Saturday 8 March 2014

என் செல்ல அம்முகுட்டிக்கு (மகளிர் தின ஸ்பெசல்)



என் செல்ல அம்முகுட்டிக்கு,

அம்மா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.

வா வா வா, வந்து அம்மா என்ன சொல்லப்போறேன்னு கேளு.

முதல்ல நான் உனக்கு அம்மாவ பத்தி கொஞ்சம் சொல்லப் போறேன். சமத்தா கேட்டுக்க. புரியலனா பரவால, புரியுற நேரம் வர்றப்ப புரிஞ்சிடும்.

நான் குட்டி பாதம் தரைல வச்சு, தமிழ் பேசி பழகுறப்பவே என்னோட அம்மாகிட்ட, அதான் உன் பாட்டிக்கிட்ட என்ன சொல்லுவேன் தெரியுமா? எனக்கு வீரமா ஒரு பொம்பள புள்ளைய பெத்துக்கணும்ன்னு...

ஹஹா... இப்போ நினச்சாலும் உதட்டுல புன்னகை வருது.

இதுவே வேற அம்மாக்களா இருந்தா, இந்த வயசுல உனக்கு இந்த எண்ணம் தேவையான்னு போட்டு சாத்து சாத்துன்னு சாத்தியிருப்பாங்க. ஆனா உன் பாட்டி அப்படி இல்ல. அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?

என்னை வாரி அணைச்சு, பெண்ங்குறவ சக்தி, கண்டிப்பா நீ நல்லா படிச்சு பெரியவளாகி, சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு, உன்னோட இஷ்டப்படி பெண் குழந்தை பெத்துக்கோன்னு சொன்னாங்க... அந்த நாள்ல இருந்து யாருக்கு பெண் குழந்தை பிறந்தாலும் என்னவோ எனக்கே பிறந்த மாதிரி அவ்வளவு சந்தோசமா கொண்டாடுவேன்...

ஒரு தடவை பக்கத்து வீட்ல ஒரு சின்னக் குழந்தை கீழ விழுந்து அடிபட்டுடுச்சு. அதோட அம்மா கொஞ்சமும் பதறாம அந்த குழந்தைய ஏண்டி விழுந்தன்னு கேட்டு அடிச்சுட்டு இருந்தாங்க. ஏற்கனவே அடிபட்ட வலி, இப்போ அம்மாவோட நடத்தை எல்லாம் பாத்து அந்த குழந்தை இன்னும் மருண்டு அழ ஆரம்பிச்சது. அப்போ அந்த குழந்தையோட பாட்டி பதறி வந்து குழந்தைய தூக்கிகிட்டு, வலிச்சு பெத்திருந்தா தானே புள்ளையோட அருமை தெரியும்னு ஒரு வார்த்த சொன்னாங்க... அப்போ எனக்கு அர்த்தம் புரியல, அப்புறமா தான் தெரிஞ்சுது அந்த குழந்தை சிசேரியன் மூலமா பிறந்ததுன்னு. அந்த பாட்டி சொன்னது தப்பான வார்த்த தான்.. ஆனா, அது எனக்குள்ள ஒரு வைராக்கியத்த குடுத்திருக்கு. ஆமா, உன்னை வலிக்க வலிக்க நான் பெத்தெடுக்கணும்...

நெஞ்சுல நான் சுமக்குற செல்லமே....

பெண் - ஆளப் பிறந்தவள்.

ஆமா, அவ நினச்சா கண்டிப்பா இந்த தரணிய ஆளலாம். அவ நினச்சா இந்த பூமியோட மொத்த நேசத்தையும் வெளிப்படுத்தலாம்...

அதுக்கு ஒரு அம்மாவா நான் உனக்கு சில விஷயங்கள் சொல்லணும்டா...

செல்லமே, நீ ஒரு பொண்ணு. அதுக்காக கர்வப்படு. அதுக்காக அத வார்த்தைகள்ல காட்டாதே, நல்ல செயல்கள்ல காட்டு

எந்த சூழ்நிலையிலும் பெண்ணாக பிறந்தேனேன்னு சுயபட்சாதாபம் கூடவே கூடாது. அது தற்கொலைய விட கொடுமையானது அம்மு.

எந்த உயிரா இருந்தாலும் அதுகிட்ட அன்பா இருந்து பாரு. இந்த உலகம் எவ்வளவு அழகானதுன்னு உனக்கு தெரியும்

எப்பவுமே தோல்விகள கண்டு துவண்டு போய்டாத. எத்தன தோல்வி வந்தாலும் அத பாடமா எடுத்து, புன்னகையோட அத தாண்டி போ

உன்னோட வாழ்க்கைல குறுக்கிடுற துரோகிகள இனம் கண்டுக்க பழகு. உன்னால முடிஞ்ச அளவு விலகி போ. முடியல்லயா, தொல்லைகள் தொடர்ந்தா எதிர்த்து நில்லு...

தப்பு நடந்தா தட்டிக் கேளு. இடம் பொருள் முக்கியம். உன்னோட விவாதங்களையோ செயல்களையோ நிதானமா எடுத்து வை.. பதறாத... ஆத்திரப்படாத...

யார் கிட்டயும் கையேந்துற மாதிரி நிற்காதே, அது நானாகவே இருந்தாலும் கூட.. ஏன்னா, யாரா இருந்தாலும் சுயமா சம்பாதிக்க வேண்டியது அவசியம். புஜ்ஜிமா, நேர்மையான வழிகள்ல சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்குடா...

யாரையும் சார்ந்து இருக்கணும்ன்னு நினைக்கவே நினைக்காத... உன்னோட தனித்தன்மை, உன்னோட ஆளுமை கண்டிப்பா முக்கியம்

அடுத்தவங்க பொருளுக்கு எப்பவுமே ஆச படக்கூடாது கண்ணம்மா, அதே மாதிரி அடுத்தவங்கள பாத்து பொறாமப்படவும் கூடாது. நம்மால முடிஞ்ச அளவு அவங்க வளர்ச்சிய கண்டு கைத்தட்டணும். ஊக்கப்படுத்தணும்.

இந்த உலகத்துல நீ அடியெடுத்து வச்ச உடனே நீ நேசிக்க ஆரம்பிக்க ஒன்று இந்த உலகத்தில் படைக்கப்பட்டுருக்கு. அது தான் இயற்கை. நேசித்து பழகுடா. அப்புறம் நேசித்தல்ங்குறது உன்னோட ரத்தத்துலயே ஊறிடும்.

நீ உடுக்குற ஆடைகள் உன்னோட சவுகரியங்களுக்காக தான் இருக்கணும். ஆடம்பரங்கள முடிஞ்ச அளவு தவிர்த்துடு.

ஒரு பெண்ணோட வாழ்க்கைல கல்யாணம் முக்கியம்ங்குற வார்த்தைகள புறம் தள்ளு... ஊருக்காகவும், உறவுக்காகவும் பண்ற கல்யாணத்துல எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையில்ல. எப்போ உன் மனசுக்கு பிடிச்ச பையன நீ பாக்குறியோ, எதிர்பார்ப்புகளே இல்லாம அவன்கிட்ட அன்பாயிரு. கல்யாணத்து மேல நம்பிக்கை வந்தா அம்மா கிட்ட ஒரு வார்த்த சொல்லு, உன்ன கட்டிபுடிச்சி, உச்சி மோர்ந்து, மனசார ஆசீர்வதிக்கிறேன்.

பொய் சொல்லாதடா... அதுக்காக பொய்யே சொல்லாதேன்னு அர்த்தமில்லை. அவசியமான நேரங்கள்ல அடுத்தவங்களுக்கு பாதிப்புன்னு தெரியுற பட்சத்துல உண்மைய மறைக்குறது தப்பில்ல.

நீ ஒரு சொட்டு கண்ணீர் சிந்தினாலும் சிந்துர கண்ணீர ஆழ்மனசில இருந்து சிந்து. அடுத்தவங்க கஷ்டம் கண்டா, அவங்களுக்காக பிரார்த்தனை பண்ண மறக்காத.

வலி தாங்க பழகு. வாழ்க்கைல நீ அனுபவிக்குற வலிகள் எப்பவுமே உன்னை மேலும் மேலும் உறுதியா தான் மாத்தணும். எப்பவும், எந்த சூழ்நிலைலயும் சோர்ந்து போகாத.

எனக்கு மட்டும் ஏன் இப்படிங்குற கேள்விகள்ல எனக்கு நம்பிக்கையே இருந்ததில்ல, அது அவசியமேயில்லாதது. சூழ்நிலைகள் எப்பவுமே உன்னை பாதிக்காம பார்த்துக்கோ

அம்மு குட்டி, இந்த விசயங்கள என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. நான் உனக்கு சொல்லிக் கொடுக்கிறேன். எப்பவும் மறக்காதே, ஒரு பொண்ணு நினைச்சா எதை வேணும்னாலும் சாதிக்கலாம். யாரை வேணும்னாலும் அடக்கியாளலாம். ஆனா இது எதுவுமே அதிகாரத்தினால இருக்க கூடாது, சூழ்ச்சியால இருக்க கூடாது. அன்பால் மட்டுமே சாதிக்கணும்.

இத எல்லாம் நான் உனக்கு சொல்றேன்னா, முதல்ல அதுக்கு என்னை தகுதியாக்கிகிட்டே தான் சொல்றேன்... அதே ஆணவமில்லா கர்வத்தோட சொல்றேன்.... நான் நானா இருக்கேன்.... நீ நீயா இரு....

உனக்காக காத்துக்கிட்டு இருக்கேண்டா...

சீக்கிரம் வந்துரு, சரியா.... 

3 comments:

  1. வரப் போகும் மகளுக்காக, ஒரு அம்மாவின் நிலையில நின்னு சொன்ன விஷயங்கள் ஒவ்வொண்ணும் அட்சரலக்ஷம் பெறும் காயத்ரிம்மா! மகளுக்கான அந்த அறிவுரைகள் 99 சதவீதம் அப்படியே மகனுக்காகன்னு மாத்திப் படிச்சாலும் ஏத்துக்கற மாதிரி இருக்கறது வெகு சிறப்பு! மகளிர் தினத்தின் சிறந்த பகிர்வு இது என்று உன்னை மகிழ்வுடன் பாராட்டுகிறேன்!

    ReplyDelete
  2. இப்படி ஒவ்வொரு அம்மாவும் தன் பெண்ணுக்கு சொல்லிக் கொடுத்தா நாட்டில் பிரச்சனைகள் குறைவா இருக்கும்.. மிகவும் பக்குவப்பட்ட வார்த்தைகள்..சில சமயம் நீ பேசுறப்போ எங்க பாட்டி பேசுற மாதிரியே இருக்கு.. :) :)

    மகளிர் தின வாழ்த்துகள்..! (இன்னைக்கு மட்டுமல்ல என்னைக்கும்)

    ReplyDelete
  3. அருமை...

    சர்வதேச மகளின் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...

    ReplyDelete