Wednesday 28 May 2014

சந்திரமண்டலம் போவோமா?


ரொம்ப நாளா உங்கள எல்லாம் சந்திரமண்டலத்துக்கு கூட்டிட்டு போகணும்ன்னு ஆசை. அதனால வாங்க, முதல்ல உங்கள வேற ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன். 

இப்ப நாம நின்னுட்டு இருக்குறது மொட்டை மாடி. அங்க இருந்து பாத்தா சந்திர மண்டலம் தெரியுது பாருங்க...

என்னது, தெரியலையா?

அதெப்படி, நான் தான் தெரியுதுன்னு சொல்லிட்டேனே, அப்புறம் ஏன் தெரியாது?

சரி சரி, ரொம்ப பிகு பண்ணாதீங்க, இந்தா ஒரு தீபாவளி ராக்கட் வந்து மொட்டை மாடியில லேன்ட் ஆகுது பாத்தீங்களா, இது மேல ஏறிக்கோங்க, நாம சந்திரமண்டலம் போய்டலாம்...

இப்போ நாம விண்வெளில பறந்துட்டு இருக்கோம். பஞ்சு பஞ்சா மேகங்கள். எவ்வளவு அழகு பாத்தீங்களா? ஹலோ யாருங்க, மேகத்த பஞ்சு மிட்டாய்ன்னு நினச்சு திங்குறது? அட, தின்னாலும் பரவால, இனிப்பு இல்லன்னு சலிச்சுக்க வேற செய்றீங்க, பேசாம பயணத்த கண்டிநியூ பண்ணுங்க, இல்லனா ராக்கெட் அடியில தண்ணி ஊத்தி அணைச்சுடுவேன்.. ஆங்க்... அந்த பயம் இருக்கட்டும்.

ஆஹா... கிலோ கணக்குல தங்க பூக்கள கொட்டி வச்ச மாதிரி இந்த நட்சந்திரங்கள் என்னமா ஜொலிக்குது பாருங்க. ஹே ஹே... நட்சத்திர பூக்கள் என்ன நம்ம ஊரு பூ மாதிரி சாப்ட்டாவா இருக்கும்? சுட்டுடும்... பாத்து பறிச்சுக்கோங்க. கிறிஸ்த்மஸ் அன்னிக்கி நம்ம வீட்ல அலங்காரமா கோர்த்து தொங்க விடலாம்.

அச்சச்சோ, அப்படியே வலது பக்கமா திரும்புங்க, உடனே திரும்புங்க, சீக்கிரம் சீக்கிரம், ஒரு எரி நட்சத்திர கல்லு நம்மள நோக்கி தான் வந்துட்டு இருக்கு. ம்ம்ம்ம் வேகமா போங்க, அப்படியே வலது பக்கம் தான்... ஆமா, ஆமா அப்படி தான்... ஹப்பாடி, நூலிழை இடைவெளில தப்பிச்சாச்சு.

வாங்க, இன்னும் மேல மேல மேல பறக்கலாம்... 

அந்தா, கொஞ்சம் நிலப்பரப்பு தெரியுதே, அங்க தான் நாம தரையிரங்கணும். அட, மெதுவா குதிங்க, என்னமோ திருட்டு பஸ் ஏறிட்டு கண்டக்டர் பாக்குறதுக்கு முன்னாடி குதிக்குற மாதிரி குதிக்க பாக்குறீங்க.. இது நிலாங்க... அதான் சந்திரன். நாம இறங்கி இருக்குறது சந்திர மண்டலம். இங்க காற்றுல மிதக்குற மாதிரியே தான் ஒவ்வொரு அடியா எடுத்து வைக்க முடியும். ரெடி, ஒன், டூ, த்ரீ... ஜம்ப்.. 

அப்படியும் இப்படியுமா,ஒருவழியா சந்திர மண்டலத்துக்கு வந்து சேர்ந்தாச்சு. ஏன்ப்பா அந்த டீக்கடை எங்க இருக்குன்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க, ஒரே டயர்ட். இனிமேல் இந்த தீபாவளி ராக்கெட் மேல எல்லாம் ஏறி வரக்கூடாது. பத்ரமா சைக்கிள்லயே வந்துடணும். அஞ்சலி பாப்பா மட்டும் தான் சைக்கிள்ல விண்வெளி போகணுமா என்ன?

அப்படியே அந்த வடை சுடுற பாட்டி எங்கன்னு தேடுங்க, நல்ல ஆம வடையா வாங்கி திங்கணும். கூடவே இட்லி சப்ளை பண்றாங்களான்னும் பாக்கணும். பசிக்குதுல..

ஹஹா பாத்தீங்களா, பசி வந்த உடனே உங்கள மறந்துட்டேன், சரி சரி, நீங்களும் பாட்டிய கண்டுபிடிச்சு போய் சாப்பிடுங்க. 

அப்புறம், இன்னொரு விஷயம் மறந்துட்டேனே......

குட் மார்னிங்



Thursday 22 May 2014

தாயென்னும் தேவதை


வலித்திருக்கும் வேளைகளின் தான்
அவளின் தேவைகள்
உணர்வுகளில் உச்சமடைகிறது...

கைகள் துவள, உடல் மெல்ல சாய,
வெட்டி வெட்டியிழுக்கப்படும்
நரம்புகள் மத்தியில்
அவள் ஒரு மின்னலை போல்
வந்து வந்து மறைகிறாள்...

இப்படியான கடந்த காலங்களில்
வெறுமையின் உச்சக்கட்டத்தில்
எதையோ எதிர்பார்த்து
ஓர் அணைப்பு தேவைப்படும் நேரத்தில் தான்
அவள் என் அருகே வருவாள்...

பதமாய் அணைத்து,
இதமாய் இறுக்கம் தந்து,
நடுங்கும் கைகளை பற்றிக்கொள்வாள்...

தலைக்கு தோள்கொடுத்து,
விரல்களை கூந்தல்களுக்குள்
நுழைந்திடச் செய்வாள்...

முதுகோடு பாரமாயிருக்கும்
அவள் உடல் சூடு சுகம்.
கழுத்திலும் நெற்றியிலுமாய்
விழும் உதட்டு ஒத்தடங்கள் சுகமோ சுகம்...

இன்று,
தலையணை அசைவற்று
முதுகில் உறங்குகிறது...

இரு கைகளையும் கால்களையும்
அதற்கு முளைத்திட செய்யுங்கள்..
அணைப்பில் பதுங்க
நான் தயாராய் இருக்கிறேன்..

Saturday 17 May 2014

ப்ரிட்டி வுமன் (Pretty Woman) – திரை விமர்சனம்


ஒரு நாள். கிட்டத்தட்ட ஒரு மாசம் இருக்கும். ரொம்ப போர் அடிக்குதுன்னு ஏதாவது ஒரு படம் பாக்கலாம்ன்னு இந்த படம் நல்லா இருக்குமான்னு பேஸ்புக்ல ஒரு கேள்வி கேட்டுட்டு பாக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நேரம் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு. சட்டுன்னு அடுத்தடுத்து வந்த சீன்ஸ் என்னடா இது ஒரு மாதிரி படமா இருக்கும் போலயேன்னு நினைக்க வச்சு, அப்படியே விண்டோஸ்ல போய் க்ளோஸ் பட்டன அழுத்த வச்சிடிச்சு... அப்புறம் அந்த படம் பத்தி வந்த கமண்ட்ஸ், நல்ல படம், அப்படின்னு வந்தத எல்லாம் படிச்சாலும் ஏனோ அது மேல ஈர்ப்பு இல்லாம போய்டுச்சு.

நேத்து ராத்திரி தூக்கம் கலைஞ்சு எழுந்து உக்காந்துட்டேன். இனி தூக்கம் அவ்வளவு தான்னு தெரியும். என்ன பண்ணலாம்ன்னு கொஞ்ச நேரம் யோசிச்சேன். சரி, அந்த படம் தான் நல்லா இருக்கும்ன்னு சொன்னாங்களே, பாத்தா தான் என்னன்னு தோணிச்சு...

படம் இருந்த பென் டிரைவ் எடுத்து லேப்டாப்ல போட்டு, போல்டர் திறந்து அந்த படத்த ஆன் பண்ணினேன்.... எந்த படத்த?

அந்த படம் தான் “ப்ரிட்டி யுமன்”

படத்தோட கதை சுருக்கம் இதான்...

ஹீரோ எட்வர்ட் லூயிஸ் ஒரு பெரிய வியாபார புள்ளி. தன்னோட முக்கியமான கட்டங்கள்ல தன்னோட கேர்ள் பிரெண்ட் தன் கூட இருக்கணும்ன்னு ஆசைப்படுறார். ஆனா அவளோ எனக்கு பெர்சனல் வாழ்க்கை இருக்குன்னு சொல்லிடுறா... அப்புறமா அவருக்கு ஒரு சின்ன உதவி தேவைப்பட ஹாலிவுட்ல விபச்சாரம் பண்ற விவியன் உதவி பண்றா. அவளால எதேர்சையா ஈர்க்கப்படுற எட்வர்ட் ஒரு வாரம் அவள தன் கூட தங்க வச்சிக்க மூவாயிரம் டாலர் பேசி புக் பண்றாரு. அந்த ஒரு வாரங்கள்ல அவங்களுக்குள்ள என்ன நடந்துச்சு, முடிவு என்ன ஆச்சுங்குறது தான் கதை....

இங்க நான் விவியன அவள் இவள்ன்னு குறிப்பிட ஏனோ எனக்கு தயக்கமே வரல, காரணம் படம் முடியுறப்போ அவள் என்னோட மிக நெருங்கிய சிநேகிதியா மாறி போனா... சில இடங்கள்ல சின்ன குழந்தை மாதிரி துள்ளி குதிக்குறா. விவியன்- நிஜமாவே அவ ஒரு ப்ரிட்டி யுமன் தான்...

என்னை முதல்ல இம்ப்ரெஸ் பண்ணினது எட்வர்ட் தான். பாத்த உடனே வித்யாசமான ரசனை உள்ளவரா தெரிஞ்சார். எட்வர்ட் கிட்ட விவியன் ரொம்ப அதிமேதாவியா பேசுறா. ஐயம் நீட் அண்ட் கிளீன்ன்னு சொல்றப்பவே அவருக்கு சிரிப்பு பொத்துகிட்டு வந்துடுது. அவள பாத்துகிட்டே இருக்குற அவர், தன்னோட ஒரு நாள் தங்க முதல்ல அவளுக்கு முன்னூறு டாலர் குடுக்குறார். நாகரீகமா வளர்ந்த பெண்கள பாத்த அவருக்கு ஷாம்பைன தரைல அடுக்கி வச்சுட்டு சின்ன புள்ள மாதிரி தரைல உருண்டுட்டே காமடி ஷோ பாத்து ரசிக்குற விவியன் வித்யாசமா தெரியுறா. அவள கண்கொட்டாம புன்னகையோட பாத்துட்டு இருக்கார்.

அப்புறம் விவியன். அவ கிட்ட இருக்குற ஒரே ஒரு அரைகுறை ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டு எட்வர்ட் கூட ஒரு வாரத்த கழிக்கணுமேன்னு புதுசா டிரஸ் எடுக்க போறா. அவளோட நடை உடைகள பாத்துட்டு அவங்க கடைல டிரஸ் எடுக்க அவளுக்கு தகுதி இல்லன்னு துரத்தி விடுறப்போ உடைஞ்சு போய்டுறா. அப்புறமா அவளுக்காக எட்வர்ட் எக்கச்சக்கமா ட்ரெஸ் எடுத்து குடுக்குறப்போ அவங்க கிட்ட போய் நீங்க பெரிய தப்பு பண்ணிட்டீங்கன்னு துள்ளி குதிக்குறா...

விவியன உளவாளின்னு சந்தேகப்படுற தன்னோட வக்கீல் பிலிப்கிட்ட அவ ஒரு உடலியல் தொழிலாளின்னு உண்மைய எட்வர்ட் போட்டு உடச்சுடுறார். பிலிப் அவ கிட்ட தரம்கெட்டு பேசுறப்போ அத்தன வலிகளையும் உள்ளுக்குள்ள வாங்கிகிட்டு அவர்கிட்ட சிரிச்சுட்டே நகர்ந்து போற விவியன், எட்வர்ட் கிட்ட வெடிச்சுடுறா. கடும் வாக்குவாதங்களுக்கு பிறகு நான் உங்களை சந்திச்சிருக்கவே கூடாது, என் காசை குடு, நான் இப்பவே கிளம்புறேன்னு கோபமா கேக்குறா. பணத்த கைல கொடுக்காம கட்டில்ல தூக்கி போட்டத எடுக்காம ரோசமா கிளம்பிடுறா. ஏன், எங்களுக்கு ரோசம், மானம் எதுவும் இருக்க கூடாதான்னு எட்வர்ட் முகத்துல ஓங்கி அடிச்ச மாதிரி இருந்துச்சு அவளோட செயல். சபாஷ்.

விவியன், எட்வர்ட்டோட அன்புல ஒவ்வொரு தடவையும் உருகி, அவர் மேல தனக்கு வந்த காதல வெளிபடுத்துறப்ப அத கேட்டு சாதரணமா எடுத்துகிட்டு ஒண்ணுமே சொல்லாதது ஏன்னு எனக்கு புரியவே இல்ல.

கடைசியா விடைப்பெறுறப்போ எட்வர்ட் நம்ம ரெண்டு பேர் இடையில என்ன இருக்குன்னு கேக்குறப்போ, எனக்கு தெரியாது. சின்ன வயசுல என் அம்மா என்னை ரூம்ல அடச்சு வச்சுட்டு போறப்போ, எப்பவுமே ஒரு கனவு காணுவேன். ஒரு பெரிய டவர்ல மாட்டிக்குற இளவரசி தான் நான்னும், என்னை கூட்டிட்டு போக என் ராஜகுமாரன் குதிரைல வருவான்னும் நினைச்சுப்பேன். ஆனா இப்போ, இங்க வேட்டைக்கு போறதே நான் தான்னு சொல்லுவா. அதுக்கு அவர், நான் எப்பவுமே உன்னை ஒரு விபச்சாரியா நடத்தலன்னு அவர் பாட்டுக்கு சொல்லிட்டு போய்டுறார். தொண்டையடைக்க அவளோ “ஹி ஜஸ்ட் டிட்” அவர் அப்படி நடத்தினார்ன்னு உடைஞ்சி போய்டுறா.

என் கூடவே இரு, எனக்காக இல்ல, உனக்கு என் கூட இருக்க பிடிச்சிருக்குல, அதனாலன்னு எட்வர்ட் அவ கிட்ட சொல்றப்போ, இல்ல, எனக்கு வேலை இருக்குன்னு காண்ட்ராக்ட் முடிஞ்சு அவ கிளம்பி போய்டுறா. அவ வலி, நமக்கு புரியுது.

செண்டிமெண்ட்ஸ் இல்லாம படமா? இங்க கூட அப்பா பையன் செண்டிமெண்ட் இருக்கு. பதினாலரை வருஷம் தன்னோட அப்பா கூட பேசாம இருக்கும் எட்வர்ட் ரோட்டுல ஒரு அப்பா மகன பார்த்து உணர்ச்சிவசப்பட்டு போய்டுறார். அப்பா மேல இருக்குற கோபத்த அத்தனையும் பிசினஸ்ல காட்டுற அவர், கடைசில மனசு மாறி, தன்னோட பிசினஸ் உத்திகள மாத்திக்குற கட்டம் அருமை.

இந்த படத்துல எனக்கு பிடிச்ச ரொமான்ஸ் சீன் ஒண்ணு இருக்கு. மீட்டிங் போயிட்டு இருக்குறப்ப எட்வர்ட் விவியனுக்கு கால் பண்ணுவார். அவ போன் அட்டென்ட் பண்ணின உடனே, உன்ன கால் அட்டென்ட் பண்ணாதன்னு சொன்னேன்லன்னு கலாய்ப்பார். மறுபடியும் மறுபடியும் கால் பண்ணி, “நெவர், எவர் பிக் அப் தெ போன்”ன்னு அதட்டுவார். அவ அழகா சிரிச்சுட்டே “தென் ஸ்டாப் காலிங்”ன்னு சொல்லுவா. அப்போ அவங்க ரெண்டு பேர் மூஞ்சியையும் எக்ஸ்ப்ரசனயும் பாக்கணுமே... பின்னிட்டாங்க போங்க... இத்தன நடிப்ப எங்கயா வச்சிருந்தீங்க?

நான் இதுல ரசிச்ச இன்னொரு கேரக்டர் அவங்க தங்கியிருக்குற ஹோட்டலோட மானேஜர் பார்னி. ஆரம்பத்துல விவியன் உடை, நடை எல்லாம் பாத்து கடுப்பாகுற அவர், அடுத்தடுத்து அவள மரியாதையோட பாத்து ரசிக்குற சீன்ஸ் செம. ஒரு நல்ல ட்ரெஸ் வாங்க முடியாம தவிக்குற அவளுக்கு ஹெல்ப் பண்றதாகட்டும், பார்ட்டில எப்படி சாப்பிடுறதுன்னு தெரியாத அவளுக்கு கிளாஸ் எடுக்குறதாகட்டும், தேவதை மாதிரி வர்ற விவியன புருவம் உயர்த்தி அழகா ரசிக்குறதாகட்டும், மனுஷன் பின்னி எடுத்துருக்கார்.

இங்க இன்னொரு உறவை பத்தி சொல்லணும். அதான், விவியனுக்கும் அவள் தோழி கிட் லூக்காவுக்குமான உறவு. பணம்ன்ன உடனே அவங்க படுற சந்தோசம், அலும்பல், ஆனா அத மீறி அவங்ககிட்ட இருக்குற சின்னப்புள்ளத்தனம்... வெகுளித்தனம்... அவங்க ரெண்டு பேர் இடைல இருக்குற விட்டுக்குடுத்தல், புரிதல்... அட்டகாசம்.

ஆக மொத்தத்துல படம் அடி பொழி. ஆனா என்ன, கொஞ்சம் பாக்க பொறுமை வேணும். எனக்கு அந்த பொறுமை வந்துடுச்சுன்னு நினைக்குறேன். இன்னொரு படம் பாத்துட்டு மறுபடியும் வரேன், இப்போ டாட்டா....



Thursday 15 May 2014

உறவுகள்...


உறவுகள்... 

இப்போ எல்லாம் சொந்தக்காரங்கனாலே கல்யாணம், காதுகுத்துல மீட் பண்றது தான்ங்குற அளவு ஆகி போச்சு. வீட்டை விட்டு வெளில கிளம்பினாலே பீச், சினிமா, ஹோட்டல், பார்க்ன்னு தான் கிளம்பிடுறோம். மிஞ்சி மிஞ்சி போனா பிரெண்ட் வீட்டுக்கு கெட் டுகதர்.. 

இதே கெட்-டுகதர நம்ம குடும்பத்தோட கொண்டாடுறோமா? 

முன்னாடி எல்லாம் லீவ் விட்டா பசங்கலாம் தாத்தா பாட்டி வீட்டுக்கு போய்டுவோம். ஒரு மாசம் அங்க உள்ளவங்களோட அடிச்சி புடிச்சி விளையாடிட்டு, அந்த ஊரோட ஒரு பாசத்த பந்தத உருவாக்கி விட்டுட்டு தான் திரும்பி வீட்டுக்கே வருவோம். 

ஆனா, இப்போ உள்ள குட்டி பசங்கள நினச்சா, பாவமா இருக்கு. 

ஒரு வாரம் முன்னாடி ஒருத்தங்க அப்பாவ பாக்க வந்திருந்தாங்க. அப்பா வெளில போய்ட்டாங்க, வெயிட் பண்ணுங்கன்னு தம்பி அவங்கள சோபால உக்கார வச்சான். அவங்க, எதோ கால்ல ரெக்கை கட்டி விட்ட மாதிரி வாட்ச் பாக்குறதும், வாசல்ல போய் எட்டிப் பாக்குறதுமா பரபரத்துட்டு இருந்தாங்க. அப்பா வந்ததும், பையனையும் பொண்ணையும் டான்ஸ் கிளாஸ் விட்டுருக்கேன், அங்க இருந்து கூட்டிட்டு போய் நீச்சல் கிளாஸ் விடணும், லேட் ஆகிடுச்சுன்னு சொல்றாங்க.. 

லீவ் நாள்ல கூட பசங்களுக்கு சுதந்திரம் இல்ல பாருங்க. அந்த டான்ஸ் அவங்கள ப்ரீயா விட்டா ஆடிக்கிட மாட்டாங்களா? இல்ல நீச்சல் தான் கத்துக்க மாட்டாங்களா? அவங்களா விரும்பி கேட்டா விடணும், திணிக்க கூடாது இல்லையா? 

இங்க நந்து (பக்கத்து வீட்டு ஏழு வயசு பொண்ணு) நல்லா பாட்டு பாடுவா, டான்ஸ் ஆடுவா, ரொம்ப திறமையா பதிலுக்கு பதில் காமடி பண்ணுவா... உடைஞ்சு போன பொருள் எடுத்து அவளா ஏதாவது செய்துட்டு இருப்பா. அவ எந்த ஸ்பெசல் கிளாஸ்சும் போனதில்ல. அவ செய்றத பாத்துட்டு சின்னதா ஒரு பாராட்டு, அவ முயற்சிக்கு தடை போடாம இருக்குறது, அப்புறம் சில திருத்தங்கள் மட்டும் கத்துக் குடுக்குறது, அவ்வளவு தான்... அவள் சுதந்திரம், அவள் வாழ்க்கை, அவள் திறமை... வேணா பாருங்க, நந்து சுய அறிவு உள்ள, பிரச்சனைகள திறம்பட சமாளிச்சு, எதிர்நீச்சல் போட தெரிஞ்ச பொண்ணா வருவா... 

சரி, சரி, பாருங்களேன், நான் சொல்ல வந்த விசயத்த விட்டுட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கேன்... 

நேத்து @14/05/14 சாயங்காலமா ஒரு நிச்சயதார்த்த வீட்டுக்கு போறதா தான் ப்ளான். ஆனா அப்பா திடீர்னு என்னை கொண்டு போய் ஒரு சொந்தகாரங்க வீட்டுல இறக்கி விட்டுட்டு போய்ட்டாங்க... 

எங்க உறவுக்காரங்க எல்லாருமே சுத்தி சுத்தி இருக்குற பல கிராமங்கள்ல இருக்காங்க. திசையன்விளை, நாங்குநேரி எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், செட்டிகுளம், அஞ்சுகிராமம்ல ஆரம்பிச்சு, வழுக்கம்பாறை வரை நீளும் உறவுகள். 

என்ன தான் பெரியவங்க ஒண்ணா இருந்திருந்தாலும், பசங்க வளர வளர மேல்படிப்பு, கல்யாணம்ன்னு ஒண்ணொண்ணா சிதற ஆரம்பிச்சிடுவாங்க. நான் கூட குடும்ப உறவுகள்ன்னு ரொம்ப ஒட்டிகிட்டதில்ல. நான் ஸ்கூல் படிச்சுட்டு இருந்தவரை எல்லா விசேசங்களுக்கும் போவோம், குடும்பம், உறவுகள்ன்னு அது ரொம்ப ஜாலியா போகும். அதுவும் நான் காலேஜ் அடியெடுத்து வச்சதுக்கப்புறம் என்னை கவனிக்கவே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நேரம் சரியா இருந்துச்சு. அவங்களுக்கு என்னை தவிர யாருமே தேவையில்லைங்குற அளவு நிலைமை மாறி போச்சு.  அது தனிக் கதை... இப்போ தேவையில்லை. 

கிட்டத்தட்ட ஏழு வருஷம் கழிச்சு, இந்த வருஷம் தான் நான் மறுபடியும் அந்த வசந்த காலத்துல அடியெடுத்து வச்சிருக்கேன். 

ஆமா நேத்து நான் போன இடம் சுவர்க்கம். அப்படி தாங்க சொல்லணும். அது தான் உண்மையும் கூட... 

அவங்க எனக்கு தூரத்து உறவு தான். ஆனா என்னோட மாமா, சித்தி குடும்பங்கள் எல்லாருமே அங்க குவிஞ்சிருந்தாங்க. எதுக்கு? சும்மா அரட்டை அடிச்சு அப்படியே ஒரு சாயங்கால பொழுதை கழிக்க தான்... 

நான் அங்க போனப்பா இருட்டிடுச்சு. கிட்டத்தட்ட ஏழு மணிக்கு போய் சேர்ந்தேன். பெரும்பாலும் எல்லாருமே அங்க கூடியிருந்தாங்க. கிட்டத்தட்ட முப்பது பேர். அதுக்கும் மேலயே இருக்கும். எண்ண முடியல... தம்பி ஏற்கனவே அங்க போய், சமையல் அறைல பிசி. அங்க அவன் தான் மாஸ்டர் குக். 

அத்தனை பேரும் ஹால்ல உக்காந்து டிவி பாத்துட்டு இருந்தாங்க. நான் போன உடனே ஓ..........ஹோன்னு பெரிய குலவை வரவேற்ப்பு. பெரியவங்க எல்லாம் எழுந்து வந்து கைய புடிச்சுட்டு நல்லாயிருக்கியா?ன்னு நாடிய புடிச்சு கொஞ்சி நலம் விசாரிச்சாங்க. அப்புறமா வா, வந்து உக்காருன்னு சோபால உக்கார சொன்னாங்க. அதுக்குள்ள மாமா பசங்க எல்லாம் அண்ணி இங்க வாங்க, இங்க வாங்கன்னு தரைல அவங்க கூட கைய புடிச்சு இழுத்து உக்கார வச்சுட்டாங்க. 

சரி, டிவில அப்படி என்ன பாத்துட்டு இருந்தாங்க? 

இதுவரைக்கும் நடந்த பாமிலி கெட்-டுகதர், எல்லாரும் சேர்ந்து போன டூர், வீட்டுக்குள்ள பசங்க பண்ணின சேட்டைகள் எல்லாம் போட்டோ எடுத்து வச்சு அத தான் போட்டு பாத்துட்டு இருந்தாங்க. ஒவ்வொரு போட்டோ வரும் போதும் சம்மந்த பட்ட ஆள் பெயர சொல்லி ஒரு ஓஹோ... இதுல பெரியவங்க, சின்னவங்க வித்யாசமே இல்ல, எல்லாருமே அவங்கள மறந்து கூச்சல் போட்டுட்டு இருந்தாங்க. எப்படியும் ஊர் முழுக்க கேட்டுருக்கும். அந்த களேபரத்தையும் ஒருத்தன் போட்டோ, வீடியோ எடுத்துட்டு இருந்தான். 

நேரம் ஆக ஆக தரைல உக்காந்து பாத்துட்டு இருந்த பசங்க, அப்படியே படுத்தாச்சு. அப்படியே கன்னத்துல கைய முட்டுக் குடுத்து, ரசிச்சுட்டு இருந்த அவங்கள நான் ரசிச்சுட்டு இருந்தேன். என் சித்தி பொண்ணு ஒருத்தி, அவ அப்பாவ தரைல உக்கார சொல்லி, அவர் மடில கட்டிபுடிச்சி படுத்துகிட்டா. எனக்கு, நான் அம்மா, அப்பா,தம்பி எல்லாரும் ஒருத்தர் மடில ஒருத்தர் படுத்துட்டு டிவி பாக்குறது தான் நியாபகம் வந்துச்சு. 

டிவி பாத்து முடிச்சுட்டு எல்லாரும் முற்றத்துக்கு நிலா பாக்க போனோம். அங்கயும் முற்றத்துல எல்லாரும் ஒருத்தர் மேல ஒருத்தர் கால் போட்டுட்டு அவங்கவங்க அப்பா அம்மா மடியில தல வச்சி படுத்தாச்சு. இடையிடைல கிண்டல் பண்ற மாமா பசங்கள அடிக்க துரத்திட்டு ஓடுற தங்கச்சிங்க.. அடியே அத்தான அடிக்காத, கட்டிக்கப் போறவன் நான்ங்குற கிண்டல் வசனம்... அப்பா, பாருங்கப்பா, இந்த பய என்னைய கட்டிக்க போறானாம்ன்னு அப்பா கிட்டயே கம்ப்ளைன்ட் பண்ணி சிணுங்கல்கள்... அவன் சொல்றது தானே உண்மைன்னு சீண்டுற அப்பாக்கள்... அம்மாக்கள்...  ச்சே.. சான்சே இல்ல.. இதானே வசந்தம்... 

இங்க யாருமே பெரியவங்களா இல்ல. எல்லாருமே சின்ன பசங்களா தான் இருந்தாங்க. மாமா ஒருத்தங்க, அவங்க தங்கச்சிய கைய புடிச்சு வருடி குடுத்துட்டு இருந்தாங்க. தோள் மேல கைய போட்டு அப்படியே நெஞ்சுல சாய்ச்சு வச்சிருந்தாங்க. புள்ளைங்கள கட்டிகுடுக்குற வயசாச்சு, இங்க பாருயா, சிவாஜியயும் சாவித்திரியையும்ன்னு சித்தப்பா கிண்டல் அடிச்சுட்டு இருந்தாங்க... ஹஹா... 

அப்புறம், சாப்பாட்டு நேரம். ராத்திரி மணி பத்தரை. அப்பா அப்போ தான் வந்து சேர்ந்தாங்க. தம்பியும், இன்னும் சில மாமா பசங்க, பெரியம்மா, சித்தி பசங்க எல்லாரும் சமையல் முடிச்சாச்சு. பரோட்டா, சிக்கன் குருமா, சிக்கன் பொறிப்பு, முட்டை... கூடவே வெஜிடபிள் குருமா, காலிபிளவர் பொறிப்பு வேற. இதான் மெனு. இதுல காமடி என்னன்னா தம்பி சுத்த சைவம். ஆனா அவன் கைப்பக்குவம் இருக்கே... அட அட அட... அசத்திட்டான். 

எல்லாரும் உக்காந்து சாபிட்டுட்டு இருந்தோம். அப்போ இன்னொரு விஷயம் கவனிச்சேன். என் பெரியம்மா பையன், என் அண்ணன், அவனுக்கு கல்யாணம் ஆகி ஆறு மாச கைக்குழந்தை இருக்கு. அண்ணி (அவன் மனைவி) சாப்பிட உக்காந்ததும் ஓடி போய் பக்கத்துல உக்காந்துகிட்டான். என்ன வேணும்ன்னு கேட்டு கேட்டு வாங்கி குடுத்தான். சில பேர் இத சாப்பிடு, அத சாப்பிடுன்னு ஓவர் பாசத்துல சாப்பிட வைப்பாங்க, ஆனா இவன் வித்யாசமா கேட்டு கேட்டு வாங்கி குடுத்தது எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. குழந்தைய தூக்கி வச்சுட்டு அவங்க சாப்பிட்டு முடிக்குற வரை கூடவே இருந்து பாத்து ரசிச்சுட்டு தான் இவன் சாப்பிட ஆரம்பிச்சான். ஹஹா இத எல்லாம் நம்ம பசங்க கவனிச்சா சும்மா விடுவாங்களா.... ஓஹோ.... தான்.... அண்ணி முகத்துல வெக்கத்த பாக்கணுமே... 

அப்படியும் இப்படியுமா கிண்டலும் சந்தோசமுமா வீடு வந்து சேர்றப்போ மணி பனிரெண்டு மேல ஆகிடுச்சு. இருமலும் காய்ச்சலும் சேர்ந்துடுச்சு. ஆனாலும் இது இதோட முடிஞ்சு போற விசயமும் இல்ல... இதோ இன்னிக்கி மாமா பையன் ட்ரீட் குடுக்குறான். போயே ஆகணும்ல.... எப்படி விடுறது? கிளம்பிட்டோம்ல... 

இந்த உறவுகள் அமைய என்ன வரம் வாங்கி வந்தோம் சாமி... அவ்வ்வ்வ் கண்ணு வேர்க்க ஆரம்பிச்சுடுச்சு. நான் இன்னொரு நாள் வரேன்... 
.
.


Thursday 8 May 2014

நெடுஞ்சாலை பயணம்


திருநெல்வேலி பயணம்... 

எதுக்காக? 

என்னோட பி.ஹச்.டி கைட் கிட்ட இன்னொரு அடிமை சிக்கிடுச்சு. அதாங்க, புதுசா ஒரு பொண்ணு  ரெஜிஸ்ட்டர் பண்ண போறா. வீட்டுக்கு ரொம்ப செல்லம் போல. சொந்த ஊர் மதுரை. அவசர அவசரமா வந்துருக்காங்க. அப்ஸ்ட்ராக்ட் கூட எழுதல. அதெல்லாம் எழுதி, கைட் கிட்ட இருந்து சிக்னேச்சர் வேற வாங்கணும். 

முந்தின நாள் தான் என்கிட்ட சொன்னாங்க. வீட்ல இருந்தே நான் ரெடி பண்ணி மெயில் அனுப்பிட்டேன். ஆனாலும் நான் வந்தா நல்லா இருக்கும்னு கைட் சொல்லிட்டாங்க. அப்பாவும் மழை தானே, வெயில் இல்லல, அப்படியே அடுத்த வருசத்துக்கான உன் பீஸ்சும் கட்டிட்டு வந்துடலாம்னு சொல்லிட்டாங்க. 

அதனால தான் கிளம்பியாச்சு. 

டிரைவர் யாரு? வழக்கம் போல அப்பா தான்... 

நான் திருநெல்வேலி போனது, அங்க நடந்தது எல்லாம் இருக்கட்டும்ங்க.. இதுல முக்கியமான ஒரு விஷயம் இருக்கு. அது என்னன்னா, இது முழுக்க முழுக்க ஒரு நெடுஞ்சாலை பயணம்... 

மூணு நாலு வருசத்துக்கு முன்னால எல்லாம் திருநெல்வேலி ஹைவேஸ் எனக்கு நெருக்கமான ஒண்ணு. ரொம்ப பிடித்தமான ஒண்ணும் கூட.... சர் சர்ன்னு ஆக்சிலேட்டர்ல கால வச்சா கார் விஸ்க் விஸ்க்ன்னு 120 கிலோமீட்டர் வேகத்துல பறக்கும். ஒண்ணு ரெண்டு நாள் எங்கயாவது ஒரு இடத்துல கார நிறுத்தி குட்டி தூக்கம் போட்டுட்டு கூட பொறுமையா வீடு திரும்பியிருக்கேன்... 

இன்னிக்கி வீட்ல இருந்து கிளம்பும் போதே என் கார்ல போவமான்னு அப்பாகிட்ட லைட்டா கொக்கி போட்டேன். கார நான் தான் ஓட்டுவேன்னு சொன்னார். ஓ... சரிப்பான்னு நல்லப்புள்ளயா தலைய தலைய ஆட்டிகிட்டேன். 

கார் சந்து பொந்துக்குள்ள எல்லாம் புகுந்து ஒரு வழியா ஹை-வேல அடியெடுத்து வச்சுது... 

அப்பா அப்பா அப்பான்னு கை கால உதற ஆரம்பிச்சுட்டேன். காத புடிச்சி முறுக்கிகிட்டே "நினச்சேன்... இந்த கார நீ எடுங்கன்னு சொல்லும் போதே"ன்னு ஒரு கரகர.... 

நமக்கு காதா முக்கியம்? புஜ்ஜு செல்லம்ல-ங்குற கொஞ்சல்ஸ்ல அப்பா காலி.... 

கார ஹேன்ட் ஓவர் பண்ணும்போதே அறுபதுக்கு மேல போகாதன்னு சொல்றார்... கிர்ர்ர்ர்... ராட்சசன்.... இதுக்கு நான் மாட்டு வண்டியே ஓட்டிட்டு போயிருக்கலாம்... 

நாம என்னிக்கி அப்பா பேச்ச கேட்ருக்கோம்?
அப்புறம் என்ன, கார் நெடுஞ்சாலைல பறக்க ஆரம்பிச்சாச்சு. 

முன்னாடி போற பைக், ஆட்டோ, கார், லாரி, பஸ், டேங்கர் ஒண்ணு விட கூடாது... அத்தனையும் முந்து.... ஹுர்ரே..... காருக்குள்ள அப்பா அலறல் தான் நமக்கு கைத்தட்டு.... 

ரொம்ப நாளைக்கு அப்புறம் செம ஜாலி... 

ஆக்சிலேட்டர்ல கால வச்சதும் ஒரு தெம்பு மனசுக்குள்ள கெத்தா வந்து உக்காந்துக்குது. 

நெடுஞ்சாலைல வண்டி ஓட்டுறதுல ஒரு சவுகரியம், ஆக்சிலேட்டர் மேல வச்ச கால பிரேக்குக்கு கொண்டு வர வேண்டாம். அப்படியே பாதைல வழுக்கிகிட்டு போகும். ஒரு குண்டு இருக்காது, ஒரு குழி இருக்காது, ஆனா ஒண்ணு, பூனையோ நாயோ குறுக்க வந்தா காலி தான்... சமயத்துல நாமளும் மேல போக வேண்டியது தான்... 

ரோட்டோரமா பூத்து கிடக்குற மஞ்சள் பூக்கள காணோம்.  இப்போ தான் மழை பெய்ய ஆரம்பிச்சிருக்குறதால அவ்வளவா பச்சையத்தையும் காணோம். 

ஒரு மிதப்புலயே தான் வண்டி ஓட்டிகிட்டு இருந்தேன். ஆனா ஹைவே முடிஞ்சி சர்விஸ் ரோடு என்ட்ரி ஆனதும் அப்பா எதிரியாகிட்டார்... போச்சு போச்சு... டிரைவிங்க பறிச்சிட்டார்... 

அப்புறமா, திருநெல்வேலி டவுன்ல போய் என்னோட கைட் பாத்து, அந்த பொண்ணையும் பாத்து, அவளுக்கு பார்ம் நிரப்பி குடுத்து, வேலையெல்லாம் கொஞ்சம் முடிச்சு, அவங்க கார்ல அபிசேகப்பட்டி போயிட்டு, அங்க அவளோட அப்ளிகேசன் குடுத்துட்டு, நானும் பீஸ் கட்டிட்டு, ஒருவழியா வந்த வேலைய எல்லாம் முடிச்சுட்டு மறுபடியும் என்னோட காருக்கு தொத்தி ஹைவேஸ் வந்தாச்சு... 

"நீ ஓட்றியா"ன்னு அப்பா எந்த நேரத்துல வாய தொறந்தாரோ, சட சடன்னு பெய்ய ஆரம்பிச்சாச்சு மழை... 

கரு கருன்னு மழைமேகம் சூழ்ந்துட்டு சோ...... ன்னு இரைச்சலோட தப தபன்னு பெய்யுது. கார் கண்ணாடி முழுக்க திரை விழுந்தாச்சு. 

நமக்கு ஏற்கனவே கண்ணு அவுட் ஆப் போக்கஸ்... இதுல இந்த இருட்டுல கார ஓட்டினா விளங்கிடும்.... நைசா கழண்டாச்சு.... நல்ல புள்ளன்னு வேற பேர் கிடைக்கும்ல... 

பேய் மழை பேய் மழைன்னு சொல்லுவாங்களே... அது இது தான்னு நினைக்குறேன். வைபரால மழையை சமாளிக்கவே முடியல. கார ஒரு இடத்துல நிறுத்தலாம்ன்னு நினைச்சாலும் பின்னால வர்றாங்க கண்ணு தெரியாம டமார்ன்னு வந்து இடிச்சிட்டா? 

ஷப்பா.... இடது பக்கமா கார ஓட்டினா மழை கார தூக்கி சர்விஸ் ரோட்டுல எறிஞ்சிடும் போல... அவ்வளவு வேகம். அட, அத விடுங்க, கீழ ரோட்டுல ஓடுற தண்ணி இன்னொரு பக்கமா கார இழுக்குது. 

காரோட அடிபாகத்துல தண்ணி மோதுற வேகத்துல கழண்டு விழுந்துடுமோன்னு பயம் வேற... அவ்வளவு பெரிய டபடபரா சத்தம்.... 

இது பத்தாதுன்னு கடந்து போற வண்டிங்க எல்லாம் தண்ணிய அலை மாதிரி மேல விசிறியடிச்சுட்டு போகுதுங்க... அந்த நேரம் கடலுக்குள்ள இருக்குற எபக்ட்.... 

இந்த கப்பல் கப்பல்ன்னு சொல்லுவாங்களே, அதுல நான் போனதே இல்ல... அந்த கொறைய இந்த பயணம் தீர்த்து வச்சிடுச்சு... 

ஆக மொத்தம், பறந்தேன், மிதந்தேன்... நடக்க மட்டும் தான் செய்யல... ஒரு நாள் நெடுஞ்சாலைல நடந்தே போகணும்... 

அவ்வளவு தாங்க, ஒரு அட்வஞ்சர் பயணம் போய்ட்டு வந்தாச்சு...வீடும் வந்து சேர்ந்தாச்சு... இனி என்ன, தூங்க வேண்டியது தான்... 

இடைச்சொருகல்: 
1. மழை இவ்வளவு களேபரம் பண்ணிட்டு இருக்கும் போது நமக்கெல்லாம் வேண்டப்பட்ட ஒருத்தர் அங்கயே தான் ரோட்டுல வேடிக்கை பாத்துட்டு இருந்துருக்கார். ஆனாலும் மழை கண்ண மறைச்சிடுச்சு... 
2. எப்பவும் 120 கிலோமீட்டருக்கு குறையாத என் ஸ்பீட் இன்னிக்கி நூறு தாண்டல... வயசாகிட்டே போகுதுன்னு காட்டி குடுக்குது...