Sunday, 2 September 2012

புத்தம் புதிதாய் ஒரு விடியல்...!

அழகாய் பூக்கத்
துவங்கியிருந்தது என் விடியல்...!

குயில்களின் பாட்டுடன்
அணில்களும் போட்டியிட,
அங்கே ஆரம்பித்திருந்தது
ஒரு சங்கீதக் கலவை...!

துள்ளிவிளையாடும்
வெள்ளி மீன்களிடையே கெண்டை மீனாய்
நதிக்குள் பாயும் நான்...!

என் சந்தோஷ சிதறல்களுக்கு
இணையாக கொலுசு
மாட்டிய வெள்ளையருவி...!

வெள்ளாட்டுக் குட்டியொன்று
குறுக்கும் நெடுக்குமாய் வளைந்தோட
துள்ளிக் குதிக்கும் மான் குட்டியாய்
அதன் பின்னே நான்...!

ரோஜாக்களும் சாமந்தியும்
கண் சிமிட்ட,
அதோ அந்த மல்லிகை பந்தலிலே
என் மனம் பறிபோகிறது...!


கிளிகள் கொஞ்சும்
அந்த சோலைவனத்தில்
கிள்ளை மொழி பேசி
கவி பாடத் துடிக்கும் நான்...!

காற்றின் வேகத்தை விஞ்சி விடும்
ஆசையில், தோற்பேன் யென தெரிந்தே
இரு கரம் நீட்டி அணைத்து
விடத் துடிக்கிறேன்...!

 என் இருகால்
பாய்ச்சலுக்கு இணையாக
கூடவே ஓடி வரும் அந்த
 நாய்க்குட்டியை கேளுங்கள்
நாங்கள் பதித்த கால்தடங்களை
மூச்சிரைப்போடு கதையாய்ச் சொல்லும்...!

கீழ்வானம் வெற்றிலை
போட்டு சிவக்கத் துவங்க,
மெதுவே எட்டிப்பார்த்த சந்திரன்
என்னை தாலாட்ட
தென்றலை தூதாக அனுப்பினான்...!

என் நேற்றைய கனவோடு
அழகாய் விடிந்த இன்றைய பகல் பொழுது
மெதுவே உறங்கத் துவங்கியது
நாளைய விடியலுக்காய்...!



1 comment:

  1. எனக்கும் "அன்றைய நினைவுகள்"..........
    இன்றைய கனவாகிப்போனத்தில், நித்தம் "அன்றைய நினைவுகளின்" கனவை எதிர்நோக்கி...........தினம்,தினம் விடியலுக்காய் அல்ல பொழுது சாய்வதற்காக காத்திருக்கிறேன்.......கனவுக்காக ! :(

    ReplyDelete