இத நான் எழுதலாமா வேணாமான்னு தெரியாம கொஞ்ச நேரம் குழம்பி தான் இருந்தேன். காரணம், ஒரு விசயத்த எடுத்து பேச ஆரம்பிக்கும் போது தப்பான தகவலோ இல்ல முரணான தகவலோ குடுத்துடக் கூடாதுன்னு எப்பவும் தீர்க்கமா இருப்பேன். ஆனா இப்ப நான் பேசலாம்னு முடிவெடுத்த விசயத்த பத்தி எனக்கு எதுவுமே தெரியாது.
சரி, தெரியாத விசயத்த ஏன் பேசுவானேன்னு கேட்டீங்கனா, அப்போ பேசவே பேசாம இருந்துட்டா எப்ப தான் தெளிவடையுறது?
அதனால, ஒருவேளை நான் ஏதாவது புரிதல் இல்லாம எழுதியிருக்கலாம், இல்ல, எனக்கு தெரிஞ்சதுன்னு தப்பான தகவல குடுத்துருக்கலாம், பேசலாம், ஆரோக்கியமான விசயமா மட்டும் பேசலாம்.
ஏற்கனவே பொதுவெளில இந்த மாதிரி எல்லாம் பேசக் கூடாதுன்னு சட்டம் கிட்டம் போட்டு வச்சிருக்காங்களான்னு தெரியல, ஆனா இத பத்தி பேச நினைச்சாலே என்ன ஏதுன்னு கூட யோசிக்காம பட்டுன்னு ஒரு முத்திரைய குத்திட்டு போய்டுறாங்க.
நான் இத பத்தி பேசணும்னு முடிவெடுத்த காரணம் நேத்து நந்து என்கிட்ட கேட்ட கேள்வி.
தன்னோட பிரெண்ட் முருகேஷ்ன்னு ஒரு பையன கூட்டிட்டு வந்து அறிமுகப் படுத்தினா. சரி வான்னு உக்கார வச்சி பேசிட்டு இருந்தேன். அப்படியே என்னோட ரூம் எல்லாம் கிளீன் பண்ணி, புக்ஸ் எல்லாம் அடுக்கி வச்சுட்டே ஹால்ல வந்து உக்காந்தோம் எல்லாரும்.
கொஞ்ச நேரம் மீனையே பாத்துட்டு இருந்தா. அக்கா, எனக்கு சமையல் கத்துக்கணும்னு ஆசையா இருக்கு, இந்த சண்டே நாம சிக்கன் சமைக்கலாமான்னு கேட்டா.
இந்த சண்டேவா? இல்ல, முடியாது, இன்னும் நாலஞ்சு நாளைக்கு என்னை தொல்லைப் பண்ண நினைக்காதன்னேன்.
ஏன், ஏன், தொல்லைப் பண்ண கூடாது? – இது அவ
உடம்பு சரியில்லாம ஆகும்டி – இது நான்
ஹஹா உடம்பு சரியில்லாம போனா கூட சொல்லிட்டு தான் வருமா? லூசாக்கா நீ? – அவ தான்
அதெல்லாம் அப்படித் தான். சொன்னா கேட்டுக்கோ – நான்
அப்படி என்ன தான் உனக்கு உடம்பு சரியில்லாம வரும்? – அவ
வயிறு வலிக்கும்டி – நான்
அப்ப அடுத்த நாள் – அவ
மூணு நாலு நாளைக்கு அப்படி தான் இருக்கும். நான் அசைய மாட்டேன் – நான்
அப்படினா மாசா மாசம் வலிக்குமா? – அவ
ஆமா – நான்
கொஞ்ச நேரம் அமைதியாவே இருந்தா. இத்தனையும் பக்கத்துல உக்காந்து எதுவுமே கவனிக்காத மாதிரி எங்கயோ பாத்துட்டு காலாட்டிட்டு இருந்தான் முருகேஷ்.
திடீர்னு நந்து அடுத்த கேள்விய கேட்டா.
அக்கா, எங்க ஸ்கூல்ல லலிதா ப்ளஸ் டூ படிக்குறாங்க. அவங்க சொன்னாங்க, பெரிய மனுசி ஆகலனா குழந்தை பிறக்காதாம். உண்மையா?
எனக்கு புரியல, இதெல்லாம் இந்த வயசுல இவளுக்கு எப்படி விளக்கி சொல்றது, இல்லனா அப்படியே விளக்கி சொல்றதா இருந்தாலும் இது சரியான நேரம் தானா? பக்கத்துல வேற பத்து வயசுல ஒரு பையன் உக்காந்துட்டு இருக்கான். சரி ஏதாவது சொல்ல ட்ரை பண்ணுவோம்னு ஆரம்பிச்சேன்.
அவ சொன்னது நிஜம் தான். வயசுக்கு வரலனா குழந்தை பிறக்காது.
ஏன் அப்படி?
ஏன்னா, பிறக்குறப்ப எல்லாருமே குழந்தைங்க தான். அவங்க ஒரு குழந்தை பெத்துக்குறதுக்கு அவங்க உடம்புல மாற்றம் வர வேண்டியிருக்கு. அதனால தான் அவங்க வயசுக்கு வராங்க.
அப்படினா மாசா மாசம் ரெத்தம் வருமா?
வரும்.
சட்டுன்னு முருகேஷ் கிட்ட திரும்பி, அப்படினா பாய்ஸ்க்கு எப்படி? அவங்களுக்கும் ரெத்தம் வருமா? நீங்க எல்லாம் பெரிய மனுஷன் ஆவுறத எப்படி தெரிஞ்சுப்பீங்க?
அவ இப்படி ஒரு கேள்வி திடீர்னு கேப்பான்னு நானும் எதிர்பாக்கல, முருகேசும் எதிர்பாக்கல. சரி, அவன் என்ன தான் சொல்றான்னு பாக்கலாம்னு அவனையே பாத்தேன்.
கூச்சமா நெளிஞ்சான்.
அவன காப்பாத்தலாம்ன்னு நினச்சு, அதெல்லாம் அவங்களே தெரிஞ்சுப்பாங்கன்னு சொன்னேன்.
அவன் டக்குன்னு, அக்கா, அந்த மீனுக்கு என்ன இரை போடுவீங்கன்னு பேச்சை மாத்திட்டான். பேச்சும் திசை மாறி போய்டுச்சு.
அவங்கள அனுப்பி வச்சுட்டு தனியா வந்து உக்காந்து யோசிக்க ஆரம்பிச்சேன்.
பெண் சுதந்திரம், பெண்களுக்கான கொடுமைகள், பெண்களுக்கான அவஸ்தைகள்ன்னு இன்னிக்கி பெண்கள பத்தி பெண்கள் கூட சுதந்திரமா பேச ஆரம்பிச்சாச்சு. பெண்கள் படுற கஷ்டம் என்னென்னன்னு அவங்களால பொதுப்படையா பேசவும் முடியுது. ஏன், தன்னோட வயசுல இருக்குற பையன் கிட்ட நீ எப்படி வயசுக்கு வருவன்னு தயக்கமே இல்லாம நந்துவால கேக்க முடியுது. அத கேக்குறப்ப அவ கிட்ட எந்த தடுமாற்றமும் இல்ல. நேருக்கு நேரா அவன பாத்து அந்த கேள்விய கேக்குறா அவ. அப்படினா ஒரு சுதந்திரமான தலைமுறை பிறந்துடுச்சுன்னு தான அர்த்தம்?
நானும் கூட சின்ன வயசுல தைரியமா பேசி திரிஞ்சிருக்கேன். எந்த சந்தேகம்னாலும் தீத்து வைக்க அம்மா இருந்தா. பீரியட்ஸ், குழந்தை பிறப்பு, குடும்ப கட்டுப்பாடு, குழந்தை எப்படி பிறக்கும், சிலருக்கு ஏன் குழந்தை பிறக்க மாட்டேங்குது, எக்ஸ் க்ரோமோசோம், வொய் க்ரோமோசோம், ஹீட் பீரியர்ட்ன்னு எல்லாம் தெரிஞ்சி வச்சுட்டு தயக்கமே இல்லாம ஊர்ல உள்ள பொம்பளைங்களுக்கு எல்லாம் விளக்கம் குடுத்துட்டு இருப்பேன். கூடவே தான் என்னோட பிரெண்ட்ஸ் இருப்பாங்க. ஆனா அதே பசங்களுக்கு என்னென்ன பிரச்சனை வரும்னு நான் கேட்டதும் இல்ல, யோசிச்சதும் இல்ல. ஏன் அவனுங்களே பெண்களோட கஷ்டம் அவஸ்தைன்னு தான் பேசியிருக்கான்களே தவிர, ஆண்களோட விஷயங்கள் பத்தி பேசினது கூட இல்ல. பேசணும்னு யோசிச்சது கூட இல்ல.
ஆக, பாலியல் சம்மந்தமான ஒரு புரிதல் பெண்களுக்கு வர ஆரம்பிச்சுடுச்சு. அதப் பத்தி பேச நிறைய ஆண்களும் களத்துல இறங்கிட்டாங்க.
ஆனா இந்த ஆம்பள பசங்கள யாரு தான் கவனிக்குறா? அவங்களுக்குன்னு பிரச்சனைகளே இருக்காதா?
பொம்பள புள்ளைங்க விசயத்த பிரெண்ட்ஸ் மூலமா தெரிஞ்சுக்குறாங்க. அதுல வர்ற சந்தேகத்த வீட்ல உள்ள பெரியவங்க கிட்ட கேட்டு தெளிவாகிடுறாங்க. அதுவே பசங்களும் பிரெண்ட்ஸ் மூலமா தான் தெரிஞ்சுக்குறாங்க. ஆனா வர்ற சந்தேகத்த பெரியவங்க கிட்ட கேட்டுக்குற அளவு அவங்களுக்கு நாம சுதந்திரம் குடுத்துருக்கோமா?
அப்படி ஒரு பையன் ஏதாவது கேட்டுட்டா அத அருவெருப்பாவோ இல்ல, இதெல்லாம் நீ பேசக் கூடாது, அதெல்லாம் நீயா தெரிஞ்சுப்பன்னு அவன தவிர்த்து தான விடுறோம்.
இதே சந்தேகத்த பிரெண்ட் ஒருத்தன்கிட்ட நானும் கேட்டேன். நீங்க எல்லாம் எப்படிடா வயசுக்கு வர்றீங்க? அத எப்படி தெரிஞ்சுப்பீங்க?ன்னு.
இதுக்கெல்லாம் தனியாவா ட்யூசன் போக முடியும்? பக்கத்து வீட்ல ஏதாவது பொண்ணை பாத்தா சட்டுன்னு வந்துரும். அப்ப தான் பெரிய மனுஷன் ஆகிட்டோம்னு தெரிஞ்சுக்குறோம். அப்புறம் அதப் பத்தி விரிவா தெரிஞ்சுக்க மஞ்சள் பத்திரிக்கையும், ப்ளூ பிலிமும் பிரெண்ட்ஸ் தருவாங்க. அத எல்லாம் பாத்து தெரிஞ்சுக்க வேண்டியது தான்னு.
அவனுக்குள்ள ஏற்படுற சந்தேகத்த அவனே தான் தீத்துக்கணும். சரி, அதுக்கான தீர்வையாவது இந்த இன்டர்நெட், பத்திரிக்கை ஊடகங்கள் செய்து வச்சிருக்கா? அப்படியே இருந்தாலும் குவிஞ்சு கிடக்குற குப்பைகள் தான அவன ஈசியா ஈர்த்துடுது. அந்த குப்பைய ஒதுக்கி, தேவையானத மட்டும் எடுத்துக்க பசங்களுக்கு எத்தன பக்குவம் வர வேண்டியிருக்கு.
தானாவே புரிஞ்சுக்குற பையன் இங்க காலங்காலமா எல்லார் மனசுல ஊறிப் போன அழுக்கை தான் அழகுன்னு புரிஞ்சுப்பான். பொண்ணுங்கனா அவங்க தன்னோட இச்சைய தீத்துக்குற ஒரு உயிரினம்ன்னு தான் புரிஞ்சுப்பான். அவனோட ஆசைத் தீர சரியான வழி என்னன்னு தெரியாம தனக்கு புரிஞ்ச மாதிரி கைல கிடைக்குற பொண்ணை தூக்கிட்டு போய் ரேப் பண்ணத் தான் செய்வான்.
அச்சச்சோ, என்னமோ என் உடம்புல இருந்து வருது, இது என்னன்னு அவனால பெரியவங்க கிட்ட கேக்கவா முடியும்? அதுக்கான சுதந்திரத்தையோ அது பத்தின அவனோட கூச்சத்தையோ போக்கணும்னு எந்த பெத்தவங்களாவது யோசிச்சிருக்காங்களா?
டெல்லி ரேப் கேஸ்ல கேட்டானே, அவ ஒத்துழைச்சிருந்தா அவள கொல்ல வேண்டிய அவசியம் வந்திருக்காதேன்னு, அவனோட புரிதல் அவ்வளவு தான். இந்த சமூகம் அவனுக்கு இவ்வளவு தான சொல்லிக் குடுத்துருக்கு.
பெண் பருவமடைய தயாராகும்போது அவளோட உடல், மன மாற்றங்கள பத்தி இப்ப பேச நிறைய பேர் இருக்காங்க, ஆனா அதுவே பசங்கள பாத்து அவங்களோட மாற்றங்களை புரிஞ்சு அவங்கள சரியான பாதைல திருப்புற வேலைய இந்த சமூகம் பண்ணிட்டு தான் இருக்கா? எனக்கு தான் அதப் பத்தி தெரியலையான்னு எனக்கு புரியல.
நாளைக்கு ஒரு பையனுக்கு அம்மாவா ஆனா, இத எல்லாம் தெரிஞ்சுக்காம நான் எப்படி அவனை எதிர்க்கொள்றது? பொம்பள புள்ளைய பெத்து அவள சகல சுதந்திரத்தோட வளர்த்து விடணும்னு நினைக்குற நான் எனக்குன்னு ஒரு ஆம்பள புள்ள பொறந்தா அட்லீஸ்ட் கேள்வி கேட்டு தெளிவடையுற அடுத்த ஜெனெரேசனா அவன வளர்த்தெடுக்க வேணாமா? அதுக்கு நான் பசங்கள பத்தி தெரிஞ்சுக்க வேணாமா?
இது கூட ஒரு விதத்துல பாலியல் வன்முறை தானா? அவனுக்கான கேள்வி கேக்குற உரிமைகள கூட நாம மறுத்து தான் வச்சிருக்கோமா?
.