ஒரு நாள். கிட்டத்தட்ட ஒரு மாசம் இருக்கும். ரொம்ப போர் அடிக்குதுன்னு ஏதாவது ஒரு படம் பாக்கலாம்ன்னு இந்த படம் நல்லா இருக்குமான்னு பேஸ்புக்ல ஒரு கேள்வி கேட்டுட்டு பாக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நேரம் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு. சட்டுன்னு அடுத்தடுத்து வந்த சீன்ஸ் என்னடா இது ஒரு மாதிரி படமா இருக்கும் போலயேன்னு நினைக்க வச்சு, அப்படியே விண்டோஸ்ல போய் க்ளோஸ் பட்டன அழுத்த வச்சிடிச்சு... அப்புறம் அந்த படம் பத்தி வந்த கமண்ட்ஸ், நல்ல படம், அப்படின்னு வந்தத எல்லாம் படிச்சாலும் ஏனோ அது மேல ஈர்ப்பு இல்லாம போய்டுச்சு.
நேத்து ராத்திரி தூக்கம் கலைஞ்சு எழுந்து உக்காந்துட்டேன். இனி தூக்கம் அவ்வளவு தான்னு தெரியும். என்ன பண்ணலாம்ன்னு கொஞ்ச நேரம் யோசிச்சேன். சரி, அந்த படம் தான் நல்லா இருக்கும்ன்னு சொன்னாங்களே, பாத்தா தான் என்னன்னு தோணிச்சு...
படம் இருந்த பென் டிரைவ் எடுத்து லேப்டாப்ல போட்டு, போல்டர் திறந்து அந்த படத்த ஆன் பண்ணினேன்.... எந்த படத்த?
அந்த படம் தான் “ப்ரிட்டி யுமன்”
படத்தோட கதை சுருக்கம் இதான்...
ஹீரோ எட்வர்ட் லூயிஸ் ஒரு பெரிய வியாபார புள்ளி. தன்னோட முக்கியமான கட்டங்கள்ல தன்னோட கேர்ள் பிரெண்ட் தன் கூட இருக்கணும்ன்னு ஆசைப்படுறார். ஆனா அவளோ எனக்கு பெர்சனல் வாழ்க்கை இருக்குன்னு சொல்லிடுறா... அப்புறமா அவருக்கு ஒரு சின்ன உதவி தேவைப்பட ஹாலிவுட்ல விபச்சாரம் பண்ற விவியன் உதவி பண்றா. அவளால எதேர்சையா ஈர்க்கப்படுற எட்வர்ட் ஒரு வாரம் அவள தன் கூட தங்க வச்சிக்க மூவாயிரம் டாலர் பேசி புக் பண்றாரு. அந்த ஒரு வாரங்கள்ல அவங்களுக்குள்ள என்ன நடந்துச்சு, முடிவு என்ன ஆச்சுங்குறது தான் கதை....
இங்க நான் விவியன அவள் இவள்ன்னு குறிப்பிட ஏனோ எனக்கு தயக்கமே வரல, காரணம் படம் முடியுறப்போ அவள் என்னோட மிக நெருங்கிய சிநேகிதியா மாறி போனா... சில இடங்கள்ல சின்ன குழந்தை மாதிரி துள்ளி குதிக்குறா. விவியன்- நிஜமாவே அவ ஒரு ப்ரிட்டி யுமன் தான்...
என்னை முதல்ல இம்ப்ரெஸ் பண்ணினது எட்வர்ட் தான். பாத்த உடனே வித்யாசமான ரசனை உள்ளவரா தெரிஞ்சார். எட்வர்ட் கிட்ட விவியன் ரொம்ப அதிமேதாவியா பேசுறா. ஐயம் நீட் அண்ட் கிளீன்ன்னு சொல்றப்பவே அவருக்கு சிரிப்பு பொத்துகிட்டு வந்துடுது. அவள பாத்துகிட்டே இருக்குற அவர், தன்னோட ஒரு நாள் தங்க முதல்ல அவளுக்கு முன்னூறு டாலர் குடுக்குறார். நாகரீகமா வளர்ந்த பெண்கள பாத்த அவருக்கு ஷாம்பைன தரைல அடுக்கி வச்சுட்டு சின்ன புள்ள மாதிரி தரைல உருண்டுட்டே காமடி ஷோ பாத்து ரசிக்குற விவியன் வித்யாசமா தெரியுறா. அவள கண்கொட்டாம புன்னகையோட பாத்துட்டு இருக்கார்.
அப்புறம் விவியன். அவ கிட்ட இருக்குற ஒரே ஒரு அரைகுறை ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டு எட்வர்ட் கூட ஒரு வாரத்த கழிக்கணுமேன்னு புதுசா டிரஸ் எடுக்க போறா. அவளோட நடை உடைகள பாத்துட்டு அவங்க கடைல டிரஸ் எடுக்க அவளுக்கு தகுதி இல்லன்னு துரத்தி விடுறப்போ உடைஞ்சு போய்டுறா. அப்புறமா அவளுக்காக எட்வர்ட் எக்கச்சக்கமா ட்ரெஸ் எடுத்து குடுக்குறப்போ அவங்க கிட்ட போய் நீங்க பெரிய தப்பு பண்ணிட்டீங்கன்னு துள்ளி குதிக்குறா...
விவியன உளவாளின்னு சந்தேகப்படுற தன்னோட வக்கீல் பிலிப்கிட்ட அவ ஒரு உடலியல் தொழிலாளின்னு உண்மைய எட்வர்ட் போட்டு உடச்சுடுறார். பிலிப் அவ கிட்ட தரம்கெட்டு பேசுறப்போ அத்தன வலிகளையும் உள்ளுக்குள்ள வாங்கிகிட்டு அவர்கிட்ட சிரிச்சுட்டே நகர்ந்து போற விவியன், எட்வர்ட் கிட்ட வெடிச்சுடுறா. கடும் வாக்குவாதங்களுக்கு பிறகு நான் உங்களை சந்திச்சிருக்கவே கூடாது, என் காசை குடு, நான் இப்பவே கிளம்புறேன்னு கோபமா கேக்குறா. பணத்த கைல கொடுக்காம கட்டில்ல தூக்கி போட்டத எடுக்காம ரோசமா கிளம்பிடுறா. ஏன், எங்களுக்கு ரோசம், மானம் எதுவும் இருக்க கூடாதான்னு எட்வர்ட் முகத்துல ஓங்கி அடிச்ச மாதிரி இருந்துச்சு அவளோட செயல். சபாஷ்.
விவியன், எட்வர்ட்டோட அன்புல ஒவ்வொரு தடவையும் உருகி, அவர் மேல தனக்கு வந்த காதல வெளிபடுத்துறப்ப அத கேட்டு சாதரணமா எடுத்துகிட்டு ஒண்ணுமே சொல்லாதது ஏன்னு எனக்கு புரியவே இல்ல.
கடைசியா விடைப்பெறுறப்போ எட்வர்ட் நம்ம ரெண்டு பேர் இடையில என்ன இருக்குன்னு கேக்குறப்போ, எனக்கு தெரியாது. சின்ன வயசுல என் அம்மா என்னை ரூம்ல அடச்சு வச்சுட்டு போறப்போ, எப்பவுமே ஒரு கனவு காணுவேன். ஒரு பெரிய டவர்ல மாட்டிக்குற இளவரசி தான் நான்னும், என்னை கூட்டிட்டு போக என் ராஜகுமாரன் குதிரைல வருவான்னும் நினைச்சுப்பேன். ஆனா இப்போ, இங்க வேட்டைக்கு போறதே நான் தான்னு சொல்லுவா. அதுக்கு அவர், நான் எப்பவுமே உன்னை ஒரு விபச்சாரியா நடத்தலன்னு அவர் பாட்டுக்கு சொல்லிட்டு போய்டுறார். தொண்டையடைக்க அவளோ “ஹி ஜஸ்ட் டிட்” அவர் அப்படி நடத்தினார்ன்னு உடைஞ்சி போய்டுறா.
என் கூடவே இரு, எனக்காக இல்ல, உனக்கு என் கூட இருக்க பிடிச்சிருக்குல, அதனாலன்னு எட்வர்ட் அவ கிட்ட சொல்றப்போ, இல்ல, எனக்கு வேலை இருக்குன்னு காண்ட்ராக்ட் முடிஞ்சு அவ கிளம்பி போய்டுறா. அவ வலி, நமக்கு புரியுது.
செண்டிமெண்ட்ஸ் இல்லாம படமா? இங்க கூட அப்பா பையன் செண்டிமெண்ட் இருக்கு. பதினாலரை வருஷம் தன்னோட அப்பா கூட பேசாம இருக்கும் எட்வர்ட் ரோட்டுல ஒரு அப்பா மகன பார்த்து உணர்ச்சிவசப்பட்டு போய்டுறார். அப்பா மேல இருக்குற கோபத்த அத்தனையும் பிசினஸ்ல காட்டுற அவர், கடைசில மனசு மாறி, தன்னோட பிசினஸ் உத்திகள மாத்திக்குற கட்டம் அருமை.
இந்த படத்துல எனக்கு பிடிச்ச ரொமான்ஸ் சீன் ஒண்ணு இருக்கு. மீட்டிங் போயிட்டு இருக்குறப்ப எட்வர்ட் விவியனுக்கு கால் பண்ணுவார். அவ போன் அட்டென்ட் பண்ணின உடனே, உன்ன கால் அட்டென்ட் பண்ணாதன்னு சொன்னேன்லன்னு கலாய்ப்பார். மறுபடியும் மறுபடியும் கால் பண்ணி, “நெவர், எவர் பிக் அப் தெ போன்”ன்னு அதட்டுவார். அவ அழகா சிரிச்சுட்டே “தென் ஸ்டாப் காலிங்”ன்னு சொல்லுவா. அப்போ அவங்க ரெண்டு பேர் மூஞ்சியையும் எக்ஸ்ப்ரசனயும் பாக்கணுமே... பின்னிட்டாங்க போங்க... இத்தன நடிப்ப எங்கயா வச்சிருந்தீங்க?
நான் இதுல ரசிச்ச இன்னொரு கேரக்டர் அவங்க தங்கியிருக்குற ஹோட்டலோட மானேஜர் பார்னி. ஆரம்பத்துல விவியன் உடை, நடை எல்லாம் பாத்து கடுப்பாகுற அவர், அடுத்தடுத்து அவள மரியாதையோட பாத்து ரசிக்குற சீன்ஸ் செம. ஒரு நல்ல ட்ரெஸ் வாங்க முடியாம தவிக்குற அவளுக்கு ஹெல்ப் பண்றதாகட்டும், பார்ட்டில எப்படி சாப்பிடுறதுன்னு தெரியாத அவளுக்கு கிளாஸ் எடுக்குறதாகட்டும், தேவதை மாதிரி வர்ற விவியன புருவம் உயர்த்தி அழகா ரசிக்குறதாகட்டும், மனுஷன் பின்னி எடுத்துருக்கார்.
இங்க இன்னொரு உறவை பத்தி சொல்லணும். அதான், விவியனுக்கும் அவள் தோழி கிட் லூக்காவுக்குமான உறவு. பணம்ன்ன உடனே அவங்க படுற சந்தோசம், அலும்பல், ஆனா அத மீறி அவங்ககிட்ட இருக்குற சின்னப்புள்ளத்தனம்... வெகுளித்தனம்... அவங்க ரெண்டு பேர் இடைல இருக்குற விட்டுக்குடுத்தல், புரிதல்... அட்டகாசம்.
ஆக மொத்தத்துல படம் அடி பொழி. ஆனா என்ன, கொஞ்சம் பாக்க பொறுமை வேணும். எனக்கு அந்த பொறுமை வந்துடுச்சுன்னு நினைக்குறேன். இன்னொரு படம் பாத்துட்டு மறுபடியும் வரேன், இப்போ டாட்டா....
பொறுமையோடு பார்க்க வேண்டிய படமா
ReplyDeleteநன்றி சகோதரியாரே
ஹஹஹா.. ஜூலியா ராபர்ட்ஸ் என்னோட பேவரைட் ஆக்ட்ரஸ்..இவங்க ரெண்டு பெரும் நடிச்ச Run Away Bride பாருப்பா.. ரொம்ப நல்லா இருக்கும்..
ReplyDeleteஇந்த படத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தேன். நல்ல படம். நினைவுப்படுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteநல்ல விமர்சனம். நடிகர்களின் பின்புலம் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது பொல தெரிகிறது. அத்தகைய மனநிலைதான் ஒரு விமர்சகர்கு தேவை.
ReplyDeleteஇந்த படத்தை உல்டா பண்ணிதான் நம்மூர் பிரபுதேவா 'எங்கேயும் காதல்'னு ஒரு பாரீஸ் தெருக்கூத்து எடுத்தார்!