Friday, 8 November 2013

காத்திருக்கும் விடியல்...!

எட்டிப்பார்க்கும் சூரியனை கண்டு
கீழ் வானம் சிவந்திருக்க
கொண்டை சேவல் ஒன்று
துயில் கலைந்து கொக்கரித்த
இளம் குளிர் போர்வைக்குள்ளே
கனா ஒன்று கண்டேனடா...!

தெருவெங்கும் மாவிலை தோரணங்கள் நீண்டு வர,
தென்னை மரங்கள் தாளத்தோடு வரவேற்க
பெண்பார்க்க நீயும் வந்தநாள் அந்நாளடா...!

சீர்வரிசை தட்டுகள் இடைநிற்க
பெண்டுகள் உன்னை வழிகாட்ட
கதவிடுக்கின் ஓரம் நின்று இரகசியமாய்
உன்னை நானும் முழுதாய் ரசிக்கிறேனே...!

ஆவல் மின்னும் கண்களோ
உன்னை அள்ளி அள்ளி பருகிய பின்னும்
மேலும் மேலும் தாகம் திணித்து மருகியே நின்றதடா...!

மன்மதனின் பார்வையொன்றை இரகசியமாய்
என்னிடத்தில் நீ வீசி, உயிர் வதைத்த நொடி
உன்னை என்னில் கொண்டேனடா...!

வார்த்தைகளின்றி நானும் தடுமாற
நீயோ கண்கள் வழி கவி பேசி
குறுநகை ஒன்றில் என்னை வீழ்த்திவிட்டு
வேடிக்கையாய் நகைக்கிறாய்...!

அடுத்த மாதம் ஆடியாமே?
ஆவணியில் தேதி வைக்க
அவசரமாய் தாக்கல் ஒன்றை
இப்பொழுதே சொல்லி விடு...!

முந்தி வரும் கார்த்திகையோ
பிந்தி வரும் தை மாதமோ
மணநாளை நீட்டிவைத்து
உன்னோடு என் வாழ்நாளை 
தேய்ந்து போக வைக்காதே...!

உனக்கென்ன? வருகிறேன் என
முற்றத்து மையத்தில் நின்று
சைகை மொழி செய்தியொன்றை
நவிச்சியமாய் நவின்று விட்டு
ஊர்வலத்தில் தேராக
அசைந்தே சென்று மறைந்து விட்டாய்...!

நானல்லவோ வாசல் வழி
உன் பிம்பம் காண்பேனென
நிதம் நிதம் விழி நோக
பார்த்துக்கொண்டே தேய்கிறேன்...!

முறை சோறு ஆக்கிப்போட 
முறைமாமன் வந்து நின்றான்...
சுற்றத்தார் விருந்தோம்பலில்
உண்டு களித்த மயக்கத்திலும்
துரும்பாய் நான் போனேனடா...!

கரம் பற்றி என்னை நீ கரைசேர்க்கும் நாளுக்காய்
நாணம் ஒன்றே நகையாய் பூட்டி
நாயகி நானும் கனகாலம் காத்திருக்கிறேன்...!

ஆடி முடிந்து ஆவணியும் தவறாமல்
வந்து கொண்டே தானிருக்கிறது...! 
என்றோ நீ வருவாய்...! கனவில்லை நிஜம் தருவாய்...!


- இது ஒரு மறுப்பதிவு 

12 comments:

  1. ஆடி முடிந்து ஆவணியும் தவறாமல்
    வந்து கொண்டே தானிருக்கிறது...!
    என்றோ நீ வருவாய்...! கனவில்லை நிஜம் தருவாய்...!
    >>
    ஆடி முடிஞ்சு ஆவணி வந்தா டாப்புல வருவான்ற டயலாக் உங்ககிட்ட இருந்துதான் எழுதுனாங்களா!?

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்... ஹஹா இப்படி என்னைய குழப்பி விட்டுட்டீங்களே

      Delete
  2. விரைவில் வருவார்... உங்கள் கனவு விரைவில் நிறைவேறும்... நல்ல கவிதை...

    ReplyDelete
    Replies
    1. ஓ.. நன்றி.... நிஜ வாழ்க்கைல என்கிட்ட கேட்டா, இதெல்லாம் ஒரு கனவா, போய் வேலைய பாருமான்னு தான் நானே சொல்லுவேன்

      Delete
  3. இன்னும் சுருக்கமாக வார்த்தைகளை தொடுத்திருந்தால் அழகாக இருந்திருக்கும் இது எனது கருத்து மட்டுமே.
    எனினும் ஏக்கத்தின் வரிகள் புரிந்தன.

    ReplyDelete
    Replies
    1. அதென்னமோ தெரியல அக்கா, சுருக்கமா எழுதுறது எனக்கு வரவே வராது, அதனால தான் எழுதுறதையே குறைச்சுகிட்டேன்

      Delete
  4. இது எழுத்து.காமில் பரிசு பெற்ற கவிதை தானே... மீண்டும் ஒரு நியாபகமா? வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ஆமா, இத விட நான் எழுதினது நிறைய எனக்கு பிடிக்கும். அப்படி இருக்கும் போது இந்த மொக்க கவிதைக்கு பரிசான்னு ஒருத்தர் என்கிட்ட கேட்டார், அவ்வ்வ்வ் நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். நிஜமா இதவிட நான் எழுதின பலதும் எனக்கு ரொம்ப பிடிக்கும். வாழ்த்துக்கு தாங்க்ஸ் மேடம்

      Delete
  5. காத்திருக்கும் பெண்ணின் கவிதை வரிகள் ரசிக்க வைத்தது! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. Azhagaana Kavithai Ethanaavathu Murai Padiththen Enru Ariyavillai,,, Padikka Padikka Puthusaave Irukku,,,

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் தேங்க்ஸ்

      Delete