Wednesday 26 March 2014

சிலந்திவலைச் சாபங்கள்....



உணர்வு பிசைந்து செயல் முடக்கிய
அஸ்தமனத்தின் ஆரம்ப நாள் அது...

நடுங்கும் கைகளுக்குள்
ஓர் அழுத்தம் வேண்டி
காற்றில் துழாவுவது பழக்கமாய் போனது...

அழுதலுக்கும் மறுக்கப்படும் உரிமைகள்
வெந்நீர் ஊற்றுக்குள் அழுத்தி
நரகம் காட்டி சிரிக்கின்றன...

வெறுமை மட்டுமே பரிசென அறிந்தும்
அழுத்தமாய் ஓர் எதிர்பார்ப்பு
கிளை பரப்ப துவங்கியது...

வசப்படும் வார்த்தைகள் ஏனோ
சல்லி வேர்களுக்குள் சிக்கித் தவிக்கிறது...

இப்பொழுதெல்லாம் மனம் கனத்து
இதயம் குமுறுவதை
கண்கள் தடுப்பதே இல்லை...

ஆ....வென இயலாமையின் ஆங்காரம்
ஆட்டுவிக்க...
வலி வலி வலி...
வலி வேண்டுமென ஏக்கம் கொண்டு
தகிக்கத் துவங்கியது மனது...

வாழ்தல் சாபமாகி விட்ட நிலையில்
வரம் தேடி தவம் கொள்ளத் தொடங்கினேன்...
தைரிய முகமுடி விசிறியடித்து
கோழை முகம் தன்னிலை காட்டுகிறது...

தன்னையே சுற்றிக்கொண்ட சிலந்திவலையாய்
என்னை நான் சூழ்ந்துக் கொள்கிறேன்...

பாரம் இறக்கி வைக்க கடகடவென
எழுத்தில் கொட்டிவிட்டு நிமிர்ந்து பார்க்கிறேன்....
இதோ, மற்றுமோர் கவிதை பிறந்தே விட்டது...

கண்கள் காய்ந்து விட்டிருந்தன...
துடைக்க கரம் தேவையில்லாமல்....

6 comments:

  1. // வலி வேண்டுமென ஏக்கம் கொண்டு.... //

    ???

    ReplyDelete
    Replies
    1. அதாவது அண்ணா, சில நேரங்களில் நெஞ்சை கிளிச்சுக்கலாம் போல இருக்குன்னு பீல் பண்ணுவோமே..... ஆஆஆஆ....ன்னு அது வலிக்கும் தான், ஆனா அந்த வலி நம்ம கூட துணைக்கு இருக்கும்ன்னு ஆறுதலும் இருக்கும்.... அதை தான் சொன்னேன்

      Delete
  2. வாழ்தல் சாபமாகி விட்ட நிலையில்
    >>
    எல்லோர் வாழ்விலும் இதான்

    ReplyDelete
    Replies
    1. :) அத வரமா மாத்திக்கணும் அக்கா... ஆனாலும் சில நேரங்களில் இந்த மாதிரியான சிந்தனை தவிர்க்க முடிவதில்ல

      Delete
  3. வலி, வேதனை இதெல்லாம் தானே நம்ம வாழ்க்கையிலயும் நிறைஞ்சு இருக்கு. அதையே பதிவுலையும் போடாம நல்லா ஜாலியா ஏதாவது எழுதலாமே தங்கச்சி..

    ReplyDelete
    Replies
    1. என்னமோ வலிய கூட ரசனையோட ரசிச்சு பழகி போயிடுச்சு அண்ணா.... எழுதி முடிச்சிட்டா மனசு பாரம் குறைஞ்ச மாதிரி பீல் வரும்

      Delete