Monday 6 August 2012

பொறாமைப் பூக்கள்...!


உன் கனவுக்குள் புகுந்து
உன்னை நான் மெதுவே
களவெடுக்க முயற்சிக்க...

நீயோ என்னை கள்ளமிட்டு
உன் தோட்டத்து மல்லிகையாய்
ஒற்றைப் பாதையில் பதியமிட்டு
கண் முன் உலவுகிறாய்...!

என் கனவுப் பாதையில்
சிதறிக் கிடக்கும்
மென் புஷ்பங்கள் கூட
உன்னைப் பார்த்து கண் சிமிட்டுகின்றன...!

வீசி விட்டுச் செல்லும் தென்றலோ
ஒரு நிமிடம் நிதானித்து
உன் சுவாசம் நேசித்துச் செல்கிறது...!

சயனிக்கும் உன்னை
சஞ்சலம் செய்யவே
சட்டென எட்டிப் பார்க்கிறாள்
நிலாப் பெண்...!

காலைப் பனிகள் உன்னை
தரிசிக்கவே ஆவல் கொண்டு
உன் வீட்டு மொட்டை மாடியில்
தஞ்சம் புக எத்தனிக்கின்றன...!

 நான் ரசிக்கும் இயற்கையோ
உன்னை சுற்றி நடை பயில...
வெட்டவெளி புல்தரையில்
உனக்கென என்றும்
காத்திருக்கிறேன் நான்...!


2 comments:

  1. /// வீசி விட்டுச் செல்லும் தென்றலோ
    ஒரு நிமிடம் நிதானித்து
    உன் சுவாசம் நேசித்துச் செல்கிறது...! ///

    மிகவும் பிடித்த வரிகள்... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...


    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
  2. தோட்டமென்று நினைத்தாயே...
    அது என் இதயமென்று
    ஏனுனக்கு புரிவதில்லை...!

    என்று எதிர் கவிதை வருமோ?

    ReplyDelete