Friday 4 March 2016

காக் டெயில் கொண்டாட்டம்...




நேத்து லீவ். எப்படியும் பத்துமணி வரைக்கும் நல்லா தூங்கணும்னு செமையா முந்தின நாள் நைட்டே ப்ளான் எல்லாம் போட்டுட்டு காலைல ஒன்பது மணிக்கு அலாரம் வச்சுட்டு தூங்கினா, பத்துமணிக்கு முன்னாடியே ஒன்பது மணிக்கு அலாரம் அடிச்சி எழுப்பி விட்டுடுச்சு.

சரி, எழும்பின வேலைய கவனிப்போம்னு கால் பண்ண வேண்டியவங்களுக்கு கால் பண்ணினா, அட்டென்ட் பண்ணினாதானே. தூக்கக் கலக்கத்துலயே திரும்ப திரும்ப கால் பண்ணி கடுப்பாகி ஒரு கட்டத்துல டயல் பண்ணி பெட்ல போட்டுட்டு கண்ண மூடிட்டேன். திடீர்னு என்னவோ சத்தம் கேக்குதேன்னு பாத்தா, மொபைல்ல அந்த பக்கம் இருந்து பாட்டுச் சத்தம்.

அச்சச்சோ நாம பாட்டை மிஸ் பண்ணிட்டோமேன்னு நொந்துகிட்டே மறுபடியும் தூங்க ஆரம்பிச்சுட்டேன்.

சுமார் பத்தரை மணி இருக்கும். திடீர்னு நந்து குரல். ஏய், நீ என்ன இன்னும் தூங்கிட்டு இருக்க, நீ எனக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்க, என்னை வெளில கூட்டிட்டு போறேன்னு.

இதுக்குமேல தூங்கினா வேலைக்காகாதுன்னு போய் ப்ரஸ் பண்ணிட்டு வந்து அப்படியே அவ கொண்டு வந்த ஒரே ஒரு இட்லிய பிச்சு வாய்ல போட்டுட்டு டைப் பண்ண வேண்டியது நிறைய இருக்கு செல்லம், அப்புறமா கூப்ட்டுட்டு போகட்டான்னு கேக்க, புள்ள மூஞ்சி இஞ்சி தின்ன கொரங்கா மாறிப் போச்சு.

சரி, சரி, இப்ப உன்னை வெளில தான கூட்டிட்டு போகணும், இரு, கிளம்பிட்டு வரேன்னு நான் சொன்னதும், வெளில போக வேண்டாம், அட்லீஸ்ட் நீ உன் ரூம் விட்டு வராண்டாவுலயாவது வந்து உக்காருன்னு எனக்கு செம பல்பு குடுத்துடுச்சு கொரங்கு.

அப்புறமா, சரி, என்ன தான் பண்றதுன்னு யோசிச்சப்ப தான் காக்டெயில் நியாபகம் வந்துச்சு. ஏற்கனவே அது வாங்கிட்டு வந்த மூணாவதோ நாலாவதோ நாள்ல தான் எனக்கு கீழ விழுந்து கால் உடைஞ்சது. அதுக்கப்புறம் அத எல்லாம் திறந்து விட்டதே இல்ல.

ஹே ஐடியா, நாம காக்டெயில் எல்லாம் திறந்து விடுவோம்னு நந்து ஆரம்பிக்க, எனக்கும் குஷி ஆகிடுச்சு.

(அப்புறம் எல்லாருக்கும் பேரு வச்ச நாங்க, இதுங்க நாலுபேருக்கும் பேரே வைக்கல. ரெண்டு வெள்ளை காக் டெயில் ஜோடிக்கும் சம்யுக்தா, ப்ரதிவின்னு பெயர் வைக்கணும்னு ஏற்கனவே நினைச்சுட்டு இருந்தேன், அந்த க்ரே ஜோடிக்கு என்ன பெயர் வைக்கலாம்னு யோசிச்சுட்டு இந்த போஸ்ட் எழுத உக்கார்ந்த பிறகு தான் ஜார்ஜ் மலர்ன்னு பெயர் வைக்கலாம்னு முடிவாச்சு)

சரி, சரி வான்னு அவள கூட்டிட்டு போய் ரூம் எல்லாம் அடச்சு வச்சுட்டு ஃபேன் ஆப் பண்ணிட்டு காக்டெயில் இருந்த கூட்டை தொறந்து விட்டோம்... நான் நந்து எடுத்துட்டு வந்த கேமராவ ரெடி பண்ணி போட்டோ எடுக்க தயாரா இருந்தேன்.

இப்ப நாம கேமராவ காக்டெயில் நோக்கி திருப்புறோம். அதுங்க கூட்டுக்குள்ள இருந்துகிட்டே ஹே ஹே... நாங்களாவது, வெளில வர்றதாவது, போங்கப்பு காமடி பண்ணாதீங்க ரேஞ்சுக்கு ஓரக்கண்ணால எங்களையே பாத்துட்டு இருக்குதுங்க.

நான் மொபைல் எடுத்து நேரம் பாக்குறேன். பத்து நிமிஷம் ஆச்சு, இருபது நிமிஷம் ஆச்சு, ஒருத்தரும் வெளில வரக் காணோம். இது ஆவுறதுக்கு இல்ல, எப்படியும் இதுங்க வெளில வராதுங்க, அந்த ஃபேனை போடுன்னு நந்துகிட்ட சொல்லிட்டு ரூம் கதவையும் தொறந்து வச்சுட்டேன்.

உங்கள கொஞ்சம் பறக்க விடலாம்னு பாத்தா நீங்க என்னமா இப்படி பண்றீங்களேமான்னு நந்து அதுங்க கிட்ட போய் கலாய்க்க, என்ன நினச்சாங்களோ தெரியல சர்ருன்னு ரெண்டு பேரு கூட்டை விட்டு வெளில பறந்துட்டாங்க.

ஒரு நிமிஷம் பக்குன்னு ஆகிடுச்சு. இதுல ப்ரித்வி விருட்டுன்னு ஹாலுக்கு பறக்க, இங்க மேல ஃபேன் ஓடிட்டு இருக்கு. ஆஹா, இன்னிக்கி என்ன கலவரம் நடக்கும்னு தெரியலயேன்னு பயந்துட்டே அடியே ஃபேனை ஆப் பண்ணுன்னு கத்துறேன். நல்லவேளை நந்து ஓடி வந்து ஃபேனை ஆப் பண்ணிட்டா.

அவ்வ்வ்வ் ஹாலுக்கு பறந்த பக்கி மேல இருக்குற வெண்டிலேட்டர் வழியா வெளில பறந்துட்டா?

நினச்சாலே மனசுக்குள்ள ஒரே திக் திக். மக்கா, ஓடிப் போய் கிட்சன் கதவ மூடுன்னு சொன்னதும் நந்து ஓடிப் போய் அந்த கதவ மூடிட்டு வந்தா. அடுத்து எந்த வழி தொறந்துருக்குன்னு யோசிச்சுட்டு இருக்குறப்பவே மலர் என் ரூமுக்குள்ள பறக்க ட்ரை பண்ண, அவ்வ்வ்வ் அங்க ஃபேன் ஓடுதுன்னு நான் அலறுறேன். ஷப்பா, ஒருவழியா நந்து அந்த கதவையும் மூடிட்டா. இப்ப ஹால்ல மலர் தேமேன்னு தரைல உக்காந்துடுச்சு.

நாம இப்ப இந்தா இந்த பிரித்விய பாப்போம். வெளில வந்த அந்த பக்கி, முதல்ல என் தலைக்கு மேலயே நாலு ரவுண்டு அடிச்சுது. அப்புறம் அப்படியே பெட்ல கிடந்த பொம்மை மேல தொப்புன்னு விழுந்துச்சு. பொம்மை தடால்ன்னு மல்லாந்து விழ, நம்மாளு அது மேல நின்னுட்டு வீரமா போஸ் குடுத்தார்.

நான் கேமரா எடுத்து அத போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன். நந்து வந்து என் முன்னால வீரி (வீரனுக்கு பெண்பால் வீரி தான) மாதிரி கை ரெண்டையும் இடுப்புல ஊனிட்டு இங்க என்ன நடந்துட்டு இருக்கு, நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு கேக்குறா.

அவளுக்கெல்லாம் பயப்படுற ஆளா நாம. அடியே பொறுமையா உக்காரு. அதான் வெளில வந்துடுச்சுல, கொஞ்சம் போட்டோஸ் எடுத்துப்போம், அப்புறமா என்னப் பண்ணலாம்னு யோசிப்போம்னு சொன்னேன். ம்க்கும் உனக்கு இப்ப போட்டோ ரொம்ம்ம்ம்ம்ப முக்கியம்னு கழுத்த சுளுக்கிகிட்டா.

நான் போட்டோ எடுத்துட்டு இருக்குறப்பவே திடீர்னு அது பறந்து வந்து என் தோள்ல உக்காந்துச்சு. ஆஹா..... அந்த தருணத்த எப்படி விவரிக்குறது? செம்ம ஃபீல் அது. தோள்ல உக்காந்துட்டு காது பக்கத்துலயே கீ கீ-ன்னு கத்துது.

இது சத்தத்த கேட்ட மலர் மெதுவா ரூமுக்குள்ள தத்தி தத்தி நடந்து வந்து எட்டிப் பாத்துச்சு. ஷ்ஷ்ஷ் நானும் நந்துவும் அசையல. எங்கயும் பின் டிராப் அமைதி. மலர் தத்தி தத்தி வந்தத நான் போட்டோ எடுக்க மெல்ல கைய அசைச்சேன், அவ்வளவு தான், தோள்ல உக்காந்துட்டு இருந்த பிரித்வி பறந்துடுச்சு.

அப்புறம் கொஞ்சநேரம் ரெண்டுபேருமா சேர்ந்து ரூமுக்குள்ள வட்டம் போட்டுட்டே இருந்தாங்க. இவங்க ரெண்டு பேர் பறக்குரதையும் கூட்டுக்குள்ள இருந்துகிட்டே ஜார்ஜும் சம்யுவும் வேடிக்கை பாத்துகிட்டு இருந்தாங்க.

ஓய், நீங்களும் பறங்க, வாங்கன்னு நந்து கூப்பிட்டுப் பாத்தா. யார்கிட்ட?

அதுக்குள்ள மதியம் ஆகிடுச்சு. இவங்கள அப்படியே ரூமுக்குள்ள விட்டு கதவைப் பூட்டிட்டு வெளில வந்தோம். நந்து ஓடிப் போய் மீன் குழம்பு, சம்பா சோறு, பொரிச்ச மீனு, ஆம்லேட், அவுச்ச முட்டை எல்லாம் எடுத்துட்டு வந்தா. அப்படியே வராண்டாவுலயே உக்காந்து நல்லா சாப்பிட்டோம். முருகேஷ் வேற எங்க கூட வந்து சாப்பாட்டுல ஜாயின் ஆகிட்டான்.

ஒரு வழியா கதைபேசி சாப்பிட்டு முடிச்சு, மெதுவா ரூமுக்குள்ள போனா, மறுபடியும் ரெண்டுபேரும் பறக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இப்படியே பறந்துட்டு இருந்தா வேலைக்கு ஆகாது, இனி இவங்கள பிடிப்போம்னு நான் சொன்னேன். ஒரு டவல் எடுத்து ரெஸ்ட் எடுத்துட்டு இருந்த பிரித்வி மேல போட்டு கப்புன்னு அத புடிச்சுட்டேன். மெதுவா தா வெளில எடுத்து என் கைல வச்சிருந்தேனா, நந்து ஓடி வந்து என்கிட்ட குடுன்னு சொல்லி விருட்டுன்னு அத பிடுங்கிட்டா. பாவம் அது பயந்து அவ கைய நறுக்குன்னு கடிச்சி வச்சிடுச்சு.

ஆ, ஆன்னு அலறிட்டே கைய உதறினவ அத கீழ விடலையே. பாவம் புள்ள கைல குபுக்குன்னு ரெத்தம். நான் பாவமா அவள பாக்குறேன், அவ அதே பாவமா என்னைப் பாக்குறா. கண் எல்லாம் கண்ணீர் நிரம்பிடுச்சு.

அது வேணும்னு கொத்தல மக்கா, அது பயத்துல அப்படி பண்ணிடுச்சுன்னு நான் ரெத்தம் வந்த விரல பிடிச்சுட்டே சமாதானம் பண்ணினேன். நானும் கோபப்படலயேன்னு சொல்லிகிட்டே அவ ப்ரித்விய பாக்குறா, அது பாவமா அவ பக்கத்துல உக்காந்துட்டு அவளையே பாத்துட்டு இருக்கு.

சரி, விடு, இதெல்லாம் சகஜமப்பான்னு சொல்லிட்டே வாஷ் பேசின்ல போய் ரெத்தத்த கழுவிட்டு வந்துட்டா. விரல பிடிச்சு பாத்தா, ரெண்டு இடத்துல பலமா கொத்தி பிச்சு வச்சிருக்கு. ஆனா இதுக்காக எல்லாம் கொண்டாட்ட மூடை ஸ்பாயில் பண்ண முடியுமா, ஒரே பேண்ட் எயிட் சுத்திட்டு மறுபடியும் அத கைல தூக்கி வச்சுட்டு போஸ் குடுக்க ஆரம்பிச்சுட்டா.

இப்ப தான் ஒரு ட்விஸ்ட். உள்ள உக்காந்து வேடிக்கைப் பாத்துட்டு இருந்த சம்யூ வெளில வர, ஜார்ஜ் மட்டும் பெரிய வீர சூரி மாதிரி உள்ளயே உக்காந்துட்டு முறைப்பா பாத்துட்டு இருந்தான்.

ஓய், இன்னா மொறப்பு, நீ வராட்டிப் போடான்னு அவன பாத்து அளவம் காட்டிட்டு நாங்க மூணு பேரையும் வச்சு விளையாட ஆரம்பிச்சுட்டோம். இப்ப அவங்களும் எங்க கூட சகஜமாக ஆரம்பிச்சுட்டாங்க.


கைல ஏறி உக்காருறது என்ன, தோள்ல ஏறி உக்காருறது என்ன, விசில் அடிக்குறது என்ன, ஒரே என்ன என்ன என்ன தான்... அப்புறமா மூணு பேரும் ரூம் மேல பறந்து போய் உக்காந்துட்டாங்க. கீழ வாங்க வாங்கன்னு கூப்ட்டா வந்தா தான?


சரி, இனி மூணு பேரையும் பிடிச்சு கூட்டுக்குள்ள விட்ருவோம்னு நினச்சுட்டு இருக்குறப்பவே பெரிய ராஜ நடை போட்டுட்டு ஜார்ஜ் வெளில வந்தான். இவன பாத்தா நந்துவுக்கு ரொம்ப பயம். ஏற்கனவே என்னோட விரல வேற ரெண்டு தடவ கடிச்சு வச்சிருக்கான். அவன் வெளில வந்து கம்பீரமா ஒரு சிலிர்ப்பு சிலிர்த்தான்.

கர்ர்ர்ர் கர்ர்ர்ர்ன்னு புலி உறுமுன மாதிரி ஒரு சத்தம் வருது. எங்க இருந்து வருதுன்னு பாத்தா, இந்த பய தான் உருமிட்டு இருக்கான்.

நந்து அத பாத்து கண்ணு எல்லாம் பெருசாகி, பயத்துல சுவரோட சாஞ்சு உக்கார, ஃபேன் ஸ்விட்ச தட்டி விட்டுட்டா.

பதட்டம்னா பதட்டம் அப்படி ஒரு பதட்டம். சம்யூ, ப்ரித்வி, மலர் மூணு பேரும் ஃபேனுக்கு அடியில தான் உக்காந்துட்டு இருக்காங்க. கொஞ்சம் சத்தம் கேட்டு பறந்துட்டாலும் மூணு பேரும் காலி.

வெலவெலத்துப் போய் என்ன செய்றதுனே தெரியாம முழிச்சு, அப்புறம் தான் அவ்வ்வ்வ் ஃபேன் ஆப் பண்ணனும்னு அறிவு வந்து ஆப் பண்ணிட்டோம்.

நல்லவேளை எதுவும் ஆகல. எப்படியோ பொழச்சுட்டாங்க.

அப்புறமா டவல் வச்சே மூணு பேரையும் மெதுவா பிடிச்சு கூட்டுக்குள்ள அடச்சுட்டு ஜார்ஜ்ஜை பாத்தா அவன் ஸ்டைலா நடக்குறத எல்லாம் பாத்துட்டு இருக்கான்.

அந்தப்பயல நான் பிடிக்க மாட்டேன், நீ வேணா பிடின்னு நந்து சொல்ல, நான் மெதுவா டவல தூக்கி மேல போட, முரடன் மாட்டிகிட்டான்....

ஹே.... ஹே.....

அப்புறம் என்ன, வேர்த்து விறுவிறுத்து, ஒரு வழியா ரூம் விட்டு வெளில வந்தோம்...

நாளைக்கும் நேரம் கிடச்சா இப்படியே விளையாடனும்..



No comments:

Post a Comment