Saturday 4 July 2015

கேன்சர் என்னும் மரணம் - சந்தித்த மனிதர்கள்



கொஞ்ச நாளாவே எதுவுமே எழுதல. எழுத தோணவும் இல்ல. சும்மா வெட்டியா லேப்டாப்ல படங்கள போட்டு விட்டுட்டு நான் இந்த பக்கமா தூங்கிட்டு இருந்தேன்.

மகேஷ் கூட இன்பாக்ஸ்ல வந்து ஏதாவது எழுதுங்க அக்கான்னு சொன்னான். சரிமான்னு அவன்கிட்ட சொன்னாலும் என்ன எழுத ஏது எழுதன்னு இந்த நிமிஷம் வரைக்கும் தெரியாம தான் இருந்தேன். அப்ப தான் ஒரு போஸ்ட் பாத்தேன். கேன்சரால பாதிக்கப்பட்டு பக்கத்து வீட்ல ஒருத்தங்க இறந்துட்டாங்கன்னு தோழி ஒருத்தங்க போட்ட போஸ்ட் அது. அதுல கமன்ட் போட்ருந்தவங்கள்ல ஒருத்தங்க கேன்சர் பேசியன்ட். அவங்களோட பேச்சு கூட உற்சாகமா தான் இருந்துச்சு. சியர்ஸ்.

என்னைக் கேட்டா மனச எப்பவுமே உற்சாகமா வச்சுகிட்டா நோயோட வீரியம் பாதி இல்ல முழுசாவே குறைஞ்சிடும். இதே வார்த்தைய சொல்லி மறுபடியும் உங்கள போர் அடிக்க விரும்பல. நானும் இன்னிக்கி ஒரு மரணத்த பத்தி எழுதலாம்னு நினைக்குறேன்.

மரணம் – இந்த வார்த்தைய கேட்டாலே மனசு பதறத் தான் செய்யுது. ஆனா நான் இந்த வார்த்தைய நேசிச்சவ. நேசிக்க வச்சவ அம்மா. அதனால தானோ என்னவோ அவளோட மரணம் கூட என்னை அதிகம் பாதிக்கலன்னு சொல்லலாம். இல்லனா அப்படி நான் சொல்ல பழகியிருக்கேன். நான் சந்திச்ச வலியால துடிச்ச அத்தன ஆத்மாவும் வலியில்லாம செத்துப் போகணும்னு ப்ரே பண்ணியிருக்கேன். ஆனா என்னோட அந்த பிரார்த்தனைகள புரட்டிப் போட்டவ காய்த்துங்குற காயத்ரி. அவள பத்தி இன்னொரு நாள் கண்டிப்பா சொல்றேன். இப்ப நாம பாக்கப் போறது வித்யா.

கடைசியா ரெண்டு வருஷம் முன்னாடி நான் ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப சந்திச்சவ தான் வித்யா. கிட்டத்தட்ட ஏழு வயசு இருக்கும். அவ கண்ணு எப்பவும் துறுதுறுன்னு இருக்கும். அப்படி ஒரு புன்னகை முகத்த பாத்துட்டே இருக்கலாம். நான் அவள பாத்தப்பவே அவ தலைமுடி எல்லாம் உதிர்ந்து போயிருந்துது. கீமோ குடுத்துட்டு வீல் செயர்ல வச்சு தள்ளிட்டு வந்தாங்க. என் ரூம் கதவு திறந்து இருந்துச்சு அப்ப. திடீர்னு அதுல இருந்து எழுந்து ஓடினா. அவள தூக்கிட்டு வந்து மறுபடியும் வீல் செயர்ல வச்சு தள்ளிட்டு போய்ட்டாங்க.

அப்பா கிட்ட அது யாருப்பான்னு கேட்டேன். பக்கத்து ரூம் தான். பாவம் புள்ள வாடிப் போய் இருக்கான்னு சொன்னாங்க. ஹாஸ்பிட்டல் ரொம்ப ஸ்ட்ரிக்ட். யாரும் யாரையும் அவ்வளவு சீக்கிரம் பாத்துட முடியாது. எனக்கு ரூமுக்குள்ள இருந்து இருந்து போர் அடிச்சு போயிடுச்சு. மெதுவா நான் போய் பாக்கலாமான்னு அப்பா கிட்ட கேட்டேன். இல்ல, நீ பேசாம படுன்னு அப்பா சொல்லிட்டாங்க.

அது ஒரு தீபாவளி நேரம். ஊர்ல எல்லாரும் கண்டிப்பா தீபாவளி கொண்டாடிட்டு இருப்பாங்க. நான் அம்மாவ நினைச்சுகிட்டேன். நான் தீபாவளி கொண்டாடுறது இல்லனாலும் என்னைப் பாக்க வந்த யாரோ ஒருத்தர் கொண்டு வந்த ஸ்வீட்ஸ் இருந்துச்சு. அப்பாவும் வெளில போயிட்டு வரேன்னு போய்ட்டார். ரூம்ல நான் மட்டும் தான்.

திருட்டுத்தனம் பண்ண இதான் நல்ல வாய்ப்புன்னு அந்த ஸ்வீட் பாக்ஸ் எடுத்துட்டு பக்கத்து ரூம்ல நுழைஞ்சேன். வித்யா ஆரஞ்ச் சுளைகள சாப்ட்டுட்டு இருந்தா. கதவுக்கு பின்னால என்னை பாத்ததும் அச்சா-ன்னு அவ அப்பாவ கூப்ட்டு என்னை கைகாட்டினா. அவருக்கு என்னை ஏற்கனவே தெரியும் போல (பெரியவங்க பேசியிருப்பாங்கன்னு நினைக்குறேன்), வரு-னு உள்ள கூப்பிட்டார்.

ஹாய் குட்டி, உன் பேர் என்னன்னு கேட்டேன். வித்துன்னு சொல்லிட்டு வாய்ல ஆரஞ்ச் சுளையோட முழிச்சா. நான் லட்டு பேக் எடுத்துக் குடுத்து சாப்பிடுவாளான்னு கேட்டேன். அவ ஆசைப்பட்டு கேட்டா குடுத்துடுறேன்னு சொல்லி அவர் வாங்கி வச்சுகிட்டார். அவ்வளவு தான் லேட் ஆகிடுச்சுன்னு நான் வந்துட்டேன்.

அன்னிக்கி ராத்திரி அப்பா வரல, தம்பி தான் வந்தான். எட்டு மணி இருக்கும். லேப் டாப் எடுத்துட்டு வெளில போனான். எனக்கு செம போர். என்னன்னு மெதுவா வந்து எட்டிப் பாத்தா, வித்யா ரூம்ல காய்த்து, தம்பி, இன்னும் ரெண்டு மூணு குட்டிங்க. அப்புறம் வித்யாவோட அம்மா. காய்த்து என்னைப் பாத்ததும் வரு சேச்சின்னு கூப்ட்டா. அன்னிக்கி நாங்க தீபாவளி கொண்டாடின மாதிரி யாரும் கொண்டாடியிருக்க மாட்டாங்க.

அவன் லேப்டாப்ல ஒரு கேம் வச்சிருந்தான். நமக்கு என்ன பட்டாசு வேணுமோ அத கிளிக் பண்ணினா அது விதம் விதமா வெடிச்சு சிதறும். மத்தாப்பு, சரவெடின்னு ஆளாளுக்கு கொளுத்தி தள்ளிட்டாங்க. ஒவ்வொரு பட்டாசு வெடிக்கும் போதும் ஹை-ன்னு கைத்தட்டி சந்தோசித்த அந்த சின்ன மொட்டுகள நான் பாத்துட்டே இருந்தேன். இந்த புள்ளைங்க தான் எவ்வளவு அழகு. எப்படி கள்ளம்கபடமே இல்லாம சிரிக்குதுங்க. அப்ப கூட நான் இந்த புள்ளைங்க முடிவு என்னவா வேணா இருக்கட்டும் ஆனா வலியோட மட்டும் சாவு வந்துடக் கூடாதுன்னு தான் வேண்டிகிட்டேன்.

நாலு நாள் அப்புறம் வித்யாவுக்கு பிறந்தநாள் வந்துச்சு. ஹாஸ்பிட்டல்ல அவ பிறந்தநாளை கொண்டாட தம்பி தான் பெர்மிசன் வாங்கிட்டு வந்தான். சும்மா சொல்லக் கூடாது, அந்த வார்ட்ல இருந்த எல்லாருமே அவங்கவங்க பங்குக்கு பலூன், பேப்பர் டெகரேசன்ன்னு பண்ணி அசத்திட்டாங்க. ஏழு மெழுகுவர்த்தி ஏத்தி வச்சு ஹாப்பி பர்த்டே பாட்டு பாட வித்யா பிறந்தநாள் கேக் வெட்டினா. அன்னிக்கி முழுக்க அவ சந்தோசமா இருந்தா. அவள பாக்க வந்தவங்க கழுத்த கட்டி முத்தம் குடுத்தா. ராத்திரி ஆனதும் அப்படியே தூக்கம் சொல்லிட்டு வர ஆரம்பிச்சதும் நாங்களும் ரூமுக்கு வந்துட்டோம்.

அடுத்த நாள் காலைல அப்பாவும் தம்பியும் பேசிட்டு இருந்தாங்க. அப்பா முகம் அழுத மாதிரி இருந்துச்சு. தம்பியும் சோகமா இருந்தான். என்ன விசயம்னு கேட்டேன். வித்யா ராத்திரியே செத்துட்டதா அப்பா சொன்னாங்க. மனசுக்குள்ள ஒரு பெரிய பாரம் தூக்கி வச்ச மாதிரி இருந்துச்சு. மொத்தமே நாலு நாள் பாத்த பொண்ணு. நான் அதிகம் பழகவும் இல்ல. ஆனா திடீர்னு அவள இனி பாக்கவே முடியாதுன்னு தெரிஞ்சா?

வித்யாவுக்கு ஒரு தங்கச்சி உண்டு. அந்த பொண்ணு நூறு வயசு வாழட்டும்னு நினைச்சுகிட்டே வித்யாவோட அந்த வலியில்லா மரணத்துக்காக கடவுளுக்கு நன்றி சொன்னேன்.

அதெப்படி அந்த பொண்ணோட மரணம் உன்னை பாதிக்கவே இல்லையான்னு கேட்டா எந்த மரணமும் என்னை அந்த நேரம் சலனப்படுத்தலன்னு தான் சொல்லுவேன். அந்த உயிர் கடைசி நிமிசத்துல சந்தோசமா இருந்தது போதும்னு நினச்சேன். அது நானாவே இருந்தாலும் அப்படித் தான் நினைச்சிருப்பேன். என்னோட அப்போதைய மனநிலை அப்படி தான் இருந்துச்சு.

இதே மாதிரியான ஒரு சூழ்நிலை இதுக்கு முன்னாடியும் நான் பாத்துருக்கேன். ஆனா நேர்ல இல்ல. பேஸ்புக்ல. பதிமூணு வயசு ஆன சிவசங்கர்ங்குற பையன். அவனுக்கு ரெத்த புற்றுநோய்ன்னு கேள்விப் பட்டதும் அவனுக்காக இங்க நிறைய பேர் பிரார்த்தனை செய்தாங்க. பண உதவி, ரெத்தம் எல்லாம் குடுத்து அவன் பிழைச்சு வரணும்னு வேண்டிகிட்டாங்க. அவனுக்கு ரெண்டு ரவுண்டு ஹீமோ கொடுக்கப்பட்டு ட்ரீட்மென்ட்ல இருந்தப்ப நானும் அவனுக்காக வேண்டிகிட்டு இருந்தேன். ஒவ்வொரு நாளும் அவனோட நிலைமை என்னன்னு கேட்டுத் தெரிஞ்சுப்பேன்.

அவனோட பிறந்தநாளையும் ஒரு பார்க்ல வச்சு எல்லாரும் கொண்டாடினாங்க. அந்த பையன் தான் எவ்வளவு சந்தோசமா இருந்தான். எனக்கு அவன பாக்குறப்ப எல்லாம் என்னையே பாத்த உணர்வு. ஆனாலும் ஒரு நாலு நாள் கூட அந்த சந்தோசம் நிலைக்கல. ஒரு நாள் ராத்திரி தூக்கத்துலயே அவன் உயிர் போயிடுச்சு.

அவனோட ட்ரீட்மென்ட்க்கு குடுத்த காச கூட அவன் அம்மா வேற யாருக்காவது உதவுங்கன்னு திருப்பிக் குடுத்துட்டதா கேள்விப் பட்டேன். ஒரே புள்ளைய இழந்துட்டு நின்ன அந்த தாய்க்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?

ஆனா எல்லா சோகமும் அப்படியே முடிஞ்சி போறதில்ல. கொஞ்ச நாள்லயே சிவசங்கரோட அம்மா அத்தனை வயசுக்கப்புறம் மறுபடியும் கருத்தரிச்சு ரெட்டைப் புள்ளைங்கள பெத்தெடுத்தாங்க. இந்த விசயத்த கேள்விப் பட்ட அன்னிக்கி நான் அவ்வளவு சந்தோசப்பட்டேன்.



வாழுறதுலயும் ஒரு அர்த்தம் இருக்கத் தான் செய்யுது. மரணங்கள பாத்தும் கூட.

6 comments:

  1. அந்த தாய்க்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு ஆண் குழந்தைகள் அண்ணா அவங்களுக்கு. அதோட தன்னோட கஷ்டத்துலயும் அடுத்தவங்களுக்காக காச குடுத்தவங்க

      Delete
  2. vidya matrum siva shankar vazkai

    potti poramai peraasai suyanalam etc
    nirampiya intha ulakathil
    silarai aavathu manitharkalaaka matrum enpathil santhekam kidaiyathu.


    ReplyDelete
    Replies
    1. நம்ம கைல எதுவுமே இல்ல, நாம தான் அடுத்தவங்களுக்கு தொல்லை இல்லாம நம்மளயும் சந்தோசமா வச்சுட்டு அடுத்தவங்களையும் சந்தோசமா வச்சுக்கனும்னு புரிஞ்சாலே போதுமா, மனிதம் வாழ்ந்திடும்

      Delete
  3. கான்சர் பற்றிக் கேட்டால் மனம் வேதனிக்கும் தருணங்கள் ஆகிவிடுகின்றது....
    அந்தத் தாய்க்கு வாழ்த்துகள். இனியாவது குழந்தைகள் நல்ல முறையில் நோய் நொடியின்றி வளரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்துக்கு தேங்க்ஸ். கண்டிப்பா அந்த குழந்தைங்க நல்லா வளருவாங்க. அப்புறம் எனக்கு கேன்சர் பத்தி கேட்டா அதிகம் அதிர்ச்சி வர்றதில்ல

      Delete