக்குறேன்னான்.
இப்ப அவனையும் படிக்க வேணாம்னு அவன் அப்பா சொன்னாராம். இவனுக்கு படிக்க ஆச. ஆனா தங்கச்சிங்களுக்கும் தம்பிக்கும் ஏதாவது செய்யணும். அம்மாவ பாத்துக்கணும். என்ன பண்ணுவான் அவன்? சரி, உன் வீட்ல இருந்து யாரையாவது வர சொல்லு, நான் பேசுறேன், உன் பீஸ் நாங்க பாத்துக்குறோம், காலேஜ் மட்டும் ஒழுங்கா வான்னு சொல்லி விட்டேன். அவன் வரவேயில்ல.
மறுபடியும் ஆள் விட்டு வர சொன்னதுக்கு என் பீஸ் அவங்க கட்ட வேணாம், அடுத்த வருஷம் நான் உழைச்சு சம்பாதிச்சு படிச்சிக்குறேன்னு சொல்லி விட்ருக்கான். அவனுக்கு உதவி பண்ணியிருக்கலாம் தான், என்னோட கோ-ரிசெசர்ஸ் அவன திரும்ப கூப்பிடலாம்னு சொன்னாங்க. ஆனா அவனோட அந்த வீராப்பு எனக்கு பிடிச்சிருக்கு. அவனோட சுயம் அது. அத மதிக்கலனா எப்படி. அடுத்த வருஷம், அவன் மறுபடி வருவான்னு நம்பிக்கையோட இருக்கேன்.
இன்னொருத்தன், அவன் போனதுக்கு பிறகு கொஞ்ச நாள் வந்தான். ஒரு செமஸ்டர் அட்டென்ட் பண்ணினான். திடீர்னு முடி எல்லாம் வெட்டி, நகம் வெட்டி, க்ளீனா வந்து நின்னான். என்னடான்னு ஒரே ஷாக். ஆர்மில ஆள் எடுக்குறாங்க மேடம், நான் போறேன்னு சொன்னான். இங்கயே ஒழுங்கா டிசிப்ளினா இருக்க மாட்டியே, ஆர்மில போய் எப்படி இருப்பன்னு கேட்டேன். அதெல்லாம் இருப்பேன். நாட்டுக்காக தான எதையோ பண்ணிட்டு போறேன்னு போய்ட்டான்.
இவனுங்க எல்லாம் காட்டான் பசங்க தான். வெளில இருந்து பாத்தா அன்-எஜுகேட்டட் பெல்லோஸ். ஆனா ஒவ்வொருத்தருக்குள்ளயும் எதோ ஒரு தாகம் இருக்கு, வீராப்பு இருக்கு. சரியான வழிகாட்டல் இல்லனா இந்த மாதிரியான பசங்க நிலைமை தான் என்ன?
ஆனா ஒரு விஷயம் சொல்லுவேன், என்னை பொறுத்தவரை இந்த பசங்க ஹீரோஸ் தான்... அதுவும் பக்கா நேட்டிவிட்டி ஹீரோஸ்...
This comment has been removed by the author.
ReplyDeleteதோற்றம் தான் வேறு... உள்ளே பலா...
Deleteமற்றவர்கள் போல் உடனே ஒதுக்காமல், நீங்கள் செய்தது அருமை என்று சொல்லவா...? சிறப்பு...
வாழ்த்துக்கள்...
நம்ம கிட்ட வந்தபிறகு அவங்க மேல கவனம் செலுத்தலனா எப்படி அண்ணா? அதனால தான்.... மத்தப்படி இன்னும் நிறைய பசங்க இருக்காங்க இப்படி
DeleteReader Settings சிலவற்றை மாற்றினேன்... உங்கள் தளம் உட்பட சில தளங்கள் மாறி விட்டது... இனி தொடர்வேன்... வலைச்சரத்தில் சுட்டியதற்கு நன்றி...
ReplyDeleteரொம்ப தேங்க்ஸ் அண்ணா... உங்க கிட்ட கொஞ்சம் ஹெல்ப் கேக்கணும்... ப்ரீயா இருக்கும் போது கேக்குறேன்
Deleteஅன்பிற்கு ஏங்கும் ஆள்கள் அடங்காமல்தான் திரிவார்கள். அப்படிப்பட்டவர்களை உண்மையான அன்பு கொண்டு மட்டுமே அடக்க முடியும்.
ReplyDeleteநிச்சயமா... அப்படி அன்பால அடக்கிட்டா அவங்கள மாதிரி பவ்யமான ஆட்கள பாக்கவே முடியாது
Deleteஒரு ஆசிரியர் என்ற முறையில்
ReplyDeleteதங்களைப் பாராட்டுகிறேன் சகோதரியாரே
தாங்கள் பாராட்டிற்கு உரியவர்
பாராட்டுக்கு தேங்க்ஸ் அண்ணா. ஆனா நான் ஒரு ரிசெர்ச் ஸ்காலர். ஆராய்ச்சி துறை மாணவி மட்டும் தான், ஆசிரியை எல்லாம் இன்னும் ஆகல....
Deleteதம 3
ReplyDeleteஓட்டு போட்டதுக்கும் தேங்க்ஸ்
Deleteஉண்மை ..........அழகாக வழிநடத்தி இருக்கிங்க ...
ReplyDeleteஉங்க பல பதிவுகளை ஏற்கனவே படித்திருந்தாலும் ..........இன்றைக்கு தான் மறு மொழி கொடுக்க முடிந்த்தது ...
அனைத்து பதிவுகளும் சூப்பர்..........
ஏற்கனவே படிச்சதுக்கும் பாராட்டினதுக்கும் மொத்தமா சேர்ந்து ஒரு தேங்க்ஸ்
Deleteவணக்கம்
ReplyDeleteஉண்மையான அன்புக்கு யாவரும் அடிமை சொல்லிய விதம் நன்று த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தேங்க்ஸ் அண்ணா
Deleteஅருமையான யதார்தமான நடை கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு 80 உண்மைதானோ....
ReplyDeleteதமிழ் மணம் 5
ஹஹா அதையே தான் நானும் சொல்ல வந்தேன். தேங்க்ஸ்
Deleteஇங்க பசங்கள எல்லாம் பாத்தா (எங்க பாசைல சொன்னா) காட்டான் மாதிரி இருப்பாங்க. காதுல கடுக்கன் போடுறதும், முன்னாடி ஸ்பைக் வச்சு பின்னால ரப்பர் பேன்ட் வச்சு கொண்டை போடுறதும் ஃபேசன்ன்னு நினைப்பாங்க. பென்சில் டிப் பேன்ட்ஸ், எப்படா இடுப்புல இருந்து நழுவி விழுவோம்ங்குற ரேஞ்ச்ல ஜட்டிய வேற காட்டிட்டு இருக்கும். கைல ஒரு நோட் வச்சுட்டு, அதையும் சுட்டுவிரல்ல சுத்தி விட்டுட்டே வாய்ல எதையாவது மென்னுட்டு நடப்பாங்க. ஆக மொத்தம், பாத்தாலே தறுதலைங்கன்னு தான் தோணும்...//
ReplyDeleteஇத்தனையையும் இப்போ பட்டனத்துப் பையன்களும் செய்யுறாங்களே!
உங்கள் அணுகுமுறை அருமை! தொடரவும்.
நான் பட்டணத்து பசங்கள பாத்தது இல்லையே... ஒரு வேளை அவங்கள பாத்து தான் இவங்க மாறியிருக்கணும். கருத்து சொன்னதுக்கு தேங்க்ஸ்
Deleteஜீவனுள்ள எழுத்துநடை..!
ReplyDeleteகார்த்திக்....
Deleteநீங்க சாதாரண பெண்ணில்லை
ReplyDeleteஅருமை அற்புதமான நடை, ஒரு தெளிந்த நீரோட்டம் போல் செல்கிறது. கிராமத்து பள்ளிகளுக்கு வரும் டீச்சர்களை கிண்டல் செய்து, பின் அவரின் அன்பால் திருந்தும் மாணவர்களை சினிமாவில்தான் பார்த்திருக்கிறோம். இப்போதுதான், நிஜத்திலும் பார்க்கிறோம். பாராட்டப்பட வேண்டிய ஆசிரியை நீங்கள்.
ReplyDeleteமிக்க நன்றி!