Showing posts with label ஓநாய்கள். Show all posts
Showing posts with label ஓநாய்கள். Show all posts

Tuesday, 25 February 2014

இணையமும் குழந்தைகளுக்கான பாதுகாப்பும்...


இணையம் அதாங்க, இந்த இன்டர்நெட் வந்த நாள்ல இருந்து வீட்டுக்குள்ளயே முடங்கி இருந்த பெண்கள் வீட்டுக்குள்ள இருந்தே வெளி உலகத்த எட்டிப் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. தங்கள உற்சாகப்படுத்தி, தங்களோட திறமைகள ஊக்குவிக்கவும் ஆட்கள் இருக்காங்கங்குற ஒரு நம்பிக்கை அவங்கள கொஞ்சம் கொஞ்சமா ஸ்ட்ரெஸ்ல இருந்து வெளி வர ரொம்பவே உதவி பண்ணியிருக்கு. இருந்த இடத்துல இருந்துகிட்டே தங்களுக்கான உரிமைகளுக்கு ஓங்கி குரல் குடுக்க முடியுது அவங்களால.

சரி, அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நான் இப்போ பேசப்போற விஷயம், பேஸ் புக்ல ஆங்காங்கே தட்டுப்பட்ட, தட்டுப்படுற, தட்டுப்படப்போற விசயத்த வச்சி சொல்ல வரேன். இத படிச்சுட்டு யார் சொன்னா எப்போ சொன்னான்னு யாரும் கேள்வி கேக்காதீங்க, காரணம், இத இன்னார்தான் சொல்லனும்ன்னு அவசியம் இல்ல, கொஞ்சம் கூர்ந்து கவனிச்சா நம்ம கண்ணுல அடிக்கடி தென்படும்.

அதாவது, ஒரு பொண்ண அசிங்கப்படுத்தணும்னு முடிவு பண்ணிட்டா, அவங்கள பத்தி, அதுவும் அவங்க கேரக்டர் பத்தி கதை கட்டி விடுவாங்க. அதையும் மீறி சில பேரு அவங்க போட்டோவ சுட்டு ஒண்ணு பேக் ஐ.டி தொடங்குவாங்க, இல்லனா கண்ட கண்ட பேஜ்ல போட்டு, அசிங்க அசிங்கமா கமன்ட் போட வைப்பாங்க.

இதனால அவமானப்பட்டு கூனி குறுகி போறது பொண்ணுங்கதான்னாலும் இதே பிரச்சனை ஆண்களுக்கு வேற மாதிரி இருக்கு. ஒரு ஆணை பிடிக்கலனா, ஒண்ணு, அவங்க ஐடிய ஹேக் பண்றாங்க, இல்ல, அவங்களோட படங்கள வச்சி புதுசா ஒரு ஐ.டி உருவாக்குறாங்க. அந்த ஐ.டில இருந்து பெண்களோட இன்பாக்ஸ்ல தப்பு தப்பா பேசினா போதும், சம்மந்தப்பட்ட ஆளோட இமேஜ் டோட்டல் டேமேஜ்.

ஆக மொத்தத்துல, ஒரு பொண்ண அசிங்கபடுத்தணும்னாலும் சரி, ஒரு ஆணை அசிங்கப்படுத்தனும்னாலும் சரி, பகடைகாயா யூஸ் ஆகுறவங்க பொண்ணுங்க தான்.

ஆனா இப்போலாம் காலம் மாறியாச்சுங்க. பெண்களும் இப்போ தைரியமாகிட்டாங்க. ஒருவேளை நம்மள பத்தியோ இல்ல நம்மோட போட்டோவையோ தப்பா யூஸ் பண்ணினா தைரியமா எதிர்கொள்ளலாம்ங்குற துணிச்சல் அவங்களுக்கு இருக்கு. இன்னிக்கி நிறைய பேர், இந்த மாதிரி பிரச்சனைல மாட்டி, அதுல இருந்து வெளி வந்தும் துணிச்சலா அவங்க போட்டோ போட்டுட்டு இருக்காங்க.

ஐயையோ, அந்த தைரியம் எல்லாம் எனக்கு கிடையாதுமா, நான் என் போட்டோவ போடமாட்டேன் அப்படின்னு பதறி கிட்டே நீங்க இன்னொரு முடிவு எடுக்கலாம். அப்படி என்ன முடிவுன்னு கேக்குறீங்களா?

நம்ம போட்டோ போட்டா தான பிரச்சன, நம்ம குட்டி பசங்க போட்டோ போடலாமேன்னு அப்படின்னு புத்திசாலித்தனமா நினைப்பீங்க. அதுவும் நம்ம வீட்ல பொம்பள புள்ளைங்க இருந்தா நமக்கு பெரும தான். அவங்கள விதவிதமா அலங்கரிச்சு அழகு பாக்குறதோட இல்லாம, இப்போ லேடஸ்ட் பேஷனா அவங்கள விதவிதமான ஷாட்ஸ்ல போட்டோ எடுத்து அத எல்லாம் பேஸ் புக்ல போட்டு விட்டுடுறீங்க.

சரி, அதனால என்ன, சின்ன குழந்தைகள்னா பல பேரும் ரசிக்கத்தானே செய்வாங்கன்னு கேக்குறீங்க தானே? ஆமாங்க, அந்த போட்டோக்களுக்கு லைக் கொட்டும். வாவ், க்யூட், அழகு செல்லம், அம்முகுட்டின்னு கமண்ட்ஸ் பறக்கும். நமக்கும் ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கும்.

ஆனா இத எல்லாம் மவுனமா ஒரு ஓநாய் கூட்டம் நாக்க தொங்கபோட்டுட்டு கவனிச்சுட்டு இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? உங்க குழந்தையோட போட்டோவில கண்ணியமா ஒரு கமன்ட் போட்டுட்டு அந்த ஓநாய் திருட்டுத்தனமா அந்த போட்டோவ டவுன்லோட் பண்ணலாம். டவுன்லோட் பண்ணது மட்டுமில்லாம அதுக்குன்னே இருக்குற கண்ட கண்ட சைட்டுகள்ல அந்த போட்டோவ அப்டேட் பண்ணும் அந்த கேடுகெட்ட ஜென்மம். இதுக்காகவே அந்த பக்கமாவே சுத்திட்டு இருக்குற பல பிணந்தின்னி கழுகள் உங்க குழந்தையை கொத்திக் குதறலாம், அதுவும் ரொம்ப ரொம்ப வக்கிரமா...

அந்த மாதிரி சைட்ஸ் இருக்கான்னு அதிர்ச்சி எல்லாம் அடையாதீங்க, கண்டிப்பா இருக்கு. இதெல்லாம் வெட்ட வெட்ட துளிர்க்குற காளான் கூட்டங்கள். 

இந்த மாதிரியான சைட்டுகளை பற்றி நாம புகார் பண்ணவே முடியாதான்னு ஏங்குறீங்களா? நாமளால இத எல்லாம் செய்ய முடியாதான்னு தவிக்குறீங்களா, கண்டிப்பா உங்களாலான உதவிய, பங்களிப்ப நீங்க பண்ணலாம். அதுக்கு நீங்க முதல்ல போக வேண்டிய சைட் இது தான் 

ASACP | Association of Sites Advocating Child Protection - Report Child Pornography

இங்க போய் நீங்க நீக்கியே ஆகணும்ன்னு நினைக்குற குழந்தைகள் தொடர்பான பாலியல் சம்மந்தப்பட்ட பேஜஸ் ரிப்போர்ட் பண்ணலாம். 

சரி, உங்களான பங்களிப்ப கண்டிப்பா நீங்க குடுங்க. இப்போ கொஞ்சம் நான் சொல்றத காது குடுத்து கேக்கலாம் தானே....

முதல்ல நாம ஒரு விஷயம் புரிஞ்சிக்கணும். எந்த விஷயமாவும் இருக்கட்டும், எதுக்கெடுத்தாலும் இந்த சமூகத்தையே குறை சொல்லி பழகிட்டோம் நாம. பிரச்சனைன்னு ஒண்ணு வந்தா அடுத்தவங்கள ஈசியா கைகாட்டி பழி போட்டுடுறோம். ஏங்க, நான் தெரியாம தான் கேக்குறேன், இந்த சமூகம்னா என்ன? ஏன், அதுல நாம இல்லையா?

இந்த மாதிரி தவறான நடத்தை உள்ளவங்கள கண்டிக்குறது எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு நம்மள தற்காத்து கொள்ள வேண்டியது முக்கியம் இல்லையா? அதுவும் நம்மோட சந்தோசத்துக்காக, கைதட்டலும் பாராட்டும் வேணும்ங்குரதுக்காக ஒண்ணுமே தெரியாத நம்மோட பிஞ்சு குழந்தைய நாமளே பலியிடலாமா?

மறுபடியும் சொல்றேன், இத சரி பண்ணவே முடியாதான்னு கேட்டீங்கனா, போராடலாம், நம்மால முடிஞ்ச அளவு போராடலாம், ஆனா நாமளே அந்த பிணந்தின்னி கழுகுகளுக்கு இரை போடக் கூடாது. நான் சொல்றது புரிஞ்சுதுன்னா நல்லதுங்க, இல்லனா அனுபவிச்சு தெரிஞ்சுக்கோங்க. ஏன்னா அனுபவத்த விட சிறந்த ஆசான் வேற யாரும் கிடையாது பாருங்க...

பிஞ்சு குழந்தைகளை எட்ட நின்னு பூவாகவே பாத்து மகிழ்வோம், பறித்தும் கொடுக்க வேண்டாம், நுகர்ந்தும் பாக்க வேண்டாம்...

நான் தெளிவா இருக்கேங்க... நீங்களும் தெளிவா இருந்தா சந்தோசம்...

 

Wednesday, 20 November 2013

இணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்


சில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல இருந்து “மார்கழி பூவே, மார்கழி பூவே, உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்”ன்னு பாட்டு கேட்டுச்சு. உடனே மனசு உற்சாகம் ஆகிடுச்சு. அந்த உற்சாகம் உங்களுக்கும் வர வேண்டாமா? வாங்க அப்படியே உற்சாகத்தோட ஒரு வணக்கத்த வச்சுப்போம்.

அப்புறம், நாளைக்கு என்ன பதிவு போடலாம்னு நேத்து உக்காந்து யோசிச்சப்போ சோம்பல் வந்து என்கிட்ட அத நாளைக்கு பாத்துக்கலாம், இப்போ தூங்குற வழிய பாருன்னு மிரட்டோ மிரட்டுன்னு மிரட்டிடுச்சு. நானும் அதுக்கு பயந்துகிட்டு பம்மிகிட்டே போய் தூங்கிட்டேன். காலைல எழுந்து ஏதாவது பழைய கவிதை ஒன்ன ரீ-போஸ்ட் போடலாம்னு தான் இருந்தேன், ஆனா அதுக்குள்ள ஒரு விஷயம் கண்ணுல தட்டுபட்டுடுச்சி. அதென்ன விசயம்னு கேக்குறீங்களா? இந்தா அது பத்தி தானே சொல்ல வரேன், முழுசா படிங்க....

நானும் இந்த பேஸ் புக் வந்து கிட்டத்தட்ட வருஷம் மூணரை ஆகுதுங்க. நான் இங்க வந்தப்போ எல்லாருமே கொஞ்சம் ஒற்றுமையா ஜாலியா பழகிட்டு இருந்தாங்க. அதனால இங்க நான் பெரிய அளவுல மன உளச்சல அடைஞ்சதில்ல. ஆனா அத விட பெரிய ஆபத்துல சிக்கியிருக்கேன். அத பத்தி அப்புறமா ஒருநாள் கண்டிப்பா டீடைலா சொல்றேன். இப்போ நான் சொல்ல வரது பொண்ணுங்கள குறி வச்சு அவங்களுக்கு மனரீதியான தொல்லை குடுக்குற சில வக்கிரம் பிடிச்ச ஓநாய்ங்கள பத்தி.

இது நடந்து கிட்டத்தட்ட ஆறு மாசம் இருக்கும். நான் யூ.ஜி படிக்குறப்பவே அப்பா கைய எதிர்பார்க்காம சின்ன சின்னதா ப்ராஜெக்ட் பண்ணி குடுத்து அதுல இருந்து வர்ற காச என்னோட மனசுக்கு பிடிச்ச மாதிரி செலவு பண்ணி பழக்கம். இது என் அம்மா கத்து குடுத்தது. உனக்கு அடுத்தவங்களுக்கு உதவணும்னு தோணிச்சுனா அப்பா காச எடுத்து குடுக்கணும்னு நினைக்க கூடாது, நீ சம்பாதிச்சு குடுக்கணும்ன்னு அம்மா தான் இந்த ஐடியாவே எனக்கு சொல்லி குடுத்தாங்க. அதுல இருந்து நானும் அதையே பாலோ பண்ணிக்கிட்டு வரேன். நான் பி.ஹச்.டி ஜாயின் பண்ணப்போ ஒரு பொண்ணு எனக்கு அறிமுகம் ஆனா. அவளோட ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்க்கும் போதும் எனக்கு அப்படியே என்னை பாத்த மாதிரியே இருக்கும். அதனால அவள எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்போ தான், அவளுக்கு பீஸ் கட்ட முடியாத சூழ்நிலை, அதுக்கு மேல அவளால படிப்ப தொடர முடியாதுன்னு தெரிஞ்சுது. நான் ஏன் அவளுக்கு உதவக் கூடாதுன்னு கைல இருந்த காச அவ கிட்ட குடுத்துட்டேன். காசே இல்லாம நான் இருந்து பழக்கமில்ல. அதனால நான் ப்ராஜெக்ட் எழுதி தரேன், யாராவது தேவைனா சொல்லுங்கன்னு என்னோட எப்.பில ஆறு மாசம் முன்னாடி ஒரு ஸ்டேடஸ் போட்டேன்.

அதுல தான் ஒருத்தன் வந்து ஒரு கமன்ட் போட்டான், நான் நீங்க சொல்ல வரது எனக்கு புரியலீங்கன்னு அடுத்த கமன்ட் போட்டேன். அவ்வளவு தான், அவன் இன்பாக்ஸ் வந்துட்டான் (அதர்ஸ் போல்டர்ல தான், காரணம் அவன் என் பிரெண்ட் லிஸ்ட்ல கிடையாது). வந்தவன் ஹாய் டின்னு ஆரம்பிச்சான். சும்மாவே எனக்கு நல்லா தெரிஞ்சவங்க யாராவது டி-ன்னு சொன்னா சூர்ருனு கோபம் தலைக்கு ஏறும். இவன் என்ன பாத்து எப்படி சொல்லலாம்ன்னு கடுப்பாகிட்டேன் (நீ மட்டும் அவன், இவன்ன்னு சொல்லலாமான்னு கேட்டீங்கனா, இவனுக்கெல்லாம் மரியாத குடுத்தா தான் தப்பு). அப்பவே அவன உண்டு இல்லைன்னு ஆக்கியிருப்பேன், ஆனாலும் அந்த நேரம் வேற வேலைல இருந்ததால அப்படியே விட்டுட்டேன்.

அப்புறம், பிசில நான் அப்படியே அந்த விசயத்த மறந்தாச்சு. ஒரு வாரம் கழிச்சு அதர்ஸ் போல்டர் பக்கம் போனா, அந்த பொறம்போக்கு தொடர்ந்து எனக்கு மெச்சேஜ் அனுப்பிகிட்டே இருந்துருக்கான். அத்தனையும் வெளில சொல்ல முடியாத வார்த்தைகள். அதுலயும், உனக்கு பயமா இருந்தா வேற ஐ.டி தரேண்டி, அங்க வந்து பேசிடின்னு எனக்கே ஐடியா வேற குடுக்குறானாமாம். இவன ப்ளாக் பண்ணிட்டு போக எனக்கு கண்டிப்பா அதிக நேரம் ஆகாது. ஆனா இவன் எத்தன பேர் இன்பாக்ஸ்-ல இந்த மாதிரி பேசியிருப்பான். எத்தன பேர் வெளிலயே சொல்ல முடியாம மனசுக்குள்ள வெந்து போயிருப்பாங்க. அதனால தான் நான் அவன ரிபோர்ட் பண்ணி அப்புறமா ப்ளாக் பண்ணினேன். அதோட விடாம அவன் ஐடிய குறிப்பிட்டு ஒரு ஸ்டேடஸ்-ம் போட்டேன்.

அப்புறமா தான் தெரிஞ்சுது, அந்த பொறுக்கி இன்பாக்ஸ்ல வந்து பேசினான். சில பொறுக்கிங்க ஸ்டேடஸ்லயே வந்து அதோட புத்திய காட்டுதுங்க. ஒருத்தர் அவன் அப்படி என்ன பேசினான்ன்னு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இங்க போடு, அப்படி என்ன இருக்குன்னு பாக்கலாம்னு கேக்குறார் (பெரிய மனுசர் அக்கறைல கேக்குறாராம்). இன்னொருத்தன் அவன் கிட்ட அவனுக்கு ஏத்த மாதிரி பேசி அவன் நம்பர் வாங்குன்னு ஐடியா குடுக்குறான். அவன் தான் சாக்கடைன்னு தெரியுது, இதுல நாம வேற அவனுக்கு ஏத்த மாதிரி வளைஞ்சி போகணுமாம். இதுல என் மேல அக்கறை உள்ளவங்க, பதறிக்கிட்டு தயவு செய்து ஸ்க்ரீன் ஷாட் போட்டுடாதன்னு தனியா வந்து சொன்னாங்க. அந்த அளவு நானும் முட்டாள் இல்லன்னு நானும் அவங்களுக்கு பதில் சொன்னேன். கொஞ்சம் நிம்மதியா போய்ட்டாங்க.

அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தப்போ தான் என்னோட பிரெண்ட் எனக்கு ஹெல்ப் பண்றதா சொன்னாங்க. இந்த மாதிரி ஆட்கள உளவியல் ரீதியா தான் அணுகணும்ன்னு சொல்லிட்டு போனவங்க, அப்புறமா அவனை பற்றி சொன்ன விஷயங்கள் கேட்டு எனக்கு தலை சுற்றி போச்சு.

அவன் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்துல மலேசியாவுல வேலை பாக்குறானாம். ஊருல அம்மா, மனைவி குழந்தைகள் எல்லாரும் இருக்குறாங்களாம். இவனோட பொழுது போக்கே குத்துமதிப்பா பொண்ணுகளுக்கு தூண்டில் போட வேண்டியது, ஒண்ணு அவங்க வழிக்கு வந்தா அப்படியே அவங்க கிட்ட பேசிகிட்டு, அலுக்குறப்போ அவங்க அக்கௌன்ட் வாங்கி அத ஹாக் பண்ண வேண்டியது, ரெண்டாவது, வழிக்கு வராத பொண்ணுங்ககிட்ட வேற ஐ.டில வந்து, நல்ல பையனா பேசி, அவங்களோட நட்ப்ப சம்பாதிச்சு, அவன் மேல நம்பிக்கைய வர வச்சு அவங்க ஐ.டிய ஹாக் பண்றது, மூணாவது, பாக்க கொஞ்சம் அழகா இருக்குற பசங்க கூட நல்லவனா பேசி, அவங்க கிட்ட நட்பா இருந்து அவங்க ஐ.டிய ஹாக் பண்றது. இதெல்லாம் அவன் பொழுது போக்காவே பண்ணிக்கிட்டு இருக்கானாம்.

அப்படினா, இவன் யூஸ் பண்ற ஐ.டிக்கள் யாரோ ஒருத்தருடைய ஒரிஜினல் ஐடிக்கள். அவங்க போட்டு வச்சிருக்குற பெர்சனல் போட்டோஸ், அவங்க நட்பு வட்டம்னு எல்லாமே இவன் கைல. இதனால இன்னும் அதிகமா பல பேர் அவன ஒரிஜினல்ன்னு நம்பி அவன் கிட்ட பழகுவாங்க.

கேக்க கேக்க எனக்கு தல சுத்திடுச்சு. அப்படினா நாம நம்மோட பிரெண்ட்ன்னு ஒருத்தங்கள நினச்சா, அவங்க ஐடி இன்னொருத்தன் கைக்கு போக வாய்ப்பு இருக்கான்னு. இந்த மாதிரியெல்லாம் கூட நடக்குமான்னு நான் ரொம்பவே குழம்பி போயிட்டேன். அப்போ தான் என் பிரெண்ட் சொன்னாங்க, அவனோட குறிக்கோள் எதுவா வேணா இருக்கலாம், ஆனா அவன் கிட்ட பேசுறவங்களோட டீடைல்ஸ் எடுத்து வைக்குறதோட இல்லாம அவங்க போன் நம்பரையும் அவன் வாங்கி வச்சுக்கிறான். இதனால அவனால பாதிக்கப்பட்ட பெண்களால பயந்துகிட்டு வெளில சொல்ல முடியாம தவிக்குறாங்கன்னு. அவன் ஹாக் செய்யப்பட்ட ஒரிஜினல் ஐ.டியில போய் பேசுறதால, அவன் மேல சந்தேகம் வர்றது குறைவுன்னும், பெண்கள் ஐ.டில ஆண்கள்கிட்டயும், ஆண்கள் ஐ.டில பெண்கள் கிட்டயும் பேசுறான்னும் சொன்னாங்க.

இது நடந்து ஆறு மாசத்துக்கு அப்புறம், என் கிட்ட அவன் பேசின ஐ.டிய ரிபோர்ட் குடுத்ததால எப். பி அத முடக்கிடுச்சு. ஆனா அவன் வேற ஐ.டில இப்போ வேற பெண்கள் கிட்ட பேச முயற்சி பண்ண ஆரம்பிச்சுட்டான். சமீபத்துல என்னை மாதிரியே ஒருத்தங்க இத பத்தி ஸ்டேடஸ் போட. அது என்ன ஏதுன்னு நான் விசாரிக்குறப்போ தான், அதே ஆள் தான்ங்குறது தெரிய வந்துச்சு.

இப்போ நாம எச்சரிக்கையா இருக்க வேண்டியது இதுதான், இது நான், இது என் அம்மா, இது என் மனைவி, இல்ல தங்கை, இல்ல கணவர், இது என் குடும்பம்ன்னு யாராவது நம்ம கிட்ட அவங்க பேஸ் புக்ல இருக்குற போட்டோஸ் காட்டினாலும் அத எல்லாம் நம்பி, நம்மோட டீடைல்ஸ் தயவு செய்து யாரும் குடுத்துடாதீங்க. இந்த மாதிரி நம்பிக்கைய ஊட்டி நம்மோட ஐ.டிய திருடி, நம்மோட குடும்பத்த தன்னோடதுன்னு இன்னொருத்தங்க கிட்ட சொல்லிட்டு இருப்பான் ஒருத்தன். இங்க யாரை நம்புறது, யாரை நம்பக்கூடாதுன்னே தெரியாம தலைய புடிச்சுக்குற நிலைமை தான்.

அப்படினா, இதுக்கெல்லாம் வேற வழியே இல்லையா? இவன் மாதிரி ஆட்கள தண்டிக்க வாய்ப்பே இல்லையானா கண்டிப்பா இருக்கு. இங்க பிரச்சனையே, எல்லோரும் அவங்கவங்களுக்கு வராத வரை நமக்கென்னன்னு இருக்குறதும், பிரச்சனை வந்தவங்களும் வெளில தெரிஞ்சா நமக்கு தான் அவமானம்ன்னு நினைச்சுக்கிட்டு அமைதியா இருக்குறதும் தான் அந்த மாதிரி ஆட்கள் தப்பு செய்ய ஈசியா வழி அமைச்சு குடுக்குது.

இதுக்காகவே இப்போ பேஸ் புக்ல தனியா இணைய பெண்கள் பாதுகாப்பு குழு-ன்னு ஒரு பேஜ் ஆரம்பிச்சிருக்காங்க. அத ஒரு சங்கமா மாற்ற முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிச்சிருக்காங்க. இத பத்தி விரிவான ஒரு விளக்கத்த நாம அடுத்த பதிவுல பாக்கலாம். இப்போ இத படிக்குற நீங்க எப்.பில இருந்தா கண்டிப்பா இந்த பக்கத்த லைக் பண்றதோட இல்லாம இவங்களுக்கு தேவையான ஒத்துழைப்பும் குடுங்க. நாம ஒண்ணா, ஒற்றுமையா இருந்தா கண்டிப்பா இந்த மாதிரி ஆட்களுக்கு ஒரு பயம் வரும். அப்படி ஒரு பயத்த நாம காட்டிட்டாலே சில பயந்தாங்கொள்ளி குற்றவாளிங்க திருந்திட வாய்ப்புண்டு. மீதி இருக்குற சமூக விரோதிகள நாம சட்டத்தோட பிடியில கூட கொண்டு போய் நிறுத்தலாம்.


வாங்க, இப்போ முதல் அடி எடுத்து வைப்போம்.

.