Tuesday 25 February 2014

இணையமும் குழந்தைகளுக்கான பாதுகாப்பும்...


இணையம் அதாங்க, இந்த இன்டர்நெட் வந்த நாள்ல இருந்து வீட்டுக்குள்ளயே முடங்கி இருந்த பெண்கள் வீட்டுக்குள்ள இருந்தே வெளி உலகத்த எட்டிப் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. தங்கள உற்சாகப்படுத்தி, தங்களோட திறமைகள ஊக்குவிக்கவும் ஆட்கள் இருக்காங்கங்குற ஒரு நம்பிக்கை அவங்கள கொஞ்சம் கொஞ்சமா ஸ்ட்ரெஸ்ல இருந்து வெளி வர ரொம்பவே உதவி பண்ணியிருக்கு. இருந்த இடத்துல இருந்துகிட்டே தங்களுக்கான உரிமைகளுக்கு ஓங்கி குரல் குடுக்க முடியுது அவங்களால.

சரி, அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நான் இப்போ பேசப்போற விஷயம், பேஸ் புக்ல ஆங்காங்கே தட்டுப்பட்ட, தட்டுப்படுற, தட்டுப்படப்போற விசயத்த வச்சி சொல்ல வரேன். இத படிச்சுட்டு யார் சொன்னா எப்போ சொன்னான்னு யாரும் கேள்வி கேக்காதீங்க, காரணம், இத இன்னார்தான் சொல்லனும்ன்னு அவசியம் இல்ல, கொஞ்சம் கூர்ந்து கவனிச்சா நம்ம கண்ணுல அடிக்கடி தென்படும்.

அதாவது, ஒரு பொண்ண அசிங்கப்படுத்தணும்னு முடிவு பண்ணிட்டா, அவங்கள பத்தி, அதுவும் அவங்க கேரக்டர் பத்தி கதை கட்டி விடுவாங்க. அதையும் மீறி சில பேரு அவங்க போட்டோவ சுட்டு ஒண்ணு பேக் ஐ.டி தொடங்குவாங்க, இல்லனா கண்ட கண்ட பேஜ்ல போட்டு, அசிங்க அசிங்கமா கமன்ட் போட வைப்பாங்க.

இதனால அவமானப்பட்டு கூனி குறுகி போறது பொண்ணுங்கதான்னாலும் இதே பிரச்சனை ஆண்களுக்கு வேற மாதிரி இருக்கு. ஒரு ஆணை பிடிக்கலனா, ஒண்ணு, அவங்க ஐடிய ஹேக் பண்றாங்க, இல்ல, அவங்களோட படங்கள வச்சி புதுசா ஒரு ஐ.டி உருவாக்குறாங்க. அந்த ஐ.டில இருந்து பெண்களோட இன்பாக்ஸ்ல தப்பு தப்பா பேசினா போதும், சம்மந்தப்பட்ட ஆளோட இமேஜ் டோட்டல் டேமேஜ்.

ஆக மொத்தத்துல, ஒரு பொண்ண அசிங்கபடுத்தணும்னாலும் சரி, ஒரு ஆணை அசிங்கப்படுத்தனும்னாலும் சரி, பகடைகாயா யூஸ் ஆகுறவங்க பொண்ணுங்க தான்.

ஆனா இப்போலாம் காலம் மாறியாச்சுங்க. பெண்களும் இப்போ தைரியமாகிட்டாங்க. ஒருவேளை நம்மள பத்தியோ இல்ல நம்மோட போட்டோவையோ தப்பா யூஸ் பண்ணினா தைரியமா எதிர்கொள்ளலாம்ங்குற துணிச்சல் அவங்களுக்கு இருக்கு. இன்னிக்கி நிறைய பேர், இந்த மாதிரி பிரச்சனைல மாட்டி, அதுல இருந்து வெளி வந்தும் துணிச்சலா அவங்க போட்டோ போட்டுட்டு இருக்காங்க.

ஐயையோ, அந்த தைரியம் எல்லாம் எனக்கு கிடையாதுமா, நான் என் போட்டோவ போடமாட்டேன் அப்படின்னு பதறி கிட்டே நீங்க இன்னொரு முடிவு எடுக்கலாம். அப்படி என்ன முடிவுன்னு கேக்குறீங்களா?

நம்ம போட்டோ போட்டா தான பிரச்சன, நம்ம குட்டி பசங்க போட்டோ போடலாமேன்னு அப்படின்னு புத்திசாலித்தனமா நினைப்பீங்க. அதுவும் நம்ம வீட்ல பொம்பள புள்ளைங்க இருந்தா நமக்கு பெரும தான். அவங்கள விதவிதமா அலங்கரிச்சு அழகு பாக்குறதோட இல்லாம, இப்போ லேடஸ்ட் பேஷனா அவங்கள விதவிதமான ஷாட்ஸ்ல போட்டோ எடுத்து அத எல்லாம் பேஸ் புக்ல போட்டு விட்டுடுறீங்க.

சரி, அதனால என்ன, சின்ன குழந்தைகள்னா பல பேரும் ரசிக்கத்தானே செய்வாங்கன்னு கேக்குறீங்க தானே? ஆமாங்க, அந்த போட்டோக்களுக்கு லைக் கொட்டும். வாவ், க்யூட், அழகு செல்லம், அம்முகுட்டின்னு கமண்ட்ஸ் பறக்கும். நமக்கும் ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கும்.

ஆனா இத எல்லாம் மவுனமா ஒரு ஓநாய் கூட்டம் நாக்க தொங்கபோட்டுட்டு கவனிச்சுட்டு இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? உங்க குழந்தையோட போட்டோவில கண்ணியமா ஒரு கமன்ட் போட்டுட்டு அந்த ஓநாய் திருட்டுத்தனமா அந்த போட்டோவ டவுன்லோட் பண்ணலாம். டவுன்லோட் பண்ணது மட்டுமில்லாம அதுக்குன்னே இருக்குற கண்ட கண்ட சைட்டுகள்ல அந்த போட்டோவ அப்டேட் பண்ணும் அந்த கேடுகெட்ட ஜென்மம். இதுக்காகவே அந்த பக்கமாவே சுத்திட்டு இருக்குற பல பிணந்தின்னி கழுகள் உங்க குழந்தையை கொத்திக் குதறலாம், அதுவும் ரொம்ப ரொம்ப வக்கிரமா...

அந்த மாதிரி சைட்ஸ் இருக்கான்னு அதிர்ச்சி எல்லாம் அடையாதீங்க, கண்டிப்பா இருக்கு. இதெல்லாம் வெட்ட வெட்ட துளிர்க்குற காளான் கூட்டங்கள். 

இந்த மாதிரியான சைட்டுகளை பற்றி நாம புகார் பண்ணவே முடியாதான்னு ஏங்குறீங்களா? நாமளால இத எல்லாம் செய்ய முடியாதான்னு தவிக்குறீங்களா, கண்டிப்பா உங்களாலான உதவிய, பங்களிப்ப நீங்க பண்ணலாம். அதுக்கு நீங்க முதல்ல போக வேண்டிய சைட் இது தான் 

ASACP | Association of Sites Advocating Child Protection - Report Child Pornography

இங்க போய் நீங்க நீக்கியே ஆகணும்ன்னு நினைக்குற குழந்தைகள் தொடர்பான பாலியல் சம்மந்தப்பட்ட பேஜஸ் ரிப்போர்ட் பண்ணலாம். 

சரி, உங்களான பங்களிப்ப கண்டிப்பா நீங்க குடுங்க. இப்போ கொஞ்சம் நான் சொல்றத காது குடுத்து கேக்கலாம் தானே....

முதல்ல நாம ஒரு விஷயம் புரிஞ்சிக்கணும். எந்த விஷயமாவும் இருக்கட்டும், எதுக்கெடுத்தாலும் இந்த சமூகத்தையே குறை சொல்லி பழகிட்டோம் நாம. பிரச்சனைன்னு ஒண்ணு வந்தா அடுத்தவங்கள ஈசியா கைகாட்டி பழி போட்டுடுறோம். ஏங்க, நான் தெரியாம தான் கேக்குறேன், இந்த சமூகம்னா என்ன? ஏன், அதுல நாம இல்லையா?

இந்த மாதிரி தவறான நடத்தை உள்ளவங்கள கண்டிக்குறது எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு நம்மள தற்காத்து கொள்ள வேண்டியது முக்கியம் இல்லையா? அதுவும் நம்மோட சந்தோசத்துக்காக, கைதட்டலும் பாராட்டும் வேணும்ங்குரதுக்காக ஒண்ணுமே தெரியாத நம்மோட பிஞ்சு குழந்தைய நாமளே பலியிடலாமா?

மறுபடியும் சொல்றேன், இத சரி பண்ணவே முடியாதான்னு கேட்டீங்கனா, போராடலாம், நம்மால முடிஞ்ச அளவு போராடலாம், ஆனா நாமளே அந்த பிணந்தின்னி கழுகுகளுக்கு இரை போடக் கூடாது. நான் சொல்றது புரிஞ்சுதுன்னா நல்லதுங்க, இல்லனா அனுபவிச்சு தெரிஞ்சுக்கோங்க. ஏன்னா அனுபவத்த விட சிறந்த ஆசான் வேற யாரும் கிடையாது பாருங்க...

பிஞ்சு குழந்தைகளை எட்ட நின்னு பூவாகவே பாத்து மகிழ்வோம், பறித்தும் கொடுக்க வேண்டாம், நுகர்ந்தும் பாக்க வேண்டாம்...

நான் தெளிவா இருக்கேங்க... நீங்களும் தெளிவா இருந்தா சந்தோசம்...

 

6 comments:

  1. மிக்க நன்று
    தங்கள் தளத்தை http://tamilsites.doomby.com/ என்ற Directory இல் இணைத்துத் தமிழுக்கு உதவுங்கள்.

    ReplyDelete
  2. அவசியமானதொரு விழிப்புணர்வு கட்டுரை. அந்த லிங்கை நான் சேவ் செஞ்சுக்கிட்டேன். அவசியப்பட்டால் உபயோகிச்சுக்குறேன்.

    ReplyDelete
  3. நல்ல பதிவுக்கு நன்றி...

    ReplyDelete
  4. // பிணந்தின்னி கழுகுகளுக்கு இரை போடக் கூடாது... // இதை அறிந்து கொண்டால், அந்த இணைப்பு தேவையில்லை... போராட்டமும் தேவையில்லை...

    ம்... அறியாதவர்களுக்கு இணைப்பு உதவலாம்...

    ReplyDelete
  5. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  6. அனைவரும் அறிய வேண்டியது...நன்றி!

    ReplyDelete