Tuesday, 5 June 2012

இயற்கை விதி...!

காரிருள் விழித்து
பகலவன் மெதுவே
எட்டிப் பார்க்கத்
துவங்கியத் தருணம்...!

வைகறைப் பொழுதின்
ஆனந்த குளியலை
அனுபவிக்க எண்ணி
தூக்கம் கலைந்தேன் நானும்...!

இரவின் மடியில்
மயங்கிய கிறக்கத்தால்
கண்கள் சிவந்து வண்ணம்
பரப்பியிருந்தது செவ்வானம்...!

பச்சைப்பசேல் புல்வெளிகளெங்கும்
பனித்துளிகள் விண்வெளியின்
முகவரி கேட்டு முகாரி
பாடிக் கொண்டிருந்தன...!

தாயோடு கொஞ்சியபடி
அணில் பிள்ளைகள் நான்கு
கீச்சிட்டவாறே வெளியுலகம்
எட்டிப் பார்த்தன...!

ஒன்றன் வால்
பிடித்து மற்றொன்று
நேர்க்கோடும் வட்டமுமாய்
வாழ்வியல் பாடங்கள்
படிக்கத்துவங்கின...!

எங்கிருந்தோ பறந்து வந்த
வல்லூறு ஒரு நொடி
இடைவெளியில் ஒன்றின்
உயிர் பறித்துச் சென்றது...!

பதறித்துடித்த தாயின் மனம்
கத்தியும் கதறியும்
தொண்டை வறண்டே போனது...!

ஓடி ஒழிந்த பிள்ளைகள்
மூன்றும் தாய் நேசம்
வேண்டி நிற்க
மீண்டும் பயணிக்கத்
துவங்கியது அவற்றிற்கான
மற்றுமொரு விடியல்...!

ஆங்கே...
ஓங்கி வளர்ந்த
ஒற்றைப் பனை உச்சியிலே
பசியொடு தவித்திருந்த குஞ்சுகளை
பசியாற்றிக் கொண்டிருந்தாள்
வல்லூறு தாய்...!

"இயற்கை விதித்து வைத்த
விதியிது" பெருமூச்சின்
ஆயத்தத்ததோடு எனக்கும்
விடியத் துவங்கியது
இன்றைய பொழுது...!

No comments:

Post a Comment