Sunday, 10 June 2012

அன்புள்ள தம்பி...!

அன்புள்ள தம்பி,
நீ பிறந்த தினம்
மருத்துவமனை வாசலை
குறுக்கும் நெடுக்குமாய்
நடந்தே கடந்தேனாம் நான்...!

இவன் உனக்கு குழந்தையென
அம்மா கையளித்தபோது
இனம் புரியா உணர்வோடும்
ஏதோ ஒரு கலக்கத்தோடும்
உன்னை தீண்டிய தருணம்
நியாபக மின்னலை சற்று
உரசி விட்டுச் செல்கிறது...!

நீ என் கைபிடித்து
நடைபழகிய நாட்களும்...
அப்பா கொடுத்த மிட்டாயை
விழுங்க தெரியாமல் திணறிய நாட்களும்
இன்னும் என் நினைவு கூட்டுக்குள்
பத்திரமாய்...!

ஒன்றாய் அமர்ந்து அம்புலி மாமா
கதை படித்ததும்...
அம்மா இடுப்பில் சவாரி செய்ததும்...
மீன் குஞ்சென
தலைபிரட்டை பிடித்து வந்ததும்...
இன்னும் என்னென்னவோ சங்கதிகள்
நினைவுக் குதிரையில்
சவாரி செய்கின்றன...!

நினைவிருக்கிறதா உனக்கு???
உன்னை என்னிடம் அம்மா
விட்டுக் சென்ற நாள்...!

அன்றுமுதல் மெளனியாய்
போய் விட்ட உன்னை
ஏனோ நானும் கண்டுகொள்ளாமல்
விட்டதேனோடா...!

பாசப்பறவைகளாய்
கூடித் திரிந்த நாம்
இன்று சிறைப்பறவையாய்
ஒரே கூட்டுக்குள் வெவ்வேறு திசையில்...
கூண்டுக்குள் சிறைப்பட்டே
உன்னையும் சிறைப்படுத்தினேன்...!

வேணாம்டா நமக்குள்
இந்த முகமூடி...!
சொக்கட்டான் ஆடவும்,
தாயம் உருட்டவும்
ஒருகை குறையுது...
கை கொடுப்பாயா...!

வா...! வந்து விடு...!
அம்மாவின் கடமையை
கைவிட்ட என்னிடம் மறுபடி
கைப்பிடித்து நடைபழக
வந்து விடு...!

2 comments:

  1. பாசத் தம்பி அருமை........உதயா

    ReplyDelete