Thursday 29 October 2015

திக்சா.... சக்தியோட பறக்கும் வெர்சன்


கடந்த இருபத்தி ஆறாம் தேதி, அம்மாவ பாக்கப் போயிட்டு ஹோம்ல பசங்களோட படமும் பாக்கப்போயிட்டு மனசு நிறைய சந்தோசத்தோட வீட்டுக்கு வந்தா கீயா கீயா-ன்னு ஒரு மெல்லிய சத்தம்.

என்னடா இது, எங்க இருந்து இந்த சத்தம் வருதுன்னு யோசிச்சவ பக்கத்து பானைல பாக்குறேன், யுவா எதையோ கொத்திகிட்டு இருக்கான்... மனசுல டக்குன்னு ஒரு திகில். ஒரு வேளை அதுவா இருக்குமோன்னு...

நளன் தமயந்தி ஜோடி முட்டைப் போடுறது ரொம்ப ரேர். வாங்கிட்டு வந்த புதுசுல ஒரு முட்டைப் போட்டு அஞ்சு நாள்லயே கீழ தள்ளி உடச்சிடுச்சு. அப்புறமா ரொம்ப மாசங்கள் கழிச்சு ஒரு முட்டை போட்டுச்சு. அதுவும் குஞ்சு பத்து நாள் வளர்ச்சியடைஞ்ச நிலைல முட்டைக்குள்ளயே செத்துடுச்சு. அடுத்து ஒரு மாசம் கழிச்சு ரெண்டு முட்டைப் போட்டுச்சு...

அந்த நேரம் தான் யுவா-மந்தாகினி ஜோடிக்கு பாரதி பிறந்த நேரம். பாரதி கொஞ்சம் பெருசானதுமே மந்தாகினி வேற முட்டைப் போட ட்ரை பண்ணிட்டு இருந்துச்சு. உடம்பு ரொம்ப வீக்கா இருந்ததால நளன்-தமயந்தி கூட்டுல போய் உக்காந்த அது, அங்கயே ஒரு முட்டைப் போட்டுடுச்சு.

அப்புறமா, நளன்-தமயந்தி கூட்டுல இருந்து குஞ்சு சத்தம் கேக்க ஆரம்பிச்சுது. நானும் எத்தனைகுஞ்சுன்னு கூட எட்டிப்பாக்கல. சரி, எத்தனை பிறந்தாலும் சந்தோசம்தான், அத டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு விட்டுட்டேன்.

அஞ்சு நாள் முன்னாடி தான் தமயந்தி போட்ட முட்டைங்க ரெண்டும் கூமுட்டைங்கன்னும், மந்தாகினி போட்ட முட்டை பொரிச்சு ஒரு அழகான கருப்பு குஞ்சு இருக்குன்னும் தெரிஞ்சுகிட்டேன். அது மெல்ல பறந்து வந்து கூடு மேல உக்காந்துட்டு இருந்துச்சு. சரி, ராத்திரி நேரம் ஆகிடுச்சு, கூட்டுக்குள்ள விட்ருவோம்னு நான் தான் அத பிடிச்சு கூட்டுக்குள்ள விட்டுட்டு தூங்கினேன்.

மறுநாள் காலைல எல்லாருக்கும் இரையும் தண்ணியும் வச்சுட்டு கூட்டை எட்டிப்பாத்தேன். குஞ்சு உள்ள இருந்து அழகா எட்டிப்பாத்துட்டு இருந்துச்சு. சந்தோசமா சிரிச்சுட்டு அம்மாவ பாக்கப் போயிட்டேன்.

திரும்பி வந்து பாத்தப்ப யுவா எதையோ கொத்திகிட்டு இருந்துச்சா, சட்டுன்னு அய்யய்யோ ஒருவேளை குஞ்சா இருக்குமோன்னு பயம். ஓடிப் போய் பானைக்குள்ள எட்டிப் பாத்தேன். அதே தான். பயந்து அழக் கூட முடியாம பாவமா பாத்துட்டு இருக்கு. எப்படியோ கூட்டை விட்டு வெளில வந்தத இந்த யுவா கொத்தியிருக்கு. அது தவறி பானைக்குள்ள விழுந்திருக்கு. அப்படியும் விடாம யுவா அத கொத்தி கொதறிடுச்சு.

பதறிப்போய் பானைக்குள்ள இருந்து குஞ்சை வெளில எடுத்துப் பாத்தா ஒரே ரெத்த சகதி. முடி எல்லாம் யுவா கொத்தி பிச்சு எடுத்துடிச்சு. என்னப்பண்ணனே தெரியாம கண்ணுல கண்ணீர் முட்டிடுச்சு. மெதுவா அது உடம்புல இன்பெக்சன் வராம இருக்க ஆயில்மென்ட் தடவி ஒரு பானை எடுத்து, அதுக்குள்ள தேங்கா நார் எல்லாம் வச்சு கூடு மாதிரி பண்ணி அதுக்குள்ள அத வச்சேன்.

இனி திரும்ப கூட்டுக்குள்ள அத விட முடியாது. யுவா கொத்தியே கொன்னுடும். என்னப்பண்ணன்னு தெரியல. நந்துவ கூட்டிகிட்டு கடைக்கு போய் ஒரு செர்லாக் கவர் வாங்கிட்டு வந்து சிரிஞ்ச் மூலமா அதுக்கு கரைச்சு குடுத்தேன். அவசர அவசரமா வாங்கி தின்னுச்சு.

அடுத்தநாள் கொஞ்சம் ஆக்டிவ்வா இருந்துச்சு. இறகே இல்லாத சிறக ஸ்டைலா விரிச்சு சோம்பல் எல்லாம் முறிச்சு பானை மேலஉக்காந்து எல்லாத்தையும் பாத்துட்டு இருந்துச்சு. அத பாத்துக்குறதுக்காகவே காலேஜ் கட் அடிச்சுட்டு வீட்ல இருந்தேன். ஆனா சாயங்காலமே கொஞ்சம் சோர்வாகிடுச்சு.

அப்பப்ப எடுத்து கூட்டுக்குள்ள விட்டேன், நளனும் தமயந்தியும் இரை குடுத்துச்சு. ஆனா யுவா கொத்த பாய்ஞ்சு பாய்ஞ்சு வருது... இப்போதைக்கு எதையும் வேற கூட்டுல மாத்திப் போடமுடியாத நிலை. மந்தாகினி முட்டைப் போட்ருக்கா. அதனால பிடிச்சு மாத்தவும் வழி இல்ல. அதனால குஞ்சை மறுபடியும் நானே வச்சுகிட்டேன்.

எப்பவுமே ரெண்டுமூணு நாள் போனா தான் அதோட ஹெல்த் உண்மையான நிலவரம் தெரியும். அதுக்கு வாழ விதி இருந்தா வாழும், இல்லனா இயற்கைய உன்னால எதுவும் செய்ய முடியாதுன்னு மனசு சமாதானப்பட்டுக்கோன்னு சொன்னார்.

நேத்து, அதான்புதன் காலேஜ் போயே ஆக வேண்டிய நிலைமை. அத தனியாவிடவும் மனசு இல்ல. தம்பி வேற தோப்புக்கு போய்ட்டான். என்னப் பண்ணலாம்னு யோசிச்சு என் கூடவே அத காலேஜ் எடுத்துட்டுப் போயிட்டேன். அங்கப் போய் அழகா பானை மேல உக்காந்துட்டுப் பாத்துட்டு இருந்துச்சு. பிள்ளைங்க எல்லாம் ஹை குருவி ஹை குருவின்னு பாத்துட்டு இருந்தாங்க. சாயங்காலம் வந்ததும் நளன்- தமயந்திகிட்ட விட்டேன், அதுங்க சாப்பாடு குடுத்துச்சு.

அதோட நிலமைய பாத்தா முதல் நாள் விட ரொம்ப சோர்ந்து போயிட்டது நல்லாவே தெரிஞ்சுது. காயம் எல்லாம் வேலை செய்துன்னு புரிஞ்சுது. சரி, என் கூட இருக்குற வரைக்கும் இருக்கட்டும், அப்புறம் கடவுள் விட்ட வழின்னு முடிவு பண்ணி அதுக்கு திக்சான்னு பேரு வச்சாச்சு. திக்சானா சக்திய திருப்பி வாசிச்சா என்னவோ அதான். சக்தி இப்படித்தான என் கூடவே இருந்தான்.

இன்னிக்கி காலேஜ்ல வச்சு பானைய விட்டு வெளில வந்து என் கைக்குள்ள கைக்குள்ள வந்து பதுங்கிச்சு. சாயங்காலமா வீட்டுக்கு வந்தாலும் ஓடி வந்து டைப் பண்ண விடாம கைக்குள்ள வந்து தூங்குது.

முதல் நாள் அதோட காலுல இருந்த வலு இப்ப இல்ல. சரியா எழுந்து நிக்க முடியல. திக்சாவுக்கு என்ன வேணா ஆகலாம், ஆனா ஒரு அன்பான உயிர் என் நாட்களை கொஞ்சம் பொறுப்போட வச்சிருக்குன்னு நினைக்குறப்ப.....

பொதுவா  நான்  என்  வீடு  சம்மந்தப் பட்ட  போட்டோக்கள்  வெளில  போடுறது  இல்ல.  ஆனா  திக்சாவுக்கு  எல்லாருடைய  பிரார்த்தனையும்  வேணும்.   திக்சா  நம்ம  வீட்டுப்  பிள்ளையா  திரும்பி  வரணும். அதுக்கு  நான்  ஒரு  ஜோடி  வேற  செட்  பண்ணிக்  குடுக்கணும்... அதனால  மட்டுமே  அதோட  போட்டோவ  நான்  இங்க  போட்ருக்கேன்.  ப்ரார்த்திச்சிக்கோங்க...

லவ் யூ திக்சா..... நீ சீக்கிரம் சரியாகி, என் கூட சண்டை எல்லாம் போடணும். என்னை ரெஸ்ட் எடுக்க விடாம பறந்து பறந்து கொத்தணும்... சக்திக்கு அடுத்து என் சண்டைக்காரி நீதாண்டி... சீக்கிரமே  சரியாக எங்க எல்லோரோட பிரார்த்தனைகள்  திக்சா....


.

Wednesday 28 October 2015

அம்மாவின் நாள் இது



திங்கட்கிழமை. 26/10/2015. அஞ்சு வருஷம் ஆச்சு. ஒரு கஷ்டம் வந்தா நாள் போக போக அதெல்லாம் பழகிடும் மறந்துடும்னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு ஆரம்ப நாட்கள்ல பெருசா கஷ்டம் தெரியல. எனக்குள்ளயே ஒரு கட்டுப்பாட்ட போட்டுட்டு இறுக்கமா இருந்துட்டு இருந்துருக்கேன். ஆனா, இந்தா அஞ்சு வருஷம் ஆச்சு, இப்ப அதிகமா அவ நியாபகம் வருது. ஒரு சின்னக் குழந்தை போல அவ மடியிலயே சுருண்டுட முடியாதான்னு மனசு ஏங்குது. அதிகமான பாரம் மனச அழுத்துற மாதிரி ஒரு உணர்வு.

அந்த நாள் எனக்கு ஏனோ சரியா நியாபகம் வரவே மாட்டேங்குது. ஒரு வேளை மறக்க நினச்சு மறக்க நினச்சு மறந்துடிச்சோ என்னவோ. காலங்காத்தாலயே இட்லி வேணாம்னு அடம்பிடிச்சவள மிக்சர் தரேன், சிப்ஸ் தரேன்னு கொஞ்சி, ஏமாத்தி ஊட்டி விட்டுட்டு, வாசல்ல விளையாடிட்டு இருந்த ப்ரெண்ட்ஸ் கிட்ட என் பொண்ணைப் பாத்துக்கோங்கடா இந்தா வந்துடுறேன்னு சொல்லிட்டு போனவ தான். இன்னிக்கி வரைக்கும் அவள காணோம்.

சாவு பத்தி நான் எப்பவுமே பயந்தது இல்ல. ஆனா ஒரு மரணம் இத்தன வலிய குடுக்கும்னா, இத்தன கண்ணீரை குடுக்கும்னா, அப்படி ஒரு மரணத்த நான் வெறுக்குறேன்...

என்னன்னு சொல்ல?. எப்படியாவது இதுல இருந்து மீண்டு வரணும்னு தான் கொஞ்ச நாளாவே போராடிட்டு இருக்கேன். அதனால தான் ஞாயிற்றுக் கிழமை ராத்திரி அப்பா வந்து அம்மாவ பாக்க நாளைக்கு போறோம், நீ வரியான்னு கேட்டப்ப முதல்ல முடியாதுப்பா, நான் காலேஜ் போகணும்னு சொல்லிட்டேன். “சரி அப்படினா, உன்னை காலேஜ்ல விட்டுட்டு நாங்கப் போறோம்”னு அப்பாவும் சொல்லிட்டார்.

காலைல எட்டு மணிக்கு எழும்பினேன். மடமடன்னு பல் தேய்ச்சு குளிச்சு எட்டரைக்கு கிளம்பினேன். கிளம்பி வெளில வந்தா மாமா மாமி ரெண்டு குடும்பம், அப்புறம் அப்பா, தம்பி பாட்டி எல்லாரும் ரெடியா இருக்காங்க. பெரிய மாமா தான் “ஏன் அம்மாவ பாக்க வர மாட்டேங்குற? அம்மாவ போய் பாத்துட்டு அப்புறமா காலேஜ் போயேன்”னு சொன்னார். அப்பாவும் “மாமா சொல்றாங்கல, வாயேன்”ன்னு கூப்பிட, எனக்கும் மனசுக்குள்ள சின்னதா ஒரு ஆசை.

“சரி”ன்னு சொல்லிட்டு கார்ல போய் உக்காந்தேன். நான் முன் சீட்ல, தம்பி கார் ஓட்ட, அப்பாவும் பாட்டியும் பின்னால உக்காந்துகிட்டாங்க. ஊருக்குள்ள போனதுமே அம்மாவோட வாசம் அடிக்குற மாதிரி ஒரு பீல். அதென்ன மாயமோ, உதட்டுல தானே ஒரு புன்னகை வந்து உக்காந்துடுது. அதுவும் இந்த தடவ அம்மாவ சுத்தி குட்டியா ஒரு காம்பவுண்ட் கட்டி வச்சிருக்கிறதா தம்பி சொல்லியிருந்தான். வழக்கமா போற பாதைல போகாம ஒரு தெரு வழியா அம்மாவ பாக்கப் போனோம்.

போன உடனே அந்த காம்பவுண்ட் தான் கண்ணுல பட்டுச்சு. அம்மாவ என்னமோ ஜெயில்ல போட்ட மாதிரி. அப்புறமா, இதுவும் நல்லா தான் இருக்குன்னு மனச தேத்திகிட்டேன். அம்மாவ தடவிக் குடுக்குறப்ப அப்படியே கட்டிப் புடிச்சு “ஓ”ன்னு கதறணும் போல இருந்துச்சு. பொல்லாத வறட்டு திமிர வச்சுட்டு “நான் தைரியமானவ”னு எத்தன நாள் தான் மத்தவங்க முன்னாடி நடிச்சிட்டு இருக்குறது? அடக்கி அடக்கி வைக்க வைக்க தான், இந்தா இப்பவும் ஒரு விம்மலும் அழுகையும் கூடவே இருந்துட்டு இருக்கு.

அன்னிக்கும் அப்படித் தான், மாமா, மாமி, அப்பா, தம்பி எல்லார் முன்னாலயும் அழ வேணாம்னு அம்மாவ புடிச்சுட்டு அப்படியே அவ காலடியில உக்காந்துட்டேன். முந்தின நாளே தம்பி அங்க வந்து தரைல கிடந்த சருகு எல்லாம் கூட்டிப் பெருக்கியிருப்பான் போல. இடம் சுத்தமா கிடந்துச்சு. அதோட, அம்மாவ சுத்தி மண் எல்லாம் கொத்தி, புரட்டி போட்டுருந்துச்சு.

அப்பா மாமா எல்லாரும் சேர்ந்து, கொண்டு வந்த காய்கறி, பழம் எல்லாம் ஒரு வாழை இலைல அடுக்க ஆரம்பிச்சாங்க. மாமிங்க ரெண்டு பேரும் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருந்தாங்க. தம்பி மண் வெட்டி எடுத்து மண்ணை நிரப்பாக்கிகிட்டு இருந்தான். எல்லாமே ஒரு பத்து நிமிசத்துல பரபரன்னு நடந்து முடிஞ்சிடுச்சு. நான் அதுக்குள்ள ஒரு குட்டித் தூக்கமும் நிம்மதியா போட்ருந்தேன். அமைதியா இன்னொரு பத்து நிமிஷம் எல்லாரும் கண்ணை மூடிட்டே நியாபகங்கள்ல மூழ்க, தம்பி “அக்கா, அந்த தக்காளி விதைய எடுத்துட்டு வாயேன்”ன்னு கூப்ட்டான்.

மாமா, “இன்னொரு நாள் விதைக்கலாம்ல”ன்னு கேக்க, அவன் “இன்னிக்கே பண்ணிடலாம் மாமா”ன்னு சொல்லிட்டே என் கைல இருந்து தக்காளி விதைகள ஒரு பக்கமும், மிளகா விதைகள இன்னொரு பக்கமும் விதைச்சு, கொண்டு போயிருந்த தண்ணி எடுத்து விட்டான். கொண்டு போன பழங்கள் சிலத தம்பி அங்கயே வச்சுட்டான். எப்படியும் அணில், காக்கா, குருவின்னு வந்து சாப்பிடும்னு.

அப்புறமா என்னைப் பாத்து, “நீ காலேஜ் போறியா”ன்னு கேட்டான். “ஆமா, அப்படிப் போனா சாயங்காலம் வரைக்கும் நேரம் போய்டும்ல”ன்னு நான் சொன்னதும், “ஹோம்ல பிள்ளைங்களுக்கு சாப்பாடு வைக்குறோம், வாயேன்”ன்னு கூப்ட்டான். அட, அந்த பிள்ளைங்கள நான் மறந்தே போயிட்டேன். “சரி, அப்படினா இன்னிக்கி காலேஜ் கட் அடிச்சுட்டு பிள்ளைங்கள பாக்கப் போய்டுவோம்”னு முடிவு பண்ணி, “வரேன்”னு சொன்னேன்.

என்னை காலேஜ்ல விட்டுட்டு, அப்படியே டவுன் போய் கொஞ்சம் வீட்டுக்கு பர்சேஸ் பண்ணிட்டு அப்புறமா ஹோம் போகலாம்னு தான் அப்பாவும் தம்பியும் முதல்ல ப்ளான் வச்சிருக்காங்க. ஆனா நான் வரேன்னு சொன்னதும் அப்படியே நேரே ஹோமுக்கு போய்ட்டோம். அப்படி போறப்ப மணி கிட்டத்தட்ட பத்தே கால் ஆகியிருந்துச்சு. பசங்க எல்லாரும் ஸ்கூல் கட்டடிச்சுட்டு உக்காந்துட்டு இருக்காங்க.

“ஏய், என்ன எல்லாரும் இங்க இருக்கீங்க? ஸ்கூல் போகலயா? மதியம் தான சாப்பாடு”ன்னு தம்பி ரொம்ப உற்சாகமா பசங்க கிட்ட எல்லாம் பேசிட்டு இருந்தான். பாக்கவே அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு. பிள்ளைங்க நாலஞ்சு பேரு “அக்கா, எப்படிக்கா இப்ப இவ்வளவு அழகா இருக்கீங்க”ன்னு என்னையே சுத்திடுச்சுங்க. ஹஹா, நிஜமா ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. ஒருத்தி “உங்க முடி எப்படி இவ்வளவு அழகா இருக்கு”ன்னு கேக்குறா. மருதாணி பூசி வெள்ளை முடிய மறைச்ச கதைய அவ கிட்ட எப்படி சொல்ல?

சாப்பாடு எல்லாம் பின்னால ரெடி ஆகிட்டு இருந்துச்சு. பசங்க படிக்குறது எல்லாம் பக்கத்துலயே கவர்ன்மென்ட் ஸ்கூல் தான். அதனால சாப்பாட்டு நேரம் வந்தா போதும். இதுங்க என்னன்னா காலைலயே தம்பி வரான்னு தெரிஞ்சு கட் அடிச்சுட்டு இருக்குதுங்க.

திடீர்னு ஒருத்தன் தம்பிக் கிட்ட போய் “எங்கள புலி பாக்க கூட்டிட்டுப் போங்களேன்”னான். தம்பிக்கு என்ன தோணிச்சோ தெரியல, சரி போலாமான்னு சொல்லிட்டே மாமா வந்த குட்டி வேன்ல எல்லாரையும் ஏற சொன்னான். மாமாவையும் மாமியையும் எங்க கார் குடுத்து வீட்டுக்குப் போக சொல்லிட்டான். அப்பா பசங்க கூட வேன்ல ஏறிட்டாங்க.

எனக்கும் எல்லார் கூடவும் போக ஆசை. அப்பாவும் தம்பியும் என்னையே பாத்துட்டு இருக்க, “சரி, நானும் வரேன், ஆனா வேற ஏதாவது படம் பாக்கலாம்”ன்னு சொல்லிட்டே வேன்ல ஏறினேன். போன வாரம் தான் நந்து, நான் முருகேஷ் மூணு பேரும் “ருத்ரமாதேவி” பாக்கப் போயிருந்தோம். ஏண்டா வந்தோம்னு திக்குதிக்குன்னு நான் முழிச்சுட்டு இருந்தாலும் முருகேசும் நந்துவும் நல்லா என்ஜாய் பண்ணினாங்க. அதப் பத்தி கண்டிப்பா இன்னொரு போஸ்ட்ல எழுதுறேன்.

அங்க போனதும் “ருத்ரமாதேவி” போஸ்டர் பாத்துட்டு ஒருத்தன் புலி வேண்டாம், இதுக்கு போவோம்னு அடம்புடிக்க ஆரம்பிச்சான். பொம்பள புள்ளைங்களும் அனுஷ்காவ பாத்ததும் இங்க தான் போகணும்னு ஒரே அடம். என்னடா இது இப்படி வந்து மாட்டிகிட்டோமேன்னு நான் திருதிருன்னு முழிக்கேன். தம்பி தான் ஒருவழியா எல்லாரையும் சமாதானப்படுத்தி, ருத்மாதேவி பாக்கலாம்னு முடிவு பண்ணினான். வேற வழி, நானும் அவங்க கூடவே போய் உக்காந்தேன்.

படம் ஓட ஓட, அந்த புள்ளைங்களோட ஆர்பாட்டம், கைத்தட்டல், டான்ஸ் எல்லாமே மனசுக்கு அவ்வளவு உற்சாகத்த குடுத்துச்சு. படம் எல்லாம் டிவிலயே பாத்துப் பழக்கப்பட்டவங்க, இப்படி தியேட்டர்ல வந்து பாத்ததும் அவங்களுக்கு சந்தோசம் தாங்க முடியல. ஒருத்தி அவ தான் ருத்ரமா தேவின்னு இண்டர்வல் நேரத்துல நடிச்சு வேற காட்டினா. தம்பி எல்லாருக்கும் ஐஸ்க்ரீம் வாங்கிக் குடுத்தான். எந்தப் படத்த செம மொக்கப்படம்னு நான் தலைல அடிச்சு நொந்துகிட்டேனோ அந்தப் படம் இந்த தடவ நல்லாயிருந்த மாதிரி தோணிச்சு. ஒரு வேளை படத்த பாத்துட்டு இருக்காம இந்த புள்ளைங்கள பாத்துட்டு இருந்ததால அப்படி இருந்துருக்கலாம்.

ஒருவழியா படம் முடிஞ்சு கீழ வந்ததும் நாம ஹோட்டல்ல சாப்பிடப் போவோம்னு ஒருத்தன் சொல்ல, “டேய், அதான் வீட்ல பிரியாணி செய்றாங்கல, அங்க போய்டலாம்”னு தம்பி லைட்டா தலைல தட்டினான். “போங்கண்ணே. நான் ஹோட்டலுக்கு போனதே இல்ல”ன்னு அவன் சிணுங்கிக்கிட்டே சொன்னதும் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா போச்சு. மூணு வருசத்துக்கு முன்னாடியெல்லாம் பசங்கள அவுட்டிங் கூட்டிட்டு போயிருக்கேன். அப்ப எல்லாம் நாதன் சாரும் லதா அம்மாவும் (ஹோம் நடத்துறவங்க) சாப்பாடு ரெடி பண்ணியே தந்து விட்ருவாங்க. அதனால ஹோட்டல்ல எல்லாம் பெரும்பாலும் சாப்பிட்டது இல்ல. அப்படியே எப்பவாவது சாப்பிட்டாலும் அது ரோட்டோரமா இருக்குற சின்ன ஹோட்டலா தான் இருக்கும்.

தம்பிக்கும் அவன் அப்படி சொன்னதும் மனசு கஷ்டமா தான் இருந்துருக்கும். வீட்ல ரெடி ஆகிடுச்சுலடா, இன்னொரு நாள் கூட்டிட்டு வரேன்னு சொன்னதும் அறைகுற மனசா எல்லாம் தலையாட்டினாங்க. கடைசியில புள்ளைங்க ஏமாந்து போனது போல ஆகிடுச்சேன்னு சின்ன வருத்தம் மனசுக்குள்ள.

அங்க இருந்து கிளம்பி வீட்டுக்கு வந்தப்ப மணி ரெண்டரை ஆகிடுச்சு. பிரியாணி எல்லாம் ஆறிப் போய் நாதன் சாரும் லதா அம்மாவும் எங்களுக்காக காத்துக்கிட்டு இருந்தாங்க. அப்புறமா எல்லாரும் உக்காந்து சாப்ட்டுட்டு வீட்டுக்கு வந்தப்ப மனசு நிறைஞ்சு போய் இருந்துச்சு.

என்ன தான் நான் அன்னிக்கி ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்தாலும் எதையோ மிஸ் பண்ணின பீல் வீட்டுக்கு வந்ததும் சட்டுன்னு ஒட்டிகிச்சு. கார்த்திக் அடிக்கடி சொல்லுவார், “உனக்கு என்னமோ ஆகிடுச்சு, சோகத்த தூக்கி கொண்டாட ஆரம்பிச்சுட்ட”ன்னு. அது உண்மையா தான் இருக்குமோன்னு எனக்குள்ள நானே இப்ப அடிக்கடி கேள்வி எழுப்பிக்குறேன். ஏதோ ஒரு மவுனம், ஏதோ ஒரு தேடல் தொண்டைக்குள்ள விக்கிகிட்டேயிருக்கு.

வாழ்க்கைல எல்லா விதமான உணர்வுகளையும் அனுபவிச்சிருக்கேன். அழுக வந்தா கூட “ஓ”ன்னு அழுது கார்த்திக் உயிர எடுத்துட்டு நான் அந்தப் பக்கமா ஜாலியா சுத்திட்டு இருப்பேன். ஆனா சோகமா மட்டும் இருந்ததே இல்ல. அதனால தான் இப்ப மொத்தமா எல்லாத்துக்கும் சேர்த்து அனுபவிக்கிறேனோ என்னவோ?

என்ன ஒண்ணு, ஆறுதல் சொல்றவங்கள பாத்தா மட்டும் பத்தடி தள்ளியே நின்னுக்குறேன். அட, என் சோகம், நான் கொண்டாடுறேன், யாரும் தடுக்க வேணாமே.... எவ்வளவோ பாத்துட்டோம், இதையும் தான் பாத்துடுவோமே ஒரு கை....


.

Tuesday 27 October 2015

அட பைத்தியக்காரா...



அதோ அந்த படித்துறையில்தான்
கால்கள் நனைந்தபடி கைக்கோர்த்திருந்தோம்...

கொஞ்சம் புன்னகை,
கொஞ்சம் வெட்கம்,
நிறைய காதலுமாய்
சிணுங்கிக் கொண்டிருந்தேன்...

என்னை உனக்கு எவ்வளவு பிடிக்குமென்றால்
சிறு குழந்தைப் போல் கைவிரித்து
இவ்வளவு பிடிக்குமென்று சொல்லிவிடுவேன் தான்...

ஆனால் நீயோ
படங்கள் வரைந்து பாகங்கள் குறி
என்பதுபோல் தனித்தனி பட்டியலிட சொல்கிறாய்.

எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும்
முறைப்பையன் தான் கண்முன் வருகிறான்...
நானென்ன செய்வது?
பார்த்தாயா பார்த்தாயா கோபித்துக் கொள்கிறாய்...

அடப் போடா பைத்தியக்காரா
காதல் என்ன கணக்கு பரிட்சையா?
ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்துவதற்கு?

ஒரு திருட்டுப் பூனையின்
அத்தனை குணாதிசயமும்
உன்னிடத்தில் உண்டு.
மொத்தமாய் திருடிக் கொண்டாலும்
கோபிக்கவே முடிவதில்லை உன்னிடம்.

இதோ பார்த்தாயா?
தன்னந்தனியாய் உன் பெயரை
புலம்ப வைத்துவிட்டு
ரகசியமாய் சிரித்துக் கொள்கிறாய்.

ஒன்றும் விளங்கவில்லை போடா
நம் காதலைத் தவிர....

Friday 16 October 2015

தொட்டிக்குளியலும் குட்டித் தூக்கமும்



இந்தா ஒரு படம் இருக்குல. அந்த படத்த பாத்த உடனே மனசுக்குள்ள அப்படி ஒரு சந்தோசம். “ஹே..... நாங்க குளிக்கப் போறோம்னு டவ்வல தலைக்கு மேல கறக்கிகிட்டே ஓடுன காலம் எல்லாம் மடமடன்னு நினைவுகளா நான் முந்தி நீ முந்தின்னு மனசுக்குள்ள முட்ட ஆரம்பிச்சிடுச்சு. இப்ப எத முதல்ல எடுத்து விட, எத ரெண்டாவதா எடுத்து விடன்னு ஒரே கொழப்பம். அதனால நான் பாட்டுக்கு நினைவுகள சில்லற மாதிரி சிதறி விடுறேன், நீங்க அப்படியே பாலோ பண்ணிக்கோங்க...

நாம இப்ப இருபத்தியஞ்சு வருஷம் முன்னால போகப்போறோம். ரைட்டு விடுங்க, ஒரு மூணு வருசத்த கழிச்சுட்டு இருபத்திரண்டு வருசத்துக்கு முன்னால போவோம். அப்ப தான் எனக்கு கொஞ்சம் வெவெரம் தெரிஞ்ச வயசா இருக்கும்.

அப்ப எங்க வீட்டை சுத்தி எங்களுக்குன்னு ஏழு ஏக்கர் உண்டு. சித்தப்பாவோடதும் சேர்த்து பதினாலு ஏக்கர். அதனால வயல், தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, காய்கறி தோப்புன்னு தனித்தனியா பிரிச்சு ஒவ்வொரு வகை மரமும் நட்டு வச்சிருப்பாங்க. வயல் வரப்புலயும் பாத்தி வரப்புலயும் மாமரங்கள் நிக்கும். அப்படியே தோப்புக்கு ஓரமா போனா வருசையா கொல்லாமரங்கள். நடுநடுவுல சக்க மரங்கள். இதெல்லாத்துக்கும் தண்ணி அடிக்க ஒரு பம்பு செட்டு.

இந்த பம்பு செட்டு தான் எங்களுக்கு ஆட்ட பூமி. அதுவும் கிணறு பக்கத்துல மோட்டார் ரூம். மோட்டார போட்டா முதல்ல தண்ணி ஒரு சின்னத் தொட்டியில வந்து பாயும். அது நிரம்பி அடுத்து இருக்குற பெரிய தொட்டியில பாயும். தோப்புக்கு தண்ணியடிக்க அந்த சின்னத் தொட்டியே போதும். இந்த பெரிய தொட்டி எதுக்குனா மாடுகள குளிப்பாட்ட. கிட்டத்தட்ட அஞ்சு மாடுகள ஒரே நேரம் தொட்டிக்குள்ள இறக்கி, தொட்டி நிறைய தண்ணி நிரப்பி மாடுகள நீந்த விட்டு குளிப்பாட்டுவாங்க. நானும் தம்பியும் மாடுங்க மேல உக்காந்து வேடிக்கைப் பாத்துட்டு இருப்போம். பின்ன, தண்ணிக்குள்ள விழுந்தா கால் எட்டாது, தத்தக்கா பித்தக்கா கோவிந்தா தான்.

அப்பா மாடுகள எல்லாம் குளிப்பாட்டி முடிச்சதுக்கு பொறவு அரை தொட்டி தண்ணி போட்டு நாங்க ஆட்டத்த ஆரம்பிப்போம். தம்பிக்கு தண்ணினா பயம். ஒரு கை எடுத்து மூக்க பொத்திகிட்டே தான் முங்குவான். நான் அப்படி இல்ல, தம் கட்டி, அத்தபார்ன்னு முங்கி எழும்பிடுவேன்.

கொஞ்ச வருஷம் போனா, லீவு விட்டா போதும், ஊர்ல இருந்து மாமா பிள்ளைங்க, சித்தி பிள்ளைங்க, பெரியம்மா பிள்ளைங்க எல்லாரும் வந்து குவிஞ்சிருவாங்க. விடிஞ்சாலே போதும், பொடிசுங்க அத்தன பேரும் ஆளுக்கொரு துணியையும் டவலையும் எடுத்துகிட்டு குளிக்கப் போறோம்னு கிளம்பிடுவோம். பெரியவங்க எல்லாம் வீட்ல உள்ள சட்டிப் பானையெல்லாம் தூக்கிட்டு எங்க கூடயே கிளம்பிடுவாங்க. எதுக்கு? சமைக்கத் தான்.

பத்து பனிரெண்டு கிலோ கோழி, முட்டை, அஞ்சாறு கிலோ ஆட்டிறைச்சின்னு அன்னிக்கி சமையல் தூள் பறக்கும். தோப்புல கிடக்குற தென்னம்மட்ட, சில்லாட்ட, கதம்பல் எல்லாத்தையும் நாங்க பொறுக்கிட்டு வந்து குடுப்போம். அவ்வளவு தான் வேலை முடிஞ்சுது, நாங்க நேரா போய் தண்ணிக்குள்ள பாய்ஞ்சிடுவோம். அதுக்கப்புறமா, மெனுவை பொருத்து பிரியாணியோ, உளுந்தஞ்சோறோ ரெடி ஆகும். பெரும்பாலும் மீன் சமைச்சா அன்னிக்கி உளுந்தஞ்சோறு தான். இதுல அப்பா, மாமாக்கள்ன்னு பெரியாளுங்க எல்லாம் ஒரு துண்டையோ, பாயையோ பெட்ஷீட்டையோ புல்லுல விரிச்சி உறங்கிருவாங்க.

கண் எல்லாம் ரெத்த சிவப்பா, கை விரல்கள் எல்லாம் சுருக்கம் விழுந்து, பல் எல்லாம் கடகடன்னு தந்தியடிச்சாலும் தண்ணிய விட்டு ஒரு பயலும் புள்ளையும் வெளில வர மாட்டோமே. காலைல பத்து மணிக்கு தண்ணிக்குள்ள இறங்கினோம்னா மதியம் ரெண்டு மணிக்கு தான கரையேறுவோம். அதுவும் கடும் பசில சமையல் மணம் நாசிய தாக்கினா தான் உண்டு.

நான் எட்டாவது படிக்குறப்ப பம்பு செட்டு ரொம்ப தூரமா இருக்குன்னு அப்பா வீட்டு பின்னாலயே ஒரு தொட்டி கட்டினாங்க. அப்பவே நான் போட்ட கண்டிசன் ஒண்ணு தான், தொட்டி ரொம்ப பெருசா இருக்கணும், கிட்டத்தட்ட நீச்சல் குளம் மாதிரி, அப்படியே பக்கத்துல பாத் டப் மாதிரி ஒரு சின்ன தொட்டியும் வேணும்னு கேட்டேன். கிட்டத்தட்ட பதினஞ்சு பேர் தாராளமா உள்ள நின்னு குளிக்கலாம். அப்படி ஒரு தொட்டிய அப்பா கட்டினாங்க.

நானெல்லாம் சும்மாவே எங்கயாவது ப்ரண்ட்ஸ் கேங்கோட தான் திரிவேன், வீட்டு பின்னால தொட்டி வந்ததுக்கு அப்புறம் லீவ் நாள்னா எல்லாரும் அசம்பிள் ஆகுற இடம் அங்க தான். மொறுமொறுன்னு அம்மா தர்ற மிக்சர கொறிச்சுகிட்டே, தொட்டி மேல ஏறி உக்காந்துகிட்டு தண்ணிக்குள்ள ரெண்டு காலையும் விட்டு ஆட்டிகிட்டே கதை பேசுறது ஒரு சுகம். பாத்தாததுக்கு பக்கத்துலயே கொய்யா மரம். பசங்க எல்லாரும் கொரங்கு மாதிரி கொய்யா மரத்துல தான் ஏறிக்கிடப்பாங்க.

திடீர்னு யாராவது சவுண்ட் விடுவாங்க, “குளிப்பமா”ன்னு. அவ்வளவு தான் தொட்டில உக்காந்துட்டு இருக்குற அத்தனை பேரும் அத்தபார்ன்னு தண்ணிக்குள்ள பாய்ஞ்சிருவோம். அம்மாவுக்கு தான் கூடுதல் வேலை. பின்ன, நடுங்க நடுங்க குளிச்சிட்டு வர்ற எங்களுக்கு தலைத் துவட்ட டவல் குடுக்குறதுல இருந்து, சுட சுட காப்பியும் பஜ்ஜியும் குடுக்கணுமே.

காலேஜ் படிக்குறப்பவும் அதே கதை தான். குரூப் ஸ்டடின்னு எல்லாரையும் வீட்ல கூப்ட்டு வச்சுட்டு, நேரா வீட்டு பின்புறம் ஓடிருவோம்.

இப்படி ப்ரெண்ட்ஸ், ரிலேடிவ்ஸ் தவிர்த்து, இந்த தண்ணி தொட்டி என்னோட இன்னொரு உலகம். வாரத்துல அஞ்சு நாளும் அது தன்னந்தனியா என்னோட கட்டுப்பாட்டுல தான் இருக்கும். ஸ்கூல்/ காலேஜ் விட்டு வந்ததும் நேரே அங்க தான் போவேன். எனக்காக அந்த சின்னத் தொட்டி காத்துகிட்டு இருக்கும். அப்படியே மோட்டார போட்டு, தண்ணி நிரப்பி அதுல கால் நீட்டிப் படுத்தேன்னா அப்படி ஒரு உறக்கம் போடுவேன்.

யாராவது என்னைத் தேடி வந்தாங்கனா அந்த தண்ணித் தொட்டிக்குள்ள உறங்கிட்டு இருப்பா போய் பாருங்கன்னு தான் அம்மா சொல்லி விடுவா. முதல்ல பாக்குறவங்க எல்லாம் அதெப்படி தண்ணி மேல மிதந்துகிட்டே தூங்குறான்னு ஆச்சர்யமா பாத்துருக்காங்க. அப்புறம் அவங்களுக்கே பழகிப் போச்சு, புள்ளைய வீட்டுக்குள்ள காணோம்னா இங்க தான் தண்ணித் தொட்டிக்குள்ள ஊறிக் கிடப்பான்னு.



.

Tuesday 13 October 2015

காலேஜ் அலப்பரைகள்



சாயங்காலம் காலேஜ் விட்டு மாமா கூட கார்ல வந்துட்டு இருந்தேன். இன்னிக்கின்னு பாத்து ஒரே ட்ராபிக் ஜாம். வண்டி எல்லாம் மெல்ல மெல்ல ஊர்ந்து போய், ஒரு இடத்துல அப்படியே நின்னுடுச்சு.

திடீர்னு ஒரு குரல். ஹே.... டர்ஸ் அப்படின்னு. அட, யாருடா இது, நம்மள இப்படி யாரும் கூப்பிட மாட்டாங்களேன்னு பாத்தா அது என்னோட காலேஜ் மேட். ஐ மீன், க்ளாஸ் மேட். அவ கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு ட்ராபிக் நகர ஆரம்பிச்சதும் டாடா சொல்லிட்டு கிளம்பிட்டேன்.

ஆனா என்னோட நியாபகங்கள் பின்னோக்கி போச்சு. இருங்க, ஒரு டார்ட்டாய்ஸ் கொசுவர்த்தி சுருள் கொளுத்திக்குறேன், அப்ப தான் சிட்டிவேசனுக்கு சரியா இருக்கும்... சொய்ங்......

ப்ளஸ் டூ முடிச்சதும் பெருசா காலேஜ் போய் படிக்கணும், சாதிக்கணும்னு எல்லாம் ஆசைகள் இல்ல. எனக்குன்னு ஒரு ஸ்கூட்டி, ஜாலியா ஊர் சுத்தணும், விளையாட்டா காலேஜ் போகணும், இதான் ப்ளானே.

அப்பாகிட்ட சொன்னப்ப, சரி, போறது தான் போற, பிபிஏ ஜாயின் பண்ணு, அப்புறம் எம்பிஏ படிச்சு பேங்க் மேனேஜர் (ஞே) ஆகிடலாம்னு சொல்லிட்டார். நானும் அந்த கோர்ஸ் எனக்கு சுத்தமா பிடிக்கலனாலும் நல்லப் புள்ளையா சரி சரின்னு தலையாட்டிகிட்டேன்.

அங்க க்ளாஸ்ல போய் உக்காந்தா எனக்கு தெரிஞ்ச ஒரே சப்ஜெக்ட் தமிழும் இங்கிலீசும் தான். வேற எத பாத்தாலும் முட்ட முட்டையா கம்பி கோலம் போட்ட மாதிரியே ஒரு பிரம்மை.

சரி, இப்ப அது நம்ம பிரச்சனை இல்ல, நான் விசயத்துக்கு வர்றேன்.

நான் அந்த கோர்ஸ் படிச்சது வெறும் ஒண்ணரை மாசம் தான். அதுக்குள்ள அங்க பண்ணின அட்டகாசங்கள் தான் ஹை-லைட்டே...

என்னோட சத்தம் எப்பவும் ரொம்ப பலமா இருக்கும். யார் கிட்ட பேசினாலும் குரலை ஓங்கி தான் பேசுவேன். அதனாலயே என்னைப் பாத்து என்ன மைக்க முழுங்கிட்டியான்னு கேப்பாங்க. தூரத்துல என்னைப் பாத்தாலே “ஹே மைக்”ன்னு தான் ஆரம்பிக்கவே செய்வாங்க. அப்பலாம் எனக்கு கோபம் எல்லாம் வராது, ஒரே பெருமை தான். பின்ன, ஒரு பட்டப்பெயர் கிடைக்குதுனா சும்மாவா.

சத்தமா பேசினாலும் ஆரம்பத்துல கொஞ்சம் அடக்க ஒடுக்கமா தான் இருந்தேன். அப்ப பாத்து எங்க சீனியர்ஸ் வெல்கம் டே வச்சாங்க.

இங்க எல்லாம் வெல்கம் டேனா என்னன்னு பாத்தீங்கனா ஸ்டாப் கிட்ட பெர்மிசன் வாங்கிட்டு அவங்க முன்னாடியே ராகிங் பண்றது தான்.

பாவம் எங்க சீனியர் அக்காங்க எல்லாம் ரொம்ப நல்லவங்களா இருந்தாங்க. ஒரு துண்டு சீட்டுல பாட்டு படி, டான்ஸ் ஆடு, பாண்டி விளையாடுன்னு ரொம்ப ஈசியா தான் எழுதி வச்சிருந்தாங்க. அத நல்லா குலுக்கி நாம ஒரு சீட்ட எடுத்து அதுல இருக்குற மாதிரி பண்ணனும்.

என் கிளாஸ்மேட்ஸ் இருக்காங்களே, சரியான அழுவுனி புள்ளைங்க. இதுக்கே பயந்து நடுங்கி, அழுது வடிச்சுட்டு இருந்தாங்க.

அப்ப தான் ஒருத்திக்கு கோழி பிடிக்கணும்னு வந்துச்சு. அவ அந்த இடத்துலயே கண் எல்லாம் கலங்கி பொலபொலன்னு அழ ஆரம்பிச்சுட்டா. நான் பாத்தேன். அக்கா, நான் கோழி பிடிக்குறேன்னு சொல்லிட்டே, பா...பா....ன்னு பீல்ட்ல இறங்கிட்டேன்.

கோழினா சும்மா பிடிச்சுட முடியுமா என்ன? பறந்து பறந்துல போகும். நானும் அது பின்னாலயே ஓடி ஓடி, கடைசியா கோழிய சீனியர் அக்கா ஒருத்தங்க தலைல நிப்பாட்டி வச்சுட்டேன்.

அக்கா, அசையாதுங்கக்கா, கோழி உங்க தல மேல நிக்குது. கைய தூக்காதீங்க, தலைய திருப்பாதீங்கன்னு ஏகப்பட்ட கண்டிசன்ஸ். அந்தக்கா திருதிருன்னு முழிச்சுட்டு அசையாம நிக்குறாங்க. அப்புறம் கபால்ன்னு கோழிய பாய்ஞ்சு பிடிச்சுட்டு, கோழி உங்க தலைல ஆய் போய்டுச்சுக்கா, தொடச்சுக்கோங்கன்னு சொல்லிட்டு சீட்ல வந்து உக்காந்துட்டேன்.

அப்புறம் என்னை சீட்டு எடுக்க சொன்னப்ப பாட்டு பாடவும்னு தான் வந்துச்சு. நான் பாட்டுக்கு நடுவுல போய் நின்னு, ரெண்டு பக்கமா போட்டுருந்த ஷால கழட்டி ஒரு பக்கமா போட்டுட்டு சிவாஜி மாதிரி ஸ்டைலா நிமிர்ந்து நின்னு “யாருக்காக, இது யாருக்காக, இந்த காலேஜு இது யாருக்காக”ன்னு பாடி மறுபடியும் ஸ்டைலா ஒரு பார்வை பாத்துட்டு உக்காந்துட்டேன். அப்ப தான் “யாருடா இவ”ன்னு மொத்த டிபார்ட்மென்டும் என்னை திரும்பி பாத்துச்சு.

ஒரு மேடம் எடுக்குற பாடம் சுத்தமா புரியாது. அது என்ன சப்ஜெக்ட்னே எனக்கு இப்ப மறந்தும் போச்சு. அவங்க வாயத் தொறந்தாலே தாலாட்டு பாடுற மாதிரி தான் இருக்கும். அப்படி தான் ஒருநாளு பக்கத்துல ஒருத்தி நல்லா தூங்கிட்டு இருந்தா. எனக்கு அத பாத்து ஒரே கொட்டாவி கொட்டாவியா வர ஆரம்பிச்சிடுச்சு. “ஏவ், ஏவ்”னு ஒரே குனிஞ்சு உக்காந்து கொட்டாவி விட்டுட்டு இருக்கேன். திடீர்னு ஒரு குரல். “ஸ்டான்ட் அப் ஆன் தி பெஞ்ச், அண்ட் கெட் அவுட்”ன்னு. நான் பட்டுன்னு பெஞ்ச் மேல ஏறி நின்னுகிட்டு இப்படியே எப்படி வெளில போகன்னு அப்பாவியா கேட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சுது, அந்த ஸ்டான்ட் அப் ஆன் தி பெஞ்ச் பக்கத்து சீட்டுக்காரிக்கும், கெட் அவுட் எனக்குமாம். இதென்ன சொத்தா மை லார்ட், பங்கு பிரிக்குரதுக்கு?

மறுபடியும் அதே மேடம் தான். அவங்க எடுக்குறதே புரியாது, இந்த லெச்சனத்துல செமினார் வேற எடுக்க சொன்னாங்க. காலேஜ் போயே அப்ப பதினஞ்சு நாள் ஆகல, அதுக்குள்ள செமினார் எடுக்க சொன்னா எப்படி?

எல்லா புள்ளைங்களும் பயந்துகிட்டு வாயே தொறக்கல. எனக்கு அப்ப டாபிக் எதுவும் குடுக்கல. நம்ம பேரு ஆல்பபெட்டிகல்ல கடைசி பேருங்குறதால அப்புறமா டாபிக் குடுக்கலாம்னு விட்டு வச்சிருந்தாங்க.

முதல் நாள் செமினார் க்ளாஸ். எடுக்க வேண்டிய புள்ள எழுந்து நின்னு அழுகுது. அதுவும் கேவி கேவி அழுகுது. நம்ம செட்டுல ஒரு புள்ள அழுதா பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? மிஸ் நான் செமினார் எடுக்குறேன் மிஸ்ன்னு ரெடி ஆகிட்டேன். அவங்க என்ன நினச்சாங்களோ, சரி எடுன்னு சொல்லிட்டாங்க.

நான் பாட்டுக்கு முன்னாடி போனேன். சாக்பீஸ் எடுத்து ஏ+பி தி வோல் ஸ்கயர் ஈக்குவல் டூ ன்னு எனக்கு தெரிஞ்ச ஒரே கணக்கு பாடத்த எடுக்க ஆரம்பிச்சுட்டேன். இதுல காமடி என்னன்னா மேடம் உக்காந்துகிட்டு என்னையே பாத்துகிட்டு, நான் ஓவர் மேடம் சொன்னதும் போய் உக்காருன்னு சொல்லிட்டாங்க. ஆக மேடமுக்கே ஒன்னும் தெரியல சப்ஜெக்ட் பத்தி. நான் செமினார் முடிச்சுட்டு வந்து புள்ளைங்க கிட்ட இத சொல்லி சொல்லி ஒரே சிரிப்பு. மேடம், என்ன அதுன்னு மிரட்டி கேட்டதும் ஒருத்தி உளறிட்டா. உடனே நான் க்ளாஸ்ல இண்டீசென்ட்டா பிகேவ் பண்ணினேன்னு சொல்லி பிரின்சிபால்கிட்ட கொண்டு போய் விட்டுட்டாங்க

பிரின்சிபால் கிட்ட போனாலும் நாம அசருற ஆளா? முதல்ல அவங்கள புரியுற மாதிரி க்ளாஸ் எடுக்க சொல்லுங்க, அப்புறமா நாங்க வேணா செமினார் எடுக்குறோம், அதுக்கப்புறமா வேணா தூங்காமலும்  இருக்கோம்னு போர் கொடி தூக்கிட்டேன். அப்புறம் என்ன, அடுத்த நாள்ல இருந்து மேடம் விழுந்து விழுந்து படிச்சுட்டு வந்து க்ளாஸ் எடுத்தாங்க.

அதே மாதிரி இங்கிலீஷ் க்ளாஸ்க்கு செமினார் எடுப்பேன்னு அடம்புடிச்ச ஒரே ஆள் ஐயாம் தான். ஏன்னா, எல்லாம் தமிழ் மீடியம் பிள்ளைங்களா இருப்பாங்க, இங்கிலீஷ் கண்டா தெறிச்சு ஓடிருவாங்க. எனக்கு தான் நல்லா வருமே, அதான் பந்தாவுக்கு வீம்பா  செமினார் வேணும்னு கேப்பேன். ஆனா  அந்த  ஒன்னரை மாசத்துல  செமினார்  டாபிக்  கிடச்சும் என்னால செமினார்  எடுக்க  முடியலங்குறது  ஒரு பெரிய வருத்தமான விஷயம். 

எங்களுக்கு வாரத்துல ஒரு நாள் ப்ரீ ஹவர் உண்டு, அப்ப ஏதாவது விளையாட்டு ப்ராக்டிஸ் பண்ணுவோம், அப்ப எங்க பி டி மேடம் here one girl sitting, where going-னு கேட்டாங்க, நான் உடனே i go, she go madam, i come, she no come madam னு சொல்ல அவங்க u good girl ன்னு சொல்லி தட்டிக் குடுத்தாங்க பாருங்க, அவங்க  இங்கிலீஷ நினச்சு ஹாஹா கிரௌண்ட் விட்டு ஓடி வந்து அங்கயே விழுந்து விழுந்து சிரிச்சோம். இப்படி  எல்லாம்  படிச்சுக் குடுக்குறவங்கள கிண்டல் பண்ணக் கூடாதுன்னு யாரும்  சண்டைக்கு வந்துடாதீங்க. வயசு அப்படி. அதோட  படிச்சு குடுக்குற வாத்தியார் சரியா இருந்தா தான புள்ளைங்க சரியா இருப்பாங்க.

நான் படிச்சது லேடீஸ் காலேஜ். காலேஜ் உள்ள போகணும்னா மெயின் ரோட்டுல இருந்து இறங்கி ஒரு கிலோமீட்டர் நடந்து தான் போகணும். நான் ஸ்கூட்டில போவேனா, அதனாலயே சாயங்காலமானா ஸ்கூட்டில ரெண்டு ரெண்டு பேரா ஏத்தி ஒரு பத்து பேரை மையின் ரோட்டுல கொண்டு போய் விடுவேன். இப்படி நான் ட்ரிப் அடிக்குற இடத்துல தான் பசங்க நின்னுட்டு இருப்பானுங்க. நான் அங்கயும் இங்கயுமா மாத்தி மாத்தி ட்ரிப் அடிக்குறத பாத்துட்டு கொஞ்சம் கொஞ்சமா கிண்டல் பண்ண ஆரம்பிச்சானுங்க. நானும் கொஞ்ச நாள் கண்டுக்காம இருந்தேன்.

முதல்ல ஒருத்தன் லவ் லெட்டர் கொண்டு வந்து நீட்டினான். நானும் நல்லப்புள்ளையா அத வாங்கி அங்க வச்சே படிச்சு பாத்துட்டு, ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் கரெக்சன் போட்டு பத்துக்கு மூணு மார்க் வேற போட்டுக் குடுத்தேன்.

அப்புறமாவது அந்த பசங்க திருந்தினாங்களா, இல்லையே, என்னைப் பாத்து ஒருத்தன் விசில் அடிக்க ஆரம்பிச்சான். ரெண்டு மூணு நாள் முறைச்சுப் பாத்தேன், அப்புறமும் அடங்குற மாதிரி தெரியல, நேரா அவன் முன்னால ஸ்கூட்டிய கொண்டு போய் விட்டுட்டு செவுள்லயே விட்டேன் ஒரு அறை. பையன் பொறி கலங்கிட்டான். அவனுக்கு சப்போர்ட்டா ஒருத்தன் பாட்டு பாடி கிண்டல் பண்ணிட்டு இருப்பான். அவனுக்கு செருப்பை கழட்டி மாத்தி மாத்தி மொத்திட்டேன். அவ்வளவு தான் காலேஜ் முழுக்க நான் பிரபலமாகிட்டேன்ல. அதனால என்னோட பெயர் மைக்ல இருந்து டர்ஸ் ஆகிடுச்சு.

இன்னும் நிறைய அலும்பல்கள். சேட்டைகள். எல்லாம் ஒரு ஒன்னரை மாசம் தான். அப்புறம் தான் என்னோட வாழ்க்கைல டர்னிங் பாயின்ட்டா ஒரு சம்பவம் நடந்துச்சு. அந்த சம்பவத்த தான் இங்க அப்பப்ப சொல்லிட்டு வரேன்னே....

இப்படியாக தான், மைக் என்றும், டர்ஸ் என்றும் டெரரா அழைக்கப்பட்ட நான் உங்களால் இப்பொழுது காயு என்று அன்போடு அழைக்கப்படுகிறேன்.

இப்படிக்கு, அன்பும் பணிவும் மிக்க காயு.....


.

Saturday 10 October 2015

இது ஒரு நன்றி கூறல்





படம்: வெற்றிக்கோப்பையோட இருக்குறது பூங்கோதை அம்மா.

காலைல ஆறரை மணி. திடீர்ன்னு மகேஷ்கிட்ட இருந்து போன். தூக்கக் கலக்கத்தில் எடுத்து ஹலோ சொன்னேன். “அக்கா வாழ்த்துகள் அக்கா போட்டி முடிவுகள் அறிவிச்சுட்டாங்கன்னு” சந்தோசமா சொன்னான்.

அவன் வாழ்த்து சொன்னதவச்சு, அப்போ நமக்கு ரெண்டாவது இல்ல மூணாவது பரிசு கன்பார்ம்ன்னு முடிவெடுத்துக்கிட்டேன். ரிசல்ட் வந்த உடனே உங்க தலைப்பைத் தான் தேடுனேன் அக்கா. உங்களுக்குத்தான் முதல் பரிசுன்னு அவன் சொன்னதும் டக்குன்னு கொஞ்சம் ஃப்ரீஸ் ஆகிட்டேன். மனசுக்குள்ள ஒரு சந்தோசம்.

என்னோட துறை சம்பந்தமா நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன். ஆனா, என்னோட கவிதைக்கு முதல்முதலா பரிசுகொடுத்து அங்கீகரிச்சது எழுத்து டாட்.காம் தான். அதன்மூலமாதான் என்னோட கவிதைகள தானே பதிப்பிச்சு புக்போட முன்வந்தார் மங்காத்தா. அந்த புக் “தென்னங்கீற்றுகளின் சாட்சியாக”ன்ற பெயர்ல வெளியாகப்போகுது சீக்கிரமே.

என்னோட எழுத்துகளுக்கு ரெண்டாவதாகவும், பெரிய அங்கீகாரமாகவும் இந்த  கட்டுரைக்கு முதல்  பரிசு கிடைச்சிருக்கு. உலக அளவில் தமிழ் வலைப்பதிவர்கள் எல்லாருமா சேர்ந்து கலந்துகிட்ட/ நடத்தின கட்டுரை போட்டியில் பெண்கள் முன்னேற்றம் தொடர்பான தலைப்பில் இந்த பரிசு கிடைச்சது சந்தோசத்தோட இன்னொரு காரணம்.

இந்த பரிசு கிடைச்சதும் ஏழு மணிக்கு போன்ல கூப்ட்டு வாழ்த்து சொன்ன தமிழ்வாசி பிரகாஷ் அண்ணா, திண்டுக்கல் தனபாலன் அண்ணா, விஷயம் கேள்விப்பட்டு சந்தோசப்பட்ட பூங்கோதை அம்மா, திரு அண்ணா, ரொம்ப ரொம்ப சந்தோசப்பட்ட கார்த்திக், ஸ்டேடஸ் போட்டு ட்ரீட் கேட்ட யது நந்தன், உடனே வாழ்த்து சொல்லி இன்னும் நிறைய எழுதணும்னு ஊக்குவிச்ச நல்லினி அருள் எல்லாருக்கும் என்னோட நன்றி.

ஆங், அப்புறமா, அவங்க பிறந்தநாள் அதுவுமா எனக்கு கால் பண்ணி வாழ்த்து சொன்ன பாலா அம்மா, கட்டுரை பாத்து பாஸிட்டிவ் கம்மெண்ட் கொடுத்தவங்க, இன்னும் நல்ல தமிழ்ல எழுதனும்ன்னு என்னை ஊக்குவிச்சவங்க, நான் ஜெயிச்சதுக்கு தானே ஜெயிச்சதா நினைச்சு சந்தோஷப்படும் மகேஷ், இன்பாக்ஸ்க்குள்ள ஓடி வந்து, எனக்கு உன் மேல லவ் லவ்வா வருதே, யார்கிட்ட போய் சொல்லுவேன்னு துள்ளி குதிச்ச அருட்செல்வி குமரேசன், ட்ரீட் கேட்ட ப்ருந்தா ஆறுசாமி, விஷயம் கேள்விப் பட்டதும் வாழ்த்துகளா குவிச்சவங்க, இன்னும் நிறைய நிறைய சப்போர்ட் பண்ணும் எல்லாருக்கும் என்னோட பெரிய தேங்க்ஸ். என்னை கொஞ்சம் மெருகேற்ற உதவிய அந்த பெயர் தெரியாத ஆன்மாவுக்கு தனிப்பட்ட நன்றி.

அச்சச்சோ பாத்தீங்களா, நம்ம புதுகோட்டை வலைப்பதிவர் விழா குழுவினருக்கு தேங்க்ஸ் சொல்லல. அவங்களுக்கு  என்னோட ஸ்பெசலோ ஸ்பெசல் தேங்க்ஸ். பின்ன, எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க காரணமா இருந்துருக்காங்களே....

நாளைக்கு புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் வலைப்பதிவர்கள் திருவிழாவில் ஐயாயிரம் ரூபாய் பரிசும், வெற்றிக்கேடயமும் குடுக்குறாங்க. என்சார்பா பூங்கோதை அம்மா கலந்துக்கப் போறாங்க. மானே தேனே மாதிரி இடையில கார்த்திக் தன் பேரை போடலையே ஏன்னு கேட்டிருக்கார். பரிசுத் தொகையை அப்படியே உங்க அக்கவுண்ட்ல போட்டுட்றேன் கார்த்திக். ஒழுங்கு மரியாதையா எனக்கு வெப்சைட் ஆரம்பிச்சுக் கொடுத்துடுங்க.

ம்ம்ம் வேறென்ன சொல்ல.. ஏதாச்சும் மிஸ் ஆகி இருந்தா நாளைக்கு வந்து சொல்றேன். இப்போ குட்டித் தூக்கம் போடனும் கொர்ர்ர்ர்ர்ர்



.