Monday 27 August 2012

யாரோ யாரிவரோ...!

என் கல்லூரி வாழ்க்கை
ஆரம்பித்த போது துவங்கியது
எனக்கும் அவருக்குமான பந்தம்...!

வழக்கமாக நான் செல்லும் சாலை வழியே
கால்களையே துணையாக்கி வேக வேகமாக
நடை பயிலும் அறுபதை தாண்டிய முதியவர் அவர்...

எங்கு செல்கிறார் நானறியேன்,
எப்போது திரும்புவார்? அதுவும் அறியேன்...
ஆனால்... தினம் தினம்
அவர் பயணம் ஒரே இலக்கை நோக்கி...

சவரம் செய்யப்படா தாடி
நெஞ்சு குழி தாண்டி நீண்டிருக்க...
தலைவாரி வகிடெடுக்க வழியில்லாமல்
பாலைவனம் ஒன்று
தலை மேலே தோன்றியிருக்க...
இடது தோளிலே ஒரு பை...
வலது கையிலோ நீண்ட நெடிய ஒரு குச்சி...!

அந்த தாடிக்குள் ஒளிந்திருக்கும்
கதை என்னவென்று நான் அறியேன்...
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்...
அது சவரம் செய்ய காசில்லாமல்
வளர்ந்து கொண்டே செல்கிறது...!

எண்ணை வளம் காணா
வட்ட நிலாவாய் அவர் முன்வழுக்கை
அழகாகவே தோன்றியது எனக்கு...!

என்னதான் இருக்குமென்ற
ஆவல் கூட தோன்றவிடாமல்
அழுக்கு படிந்ததாய் அந்த பை
நிரந்தர கர்ப்பம் தாங்கி
அவர் தோள் வழியே சவாரி செய்யும்...!

அவரின் நடை பயணத்திற்கு பாதைவகுத்து
புதிதாய் ரோடு போட்டு
அவர் நடையின் வீரியத்தை கம்பீரமாக்கும்
அவர் கூடவே நடைபயிலும் அந்த குச்சி...!

அவர் உண்பாரா? யார் அவருக்கு உணவளிப்பர்?
தொக்கி நின்ற கேள்விக்கொரு
விடை கிடைத்தது ஓர் நாள்...!

வெளிர் நரை மூதாட்டி ஒருவர்
பழயென கழிதலை அலுமினிய தட்டில்
ஊற்றி பசியாற்றிக் கொண்டிருந்தார்,
அருகிலேயே தன் முறை வருமென
முறைத்துக் கொண்டே ஒரு நாலு கால் ஜீவன்...!

தினமும் நான் அவரை கடந்து செல்கையில்
திரும்பி பார்ப்பதும், பரஸ்பரம் புன்சிரிப்பமாய்
கடந்து சென்றது எங்கள் மூன்று வருட பந்தம்...!

காலத்தின் ஓட்டத்திலே உறவுகள் அறுந்ததாய்
விடுபட்டு போனது என் கல்லூரி மட்டுமல்ல
கூடவே நான் தினமும்
ரசித்த அந்த பெரியவரும் தான்...!

இரண்டு வருட இடைவெளியில் மீண்டும்
அதே பாதையில் பயணிக்க துவங்கி
ஆறு மாதமாய் நானும் அவரை காணாமல் தேடியலைய
இதோ என் வீட்டு வாசலை வேகமாய் கடக்கிறார் அவர்...!


Sunday 26 August 2012

எங்கிருந்தோ வந்தாய்...!

மார்கழி மாதத்தின்
அதிகாலைப் பனியாய்
என் உணர்வுகள் கைப்பற்றி
வெடவெடப்பாய் குளிரூட்டுகிறாய்...!

விழிக்க மறுக்கும் விடியலை
இழுத்துப் பிடிக்கும் போர்வையாய்
இதமளித்து கனவுகள் விரிக்கிறாய்...!

விடியலின் நாதமாய் உன் குரல்
 என் செவிவழி புகுந்து
என்னை இன்னும் இன்னும்
ஆழ் மயக்கத்தில் கிறங்கடிக்கிறது...!

விடிகாலை சேவல் ஒன்று
விடிந்து விட்ட செய்தியொன்றை
உரக்கக்கூவ, எட்டிப் பார்க்கும்
சூரியனை நீ சுட்டெரிக்கிறாய்...!

முன்பனிக் காலமோ, வேனிற்காலமோ
காத்திருந்த காலங்கள் யாவும்
நீ நகர்த்தும் சதுரங்கக் காய்களாய் மாறி
உன் விழியசைவில் கட்டுண்டு
வசந்தகாலத்தை என்னுள் பூக்கச் செய்தன...!

உன் காந்தக் கண்கள்
விதைத்துச் செல்லும்
விதையொன்றை விருட்சமாக்கி
காதல் கனியொன்றை அறுவடை செய்கிறேன்...!

மையல் கொண்டு தத்தளிக்கும் பொழுதெல்லாம்
தடுமாறி விழும் கிள்ளையென அள்ளியெடுத்து,
நீ சொடுக்கும் அதிகார தோரணையில்
வேண்டுமென்றே உன் வசம் வீழ்கிறேன்...!


தடதடக்கும் ரெயிலின் ஓசையாய்
மனதை தடுமாற வைத்து
எட்டிப் பார்க்கும் நேரத்திற்குள் தொலைந்தே விட்டாய்...
நீ வந்து சென்ற தடம்
மட்டும் அழியாமல் என்னினைவில்...!





Sunday 19 August 2012

வந்தாள் அம்மா...!

நேற்றைய பகலும் இரவும்
எனக்கேனோ விரக்தியை
அள்ளி விதைத்துச் சென்றிருந்தது...!

யார் வரவுக்கோ காத்திருந்த கண்கள்
உறக்கம் தொலைத்து
மயக்கம் கொண்டு
ஆழ்நிலை சென்றிருந்தன...!

நுணலும் துயிலுமந்த
நட்டநடு ஜாமத்திலே
தெளித்து விட்ட பனித்துளியாய்...
வருடிச் செல்லும் 
தென்றலாய் வந்தாள் அவள்...!
எதிர்பாரா தருணத்தில் 
எதிர்பார்த்த ஒன்றை
தந்துவிட்டுச் புன்னகைத்தாள்...
என் நெற்றியில் ஈரம்...!

வாஞ்சையோடு உச்சி மோர்ந்தவள்
கைகளின் அணைப்புக்குள்ளே
ஆசை ஆசையாய் அடைக்கலமாகி,
அவள் மார்பில் முகம் புதைத்து
அவள் வாசம் உயிரில் தாங்கி
"அம்மா"வென கேவினேன் நான்...!

இத்தனை நாள் பிரிவும்
என் உயிரை சக்கையாய் பிழிந்து போட்டிருக்க...
திமிர் மட்டும் அடங்காமல்
முறைத்துக் கொண்டே அழுகை தொடர
என்றுமே வீசும் அந்த குரும்புன்னகையை
என்மீது வீசினாள் அவள்...!


என்னை தவிக்க விட்டு சென்றவள் தானே நீ...!
வீம்பாய் விலக எத்தனித்தவளை
விடாப்பிடியாய் இழுத்தணைத்து தலை கோதி
"விலகினேன் என ஏன் நினைத்தாய்?"
வினவிய அவளிடத்தில் கொடுக்க
பதிலில்லை என்னிடம்...!


என் உள்ளங்கை ரேகை பிடித்து
கண்களுக்குள் அவளென்னை படிக்க முயல
மவுனமாய் நானும் சொல்லிக்கொண்டேன்
எதிர்பார்ப்புகளற்ற என் அன்பின்
மிச்சமாயிருப்பவள் நீ மட்டும் தானே என்று...!

Saturday 18 August 2012

உன் கண்களில்...!


தினம் தினம் ஒரு கவிதை,
அது புதுக் கவிதை...
புதிதாய் ஒரு காதலை
புதிதாய் ஒரு நேசத்தை
புதிதாய் ஒரு பாசத்தை
நிரப்பி விட்டு செல்கிறது...!

உன் கண்கள் சொல்லும்
புத்தம் புது கவிதை...
உன் தீண்டல் சொல்லும்
ஓராயிரம் கவிதைகள்...
மழைக்கால நேசத்தை...
வெயில் கால கோபத்தை...
உன் கெஞ்சலை...
உன் அக்கறையை...
உன் கொஞ்சலை...
உன் ஆளுமையை...
உன் குறும்பை...!

என் மேல் மொத்தமாய் 
நீ வைத்திருக்கும்
அத்துனை உணர்வுகளையும்...
உன் தாயாய்
உன் சேயாய்
உன் தோழியாய்
உன் யாதுமானவளாய்...!

நீ எழுதிய அத்தனை 
கவிதைகளின் மொத்த தொகுப்பாய்...
உன் கண்கள் எனக்குள் 
காதலை விதைத்த கதை...!
உன் கண்கள் எனக்குள் 
உன்னை விதைத்த கதை...!
உன் கண்கள் எனக்குள் 
நம்மை உணர்த்திய கதை...!
நாம் வாழ்நாள் வாழப்போகும் மீதி கதை...!

உன் ஒரே ஒரு கண்சிமிட்டல்
உன் ஒரே ஒரு புன்னகை
உன் ஒரே ஒரு மெல்லிய தீண்டல்...
போதுமடா எனக்கு...
வாழ்ந்து விட்ட நாட்களும் 
வாழ போகும் நாட்களும்
கவிதையாய், கவிதை சாரலாய்
கவிதை மழையாய் உன் கண்களில்...!

Thursday 16 August 2012

உன்னிடம் ஒரு யாசகம்...!

உன் வார்த்தை ஜாலங்களில்
கள் குடித்த வண்டாய் மயங்கும் நான்...
உன் சில நேர அலட்சியத்தால்
அனலில்லிட்ட புழுவாய்
துடித்து தான் போகிறேன்...!

குற்றால சாரலாய் மழலை குறும்பால்
சிலிர்ப்பிக்கும் சாகசம் புரியும் நீ...
சில சமயம் வெந்நீர் குளியலென
கொதிக்கும் கொப்பறைக்கைக்குள்
தள்ளி விட்டு வேக வைக்கிறாய்...!

உன் சிறு நேசம் வேண்டுமெனக்கு
உப்பு பெறா விஷயமென சட்டென
அலட்சியம் காட்டுகிறாய்
கடுகளவும் என் துடிப்பறியாமல்...!

பட்டாசு சிதறலாய் வெடிக்கும்மென்
வார்த்தை ஜாலங்களை அண்ணாந்து
ரசித்து விட்டு சில நேரம்
நீரூற்றி அதை நீர்பிக்க செய்து
என் அழுகை ரசித்து ருசி காண்கிறாய்...!

உன் தேடல் துவங்கும் நேரம்
என் உள்ளங்கை அணைப்புள்
அடைக்கலமாகும் நீ
பதறியே விலகியோடுகிறாய்
உன்னை நான் வேண்டும் பொழுதெல்லாம்...!

உன் கட்டை விரல் ரேகையாய்
உறைந்திருக்க வரமொன்று வேண்டிய எனக்கு
சுட்டு விரல் காட்டி விலகிப்போவென
மவுனமாய் சுட்டி உயிர் வதைக்கிறாய்...!

உன்னிடம் நான் வேண்டுவது
உன் வாழ்நாளையல்ல...
எனக்கென ஆயுள் நீட்டிக்கும்
உன் சின்ன புன்னகையை...
ஒரு சிறு கையசைப்பை...
சிறிதே சிறிது அக்கறையை...
கொஞ்சம் என் மனம் சொல்லத் துடிப்பதை...!

தொடர்ந்து செல்லும் உன் வழிப்பயணத்தில்
நீ திரும்பிட வேண்டாம்...
திரும்பி ஒரே ஒரு புன்னகை
அடிக்கடி வீசி விட்டு போ...!

யாசித்து யாசித்தே ஓய்ந்து விட்டேன் நான்...!
மீண்டும் நினைவூட்டினால் என்னை
மனம்பிறழ்ந்தவள் வரிசையில் நிக்க வைத்து
வார்த்தை ஈட்டியினால் சதுரங்கமாடுவாய்யென
மவுனமாய் நானும் மரணித்தே போகிறேன்...!




Friday 10 August 2012

ஒற்றை புள்ளியாய்...!

ஒற்றையடி பாதையொன்றில்
தனித்தே நான் வேடிக்கை பார்க்கிறேன்...!

வழி மீது செல்வோரும்
என் தடம் மீது செல்வோரும்
வழிக் கேட்டு வருவோருமாய்...!

கண்களில் வேடிக்கை சிறுமியின்
குறும்பு பார்வையோடும்
தனிமை பயத்தோடும்
சேர்ந்தே கலக்கிறேன் அவர்களிடத்தில்...!

அவரவர்க்கு அவரவர் வேலைகள்...
நடுநடுவே சிறு புன்னகை,
சில வார்த்தைகள், மவுன கையசைப்பு...
முடிந்து விடுகிறது
அவர்களுடனான சந்திப்பு...!

எதிர்பார்ப்புகள் ஏதுமில்லா
அந்த விடியலும் அதன் அஸ்தமனமும்
கடத்திக் கொண்டே சென்றன
என் நிதர்சன நாட்களை...!
நீ என்னில் அறிமுகம் ஆகும் வரை...!

உறவுகள் பிரிந்து தடம் மாறி
தவிக்கின்ற தத்தையாய்
நீ என் பக்கம் வர...
ஏனோ என்னை துடுப்பென
பற்றிக் கொண்டாய் நீயும்...!

என் தனிமைச் சிறைக்குள் சட்டென
ஒரு சோலைவனம் தோன்ற
பட்டாம்பூச்சியாய் சிறகடித்தது எம்மனசு...!

உன் தனிமையும் என் தனிமையும்
உணர்வுகள் வழிப் பேசி
அடைக்கலம் தேடிய உன்னில்
அடைக்கலமாகிப் போனேன் நான்...!

இடம்மாறும் காட்சியொன்றாய்
உறவுகள் ஒவ்வொன்றாய் தேடி வர
அவர்கள் வேண்டும் ஏக்கமும்
என்னை விலக இயலா தவிப்பும்...

உன் தவிப்பும் மருட்சியும்
அறியாதவளா நான்?
உன் கரம் பற்றிய பிடியொன்றை
இதோ விட்டு விட்டேன் - சென்று விடு
விதி நொந்து சிரிக்கிறேன் நான்...!

நின்ற இடத்திலிருந்து நான்
பார்த்துக்கொண்டிருக்க,
கண்திரையை நீர் மறைக்க,
காலடி தடங்கள் பதிய பதிய
ஒற்றைப் புள்ளியாய்
உருமாறிக் கொண்டிருக்கிறாய் நீ...!

Thursday 9 August 2012

விலங்கின ஒப்புமை உனக்கில்லை...!

இன்முகம் காட்டி நட்புச் சோலைக்குள்
கானலென புகுந்திட்ட நீ...
மறு முகம் காட்டுகிறாய்...
காதல் உனக்கு வேடிக்கையென...!

ஏமாற்றி கைவிடுதல் உனக்கென்ன
அங்கீகார முத்திரையா?
பெண்ணினம் உனக்கென்ன
கொத்தடிமை சாசனமா?

கண்வழி நோக்கி காரிகை
கைப்பற்றும் நீ
காணா தேசத்தின் மன்மதனென
பிரகடனம் செய்கிறாய்...!

வேடமிட்டு நேசமென
கபட நாடகம் ஆடும் நீ
உனக்கொரு நேசத்தை
எங்கனம் பெறுவாய்?

புகழ் வேண்டுமென
உருகி உருகி காதல் போற்றும் நீ
உன் வக்கிர மனத்திரையில்
துகிலுரித்தே பார்க்கிறாய் பாவையரை...!

விலங்கின ஒப்புமை கூட
உனக்கு இங்கு பொருத்தமில்லையடா
கயவனென உனக்கே நீயும்
பச்சையும் குத்திக் கொண்டாய்...!

தற்பெருமை பேசித்திரிகிறாயே
அறிய மறுத்ததேனோ
உன் வீட்டு பாவையரும்
அடுத்தவன் வாய் அவலென்று...!






Wednesday 8 August 2012

உனக்காய் காத்திருந்து...!

இரவின் மடியில் நீ
தூது விட்ட செய்தியொன்றை
வெண்ணிலவும் வந்து சொல்ல...

கலைந்து சென்ற மேகங்கள்
ஒன்றாய் கூடி
என் மனதில் சாரலடிக்க...

விடிந்து விட்ட பொழுதொன்று
உன் நினைவுகள் சுமந்து
அழகாய் பூக்க...

தொலைதூரத்தில் உனக்கென
வீழ்ந்து கிடக்கும் நான்
புத்துணர்ச்சியோடு புதுப்பிக்கப்பட்டு...

எதிர்பார்த்து நீ காத்திருக்கும்
திசை நோக்கி
காற்றின் வேகம் மிஞ்சி
விரைந்தே வருகிறேன்...!

Monday 6 August 2012

விரலோடு உயிர் பற்றி...!

தத்தளிக்கும் அலை நடுவே
கண்டெடுத்த துடுப்பொன்றாய்
உன்னை நான் பற்றிக் கொண்டேன்...!

எங்கடா சென்றிருந்தாய்?
ஏழு மலை ஏழு கடல் தாண்டி
என் ஜீவன் மீட்டெடுக்க சென்றாயோ?

வா...! இணையாது என
அறிவிக்கப்பட்ட ரெயில் தண்டவாளத்தின்
இருகோடுகள் மேலே
இணைந்தே செல்வோம்...

மலரின் மெல்லிய தீண்டல்
நமதாய் இருக்கட்டும்...
விரலோடு உயிர் பற்றி
வாழ்க்கை வென்றெடுப்போம் நாம்...!



பொறாமைப் பூக்கள்...!


உன் கனவுக்குள் புகுந்து
உன்னை நான் மெதுவே
களவெடுக்க முயற்சிக்க...

நீயோ என்னை கள்ளமிட்டு
உன் தோட்டத்து மல்லிகையாய்
ஒற்றைப் பாதையில் பதியமிட்டு
கண் முன் உலவுகிறாய்...!

என் கனவுப் பாதையில்
சிதறிக் கிடக்கும்
மென் புஷ்பங்கள் கூட
உன்னைப் பார்த்து கண் சிமிட்டுகின்றன...!

வீசி விட்டுச் செல்லும் தென்றலோ
ஒரு நிமிடம் நிதானித்து
உன் சுவாசம் நேசித்துச் செல்கிறது...!

சயனிக்கும் உன்னை
சஞ்சலம் செய்யவே
சட்டென எட்டிப் பார்க்கிறாள்
நிலாப் பெண்...!

காலைப் பனிகள் உன்னை
தரிசிக்கவே ஆவல் கொண்டு
உன் வீட்டு மொட்டை மாடியில்
தஞ்சம் புக எத்தனிக்கின்றன...!

 நான் ரசிக்கும் இயற்கையோ
உன்னை சுற்றி நடை பயில...
வெட்டவெளி புல்தரையில்
உனக்கென என்றும்
காத்திருக்கிறேன் நான்...!