Monday 17 September 2012

திமிர் பிடித்த காதல்காரியும் அவளுக்கே சொந்தமான கவிதைக்காரனும்...!

திரட்டிய மீசைக்குள்
திமிரடங்கா பாரதியின்
நெஞ்சம் தன் வேலி எனக்கொண்டவன்...!

தோற்கப் பிடிக்காத
விழுப்புண் குழந்தையவன்...!
போதுமென்று நின்றுவிடாத
அகராதியில் அவன் பெயரிருக்கும்...!

சவால்களின் ருசியறிந்தவன்...!

உன் ஆணவமான ஆண்மை பிடிக்கும்...!
அரிந்து செல்லும் ஒற்றை வினாடி
பார்வையின் கூர்மை பிடிக்கும்...!
உன் மௌனம் சிந்தும் வார்த்தைகள் பிடிக்கும்...!
உன் கண்களில் தெறிக்கும் அந்த திமிர் பிடிக்கும்...!

என்னில் உன்னை விழ வைக்கிறேன்...
சாவாலுக்குள் நுழைவாயாயென
விரல் சொடுக்கி கண்நோக்கினாள் காதல்காரி...!



என்னில் உணர்ந்ததை
எழுத்தில் விளம்பும் காதல்காரி...

எண்ணத்தில் விளைந்ததை வார்த்தைக்குள்
அறுவடையாக்கும் காரிகைக்காரி..!
விரல் சொடுக்கி விசிலடிக்கும் 
திமிருக்குச் சொந்தக்காரி...!

பால் பேதமெல்லாம் யாதுமறியாத
பயமறியா இளங்கன்று..!
எதிர்த்து நின்று நேருக்கு நேர்
மல்லுக்கட்டும் வீம்புக்காரி...!



வீண் பேச்சு வம்பர்களின் வம்புகளை
நெருப்பு துண்டங்களாய்
எரிக்கத் துணியும் துணிச்சல்காரி...!

தோற்கப் பிடிக்காத தென்கடல்
சீமையின்... பிடிவாதக்காரி...!

நீ திமிர் பிடித்தவள்...!
நான் திமிருக்கு திமிர்பிடித்தவன்..!
தீர்த்துகொண்டு அறிவித்துக்கொள் 
யார் வென்றாரென...!
மோதல் கட்டம்...! 
மோகமாய் போகுமென அறியாதவராய்...!



வடக்கும் தெற்கும் வஞ்சிப்பதேது..!
மாறாய் கொஞ்சிக்கொண்டது...!

விலக்கும் விசையெல்லாம் காந்தப்புலம் மாறினால்
ஈர்த்துப்போகுமென.. எழுதி வைத்த அறிவியல்...!
அவளுக்கும் அவனுக்கும் விதிவிலக்காமல்...!
வேடிக்கை காட்டியே போனது...!

இங்கே எதிரெதிர் துருவங்களாய்
வார்த்தைகள் முட்டிக்கொண்டிருக்க
காதல்காரியும் கவிதைக்காரனும்
கவிதைக்குள் கனமழையாய் நனைந்து கிடக்க..!

ஆதவனின் கரங்களுக்கு ஈரம் துவட்ட நேரமில்லை..
அடங்க மறுத்த வெண்ணிலவு
பிறையானபோதும்...
ஒளிந்துகொண்டே வேவு பார்க்க..!
ஆளில்லா கானகம்,
காதல் ஊற்றினால் செழித்துக்கிடக்க..!
ஆடுகள் மேயும் அருகம்புல்லாய்ப்போனாள் காதல்காரி..!




அதிகாலை நேரத்திலே
பெரும் ஊடல் ஒன்றின் முற்றுப்புள்ளியாய்
காதலின் மடியிலே கவிதைக் குழந்தை பிறந்தது,
மாறாத் திமிரோடு...!

என்னிடத்தில் உன்னை ஈர்த்தக்கதை
யாதென உரைப்பாயா?
கண்கள் காணும் திசையெல்லாம்
கவிதைக்காரனின் வார்த்தைகளை
கவர்ந்திழுக்க தயாராகிறாள் காதல்காரி...!

உன் கண்கள் சிந்திய கண்ணீர் என்னை கரைக்கவில்லை...!
கண்ணாடி துறந்த உன் கண்கள் கரைத்ததடி...!
அழுது சாதிக்கும் உன் பிடிவாதம் வெல்லவில்லை
எதிர்த்து நின்று நீ அடுக்கிய கேள்விகளில் சாய்த்ததடி...!

யாருனக்கு பெயர் வைத்தார்?
அநேகமாய் ஓர் வரலாற்றுப்பிழைக்கு
காரணமாய் அவரிருக்கக்கூடும்...!
முன்னோ பின்னோ அடை மொழி கூட்டி...!
ஜெகபாரதி , யுகபாரதி என்றல்லவா
உன்னில் பெயரிட்டிருக்க வேண்டும்..!

அத்தனை திமிரும் மொத்தமாய் உன்னிடம்...!

“ச்சீ” யென ஒன்றை வார்த்தையில் தெறிக்கும், கோபம்!
சிலிர்க்கவைக்கும்..

எத்தனை திட்டி உன்னை விலக்க நினைத்தாலும்
என்னை இறுக்கிப் பிடித்த உன் திமிர்...
அதுவே... உனக்குள் என்னை மூழ்கடித்த திமிர்...!

“போடி” என்றவுடனே ஓடி ஒளிந்துக்கொள்ளும் நீ...
சேவல் கூவுமுன்னே காலை சுற்றிட வருவாய்...!

இருக்கும் நான்கு இதய அறைக்குள்
எவ்வறையில் ஒளித்திட்டாய் என்னை?
இப்படி பூனைக் குட்டியாய் எனை மாற்றி
உன்னை சுற்றி வர செய்கிறாயே?

பெருமூச்சு விட்டவனின் கழுத்தைக் கட்டி
நெற்றியில் முத்தமிட்டவள்
தொடர்கிறாள் மீதிக் கதை...!

எனக்கு பிடித்த உன்னை பட்டியலிடவா?

உன் மேல் உனக்குண்டான கர்வம்...!
நான் உனக்கு சொந்தமானவள்
என்ற திமிர்...! தனித்துவமாய்...தரணி ஆளும் தன்னிகரில்லா தலைவனாய்..
எண்ணிச்சிலாகிக்கும் உன் திமிர்...!
வசீகரிக்கும் கவிதைக்காரனாய் திமிர்...!

நீ திமிர் பிடித்தவனா?

அந்த போர்வைக்குள் இருக்கும்
முரட்டுக் குழந்தையடா நீ...!
உன் முகத்தில் ஒரு திமிர் இருக்கும்...!
உற்று நோக்கினால் ஆயிரம் ஏக்கங்களின்
இருட்டுப்பக்கம் அதில் பூட்டப்பட்டுக் கிடக்கும்...!

கவிதைக்காரா... யாரிடத்தும் அக்கறையில்லையென
உன் வாய் சொல்லலாம்...!
ஆனால்... உன் நேசத்துள் வீழ்ந்தவர்கள்
மேலான அக்கறை உன் இதயச் சுவர்களில்
மோதி வெளிவரத் துடிக்கும் மாயம் அறிவாயா?

உன் திமிருக்குள் ஒளிந்திருக்கும் என் மேலான
நேசம் அறியாதவளா நான்?

பிரியமானவளே...! என்னுள் நீ முழுதாய்
நிறைந்தாய்யென அறிவித்தால் தான் அறிவாயா?
ஒற்றைகல் உப்பின் அளவு பிடிக்குமடி உன்னை...!
அதனிலிருக்கும் ஓராயிரம் அணுக்களும்
உன்னை என்னுள் விதைத்துச் செல்லும்...!

அழக்கூடாதடி நீ...! உன் கண்கள் சிந்தும்
கண்ணீர்த்துளிகளின் ஒற்றை துளியில் கூட
என் நேசம் சுமந்த உப்பிருக்கும்...!

இவர்களின் உரையாடல் நீண்டு கொண்டேயிருக்க
திமிருக்கும் திமிர் பிடித்த அதன் வேலிக்குமிடையில்
காதல் ஒன்றும் புரியவில்லை சரிதான் போ..!
என சலித்தோய்ந்து உறங்கி விட்டது...!

விடியலுக்கு சற்று முன்.....!

Sunday 16 September 2012

நான் இடி...!

அடக்கி விட துணிந்து
ஆதிக்கம் செலுத்த முயல்பவர்களுக்கு
உரசி செல்லும் மின்னலாய் நான்...!

இடித்து பேசி ருசி கண்டவர்களின்
இடிகள் தாங்கும் இடிதாங்கியாய் நான்...!

வஞ்சகர்களின் வஞ்சனைகளை
எதிர்க்க துணிந்த இடியாகவும் நான்...!

அன்பால் நேசக்கரம்
நீட்டுபவர்கள் மத்தியில்
உருகி உருகி பொழியும்
மழையாய் நான்...!

என் பாசம் வேண்டும் நெஞ்சத்துக்கு
அதன் நகல் கொடுக்கும் அச்சாய் நான்...!

வரைமுறைகளுக்கு உட்பட்ட
கவிதைகளின் எல்லைக்குள்
கட்டுப்படா காற்றாய் நான்...!

என்னையே நேசிக்கும் எனக்கு
என் சுவாசமாகவும் நான்...!

Saturday 15 September 2012

எனக்குள் ஏனோ தடுமாற்றம்...!

கலைந்து விழும் கற்றை முடி
நடுவே சிக்கிக் கொண்ட ஐவிரல்களாய்
உன் இதயத்து அறைகளில்
பூட்டி வைத்து தடுமாறச் செய்கிறாய்...!

என் கண்கள் சிந்தும்
கண்ணீர் துளி ஒவ்வொன்றையும்
காதல் செய்தே கொல்லப் பார்க்கிறாய்...!

உன் நினைவலைகளால் என்னை சுருட்டி, 
உன்னில் என்னை மூழ்கடித்து 
என் சுவாசம் தடுத்து 
மூச்சிரைக்க வைக்கிறாய்...!

செல்லச் சிணுங்கல்களும்
சீண்டும் உதட்டோர புன்னகையும்
கலந்து தந்தே கெஞ்சப் பார்க்கிறாய்...!

மோனப் பார்வையால் கிறங்கடித்து
கண்வழி ஊடுருவி
மீசை முடி குறுகுறுக்க
கிச்சு கிச்சு மூட்டியே கொஞ்சப் பார்க்கிறாய்...!

பூக்கள் உதிரும் நந்தவனத்தில்
பூவாய் மாறி ஸ்பரிசித்து
என்னை நினைவிழக்கச் செய்தே
மிஞ்சப் பார்க்கிறாய்...!

என்னுள் நீ புகுந்து ஆழ்மனம் தரிசிக்க
நீ நானாகவும், நான் நீயாகவும்
மாற்றி மாற்றி தடுமாற வைத்து
உன் காலடி சுற்றும் பூனைகுட்டியாய்
உருமாற வைக்கிறாய்...!

Friday 14 September 2012

அப்பா...!

இல்லத்தின் அரசனாயினும்
அரசியின் சிறு சிறு கண்ணசைவில்
புரிதலும் இசைதலுமாய் கட்டுண்டு
இல்லம் காத்த மனையாளன்...!

நேசித்த மனையாளை
நேசம் தவிர்த்து வேறெதையும்
அனுபவிக்க வைக்காதவர்...!

“அம்மா”வென முதல் வார்த்தை
மிழற்றிய போது தாயுமானவராய்
கர்ப்பப்பை சுமந்து நின்றவர்...!

செல்ல மகளின் இடுப்பில்
அரைஞாண் கயிறு பூட்டி
கிச்சு கிச்சு மூட்டி
புளங்காகிதம் அடைந்த இல்லத்தரசன்...!

முதலடி எடுத்து வைத்து
நடைப் பழக தடுமாறி தத்தளித்த போது
சுட்டு விரல் கொடுத்து
நடைப்பழக்கிய அன்பு அப்பா...!

இவரது செல்ல முத்தங்களும்
அவசிய கண்டிப்புமாய்
உப்பு மூட்டை தூக்கிய நாட்களெல்லாம்
இன்னமும் நீண்டுக் கொண்டேதானிருக்கின்றன...!

Thursday 13 September 2012

இன்னுமோர் அக்னி பிரவேசம்...!

இதோ நான் இறந்து விட்டதாக
ஊர் சொல்கிறது...!

அவர்களுக்கு தெரியுமா?
உயிரை திரியாக்கி
என்னையே விறகாக்கி
என் காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று...!

உன்னையே உறவாக எண்ணிய நாள் முதல்
நம்பிக்கையை ஆழ் மனதில் விதைத்து
உன்னை நான் பயிரிட்டக் கதை அவர்களுக்கு தெரியுமா?

இதயம் துளைத்து முளைவிட்ட உன்னை
உதிரமாய் பதியம் செய்த கதை தான்
ஊர் அறியுமா?

என் காதலை உரமாய் போட்டு
வளர்த்து விட முனைந்த உன்னில்
களையாய் ஒருத்தி தோன்றிய
நாள் தான் காலம் மறக்குமா?

வேலிப் படரும் உன் கரங்களென்னவோ
மாற்றான் தோட்டத்தில்... வேர் என்னவோ
இன்னும் என்னுள் பிடுங்கி எறியவே
முடியா உறுதியாய்... உனக்குள் உறுத்தவில்லையா?

நீ மீண்டு வருவாயென்ற நம்பிக்கை
உன் மேல் நான் கொண்டதாய் இருக்கலாம்...
ஆனால்... என் நம்பிக்கையின் வீரியம்
என்னையே அழித்த கதை நீ அறிவாயா?

அக்னி வலம் வந்து கைபிடிப்பாய் என்றிருந்தேன்...
இதோ அணைக்க வேண்டிய உன் கரங்கள்
திசைமாறித் தழுவியதால்
அக்னி என்னை அணைக்க
உன்னுள் பிரவேசிக்க துவங்கி விட்டேன்...!

ஆம்... அங்கே எரிந்துக் கொண்டிருப்பதென்னவோ
என் உடல் தான்... ஆனால் மனமல்லவோ
தகித்துக் கொண்டிருக்கிறது...!

Tuesday 11 September 2012

குறிஞ்சி மலர்கள்... !!!

வெளியே சருகு சலசலக்கும் ஓசை கேட்டது. ஜன்னல் திரையை நீக்கி எட்டி பார்த்தேன். சுப்பன் உலர்ந்த சருகுகளை கூட்டிக்கொண்டிருந்தான். இவனுக்கு ஒரு ஐம்பத்திரண்டு வயதிருக்குமா? இப்பவே முதுமை இவனை இப்படி அரவணைத்து கொண்டதே, கையில் இருந்த டிரான்ஸ்பர் ஆர்டரை பார்த்தவாறே மெதுவாக கண் மூடினேன்.

நான் சிவகலா. இந்த அருமைநாயகன்பட்டிக்கு இரண்டு வருடத்துக்கு முன் கிராம அதிகாரியாக மாற்றலாகி வந்தேன். பாரதிராஜாவின் செழுமையான கிராமமாக இல்லாவிட்டாலும் அந்த குளக்கரையும், வாழை தோப்பும் மனதுக்கு இதமாக இருக்கும்.ஆனால் வாழை மரங்கள் அடிக்கடி கண்ணீர் விடும். ஆமாங்க, இங்கு ஜாதி கலவரம் வெகுசாதாரணம். எடுத்தவுடன் வாழைகளைத் தான் வெட்டுவார்கள். இந்த இரண்டு வருடங்களில் பலகலவரங்களை நான் பார்த்திருந்தாலும் நான் பார்த்த அந்த முதல் கலவரம் ..... அந்த நான்கு குருத்துகள்.... இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்காது.

இங்கு வந்த புதிதில் நேரம் போகவில்லை எனில் குளக்கரையில் தான் அமர்ந்து படம் வரைவது வழக்கம். அன்றும் அப்படிதான் படம் வரைந்து கொண்டிருந்தேன். ஆணும் பெண்ணுமாய் நான்கு பேர் சிரித்தபடி ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

'அட. செல்லியும் வர்றா போலிருக்குதே' தலை தூக்கி பார்த்தேன்.

செல்லி சுப்பனின் மகள். இந்த கிராமத்து தேவதை. எண்ணை வழியும் தலையோடு இருந்தாலும் செல்லி செல்லிதான்.

"அக்கா அக்கா, இவங்க என்னோட பிரண்ட்ஸ். இவ ஸ்டெல்லா, இவன் டேவிட், அப்புறமா இவன் அப்துல்லா".

"நீங்க இதே கிராமமா" எனக்கு சந்தேகமாக இருந்தது. ஏனெனில் இவர்களை நான் இதுவரை பார்த்தது இல்லை".

"ஆமாக்கா, டேனியல் கேள்விபட்டிருப்பீங்களே, நாங்க ரெண்டு பேரும் அவரோட பசங்கதான். கோயம்புத்தூர்ல ஹாஸ்டல்ல தங்கி பி.எஸ்சி. அக்ரிகல்ச்சர் படிச்சுட்டு இருக்கோம். எங்க கிளாஸ்மேட் தான் அப்துல்லா, இந்த வருஷம் ஊருக்கு நானும் வர்றேன்னு சொன்னான், கூட்டிட்டு வந்துட்டோம்..."

அப்துல்லாவை பார்த்தேன். அவன் ஆர்வத்தோடு நான் வரைந்திருந்த பாரதத்தாயையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"அப்துல் படிப்பில் எப்படி" எதையாவது கேட்க வேண்டுமே என கேட்டேன்.

"தப்பு பண்றீங்கக்கா" திடுக்கிட்டு அவனை நோக்கினேன்

"பாரதத்தாயோட நெத்தியில பொட்டு இல்ல பாருங்க"

"நான் இன்னும் வரைந்து முடிக்கவில்லை அப்துல்"

"முடிக்கா விட்டாலும் பரவில்லை, ஆனால் முதல்ல அவ நெத்தியில பொட்டு வைங்க. பொட்டு இல்லாம அவ நல்லா இல்லை"

"சிகப்பு கலர் இப்போ என்கிட்ட இல்லப்பா, பாரு, சுத்தமா துடைச்சு வச்சிருக்கேன்" டப்பியை எடுத்து காட்டினேன்.

அவன் விரல்கள் வாஞ்சையோடு பாரதத்தாயை வருடிக்கொடுத்தன.

"நீங்க என்னதான் சமாதானம் சொன்னாலும் என்னால அத ஏத்துக்க முடியாதுக்கா, பொண்ணுங்களுக்கு பொட்டுங்குறது சின்ன அகல் விளக்குல எரியுற தீபம் மாதிரி. அது இருந்தாதான் அழகு".

"இவன் எப்பவும் இப்படிதான், நம்ம நாட்டையோ இல்லை நம்ம பாரம்பரியத்தையோ யாராவது குத்தம் சொன்னா இவனுக்கு பொறுக்காது. உடனே லெக்டர் அடிக்க ஆரம்பிச்சுடுவான்" ஸ்டெல்லா முதன் முறையாக வாய் திறந்தாள்.

எனக்கு அவர்களில் அப்துல்லா தனியாக தெரிந்தான். சிறிது நேரம் அமைதியாகஇருந்தேன்.

"ஆமா, செல்லி எப்படி உங்களுக்கு பிரெண்டானா?"

"நாங்க அஞ்சாங்கிளாஸ் வரைக்கும் ஒண்ணாதான் படிச்சோம். அப்புறமா நாங்க கோயம்புத்தூர் போயிட்டோம் . செல்லிய அவங்கப்பா மேற்கொண்டு படிக்கச் வைக்கல. நாங்க வெளியூர்ல படிச்சிகிட்டு இருந்தாலும் செல்லிக்கு அடிக்கடி லெட்டர்போடுவோம், அப்துல்லாவும் செல்லிக்கு பேனா நண்பன் ஆகிட்டான்".

"நேரம் ஆச்சு , நாங்க கிளம்புரோம்கா " செல்லி ஏனோ அவசரபட்டாள்.

"ஏய் அப்துல், கிளம்புப்பா" உரிமையோடு கை பிடித்து இழுத்தாள்.

"அக்கா, பாரதமாதாவுக்கு உடனே பொட்டு வச்சுடுக்கா " அவன் இன்னும் தன் சுயநினைவுக்கு திரும்ப வில்லை போலும். கிளம்ப மனமில்லாமல் திரும்பி திரும்பி பார்த்தான்.

அந்த இடத்தை விட்டு எட்டடி கூட வைத்திருக்கமாட்டர்கள். அதற்குள் நாற்பது, ஐய்பது பேர் திபுதிபுவென ஓடி வந்தனர். அவர்கள் கையில் வீச்சரிவாள், வேல்கம்பு.

நான் முதன்முறையாக மிரண்டு நண்பர்களை நோக்கினேன். அவர்கள் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

"பிடிங்கடா, விட்டுடாதீங்க" ஒரு முரட்டு குரல். யாரென திரும்பி பார்த்தேன். பெரிய மீசையோடும் முரட்டு உருவத்தோடும் டேனியல் நின்று கொண்டிருந்தார்.

அடியாட்கள் செல்லியும், அப்துல்லாவையும் பிடித்து கொண்டார்கள். டேனியல் அப்துல்லாவிடம் திரும்பினார்.

"இங்க பாருப்பா, இந்த ஊருல வேத்து ஜாதிகாரனோ, இல்ல வேத்து மதத்துகாரனோ வரணும்னா என்ன மாதிரி பெரிய மனுசங்கிட்ட அனுமதி வாங்கணும். எம்புள்ளைங்க கூட்டிட்டு வந்ததால உன்ன ஒண்ணும் செய்யல, மரியாதையா உடனே பெட்டிய தூக்கிட்டு ஓடி போய்டு" டேனியலின் குரலில் கடுமை இருந்தது.

"நிறுத்துங்கப்பா, இவன் எங்கள்ள நம்பி வந்திருக்கான், இவன நாங்க போக விடமாட்டோம்" ஸ்டெல்லாவும் கத்தினாள்.

"சும்மா வாய மூடு கழுத. டாய், இந்த செல்லிக்கு மொட்ட போட்டு ஊர் நடுவுல கட்டுங்கடா"

"அப்பா, அவ ரொம்ப நல்லா பொண்ணு, அவ என்ன தப்பு செய்தான்னு அவளுக்கு மொட்ட போடசொல்றீங்க?"

"என்ன பண்ணுனாளா? ஏண்டா, கீழ்சாதிகார நாயி அவ, அவளுக்கு பெரிய வீட்டு பசங்க பழக்கம் கேக்குதோ? இன்னும் ஏண்டா பாத்துகிட்டு இருக்கீங்க, போய் ஆக வேண்டியதை பாருங்க" இப்போது டேனியல் வெறியின் உச்சியிலேயே இருந்தார். செல்லியை பிடித்திருந்தவர்களின் பிடி இறுகியது. அவள் இப்போது அவர்கள் பிடிக்குள் கோழிகுஞ்சாக வெடவெடத்தாள்.

"அவள விடுங்க" கதறும் நண்பர்களோடு நானும் கத்தினேன்.

"ஐயா, எம்புள்ளைய விட்டுடுங்கயா வாழ வேண்டிய பச்சை மண்ணுயா" சுப்பன் டேனியலின் காலடியில் கதறியழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது.

"நம்ம சாதி புள்ளைய இவனுக மொட்ட அடிச்சுருவானுகளா, அதையும் பாத்ருவோம்லே" செல்லிக்கு ஆதரவாக சில இளவட்டங்கள் குதித்தனர்.

அப்புறம் என்ன நடந்தது என்று என்னால் எழுத்தில் வடிக்க இயலவில்லை, சுற்றும்முற்றும் பார்த்தேன். வாழை மரங்கள் குளத்து நீரில் பிணமாய் மிதந்தன. சிலர்வலியில் துடித்து கொண்டிருந்தனர். சிலர் கத்தகூட இயலாமல் மயங்கி கிடந்தனர். இவங்க நாலு பேரும் எங்கே? என் கண்கள் அங்கும் இங்கும் அலைமோதி அவர்கள் மேல்நிலைத்தது.

நால்வரும் கைகளை இணைத்திருந்தனர் . ஐயோ, இதென்ன! அவர்கள் பிஞ்சுக்கரங்களிலிருந்து இரத்தம் வழிகிறதே!

"நிறுத்துங்க" நான் வாயை திறப்பதற்குள் அவர்களே கத்தினார்கள். அவர்களின் பலமான பலமுறை கத்தல்களுக்கு தாமதமாக பலன் கிடைத்தது. அனைவரும் சண்டையை நிறுத்திவிட்டுஅவர்களை நோக்கினார்கள்.

"ஜாதி, மதம்னு அலையுறீங்களே, யாருக்கு வேணும் உங்களோட இந்த சாக்கடை. இதோ, ஓடிகொண்டிருக்கிற ரத்தத்துல எது மேல்சாதி ரெத்தம், எது கீழ் சாதி ரெத்தம்னு உங்களால சொல்ல முடியுமா? ம் சொல்லுங்கடா!..."

ஸ்டெல்லாவின் முழக்கத்தோடு அவர்கள் கரங்கள் உயர்ந்தன. பட்டன ஒரு சொட்டுத்தெறித்து பாரத தாயின் நெத்தியில் விழுந்தது. தெறித்த ரெத்தம் வழியாமல் இருக்க என் கைவிரல்களால் தடுத்துக் கொண்டேன். இந்த அப்துல்லாவுக்கு என்ன ஒரு பார்வை. அவன் என்னைப் பார்த்து சிரித்தான். நீண்ட நேரம் கழித்து தான் தாயை பார்க்கும் குட்டியின் பரவசம் அவன் முகத்தில் ஒளிர்ந்தது.

கலவரக்கூட்டம் இப்போது நண்பர்களையே பார்த்துக் கொண்டிருந்தது. பின்னர் என்ன நினைத்ததோ கலைந்து சென்றது. இந்த இளம் வீரர்களை எதிர்க்க அவர்களுக்கு துணிவில்லையோ என்னவோ?அதன் பிறகு எப்படி வீட்டுக்கு வந்தேன் என தெரியவில்லை. என் அருகில் பாரதமாதா நெற்றியில் தன் மைந்தர்கள் வைத்த திலகத்தோடு சிரித்துக் கொண்டிருந்தாள்.

செல்லி கையில் கட்டோடு மெதுவாக உள்ளே வந்தாள். "வா செல்லி, உன்னோட ப்ரண்ட்ஸ் எல்லாம் எங்கே காணோம்?" என் கண்கள் அங்கும்இங்கும் அலைந்து அவர்களை தேடியது.

"அவங்க போய்டாங்கக்கா. இனி எப்போதான் அவங்கள நேர்ல பாக்க போறேனோ" சொல்லும் செல்லியை ஆராய்ந்தேன். அவள் முகத்தில் துளி வருத்தமும் இருந்ததாக தெரியவில்லை. 

"ஏன் செல்லி, உனக்கு வருத்தமே இல்லையா?" என்னால் கேக்காமல் இருக்க முடியவில்லை.

"வருத்தம்தான்க்கா. ஆனா என்ன செய்றது. எங்களால ஊரு ரெண்டுபட்டு நின்னா நல்லாவா இருக்கும். என்ன! எப்போ கலவரம் வந்தாலும் ரெண்டு மூணு உசிரு போகும். ஆனா இந்த தடவ யாரும் போய் சேரல. அந்த வகைல கொஞ்சம் சந்தோசம்".

இவர்கள் எப்படி இதையெல்லாம் இவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்கின்றனர். அவளிடமே கேட்டேன்.

"அக்கா, இந்த சமுதாயம் சீக்கிரமா மாறணும்னு நாம நினைக்க கூடாது. அதுக்குகாலமாகும். எங்க தலைமுறைல இல்லனாலும் எங்க புள்ளைங்க காலத்திலாவது மாறும்.அதுவரைக்கும் நாங்க காத்திருப்போம்".

"இனிமே நீங்க நாலுபேரும் எப்போதான் சந்திப்பீங்க"

"வழக்கம் போல லெட்டர்ல தான் "

பேசிய செல்லிய நான் ஆச்சர்யமாக பார்த்தேன். இவர்கள் என்ன நட்புக்கு ஒரு உதரணமா? பனீரெண்டு வருசத்துக்கு ஒருமுறை பூக்கும் குறுஞ்சி மலர்களை விட இவர்களின் நட்பு சிறந்த மலரோ?

அதற்கு பிறகு செல்லியை நான் எவ்வளவோ முறை சந்தித்தேன். நண்பர்களிடம் வருகிற கடிதங்களை காட்டுவாள். சுகமான நினைவுகளை அசைப்போட்ட நான் மெதுவே கண் விழித்துப் பார்த்தேன். சுப்பன் இப்போது சருகுகளை சாக்கு பையில் கட்டி தோளில் சுமந்துக் கொண்டிருந்தான். கிராமங்களில் ஏழைகளுக்கு சருகுதானே அக்னி பகவானை தாரை வார்க்கும் அட்சயபாத்திரம்.

"சுப்பா! செல்லி வீட்ல இருந்தா கொஞ்சம் வர சொல்றியா?"

"சரி தாயி! உடனே வர சொல்லுதேன்" சுப்பன் போய் விட்டான்.

இப்பவே கிளம்பினா தான் நேரத்தோட திருநெல்வேலி போய் சேர முடியும். துணிமணிகளை அடுக்க ஆரம்பித்தேன். நான் வரைந்த ஓவியங்களை எடுக்கையில் பாரதமாதா. அவள் கண்களில் எனக்கு அப்துலா தெரிந்தான். அவளை மார்போடு அணைத்தவாறு நாற்காலியில் சரிந்தேன். ஏதோ சொல்ல முடியாத உணர்ச்சிகளின் கலவைகள் என்னை அரித்தன. கண்கலங்கியவாறு நிமிர்ந்தேன். வாசல்படியில் செல்லி நின்றிருந்தாள்.

"வா செல்லி"

"ஊருக்கு புறப்பட்டுடீங்களாக்கா? எங்களயெல்லாம் மறந்துற மாட்டீங்களே"

"மறக்கற முகமா உங்களோடது? என் கண்கள் பனித்தன.

"செல்லி, உனக்கு உன் நண்பர்களை மீண்டும் பார்ப்போம்குற நம்பிக்கை இருக்கா?"

"நிச்சயமா இருக்குக்கா"

"அப்படின்னா இந்த தாயை அப்துல்கிட்ட குடுத்துரு" செல்லியிடம் கையளிக்கும் போது மனதுக்குள் தைரியம் பிறந்தது.

நிச்சயம் இந்த கிராமம் ஒருநாள் அமைதி பூங்காவாக, ஜாதி, மதம்ங்குற சச்சரவு இல்லாமல் மாறத்தான் போகுது. அதற்கு முதல் புள்ளியாய் இந்த சின்னஞ்சிறுசுகள் கிளம்பி விட்டனரே. வண்டிக்கு நேரமாகவே வேகவேகமாக புறப்பட ஆயத்தமானேன். என் மனத்திரையில் நான்கு நண்பர்களும் குறுஞ்சி மலர்களாய் சிரித்தனர்.

Thursday 6 September 2012

மனிதம் பிறந்த தருணம்


"டேய் ரமேஷ், இன்றைக்கு ஈவினிங் கிளாஸ் உண்டா டா"

தோளில் தொங்கிய புத்தகப் பையை சுமக்க முடியாமல் சுமந்தவளாய் கேட்டாள் உதயா.

"ஆமாடா, மாத்ஸ் சார் கிளாஸ் வச்சிருக்காரு"

"இரு, அப்பாக்கு போன் பண்ணிட்டு வரேன்"

இவர்கள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள். தங்கள் பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க பள்ளி நடத்துனர்கள் கண்டுபிடித்த இந்த அரிய கண்டுபிடிப்பு தான் இந்த கோச்சிங் கிளாஸ். இதுவே மாணவர்களுக்கிடையில் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்த உதவும் சந்தர்பமாகவும் அமைகிறது பெரும்பான்மையான நேரங்களில். இதனை பள்ளி நடத்துனர்கள் அறிந்தனரோ இல்லையோ உதயாவும் அவள் நண்பர்களும் நன்கு அறிந்து வைத்திருந்தனர். இங்கு நண்பர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் உதயா, கலா, வடிவேலு, மூர்த்தி, அனு, சுரேஷ், மற்றும் ஸ்டீபன். முதன்முதலில் அடிதடியில் ஆரம்பித்த இவர்கள் நட்பு பின் பிரிக்க முடியாத இழையாய் இறுகி விட்டிருந்தது.

தினமும் பள்ளி விட்டதும் இரண்டு மணி நேர கோச்சிங் கிளாஸ். ஆசிரியர் இல்லாத முதல் ஒரு மணி நேரம் வீண் அரட்டை, சண்டை, மைதானத்தில் விளையாட்டு நண்பர்களின் கலந்துரையாடல் என்று நீண்டு கொண்டிருக்கும். நெருக்கமான நண்பர்கள் இன்னும் நெருக்கமாக, தங்களை மேலும் மேருகேற்றுவதற்கும் சீரழிவதற்கும் இது ஒரு களமாய் அமைந்தது.

எல்லா பிள்ளைகளையும் போல விளையாட்டுதனமாய் இருந்த இந்த நண்பர்கள் வாழ்வில் திருப்புமுனையாக வந்தது தங்கநாடாச்சி மிஸ். கிண்டலும் கேலியுமாய் இருந்த இவர்களை இனம் கண்டு வலுகட்டாயமாக பள்ளியின் சாரணர் இயக்கத்தில் சேர்த்து விட்டார். அங்கும் இவர்களின் கொட்டம் அடங்கியதில்லை.

மலை சார்ந்த குக்கிராமம் ஒன்றில் முகாமிட்டுருந்தனர் "நமச்சிவாயா பள்ளி " மாணவர்கள். மூர்த்தி ஜடையை பிடித்து இழுத்ததினால் அவனிடமிருந்து விலகி ஓடி எதன் மீதோ முட்டிக் கொண்டு நின்றாள் உதயா. நிமிர்ந்து பார்த்து அதிர்ந்து போன அவள் கண்ணில் பட்டது ஒரு கிழவி. சர்க்கரை நோயால் பீடிக்கப்பட்டு காலொன்று அழுகிய நிலையில் ஈக்களோடு போராடிக் கொண்டிருந்தாள் அவள். உடல் முழுக்க அருவருப்போடு துள்ளியெழுந்தவள் ஓடிச் சென்று வாந்தி எடுத்தாள். உடல் முழுவதும் ஆரம்பித்த நடுக்கம் ஒரு வித இயலாமையோடு வெறுப்பில் முடிந்தது.

தோளின் மீது ஒரு கை விழ வீலென அலறியவளின் பேயறைந்த முகம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான் மூர்த்தி. நண்பர்கள் அனைவரும் சூழ்ந்துக்கொள்ள அவர்களிடையே வேடிக்கை பொருளாய் மாறி போயினர் உதயாவும் கிழவியும்.

"இப்படியெல்லாம் பண்ண உங்களுக்கு வெக்கமாயில்ல" தங்கநாடாச்சி மிஸ்சின் ஆக்ரோசமான குரல். பம்மியபடி விலகி ஓடினர் நண்பர்கள்.

அணைந்து விடுவேன் என்று பயம் காட்டிக்கொண்டிருந்த விளக்கில் விழுந்து உயிர் விட்டுக் கொண்டிருந்த விட்டில் பூச்சிகளையே வெறித்துக்கொண்டிருந்தான் மூர்த்தி. அவன் கண்முன் உயிரோடு அந்த கிழவி அழுகி கொண்டிருந்தாள். அருகில் படுத்திருந்த ஸ்டீபன் எதோ கனவு கண்டு பெண்ணை போல் வெக்கப்பட்டு கொண்டிருந்தான்.

இரவு முழுவதும் புரண்டு கொண்டிருந்தவன் ஆதவன் உதயமாகுமுன் உதயாவின் முன் சென்று நின்றான்.

"உதயா என் கூட வா"

"எங்கடா"

"வா, சொல்றேன்"

"டேய், இருங்கடா, நானும் வரேன்" கை பிடித்து இழுத்து செல்லும் அவன் பின்னால் ஸ்டீபனும் ஓடுகிறான்.

"இந்த பாட்டியை பாருங்கடா பாவமாயில்ல" குளிரில் தெரு நாயோடு நடுங்கி கொண்டிருந்தவளின் முன் மண்டியிட செய்தான். புழு தின்று கொண்டிருந்த காலில் துணி சுத்தியிருந்தாலும் அதன் வெளியிலும் புழுக்கள் செத்துக்கிடந்தன.

"வாங்க நாம சுத்தம் பண்ணுவோம்". உதயாவிற்கு இது புதிது. ஏழைகள் என்றால் எட்டி நின்று பார்த்ததோடு சரி, அவர்களோடு பழகுவது என்பது கனவில் கூட நடவா விஷயம். சற்றே ஒதுங்கி நின்று கொண்டாள். கண்களை சுருக்கி ஒருவித அவஸ்தையோடு நடப்பவைகளை கவனிக்கலானாள்.

"பாட்டி"

சலனமில்லாமல் சுருண்டிருந்த பாட்டியை சற்று நேரம் பார்த்திருந்த ஸ்டீபன் ஓடிச் சென்று ஒரு கையில் டீயும், மறு கையில் பன்னுமாய் திரும்பி வந்தான். கிழவியின் அருகிலமர்ந்து அவளை நெருக்கமாய் அணைத்தவாறே டீயை கையளித்தான்.

"பாட்டி, உங்க புண்ணை கொஞ்சம் துடைச்சி விடுறோம், வலிக்கும், பொறுத்துக்கோங்க"

கையோடு கொண்டு வந்த டெட்டால், பஞ்சு இத்யாதிகளால் சுத்தம் செய்ய ஆரம்பித்த மூர்த்தியையும், கிழவியை அணைத்திருந்த ஸ்டீபனையும் வைத்த கண் எடுக்காமல் நோக்கி கொண்டிருந்தவள் நண்பனுக்கு தன்னுதவி தேவையோ என்ற எண்ணம் மனதில் தாக்க புழுக்கள் நெளிந்து கொண்டிருந்த அந்த குச்சி காலை மெதுவாய் பற்றலானாள்.

மெல்ல மெல்ல கிழக்கு வெளுக்க ஆரம்பித்தது. நண்பர்களும் ஓன்று கூட ஆரம்பித்தனர். தூரத்தில் தங்கநாடாச்சி மிஸ்சின் உதடு நடப்பவைகளுக்கும் தனக்கும் சமந்தமில்லாததுபோல் ஒரு மெல்லிய புன்னகையை சிதற விட்டுக் கொண்டிருந்தது. பூமி சுழற்சியின் அந்த ஒரு தருணம் இந்த நண்பர்களின் வாழ்வை புரட்டிப் போட்டிருந்தது. மனிதம் இங்கு பிறந்தது. பற்றியெரியும் நெருப்பில் தெளிக்கப்படும் தண்ணீர்த் துளிகள் போல இவர்களின் நட்பில் பிறர் துன்பங்களும் தூற்றல்களும் ஆவியாக துவங்கின.

Monday 3 September 2012

அவன் பெயர் மூர்த்தி...!

சுறுசுறுப்பாய் ஓடி விட்ட வாரத்தின் கடைசி எச்சமான சனிக்கிழமை ஏனோ எனக்கு சற்று ஆயாசத்தை கொடுத்தது. கல்லூரி நாட்களில் கழற்றி எறியப்பட்ட புடவைகள், அவை சார்ந்த இத்யாதிகள் என அனைத்தையும் வியர்வை படிய கறை நீக்கி, உடைந்து சற்றே ஊறிக் கொண்டிருக்கும் அப்பாவின் கால்களை சுற்றியுள்ள பேன்டெய்ட் துணிகளை அகற்றி, புத்தம் புதிதாய் ஒன்றை அணிவித்து, கூடவே அருகி வரும் மூலிகைகளால் அற்புதமாய் தயாரான தைலத்தால் அழுக்காகி நிமிர்ந்த போது முதுகு சற்றே வலித்தது.

அடுத்தடுத்து வர இருக்கும் திங்கட்கிழமையும் செவ்வாய் கிழமையும் நினைவில் வந்து மிரட்ட, சற்றே இளைப்பாறலாம் என்ற எண்ணத்தை ஒத்தி வைத்து விட்டு வார நாட்களின் தேவைகளை சமாளிக்க அந்த மார்ஜின்-ப்ரீ-சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தேன்.

ஒரு வாரமாய் யோசித்து யோசித்து தயாரித்த தேவைப்பட்டியல் தேவைப்பட்ட நேரத்தில் காணாமல் போயிருக்க, “அடக்கடவுளே” நெற்றியில் கைவைத்தவாறே அமர ஏதும் இடம் கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு கண்களை அலைபாய விட கண்களுக்குள் விழுந்தாள் அவள்.

இப்படி தான் இருந்தாள் அவள் என்று வர்ணிப்பதற்கு தேவையில்லை என்றாலும் சட்டென மவுனராகம் ரேவதியை நினைவில் கொண்டு வந்து நிறுத்தினாள். தன் மேல் ஒரு பார்வை படுவதை உள்ளுணர்வு உணர்த்த, சட்டென திரும்பியவளின் கண்களில் ஒரு மின்னல்.

“ப்ரார்த்தனா”

மெல்லிய புன்னகையோடு அழைத்தவளை நெற்றி சுருக்கி நினைவில் நிறுத்த முயன்று தோற்றேன்.

“நீங்க”

“நான் ப்ரியம்வதனா. மூர்த்தியின் மனைவி”

“மூர்த்தி” இந்த பெயர் என் உடலில் உடனடி மின்சாரத்தை உற்பத்தி செய்து கொண்டிருந்தது.

மூர்த்தி... சினிமாத்தனம் இல்லாத சேரனின் லட்சிய ஹீரோ. “பாபா ப்ளாக்ஷீப்” சொல்ல ஆரம்பித்த நாட்களோடு என்னோடு கைகோர்த்து நடக்க ஆரம்பித்தவன். இவனோடு நான் கழித்த நாட்கள் என்றென்றும் பசுமரத்தாணியாய் நினைவில் மட்டுமே பதிந்து விட நேர்ந்தது கொடுமையிலும் கொடுமை.

சிட்டுக்குருவியாய் சுதந்திர வானில் பறந்த எங்கள் வாழ்வில் செல்போன் டவராய் குறுக்கிட்டது பள்ளி இறுதியாண்டு. கடைசி பரிட்சை எழுதி முடித்த அன்று கைகோர்த்து திரிந்த நாங்கள் கைகுலுக்கி பிரிந்து கொண்டோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில். மற்றவர்கள் கூட அவ்வபோது நலம் விசாரித்துக்கொள்ள காணாமலே போயிருந்தான் மூர்த்தி.

உடல்நல பாதிப்பு, அம்மாவின் பிரிவு என நாட்காட்டியில் நாட்கள் இரக்கமேயில்லாமல் இறந்து போயிருந்தன. வருடங்கள் பத்து உருண்டோடி விட்ட நிலையில் மீண்டும் மூர்த்தி. இம்முறை பரபரப்பு நிறைந்த திருநெல்வேலி “போத்தீஸ்” முன்பு. பரவசம் மேலிட ஓடிச்சென்று அவன் கைகளை பற்றியதும் வழக்கம் போல் அவன் என் தலையில் குட்ட எத்தனித்ததும்.... மெலிதாய் சிரித்துக்கொண்டேன்.

“அவனாக இருக்குமோ” மனதில் எழுந்த கேள்வியை கேட்க நினைப்பதற்குள் அவளே முந்திக்கொண்டாள்.

“என்ன ஆச்சர்யமா இருக்கா? யாருன்னு யோசிக்காத, மூர்த்தியே தான்” என் முகபாவம் பார்த்து அவளுக்கு புரிந்திருக்க வேண்டும்.

“இதோ நான் அவன் மனைவிங்குறதுக்கு சாட்சி” அவள் நீட்டிய விரலில் சிரித்துக் கொண்டிருந்தது எனக்கு மிகப் பரிட்சயமான அந்த மோதிரம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு கடைசி விடைகொடுக்கும் முன் அவன் கரம் பற்றி, விட்டுவிடவே மனம் வராமல் விரல்களை வருடி கொண்டிருந்த போது நான் கண்ட அதே மோதிரம். “எம்.பி” என்ற அடையாளக்குறியோடு. இவன் அரசியல் கனவு இன்னமும் மிச்சமிருக்கிறது என்று நான் அன்று எண்ணியது தவறா? “எம்.பி”யின் அர்த்தம் மூர்த்தி, ப்ரியம்வதனாவா?

“நீங்க, சாரி, நீ நல்லா சமைப்பியாமே, உன் கையால் சாப்பிட கொடுத்து வச்சிருக்கணுமாமே” மீண்டும் ப்ரியா...

“ஊட்டி விடுடி, அதென்ன கையில உருட்டி குடுக்குற பழக்கம்?”

வழக்கமாய் அம்மா ஊட்டி விடும் அந்த நிலா சோறு உறவினர் ஒருவரின் வருகையால் என்னிடம் இடமாற நான் உருட்டி கையளித்த உருண்டையை வாங்க மறுத்து அடம்பிடித்தான் மூர்த்தி. மற்றவர்களும் அதை ஆமோதிக்க, மறுத்து விட இயலாமல் அன்று அனைவருக்கும் நானே ஊட்டி விட விமலாவும், சதீசும் கண்கலங்கி விட்டனர். “நீயும் எங்களுக்கு அம்மா ஆகிட்டடி” அவர்கள் கண்ணீர் அன்று எல்லோர் கண்களையும் குளமாக்கியிருந்தது. பின்னின்று கவனித்துக்கொண்டிருந்த அம்மாவும் அனைவரையும் ஒருசேர அணைத்துக்கொண்டாள்.

 “ஹே வா, அப்படி உக்காந்து பேசுவோம். என்னை அடிக்கடி நீ ப்ளாஸ்பேக் போக வைக்குற. சொல்லு, இன்னும் என்னைப்பற்றி என்னெல்லாம் சொல்லியிருக்கான்?”

அந்த சூப்பர் மார்கெட் வெளியே காலியாய் இருந்த திண்டின் மேல் அவளுக்கு இடம் விட்டு ஏறி அமர்ந்து கொண்டேன்.

“நீ ரொம்ப அழகுன்னு சொல்லுவான்” சட்டென கண்கள் பனித்தது.

“ஏன் அவன் மட்டும் தான் சொல்லுவானா? நீ சொல்ல மாட்டியா?”

பட்டென என் கரம் பற்றி அணைத்துக்கொண்டாள். என் நெற்றியில் முத்தமிட்ட அவளுள் மூர்த்தி தெரிந்தான். இவளால் எப்படி இதுவரை அறிமுகமே இல்லாத பெண்ணிடம் இவ்வளவு நெருங்க முடிகிறது? கொஞ்சமும் சந்தேகமில்லை, இவள் மூர்த்தியின் ப்ரியசகியே தான்.

பற்றியிருந்த அவள் கையில் புன்னகைத்த மோதிரத்தை பார்த்து “மூர்த்தி, ப்ரியம்வதனா” என்றேன். “இல்லை, மெம்பர் ஆப் பார்லிமென்ட்” என்றாள் அவள்.

“நீ பெரிய வக்கீலா வரணும் சந்தியா, அநீதி இழைக்கப்படும் ஏழைகளுக்கு நீ தான் போராடி நியாயம் வாங்கி குடுக்கணும்”

“நானும் உன்கூட அரசியல்ல குதிச்சுடுறேண்டா மூர்த்தி”

சந்தியாவை ஊக்கப்படுத்தி கொண்டிருந்தவன் என்னைப் பார்த்து முறைத்தான்.

“நீ ஒரு டாக்டர் ஆகணும் அம்மு. வெறும் எம்.பி.பி.எஸ் என்று இல்லாமல் ஒரு சிறந்த நியூரோ சர்ஜனா வரணும். உன்னால முடிஞ்ச அளவு மக்களுக்கு சேவை செய்யணும். நன்றாக படி, அதுவும் லட்சியத்துக்காக படி.”

மற்ற மாணவர்களை போலல்லாமல் இவன் மிகவும் வித்தியாசமானவனாய் இருந்தான். சுதேசி கொள்கை அவன் இரத்தத்தில் ஊறி இருந்தது. ஸ்கூல் பேக் கூட அவன் அம்மா தைத்து கொடுக்கும் துணி பை தான். இரத்ததானம், கண்தானம் முகாம்களில் தவறாமல் இவனை காணலாம். எயிட்ஸ் விழிப்புணர்வு கூட்டங்களுக்கு எங்களையும் அழைத்துச் செல்வான்.

ஓட்டு போடும் வயது வந்ததும் முழுதாய் அரசியலில் இறங்கி விட வேண்டுமென்பான். ஒரேயடியாய் ஆசைப்பட கூடாது, முதலில் சுயேட்சையாக போட்டியிட்டு எம்.பி ஆக வேண்டுமென்பான். கக்கனும், காமராஜரும் அவனது லட்சிய ஹீரோக்கள்.

நண்பர்கள் யாரையும் அவன் கட்டாயப்படுத்துவதில்லை, ஆனால் அவர்களின் தனித்திறமை கண்டு உற்சாகப்படுத்துவான். அவனின் உற்சாகமான வார்த்தைகள் பின்னாளில் பலன் தருமா என்பதை கூட பொருட்படுத்தாமல் அவனின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

“இங்க என்ன இல்லன்னு நாம அடுத்த நாட்டுக்கு ஓடுறோம்?” அவனின் கேள்விகளில் அனல் இருக்கும்.

“ஏண்டா, உனக்கு வேற வேலையே இல்லையா? நீ சொல்ற மாதிரி இவங்கெல்லாம் படிச்சு, நம்ம நாட்டுலயே இருப்பாங்கன்னு நீயுமாடா நம்புற?”

“நான் மற்றவர்களை நம்புறேனோ இல்லையோ என்னை நம்புறேன், உன்னை நம்புறேன்”

“கண்டிப்பா நான் பெரிய டாக்டரா வருவேண்டா” நெகிழ்ச்சியோடு அவன் தலையை கலைத்து விட்டது நேற்று போல் இருக்கிறது.

“ஆறு மாசம் முன்னாடி மூர்த்தியை சந்தித்தப்போ நீ சரியா பேச முடியலயாமே?”

“ஆமாடா, அன்று போத்தீசில் அத்தை கூட துணி எடுக்க போனேன். அவனை பார்த்து சரியா பேச முடியல, போன் நம்பர் கூட வாங்கிக்க முடியல, அதான் உன்னை பற்றி தெரிஞ்சுக்க முடியாமலே போய் விட்டது”

“ஆனா உன்னை பற்றி அடிக்கடி பேசுவான் அம்மு. ப்ளஸ் டூ முடிந்ததும் நீ அப்பா அம்மாவோடு ஊர் விட்டு போனதையும், அவனும் பீகாரில் இருக்கும் தன் உறவினர் வீட்டுக்கு போனதையும் அடிக்கடி நினைவு படுத்துவான். காலம் எப்படியோ எங்களை பிரித்து விட்டாலும் கண்டிப்பா அவள் ஒரு டாக்டர் ஆகி இருப்பாள் என்று மட்டும் உறுதியோடு சொல்லிக் கொண்டிருப்பான்”.

சந்தர்பங்களும் சூழ்நிலையும் ஒருவர் வாழ்வில் எத்தனையோ மாற்றங்களை நிகழ்த்தி விடுகிறது. ப்ளஸ் டுவில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தும் கட் ஆப் மார்க்கில் லட்சங்கள் என் லட்சியங்களை தகர்த்து விட துடித்தது. கடன் வாங்கி அப்பா கரன்சி நோட்டுக்களை வாரியிறைக்க ஒருவழியாய் எம்.பி.பி.எஸ் கனவு நிறைவேறியது. அப்பாவின் குடும்ப பாரம் குறைக்க வேண்டி போராட தயாராகையில் பகுதி நேர விரிவுரையாளராக திருநெல்வேலி அரசு மருத்துவமனை அரவணைத்துக் கொண்டது.

அன்று, மாணவர்கள் பத்து பேரை அழைத்துக் கொண்டு ரெத்த தானம் கொடுக்க மெடிக்கல் ஹாஸ்பிடல் போயிருந்தேன். தூரத்தில் நரைத்த தலையோடு சோகமாய் சுவரை வெறித்திருந்த பெரியவரை எங்கோ பார்த்த நியாபகம். அருகில் சென்று பார்த்தால் விஸ்வநாதன் அங்கிள். மூர்த்தியின் அப்பா.

“அங்கிள்”

என்னைப்பார்த்து கண் சுருக்கியவரை யோசிக்க விடாமல் “நான் ப்ரார்த்தனா, உங்கள் அம்மு”

அவர் உதடு ஒரு மெல்லிய புன்னகையை விரக்தியாய் சிந்தியது.

“என்ன அங்கிள் இந்த பக்கம், யாருக்கு உடம்புக்கு முடியல?”

“மூர்த்தி போய்ட்டான்மா” அவர் கைகாட்டிய திசையில் ஐ.சி.யூ.

“என்ன சொல்றீங்க அங்கிள், அவனுக்கு என்னாச்சு?” பதற்றம் என்னை களையெடுக்க ஆரம்பித்தது.

“ஆக்சிடென்ட். தலைல பலமா அடி, போயிட்டான்.”

“மூர்த்தீ...................” கேவலுடன் ஓடி சென்று அவன் கரம் பற்றினேன் பதறி தடுத்த நர்ஸ்சையும் மீறி.

மூர்த்தி ஜில்லிட்டு போயிருந்தான். வலிகள் நிறைந்த கண்களை அமைதியாய் மூடி, ஒரு வித மவுன புன்னகையை படர விட்டிருந்தான்.

“சரிமா, நீ சொன்னவாறே பண்ணிடுறேன்”. யாரிடமோ மொபைலில் பேசி கொண்டிருந்தவர் என்னிடம் குனிந்தார்.

“ப்ரார்த்தனா, அவனுக்கு செய்ய வேண்டிய கடமை நிறைய இருக்கு. ஏற்கனவே கண்களை எடுத்தாச்சு. அவன் உடலையும் தானமா கொடுக்க சொல்லி விட்டாள் என் மகள், அவன் மனைவி. மெடிக்கல் காலேஜ் டீனோடு பேசணும்”

“ஹெல்லோ” விஸ்வநாதன் அங்கிள் மொபைல் போனை உயிர்பிக்க, நான் கொஞ்சம் கொஞ்சமாய் நினைவை இழக்க ஆரம்பித்திருந்தேன்.

“அன்று உன்னை நான் பார்க்கவில்லையே ப்ரியா?”

நான் கேட்ட கேள்வி அவளுக்கு சட்டென புரிந்திருக்குமென்றாலும் கேள்விக்கான விடை வர கண்டிப்பாக தாமதமாகும்.

“அப்பொழுது நான் ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் நலனுக்காக நடந்த கிராமசபா கூட்டத்துக்காக ராஞ்சி போய் விட்டேன். உடனே திரும்ப முடியவில்லை. அதான் அங்கிருந்தே போன் பண்ணி சொல்லி விட்டேன்.

அப்போ நான் அவன் கூட இல்லனா என்ன அம்மு, என் மனசு முழுக்க அவன் நிறைஞ்சு இருக்கானே”

என் நண்பன், என்னோடு சகலமுமாய் இருந்தவன், நான் மிகப்பெரிய நியூரோ சர்ஜனாக வேண்டுமென்று கனவு கண்டவன். அவனை பற்றிய கனவை நினைவாக இதோ ப்ரியம்வதனா இருக்கிறாள், என்னை பற்றிய கனவை நான் தான் நினைவாக்க வேண்டும். என் இயலாமை என் இயக்கத்தை நிறுத்தி விட துடித்தது. இரண்டு மாதங்களாக வர மறுத்த அழுகை இன்று நெஞ்சு வெடித்து விஸ்வரூபமெடுத்தது. “ஒஒஒ....” வென்ற பெருங்குரலோடு மக்கள் கூட்டம் மறந்து கதறியழ ஆரம்பித்தேன்....

Sunday 2 September 2012

புத்தம் புதிதாய் ஒரு விடியல்...!

அழகாய் பூக்கத்
துவங்கியிருந்தது என் விடியல்...!

குயில்களின் பாட்டுடன்
அணில்களும் போட்டியிட,
அங்கே ஆரம்பித்திருந்தது
ஒரு சங்கீதக் கலவை...!

துள்ளிவிளையாடும்
வெள்ளி மீன்களிடையே கெண்டை மீனாய்
நதிக்குள் பாயும் நான்...!

என் சந்தோஷ சிதறல்களுக்கு
இணையாக கொலுசு
மாட்டிய வெள்ளையருவி...!

வெள்ளாட்டுக் குட்டியொன்று
குறுக்கும் நெடுக்குமாய் வளைந்தோட
துள்ளிக் குதிக்கும் மான் குட்டியாய்
அதன் பின்னே நான்...!

ரோஜாக்களும் சாமந்தியும்
கண் சிமிட்ட,
அதோ அந்த மல்லிகை பந்தலிலே
என் மனம் பறிபோகிறது...!


கிளிகள் கொஞ்சும்
அந்த சோலைவனத்தில்
கிள்ளை மொழி பேசி
கவி பாடத் துடிக்கும் நான்...!

காற்றின் வேகத்தை விஞ்சி விடும்
ஆசையில், தோற்பேன் யென தெரிந்தே
இரு கரம் நீட்டி அணைத்து
விடத் துடிக்கிறேன்...!

 என் இருகால்
பாய்ச்சலுக்கு இணையாக
கூடவே ஓடி வரும் அந்த
 நாய்க்குட்டியை கேளுங்கள்
நாங்கள் பதித்த கால்தடங்களை
மூச்சிரைப்போடு கதையாய்ச் சொல்லும்...!

கீழ்வானம் வெற்றிலை
போட்டு சிவக்கத் துவங்க,
மெதுவே எட்டிப்பார்த்த சந்திரன்
என்னை தாலாட்ட
தென்றலை தூதாக அனுப்பினான்...!

என் நேற்றைய கனவோடு
அழகாய் விடிந்த இன்றைய பகல் பொழுது
மெதுவே உறங்கத் துவங்கியது
நாளைய விடியலுக்காய்...!