Tuesday 5 November 2013

சொல்லத் தெரியா மனசு...

வாய்விட்டு கதறமுடியாத வலிகளோடு
என் இரவுகளை கடத்துவதென்பது
இப்பொழுதெல்லாம் எனக்கு வாடிக்கையாகி விட்டது...

அர்த்தமற்றதாய் சில இரவுகள்
தனிமைக்குள் தள்ளி விட்டு
என்னை வறுத்தெடுக்கின்றன...

துணைக்கு சில போதை வஸ்துக்களின் கூட்டணி,
என்னை ஆண்டு விட
எப்பொழுதும் தயாராகவே இருக்கின்றன...

இயலாமையின் கோரப்பிடிக்குள்
கொக்கியிட்டு கொண்டதாலோ என்னவோ
இன்றென்னை அவை ஏகபோகமாய்
சுகித்து விட போட்டியிட்டு நெருங்குகின்றன...

உதடுகள் உன்னை தான் உச்சரிகின்றன...
மனமோ இரு கரம் நீட்டி
உன்னிடத்தில் அடைக்கலம் தேடுகிறது...

ஓ... வென கூச்சலிடும் நெஞ்சை
எதுவுமே கேட்காமல்
உன் மாரோடு அணைத்துக்கொள்ள மாட்டாயா என்ற
எதிர்பார்ப்பு - எனக்குள்
திக்குத்திசை அறியாமல் அலைந்தோடுகின்றது....

கோர்வைகளே இல்லாத வெற்று கேவல்கள்
தொண்டைக்குளேயே வெளியிடப்படாமல்
கருக்கலைப்பு செய்யப்படுகின்றன...

இறுதி தருணத்தில் என்னை
ரட்சித்து விட மாட்டாயாயென ஆவேச உந்தல்
எட்டிப்பார்த்து சோர்ந்து அடங்குகிறது...

என்றோ அவை என்னை வென்று
நீ எனக்கு அடிமையென கொக்கரித்ததும் உண்டு...
அன்றெல்லாம் சபதமெடுத்து கொண்டிருக்கிறேன்,
மீள்வேன்... மூழ்கிட மாட்டேனென...

கண்கள் தானாய் சொருகி கொள்கின்றன...
இந்த முறை நான்
உன்னோடு பயணிப்பது போலான கனவு...
விடுபட என் சிறகுகள் துடிக்க வில்லை...
இப்படியே... கனவாய் உறைந்து விடுகிறேன்,
உனக்கே தெரியாமல்...

16 comments:

  1. படிக்கையிலேயே கவிதையுடன் நானும் கரைந்து விட்டேன் பட்டாம்பூச்சி! அசத்தறீங்கம்மா...!

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ்... இந்த மாதிரி தருணங்கள் எல்லாரோட வாழ்க்கைலயும் வரும் தானே

      Delete
  2. Replies
    1. தேங்க்ஸ் கவிதைன்னு ஒத்துகிட்டு அத ரசிச்சதுக்கு

      Delete
  3. wow arputhamaa elithirukinga nice !!

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் ரசிச்சதுக்கு

      Delete
  4. ஆழ்மன ஏக்கத்தை வெளிப்படுத்திய வரிகள். இறுதியில் அருமை.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ்... உங்களோட வாழ்த்துகள் தான் இன்னும் என்னை எழுத தூண்டும்

      Delete
  5. உணர்வுகளை...
    உணர்ந்து
    எழுதிய பதிவு...
    அருமை...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் சில நேர உணர்வுகள் இப்படியாகவும் அமைந்து விடுது

      Delete
  6. வணக்கம்
    ஏக்கத்தின் நினைவுகளை வெளிப்படுத்திய விதம் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு தேங்க்ஸ்

      Delete
  7. ரொம்ப வலி நிறைந்த வார்த்தைகள்... சின்ன குழந்தையின் ஏக்கம் போல

    ReplyDelete
    Replies
    1. ஏன், அப்போ நான் சின்ன குழந்தை இல்லையோ? அவ்வ்வ்வ்

      Delete
  8. Replies
    1. இங்க கமன்ட் தானே போடணும், அத விட்டுட்டு ம்ம்ம்ம் னா என்ன அர்த்தம்...

      Delete