Saturday 29 March 2014

கதையும் தத்துவமும்- 2


வாங்களேன், உங்கள ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்..

எந்த இடம்ன்னு கேக்குறீங்களா? அது ஒரு அழகான காடு... இந்த காடு ஆப்ரிக்கால இருக்கு. இங்க நாம ஒரு அழகான உயிரினத்த தேடி வந்திருக்கோம்.

உயிரினம்னாலே அது பாக்குறதுக்கு அழகா இருக்கணும்ன்னு அவசியம் இல்ல... இன்னொரு விஷயம், இந்த உலகத்துல எல்லாமே அழகு தான். அதை பாக்குறவங்க, அத ஏத்துக்குற பக்குவத்துல தான் அழகுங்குற வார்த்தையோட அளவுகோல் இருக்கு...

சரி, கொஞ்சம் சத்தம் போடாம வாங்க... யாரையும் நாம தொந்தரவு பண்ணிடக் கூடாது...

அங்க பாத்தீங்களா, ஒரு கூட்டம் என்னவோ ரொம்ப சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கு... வாங்க, கொஞ்சம் பக்கத்துல போய் பாப்போம்.

இவங்க தான் நாம தேடி வந்தவங்க. சின்னப் புள்ளைங்க பிரஷ் எடுத்து கன்னாபின்னான்னு கலர் அடிச்சி வச்ச மாதிரி இருக்குற இவங்க, ஆமா நாய்கள் தான்... ஆனா காட்டு நாய்கள்...

பாருங்களேன், ஒரு வயசான நாய் ரொம்ப முடியாம இருக்கு போல. சுத்தி நின்னு ஆறுதல் சொல்லிட்டு இருக்காங்க. தூரத்துல தள்ளி நின்னு பாத்துட்டு இருக்குற நமக்கு வேற என்ன தெரிஞ்சிட போகுது? ஆனா, அந்த கும்பலோட வயசான மதிப்புமிக்க உயிர் கலங்கிட கூடாதுன்னு இவங்க எல்லாம் அவங்களால ஆனத செய்துட்டு இருக்காங்க...

பாத்தீங்களா, கூட்டு குடும்பமா எவ்வளவு ஒற்றுமையா வாழுறாங்க... ஹே... அங்க பாருங்க, பத்து பனிரெண்டு குட்டிங்க ஓடி வர்றாங்க... எல்லாரையும் ஒருத்தங்க பாத்துட்டு இருக்காங்க...

வேட்டையாடிட்டு வந்தத கூட அமைதியா தான் சாப்ட்டுட்டு இருக்காங்க... இந்த கும்பல்ல ஆண் நாய்கள் அதிகமா இருக்கு. ஆனாலும் சண்டைகள் இவங்களுக்குள்ள இல்ல. குடும்ப தலைவனும் தலைவியும் சொல்றத கேட்டு அவங்க வார்த்தைக்கு கீழ்படிஞ்சுட்டு இருக்காங்க...

இங்க எந்த அத்துமீறல்களும் இல்ல, ராக்கிங் இல்ல, ஒழுக்கமின்மை இல்ல....

எனக்கு ஒரு டவுட்ங்க... மனுசன்கள்ல ஒருத்தர நாம திட்டணும்னா நாயேன்னு திட்டுறாங்க... அப்படி திட்டு வாங்குறத பெரிய கவுரவ குறைச்சலாவும் நினைக்குறாங்க... ஒழுக்கங்கள் கெட்டு சீரழிஞ்சு போறவங்கள நாய் பிறவின்னு சொல்றாங்க...

கொஞ்சம் யோசிச்சு பாருங்க, இந்த மனுஷ வாடையே இல்லாம வாழுற இந்த இனம் எவ்வளவு கட்டுகோப்பா வாழுது. எப்போ மனுஷன் அவன் தேவைக்காக நாய்கள வளர்க்க ஆரம்பிச்சானோ, அப்போ தான் மனுஷ புத்தி நாய்களுக்கு ஒட்டிகிச்சு...

சொல்லப்போனா, ஒழுக்கம் தவறி போற நாய்கள பாத்து அவங்க தான், மனுஷ பிறவியேன்னு திட்டணும்...

இவ்வளவு அழகான நடத்தையுள்ள, ஒரு கூட்டு குடும்பத்த கட்டிக்காக்குற, வயசானவங்கள போற்றி பாத்துகாக்குற ஒரு இனத்த பாத்தாவது, நாமளும் வாழ்க்கைனா என்னன்னு கத்துக்கணும்.... 

இப்போதைக்கு இது போதும், நான் அப்புறமா வர்றேன்...

Friday 28 March 2014

மிஸ்டர் பீன் – தி அல்டிமேட் டிசாஸ்டர் (Mr Bean - The Ultimate Disaster) (திரைவிமர்சனம்)


மிஸ்டர் பீன்.... இந்த பேரை கேட்டாலே விழுந்து விழுந்து சிரிச்ச காலம் எல்லாம் உண்டு. ஆனா அது ரொம்ப ரொம்ப குட்டி புள்ளையா இருந்தப்போ. எந்த விதமான டயலாக்கும் இல்லாம பின்னணி இசைலயே காமடிய சேர்த்துட்டு, முட்ட கண்ண வச்சுட்டு திரு திருன்னு முழிச்சுட்டு, பேக்கு மாதிரி மூஞ்சிய வச்சுட்டு சேட்டைகள் பண்ற மிஸ்டர் பீன் ஏனோ எனக்கு ஹீரோவா தெரிஞ்சார்... அந்த அளவு விழுந்து விழுந்து சிரிக்க வைப்பார்...

அப்புறமா, எப்பவுமே சேட்டை பண்ணிட்டு, வீட்டை விட்டு வெளியிலயே சுத்த ஆரம்பிச்ச காலங்கள்ல பீன் கொஞ்சம் கொஞ்சமா என்னோட ஹீரோ இமேஜ்ல இருந்து விலகி, எதோ கோமாளின்னு ஒதுங்கி போற அளவு ஆகி போச்சு... அப்புறமா நான் மிஸ்டர் பீன் பத்தின எந்த படத்தையும் பாத்ததே இல்ல....

ஒரு வருஷம் முன்னாடி பிரெண்ட் ஒருத்தன் கொஞ்சம் படங்கள் தந்தான். நாம தான் படம் பாக்குறதுல சூப்பர் பாஸ்ட் ஆச்சே, போன வாரம் தான் அவன் என்னென்ன படங்கள் தந்துருக்கான்னு பாத்தேன். அதுல மிஸ்டர் பீன் படங்கள் ரெண்டு இருந்துச்சு...

போன வாரமே அத பாக்க முயற்சி பண்ணி அப்புறம் போர் அடிக்கும்னு நானே முடிவு பண்ணி பாக்காம விட்டுட்டேன். அப்புறமா இன்னிக்கி தான் வழக்கத்துக்கு மாறா ரொம்ப போர் அடிக்குதேன்னு படத்த பாக்க ஆரம்பிச்சேன்.

இந்த படத்த காமடி படமா பாக்க ஆரம்பிச்சிருந்தேன்னா கண்டிப்பா போர் அடிச்சிருக்கும். ஆனா, இது ஒரு செண்டிமெண்ட் படம். படம் முழுக்க எதோ ஒரு வகைல ஒரு உணர்வ தெளிச்சி விட்டுருக்காங்க...

படம் ஆரம்பிக்குறப்பவே வட்ட மேஜை மாநாடு மாதிரி ஒரு கும்பல் தீவிரமா முகத்த வச்சுட்டு எதையோ டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க... அப்படியே அடுத்த ஷாட்-ல பீன் என்ட்ரி... அவசர அவசரமா கிளம்புற அவரு, காப்பி கோப்பைய தட்டி விட, சீனி, பால், தூள்னு எல்லாத்தையும் வாய்ல போட்டே கொப்பளிச்சே கலக்கி குடிச்சு முடிக்குறார். ஒரு ஆர்ட் கேலரியில வேலை பாக்குற அவரு டூட்டி நேரத்துல தூங்கி வழியிறாரு...

இப்படி சதா சர்வ காலமும் தூங்கி வழியுற பீன அம்பது மில்லியன் டாலருக்கு வாங்கின ஒரு வரைபடத்த பாதுக்காக்குற பணில கோர்த்து விட்டுடுறாங்க ஆர்ட் கேலரி மக்கள். இவரே ஒரு தூங்குமூஞ்சி, இவர வேற செக்யூரிட்டியா போட்டா விளங்கவா போகுது?

அப்புறம் என்ன? படம் முழுக்க இவர் பண்ற அலம்பல் தான்.

அந்த படத்த பாதுகாக்க வர்றப்பவே இவர் ஏர்போர்ட்ல பண்ற அட்டகாசம் இருக்கே... அங்க இருக்குற போலிஸ்க்காரர் துப்பாக்கிய பாத்து இவரும் துப்பாக்கிய எடுக்க ட்ரை பண்ண, இவர தீவிரவாதின்னு போலிஸ் துரத்த, ஒரு இடத்துல இவர மடக்கி பிடிக்குற போலிஸ் “புட் யுவர் கன் டௌன்”ன்னு சொன்னதும் நடுங்கிகிட்டே துப்பாக்கிய எடுத்து கீழ வைப்பார் பாருங்க.... ஹஹா வயிறு குலுங்க சிரிக்க வச்சிடுச்சு.

போற இடத்துல மிஸ்டர் டேவிட்டோட குடும்பத்தோட தங்கிக்குறார். இந்த டேவிட், அந்த வரைப்படத்த பாதுக்காக்குற பெரிய பொறுப்புல இருக்குறவர். அந்த குடும்பத்தோட பீனுக்கு ஏற்படுற அனுபவங்கள், அவர் பண்ற முட்டாள்த்தனத்தால பாழாகி போற அந்த வரைப்படம்ன்னு படம் கொஞ்சம் திக் திக்ன்னு போகுது.

நம்மாளு தான் எதுக்கும் அஞ்சாதவராச்சே, பிரச்சனைய சமாளிச்சாரா, அந்த வரைப்படம் கடைசியில என்னதான் ஆச்சுங்குற கேள்விக்கு எல்லாம் பதில சொல்லிட்டு சுபம் சொல்லி தூங்க போறார்...

இதுல பீனை விட என்னை அதிகம் கவர்ந்தவர்ன்னு பாத்தீங்கனா அது டேவிட் தான்.

பீன் பண்ற அழிச்சாட்டியம் பொறுக்க முடியாம வீட்டை விட்டு கிளம்பிடுற அவரோட குடும்பத்த விட்டுட்டு, பீன் கூட சுத்துறார் டேவிட்... சின்னப்புள்ளைல தொலைச்சுட்ட குழந்தைத்தனத்த பீன் கிட்ட பாக்குற அவரு, விரும்புராரோ இல்லையோ, பீன் கூடவே இருக்குறார்.... அட, ரெண்டுபேரும் பாத்ரூம்ல குளிக்குறதுக்கு சின்னப்புள்ள மாதிரி சண்டையெல்லாம் போட்டுக்குறாங்க... சமைச்சு குடுக்குறேன் பேர்வழின்னு சமையல் அறையையே அதகளமாக்கி வச்சிட்டு அப்பாவி மாதிரி முளிக்குற பீன பாத்து இவர் ஒரு லுக் விடுவார் பாருங்க.... ஹஹா... செம.... பீன் பற்றி தப்பான தகவல் குடுத்து தன்னோட கோர்த்து விட்டுட்டாங்கன்னு தெரிஞ்ச உடனே மனுஷன் விரக்தியா அதையும் ஏத்துக்கிட்டு ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்க... பலத்த கைதட்டல் அவருக்கு...

அரும்பாடு பட்டு தனக்கு கிடைச்ச பெரிய பொறுப்பு பீனால போகப் போகுதுன்னு தெரிஞ்சும் ஏனோ பீன் மேல அதிகமா கோபத்த காட்டாம தனக்குள்ளயே வேதனை பட்டுக்குறார். பார்ல போய் தண்ணியடிச்சுட்டு பீன் கைய புடிச்சுட்டே தெருவுல சுத்துறார். அவர் படுற மனவேதனைய சகிக்க முடியாம, பீன் எப்படியாவது தான் நாசம் பண்ணின அந்த வரைபடத்த சரிபண்ண முடியுமான்னு முயற்சி பண்றார்...

படம் முடிஞ்சுதுன்னு நினைக்குறப்பவே கதையை இழுக்குறதுக்காக கொஞ்சம் மொக்கை போட்ருக்காங்க. எல்லாம் சுபமேன்னு வெளில வர்ற டேவிட்டுக்கு அவர் பொண்ணு விபத்துல மாட்டிக்குறதா தகவல் வருது. அவர் கூடவே மருத்துவமனைக்கு போற பீன், அங்க பண்ற சேட்டைகள் சிரிக்க வேணா வைக்கலாம், ஆனா அறிவு, அவர் பண்றது படு அபத்தம், இப்படி பட்ட சீன்ஸ் வச்சிருக்கவே கூடாதுன்னு என் மண்டைல ஓங்கி அடிச்சு அடிச்சு சொல்லிச்சு. அவ்வ்வ்வ்....

அந்த விபத்துக்கு அப்புறம், பீனை முழுசா ஏத்துக்குற டேவிட் குடும்பத்தோட சந்தோசமா கொஞ்ச நாள் கழிக்குறார் பீன்....

எல்லார்கிட்ட இருந்தும் டாட்டா காட்டி கிளம்பி, தன்னை வழியனுப்பி விட வர்ற டேவிட்ட ஓடி வந்து கட்டிக்குற போது, கண்ணுல தண்ணி வந்துடுது... லவ்வர்ஸ் மட்டும் தான் கட்டிக்கணுமா என்ன? இவங்க கட்டிக்குறத பாருங்க... என்ன ஒரு சீன்... அந்த கொஞ்சல்ஸ் பாக்கவே முழு படத்தையும் பாக்கலாம்...

இப்படி படம் முழுக்க முழுக்க ஒரு நட்போட பாசத்த அதிகம் காமடி கலக்காம தெளிச்சு விட்டுருக்காங்க...

ஆனாலும் எனக்கு பிடிக்காத சீன்னு பாத்தா, மூக்கு ஒழுகுறப்போ அத கர்சீப்ல அவர் சிந்துற சீன், வாந்தி எடுத்து வச்சிருக்குற பேப்பர் பைய பிடுங்கி ஊதி, தூங்கிட்டு இருக்குற மனுஷன் முகத்துக்கு நேரா அடிச்சி உடைக்குறது.... ஹய்யே.... மூஞ்சி சுளிக்க வச்சிடுச்சு. இதே சீனை சின்னப் புள்ளையா இருக்குறப்போ பாத்திருந்தா விழுந்து விழுந்து சிரிச்சிருப்பேனோ என்னவோ?

இத எழுதிட்டு இருக்கும் போது மறுபடியும் அந்த க்ளைமாக்ஸ் பாத்துட்டு இருக்கேன்.... கண்டிப்பா நீங்களும் பாருங்க.... உங்கள அறியாம ஒரு புன்னகை உதட்டுல வரும். இழந்து போன நட்புக்கள் கண்முன்னால வந்து ஹாய் சொல்லுவாங்க....

இப்படியே பாத்துட்டு இருந்தா எப்படி, போங்க போங்க, நீங்களும் உங்க பிரெண்ட்ஸ் பத்தி, அவங்க கூட லூசுத்தனமா சுத்தினத பத்தி யோசிச்சுட்டே இருங்க... நான் அப்புறமா வர்றேன்....


Thursday 27 March 2014

கதை நேரம் - கதையும் தத்துவமும்



ரொம்ப நாள் கழிச்சு மறுபடியும் ப்ளாக் பக்கம் வந்துருக்கேன். அதனால முதல்ல உங்கள எல்லாம் நான் ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போய் சுத்திக் காட்டலாம்னு நினைக்குறேன்... 

நாம இப்போ நின்னுட்டு இருக்குற காடு ஸ்ரீலங்கால இருக்கு. இங்க நாம வேடிக்கை பாத்துட்டே போகலாம் வாங்க.... 

அட, பயப்படாம வாங்க, நான் தான் கூட இருக்கேன்ல, ஒரு பயமும் இல்ல. இந்த சிங்கம், புலி, கரடி எல்லாம் என்னை கண்ட உடனே வாலை சுருட்டிட்டு பம்மிடும்.

இங்க, பெரிய பெரிய மரங்கள், தரையே பாக்க முடியாத வெயில், காலுக்கடியில சலசலத்து ஓடுற நீரோடை இப்படி எத்தனையோ இருந்தாலும் நாம இப்போ ஒரு விசித்திர ஜந்துவ தேடிப் போறோம்.

மான் அடிச்சு சாப்பிடுற புலி பாத்துருப்போம், ஏன், எலி புடிச்சி திங்குற காக்கா பாத்துருப்போம், பூச்சி புடிச்சி திங்குற செடி பாத்துருக்கீங்களா?

பாக்கலனா, நாம இப்போ அத தான் தேடி போயிட்டு இருக்கோம்...

அட, அங்க பாருங்க, ஒரு குரங்கு தண்ணி குடிச்சுட்டு இருக்கு. எதோ ஒரு செடில தண்ணி தேங்கி நிக்குது போல... பக்கத்துல போய் பாக்கலாம்.... எப்படியும் நாம பக்கத்துல போனா அந்த குரங்கு ஓடிடும்... 

குரங்கு போனா போகட்டும். நம்ம டார்ஜட் நாம தேடி வந்த ஜந்து தானே... இந்தா அந்த செடி பக்கத்துல நெருங்கிட்டோம்.

ஹை.... வித்யாசமா குடுவை மாதிரி இருக்குல... இது உள்ள மழைத் தண்ணி தேங்கி நிக்குது போல... அச்சோ, உள்ள ஒரு பல்லி இருக்கு பாருங்க... அவ்வ்வ்வ் பல்லி செத்து போச்சு...

இந்த பல்லிய கொன்னது யாருன்னு நினைக்குறீங்க, எல்லாம் இந்த செடி தான்... இதோட பெயர் தான் நெப்பன்தஸ்... இது ஒரு மாமிச உண்ணி. பொதுவா இத பிச்சர் பிளான்ட்ன்னு சொல்லுவாங்க.

இது ஒரு வகையான தேன் மாதிரி ஒரு திரவத்த சுரக்குது, அப்புறம் பூச்சிகள கவர்ந்திழுக்க வித்யாசமான ஸ்மெல் வேற வெளியிடுது. இத எல்லாம் மோப்பம் பிடிச்சுட்டு பக்கத்துல வர்ற பூச்சிங்க, அதோட குடுவைக்குள்ள வழுக்கி விழுந்துடும்... அப்புறம் எங்க தப்பிக்குறது?

பாத்தீங்களாங்க, பிடிச்ச வாசம், பிடிச்ச சுவை இருக்குன்னு இந்த பூச்சிங்க நம்பி அத தேடி போனா, இந்த நெப்பன்தஸ் அத கொன்னு அதோட சத்துக்கள உறிஞ்சிடுது... இப்படி தாங்க சில மனுசங்க இருக்காங்க. இனிக்க இனிக்க பேசி, நைசா நம்மள அவங்க வலைல விழ வச்சு நம்மளால நிறைய பலன் அடஞ்சுட்டு, ப்ரோயோஜனம் இல்லன்னு ஆனா உடனே கழட்டி விட்ருவாங்க...

அதனால எப்பவுமே கொஞ்சம் எச்சரிக்கையா ஒரு எல்லை கோட்டுக்குள்ள நாம இருந்துகிட்டா எப்பவுமே பயம் இல்ல...

ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டிய உலகம் இது.... 

கதை கேட்டு திகில் வந்துச்சோ இல்லையோ, எனக்கு தத்துவம் சொல்லி திகில் வந்துடுச்சு.... அவ்வ்வ்வ், எதுக்கும் நான் நாளைக்கு வாரேன்...

Wednesday 26 March 2014

சிலந்திவலைச் சாபங்கள்....



உணர்வு பிசைந்து செயல் முடக்கிய
அஸ்தமனத்தின் ஆரம்ப நாள் அது...

நடுங்கும் கைகளுக்குள்
ஓர் அழுத்தம் வேண்டி
காற்றில் துழாவுவது பழக்கமாய் போனது...

அழுதலுக்கும் மறுக்கப்படும் உரிமைகள்
வெந்நீர் ஊற்றுக்குள் அழுத்தி
நரகம் காட்டி சிரிக்கின்றன...

வெறுமை மட்டுமே பரிசென அறிந்தும்
அழுத்தமாய் ஓர் எதிர்பார்ப்பு
கிளை பரப்ப துவங்கியது...

வசப்படும் வார்த்தைகள் ஏனோ
சல்லி வேர்களுக்குள் சிக்கித் தவிக்கிறது...

இப்பொழுதெல்லாம் மனம் கனத்து
இதயம் குமுறுவதை
கண்கள் தடுப்பதே இல்லை...

ஆ....வென இயலாமையின் ஆங்காரம்
ஆட்டுவிக்க...
வலி வலி வலி...
வலி வேண்டுமென ஏக்கம் கொண்டு
தகிக்கத் துவங்கியது மனது...

வாழ்தல் சாபமாகி விட்ட நிலையில்
வரம் தேடி தவம் கொள்ளத் தொடங்கினேன்...
தைரிய முகமுடி விசிறியடித்து
கோழை முகம் தன்னிலை காட்டுகிறது...

தன்னையே சுற்றிக்கொண்ட சிலந்திவலையாய்
என்னை நான் சூழ்ந்துக் கொள்கிறேன்...

பாரம் இறக்கி வைக்க கடகடவென
எழுத்தில் கொட்டிவிட்டு நிமிர்ந்து பார்க்கிறேன்....
இதோ, மற்றுமோர் கவிதை பிறந்தே விட்டது...

கண்கள் காய்ந்து விட்டிருந்தன...
துடைக்க கரம் தேவையில்லாமல்....

Saturday 8 March 2014

என் செல்ல அம்முகுட்டிக்கு (மகளிர் தின ஸ்பெசல்)



என் செல்ல அம்முகுட்டிக்கு,

அம்மா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.

வா வா வா, வந்து அம்மா என்ன சொல்லப்போறேன்னு கேளு.

முதல்ல நான் உனக்கு அம்மாவ பத்தி கொஞ்சம் சொல்லப் போறேன். சமத்தா கேட்டுக்க. புரியலனா பரவால, புரியுற நேரம் வர்றப்ப புரிஞ்சிடும்.

நான் குட்டி பாதம் தரைல வச்சு, தமிழ் பேசி பழகுறப்பவே என்னோட அம்மாகிட்ட, அதான் உன் பாட்டிக்கிட்ட என்ன சொல்லுவேன் தெரியுமா? எனக்கு வீரமா ஒரு பொம்பள புள்ளைய பெத்துக்கணும்ன்னு...

ஹஹா... இப்போ நினச்சாலும் உதட்டுல புன்னகை வருது.

இதுவே வேற அம்மாக்களா இருந்தா, இந்த வயசுல உனக்கு இந்த எண்ணம் தேவையான்னு போட்டு சாத்து சாத்துன்னு சாத்தியிருப்பாங்க. ஆனா உன் பாட்டி அப்படி இல்ல. அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?

என்னை வாரி அணைச்சு, பெண்ங்குறவ சக்தி, கண்டிப்பா நீ நல்லா படிச்சு பெரியவளாகி, சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு, உன்னோட இஷ்டப்படி பெண் குழந்தை பெத்துக்கோன்னு சொன்னாங்க... அந்த நாள்ல இருந்து யாருக்கு பெண் குழந்தை பிறந்தாலும் என்னவோ எனக்கே பிறந்த மாதிரி அவ்வளவு சந்தோசமா கொண்டாடுவேன்...

ஒரு தடவை பக்கத்து வீட்ல ஒரு சின்னக் குழந்தை கீழ விழுந்து அடிபட்டுடுச்சு. அதோட அம்மா கொஞ்சமும் பதறாம அந்த குழந்தைய ஏண்டி விழுந்தன்னு கேட்டு அடிச்சுட்டு இருந்தாங்க. ஏற்கனவே அடிபட்ட வலி, இப்போ அம்மாவோட நடத்தை எல்லாம் பாத்து அந்த குழந்தை இன்னும் மருண்டு அழ ஆரம்பிச்சது. அப்போ அந்த குழந்தையோட பாட்டி பதறி வந்து குழந்தைய தூக்கிகிட்டு, வலிச்சு பெத்திருந்தா தானே புள்ளையோட அருமை தெரியும்னு ஒரு வார்த்த சொன்னாங்க... அப்போ எனக்கு அர்த்தம் புரியல, அப்புறமா தான் தெரிஞ்சுது அந்த குழந்தை சிசேரியன் மூலமா பிறந்ததுன்னு. அந்த பாட்டி சொன்னது தப்பான வார்த்த தான்.. ஆனா, அது எனக்குள்ள ஒரு வைராக்கியத்த குடுத்திருக்கு. ஆமா, உன்னை வலிக்க வலிக்க நான் பெத்தெடுக்கணும்...

நெஞ்சுல நான் சுமக்குற செல்லமே....

பெண் - ஆளப் பிறந்தவள்.

ஆமா, அவ நினச்சா கண்டிப்பா இந்த தரணிய ஆளலாம். அவ நினச்சா இந்த பூமியோட மொத்த நேசத்தையும் வெளிப்படுத்தலாம்...

அதுக்கு ஒரு அம்மாவா நான் உனக்கு சில விஷயங்கள் சொல்லணும்டா...

செல்லமே, நீ ஒரு பொண்ணு. அதுக்காக கர்வப்படு. அதுக்காக அத வார்த்தைகள்ல காட்டாதே, நல்ல செயல்கள்ல காட்டு

எந்த சூழ்நிலையிலும் பெண்ணாக பிறந்தேனேன்னு சுயபட்சாதாபம் கூடவே கூடாது. அது தற்கொலைய விட கொடுமையானது அம்மு.

எந்த உயிரா இருந்தாலும் அதுகிட்ட அன்பா இருந்து பாரு. இந்த உலகம் எவ்வளவு அழகானதுன்னு உனக்கு தெரியும்

எப்பவுமே தோல்விகள கண்டு துவண்டு போய்டாத. எத்தன தோல்வி வந்தாலும் அத பாடமா எடுத்து, புன்னகையோட அத தாண்டி போ

உன்னோட வாழ்க்கைல குறுக்கிடுற துரோகிகள இனம் கண்டுக்க பழகு. உன்னால முடிஞ்ச அளவு விலகி போ. முடியல்லயா, தொல்லைகள் தொடர்ந்தா எதிர்த்து நில்லு...

தப்பு நடந்தா தட்டிக் கேளு. இடம் பொருள் முக்கியம். உன்னோட விவாதங்களையோ செயல்களையோ நிதானமா எடுத்து வை.. பதறாத... ஆத்திரப்படாத...

யார் கிட்டயும் கையேந்துற மாதிரி நிற்காதே, அது நானாகவே இருந்தாலும் கூட.. ஏன்னா, யாரா இருந்தாலும் சுயமா சம்பாதிக்க வேண்டியது அவசியம். புஜ்ஜிமா, நேர்மையான வழிகள்ல சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்குடா...

யாரையும் சார்ந்து இருக்கணும்ன்னு நினைக்கவே நினைக்காத... உன்னோட தனித்தன்மை, உன்னோட ஆளுமை கண்டிப்பா முக்கியம்

அடுத்தவங்க பொருளுக்கு எப்பவுமே ஆச படக்கூடாது கண்ணம்மா, அதே மாதிரி அடுத்தவங்கள பாத்து பொறாமப்படவும் கூடாது. நம்மால முடிஞ்ச அளவு அவங்க வளர்ச்சிய கண்டு கைத்தட்டணும். ஊக்கப்படுத்தணும்.

இந்த உலகத்துல நீ அடியெடுத்து வச்ச உடனே நீ நேசிக்க ஆரம்பிக்க ஒன்று இந்த உலகத்தில் படைக்கப்பட்டுருக்கு. அது தான் இயற்கை. நேசித்து பழகுடா. அப்புறம் நேசித்தல்ங்குறது உன்னோட ரத்தத்துலயே ஊறிடும்.

நீ உடுக்குற ஆடைகள் உன்னோட சவுகரியங்களுக்காக தான் இருக்கணும். ஆடம்பரங்கள முடிஞ்ச அளவு தவிர்த்துடு.

ஒரு பெண்ணோட வாழ்க்கைல கல்யாணம் முக்கியம்ங்குற வார்த்தைகள புறம் தள்ளு... ஊருக்காகவும், உறவுக்காகவும் பண்ற கல்யாணத்துல எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையில்ல. எப்போ உன் மனசுக்கு பிடிச்ச பையன நீ பாக்குறியோ, எதிர்பார்ப்புகளே இல்லாம அவன்கிட்ட அன்பாயிரு. கல்யாணத்து மேல நம்பிக்கை வந்தா அம்மா கிட்ட ஒரு வார்த்த சொல்லு, உன்ன கட்டிபுடிச்சி, உச்சி மோர்ந்து, மனசார ஆசீர்வதிக்கிறேன்.

பொய் சொல்லாதடா... அதுக்காக பொய்யே சொல்லாதேன்னு அர்த்தமில்லை. அவசியமான நேரங்கள்ல அடுத்தவங்களுக்கு பாதிப்புன்னு தெரியுற பட்சத்துல உண்மைய மறைக்குறது தப்பில்ல.

நீ ஒரு சொட்டு கண்ணீர் சிந்தினாலும் சிந்துர கண்ணீர ஆழ்மனசில இருந்து சிந்து. அடுத்தவங்க கஷ்டம் கண்டா, அவங்களுக்காக பிரார்த்தனை பண்ண மறக்காத.

வலி தாங்க பழகு. வாழ்க்கைல நீ அனுபவிக்குற வலிகள் எப்பவுமே உன்னை மேலும் மேலும் உறுதியா தான் மாத்தணும். எப்பவும், எந்த சூழ்நிலைலயும் சோர்ந்து போகாத.

எனக்கு மட்டும் ஏன் இப்படிங்குற கேள்விகள்ல எனக்கு நம்பிக்கையே இருந்ததில்ல, அது அவசியமேயில்லாதது. சூழ்நிலைகள் எப்பவுமே உன்னை பாதிக்காம பார்த்துக்கோ

அம்மு குட்டி, இந்த விசயங்கள என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. நான் உனக்கு சொல்லிக் கொடுக்கிறேன். எப்பவும் மறக்காதே, ஒரு பொண்ணு நினைச்சா எதை வேணும்னாலும் சாதிக்கலாம். யாரை வேணும்னாலும் அடக்கியாளலாம். ஆனா இது எதுவுமே அதிகாரத்தினால இருக்க கூடாது, சூழ்ச்சியால இருக்க கூடாது. அன்பால் மட்டுமே சாதிக்கணும்.

இத எல்லாம் நான் உனக்கு சொல்றேன்னா, முதல்ல அதுக்கு என்னை தகுதியாக்கிகிட்டே தான் சொல்றேன்... அதே ஆணவமில்லா கர்வத்தோட சொல்றேன்.... நான் நானா இருக்கேன்.... நீ நீயா இரு....

உனக்காக காத்துக்கிட்டு இருக்கேண்டா...

சீக்கிரம் வந்துரு, சரியா....