Tuesday, 3 February 2015

பார்த்திக்காக - 1



கண்ணாடி முன்னின்று
பார்த்துக்கொண்டிருக்கிறேன் பார்த்தி.
பாரேன், காலம் என்னை
எத்தனைப் புரட்டிப் போட்டிருந்தாலும்
என் எழில் மட்டும் குறையவேயில்லை.

இதோப் பார் இந்த கண்களை.
சோகங்கள் இறுகப் பற்றி திரைவிழுந்திருந்தாலும்
அந்த கருந்திரை உன் பிம்பம் சுமந்து
குதூகலிக்கிறது பார் பார்த்தி.

நீ வருடிய கன்னங்கள்
இன்னும் வறண்டுப் போய்விடவில்லை பார்த்தி.
தொட்டுப்பார்த்தால்
உன் முத்தங்களால் ஜில்லிடுகிறது.

கண்களை மூடிக்கொண்டு
நடக்க முயல்கிறேன். பின்னின்று அணைத்து
என்னை தாங்கிக் கொள்ளும் அந்த
பாதங்கள் உன்னுடையது தானே பார்த்தி?

அடிக்கடி யாரோ அழைப்பது போல்
தோன்றுகிறது பார்த்தி.
நீ தான் அழைக்கிறாயா?

உன்னைத் தான்
வார்த்தைகளால் கொன்றுவிட்டு
திரும்பிப்பார்க்காமலே வந்துவிட்டேனே.
பார்த்தி, திடீரென்று இருண்ட குகைக்குள்
விழுந்து விட்டது போல் தோன்றுகிறது பார்த்தி.

மன்னிப்பாயா பார்த்தி,
நான் காயப்படுத்த
எனக்கு உரிமையானவன்
நீ மட்டும் தானே பார்த்தி.

இதோ வரைமுறையே இல்லாமல்
வழிந்தோடும் இந்த கண்ணீர் கூட
அழகாய் தானே இருக்கிறது பார்த்தி.

விம்மித் துடிக்கும் இந்த உதடுகள் தான்
எத்தனை அழகு பார்த்தி.
இன்னமும் என் உதட்டுச்சாயம்
உன்னில் மிச்சமிருக்கிறதா பார்த்தி.

என் மேற்பூச்சுகளை உதிர்த்து விட்டு பார் பார்த்தி.
உனக்காக நான் இன்னும் அழகாய்
மெருகேறியப்படியேதானிருக்கிறேன்.

இந்த கண்ணாடியை ஓர் நாள்
தூக்கிப் போட்டுவிடத்தான் வேண்டும் பார்த்தி.
எத்தனை பொல்லாதது பார்த்தாயா?
உள்ளிருக்கும் உன்னையும் வெளிச்சம் போட்டு
காட்டிக்கொடுத்து விடுகிறது.

பார்த்தி, நேரமாகிவிட்டது.
பள்ளியிலிருந்து மகள் வந்துவிடப் போகிறாள்.
அவளுக்கு என் எழில் தெரிய வேண்டாம்.
நீ கலைத்து விட்ட என் கூந்தலுக்குள்
ஒளிந்துக் கொள் பார்த்தி.

மீண்டுமொருமுறை உன்னை இங்கு சந்தித்துக் கொள்கிறேன்.
நேரம் தவறிவிடாதே பார்த்தி.
நீயில்லையென்றால் துடித்துப் போய்விடுவேனென்பது
நீயறியாததா பார்த்தி.

- உன் பிரியம்வதனா

3 comments:

  1. வணக்கம்
    அருமையாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete