Friday 31 July 2015

அம்மா அப்பா பிறந்தநாள்



நேத்து (29/07/2015) அம்மாவுக்கு பிறந்தநாள். அதுக்கு முன்னாடியே அப்பாவுக்கு ரெண்டு நாள் முன்னால பிறந்தநாள். இந்த விஷயம் நேத்து சாயங்காலம் வரைக்கும் சுத்தமா நியாபகம் இல்ல. நான் பாட்டுக்கு லேப்டாப்ல ஜாந்தி எப்படி குஜுன் ப்யோவ (கொரியன் சீரியல்) சுத்தல்ல விடுறான்னு பாத்துட்டு இருந்தேன்.

அதெப்படி ஒரு அம்மா அப்பா பிறந்தநாள், அதுவும் அடுத்தடுத்து வர்ற பிறந்தநாள மறப்பன்னு கேக்காதீங்க. எனக்கே இங்க பேஸ் புக்ல வர்ற வாழ்த்துக்கள வச்சு தான் அட, இன்னிக்கி நமக்கு பொறந்தநாள்லன்னு நியாபகம் வரும். சரி சரி ரொம்ப முறைக்காதீங்க, போன வருஷம் தான் ஒரு வாரம் முன்னாடியே நியாபகம் வச்சு கார்த்திக் கிட்ட ஒரு கிப்ட் கேட்டேன். அதுக்கு முந்தின வருஷம் வரைக்கும் எதையும் எதிர்பாத்ததே இல்ல.

எனக்கு நியாபகம் இருக்குற ஒரே பிறந்தநாள் செப்டம்பர் இருபத்தி எட்டு. அதுவும் கேட்டா மட்டும் தான் டக்குன்னு சொல்லுவேன், இல்லனா அதையும் மறந்துடுவேன். இவ்வளவு அதிமுக்கியமான பிறந்தநாள் யாரோடதுன்னு கடைசியா சொல்றேன்.

நான் சீரியல் பாத்துட்டு இருந்தேன்ல, அப்பா என்கிட்ட வந்து கொஞ்சம் வெளில போயிட்டு வருவோம் வான்னு கூப்ட்டாங்க. நாளைக்கு தான் ஹாஸ்பிட்டல் போறோமே, எதுக்குப்பா இன்னிக்கி? பரவால, அப்புறம் பாத்துக்கலாம்ப்பான்னு சொன்னேன்.

“வா சொல்றேன்ல”ன்னு சொல்லிட்டே என்னை தூக்கி உக்கார வச்சு, காலை பிடிச்சு மசாஜ் பண்ணி காட்டன் பேன்ட்யெட் சுத்தி விட்டு, ஸெல்ப்ல போய் ஒரு சுடிதார் எடுத்து வந்து, அது பாட்டம் காலை சுருட்டி, என் கால அதுல நுளைச்சுட்டே நீ சுடிதார் போட்டு நாளாச்சு. போட்டுட்டு கூப்டு, அப்பா கூட்டிட்டு போறேன்னு வெளில போய்ட்டார்.

என்ன விசேசம் இன்னிக்கின்னு மண்டைய போட்டு ரொம்ப குழப்பியும் சுத்தமா நியாபகம் வரல. சரி, கார்த்திக் கிட்ட சொல்லலாம்னு நினைச்சப்ப அவர் அப்ப தானே தூங்கினார், டிஸ்டர்ப் பண்ண வேணாம், வந்து சொல்லிக்கலாம்னு கிளம்பிட்டேன்.

கிளம்பினதும், “அப்பா”ன்னு குரல் குடுத்தேன். வாக்கர் எடுத்து தந்தாங்க. அத பிடிச்சுட்டே ஒத்த கால வச்சு ஹால் வந்து, அத தாண்டி வெளில வராண்டா வந்தாச்சு. இந்த பாட்டி எங்கன்னு சுத்தும் முத்தும் பாக்குறேன், காணல. நல்ல வேளைன்னு நினச்சுட்டே எப்படி படி இறங்கன்னு யோசிச்சேன். அதுக்குள்ள கார தொடச்சுட்டு இருந்த தம்பி இத பாத்துட்டு ஓடி வந்தான். அவனும் அப்பாவும் சேர்ந்து என்னை ரெண்டு பக்கமா பிடிச்சு கீழ இறக்கி விட்டுட்டாங்க.

கால் முறிஞ்சதுக்கப்புறம் கிட்டத்தட்ட ஒன்னரை மாசமா வீட்டை விட்டு வெளில போகணும்னா ஹாஸ்பிட்டல் மட்டும் தான் போவேன். அதுவும் ஆம்புலன்ஸ்ல படுக்க வச்சு ரெண்டு பேர் ஸ்ட்ரெக்சர்ல தான் தூக்கிட்டு போவாங்க. போன வாரம் தான் ரொம்ப பிடிவாதம் பிடிச்சி முதல் தடவையா கார்ல கொஞ்சம் ஊர் சுத்திட்டு வந்தேன். அதுக்கப்புறம் நேத்து தான் வெளில கிளம்புறேன். அதுவும், அப்பா, தம்பி நான் மட்டும். விஷயம் என்னன்னு தெரியலனாலும் ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.

நான் ட்ரைவ் பண்ணட்டான்னு நான் கேக்கவும், அடங்குன்னு தம்பி கைய தூக்கி சைகை காமிக்குறான். கொழுப்பு புடிச்சவன். பின் சீட்டை திறந்து வச்சு, அதுல என்னை ஏற சொல்லி, காலை சீட் மேலயே வச்சுக்கோன்னு சொன்னான். அப்புறம் ரெண்டு தலையணை எடுத்து கால் கீழ விழாம இருக்க அடை குடுக்குறானாம். எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்துச்சு. இல்ல, எனக்கு இப்படி உக்கார கஷ்டமா இருக்கு, நான் காலை கீழ வச்சுக்குறேன்னு சொன்னேன். போன வாரம் வெளில சுத்திட்டு அங்க வலிக்குது இங்க வலிக்குதுன்னு புலம்பிட்டு இருந்தல, இப்படி இருன்னு சொல்றான். பார்ரா, இந்த பய நம்மள அதிகாரம் பண்ற அளவு தேறிட்டான்ன்னு எனக்கு திரும்பவும் சிரிப்பு சிரிப்பா வந்துச்சு.

அப்பா போய் முன்னாடி உக்காந்துக்க, தம்பி கார எடுத்தான். எனக்கு நினைவு தெரிஞ்சி, எங்க கார்ல பின் சீட்ல நான் உக்காந்தது இதான் முதல் தடவ. இதுக்கு முன்னாடி எல்லாம் ஒண்ணு நான் ட்ரைவ் பண்ணுவேன், இல்லனா பக்கத்துல உக்காந்துட்டு இருப்பேன். நிஜமாவே எனக்கு அந்த மாதிரி கால நீட்டிட்டு பின் சீட்ல இருந்தது புது அனுபவமா இருந்துச்சு. பெருசா ஒண்ணும் வெளில வேடிக்கை பாக்கவே முடியல, கடுப்பாகிடுச்சு.

அரை மணி நேர ட்ராவல். அரைகொறையா பாத்துட்டு வந்ததுல கோவிலுக்கு போறோம்னு தெரிஞ்சுது. கார் கோவிலுக்கு வந்து நின்னதும், என்னப்பா விசேசம்னு அப்பா கிட்ட கேட்டேன். அம்மாவுக்கு பொறந்தநாள்ன்னு தம்பி சொன்னான். அம்மாவுக்கு பொறந்தநாள்னா அப்ப அப்பாவுக்கு முந்தாநேத்து பொறந்தநாள்லன்னு கேணத்தனமா சிரிச்சுட்டே ஹாப்பி பர்த்டே அப்பா-ன்னு சொன்னேன்.

..........................................

இந்த பொறந்தநாள் கொண்டாட்டங்கள எல்லாம் தலைமுழுகி ஏழெட்டு வருசத்துக்கு மேலயே இருக்கும். அப்பலாம் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரு நாள் விட்டு அடுத்தடுத்த நாள் பிறந்தநாள் வர்றதால எப்பவுமே மொத்தமா கொண்டாட இருபத்தியெட்டாம் தேதிய தான் செலக்ட் பண்ணுவோம். அதுவும் நான் எட்டாவது படிக்குறப்ப தான் ஆரம்பிச்சோம். உண்மைய சொன்னா அதுக்கு முன்னாடி என்னோடது, அப்புறம் தம்பியோட பிறந்தநாள கூட பெருசா கொண்டாடினது இல்ல. கோவிலுக்கு போறதோட சரி. அதென்னவோ அந்த மாதிரி கொண்டாட்டங்கள்ல ரொம்ப இன்ட்ரெஸ்ட் இருக்கல, எங்க ஏரியால அதெல்லாம் கொண்டாடுறதும் இல்ல. அப்பா குடும்பத்துல பாட்டிக்கு சுத்தமா இந்த மாதிரியான கொண்டாட்டங்கள் பிடிக்காது.

எய்த் படிக்குறப்ப, ப்ரெண்ட்ஸ், நான், அம்மா எல்லாரும் சேர்ந்து பேசிட்டு இருந்தப்ப தான் இந்த பிறந்தநாட்கள் பற்றி பேச்சு வந்துச்சு. அம்மா அப்ப தான் பாட்டியோட அடக்குமுறைல இருந்து கொஞ்சம் வெளில வந்திருந்தா. அதனால அப்பா கிட்ட இந்த பிறந்தநாட்கள ரொம்ப ஜாலியா கொண்டாடணும்னு சொல்லி ஒரு நாள் முழுக்க வெளில சுத்தினோம். பீச், பார்க், தியேட்டர், ஹோட்டல்ன்னு ரொம்ப சந்தோசமா கொண்டாடினோம். கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் தான் அதுக்கு ஆயுள். ஒவ்வொரு வருசமும் புதுசா பண்ணுவோம். எனக்கோ தம்பிக்கோ பர்த்டேனா வீட்லயே பார்டி இருக்கும். அம்மா கைமணத்தோட ப்ரெண்ட்ஸ், ஹோம் பசங்கன்னு செம ஜாலியா இருக்கும். ராத்திரி எல்லாருக்கும் கண்டிப்பா அம்மா கையால நிலா சோறு உண்டு. அப்புறம் எல்லாத்தையும் மறந்தாச்சு.
..............................................

கார விட்டு இறங்கணும்னா வாக்கர் கொண்டு வரலலப்பான்னு நான் கேட்டதும், இல்லல, கீழ எல்லாம் இறங்க வேண்டாம், இங்க இருந்தே கும்பிட்டுக்கன்னு சொன்னாங்க. மூணு பேரும் வெளில இருந்துட்டே கோபுரத்த பாத்து ஒரு கும்பிடு போட்டு போட்டதும் காரை பார்க் பண்ணிட்டு அவங்க ரெண்டு பேரும் சாமி கும்பிடப் போவாங்கன்னு நினச்சேன். ஆனா தம்பி கார ஸ்டார்ட் பண்ணி, நேரா சுடல்கடைகாரர் முன்னால கொண்டு போய் நிறுத்தினான். கோவிலுக்கு உள்ள போகலயான்னு கேட்டதும், இல்லல, இது போதும்னு சொல்லிட்டே, கிழங்கு வத்தல் ரெண்டு பாக்கெட்டும், அவிச்ச நிலக்கடலை மூணு பாக்கெட்டும் வாங்கிட்டு ஐநூறு ரூபா நோட்டை எடுத்து நீட்டினான். அவரு சில்லற இல்லப்பான்னு சொல்லிட்டே, அவன் கைல இருந்த பொட்டலத்த எல்லாம் படக்குன்னு புடிங்கிட்டாரு. எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. காலை எடுத்து மெதுவா கீழ தொங்க போட்டுட்டு சீட்ல சாஞ்சு உக்காந்தேன்.

தம்பி விறுவிறுன்னு நடந்து போனான், போன வேகத்துல ஒரு பொட்டலத்தோட திரும்பி வந்தான். சுண்டல்காரர் கிட்ட போனான், காசை குடுத்து பொட்டலம் போட்டு வச்சிருந்தத திருப்பி வாங்கினான், அவன் பாட்டுக்கு கார்ல ஏறி உக்காந்தான். ஆளுக்கு ஒரு பொட்டலத்த பிரிச்சு சாப்பிட ஆரம்பிச்சுட்டோம்.

நான் மெதுவா, சில்லறை எங்க வாங்கினன்னு கேட்டேன். அவன் பஜ்ஜி பொட்டலத்த எடுத்து காட்டி, அந்த பஜ்ஜி கடைல போய் அங்க இருந்த அம்மா கிட்ட மூணு பஜ்ஜி கேட்டேன், மடிச்சு தந்துட்டு பதினெட்டு ரூபா கேட்டாங்க, நான் ஐநூறு ரூபாவ நீட்டினேன். அவங்க சிரிச்சுட்டே, இதுக்கு தான் பஜ்ஜி வாங்க வந்தீங்களான்னு கேட்டுட்டு ஐநூறு ரூபாய்க்கும் சில்லறை தந்தாங்க. பஜ்ஜிக்கு ரூபான்னேன், இல்ல பரவால வச்சுக்கோங்கன்னு தந்துட்டாங்கன்னு சொன்னான். ஆச்சர்யமா இருந்துச்சு. அந்த இடத்துல கட்டாயப்படுத்தி காசை குடுத்துருக்கலாம், ஆனா இந்த மாதிரியான சில விசயங்கள அவங்கள அவங்க போக்குல விட்டுரணும்னு அம்மா அடிக்கடி சொல்லுவா. யாராவது மனசார நமக்கு ஒண்ணு தந்தா வேணாம்னு மறுக்க கூடாது, அது அவமரியாதைன்னும் சொல்லுவா. தம்பி அதனால தான் வாங்கிட்டு வந்துட்டான். ஒருத்தனுக்கு காசு வாங்காம பஜ்ஜி குடுத்த சந்தோசம் அந்த அம்மாவுக்கு கிடைக்கட்டுமே.

நான் உடனே ஆசையா அந்த பஜ்ஜிய எடுத்து சாப்பிட ஆரம்பிச்சேன். ஒரு கடி கடிச்சுட்டு நிமிர்ந்து பாக்குறேன், எனக்கு நேரா ஒரு தாத்தா, சாப்பிட ஏதாவது தான்னு கேக்குற மாதிரி கையேந்தி நிக்குறாரு. நான் திருட்டு முழி முழிச்சுட்டே கைல இருக்குற பஜ்ஜிய பாக்குறேன், தாத்தாவ பாக்குறேன். அப்பா எட்டிப் பாத்துட்டு, கார்ல இருந்து இறங்கி, பெரியவரே வாங்கன்னு சொல்லிட்டு பக்கத்து ஹோட்டல் கூட்டிட்டு போனாங்க. தம்பி, நான் காரை பார்க் பண்ணிடுறேன்ப்பான்னு சொல்லிட்டு கொஞ்சம் தள்ளி ஓரமா ஒதுக்கி விட்டுட்டு உனக்கு என்ன வேணும்னு கேட்டான். நான் பானி பூரின்னு சொன்னேன். அதெல்லாம் இங்க கிடைக்காது, சரி, இரு வர்றேன்னு சொல்லிட்டு அவனும் இறங்கி போய்ட்டான்.

அப்பா கண்டிப்பா அந்த தாத்தாவுக்கு சாப்பாடு வாங்கி குடுத்துருப்பாங்க. அவங்க திரும்பி வந்தப்ப நான் பஜ்ஜி, கடலை, கிழங்கு வத்தல் எல்லாத்தையும் (என் பங்கை தான்) காலி பண்ணியிருந்தேன். தம்பி காரை ஸ்டார்ட் பண்ணிட்டே திரும்பி பாத்தவன், காலை தூக்கி மேல வைக்கட்டான்னு கேட்டான். இல்ல, வேணாம் இருக்கட்டும்னு சொல்லிட்டேன்.

அப்புறமா, கோவில்ல இன்னொரு இடத்துல போய் தேடினா, இன்னிக்கின்னு பாத்து பானி பூரி விக்குற ஆள காணோம். எனக்கு ஏமாத்தமா போச்சு. என் மூஞ்சி வாடினத பாத்தோ என்னவோ மூணு நாலு கிலோமீட்டர் தள்ளிப் போய் ஒரு கடைல கேக்க, அங்கயும் பானி பூரி இல்ல. சரி, வந்ததுக்கு மசால் பூரியாவது சாப்பிடுவோம்னு அதுல ஒரு ப்ளேட் வாங்கி சாப்ட்டேன். அங்க இருந்து திரும்பி வந்தப்ப என்ன நினைச்சானோ, மறுபடியும் காரை கோவில் ஸ்ட்ரீட்ல ஒரு ரவுண்டு அடிக்க, அட, பானிப்பூரி விக்குற பையன் மாட்டிகிட்டான்.

அதான், மாட்டிகிட்டான்ல, அப்புறம் பானி பூரி சாப்டாம திரும்பி வந்துருப்பேன்னா நினைக்குறீங்க? ரெண்டு ப்ளேட் வாங்கி, புளிப்பு சுவை நாக்குல எச்சி ஊற ஊற காலி பண்ணியாச்சு. என்னடா இவ, ஒரு பானி பூரிக்கு இவ்வளவு அக்கப்போரான்னு நினைக்காதீங்க, என் லைப்ல ரெண்டாவது தடவையா தான் பானி பூரிய நான் சாப்ட்டேன்.

வீட்டுக்கு வந்து சேர்ந்தப்ப கால் பயங்கர வலி. நீர் போட்டு பயங்கரமா வீங்கி போயிருந்துச்சு. செம டயர்ட் வேற. ஆனாலும் அத எல்லாம் அப்பா கிட்டயும் தம்பி கிட்டயும் காட்டிக்க மனசு வரல. ரூமுக்குள்ள வந்து கட்டில்ல படுத்ததும் தான் தெரியும், ஹப்பா... எழுந்திரிக்கவே முடியல. ஆனாலும் இந்த நாளை என்னோட டைரி அதான் இங்க குறிச்சு வைக்கணும்னு மடமடன்னு எழுதி முடிச்சுட்டேன். கார்த்திக் கிட்ட இன்னும் எதுவும் சரியா சொல்லல. படிச்சு தெரிஞ்சுக்கட்டும். பின்ன, நாம எழுதுறத அவர வேறெப்படி படிக்க வைக்குறது?

ஆங், சொல்ல மறந்துட்டேனே, அந்த செப்டம்பர் இருபத்தி எட்டு யாருக்கு பிறந்தநாள்ன்னு தான கேக்குறீங்க? அச்சச்சோ, நான் அவன் பெயர சொல்லி கூப்பிடவே மாட்டேனே... அதனால சொல்ல மாட்டேன்... ஹஹா... டாட்டா....

10 comments:

  1. கார்த்திக் கிட்ட இன்னும் எதுவும் சரியா சொல்லல. படிச்சு தெரிஞ்சுக்கட்டும். பின்ன, நாம எழுதுறத அவர வேறெப்படி படிக்க
    வைக்குறது? //


    ஹஹஹா. படிப்பாரா? அக்கா:-).

    ReplyDelete
    Replies
    1. படிச்சுட்டார்மா...

      நம்மாளு எழுத்துல ஒரு வசிய மருந்து தடவி வச்சிருதுய்யா.. படிக்கும் போதே ஒரு மயக்கம். ஏ புள்ள எமி ஜாக்சன். எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும்... ன்னு சொல்லியிருக்காரு...

      நிஜமாவா வசிய மருந்து இருக்கு?

      Delete
  2. செப்டம்பர் இருபத்தி எட்டு உங்க தம்பி பிறந்தநாள் சரிதாணே அக்கா?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா உண்மைய இப்படி பொசுக்குன்னு உடச்சுட்டா எப்படி?

      Delete
    2. ஹஹஹா நா சொன்னது ரைட்டா! ம்ம்ம்.
      எப்போதோ உங்க பதிவில் படிச்ச ஞாபகம் அக்கா:-)

      Delete
    3. ம்ம்ம்ம் தேங்க்ஸ்மா மகேஷ்

      Delete
  3. அனைவருக்கும் வாழ்த்துகள் சகோதரி...

    ReplyDelete
  4. அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பானி பூரியெல்லாம் சாப்பிடுவீங்களா? ஆச்சர்யமா இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா.... இதுவரைக்கும் ரெண்டு தடவ தான் சாப்ட்ருக்கேன் அண்ணா... பிடிச்சிருக்கு

      Delete
  5. அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete