Tuesday 9 June 2015

கேன்சர் - சந்தித்த மனிதர்கள்



அப்போ நான் பி.எஸ்.சி தேர்ட் இயர் படிச்சுட்டு இருந்தேன். அப்பா மொபைலுக்கு ஒரு போன் கால்.

ஹலோ, நான் டாக்டர் பெர்னாண்டஸ் பேசுறேன், காயுகிட்ட பேச முடியுமா?

ஒன் மினிட்ன்னு சொல்லி அப்பா என் கிட்ட போனை குடுத்தாங்க.

இட்ஸ் ஜஸ்ட் சிம்பிள் சார், ஐ வில் டூ இட்ன்னு சொல்லிட்டு போனை வச்சேன்.

விஷயம் வேறொன்னுமில்ல, அவர் கிட்ட ஒரு பேசியென்ட் போயிருக்கார். அவருக்கு வயித்துல கேன்சர் பிரிலிமினரி ஸ்டேஜ்ல (தொடக்க நிலைல) இருக்குன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. குணமாக்குறது ரொம்ப ஈசி. ஒரு சின்ன சர்ஜரி, அதோட, டாக்டர்ஸ் சொல்ற மருந்துகள தவறாம எடுத்துகிட்டா ரொம்ப சீக்கிரம் மீண்டு வந்துடலாம். ஆனா இவர் பயப்படுறார். அவர் பயத்த போக்க உங்க நம்பர அவர்கிட்டயும் அவர் நம்பர உங்ககிட்டயும் குடுக்கவா, நீங்க பேசுங்களேன்னு தான் டாக்டர் கேட்டார். இதென்ன பெரிய விஷயம், ரொம்ப சிம்பிளாச்சேன்னு தான் சரின்னு சொன்னேன்.

அன்னிக்கி முழுக்க எனக்கு எந்த காலும் வரல. அடுத்த நாள் அம்மா தான் சொன்னா, நீயே கூப்ட்டு பேசேன்னு. அவர்கிட்ட போய் நானா எப்படிமா பேசன்னு கேட்டதுக்கு, நோ நோ, ஒரு வேளை அவர் தயங்கலாம், டாக்டர் உன்கிட்ட சொல்லியிருக்கார்னா ஏதாவது காரணம் இருக்கும், நீ கண்டிப்பா கூப்ட்டு பேசுன்னு சொல்லி அவளே டயல் பண்ணித் தந்தா.

கால் அட்டென்ட் பண்ணினது ஒரு பொண்ணு. மாதவன் சார் இருக்காங்களான்னு கேட்டேன்.

நீங்க? – இது மறுமுனை

“நான் காயு பேசுறேன், டாக்டர் பெர்னாண்டஸ் இந்த நம்பர் தந்தார்”ன்னு நான் சொன்னதும் அந்த பக்கம் பேச்சு சத்தம் கேக்குது. திடீர்னு ஒருத்தர் கோபமா கத்துறார். குழந்தை ஒண்ணு வீல்ன்னு அலறுது.

“சாரி மேம், நானே அப்புறமா கூப்பிடுறேன்”னு சொல்லிட்டு அந்த பக்கம் லைன் கட்டாகிடுச்சு.

என்னடா இதுன்னு கொஞ்ச நேரம் அப்படியே அமைதியா உக்காந்துட்டேன். பிரச்சனை என்னவோ பெருசு மாதிரி தோண ஆரம்பிச்சிடுச்சு.

அம்மா ஜூஸ் கொண்டு வந்து தந்தா. விஷயம் என்னன்னு கேட்டுட்டு, நீ அவர் கிட்ட பேசுறதுக்கு முன்னாடி அவரப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கோ, மறுபடியும் கூப்ட்டு பேசு, தயங்காதன்னு தைரியம் சொன்னா.

இந்த மாதிரியான கௌன்ஸ்லிங்ல என்னை நானே ஈடுபடுத்தி அப்ப ரெண்டு வருஷம் ஆகியிருந்துது. சில பேரை ஹாஸ்பிடல் செக் அப் போகும் போது பாத்து பேச சொல்லுவாங்க. தன்னம்பிக்கையும் புன்னகையும் இருந்தா எதையும் கடந்து வந்துடலாம்ங்குறது என்னோட நிலைப்பாடா இருந்துச்சு. அத அவங்களுக்கும் புரிய வச்சப்ப மனசு நிறைஞ்சு நன்றியும் வாழ்த்தும் சொல்லிட்டு போவாங்க. சிலர் போன்ல பேசுவாங்க. நானே அப்பப்ப கூப்ட்டு நலம் விசாரிச்சுப்பேன். ஆனா இவர் விஷயம் வேறா இருந்துச்சு. பேசவே தயங்குறார். அதுவும் ரொம்ப சிம்பிளான விசயத்துக்கு.

அரைமணி நேரம் கழிச்சு மறுபடியும் கூப்ட்டேன். மறுபடியும் அதே குரல். அவர் தூங்குறார்ங்களேன்னு சின்ன தயக்கத்தோட.

இல்ல, நான் உங்க கிட்ட தான் பேசணும்ன்னேன்.

என்கிட்டயா? என்கிட்ட பேச என்ன இருக்கு? – மறுமுனை.

உங்க பேரு? – நான்

“ஹேமா”

நல்ல பெயர். நீங்க மாதவன் சாருக்கு என்ன வேணும்?

அவர் வொய்ப்

அப்படினா கண்டிப்பா உங்க கிட்ட தான் நான் பேசணும். அவர் என்ன வொர்க் பண்றார், என்ன படிச்சிருக்கார், உங்க கல்யாணம் லவ் மேரேஜா இல்ல அரேஞ்ச்ட் மேரேஜா? பசங்க இருக்காங்களா? – அடுக்கடுக்கா கேள்விகள் கேட்டு அவர பத்தின ஹிஸ்டரிய முதல்ல வாங்குனேன்.

அவர் படிச்சது எம்.பி.ஏ. ஒரு தனியார் பேங்க்ல வேலை பாத்துட்டு இருக்கார். லவ் மேரேஜ், ஒன்னரை வயசுல ஒரு பொண்ணு. அளவான குடும்பம், வசதியான குடும்பமும் கூட. ட்ரீட்மென்ட் செலவுன்னு பெருசா கஷ்டப்பட தேவையுமில்ல. எல்லாமே நல்லா தானே இருக்கு. அதுவும் ஒரு படிச்ச ஆளுக்கு தனக்கு வந்துருக்குறது ரொம்ப சுலபமா சரியாகுற விஷயம்ன்னு தெரிஞ்சிருக்க வேணாமா? அவர்தானே தன்னோட மனைவிய சமாதானப் படுத்தணும். ஆனா இவர் பயப்படுறார். கண்டிப்பா செத்துப் போவேன்னு புலம்புறார். அதுவும் ஹாஸ்பிடல் போனா கொன்னுடுவாங்கன்னு வேற பயம். கேட்டா ஹீமோதெரபி நல்ல செல்ஸ்ச அழிச்சிடும், சாவு நிச்சயம்னு எந்த ட்ரீட்மென்ட்க்கும் ஒத்துழைக்க மறுக்குறார்.

பொண்ணுக்கு ஒன்னரை வயசு. அவ கிட்ட போய் நான் செத்துப் போவேன், உனக்கு இனி அப்பா இருக்க மாட்டார், நீ அனாதையா திரிவன்னு சொல்றார் மேடம். இப்ப பொண்ணும் புலம்ப ஆரம்பிச்சுட்டா. அப்பா செத்துப் போவாங்கன்னு வர்றவங்க போறவங்க கிட்ட எல்லாம் மழலைல சொல்றா. எப்பவும் அப்பா அப்பான்னு அழுதுட்டு இருக்கா. இப்படி எல்லாம் பேசாதீங்கன்னு நான் கொஞ்சம் எடுத்து சொன்னாலும் நான் செத்துட்டா உனக்கு ஜாலி தான, இன்னொரு கல்யாணம் பண்ணிப்பியான்னு கேக்குறார். எனக்கு இவர் நோயை சமாளிக்குறத விட இவர சமாளிக்குறது பெரிய விசயமா இருக்கு, என் குழந்தை நிலமைய நினச்சா இன்னும் பரிதாபமா இருக்குன்னு சொன்னாங்க. உங்ககிட்ட பேச சொன்னா, ஒரு சின்ன பொண்ணுகிட்ட எல்லாம் என்னால பேச முடியாது, என்னை விட அவ என்ன பெரிய இவளான்னு கேக்குறார்ன்னும் சொன்னாங்க.

சரி, நீங்க எந்த ஊர்ன்னு கேட்டேன். சொன்னாங்க. கிட்டத்தட்ட பதினஞ்சு கிலோமீட்டர் தூரம். மீட் பண்ணனும்னா கூட பண்ணிடலாம். அம்மாவும் அதான் சரின்னு ஐடியா குடுத்தாங்க. எப்படியாவது சாயங்காலம் குறிப்பிட்ட பார்க்குக்கு அவர கூட்டிட்டு வர முடியுமான்னு கேக்க சொன்னாங்க. கிட்டத்தட்ட பத்து நாளா அவர் மனைவி எவ்வளவு ட்ரை பண்ணியும் அவர் வரவேயில்ல.

அந்த பத்து நாள்லயே அவர் நாலு கிலோ எடை குறைஞ்சு போயிருக்கார். ராத்திரி தூக்கம் கிடையாது, ஐயோ வயித்த வலிக்குது, தலைய சுத்துதுன்னு எந்நேரமும் புலம்புவாராம்.

அப்ப தான் ஒரு நாள் அவங்க ஹாஸ்பிட்டல் போறதா தகவல் வந்துச்சு. எனக்கும் அந்த நேரம் ஹாஸ்பிடல் போக வேண்டியிருந்துச்சு. அதனால நாங்களும் கிளம்பி போனோம். ஹேமா அவங்க ரிசப்சன்ல உக்காந்துட்டு இருக்குற இடத்துல இருந்து கைகாட்டினாங்க. நாங்களும் நேரே ஹாய் சொல்லிட்டே அவங்க கூட போய் உக்காந்துகிட்டோம்.

ஹேமா நல்ல அழகு. அவங்க குழந்தை செம க்யூட். ஒன்னரை வயசுன்னு உருவத்தை வச்சு வேணா நம்பலாம், ஆனா பேச்சு செம வாய். அந்த வயசுலயே வாக்கியம் அமைச்சு பேசுது. நான் அதையே பாத்துட்டு இருந்தப்ப சிகப்பு கலர் மீன் நீந்துதுன்னு சொல்லுது. பேர் மதுமிதாவாம்.

மாதவன நான் பாத்த மாதிரியே காட்டிக்கல. அம்மாவும் அப்பாவும் தான் போய் ஹாய் சொன்னாங்க. அம்மாவே கூப்ட்டு காயு இதான் டாக்டர் சொன்ன மாதவன் சார்னு அறிமுகப்படுத்தி வச்சாங்க. நான் தெரியாத மாதிரி அலட்சியமா ஓ-ன்னு கேட்டுகிட்டேன். அதோட அவர் பக்கமே திரும்பல. அவர் பொண்ணு கிட்ட பூச்சாண்டி மாதிரி விளையாட்டு காட்டி பயமுறுத்திகிட்டு இருந்தேன்.

அம்மா தான் மெதுவா ஆரம்பிச்சா. ரொம்ப தலை வலிக்குதுன்னு சொன்னா. அடிக்கடி வாந்தி எடுக்குறா. வெயில்ல போய்ட்டாலே அன்னிக்கி முழுக்க படாதபாடு பட்டுடுவான்னு சொல்லிட்டு இருந்தப்பவே, “ம்மா, ரெண்டு நாள்ல காலேஜ்ல அசோசியேசன் டே-மா. லேப்டாப் எடுத்துட்டு வந்துருந்தா கொஞ்சம் வேலை பாத்துருப்பேன். இன்னும் ப்ரசன்டேசன் ரெடி பண்ணல”ன்னு குறுக்க பேசினேன்.

இப்படி தான் தலைவலினா வீட்ல இருன்னு சொன்னா கேக்க மாட்டா. அதுவா நானா பாத்துடுறேன்மான்னு அதுக்கே சவால் விடுவான்னு அம்மா அடுத்த கொக்கிய போட்டா. “பின்ன அது பாட்டுக்கு வலிச்சுட்டு இருக்கப் போகுது, அதுக்காக எல்லாம் நான் ஒரு இடத்துல இருக்கணும்னு நினச்சா எப்படி. எனக்கு வேலை நிறைய இருக்கே”ன்னு நான் பதில் குடுத்தேன்.

“கண்டுபிடிச்சப்ப கிட்டத்தட்ட பைனல் ஸ்டேஜ். யாருக்கும் நம்பிக்கை இல்ல, பொழச்சு வருவான்னு. ஆனா இப்ப பீனிக்ஸ் மாதிரி மீண்டு காலேஜ் போயிட்டு இருக்கா. சும்மா இல்ல, அவ டிபார்ட்மென்ட் லீடர் அவ தான். எல்லா வேலையையும் தலைல இழுத்துப் போட்டுட்டு செய்றா” – இது அம்மா

நான் இப்ப நிமிர்ந்து மாதவனை பாத்தேன். அவர் அம்மா சொல்றத கொஞ்சம் ஆர்வத்தோட கேட்டுக்குற மாதிரி தோணிச்சு. “பின்ன என்ன சார், நீங்களே சொல்லுங்க, மனுசனா பொறந்தா எதையாவது சாதிச்சுட்டு தான் போகணும். அதுக்குள்ள சாவு நம்மள பாத்து வா வான்னு கூப்ட்டா போய்ட முடியுமா என்ன? என்னோட லட்சியமே, நான் சாகுறப்ப உலகம் அழுதோ இல்லையோ அட்லீஸ்ட் ஒரு ஊரு அழணும், அதுக்காவது ஏதாவது சாதிச்சுட்டு தான் சார் சாகணும். அதனால தான் வந்த எமனை இன்னிக்கி போயிட்டு கூப்ட்ரப்ப வான்னு திருப்பி அனுப்பி வச்சுட்டேன்”னேன்.

ஹேமா க்ளுக்ன்னு சிரிச்சுட்டாங்க.

அப்படியே நானும் உற்சாகத்த வரவழைச்சுட்டு “சரி, சாருக்கு என்ன பிரச்சனை”ன்னு தெரியாத மாதிரி கேட்டேன். அவரோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் கைல வாங்கி பெரியமனுசித் தனமா ஒரு பார்வை பாத்தேன் (நிஜமாவே எனக்கு அப்ப ரிப்போர்ட் பாத்து ஒரு நோயோட தன்மைய எல்லாம் தெரிஞ்சுக்குற அளவு பக்குவம் கிடையாது).

“இது சிம்பிள் விசயமாச்சே”ன்னு எல்லாம் தெரிஞ்சவ மாதிரி அலட்சியமா சொன்னேன். அவர் முகத்துல கொஞ்சம் எரிச்சல் தெரிஞ்சுது. என்னோட பிரச்சனை பத்தி உனக்கு என்ன தெரியும்ன்னு அவர் நினச்சது அவர் காட்டின கோபத்துல புரிஞ்சுது.

நான் உடனே மதுவை தூக்கிட்டு மீன் தொட்டி பக்கமா போய் அவளுக்கு வேடிக்கை காட்டுற மாதிரி நடிக்க ஆரம்பிச்சுட்டேன்.

அம்மா மறுபடியும் ஆரம்பிச்சா.

“அவளுக்கு சர்ஜரியோட ஹீமோவும் குடுத்தோம். அடுத்த தடவ வராம இருந்தா அவ இன்னும் கொஞ்ச நாள் இருக்கலாம்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. ஆனா இப்ப மறுபடியும் வளர ஆரம்பிச்சிடுச்சு. அஞ்சு ரவுண்டு ஹீமோ குடுத்துப் பாப்போம்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. அதுக்கு கன்சல்ட் பண்ணத் தான் வந்துருக்கோம்”ன்னு சொன்னதும் அவர் பதற ஆரம்பிச்சுட்டார்.

“அய்யயோ, அப்படினா இனி அவ்வளவு தான். இந்த மாதிரி கேஸ் எல்லாம் பொழைக்காது”ன்னு.

“அவ செத்துப் போறதா இருந்தா முதல்லயே செத்துப் போயிருப்பா. இப்ப அவ கிட்ட எமனால நெருங்க முடியாது, அவ அனுமதிக்க மாட்டான்னு அவளே சொன்னத கேட்டீங்க தானே. எனக்கும் அந்த நம்பிக்கை தான். என் பொண்ணு அவ்வளவு சீக்கிரம் சாகுறவ இல்ல”ன்னு அம்மா சொன்னாங்க.

அம்மா பொதுவா இப்படி என்னைப் பத்தி யார் கிட்டயும் பேசவும் விரும்ப மாட்டா. ஆனா அவரை விட நான் எவ்வளவு பெரிய ஆபத்தான நிலைல இருக்கேன், அப்படியும் எவ்வளவு தன்னம்பிக்கையோட இருக்கேன்னு அவருக்கு புரிய வைக்க வேண்டியிருந்துது. அதனால என்னைப் பத்தி பேச வேண்டியதாயிருந்துது.

ரெண்டு பேருமே டாக்டர பாத்து முடிச்சுட்டு ஊருக்கு கிளம்புறப்ப ஒரு நாள் மீட் பண்ணலாம்ன்னு கைகுலுக்கிகிட்டோம். அன்னிக்கி நான் அவர் கிட்ட கேட்டுகிட்டது ஒண்ணே ஒண்ணு தான், மனச ரிலாக்ஸ் பண்ணிக்க எங்கயாவது வெளில போங்க, எனக்கும் ரிலாக்ஸ்சேசன் தேவைப்படுது. பார்க் அடிக்கடி போவேன் (சுத்தப் பொய்), அதனால நீங்களும் பார்க் வாங்க, சும்மா பேசிட்டு இருக்கலாம்னு சொன்னேன்.

அடுத்து ஒரு நாள் மீட் பண்ணினப்ப காலேஜ்ல நடந்த அசோசியேசன் டே பத்தி மட்டும் தான் பேசினேன். எனக்கு இருக்குற கனவுகள், அடுத்து என்ன படிக்கணும், பி.ஹச்.டி எதுல பண்ணணும், எதிர்கால திட்டம்ன்னு நிறைய பேசினேன். அதுக்கு அடுத்த மீட்ல அவரோட காலேஜ் லைப், அவங்களோட லவ் ஸ்டோரி இதெல்லாம் பேசி நிறைய சிரிச்சோம். மறந்தும் அவரோட உடல்நிலை பத்தி நாங்க பேசிக்கவே இல்ல.

ஒரு நாள் அவரே கேட்டார். “அப்போ சர்ஜரி பண்ணினா பொழச்சுக்கலாமா?”

“உங்களுக்கு சர்ஜரியே தேவ இல்ல. ஹீமோ போதும், ஆனா ரொம்ப ரொம்ப தைரியமா இனி திரும்பி வரவே வராதுன்னு அத தொரத்தி விடுறதுக்கு தான் சர்ஜரி. அதெல்லாம் பாத்து பயப்பட தேவையே இல்ல. இப்ப எல்லாம் ஊசி போட்டுக்குற மாதிரி தான் சர்ஜரி பண்றதும்”ன்னு நான் சொன்னதும் அம்மா, நான் ஊசி போடுறப்ப பண்ற கலாட்டா எல்லாம் சொல்லி அவர சிரிக்க வச்சுட்டா.

அவர் சிரிச்சுட்டே, “நீயே பெரிய பயந்தாங்கொள்ளி, நீ எனக்கு அட்வைஸ் பண்றியா”ன்னு கேக்க, ஹலோ, இப்ப வந்து குத்த சொல்லுங்க ஊசிய, நாங்கெல்லாம் எவ்வளவு பெரிய தைரியசாலின்னு தெரியும்”னு நான் பதிலுக்கு சவால் விட்டேன்.

மாதவன் சார் விஷயம் நிஜமாவே எனக்கு புது அனுபவம் தான். நேர்ல இதுக்காகவே ஒருத்தர மீட் பண்ணி, அவருக்கே தெரியாம அவருக்குள்ள தன்னம்பிக்கைய விதைக்க ரொம்பவே இயல்பா இருக்கவேண்டியிருந்தது.

ஒரு நாள் அவரே கேட்டார், “எப்பப் பாத்தாலும் வேலை இருக்கு வேலை இருக்குன்னு சொல்லிட்டே இருக்கியே, உனக்கு இருக்குற தலைவலிக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கலாம்ல”ன்னு.

“என்னைப் பொருத்தவரைக்கும் எனக்கு தலைவலிக்குதுன்னு நான் உணர கூட நேரம் இருக்கக் கூடாது சார், இருக்குற வரைக்கும் எதையாவது செய்துட்டே இருக்கணும். எப்ப நமக்கு ரெஸ்ட் வேணும்னு நினைக்குறோமோ, எப்ப நம்மோட உடல் தளர்ந்துடுச்சுன்னு நினைக்குறோமோ அப்பவே நம்மோட நம்பிக்கை குலைய ஆரம்பிச்சுடும். அப்போ நம்ம நோய் நம்மள ஜெய்க்க ஆரம்பிச்சுடும். அத நாம ஜெய்க்க விடக் கூடாது”ன்னேன்.

“எனக்கு இப்படி ஒண்ணு வந்துடுச்சு, நான் ஒரு நோயாளின்னு மனசுக்குள்ள பிக்ஸ் பண்ணிட்டா நாம அப்படி தான் ஆவோம். அத விட்டுட்டு அத பத்தி யோசிக்கவே நேரம் இல்லாம ஓடிப் பாருங்க, அதால தூரமா நின்னு நம்மள வேடிக்கை மட்டும் தான் பாக்க முடியும். கிட்ட நெருங்க முடியாது. அதுக்காக அதுக்கான ட்ரீட்மென்ட் எடுக்கக் கூடாதுன்னு இல்ல, அதையும் சரியான நேரத்துக்கு எடுத்துக்கணும், அடுத்த செகண்ட் அத பத்தி மறந்துடணும். சாக இது ஒரு ரீசன்னா வாழ பல ரீசன் இருக்கு சார், வாழ்ந்துடலாமே”ன்னும் சொன்னேன்.

அவர் கொஞ்சம் சகஜமாக ஆரம்பிச்சார். அவரோட முகத்துல புன்னகைய பாத்தப்ப எனக்கு நம்பிக்கை வந்துச்சு. முதல் கட்டமா அவருக்கு சர்ஜரி நடந்துச்சு. ரொம்ப ஈசியா பதினஞ்சே நாள்ல சகஜமாகிட்டார். எனக்கு அந்த நேரம் ஹீமோ ஆரம்பிச்சிருந்ததால மொட்டை போட்ருந்தேன். நாங்க அங்கயே தங்கியிருந்தோம். அவர் கன்சல்டிங் நேரத்துல வந்து பாத்துட்டு போவார். “ஏன் முதல்ல மொட்டைப் போட்டுட்ட”ன்னு அவர் கேட்டா, முடி கொஞ்சம் கொஞ்சமா கழிஞ்சு போறத பாத்தா மனசு கஷ்டமா போய்டும். உயிருக்கே பயப்பட மாட்டோம், ஆனா முடி போகுதேன்னு கவலை வந்துடும். இப்ப பாருங்க, ஒரே நாள்ல எல்லாம் போச்சு. இனி இத பத்தி கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லல”ன்னு நான் கேட்டப்ப அவரும் ஹீமோ ஆரம்பிக்குற முதல் நாள் மொட்டைப் போட தயாராகிட்டார்.

எப்பவும் எங்க அப்பா செத்துப் போய்டுவார், செத்துப் போய்டுவார்னு சொல்லிட்டு இருந்த மது அத எல்லாம் மறந்துருந்தா. அப்பா சாக்லேட், அப்பா ஐஸ்க்ரீம்னு கேக்குற அடம்பிடிக்குற குழந்தையா அவ வயசுக்கேத்த மாதிரி மாறி போயிருந்தா.

மாதவன் சார் ரொம்ப சீக்கிரம் குணமாகிட்டார். அப்படியே அவருக்கு அவர் சொந்தக்காரர் மூலமா பெக்ரைன்ல வேலை கிடைச்சு, கொஞ்ச நாள்ல திரும்பி வந்து குடும்பத்தயும் அங்கயே கூட்டிட்டு போய்ட்டார்.

கடைசியா ஏர்போர்ட்ல வச்சு அவர் கிட்ட போன்ல பேசினது. தேங்க்ஸ்மா, என் உயிரை மீட்டுக் குடுத்ததுக்குன்னு அம்மாவுக்கு நன்றி சொன்னார். எனக்கு சொல்லவேயில்ல. ஒரு வேளை அது சின்னப் புள்ள, அதுக்குகிட்ட நாம என்ன தேங்க்ஸ் சொல்றதுன்னு ஈகோ இருந்துருக்கும் அவருக்கு. ஹேமா எனக்கு தேங்க்ஸ் சொன்னப்ப அழுதது எனக்கு புரிஞ்சுது. மது பை அக்கா, உம்மான்னு முத்தம் குடுத்தப்ப நான் சாதிக்க நினச்ச எதுவோ ஒண்ணு முழுமையாகிட்டத உணர முடிஞ்சுது.

மாதவன் சார் குடும்பம் நலம்.


21 comments:

  1. uangal anupavam, uangal eluthu, uangal theramai paarkum podhu vyiapaga iruku.

    ReplyDelete
    Replies
    1. கிட்டத்தட்ட எல்லா வகையான அனுபவங்களையும் கடந்து வந்தவ நான்னு அடிக்கடி பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லுவேன். அதெல்லாம் தான் என்னை இப்படி எழுத தூண்டுதுன்னு நினைக்குறேன்

      Delete
  2. வணக்கம்
    சகோதரி

    படித்த போது வேதனையாக இருந்தது.. பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வேதனைகளுக்கு இந்த இடத்துல இடமே இல்ல அண்ணா, அனுபவமா எடுத்துட்டு கடந்துட வேண்டியது தான்

      Delete
  3. மனதை நெகிழ வைத்த சாதனை...

    ReplyDelete
    Replies
    1. நிறைய பேர் இப்படி சைலென்ட்டா சாதிச்சுட்டு இருக்காங்க அண்ணா, நமக்கு தான் வெளில தெரியுறது இல்ல

      Delete
  4. மிகவும் பயனுள்ள இந்த மிக நீண்ட அனுபவக் கட்டுரையின் ஒவ்வொரு வரிகளையும் மனதில் வாங்கிக்கொண்டு, ரஸித்து ருசித்துப் படித்து முடித்தேன்.

    தங்களின் வேதனை நிறைந்த பல்வேறு சாதனைகளுக்கும், பிறருக்கு மன ஆறுதல் தந்து உதவிடும் நல்ல தங்கமான உள்ளத்திற்கும், அதனை அழகானதோர் ஆக்கமாக இங்கு தந்து வாசகர்கள் அனைவருக்குமே தன்னம்பிக்கையைக் கொடுத்துள்ளதற்கும் தங்களுக்குத் தலைவணங்கி மகிழ்கிறேன்.

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களோட கருத்துக்கு தேங்க்ஸ்

      Delete
  5. தங்களின் தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது.

    அதை எங்களுக்கும் எழுத்தினூடாகத் தந்துபோகின்றமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் உங்களோட உற்சாக கமன்ட்டுக்கு

      Delete
  6. அன்புடையீர்,

    வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு: http://blogintamil.blogspot.in/2015/06/12.html

    ReplyDelete
    Replies
    1. உங்க பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  7. சகோதரி அவர்களுக்கு அன்பு வணக்கங்கள். நானும் உங்கள் (தமிழ்மணம்) வாசகர்களில் ஒருவன். இந்த மாத வலைச்சர ஆசிரியராக இருக்கும் அய்யா திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களது வழிகாட்டுதலில் இங்கு வந்தேன்.

    // “என்னைப் பொருத்தவரைக்கும் எனக்கு தலைவலிக்குதுன்னு நான் உணர கூட நேரம் இருக்கக் கூடாது சார், இருக்குற வரைக்கும் எதையாவது செய்துட்டே இருக்கணும். எப்ப நமக்கு ரெஸ்ட் வேணும்னு நினைக்குறோமோ, எப்ப நம்மோட உடல் தளர்ந்துடுச்சுன்னு நினைக்குறோமோ அப்பவே நம்மோட நம்பிக்கை குலைய ஆரம்பிச்சுடும். அப்போ நம்ம நோய் நம்மள ஜெய்க்க ஆரம்பிச்சுடும். அத நாம ஜெய்க்க விடக் கூடாது”//

    என்ற உங்களது இந்த பதிவின் வரிகள் என்னை மிகவும் நெகிழச் செய்து விட்டன. காரணம் சித்தப்பா, அத்தை மற்றும் என்னோடு வேலை பார்த்த சில நண்பர்களும் இந்த நோயின் கடுமைக்கு அவஸ்தை பட்டதை நேரில் பார்த்து இருக்கிறேன். உங்களது மவுனமான மன உறுதி வெற்றி பெறட்டும்.

    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு.VGK அவர்கள், தங்களின் வலைத்தளத்தினை இன்றைய (12.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    வலைச்சர இணைப்பு இதோ:
    வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்
    http://blogintamil.blogspot.in/2015/06/12.html

    ReplyDelete
    Replies
    1. உங்களோட கருத்துக்கு தாங்க்ஸ். லேட்டா பதில் குடுக்குறதுக்கு மன்னிக்கணும், நான் அந்நேரம் ஹாஸ்பிடல்ல இருந்தேன்

      Delete
  8. உங்களுடைய சில கட்டுரைகள் படித்து வியந்து இருக்கிறேன்! இந்த அனுபவ பகிர்வு கேன்சரைப் பற்றிய விழிப்புணர்வு தந்ததோடு ஓர் அசாத்திய தன்னம்பிக்கையையும் தருகின்றது! வாழ்த்துக்கள்! உங்கள் தன்னம்பிக்கை ஜெயிக்கட்டும்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்களோட கருத்துக்கு நன்றி. இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. கண்டிப்பா சொல்றேன்

      Delete
  9. முதலில் பதிவைப் படிக்கும் போதுஏதோ கௌன்செலிங் செய்பவரென்று தோன்றியது. எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் “நாம் நம்மால் இதற்கு மேல் தாங்கமுடியாது என்று நினைக்கிறொமோ அதைவிட ஆறுமடங்கு தாங்கும் சக்தி நமக்குண்டு “ என்பார். உங்கள் பதிவு இந்தத் தாங்கும் சக்தியை அளிப்பது மனவலிமையே என்று புரிய வைக்கிறது. வாழ்த்துக்கள் என்றும் நலமோடு இருக்க.

    ReplyDelete
    Replies
    1. நான் கவுன்ஸ்லிங் செய்றது கிடையாது. எப்பவாவது டாக்டர் பேச சொன்னா பேசுவேன் அவ்வளவு தான். மத்தப்படி தன்னம்பிக்கைங்குறது நமக்குள்ள வர்ற விஷயம் இல்லையா

      Delete
  10. உங்களுடைய இந்த இடுகை யினை இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-6.html அடையாளம் காட்டியுள்ளேன். நேரமிருப்பின் சென்று பாருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா.

      Delete
  11. சுட்டிகாட்டியதுக்கு தேங்க்ஸ்

    ReplyDelete