Saturday, 5 May 2012

தொலைந்தும் தொலையா மனம்...


பாற்கடலின் அடி ஆழம் சென்று
ஒளிந்துக் கொள்ள விழைகிறேன் நான்...
நெஞ்சம் பிளந்து இதயம் தொலைத்து விட
துடிக்குது மனது...
ஓ...வென கூக்குரலோடு வெளிப்படுகிறது
ஒரு ஆக்ரோஷம்...

பைத்தியக்காரியாய் மனம் பிறழ்ந்திருந்தால்
என் நிலை அறியாமல் தொலைந்திருப்பேன்
சுயம் என்ற ஒன்றை தொலைக்காமல் போனதால்
நிலையறிந்து பேதலித்து தவிக்கிறேன்...

உணவு கண்டு மொய்க்கும்
காக்காய் கூட்டமாய் உறவுகள்...
மாமிச ருசியறிந்து புசித்து விட
விரையும் கழுகு மனிதர்கள்...
கட்டாய சூழ்நிலைக்குள் தள்ளி விட்டு
ரெத்தம் சுவைக்கும் டிராகுலா மிருகங்கள்...
கொன்று தின்னும் ஓநாய்கள் மத்தியில்
மனம் பிழைக்க ஒரு
உணர்வு போராட்டம்...

சந்தர்ப்ப சூழ்நிலையால் ஊமையாய்
போய் விட்ட மனமொன்று
அழிக்கும் சூறாவளியாய்
ஆக்ரோஷம் கொள்ள துடிக்கிறது...
இறுதிவரை போராட்டம் மட்டுமே
நிலையாய் போகலாகாதென
சுதந்திரம் பெற முனைந்து
விட்டதொரு உரிமை போராட்டம்...
ஒளிந்து கொள்ள முயல்வது
தொலைந்து போக அல்ல...
தொலைந்து போன மனதினை
முத்தாய் மீட்டெடுக்க...

3 comments:

  1. ஏதோ ஒரு திரிசங்கு மனநிலையை வித்தியாசமாக விவரிக்கபோகிறார் கவி என ஆர்வமூட்டும் தலைப்பு.

    Hiddenness எனப்படும் மறைக்கப்பட்ட அர்த்தங்கள் மூலம், நமது கற்பனை குதிரை தட்டிவிடப்படுகிறது.காக்கை, கழுகு, டிராகுலா,ஓநாய் மனிதர்களால் விடப்படும் சவால்கள் , வேறுப்பட்ட மற்றும் விரிவான அர்த்தத்தை வழங்குகிறது.

    Uncertainty எனப்படும் தெளிவின்மை கூட கவிதைக்கு அழகு என்கிறார் ஜேன் ஹர்ஷ்ஃபீல்ட்.அவ்வழகு சுயம் குறித்த வரிகளில் மிளிர்கிறது.

    தப்பிக்கிற, பேதலிக்கிற அந்த மனம், கவிதையின் கடைசி பத்தியில் , எதிபாரா திருப்பமாக(Surprise),ஓடுதல் நிறுத்தி நேரெதிர் தேடுதல் தொடங்குவதால் ...இது ஒரு மிக சிறந்த கவிதை. இதை நான் சொல்லவில்லை. Hiddenness, Uncertainty, Surprise: Three Generative Energies of Poetry என்ற புத்தகத்தை எழுதிய ஜேன் ஹர்ஷ்ஃபீல்ட் சொல்கிறார். நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்: போராளிக்கு என்றும் இறுதி தோல்வியில்லை.

    ReplyDelete
    Replies
    1. அருமையான விமர்சனம்... நன்றி அண்ணா

      Delete