Sunday, 26 August 2012

எங்கிருந்தோ வந்தாய்...!

மார்கழி மாதத்தின்
அதிகாலைப் பனியாய்
என் உணர்வுகள் கைப்பற்றி
வெடவெடப்பாய் குளிரூட்டுகிறாய்...!

விழிக்க மறுக்கும் விடியலை
இழுத்துப் பிடிக்கும் போர்வையாய்
இதமளித்து கனவுகள் விரிக்கிறாய்...!

விடியலின் நாதமாய் உன் குரல்
 என் செவிவழி புகுந்து
என்னை இன்னும் இன்னும்
ஆழ் மயக்கத்தில் கிறங்கடிக்கிறது...!

விடிகாலை சேவல் ஒன்று
விடிந்து விட்ட செய்தியொன்றை
உரக்கக்கூவ, எட்டிப் பார்க்கும்
சூரியனை நீ சுட்டெரிக்கிறாய்...!

முன்பனிக் காலமோ, வேனிற்காலமோ
காத்திருந்த காலங்கள் யாவும்
நீ நகர்த்தும் சதுரங்கக் காய்களாய் மாறி
உன் விழியசைவில் கட்டுண்டு
வசந்தகாலத்தை என்னுள் பூக்கச் செய்தன...!

உன் காந்தக் கண்கள்
விதைத்துச் செல்லும்
விதையொன்றை விருட்சமாக்கி
காதல் கனியொன்றை அறுவடை செய்கிறேன்...!

மையல் கொண்டு தத்தளிக்கும் பொழுதெல்லாம்
தடுமாறி விழும் கிள்ளையென அள்ளியெடுத்து,
நீ சொடுக்கும் அதிகார தோரணையில்
வேண்டுமென்றே உன் வசம் வீழ்கிறேன்...!


தடதடக்கும் ரெயிலின் ஓசையாய்
மனதை தடுமாற வைத்து
எட்டிப் பார்க்கும் நேரத்திற்குள் தொலைந்தே விட்டாய்...
நீ வந்து சென்ற தடம்
மட்டும் அழியாமல் என்னினைவில்...!





1 comment:

  1. சட்டென பெருமழையொன்று அடித்துவிட்டு
    ஓய்ந்தது போல்
    கனவுக்குள் நீ தோன்றி புன்சிரிப்பை தந்து விட்டு
    கண்மணிக்குள் மறைந்து கொண்டாய்...
    நீ வந்து சென்ற தடம்
    மட்டும் அழியாமல் என்னினைவில்...!/
    என்னை,மிகவும்.......பாதித்த வரிகள் இவை.
    மேலும் எழுது,உன்வரிகளில் சற்று இளைப்பாறுகிறேன்..... வாழ்க்கைபயணத்தின் இடையே!

    ReplyDelete