Saturday 19 May 2012

காதலும் முதல் முத்தமும்...!


உன்னை நான் பார்த்திருக்கிறேன்...
என்னை நீ பார்த்திருக்கிறாய்...
பார்வைகள் சந்தித்துக் கொண்டாலும்
ஏனோ மோதிக் கொள்ளவில்லை...!
மோதலில்லா நம் பார்வைகளை
மோகத்துள் தள்ளி விட
இருவீட்டார் நிர்பந்திக்க
கண்ணசைத்தே விட்டாய் நீ
என் சம்மதம் தெரியாமலே...!

என்ன சொல்லி புரிய வைப்பது?
எனக்குள் நீ இல்லையென...
எதை சொல்லி தெளிய வைப்பது
எனக்குள் எதுவோ தகித்துக் கொண்டிருப்பதை...!

எத்தனையோ இரவுகள் நம்மை
சேர்த்து வைத்திருந்தாலும்
இன்று தான் உனை நான்
முழுமையாய் பார்க்கிறேன்...!

காதோரம் எட்டிப் பார்த்த இளநரையை
உன் உதட்டுச் சிரிப்பு மறக்கச் செய்கிறது...
கண்மூடி தூங்கும் உன் இமைகளிரண்டும்
என்னை ஒளித்து வைக்க இடம் தேடினவோ?

தாயிடம் அமுதருந்தி சயனம் கொண்ட
ஓர் மழலை போல்
உன் உதட்டின் ஓரம் முத்தம்,
மிச்சமாய் தகித்துக் கொண்டிருக்கிறது...!

“உயிரே உனை உயிரென ஏற்றேன்”
என் கரம் பற்றி நீ சொன்ன வார்த்தைகள்
இன்றுதான் எனக்குள் மாயாஜாலத்தை
நிகழ்த்தி வேடிக்கை பார்க்கிறது...!

எங்கிருந்தாய் கள்ளா?
இப்படி என்னை திருடிக் கொண்டாயே...!
இதற்கான அனுமதியை
என் அனுமதியின்றி
எங்ஙனம் நீ கவர்ந்துக் கொண்டாய்?

உன் நேர்பட்ட கேசம்
கலைத்து விட விரல்கள் துடிக்கின்றன...
என்றுமே அறிந்திரா வெட்கம்
இன்று என் மேனி படர்ந்து
ஆளுமைக் கொள்கிறது...!

எத்தனையோ முறை நீ கேட்டும்
நான் அளிக்கா முதல் முத்தத்தை
இதோ உன் நெற்றியில்
பதியமிட்டுச் சொல்கிறேன்
“எனக்கும் உன் மேல் காதல்
எங்கோ துளிர்க்குதடா”...!



1 comment:

  1. GREAT EXPRESSION...WRITE MORE.!.PUBLISH A BOOK.!.YOU ARE GOING TO BE THE BEST WRITER IN THAMILNAADU!

    ReplyDelete