Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Thursday, 15 January 2015

பொங்கலோ பொங்கல்




வீட்ல பண்டிகைகள்ன்னு கொண்டாடி வருசகணக்கா ஆகிடுச்சு. ஏன் எதுக்குன்னு காரணங்கள் தேடிட்டு இருக்காம, அப்படி அமைஞ்சு போய்டுச்சுன்னே வச்சுக்கலாம். சின்ன வயசுல அவ்வளவு உற்சாகமா கொண்டாடுவோம். சொந்தம் பந்தம்னு எல்லாரும் எங்க வீட்ல தான் கூடுவாங்க. தீபாவளினா சின்னவங்க எல்லாரும் விடிய விடிய வெடி போட்டுட்டு இருப்போம். பெரியவங்க தீபாவளி பலகாரத் தயாரிப்புல ரெண்டு மூணு நாள் முன்னாடியே மூழ்கிடுவாங்க. முறுக்கு, அதிரசம், சீடை, உன்னியப்பம், முந்திரிகொத்து, போளி, லட்டு, மிக்சர், சிப்ஸ், பூந்தி, காரச்சேவு, தேன்குழல், ஜாங்கிரி, அல்வா, கேசரின்னு முடிவே இல்லாம லிஸ்ட் நீளும். அதுவும் கடைசி நாள் வடைகள், பாயசங்கள்ன்னு அதுலயே பல வகை வைப்பாங்க.

அதுவே பொங்கல்னா முந்தினநாளே புது ட்ரெஸ் எடுத்து ரெடியா வச்சுட்டு, கைல, கால்ல மருதாணி வச்சு அலங்கரிக்க ஆரம்பிப்போம். புது ட்ரெஸ் கண்டிப்பா ஒரு பாவாடை சட்டையா தான் இருக்கும். நாலு வருஷம் நானும் தாவணி போட்ட நியாபகம். பசங்க, எவ்வளவு குட்டியா இருந்தாலும் மல்லு வெட்டி மைனர் கெட்டப் தான். மஞ்சள் குலை, கரும்பு, காய்கறி, கிழங்கு வகைகள், பழங்கள் மண் பானை, பூஜை சாமான்ன்னு வீடே தெய்வீகமா இருக்கும். ஆனா அதுல ஒரு சிக்கல் உண்டு, காலைல நாலரைனா தண்ணி தெளிச்சு எழுப்பி விட்ருவாங்க. அப்போ தானே குளிச்சு முடிச்சு ரெடியாக முடியும். வெந்நீர் வேணும்னு அடம்பிடிச்சாலும் கிடைக்காது. அலேக்கா தூக்கிட்டு போய் மோட்டார் போட்டு புது தண்ணி புடிச்சு, அந்த தண்ணி தொட்டிக்குள்ள போட்டுட்டு வந்துடுவாங்க. வெடவெடன்னு வெறயல் கொஞ்ச நேரத்துல பழகிடும். அப்புறம் படபடன்னு ரெடியாகி, சூரியன் எட்டிப் பாக்குறப்ப பொங்கப் பானை பொங்கி அதை வரவேற்கும்.

நமக்கு குலவை எல்லாம் விட்டு பழக்கம் இல்ல, தம்பியும் அம்மாவும் விடுவாங்க. நாங்க எல்லாம் பொங்கலோ பொங்கல்ன்னு கோரஸ் பார்டிங்க. பொங்கல் பொங்கின உடனே அதுக்குள்ள சர்க்கரை தட்டுற பொறுப்பு என்னுது. தம்பி நெய் டப்பாவ கைப்பற்றிருவான். பக்கத்து வீட்டு பசங்க முந்திரி, கிஸ்மிஸ்ன்னு ஆளுக்கொரு தீனியை கைப்பற்றி உள்ள போடுவோம். இதுல நாலு பக்கமும் விறகு வச்சு தீ மூட்ட நாலு கைபுள்ளங்க வேற இருப்பாங்க. பொங்கல் நல்லா வெந்து, பதத்துக்கு வந்ததும் சுட சுட தலை வாழை இலைல வச்சு சூரியனுக்கு படைப்போம். கூடவே அஞ்சாறு வாழை இலை துண்டுல பொங்கல் எடுத்து வச்சு காக்காக்கும் வைப்போம். அந்த காலைலயும் காக்காங்க வரும்னா பாத்துக்கோங்களேன். இப்போ உள்ள காக்காய்ங்க சோம்பேறி போல... வீட்ல ஆறரைக்கு எழும்பி லைட்ட போட்டா ஏண்டி எங்கள எழுப்பி விடுறன்னு மொறைக்குதுங்க இந்த பின்ஞ்சஸ்...

அன்னிக்கி முழுக்க கரும்பு கடிச்சுட்டு, பொங்கல் தின்னுட்டு, கூடவே செய்து வச்ச எல்லா தின்பண்டங்களையும் பிடிச்சதா பாத்து பொறுக்கி பொறுக்கி திங்குறதுலயே வயிறு நிறைஞ்சிடும். அப்புறம் மதியம் ஆனா பருப்பு, சாம்பார், ரசம், மோர் வச்சு கூடவே அவியல், தொவரம், ஊறுகான்னு ஒரு பத்து கூட்டு வகையோட சாப்பாடு ரெடியா இருக்கும். அது மட்டுமா, சேமியா பாயாசம், அடை பாயாசம், பாசிப் பருப்பு பாயாசம்னு வகை வகையா பாயாசம் வேற.

நல்லா திம்போம், ஓடி புடிச்சு விளையாடுவோம், மறுபடியும் திம்போம், அப்பப்ப அலுப்பு தீர குட்டி குட்டி சண்டை, பட்டு பாவாடை, கொலுசு சத்தம் சகிதம் அது ஒரு சங்கீத நாளா இருக்கும். அம்மா தோள் கட்டி கிடக்குறதும், அப்பா கழுத்தை பிடித்து தொங்குறதும் தனி சுகம்.

சமீபத்துல தீபாவளி நேரத்துல தான் நான் முறுக்கு சுட்டேன் (சொன்னா நம்பணும், ஒரே ஒரு முறுக்கு, சுத்தினேன், ஆனா நல்லா வரலன்னு பிச்சு போட்டுட்டேன்). அப்புறம் அடுப்பு பக்கத்துல கூட போனதில்ல. இன்னிக்கி காலைல சோம்பலா தான் விடிஞ்சுது. கார்த்திக் தான் கூப்பிட்டு பொங்கல் வைக்கணும், போய் ரெடியாகிட்டு வான்னு சொன்னார். கார்த்திக் சென்னைல பொங்கல் பொங்க, நான் இங்க இருந்து கேட்டுட்டு தான் இருந்தேன். அப்புறம் மறுபடியும் தூக்கம்.

பத்தரை மணிக்கு அப்பா ரெடி ஆகிட்டியான்னு கேக்க, என்னப்பா விசயம்னு கேட்டேன். ஹோம்-ல போய் பசங்க கூட பொங்கல் வைக்கப் போறேன்னு நீ தானே சொன்னன்னு சொன்னதும், ஆமால, அப்படின்னு பதறி, அஞ்சே நிமிசத்துல வெளில வந்து அப்பா கூடவும் தம்பி கூடவும் வண்டியில ஏறிகிட்டேன்.

நாங்க ஹோம்க்கு போய் சேர்ரப்ப மணி பதினொண்ணே கால் ஆகிடுச்சு. நாங்க போனதும் அந்த ஐயா வாங்க வாங்கன்னு வாசல்லயே நின்னு கூப்பிட்டாங்க. லேட் ஆகிடுச்சுன்னு சாரி கேட்டுட்டு உள்ள எட்டிப் பாத்தேன். பிள்ளைங்க எல்லாம் சிரிச்சாங்க. ஆனாலும் ஏதோ ஒரு அந்நியத்தன்மை இருந்த மாதிரி ஒரு பீல். பின்ன, ரெண்டு வருசமா அந்த பக்கமே எட்டிப் பாக்கலனா?

மடமடன்னு சாமான் எல்லாம் கீழ இறக்கி வச்சு, பிள்ளைங்களுக்கு புது ட்ரெஸ் எடுத்து என்கிட்ட தந்து தம்பி குடுக்க சொன்னான். நிஜமாவே மனசுக்குள்ள கில்டி பீலிங்க்ஸ். இதே பசங்களுக்கு பொங்கல்னா என் காசுல தான் கரும்பு, பொங்கல் சாமான், பழங்கள்ன்னு வாங்கிட்டு போவேன். ட்ரெஸ் அப்பா எடுத்து தந்துடுவாங்க. ஆனா இப்போ நான் எதுவுமே செய்யல, ஆனா என்னை போய் அவங்க கிட்ட குடுக்க சொன்னாங்க. தயக்கமா ஆரம்பிச்சு போக போக கொஞ்சம் சகஜமாக ஆரம்பிச்சுட்டேன். தேங்க்ஸ் அக்கான்னு சொன்ன ஒரு பொடியன நன்றின்னு சொல்லுடான்னு சொன்னேன். நீ எப்பவும் தேங்க்ஸ் தான சொல்லுவன்னு கிண்டல் பண்றான். அட, பார்ரா...ன்னு சிரிக்க ஆரம்பிச்சவ தான். அப்புறம் என்ன, அவங்களோட ஒன்னுமண்ணா ஈசியா கலக்க ஆரம்பிச்சுட்டேன்.

உண்மைய சொல்லணும்னா எல்லார் பெயரும் மறந்த மாதிரி ஆகிடுச்சு. எத்தனை பேர்ன்னு எண்ணி பாத்தேன், பத்து பேர் தான் இருந்தாங்க. மூணு பேர் எங்கன்னு கேட்டா, ஒருத்திக்கு கல்யாணம் ஆகிடுச்சாம், ஒருத்தன் ஹாஸ்டல்ல தங்கி சிஸ்த் படிக்குறான், அங்க பொங்கல் கொண்டாடணும்னு அவனை விடலையாம், இன்னொரு குட்டி பாப்பா, அடாப்ட் பண்ணிட்டு போய்ட்டாங்களாம்.

ஒவ்வொருத்தரையும் கூப்பிட்டு தம்பி சாக்லேட் குடுத்துட்டு இருந்தான். பக்கி, தனியா வாங்கிட்டு வந்துருக்கான் பாருங்க, கிர்ர்ர்ர்.... ஒவ்வொருத்தர் கிட்டயும் உன் பேர் என்ன, என்ன படிக்குறன்னு கேட்டுட்டு இருந்தப்ப, நான் அத எல்லாம் கொஞ்சம் ரீ-கால் பண்ண ட்ரை பண்ணிட்டு இருந்தேன். முதல் வேலையா அவங்க பெயரை எல்லாம் நியாபகப் படுத்தி எழுதி வச்சிக்கணும். எப்படியும் அடுத்த தடவ போகும் போது பெயர் சொல்லித் தான் கூப்பிடணும்.

நட்டநடு வெயில்ல நாலு பக்கம் செங்கல் எடுத்து வச்சு, பானைக்கு மஞ்சளும் குங்குமமும் பூசி, அடுப்பு மூட்டி, பொங்கல் பொங்குறப்ப மணி பனிரெண்டரை. பெரிய பானையா இருந்ததால பொங்கலே மதியம் போதும் போதும்னு ஆகிடுச்சு. அவ்வளவு வயிறு முட்ட சாப்ட்டாச்சு.அப்புறம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, மதிய சாப்பாடு ரெண்டரைக்கு சாப்ட்டோம். சமையல் கூடத்துக்குள்ள நான் போகல, ஆனா தம்பி, அங்க இருந்த பெரியம்மா கூட சேர்ந்து சமையல்காரனாகிட்டான். அவன் இங்க வர்றது ரெண்டாவது தடவ தான். ஆனாலும் என்னமோ ரொம்ப தெரிஞ்சவன் மாதிரி சுத்திட்டு இருந்தது எனக்கு பொறாமையா இருந்துச்சு.

ஒரு வழியா போயிட்டு வரோம்டான்னு கைகாட்டிட்டு வண்டியில ஏறினோம். மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன மாதிரி பீலிங். ஆனாலும் பழைய சந்தோசங்கள் இன்னும் திருப்பி எடுக்க வேண்டியது நிறைய இருக்குன்னு புரிஞ்சுது. அடுத்த வருஷம், காலைல நாலரை மணிக்கே தண்ணி தொளிச்சு எழுப்பி விட்டு என்னை பொங்கல் வைக்க விரட்டணும். மண் பானை, இயற்கை காற்று, இளம் சூரியன்னு அனுபவிச்சே ஆகணும்.... கூடவே வயல் வரப்புல தழைய தழைய புடவை கட்டி நடந்து போற சுகத்த அனுபவிக்கணும்....



பொங்கலோ பொங்கல்....





Sunday, 11 January 2015

பறவை மனமும் பல் மரமும்...


இந்த பெட் ஷாப்ல குருவிங்கள எல்லாம் அடைச்சு வச்சிருக்குரத பாத்து நான் கூட இத எல்லாம் நாம வாங்கி பறக்க விட்ருவோமான்னு சினிமாட்டிக் தனமா யோசிச்சதுண்டு. அதாவது, தேவதை மாதிரி வெள்ளை உடுப்பு போட்டுட்டு ஒவ்வொரு புறாவா தலைக்கு மேல தூக்கி புடிச்சி ஒரு குதி குதிச்சி பறக்க விடுற மாதிரி...

நோ...நோ... பேட் வேர்ட்ஸ்...

புறாக்களாவது பரவாலன்னு நினைக்குறேன், காரணம், எங்க வீட்ல முன்னாடி நூத்துக்கணக்குல புறாக்கள் இருந்துருக்கு. எல்லாமே காலைல பறந்து போயிட்டு சாயங்காலம் தான் வீட்டுக்கு வரும். சாயங்காலம் அதுங்க வீட்டு மொட்டை மாடியில அரிசி, கம்பு, கொண்டகட்டிக் கடலை, இன்னும் பல பல ஐட்டங்கள ஸ்வாகா பண்ணிட்டு அதது கூட்டுக்குள்ள போய் அடஞ்சுக்கும்... அந்த நேரத்துல அதுகள பாக்குறதே ஒரு பேரானந்தம். அப்பப்ப நானும் தேவதையா மாறி, புறாக்கள பறக்க விட்டதும் உண்டு. என்ன, அப்போ நான் ரொம்ப குட்டி தேவதையா இருந்தேன். அதனால தலைல ஒரு மலர் கிரீடம் நீங்க தாராளமா கற்பனை செய்துப் பாத்துக்கலாம். முன் பல்லு ஒண்ணை காணோம்னு தேடாதீங்க, முந்தின நாள் தான் அதை மண்ணுல புதைச்சு, தண்ணி ஊத்தி தடவி குடுத்துட்டு வந்துருக்கேன். அநேகமா எங்க வீட்ல பல் மரம் ஒண்ணு யார் கண்ணுக்கும்  தெரியாம  முளைச்சிருக்கலாம்....

சரி, இப்போ விசயத்துக்கு வருவோம். நிஜமாவே இந்த பறவைகள எல்லாம் வெளில விட்டுட்டா சுதந்திரமா வாழுமா? இந்த கேள்விய நாமளே கேட்டுட்டு நாமளே பதில் சொல்லிக்கவும் கூடாது தான். அது இந்த ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் மாதிரி மனுஷாதிக்கம். ஆனாலும் நேத்து, நான் அடைச்சு வச்சிருந்த குருவிகள்ல மந்தாகினியோட ஜோடி திவா, விருட்டுன்னு வெளில பறந்துடுச்சு.

அது திரும்பி வரணும்னோ, வரும்னோ நான் அப்போ யோசிக்கவே இல்ல. அது பாட்டுக்கு பறந்து போய்டுச்சே, இங்க காக்காக்கள் நிறைய உண்டே, படக்னு அத ஒரே கொத்துல சாகடிச்சிடுமேன்னு தான் பயந்தேன். கூடவே, அதுக்கு அத்தனை வலிமையான சிறகுகள் வேற உண்டான்னு ஆச்சர்யம். ஒரு அஞ்சு நிமிச அமைதி, சலனம் எல்லாத்துக்கு பிறகு, அது திரும்பி வந்துச்சு.

உங்கள விட்டா எனக்கு யாரைத் தெரியும்னு அது கேட்ட மாதிரி இருந்துச்சு. பக்கத்துல போனப்ப விருட்டுன்னு அது பறந்தத பாத்து, நான் சுதந்திரமா இருக்க விரும்புறேன்னு சொல்ற மாதிரியும் இருந்துச்சு.

கொஞ்சம் நானும் ஒரு பறவையா மாறி அதோட எண்ண ஓட்டங்கள படிக்க பாத்தேன். ஒரு சமயம் மனம் கழுகா மாறுது, உன்னை கொத்தி திங்குறேனா பார்ங்குது, காக்கா மனமோ, இன்னிக்கி நல்ல சாப்பாடுன்னு சப்பு கொட்டுது. மறுபடியும் சிட்டுக்குருவியா மாறி, என்னை எதுவும் செய்துடாதன்னு கெஞ்சுது. அப்பப்பா, பறவை மனம்னு இனி சொல்லக் கூடாது போல... காக்கா மனம், சிட்டுக் குருவி மனம்ன்னு தனி தனியா பிரிச்சுக்கணும்.

எப்படியோ ஒரு மணி நேர அதிதீவிர போராட்டத்துக்கு பிறகு, கூட்டுக்குள்ள விடப்பட்ட திவா, இப்போ அப்படி எந்த விதமான சம்பவமும் நடக்கவே இல்லங்குற ரேஞ்ச்ல மந்தாகினிய கரெக்ட் பண்ற வேலைல தீவிரமா இறங்கியாச்சு...

சுதந்திரமா எல்லாம் வேணாம், நீங்க கூட்டுக்குள்ளயே இருங்கன்னு என் தேவதை மனம், கொஞ்சம் மனுசத்தனமா அதிதீவிர முடிவெடுத்துடுச்சு...

அப்படியே வாய்ல இருந்து ரெண்டு கோரப்பல்லும் தலைல ரெண்டு எருமை மாட்டு கொம்பும் முளைக்குறதுக்கு முன்னாடி, எல்லாரும் எஸ்கேப் ஆகிடுங்க... நான் கொஞ்சம் பறவைகள் உலகை ரசிக்கப் போறேன்...

Friday, 25 April 2014

குளத்துக்கு போவோமா?


ஒரு குளம். அதுல தாமரை பூத்திருக்கு.

கொஞ்சம் சூம் போங்க....

அட, அங்க பாத்தீங்களா? தாமரை இலை மேல ஒரு மீன் படுத்து ரெஸ்ட் எடுக்குது. இன்னும் இன்னும் நல்லா தேடி பாருங்க, வேற வேற இலைகள்ல மீன்கள் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கலாம்...

அப்படியே கொஞ்சம் லெப்ட்ல திரும்புங்க. அந்தா குட்டியா, சின்னதா, கருப்பா இருக்குல, அது தான் நீர் கோழி... சூ சூ.... எப்படி...... படக்குன்னு தண்ணிக்குள்ள குதிச்சி முங்கிடுச்சு பாத்தீங்களா?

அப்புறம், அந்த கரைல நின்னு மீன் பிடிக்க ஒத்த கால்ல நின்னுட்டு இருக்கு பாருங்க கொக்கு... அது கழுத்தும் வாயும் மட்டும் ஏன் கருப்பு கலர்ல இருக்கு? இதுக்கு பேர் என்னன்னு யாருக்காவது தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க... பாருங்க, பாருங்க... ஒரே பாய்ச்சல், லபக்... ஒரு மீன் காலி...

ஸ்ஸ்ஸ்.... அப்படியே கொஞ்சம் back வந்து படியில ஏறிக்கோங்க. தண்ணி பாம்பு ஒண்ணு நீந்தி வருது. அது பாட்டுக்கு போகட்டும்...

அப்புறம், அந்த வாத்து கூட்டங்கள பாத்தீங்களா? எவ்வளவு ஜாலியா நீந்திட்டு போகுது. போச்... போச்.... அதுங்க போடுற சத்தத்துல மீன குறி வச்சிட்டு இருந்த மீன் கொத்தி பறந்து போயிடுச்சு. அந்தா, இடது பக்கமா பறந்து, அந்த கல்லு மேல உக்காருது பாருங்க... மயில் நிறத்துல, மீன் கொத்தி அழகா இருக்குல...

ஹே... கொஞ்சம் நல்லா கூர்ந்து பாருங்க, இதென்ன பறவை. குட்டியா கருப்பா, குச்சி காலு வச்சிகிட்டு, பாக்க சின்ன வயசு கோழி மாதிரி... எவ்வளவு வேகமா தாமரை இலை மேல நடந்து போகுது பாருங்க... அழகு அழகு... அது பேரு பிரவுன் க்ரேக்... தமிழ்ல பேர் தெரியல...

அப்படியே கொஞ்சம் குளக்கரை பக்கமாவும் திரும்புவோம் பாஸ்... அட, எவ்வளவு புற்கள்ல அழகழகா பூக்கள் பூத்திருக்கு பாத்தீங்களா?

நல்லா பாருங்க, அதுல ஒரு வெள்ளை கலர் பட்டாம்பூச்சி வந்து உக்காருதா? அது தான் உங்களுக்கு இன்னிக்கி குட் மார்னிங் சொல்லப் போகுது...

பட பட பட்டாம்பூச்சி குட் மார்னிங்....

Wednesday, 23 April 2014

இயற்கை விவசாயம்


சில விசயங்கள் நிஜமா நடந்துட்டு இருந்தாலும் அத  நாம கற்பனைல தான் பாக்க முடியும். அப்படியான ஒரு இடத்துக்கு தான் நான் இப்போ உங்கள கூட்டிட்டு போகப் போறேன்...

இது ஒரு விவசாய பூமி. பாத்தீங்களா, வயல்ல உளுந்து போட்ருக்காங்க. இந்த பக்கம் பாருங்க, தென்னந்தோப்பு. அந்தபக்கம் தக்காளி தோட்டம். பக்கத்துலயே பம்புசெட்டு. அட, இத எல்லாம் நம்மளால பாக்க முடியாதாக்கும்ன்னு அலுத்துக்காதீங்க. நான் கூட்டிட்டு போக போறேன்னு சொன்ன உலகம் இது இல்ல..

அதோ பக்கத்துலயே இலை தழைகள எல்லாம் கொட்டி மட்க வச்சிருக்காங்க பாத்தீங்களா, அங்க வாங்க, உள்ள கொஞ்சம் இறங்கி பாப்போம். இது மண்புழுக்கள் வாழுற இடம். நமக்கெல்லாம் பாக்க அருவருப்பா இருக்குல, ஆனா, இது நமக்கு எவ்வளவு நல்லது பண்ணிக்கிட்டு இருக்கு தெரியுமா?

நாம கழிவுன்னு தூக்கிப் போடுறதா எல்லாம் சாப்ட்டு, அத சத்தான பொருளா மாத்தி நம்ம மண்ணுக்கே அத திருப்பி தருது. மண்ணுக்குள்ள அங்கயும் இங்கயுமா இது ஊர்ந்துகிட்டே இருக்குல, இதனால நம்ம மண்ணு ரொம்ப மிருதுவா மாறிடுது. மண்ணுக்கு காற்றோட்டமும் கிடைக்குது.

இதுக்கு வாய் எங்க இருக்கு, வால் எங்க இருக்குன்னு கூட ஈசியா கண்டுபுடிக்க முடியாது. மண்ண அப்படியே முழுங்கி, அதுல இருக்குறத எல்லாம் ஜீரணிச்சு அப்படியே உரமா மாத்திடுது. இந்த உரத்த நாம அதோ அந்த வயலுக்கும் தோப்புக்கும் போட்டா விளைச்சல் அமோகமா இருக்கும். மண்ணும் கெட்டு போகாம இருக்கும்.

சரி, அப்படியே ஊர்ந்துகிட்டே அந்த உளுந்துச்செடி பக்கமா போவோம். அட அட அட, என்னமா காய்ச்சிருக்கு பாத்தீங்களா? இங்க கூட நாம கொஞ்சம் மண்ணுக்குள்ள முங்கி பாப்போமா?

அடடே, பாருங்க, உளுந்து செடியோட வேர்ல முடிச்சு முடிச்சா வீங்கியிருக்கு. ஏன் ஏன் பதறுறீங்க, உளுந்து செடிக்கு நோய் வந்துடுச்சுனா? ஹஹா அது வீங்கலீங்க, அது இன்னொரு இயற்கை அதிசயம். ஆமா, இங்க கடலை செடி கூட கூட்டு குடும்பமா இன்னொரு உயிர் வாழ்ந்துகிட்டு இருக்கு. அது ஒரு பாக்டீரியா. அது பேரு ரைசோபியம்.

இந்த ரைசொபியம் என்ன பண்ணுதுனா, காற்றுல அதிகமா இருக்குறத நைட்ரஜன புடிச்சி கொண்டு வந்து செடிகள் எல்லாம் பயன்படுத்துற மாதிரி மண்ணுல தக்க வச்சிடுது. இதனால மண்ணு ஈசியா வளம் அடஞ்சிடுது. இதனால தான் விவசாயிங்க, நெல் பயிரிட்ட பிறகு, அதே நிலத்துல உளுந்து போடுறாங்க. மண்ணுல நைட்ட்ரஜன் சத்து எக்கசக்கமா கிடைக்கும். எதுக்குங்க நமக்கு இந்த யூரியா எல்லாம்? நிலத்துல சூட்டை கிளப்பி விட்டு, மண்ணை மலடாக்கிடும்.

ரைசோபியம் மட்டுமில்லீங்க, கோடி கணக்குல நம்ம கண்ணுக்கு தெரியாத உயிர்கள் நம்ம நிலத்தை உயிர் சத்தோட வச்சிக்க போராடிட்டு இருக்கு. என்னது போராடிட்டு இருக்கான்னு ஏன் ஷாக் ஆகுறீங்க? அதுங்க எல்லாம் என்னவோ அதுங்களோட வேலைய சரியா பாக்கணும்னு தான் நினைக்குதுங்க, ஆனா நாம என்ன பண்றோம்?

அதிகமா பேராசைப்பட்டு விளைச்சல் அதிகமா கிடைக்கணும்ங்குற நினைப்புல செயற்கை உரத்தை அள்ளி தெளிச்சிடுறோம். இதனால இயற்கையா நம்ம கூட இணைஞ்சு வாழ்ந்துட்டு இருக்குற இந்த இனங்கள் அத தாங்க முடியாம அழிஞ்சு போயிடுது. எப்பவுமே இவங்களோட அருகாமைல சந்தோசமா செழிப்பா இருந்துட்டு இருந்த பூமி, கலையிழந்து வறண்டு போயிடுது.

உயிரை விட்டுட்டு வெத்து பூமிய வச்சுட்டு சாப்பாட்டுக்கு என்னங்க பண்ண முடியும்? கொஞ்சம் கொஞ்சமா மண்ணோட வளத்த அழிச்ச இந்த ரசாயன உரங்கள், அப்படியே நாம சாப்டுற சாப்பாடு மூலமா நமக்குள்ளயும் ஆக்கிரமிக்க தொடங்கியாச்சு. நம்ம உடம்புல வந்து தாங்கிகிட்டு, கொஞ்சம் கொஞ்சமா நம்மோட உடல் செயல்பாட்டுக்கள முடக்க ஆரம்பிச்சாச்சு.

இனியாவது கொஞ்சம் முளிச்சுக்கணும். இயற்கை உயிர்கள நாம செயற்கையா ஏதாவது பண்ணி அழிக்காம விட்டாலே போதும்... கொஞ்சம் நஞ்சம் எங்கயோ உயிரோட இருக்குற இந்த பூமி, தன்னோட சந்தோஷ கிளைகள படர விட்டுக்கும்....