Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, 25 August 2016

வெறும் முத்தமென்று நினைத்தாயா?





அதை வெறும் முத்தமென்று நினைத்தாயா?

என் கோபம், வெறுப்பு,
ஆற்றாமை அத்தனையையும்
கூர்முனை கொண்டு குத்தி கிழித்து விட்டது...

உன் முத்தம் ஒவ்வொன்றாய் என்னை
சேர்ந்த பொழுது நான்
சில்லு சில்லாய் உடைந்து கொண்டிருந்தேன்...

முத்தமிட்டு நீ அப்பால் சென்றதும்
ஓ-வென நான் வெடித்து சிதறியதை
நீ அறிவாயா?

என் உணர்வுகள் கட்டப்பட்டுள்ளன...

என் கண்கள் பொய்யாய் மலர
கற்றுக் கொண்டுள்ளன...

உன் முன் எவ்வகை உணர்வை
காண்பிப்பதென்ற எந்த தெளிவையும்
எடுக்க முடியாதவளாய் நான்
சித்தம் கலங்கி நிற்கின்றேன்...

உன்னிடம் கேட்பதற்கோ என்னிடம்
ஏராளமாய் கேள்விகள்
கொட்டிக் கிடக்கின்றன...

கண்சிவந்து கோபப்பார்வை பார்த்து
நான் அவற்றையெல்லாம் உன்
கண்பார்த்து கேட்க வேண்டும்...

ரவுத்திரம் கொண்டு உன்னை
அடித்து தாக்கும் ஆத்திரமெனக்கு...

இருந்தும் என்ன பயன்?

என் கண்ணீரின் காரணகர்த்தாவாகிய
நீ தான் இந்த முத்தங்களையும் இட்டு சென்றாய்...

உன் மேல் நான் கோபமாய் இருக்கிறேன்...

உன் தலை மயிர் பற்றி
உன்னை ஆவேசமாய் பிடித்து தள்ள வேண்டும்...

என் கோபங்கள் அத்தனையும் சேர்த்து
உன்னோடு மல்லுகட்ட வேண்டும்...

ஆவி சேர அணைத்து உன்னை
முத்தத்தாலயே சாகடிக்க வேண்டும்...

எத்தகைய கொடுங்கோலன் நீ?

செய்வதெல்லாம் செய்து விட்டு
ஒரே ஒரு முத்தத்தால்
மொத்தமாய் என்னை வீழ்த்தி
மீண்டுமென்னை பேதையாக்கி விடுகிறாய்...

இருக்கட்டும்...

இந்த முத்தங்களின் போதை தெளியட்டும்...

நான் கோபமாய் வருகிறேன்,
இரு கைகள் கொண்டு கன்னம் பொத்தி 
உன்னை மீண்டும் சந்திக்க....

Saturday, 13 August 2016

அந்திம ஆசைகள்



அந்திம காலம்
நெருங்கி விட்டதை
புத்தி உணர்த்திக் கொண்டே இருக்கிறது...

உன்னைப் பார்க்காமலே என்
இறுதி யாத்திரை துவங்கி விடுமென
எச்சரிக்கை மணி
ஒலிக்கத்துவங்கி விட்டது...

அன்றொரு நாள்
நான் கண்ட கனவொன்றை உனக்கு
நினைவுறுத்த விரும்புகிறேன்...

என்னை காண வந்து என்
கல்லறையை நீ வருடி விட்டது
போலமைந்த கனவு அது...

உன் கண்களில் ஈரம் துளிர்த்ததாவென்ற
தெளிந்த சித்திரம்
என்நினைவிலில்லை...

ஆயினும் நீ
அழுதிருக்க கூடும்...

நீர்கோர்த்து வீங்கிருக்கும்
என் விரல்களை சற்று
எட்டிப்பாரேன்...

நீ வருடிய விரல்களே தான்.
ஏனோ திறன்களற்று ஏக்கத்தோடு
மீண்டும் உன் கை வருட
காத்துக் கிடக்கின்றன...

ஒரு வேளை நீயென்னை
மீண்டுமொருமுறை சந்திக்க
நேராமலே கூட போகலாம்.

அன்றென் கடைசி ஏக்கம்
எதுவென அறிந்து கொள்ள நீ
தவிப்பாயென தெரியுமெனக்கு...

இதோ உயிலினை போல்
உனக்காக இங்கென் ஆசைகளை
செதுக்கி வைக்கிறேன்.

உன்னை மீண்டும் மீண்டும்
கண்டுவிட வேண்டுமென்ற
பேராவல் எனக்கு...

ஆவி கலங்க சேர்த்தணைக்க வேண்டுமுன்னை...

பின்பு பெருங்குரலெடுத்து ஒரு அழுகை...

என் மொத்தமும் நீ தானென
உன்னோடு ஒரு வாழ்க்கை...

உன் கண்கள்....
உன் உதடுகள்...
உன் விரல்கள்...
உன் மார்பு...
உன் இதழ் முத்தம்...
மொத்தமாய்...

Monday, 4 April 2016

ஐ லவ் யூ பார்த்தி




இந்த புகைப்படத்த பாரு பார்த்தி,

எவ்வளவு பிரகாசம் படர்ந்திருக்கு
அந்த முகங்கள்ல...

நீயே எல்லாமும்னு
சரணாகதி அடைஞ்ச
தருணங்கள் பார்த்தி அதெல்லாம்...

உன் முகத்தைக் கூட பாரேன்...

எத்தனை கம்பீரமான புன்னகை
உன்னோடது...

என்னோட கண்கள பாத்தியா?

ஒரு குறும்பு சிறுமியோட குறுகுறுப்பு
தெரியுதுல அதுல...

நீ என் கைமேல படுத்துருக்க...
நான் உன் நெஞ்சோடு
படுத்துருக்கேன்...

அதுவும் உன்னையே
விழுங்குற மாதிரி பாத்துட்டு...

இந்த தருணத்த
பொய்ன்னு சொல்றியா பார்த்தி...

இது எல்லாமே
நடிப்பும் நாடகமும் கலந்ததுன்னு சொல்றியா?

வலிக்குது பார்த்தி,
ரொம்ப வலிக்குது பார்த்தி...

எழுத எழுத
தீரவேப்போறதில்ல பார்த்தி...

ஆறாத ரணமா கெடந்து
கொஞ்சம் கொஞ்சமா
என்னை கொல்லுது பார்த்தி...

எத்தன முறை யோசிச்சாலும்
ஒண்ணே ஒண்ணு மட்டும் தான்
புரியுது பார்த்தி...

ஐ லவ் யூ பார்த்தி....

Saturday, 26 March 2016

அன்பின் மிச்சமென கொள்க...




அந்த வாழ்த்தட்டையின்
உள்ளிருந்து கிளம்பிய ஒலி
இன்னமும்
ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது...

பார்த்தி,
எப்பொழுதேனும் உனக்கு
நினைவிற்கு வருகிறதா?

இந்த ஒலி அடங்கும் மறுநிமிடம்
உன்முன் நிற்பேன் என்றாய்...
ஒலி அடங்கி ஒரு ஏமாற்றத்தை
ஜீரணிக்க முடியாதென்பதாலோ என்னவோ
இன்னமும் அதை மாரோடு அணைத்திருக்கிறேன்...

குறுகுறுவென என் கண்களை
பார்த்தவாறே சட்டென
இழுத்தணைத்து நீயிட்ட முத்தம்
எத்தகைய நேசத்தை
வெளிப்படுத்தியது என்பதை
நீ அறிவாயா?

உலகம் மறந்து,
உற்றார் மறந்து,
சுற்றம் மறந்து,
அன்பை மட்டுமே
ப்ராதனப்படுத்திய தருணங்கள் அவை...

அந்த அன்பை உதறி
வெறுப்பை உமிழ்ந்து
அத்தனையையும் பெற்றுவிடலாமென
எந்த காலக்கோட்டில் எழுதி வைத்த விதியென 
விளக்கிடுவாயா நீ...

பார்த்தி,
எதுவும் பொய்யில்லை...
இதோ நீ பற்றிய விரல்,
நீ எழுதி முத்தமிட்ட உன் பெயர்...
எல்லாமுமாய் நீயிருக்கிறாய்...

இவளிடத்திலிருப்பது இவளில்லை...
பார்த்தி விதைத்து சென்ற அன்பின்
மிச்சமென கொள்க...


.

Thursday, 21 January 2016

உன்னைத் தேடித் தேடி...




செவ்வானம் சிவந்துக் கொண்டிருக்கிறது...

தூரக் கிழக்கில்
உன் சாயலொத்த மேகம் நகர்வது
எனக்குள் ஆற்றொண்ணா நினைவுகளை
உள்ளக்கிடக்கையில் சேமித்து விடுகிறது...

அந்திம நேரத்தில் தான்
உன் வரவிருக்கும் எப்பொழுதும்...

ஒரு தேவனைப் போல் நீ
என் முன் தோன்றுவாயென
வழி மேல் விழி வைத்துக்
காத்துக் கிடப்பேன்...

உன்னைத் தேடித் தேடி
களைத்துப் போன கண்களை பின்னாலிருந்து
பொத்திக் கொள்வதில் அப்படி
என்ன பேரானந்தமோ உனக்கு...

அடப்போடா, என்று தான் உன்
நேரடி தரிசனம் கிட்டுமெனக்கென
சலிக்கவிட்டு பெரிதாய் சிரித்துக் கொள்வாய்...

ஆனாலும் கோர்த்துக்கொள்ளும்
கைகளில் மெய்மறக்கச் செய்துவிடும்
வித்தையை ஒளித்தே வைத்துள்ளாய்...

அதனால் தானோ என்னவோ
உன்னையன்றி வேறெதுவும்
நினைவுகளில் படிவதாயில்லை...

உனக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ,
அன்றைய பொழுதின்
சரணாகதி இன்னமும்
மிச்சமிருக்கிறது எனக்குள்...

நின்னை சரணடைந்தேனென்ற உன்
வார்த்தைகள் மட்டுமே
நினைவுச் சுழலின் அடுக்ககங்களை
ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது...

ஆதியும் அந்தமுமாய்
என்னைத் தொலைத்து விட்டு
முடிவிலா ஒளிப்பேழைக்குள் உனக்காகவே
காத்திருப்பது இப்பொழுதெல்லாமெனக்கு
வாடிக்கையாகி விட்டது...

அதோஅங்கேப்பார்
மீண்டும் செவ்வானம்
சிவக்கத் துவங்கி விட்டது...

Wednesday, 13 January 2016

கனவொன்றின் நிஜம்



அந்த கனவென்னை துரத்திக் கொண்டேயிருக்கிறது.
காற்றிலும் வேகமாய் ஓடிக் கொண்டிருக்கிறேன்...
ஆம், அவனென்னைப் பார்த்து விடக் கூடாது.

அவன் கண்களில் நான் பட்டுவிட்டால்
சர்வ நிச்சயமாய் எல்லாம்
முடிவுக்கு வந்து விடும்...

தெய்வீக காதலென்ற
கூற்றுகள் உடைபட்டு
அத்தனை பிரியங்களும்
சிதறிவிடக் கூடும்.

அவன் நெருங்கி விட்டதாய்
உள்ளுணர்வு சொல்கிறது.
இல்லை, இல்லவேயில்லை,
எப்படியாயினும் தப்பித்துவிட வேண்டும்...

நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன?

காலடித் தடம் நெருங்கி வருகிறது...
அய்யோ, அவ்வளவே தானா?
என்னைப் பார்த்த நொடி
வெறுத்து விடுவானா?
இல்லையில்லை,
அதிர்ச்சியில் உறைந்து விடுவான்...

இவ்வளவு தானா நீ?
ஏமாற்றுக்காரியென
அவன் கண்கள் வெறுப்பை
உமிழ்ந்து கனலும்...

கண்கள் உறைய, அடுத்தது நடப்பது
என்னவென்று அறியாது
மயங்கி சரிந்த வேளையிலே தான்
அது சம்பவித்தது...

இதெப்படி சாத்தியம்?
யாதொரு முகச்சுளிப்போ சந்தேகமோ இல்லாது
மனம் முழுக்க காதலாய்
அவனென்னை தூக்கிச்
சுமந்துக் கொண்டிருக்கிறான்...

அதிர்ச்சியில் உறைந்து விட்ட நான்
வெகு அசட்டையாய் மறந்து விட்டிருந்தேன்,
நான் கண்டுக் கொண்டிருப்பது
கனவென்று...

Tuesday, 22 December 2015

உன்னை மட்டுமே


அத்தனை வடுக்களையும்
தாங்கிக் கொண்டிருக்கிறேன்...

புரையோடி போயிருந்த நேரத்திலெல்லாம்
உன் தோள் சாய்ந்து
ஒரு புன்னகை உதிர்க்க
முடிந்திருந்த என்னால்
இன்று வடுக்களாகிப் போன
இத்தடங்களை பார்த்து
கண்ணீர்விடவே முடிகிறது...

ஆறாக்காயமொன்று இதயத்துள்
அறுத்துக் கொண்டிருக்கிறது...
இச்ஜென்மம் பத்தாத தாகமாய்
ரணம் வேண்டுமென்று பெருங்குரலெடுத்து
பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்...

கத்தியின் கூர்மையை
ருசி பார்க்கவேண்டும்...
ஓலமாய் வெளிப்படும் காற்றலை
உன் பெயரையன்றி
வேறெதை தாங்கி வரும்?

வலிகள் புதியதல்ல...
இருந்தும்
கண்கள் குளமாகும் தருணங்கள் அத்தனையிலும்
உன்னை மட்டுமே நிரப்பிக் கொள்கிறேன்...

உன்னை மட்டுமே...


.

Saturday, 14 November 2015

அனுமதி வேண்டும்



மனம் உன்னைத் தான் தேடிக்கொண்டிருக்கிறது...
உதடுகள் இல்லையென்று
பொய் கூற துடித்துக்கொண்டிருக்கின்றன...

உன் ஈரத்தின் பாரம் தாங்காமல்
உன்னிடமே குடை சாய்கிறதென் மனம்.

உன்னோடு கொஞ்சம் கரம்கோர்த்து
பாரம் குறைக்கவாயென்று கேட்கத்துடிக்கும்
மனதிடம் ஏதேதோ சொல்லித்
தட்டிக்கழிக்கப் பார்க்கிறேன்...

தானே சுரந்து நிற்கும் கண்களுக்கு
அணை போடும் வழியென்னவென்று
உன்னிடத்தில் ஒரு பதிலிருக்கலாம்...

எப்படி கேட்பதென்று தெரியவில்லை
ஆயினும் கேட்டுத்தான் ஆக வேண்டும்...

இல்லையில்லை, கேள்விகள் பயனற்றவை...
அதற்கான பதில்களும் அவசியமற்றவை...

கொஞ்ச நேரம் உன்னோடு மவுனித்திருக்கிறேனே...
அனுமதி கிட்டுமா?

Tuesday, 27 October 2015

அட பைத்தியக்காரா...



அதோ அந்த படித்துறையில்தான்
கால்கள் நனைந்தபடி கைக்கோர்த்திருந்தோம்...

கொஞ்சம் புன்னகை,
கொஞ்சம் வெட்கம்,
நிறைய காதலுமாய்
சிணுங்கிக் கொண்டிருந்தேன்...

என்னை உனக்கு எவ்வளவு பிடிக்குமென்றால்
சிறு குழந்தைப் போல் கைவிரித்து
இவ்வளவு பிடிக்குமென்று சொல்லிவிடுவேன் தான்...

ஆனால் நீயோ
படங்கள் வரைந்து பாகங்கள் குறி
என்பதுபோல் தனித்தனி பட்டியலிட சொல்கிறாய்.

எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும்
முறைப்பையன் தான் கண்முன் வருகிறான்...
நானென்ன செய்வது?
பார்த்தாயா பார்த்தாயா கோபித்துக் கொள்கிறாய்...

அடப் போடா பைத்தியக்காரா
காதல் என்ன கணக்கு பரிட்சையா?
ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்துவதற்கு?

ஒரு திருட்டுப் பூனையின்
அத்தனை குணாதிசயமும்
உன்னிடத்தில் உண்டு.
மொத்தமாய் திருடிக் கொண்டாலும்
கோபிக்கவே முடிவதில்லை உன்னிடம்.

இதோ பார்த்தாயா?
தன்னந்தனியாய் உன் பெயரை
புலம்ப வைத்துவிட்டு
ரகசியமாய் சிரித்துக் கொள்கிறாய்.

ஒன்றும் விளங்கவில்லை போடா
நம் காதலைத் தவிர....

Saturday, 12 September 2015

யாதுமாகியவன்


அந்தப் பாடல்
என் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது...
பகலில் கூட வானத்தை
வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

விம்மி முட்டி வெளிவரத் தயங்கிய கண்ணீரை
அணையுடைத்து வெளிக்கொண்டு வந்தவன்
ஒரு நாள் இதே வானத்தின் சாட்சியாய்
என் கைப்பற்றிக் கிடந்தான்...

அது ஒரு மொட்டை மாடியென்று
உங்களுக்கு சொல்லத் தேவையில்லை...
நிலாவெளிச்சத்தில் எங்களை
ரசித்துக் கொண்டிருந்த அந்த தென்னங்கீற்றுகள்
ஏற்கனவே உங்களுக்கு சாட்சி சொல்லியிருக்கும்...

யாரவன் உனக்கு?
இப்படி திடீரென ஒரு கேள்வியை
உங்களிடமிருந்து எதிர்க்கொண்டால்
நிச்சயம் திணறித் தான் போவேன் நான்...

யாதுமாகியவன் என்று ஒற்றை வார்த்தையில்
முடித்துக் கொண்டால்
புரிந்து கொள்வீர்களா என்ற ஐயம் எனக்கு...

ஏனென்றால் ஒரு தெய்வீக காதலனை நீங்கள்
உங்கள் கற்பனையில்
உருவகித்துவிடக் கூடாது பாருங்கள்...

இவன் என் சண்டைக்காரன்.
முணுக்கென்று கோபம் கொண்டு
நான் விட்டெரியும் தலையணைகளை
அலட்சியமாய் பிடித்து வெவ்வெவே என்பான்...

எதிர்வீட்டு பெண்களுக்கு கண்ஜாடை காட்டிவிட்டு,
என்னைக் கண்டதும் ஓடி ஒளிந்துக் கொள்வான்.
காது பிடித்து திருகினாலோ
பவ்யமாய் அப்பாவி முகம் காட்டுவான் கிராதகன்.

காட்டுக்கத்தலாய் நான் கத்திக் கொண்டிருக்கும் பொழுது
படக்கென்று ஒற்றை முத்தத்தால்
என்னை ஊமையாக்கிவிடும் பாதகன்...

என் பிசாசு, எருமை மாடு, கொரங்கு, ஹிப்போபொட்டாமஸ்...
இன்னும் இன்னும் நிறைய...

மற்றொரு நாள் இவன் யாரென்று கேட்டால்
என் பிள்ளை என்பேன்.
அவனோ என்னை குழந்தையாக்கி
தாலாட்டு பாடிக் கொண்டிருப்பான்...

இதோ அந்த பாடல் இன்னும் தொடர்ந்துக் கொண்டேதானிருக்கிறது...
"நான் உனை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழுமிந்த சொந்தம்...



.

Thursday, 20 August 2015

பொறாமைகளின் இரவு


மழைத்துளிகளாய் மனம்
குதூகலிக்கிறது பார்த்தி...

இன்று நீ வரப் போகிறாய்...
அதுவும் நீண்ட ஒரு பிரிவுக்கு பின்...

காதுகளை தீட்டி வைத்துள்ளேன்
சருகுகளின் மேல் விழும்
சாரலின் லயம் மீறி
உன் காலடி ஓசை கேட்குமென்று...

அப்பப்பா, இந்த இரவுக்கு தான்
எத்தனை பொறாமை என்னோடு...
பாரேன், உன்னை கண்ணில் காட்டுவேனா என்று
கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது...

பார்த்தி, சில்வண்டுகள் கூட
சிலுசிலுத்து அடங்கி விட்டன...
அதோ அந்த பன்னீர் ரோஜா
உனக்காகவே இரவில் மலர்வதாய்
சபதம் பூண்டிருக்கிறது...

வந்து விட்டாயா பார்த்தி,
இரு, இரு, அப்படியே
முன்னால் வந்து நிற்காதே...

கொஞ்சம் ஒளிந்து கொள்...
உனக்கான இந்த இரவின் தவிப்பை
இன்னும் கொஞ்சம் அனுபவித்துக் கொள்கிறேன்...
நீயும் ஆசுவாசப் படுத்திக் கொள்...

அதன்பின் அதோ,
அந்த மழைத்துளிகள்
பன்னீர் ரோஜா,
சில்வண்டுகள்,
அடர் இருள் அத்தனையும்
பொறாமையால் பொசுங்கட்டும்...

Wednesday, 22 July 2015

பட்டாம்பூச்சிகள் பேசுவதில்லை




நீண்டு நெடிந்து கிடக்கும்
மலைப்பாம்பை போல தான்
இருண்டிருக்கும் இரவு
என் மொத்த உணர்வுகளையும்
விழுங்கி விட்டு அசைவற்று கிடக்கிறது.

பாரமாய் அழுத்திக் கொண்டிருக்கும்
இந்த கற்பாறை
உன் ஒரே ஒரு அணைப்பினில்
துகள்களாய் காணாது
போய் விடவும் கூடும்.

இருந்தும்
உன் கண் பார்க்கத் தயக்கம்
உன் மடி சாயத் தயக்கம்
எல்லாத்துக்கும் மேலாய்
மடைதிறந்து கண்ணீர்விட்டு
அழுது விடத் தயக்கம்.

நீ சொல்வதைப் போல்
சோகங்களை தூக்கி சுமக்க
எனக்கு பிடித்திருக்கிறது போலும்.

இதோ இந்த பட்டாம்பூச்சி
தன் இறகுகளை நெருஞ்சிமுள் வைத்து
துளையிட்டுக் கொண்டிருக்கிறது.

காரணங்கள் கேட்டு விடாதே
சொல்லத் தெரியாது
முக்கியமாய்
பட்டாம்பூச்சிகள் பேசுவதில்லை.

Wednesday, 22 April 2015

வண்ணங்கள் நிறைந்த நாட்கள்



எந்த புள்ளியிலிருந்து தொடங்குவது என்றெல்லாம் தெரியவில்லை.. ஆனால் தொடங்கிவிட்டேன். தென்னங்கீற்றுகளின் சாட்சியாக... நான் காயத்ரிதேவி. இப்படி ஒரு பெயரால் உங்களிடம் அடையாளப்பட்டுக் கொண்டவள்..

மரங்கள், அணில்கள், வண்ணத்துப்பூச்சிகள், மீன்கள், கிளிகள், நந்து, தேவதைகளுக்குப் ஆண்பாலாக வாய்த்திருக்கும் அப்பா என்ற என் உலகம் அத்தனையும் பேரன்பால் சூழப்பட்டதென்று நீங்கள் அநேகமாய் அறிந்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் அறியாத ஏதோ ஒன்றிலும் இல்லை இல்லை ஒவ்வொன்றிலும் நான் இருக்கின்றேன்.

இதோ நகர்ந்துபோன இந்த நொடிகளைக் கூட உணர்வுகளால் கடத்திப் போகும் மாயவித்தையை இந்த கவிதைகளில் மட்டுமே நான் கண்டடைந்திருக்கின்றேன். என் உலகை அம்மாவுக்கு முன் அம்மாவுக்குப் பின் என்று இரண்டிரண்டாய்ப் பிரிக்கலாம்... செல்லமாய்க்கிள்ளி என்பிள்ளை என்று வாரியெடுத்து முத்தமிட்ட தாயின் கன்னத்து எச்சிலைத் துடைத்து போம்மா என்று தூக்கக் கலக்கத்தில் வீராப்புக்காட்டும் சிலுப்பட்டைக்காரியாக வாழ்ந்த நாட்கள்... வண்ணங்கள் நிறைந்தவை..

அம்மாவுக்குப் பிறகான நாட்களை அத்தனை வலிகளோடு கடந்திருக்கிறேன்... வலிகள் என்றால் உச்சரிக்கின்ற வெறும் வார்த்தை அல்ல, ஒவ்வொரு இழையாகக்கீறி மறுபடி இழைத்து என்னை நெய்தது போல மரணங்களைத் தொட்ட நாட்கள் அவை. பின்னே வான்முட்டப் பறக்க சிறகுகளை வளர்த்துக்கொள்ள சுதந்திரப்படுத்தப்பட்டேன்.

கூட்டுப்புழுவுக்குச் சுதந்திரம் பிடிக்குமென்று நாம் கற்பித்துக் கொண்டிருக்கின்றோம்... எதுவுமற்ற பிரபஞ்சத்தில் எல்லாமுமான சுதந்திரத்தில் நிரம்பி இருக்கும் வெறுமையை நீங்கள் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் பயமொன்று கவ்விக் கொள்கிறதா இல்லையா.. அப்படி என்னைக் கவ்வின பயத்தை நான் மெல்ல மெல்ல தடவிக்கொடுத்து நான் சொன்னது கேட்கும் நாய்க்குட்டியாக்க கொஞ்சம் அன்பைப் பொழியவேண்டியதாய்ப் போனது...

அதன்பின்னான நாட்களில் எனக்கு பயங்கள் இல்லை... ஆனால் ஏதோ ஒன்றை இழந்த வெற்றிடத்தை எதைக் கொண்டு நிரப்பினாலும் இன்னும் இன்னுமென அடம்பிடிக்கத் துவங்கிய மனதுக்கு ஏதோ உரு ஸ்திரமான பிடி தேவையாக இருந்தது. அந்நாளில் தான் என்னுள் மொத்தமாய் ஒருவன் நுழைந்து என் வெற்றிடங்களில் எல்லாம் தன்னை நிரப்பிக்கொண்டான்.

அவன் திமிர், பரிச்சயம், வலிகள், கோபம், நட்பு, அன்பு, பேரன்பு என எல்லாமுமாய் நிறைத்துவிட்டான்.. வெள்ளியுதிரும் வரைக்கும் கதைசொல்லியாகி மறத்துப் போன விழிகளுக்கு உறக்கம் கொடுத்தான். போதும் இனி அள்ளிக்கொள்ள என் கைகள் பத்தாது என்று சொல்லும் வரைக்குமாய் கை நிறைய அன்பைக் கொடுத்தான். அவன் தோள்கள் எத்தனை சுகமானது... அதனால் தான் தோழனென்ற வார்த்தை கூட அழகாகப் படுகிறதோ என்னவோ...

அன்பின் நிமித்தம் என்னையே முழுமொத்தமாய்த் தாங்கித் திரிந்தவன்.. எல்லாமுமாகிவிட்ட ஒருநாள் காதலைக் கேட்டபோது ஒரு மொட்டைமாடி நிலவும் சில தென்னங்கீற்றுகளும் மட்டுமே எங்களுக்குள் சாட்சியாகி நின்றன...

அன்பின் ஈர்ப்பில் கரைந்துகொண்டிருந்த என்னை அசட்டையாய்க் கடந்துபோக இயலாத அந்த நண்பன்... இதோ இன்னும் நெருக்குகிறான் இதயத்தின் சப்தங்களை...

இப்போது எங்களுக்குள் காதல் பூத்துவிட்டதாய் ஊர்சொல்லித் திரிகிறது... நெருப்பில்லாமல் புகையாதாமே! உண்மையா இல்லையாவென்று அவனிடமே தான் கேட்கவேண்டும்..

நண்பனாகியிருந்த அவன் நினைவுகள் காதலாகிப் போனபின் ஏற்பட்ட சலனங்களின் மொழிகளை உணர்வுகளாக்கி இங்கே பக்கங்கள் பூராவும் எழுதப்பட்டிருக்கிறது... மீண்டும் வண்ணம் தீட்டப் பட்டிருக்கிறது என் வீடு.

விம்மலான அழுகையும், பின்னே அவன் படுத்துகிற சமாதானமும்... அழவைக்கும் கோபமும்.. தவிக்கவிடும் விலகலும், தேடிவந்து கோர்த்துக் கொள்ளும் கரங்களும், திகட்டத் திகட்டத் தீராக் காதலுமாய்.. நிகழ்ந்த இவ்வுணர்வுகள் எல்லாம்... எனக்குள் நானே எழுதிக்கொண்ட எழுதின இரண்டாம் அத்யாயம்...

அந்த அத்யாயங்களை மீண்டும் வாசித்துப் பார்க்க என் பக்கங்களைப் புரட்டியபோது இழையோடிக் கொண்டிருந்த என் சிநேகங்களுக்குரியவனைப் பற்றிய பாடல் தான் மழையாய் நனைந்துகொண்டிருக்கிறது..

அந்த மழையில் நனைந்த தென்னங்கீற்றுகளின் நுனியில் வரிசைகட்டி நிற்கும் மழைத்துளிகள் தாம் இந்தக் கவிதைகள். கொஞ்சம் விரல்நீட்டி மழைத்துளிகளை சிதறடித்து விளையாடிக் கொண்டிருக்கின்றேன் அத்தனைக் குழந்தைத் தனத்தையும் பத்திரமாய்ச் சேமித்துக் கொண்டபடி.. யார் சொன்னார் இப்போதென் அம்மா என்னருகில் இல்லையென...

......................................................

நான் கொடுத்த அத்தனை இடைஞ்சல்களையும் சிரமமேற்று சின்ன கன்னச்சுழிப்புகளைக் கூட உதிர்க்காமல் புன்னைகையோடு என் கனாக்களுக்குக் காகிதத்தில் வடிவம் கொடுத்த மங்காத்தாவுக்கு...

என் உலகங்களின் ஒவ்வொரு அசைவிலும் சியர்ஸ் சொல்லில் தட்டிக்கொடுத்து மொத்தக் கவிதைகளையும் படித்து அப்படியே தன் உள்ளுணர்வுகளை வார்த்தைகளால் சிந்தி அன்புக்கு அன்பு செய்த செல்வா அண்ணாவுக்கு...


எனக்கான தேசத்திற்குள் என் அன்பை அப்படியே ஏற்றுக்கொண்டு துளியும் களங்கமற்று எனக்கே திருப்பி அளிக்கும் தமிழரசி அக்காவுக்கு...

என்னுடைய பேரன்பு...



என்னைப் பாராட்டத் தெரியாத என்னை நேசிக்கத் தெரியாத என் ப்ரியங்களைப் புரிந்துகொள்ளாத இவ்வளவு ஏன் என் கோபங்களைக் கூட குழந்தைத்தனமாகக் கொள்கிற...

கார்த்திக்கு ஓங்கி மண்டமேலே ரெண்டு கொட்டு....





-இப்படிக்கு பட்டர்ஃப்ளை


(என்னோட "தென்னங்கீற்றுகளின் சாட்சியாக" கவிதை புத்தகத்துல வர்ற என் உரை) 





.

Wednesday, 8 April 2015

தென்னங்கீற்றுகளின் சாட்சியாக...



திடீர்னு ஒரு நாளு அர்த்தராத்திரியில மனசுக்குள்ள ஒரு மாதிரியான ஒரு வெறுமை. என்னடா இது, பிறந்தோம், வளந்தோம்னு ரொம்ப வெட்டியாவே இருக்கோமோன்னு தோணிகிட்டே இருந்துச்சு.

எனக்குன்னு ஒரு அடையாளம் வேணும், அதுவும் சீக்கிரமே வேணும்னு நினச்சப்ப தான் ஏன் நாம எழுதின உணர்வுகள எல்லாம் ஒரு புத்தகமா போட்டு இந்த மக்கள கொலை பண்ணக் கூடாதுன்னு தோணிச்சு.

உடனே சரி, நாம எழுதினதுல காதல் சார்ந்தத தனியா எடுத்து வைப்போம்னு முடிவு பண்ணி கடகடன்னு காதல் கவிதைகள (கவிதைன்னு சொல்றது தப்பு தான், ஆனா வேற என்ன பேரு குடுக்கணும்னு தெரியல) அந்த அர்த்த ராத்திரியில தொகுக்க ஆரம்பிச்சேன்.

ஒரு புக் போட தேவையான கவிதைகள தேர்ந்தெடுத்தாச்சு, அடுத்து என்னப் பண்ணலாம், காசு குடுத்து எல்லாம் நம்மால புக் போட முடியாதேன்னு ஒரே யோசனை...

ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ம்ம்ம்-ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, உங்க கவிதைகள புக்கா போட்ரலாம்ன்னு மங்காத்தா சொல்லிட்டே இருப்பார். அவருக்கு "நான் புக் போட ரெடி, இதெல்லாம் தான் நான் புக்ல போட தேர்ந்தெடுத்த கவிதை. எப்போ புக் வெளி வரும்னு ஒரு மெயில் தட்டி விட்டேன்...

அப்புறம் என்ன, அடுத்த நாள்ல இருந்து மளமளன்னு வேலை ஆரம்பிச்சாச்சு...

பப்ளிஷர்க்கு கால் பண்ணி, நான் அஞ்சு பைசாக் கூட தர மாட்டேன், எனக்கு மார்கெட்டிங் பண்ணத் தெரியாது, அதனால ஒரு புக் கூட என்னால விக்க முடியாதுன்னு சொன்னேன். அதனாலென்ன, எல்லாம் நான் பாத்துக்குறேன்னார்... நமக்கு அந்த வார்த்த போதாதா என்ன?

நம்மகிட்ட மாட்டிகிட்டவர சும்மா விட முடியுமா, அடுத்து, ஒவ்வொரு கவிதைக்கும் படம் போட்டு டிசைன் பண்ணுவோமான்னு கேட்டேன். பாவம், அவரும் சரின்னு தலையாட்டினார்.

இப்ப புக் கலர்ல பிரிண்ட் ஆகுறதா முடிவாகிடுச்சு. வெறுமனே ஒரு படத்த எடுத்து கவிதை மேல போடுறதுல எனக்கு விருப்பம் இல்லாததால நானே படங்கள தேர்வு செய்து, இந்த கவிதைக்கு இது தான் படம்னு முடிவு பண்ணி டிசைன் பண்ணினேன்...

எல்லாமே நல்லா தான் போயிட்டு இருந்துச்சு, அடுத்து கவிதை பிரிண்ட் பண்ணப்பட வேண்டிய பேப்பர் சாதரணமா இருந்தா நல்லாயிருக்காதேன்னு அதையும் பளபளப்பா குடுக்குறதா முடிவு பண்ணியாச்சு. பப்ளிஷர் அதுக்கும் தலையாட்டுறார்... எனக்கு கோவில் ஆடு ஏனோ நியாபகத்துக்கு வந்து தொலைக்குது...

சரி, அடுத்து இந்த அணிந்துரை, கருத்துரை எல்லாம் இருக்கே யார் கிட்ட கேக்குறது?

எனக்கு செல்வா அண்ணா, கார்த்திக், தமிழரசி அக்கா மூணு பேரும் தான் நியாபகத்துக்கு வந்தாங்க.

கார்த்திக் கிட்ட கேக்கலாம், ஆனாலும் ஒரு பயம். திட்டி விட்ருவாரோன்னு. தயங்கி தயங்கி கேட்டேன். எழுதி தரேன்னு சொன்னார், ஆனாலும் அடுத்த நேரம் பேசும் போது கவிதை புக் எல்லாம் நீ போடுறது வேஸ்ட்ன்னு சொன்னார். சரி தான், அப்ப இவர் எழுதிக் குடுக்குறது சந்தேகம் தான்னு முடிவு பண்ணிட்டேன்...

பேஸ்புக்ல எழுத ஆரம்பிச்ச காலங்கள்ல செல்வா அண்ணா என்னை தட்டிக் குடுத்துருக்கார். இவர் மட்டும் அணிந்துரை எழுதி தந்தா "ஆத்தா நான் பாசாயிட்டேன்"ன்னு எகிறி குதிக்கலாம். ஆனா அண்ணாவுக்கு நேரம் இருக்குமா, அப்படியே நேரம் இருந்தாலும் நம்ம எழுத்தெல்லாம் அவர் ரசிக்குற மாதிரி இருக்குமான்னு எல்லாம் பயங்கர சந்தேகம். ஆனாலும் அண்ணா, நான் ஒரு கவிதை புக் போடப் போறேன், அணிந்துரை எழுதித் தருவீங்களான்னு கேட்டுட்டேன். அதுக்கென்ன தங்க்ஸ், உடனே எழுதி தரேன்னு அவரும் சொல்லிட்டார்.

அப்புறம் தமிழரசி அக்கா. எங்கடா போனாங்க இவங்கன்னு பேஸ்புக் முழுக்க வலைவீசி தேடிட்டு இருக்கேன். அவங்க வாட்ஸ் அப் நம்பர கூட நான் தொலைச்சுட்டேன் (இந்த வாக்கியம் அக்கா கண்ணுல பட்டுரக் கூடாது அவ்வ்வ்வ்). திடீர்னு ஒரு நாள் ஒரே பட்டாசு வெடிக்குற சத்தம். யாருடா இதுன்னு பாத்தா அட, நம்ம அக்கா... ஓடிப் போய் அவங்க இன்பாக்ஸ்லயும் நான் புக் போட போற விசயத்த சொல்ல அவங்களும் சந்தோசமா எழுதித் தரேண்டான்னு சொல்லிட்டாங்க...

ஆக, இப்ப செல்வா அண்ணா, தமிழரசி அக்கா ரெண்டு பேரும் ஆசிகளோட அவங்க முன்னுரைய எழுதி தர, எழுதி தரமாட்டாரோன்னு நினச்ச கார்த்திக்கும் அணிந்துரை எழுதித் தர, புக் முக்கால்வாசி தயாராக ஆரம்பிச்சாச்சு.

அட்டைப்படம் டிசைன் பண்ணணும். ஏற்கனவே சிவகாசி சுரேஷ் கிட்ட சொல்லி ஒரு அட்டை வடிவமைச்சாச்சு. ஆனாலும் மனசுக்குள்ள இன்னும் பெட்டரா இருந்தா நல்லாயிருக்குமோன்னு தோணிகிட்டே இருக்கு. யாராவது நல்லா படம் வரைய தெரிஞ்சவங்க ஒரு அட்டைப் படம் வரைஞ்சு குடுத்தா நல்லாயிருக்கும்... தேடிட்டு இருக்கேன்...

வழக்கம் போல, நான் எதுனாலும் உங்ககிட்ட தானே சொல்லுவேன், அதனால இதையும் சொல்லிட்டேன்...

நன்றியும் ப்ரியமும்

Mangaaththa Mangai க்கு

Selva Kumar அண்ணாவுக்கு

தமிழ் அரசி அக்காவுக்கு

சிவகாசி சுரேஷ் க்கு...

அப்புறம், அப்புறமா கார்த்திக்கு தனியா தேங்க்ஸ் சொல்லிக்குறேன், காரணம், இன்னும் கொஞ்சம் வேலை வாங்கவேண்டியிருக்கு அவரை. ஒருவாரமா ட்ரை பண்றேன், ஆள் இன்னும் சிக்கல...

Thursday, 22 May 2014

தாயென்னும் தேவதை


வலித்திருக்கும் வேளைகளின் தான்
அவளின் தேவைகள்
உணர்வுகளில் உச்சமடைகிறது...

கைகள் துவள, உடல் மெல்ல சாய,
வெட்டி வெட்டியிழுக்கப்படும்
நரம்புகள் மத்தியில்
அவள் ஒரு மின்னலை போல்
வந்து வந்து மறைகிறாள்...

இப்படியான கடந்த காலங்களில்
வெறுமையின் உச்சக்கட்டத்தில்
எதையோ எதிர்பார்த்து
ஓர் அணைப்பு தேவைப்படும் நேரத்தில் தான்
அவள் என் அருகே வருவாள்...

பதமாய் அணைத்து,
இதமாய் இறுக்கம் தந்து,
நடுங்கும் கைகளை பற்றிக்கொள்வாள்...

தலைக்கு தோள்கொடுத்து,
விரல்களை கூந்தல்களுக்குள்
நுழைந்திடச் செய்வாள்...

முதுகோடு பாரமாயிருக்கும்
அவள் உடல் சூடு சுகம்.
கழுத்திலும் நெற்றியிலுமாய்
விழும் உதட்டு ஒத்தடங்கள் சுகமோ சுகம்...

இன்று,
தலையணை அசைவற்று
முதுகில் உறங்குகிறது...

இரு கைகளையும் கால்களையும்
அதற்கு முளைத்திட செய்யுங்கள்..
அணைப்பில் பதுங்க
நான் தயாராய் இருக்கிறேன்..

Wednesday, 2 April 2014

கரைந்து சென்றவனுக்காய்...


என்றோ ஓர்நாள்
ஓர் ரம்மிய வேளையில்
சுழன்றடித்து பின் காணாமல் போன
உன் நினைவுகள் இன்று அகழ்ந்தெழுகிறது...

ஆற்றுப்படுகையின் ஓரமாய்
படிந்திருக்கும் சுவடுகளாய்
உச்சி வெயில் நேரத்தில்
பளிச்சென வெட்டிச் செல்லும்
மின்னலைப் போலத்தான் நீ...

பார்த்த உடன்
கலைத்து விடச்சொல்லும் உன் கேசம்...
பரவசம் தெறிக்கும் அந்த கண்கள்...
உறைந்து விட்ட புன்னகை...
நீ விரிக்கும் கைகளில்
அடைக்கலமாகத் துடிக்கும் நான்...

உன் ஸ்பரிசங்களின் உஸ்ணங்கள்
எப்பொழுதும் என்னை
கிளர்ந்தெழ செய்ததில்லை...
மாறாய்... மடியிலிட்டு தாலாட்டும்...

நம் காதல் எழுதிவைக்க
இந்த பிரபஞ்சம் போதாதென்று
உன் தோள் கட்டிக் கிடந்தேன்...
உன் முதுகு எப்பொழுதும்
என்னை ஏகாந்தமாய் சுமந்துக் கிடந்தது...

ஏனோ ஓர்நாள் விரல் நுனி பிடித்து...
உச்சிமோர்ந்து... காதோரமாய்
கிசுகிசுத்து... என் நலமென சொல்லி
நீயாய் முடிவெடுத்தாய்...
பொருள் தேடி வருகிறேனென்று
பின் காற்றிலசைத்து சென்றாய்...

நாட்கள் காத்திருப்பதில்லை...
நீ விதைத்தது துளிர்த்து விட்டிருக்கிறது...
நீ மட்டும் ஏனோ காணாமலே போனாய்...

ஹ்ம்ம்... சிரித்துக் கொள்கிறேன்...
அதில் உயிர்சுரத்து இருக்கிறதாவென
நீயே கணித்துக் கொள்...
நான்... இந்த உலகத்தின்
பரபரப்பில்... என்னை
கரைத்துக் கொள்ளப் போகிறேன்..

Wednesday, 26 March 2014

சிலந்திவலைச் சாபங்கள்....



உணர்வு பிசைந்து செயல் முடக்கிய
அஸ்தமனத்தின் ஆரம்ப நாள் அது...

நடுங்கும் கைகளுக்குள்
ஓர் அழுத்தம் வேண்டி
காற்றில் துழாவுவது பழக்கமாய் போனது...

அழுதலுக்கும் மறுக்கப்படும் உரிமைகள்
வெந்நீர் ஊற்றுக்குள் அழுத்தி
நரகம் காட்டி சிரிக்கின்றன...

வெறுமை மட்டுமே பரிசென அறிந்தும்
அழுத்தமாய் ஓர் எதிர்பார்ப்பு
கிளை பரப்ப துவங்கியது...

வசப்படும் வார்த்தைகள் ஏனோ
சல்லி வேர்களுக்குள் சிக்கித் தவிக்கிறது...

இப்பொழுதெல்லாம் மனம் கனத்து
இதயம் குமுறுவதை
கண்கள் தடுப்பதே இல்லை...

ஆ....வென இயலாமையின் ஆங்காரம்
ஆட்டுவிக்க...
வலி வலி வலி...
வலி வேண்டுமென ஏக்கம் கொண்டு
தகிக்கத் துவங்கியது மனது...

வாழ்தல் சாபமாகி விட்ட நிலையில்
வரம் தேடி தவம் கொள்ளத் தொடங்கினேன்...
தைரிய முகமுடி விசிறியடித்து
கோழை முகம் தன்னிலை காட்டுகிறது...

தன்னையே சுற்றிக்கொண்ட சிலந்திவலையாய்
என்னை நான் சூழ்ந்துக் கொள்கிறேன்...

பாரம் இறக்கி வைக்க கடகடவென
எழுத்தில் கொட்டிவிட்டு நிமிர்ந்து பார்க்கிறேன்....
இதோ, மற்றுமோர் கவிதை பிறந்தே விட்டது...

கண்கள் காய்ந்து விட்டிருந்தன...
துடைக்க கரம் தேவையில்லாமல்....

Friday, 28 February 2014

எனக்கென ஒரு நண்பனிருந்தான்...



எனக்கென ஒரு நண்பனிருந்தான்...

எப்படி அவனெனக்கு அறிமுகமானான்
என்பது நினைவிலில்லை.
ஆனால் அது ஒரு மழைக்கால காட்சியாய் இருக்கிறது.
வெயிலென்பது கொஞ்சம் கொஞ்சமாய்
களவு போய் கொண்டிருந்த காலமது.

களத்துமேட்டின் மேல் காளைகள் ஓய்வெடுக்க,
வயல்வரப்புகள் நீர் நிறைத்து கொண்டிருந்தன...
சலசலக்கும் ஓடைகளுக்கிடையில்
கப்பல் ஓட்டி களைத்திருந்த நேரத்தில்
எங்கிருந்தோ வந்தவன் சிநேகமாய் புன்னகைத்தான்.

வசீகரிக்கும் கண்கள் காந்தமாய் கவர்ந்திழுக்க,
அவன் வகிடெடுக்கா உச்சந்தலை
கொஞ்சமாய் கலைத்து விட சீண்டியது.
சிற்சில சம்பாசனைகளுக்குள் 
அவனென்னை கவர்ந்தே விட்டான்...

கரம் பற்றிக்கொள்ளென விரல் பற்றி
ஒரு பறவையாய் சிறகு விரிக்க வைத்தான்...
மரக்கிளையொன்றில் இறக்கி விட்டு
தனந்தனியாய் பறந்திட செய்தான்...

சிறு கல் கண்டு மிரண்டோடிய என்னை
மலைகள் அழகென உள்ளங்கால் பதித்திட செய்தான்...
பஞ்சு மிட்டாய் இதுவென
மேகம் நடுவில் முகம் புதைத்து சிலிர்க்க வைத்தான்...

தாய் விட்டு பிரிந்த
அணில் பிள்ளைகள் கண்டெடுத்து
தாயாய் என்னை கொஞ்சம் மாற்றிப் பார்த்தான்...
தவழத் தடுமாறும் நாய் குட்டிகள் கொஞ்ச வைத்து
சேயாய் நானும் மாறிடச் செய்தான்..

வயல் வெளிக்குள் நாற்று நட்டோம்...
புல் வெளிக்குள் பூ பறித்தோம்...
மழை வந்து விட்டுச் சென்ற
தூறல்களை வழியெங்கும் சிதறடித்தோம்...

பேசும் கதைகளுக்கு குறைவில்லை
களைப்புகள் என்றும் நெருங்குவதில்லை...
தோளில் நிம்மதியொன்றை புதைத்து வைத்து
நான் இவன் நிழலென நகலெடுத்தேன்...

நண்பன் இவனென இறுமார்ந்த வேளையில் தான்
ஓர்நாள், மொட்டை மாடியில், நிலாவொளியில்
தென்னங்கீற்றுகளின் சாட்சியாக
அவன் காணாமல் போயிருந்தான்....

இன்றிவன் என் துணைவனாகி, என் மகளுக்கு
அம்பாரி சுமக்கும் யானையாகி விட்டிருந்தான்...

Monday, 24 February 2014

வா.... வந்தென் வலி விரட்டி செல்...



கவ்வி பிடிக்கும் பயமொன்று ஏனோ
அவசரகதியில் தொற்றிக்கொண்டது.
ஜன்னலோர கம்பிகள் துணையுடன்
தைரியம் பூசிக்கொள்ள துடிக்கிறேன்...

கற்பாறை ஒன்று நெஞ்சக்கூட்டுக்குள்
விழுந்து நொறுங்க...
ரெத்த நாளங்களின் வாசனை
இன்னும் பயம் தூவி செல்கிறது...

இன்னதென்று வரையறுக்க முடியாமல்
தலை பாரம் சுமந்து கொள்கிறது.
கண்களோ உறக்கம் தொலைந்து
கண் திரை மறைக்கின்றன...

உள்மன கூச்சல்
நெஞ்சம் பிளந்து வெளிப்பட தயாராக...
உன் மடி தேடி சுருண்டுக் கொள்ள
ஏங்கி தவிக்குது இதயத் துடிப்பு...

வந்து விடேன்... உன் கைகளால்
என் முதுகு பற்றிக் கொள்...
நெஞ்சக்குளிக்குள் முட்டுக் கொடுத்து
என் உயிர் கொஞ்சம் தாங்கு...

உன் மார் கற்றை முடிக்குள்
கொஞ்சம் முகம் புதைத்துக் கொள்கிறேன்...
கழுத்தோடு கைகள் பூட்டி
உன் உயிரோடு பிணைத்துக் கொள்கிறேன்...

என் உள்ளங்கைக்குள்
உன்னால் ஓர் அழுத்தம்...
உன்னோடு நானிருக்கிறேன் என்று
இதம் கொடுத்து செல்லும்...

வா... வந்தென் வலி விரட்டிச் செல்...
அப்படியே உனக்குள் புதைந்து
என்னை மறந்துக் கொள்கிறேன்...

Monday, 17 February 2014

தேவதை பிறந்தாள்





காத்திருப்புகள் யுகமாய் கரைய
சந்தோஷ திகிலொன்று லப்டப்படிக்க
சிறகில்லாமல் கால்கள் பறக்க
காக்க வைத்த தேவதையொருத்தி
இதோ பூமிதனில் ஜனித்துவிட்டாள்

உற்சாகம் துள்ளி குதிக்க
மனதெங்கும் சாரலடிக்க
மாமனின் ஆசியோடு
முதல் சுவாசம் உள்ளிழுத்துக் கொண்டாள்

கீதமிசைக்க குயில்கள் வந்துசேர
நடனமிட மயில்கள் தோகை விரிக்க
வருணனின் ஆசியோடு
தன் சங்கீதத்தை துவக்கி விட்டாள்

வானத்து விண்மீன்களே
வந்தெங்கள் தேவதையை பாருங்கள்
வனத்தின் மான்குட்டிகளே
அவளோடு விளையாட வாருங்கள்

சின்ன சின்ன பாதம் கொண்டு
எட்டி உதைக்கும் அழகினை பருகுங்கள்
ஆதரவாய் பற்றிப் படரும்
அந்த ஐவிரல்களில் இதழ்கள் பதியுங்கள்

புன்னகை என்றும் அவளின்
உதட்டோடு உறையட்டும்
சந்தோசம் என்றும் அவளின்
மனதோடு நிலைக்கட்டும்

இவள் இனி
பரபர உலகந்தனில் அழகியலை ரசிக்கட்டும்
சுயம் சார்ந்து தலைநிர்ந்து நிற்கட்டும்
வேண்டும் கலைகள் கற்று
மனம் நிறைந்து வாழட்டும்

வாருங்கள் வாருங்கள்
மலர்ச்சியோடு உற்சாகம் ததும்ப
வாழையடி வாழையாக
இவள் குலம் தழைக்க
வாழ்த்துவோம் வாருங்கள்...

.