Saturday 21 November 2015

பிக்கு (piku) - திரைவிமர்சனம்



ஒரு சின்ன நூல். அதுல முடிச்சும் இல்ல, முடிவும் இல்ல. ஆனா ஒரே சிக்கல். அது தான் “பிக்கு”. படத்துல எப்ப எல்லாம் சாப்பாட்டு சீன் வருதோ அப்பலாம் மலச்சிக்கல் பத்தியே பேசுறாங்க. அதுவும் மஞ்சக் கலர் பச்ச கலர்ன்னு கலர்கலரா பேசுறாங்க. அப்புறம் டெல்லில இருந்து கோல்கத்தா போறாங்க. போற வழிலயும் மலச்சிக்கல் பத்தியே பேசுறாங்க, கோல்கத்தா போயும் அதே தான் பேசுறாங்க.

ஆத்தீ... எங்கள விட்டுரு, இப்படியே தப்பிச்சு ஒடிருறோம்ன்னு தான சொல்றீங்க, படத்துல கூட ஒருத்தர் அப்படி தான் எஸ்கேப் ஆவார். ஆனா நான் விட மாட்டேன், இப்படி வந்து உக்காருங்க, நான் பேசணும்.

இந்த படத்துல யாரும் யாரையும் பெரிய அளவுல தூக்கி வச்சி கொண்டாடுறது இல்ல,

மனச பிசையுற சீன், செண்டிமெண்ட் சீன்னு எதுவும் கிடையாது. ஆனா ஒருத்தருக்கொருத்தர் நிறையவே சார்ந்து இருக்காங்க. அது தேவைகளின் அடிப்படையில் தான் இருக்குதே ஒழிய உணர்வுகள் சார்ந்ததா இல்ல.

புரியும்படியா சொல்லணும்னா முதல்ல சொன்னேனே மலச்சிக்கல் பத்தியே பேசுறாங்கன்னு. ஆனா அதையும் தாண்டி நிறைய விசயங்கள பேசுறாங்க. எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாம பெரிய பெரிய விசயங்கள போகுறப்போக்குல சொல்லிட்டுப் போய்டுறாங்க.

குறிப்பா சொல்லணும்னா “உன்னோட செக்சுவல் லைப் ஆரோக்கியமா தானே போயிட்டு இருக்குன்னு பிக்கு கிட்ட அவளோட சித்தி கேக்குற கேள்வி. “it’s a need”-ன்னு ஒரே ஒரு டயலாக் தான். அதப் பத்தி பேசுறது பெரிய விசயமே இல்லங்குற மாதிரியான காட்சி அது.

இதுல என்ன ஆச்சர்யம் இருக்கப் போகுதுன்னு கேட்டீங்கனா, இதுல பிக்கு கதாநாயகி. அதுவும் ஒரு வாட்டி கூட கல்யாணம் ஆகாத முப்பதுகள்ல இருக்குற கதாநாயகி. அவளுக்கு செக்ஸ் தேவையா இருக்கு. அத அவளோட குடும்பத்துல இருக்குற ஒருத்தர் கூட மறுக்கல. ரொம்ப ஈசியா, கேசுவலா எடுத்துக்குறாங்க. அவளோட சித்தி மூணு கல்யாணம் செய்தவங்க.

செக்சுவல் தேவைக்கு மகள் ஒருத்தரை தேர்ந்தெடுப்பத அனுமதிக்குற அப்பா பாஸ்கோர், அவள் அதுக்கான நிரந்தர தீர்வா கல்யாணம் பண்ணிக்கலாமானு யோசிக்குறப்ப வெகுண்டுப் போயிடுறார். அவரை பொருத்தவரைக்கும் புத்தி கம்மியா இருக்குறவங்க மட்டுமே கல்யாணம் பண்ணிப்பாங்க. தன்னோட மனைவி அவளுக்குன்னு எந்த குறிக்கோளும் இல்லாம தன்னோட மொத்த வாழ்நாளையும் அவருக்காக செலவிட்ட மாதிரி அவர் மகளும் இருக்கக் கூடாதுன்னு சொல்றார்.

அதுல என்ன தப்பு இருக்குன்னு பிக்குவோட சித்தி கேக்குறப்ப, எல்லாமே தப்பு தான். நீங்க எல்லாம் உங்க சுய அடையாளத்த இழக்குறீங்க, உங்க புத்திய இழக்குறீங்க, சுயமரியாதைய இழக்குறீங்க, அறிவை இழக்குறீங்க, எல்லாத்தையும் அக்னி முன்னாடி இழந்துட்டு உங்க வாழ்க்கைய வாழுறீங்க. இது முட்டாள்த்தனம் தானேன்னு எதிர்க்கேள்வி கேக்குறார்.

கல்யாணத்துக்கு அப்புறம் வாழ்ந்த வீட்டை விட்டு, இன்னொருத்தன் வீட்டுக்கு போய், அங்க அவன் வீட்டையும் அவனையும் கவனிச்சுட்டு வாழுறது அர்த்தமே இல்லாம இருக்கு. உன்னை பெத்தது நான் தான், சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் உன்னை கைவிடலை, அப்போ என்னோட வயசு காலங்கள்ல நீ என்னை நல்லா கவனிச்சுக்கணும் தானே, நீ எப்படி எனக்கு குழந்தையோ அப்படி தான் நான் இப்போ உன்னோட குழந்தை. நான் உனக்கு என்ன செய்தேனோ, அத நீ எனக்கு திருப்பி செய்ன்னு என்னா அசால்ட்டா சொல்றார்.

மகளோட அந்தரங்கத்துல கூட தலையிடுற அப்பா, அதுவும் அவ கூட சும்மா பேசிக்கிட்டு இருந்தவர் கிட்ட போய் “நீ இவள கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறியா”ன்னு கேக்குறார். அவரும் “நல்ல பொண்ணா இருந்தா ஏன் பண்ணிக்கக் கூடாது”ன்னு திருப்பி கேக்க, “இவ விர்ஜின் இல்ல, இவளுக்கு சொந்தமா பிசினஸ் இருக்கு. அதனால அவ பினான்சியலாவும் செக்ஸ்சுவலாவும் சுதந்திரமானவ. தன்னுடைய தேவைக்காக ஒரு எமோசனல் பார்ட்னரை தேடிகிட்டு இருக்கா. உன்னைப் பொறுத்தவரை இவ நல்ல பொண்ணா”ன்னு தயக்கமே இல்லாம கேக்குறார். இவர் உங்களுக்கு அப்பான்னு சொன்னா நம்பவே முடியலன்னு ஒருதடவ ஒருத்தர் பிக்குகிட்ட சொல்லுவார், நம்மாலயும் தான் நம்ப முடியாது.

மனசுல இருக்குற விசயங்கள கொட்டித் தீக்கவும் வாய்விட்டு கதறி அழவும் எல்லாருக்கும் எமோசனல் பார்ட்னர்ஸ் தேவைப்படத் தான் செய்றாங்க. ஆனா எத்தன பேருக்கு இப்படி வாய்க்கும்னு சொல்ல முடியாது தானே. அப்படி வாய்ச்சுட்டா அந்த எமோசனல் பார்ட்னருக்காக எதையும் இழக்க தயாரா இருப்பாங்க. அதனாலதானோ என்னவோ பாஸ்கோர் பிக்குவுக்கு எமோசனல் பார்ட்னர் தேவையில்லன்னு முடிவு பண்ணிட்டார் போல.

தன்னோட பொண்ணு உறவு வச்சிருக்குற பையனுக்கு தன்னைப் போலவே மலச்சிக்கல் பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சு தான் அவர் அவள கல்யாணம் பண்ண விட மாட்டார்னும், தன்னோட பொண்ணு எந்த ஆணுக்கும் ஊழியம் செய்றத தன்னால அனுமதிக்க முடியாதுன்னும் அவர் அப்படி சொன்னதா அவர நியாயப்படுத்தியிருப்பாங்க.

அப்பாவுக்கு பிறகான இனி வர்ற நாட்கள உங்களால சமாளிக்க முடியுமான்னு கேள்வி கேக்கப்படுறப்ப “என் அப்பா என்னை எல்லா சூழலிலும் சமாளிக்க கத்து தந்துட்டு போயிருக்கார்”ன்னு பிக்கு சொல்லும் போது மனசு ரொம்பவே கனத்துப் போகுது...

மேல சொன்ன விசயங்கள பத்தி விவாதிச்சா கண்டிப்பா ஒரு தப்பான இம்ப்ரசன் தான் வரும். ஏத்துக்கவே முடியாத இந்த மாதிரியான விசயங்கள பாஸ்கோரா வர்ற அமிதாப் ரொம்ப ஈசியா வார்த்தைகள்ல சொல்லிட்டுப் போய்டுறார்.

நான் இந்த படத்துல எதையும் சரி, தப்புன்னு சொல்ல வரல, ஆனா எனக்கு என் பாட்டியோட பெத்தவங்க நியாபகத்துக்கு வந்தாங்க.

ஆமா, அவங்க என் அம்மாவோட தாத்தா பாட்டி. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து ரெண்டு பேரும் தோல் சுருங்கி, நடை தளர்ந்து போயிருந்தாலும் கிண்டலுக்கும் கேலிக்கும் குறைச்சலே இருக்காது. அந்த பாம்பட கிழவிக்கு தினமும் எண்ணெய் பண்டம் வாங்கிட்டு போற கிழவர், பக்கத்துல பக்கத்துல உக்காந்துகிட்டு ஒருத்தர ஒருத்தர் உரசிட்டே சீண்டிக்குற பாங்கு. வெத்தல இடிச்சு குடுத்துகிட்டே பொண்டாட்டிய “நீ ரொம்ப ரொம்ப அழகுடி”ன்னு வெக்கப்பட வைக்குற கிழவர். “ம்க்கும், அதான் தெரியுமே, ஊருல அத்தன பசங்களும் என் பின்னால தான சுத்துனானுவ”ன்னு மொகரைய இடிக்குற கிழவி. தொண்ணூத்தாறு வயசுல கிழவர் செத்தப்ப ஒரே மாசத்துல அவர் பின்னால போய்ட்டா அந்த ஜாக்கட் போடாத பாம்படக் கிழவி....

இவங்க எல்லாம் தேவைகள் அடிப்படைல தான் குடும்பம் நடத்தினாங்களா?

தேவைகளின் அடிப்படையில் எல்லாத்தையும் அணுகத் துவங்கிட்டா அங்க கண்ணீரும் இருக்காது, கூடவே சீவனும் இருக்காது.


.

2 comments:

  1. கதை நல்லாருக்கே படத்தை பார்த்ர வேண்டியதுதான்.....

    தேவைக்காக வழும்போதுதான் வளரமுடியும் என்பது என்னோட கருத்து .

    ReplyDelete
  2. படம் எப்படி வேணா இருந்துட்டுப் போகட்டும். படத்துல ரைட்டா தப்பானு வேண்டாம்...நீங்கள் கடைசில சொல்லிருக்கீங்க பாருங்க அந்தப் பாம்படக் கிழவியும் கிழவனும்....ஆஹா அந்த வயசுலயும் அசத்தல்...அதுதான....அங்க் நிக்குதுங்க விடை....கடைசி வரிதான் பஞ்ச்!

    ReplyDelete