Wednesday 24 June 2015

ராமையாவுக்கு - எழுதுகிறேன் ஒரு கடிதம்ராமயாவுக்கு,

அன்புள்ள ராமையாவுக்குன்னு தொடங்கலாமான்னு ரொம்ப நேரம் யோசிச்சேன். சின்ன வயசுல நீங்க தான் என்னை மாருலயும் தோளுலயும் தூக்கி வளத்தீங்களாம், அம்மா சொன்னா. அப்படியும் எனக்கு உங்கள அன்புள்ளன்னு சொல்ல மனசு வரல.

காரணம் நீங்களே தான். பதினஞ்சு வருஷம் கழிச்சு இப்பத் தான் சொந்த ஊருக்கு வர்றேன். இங்க யாருக்குமே என்னை தெரியாதுன்னு நினச்சுட்டு தான் வந்தேன். ஆனா தூரத்துல இருந்து பாத்ததுமே நீங்க என்கிட்ட ஓடி வந்தீங்க. உங்க முகத்துல அப்படி ஒரு சந்தோசம். தாயி, நல்லாயிருக்கியா தாயின்னு என் ரெண்டு கையையும் புடிச்சுகிட்டீங்க. உங்க உடை எல்லாம் அவ்வளவு அழுக்கு. வெத்தல போட்டு குதப்பி குதப்பி பல் எல்லாம் வெத்தல கறை. போதாதுக்கு வாய்ல இருந்து வாய்நீர் வேற ஒழுகிட்டு இருந்துச்சு.

இதுக்காகவா என்னை அன்புள்ளன்னு சொல்ல நீ யோசிக்குறன்னு நீங்க கேக்கலாம். இல்ல, நிச்சயமா இல்ல. உடம்புல அழுக்கு இருந்தாலும் மனசுல அப்பழுக்கத்த ஜனங்க நீங்க எல்லாம்னு எனக்குத் தெரியும். ஆத்துலயும் கொளத்துலயும் ஊரான் வீட்டு அழுக்க எல்லாம் அடிச்சு தொவைக்குற ஜனங்க நீங்க. உங்கள அழுக்குன்னு நான் எப்படி ஒதுக்க முடியும்?

பின்ன எதுக்கு என்னைப் பாத்ததும் மேலோட்டமா ஒரு சிரிப்பு மட்டும் சிரிச்சுட்டு கைய இழுத்துட்டு ஒதுங்கி போனன்னு கேக்குறீங்களா? ரெண்டு நாள் கழிச்சு ஊருக்கு புறப்பட்டப்ப தூரமா நீங்க கைல துண்ட வச்சுட்டு என்னையே எட்டி எட்டிப் பாத்தப்ப படக்குன்னு மூஞ்சிய திருப்பிக்கிட்டு ஏன் கார்ல ஏறிப் போனேன்னு கேக்குறீங்களா?

அதுக்கும் காரணம் நீங்களே தான். உங்க உருவம் என்னை ஒரு நொடி உருக்குலைய வச்சது உண்மை தான். திடீர்னு ஒரு அந்நிய ஆடவர் என் கைய புடிச்சா எனக்கு அதிர்ச்சியா இருக்குமா இருக்காதா? ஆனா இதெல்லாம் ஒரு காரணமே இல்ல. திகைச்சாலும் புரிஞ்சுகிட்டு சந்தோசமா உங்கள பாத்து சிரிச்சிருப்பேன்.

ஆனா உங்க மேல அடிச்சுது பாருங்க குப்புன்னு ஒரு நாத்தம், என் இத்தன வருஷ வாழ்க்கைல நான் உணர்ந்திடாத நாத்தம் அது. குடலை பிரட்டிகிட்டு வந்துடுச்சு. விட்டா எங்க அங்கயே வாந்தி எடுத்துருவனோன்னு தான் உடனே அங்க இருந்து வந்துட்டேன்.

அதுக்காகத் தான் உங்க மேல அன்பு இல்லாம போய்டுச்சுன்னு எல்லாம் இல்ல. அன்னிக்கி முழுக்க அம்மா நீங்க முட்ட வந்த மாட்டுகிட்ட இருந்து என்னை காப்பாத்தினதையும் அதனால கீழ விழுந்து உங்க கை முறிஞ்சு போன விசயத்தையும் கதைகதையா சொன்னா. பாம்புனா கூட பயமே இல்லாம பிடிச்சு தூக்குவேனாமே, பச்சப் பாம்பும் தண்ணி பாம்பும் நீங்க தான் பிடிச்சுட்டு வருவீங்கன்னு அம்மா சொன்னா. என் காலுல நீங்க மாட்டி விட்ட கொலுசு தான் ரொம்ப நாளைக்கு இருந்துச்சாம். பாப்பா படிச்சு பெரிய டாக்டராகணும்னு கனவெல்லாம் கண்டீங்களாமே. ஆனா ஒண்ணு ராமையா, நான் டாக்டராகி எம்.ஜி.ஆர் மாதிரி முதலமைச்சர் ஆகணும்னு கனவு கண்ட ஒரே ஆள் நீங்களா தான் இருக்க முடியும். ஹஹா.

ராமையா, உங்கள பத்தின விஷயங்கள் எல்லாமே எனக்கு சந்தோசத்த தான் குடுத்துச்சு. அன்னிக்கி சாயங்காலம் மட்டும் நான் அவள பாக்காம இருந்துருந்தா இந்நேரம் உங்க தோள்ல தொங்கி பழைய நினைவுகள புதுபிச்சிருப்பேனோ என்னவோ?

அவ உங்க பொண்ணாமே. பதினெட்டு வயசு இருக்குமா அவளுக்கு. அதுக்குள்ள கண்டாங்கி கட்டிக்கிட்டு கைல ஒரு புள்ளையோட ஒருத்தன்கிட்ட மிதி வாங்கிட்டு இருந்தா. கேட்டா அவ புருசனாம். ஏன் ராமையா, நீங்களும் தான அப்ப அந்த இடத்துல இருந்தீங்க. அவன் போட்டு அந்த அடி அடிக்குறான், நீங்க எல்லாம் விதின்னு வாய்ல துண்ட பொத்திகிட்டு அம்மாகிட்ட வந்து அழுதுட்டு நிக்குறீங்க. அந்த நொடி உங்கள பாத்து எனக்கு ஆத்திரம் வந்துச்சு.

நான் என்ன தாயி பண்றதுன்னு என்கிட்ட கேக்காதீங்க, இப்படி தான குடிச்சு குடிச்சு ஒதைச்சு உங்க பொண்டாட்டி படக்கூடாத இடத்துல பட்டு அல்பாயுசுல போய் சேந்துருக்காங்க. அப்பயாவது திருந்துனிங்களா நீங்க? வயசுப் புள்ளைய வீட்ல வச்சிருக்க கூடாதுன்னு பத்தாங்க்ளாஸ் பரிச்ச எழுத போன புள்ளைய புடிச்சி இந்த குடிகாரனுக்கு கட்டி வச்சிருக்கீங்க.

அவன் குடிகார நாயின்னு தெரிஞ்சும் கல்யாணம் ஆனா திருந்திருவான்னு அவன் தலைல இந்த புள்ளைய கட்டியிருக்கீங்க. ஏன்யா, தெரியாம தான் கேக்குறேன், நீங்க எல்லாம் பரிசித்து பாக்கவா பொம்பள புள்ளைங்க எல்லாம் பிறப்பெடுத்துருக்கோம்? பெத்த புள்ளைய வச்சு காப்பாத்த துப்பில்லனாலும் பரவால, அத பாழும்கிணத்துல தள்ளி விட எப்படியா மனசு வந்துச்சு? அதுவும் மனசாட்சியே இல்லாம எல்லாம் அவ விதி, பொறந்த பொறப்புன்னு அவ மேலயே பழி போடுறீங்க?

நான் ஒருத்தி உங்கள பாத்து மூஞ்சிய திருப்பிகிட்டது தான் உங்களுக்கு குறைச்சலா போய்டுச்சாக்கும். கண் எல்லாம் கலங்கி தூரமா நான் மறையுற வரைக்கும் பாத்துகிட்டே இருந்தீங்க. ஆனா ராமையா, நீங்க அழுதது என் கண் முன்னால நிக்குது. என்ன இருந்தாலும் என்னை தூக்கி வளத்த மனுஷன் இல்லையா. அதனால தான் இத எல்லாம் உங்ககிட்ட சொல்லனும்னு தோணிச்சு.

உங்க பொண்ணு அழுறது உங்க மனச உறுத்தவே இல்லயா. மனசுக்குள்ள ஆயிரம் வருத்தம் இருக்கு அதான் குடிக்குறேன்னு சப்பக் கட்டு கட்டாதீங்க. அந்த பய தான் குடியால சீரழிஞ்சு உங்க பொண்ணையும் சீரளிக்குறான்னா நீங்களும்ல குடிச்சி குடிச்சி அவ வாழ்க்கைய சீரளிக்குறீங்க. என்ன பாக்குறீங்க?

பாசம்குறது தூக்கி வளத்த புள்ளைய பாத்து அவ பகட்டா திரியுறத பாத்து சந்தோசப்படுறது இல்லயா, பெத்து வளத்த புள்ள நல்ல துணி போடணும், நாலெழுத்து படிக்கணும், சீண்டுறவன அவ ஏறி மிதிக்கணும்னு நினைக்குறது தான்.

முதல்ல அந்த வீணாப்போன குடிய தூக்கிப் போட்டுட்டு எம்புள்ளய ஏண்டா அடிக்குற நாயேன்னு அவன ஒரு வார்த்த கேளுங்க. குடிய விட்டுட்டு வாடா, எம்புள்ளைய வாழ அனுப்புறேன்னு அவன் கிட்ட சொல்லுங்க. திருந்தினா திருந்தி வரட்டும். இல்லனா கவலையே படாதீங்க, அவன் கிட்ட அடியும் ஒதயும் வாங்கிட்டு அந்த புள்ள அணுஅணுவா செத்துப் போறதுக்கு உங்க வீட்ல வந்து மகாராணியா வாழ்ந்துட்டு போய்டலாம்.

ஒரு பொண்ணுக்கு நல்ல புருஷன் அமைஞ்சா நல்லது, ஆனா எல்லாருக்கும் அப்படி அமையுறது இல்லையே. ஒரு பாவிய கட்டிக்கிட்டு காலம்பூரா கஷ்டப்படணும்ன்னு அவசியமே இல்ல. புருஷன் மட்டும் ஒரு பொண்ணுக்கு உலகமும் இல்ல. அவளுக்கு ஒண்ணும் நாலு கழுத வயசும் ஆகிடல. இன்னும் பால் மணம் மாறாத அந்த பச்ச கைல இன்னொரு குழந்தை. கொடுமையா இருக்குயா.

என் மேல இன்னும் அன்பும் பாசமும் இருந்தா திருந்தி வாங்க. அப்பாவோட போன் நம்பர் உங்ககிட்ட இருக்கும்னு நம்புறேன். இல்லனா மாமாகிட்ட வாங்கிக்கோங்க. உங்க போனுக்காக காத்திருக்கிறேன். அதுல சந்தோசமா உங்க பொண்ணு குரலை தான் நான் முதல்ல கேக்கணும்.

கவலையே படாதீங்க, அவ என் தங்கச்சி. அவள படிக்க வைக்க வேண்டியது என் பொறுப்புன்னு எல்லாம் நான் சொல்ல மாட்டேன். புள்ளைய பெத்தது நீங்க, நீங்க தான் அவள நல்லா பாத்துக்கணும். சம்பாதிக்குற காச சேர்த்து வைக்கப் பாருங்க. அவள படிக்க வைங்க. நல்ல உத்தியோகத்துல இருத்தி அழகு பாருங்க. அவ புள்ளைய வளர்த்தெடுக்குற தெம்பு அவளுக்கு வரணும். அதுக்கு என்னென்ன வழிகாட்டணுமோ அத எல்லாம் நான் காட்டுறேன்.

எப்படி வாழணும்னு நான் கத்துக் குடுக்குறேன் உங்களுக்கு. முதல்ல அந்த பாழாப்போன குடிய மறந்து தொலைங்க.

அன்பெல்லாம் இப்ப இல்ல. வந்தா பாத்துக்கலாம்.

- ப்ரார்த்தனா


.

Friday 19 June 2015

எதிர்பாக்காத தருணங்கள்வாழ்க்கைல நாம நினைச்ச எல்லாமே நடந்துச்சுனா சுவாரசியம் இருக்காது. எதிர்பாராத திருப்பங்கள் அடிக்கடி நடந்துட்டே தான் இருக்கும். அத எல்லாம் சமாளிக்க கத்துக்கணும்...

அதென்னமோ தோல்வியோ இல்ல ஏமாற்றங்களோ வந்தா தொடர்ந்து வந்துட்டு தான் இருக்கும்போல. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு யாரும் கேள்வி கேக்க முடியாது, அதெல்லாம் அப்படித் தான்... சமாளிச்சு தான் ஆகணும்.

அஞ்சு நாள் முன்னால கொஞ்சம் சண்டை, கொஞ்சம் கொஞ்சலோட ஆரம்பிச்ச நாள். வலிகள் மறந்து போச்சு, இனி எறும்பு கடிச்சா கூட அழுவேன்னு பேஸ்புக்ல ஸ்டேடஸ் போடுற அளவு எல்லாமே மறந்திருந்த நாள்.

அப்ப தான் அது நடந்துச்சு.

வழக்கமா பாத்ரூம் போனா ரொம்ப கேர்புல்லா போவேன். ஈரமோ இல்ல வழுக்கோ எதுவுமே இருக்காம கண்ணுங்கருத்துமா பாத்துப்பேன். அப்படியும் மடீர்மடீர்னு கீழ விழத்தான் செய்வேன். விழுந்த கொஞ்சநேரத்துல டான்னு எழுந்திரிச்சும் நிப்பேன். அன்னிக்கி அப்படி எதுவுமே அவசியமா இல்ல. நான் பாட்டுக்கு ரெஸ்ட் எடுத்துட்டு தான் இருந்தேன்.

திடீர்னு எழுந்து நடக்கணும்ன்னு தோணிச்சு. எழுந்து ஒரே ஒரு ஸ்டெப் தான் வச்சேன்...

மடார்....

என்ன நடந்துச்சு ஏது நடந்துச்சுன்னு யோசிக்குறதுக்கு முன்னால வலது கால் மடங்கி ஆப்போசிட் டைரக்சன்ல தெரியுது. போட்டுருந்த ட்ரெஸ் ஈரத்துல நனஞ்சிருக்கு. வலி, வலி, வலி. விண் விண்ணு தெறிச்ச வலில ஒரு செகண்ட் என்ன நடந்துச்சுன்னு யூகிக்க ஆரம்பிச்சேன்.

ஆமா, தரைல கொட்டிக் கிடந்த தண்ணில கால் பட்டு, வழுக்கி விழுந்து கால் முறிஞ்சிடுச்சு. இனி என்ன அழுது புரண்டாலும் ரிவர்ஸ்ல போக முடியாது.

சட்டுன்னு ரெண்டு கை ஊனி எழுந்து உக்காந்து, காலை பிடிச்சு அப்படியே நேராக்க ட்ரை பண்ண, மடக்குனு ஒரு சத்தத்தோட அது மறுபடியும் சரியான பொசிசனுக்கு வந்துச்சு. வலி அப்படியே உயிர் போற மாதிரி இருக்க, “அய்யோ அம்மா, நான் கீழ விழுந்துட்டேன் கீழ விழுந்துட்டேன்னு கூப்பாடு போட ஆரம்பிச்சுட்டேன்.

நல்லவேளையா ஒரு மொபைல் கைல கிடைக்க, அப்பாவுக்கு கூப்ட்டு அழுதுட்டே விசயத்த சொன்னேன். அடுத்த கால் பண்றதுக்கு முன்னே மொபைல் லோ பேட்டரி காட்ட, யாரையும் தொடர்புக் கொள்ள முடியாத சூழ்நிலை. அந்த மொபைல்ல யார் நம்பரும் இல்ல. திடீர்னு வாட்ஸ் அப் நியாபகத்துக்கு வர, அந்த மொபைல்ல இருந்து கார்த்திக்கு வாட்ஸ் அப் கால் பண்ணினேன். எப்பவுமே மொபைல் எடுக்காதவர் அந்த நேரம் சரியா கால் அட்டென்ட் பண்ண, விழுந்து கால் முறிஞ்ச விசயத்த சொல்லி, ஹாஸ்பிட்டல் போயே ஆகணும், உன்னை அடுத்து கூப்பிட எத்தன நாள் ஆகுமோ தெரியாது, கண்டிப்பா திரும்பி வந்துருவேன்னு சொன்னதும் தான் தாமதம், என்ன சொல்ற மக்கா, ஏட்டி போகாதடி, வந்துருடி வந்துருடின்னு அழ ஆரம்பிச்சுட்டார். இங்கப்பாரு, உனக்கு எதுவும் ஆகல, சீக்கிரம் வந்துருன்னு சொல்லிட்டு இருந்தப்பவே வீட்ல ஆட்கள் வர ஆரம்பிச்சுட்டாங்க. சரி, சரி அப்புறம் பேசுறேன்னு சொல்லி போனை கட் பண்ணிட்டேன்.

நந்துவோட அம்மா, பாட்டி, அஞ்சம்மாக்கா, அப்பா, தம்பின்னு எல்லாரும் வர, மாமா குடும்பமும் கூட ஆரம்பிச்சுட்டாங்க. நான் அப்பா கால் முறிஞ்சிடுச்சுப்பானு அழ ஆரம்பிச்சுட்டேன். அப்பா தம்பிகிட்ட அவள தூக்கு, ஹாஸ்பிட்டல் கொண்டுப் போவோம்னு சொல்ல, அதெல்லாம் எதுக்கு, கால் உடையலன்னு பாட்டி கத்துறாங்க. இல்ல உடஞ்சிருக்குன்னு நான் சொல்ல, உன் வாய்ல நல்ல வார்த்தையே வராதான்னு அவங்க பாட்டுக்கு திட்டுறாங்க. நடந்தத தான சொல்ல முடியும்னு நான் பதிலுக்கு எகிற, அப்பா பாவமா பாக்குறாங்க. உடஞ்சிருந்தா இந்நேரம் ரொம்ப வீங்கியிருக்கும், நீ வலி தாங்கியிருக்க மாட்ட, அதனால கால் உடையலன்னு அவங்களா முடிவெடுக்குறாங்க. தம்பி கார் எடுத்துட்டு வந்து என்னை தூக்க ட்ரை பண்ண வலி பின்னி எடுத்துடுச்சு. சொடக்னு சத்தத்தோட கால் எலும்பு ஸ்லிப் ஆக, என்னை விடு, விடுன்னு அழ ஆரம்பிச்சுட்டேன். அப்படியே அழுதுட்டே மறுபடியும் எலும்பை எடுத்து பொருத்தி வச்சதுக்கப்புறம் தான் வலி கொஞ்சம் குறைஞ்சுது. இவள எல்லாம் கார்ல தூக்கிட்டு போக முடியாது, வைத்தியர கூட்டிகிட்டு வந்து கட்டுப் போடுவோம்னும் ஆளாளுக்கு பேச ஆரம்பிச்சுட்டாங்க.

மாமா ஒருத்தர் கையோட வைத்தியர கூட்டிகிட்டு வர, அவர் என் கால புடிச்சு தூக்க, ஆஆவ், அம்மோவ் முடியலன்னு நான் போட்ட கூச்சல்ல பட்டுன்னு கைய எடுத்துட்டார். அப்புறம் எல்லாரும் அவங்கவங்களுக்கு தெரிஞ்ச வைத்திய முறைய எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

எனக்கு செம டென்சன். அப்பாவும் தம்பியும் கைய பிசஞ்சுட்டு நிக்குறாங்க. அப்பா ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி வரச் சொல்லுவோம்னு சொன்னாலும் யாரும் ஒத்துக்குற மாதிரி இல்ல. ஒரு சின்ன அடிக்கு ஆம்புலன்ஸ் எல்லாம் எதுக்குன்னு. கால் லேசா தான வீங்கியிருக்குங்குறது அவங்க வாதம். கோபத்துல கத்தினேன், என் கால் உடைஞ்சிடுச்சுங்குறது எனக்கு தெரியும், வைத்தியரே, நீங்க செக் பண்ணுங்க, வலிச்சா நான் கத்த தான் செய்வேன், ஆனா வைத்தியம் பாக்க வேண்டியது உங்க கடமைன்னு சொன்னேன்.அப்புறம் அவர் நான் கதற கதற காலை பிடிச்சு அங்க இங்க அசைச்சு செக் பண்ணிட்டு, ஆமா கால் உடஞ்சி தான் இருக்குனு சொல்லிட்டு, ஒரு எக்ஸ் ரே எடுத்துட்டு வந்துடுங்க, நான் சரி பண்ணிடுறேன்னு சொன்னார்.

அதுக்குள்ள தம்பி கொஞ்சம் தலையணை, பெட்சீட் எல்லாம் எடுத்துட்டு வந்து, பாட்டி இப்ப ஆம்புலன்ஸ் வரும், நாம ஹாஸ்பிட்டல் போறோம்னு சொன்னதும் அதெல்லாம் எதுக்குன்னு கேட்டவங்கள பாத்து, அதெல்லாம் அப்படித்தான்னு சொல்லிட்டான்.

ஆம்புலன்ஸ் வந்ததும் என் காலை அப்படியே பொருத்தி பிடிச்சு ஒரு தலையணை மேல வச்சு, அப்புறம் என்னைத் தூக்கி ஸ்ட்ரெக்சர்ல போட்டுட்டு அப்பா, தம்பி, நான், பாட்டி நாலு பேருமா ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்தோம்.

அங்க போனா, ஸ்ட்ரெக்சர் தூக்க வந்த தாத்தா ஓவர் அலும்பு. யோவ், வாங்க பாடிய (?) தூக்க வாங்கடான்னு கூப்டுட்டே என் காலை தூக்கி ஆட்டிப் பாக்குறார். யோவ், அவளுக்கு வலிக்கும்யான்னு தம்பி கத்திட்டான். அப்புறம் மரியாத இல்லாம பேசிட்டேன், சாரின்னு சாரி கேட்டதும் அவர் வேற எதுவும் பேசல. அமைதியா தூக்கிட்டு ஓ.பி-ல கொண்டுப்போய் வச்சுட்டாங்க.

தினமும் பத்து பேரையாவது பாத்து பாத்து இவங்களுக்கு எல்லாம் மரத்துப் போய்டும் போல. எங்க பிடிச்சா வலிக்காது, எப்படி தூக்கினா அவங்க கம்போர்டா பீல் பண்ணுவாங்க – இப்படி எதையுமே யோசிச்சுப் பாக்காம முரட்டுத் தனமா நடந்துக்குறாங்க. எதோ ஒரு அட்மிசன், தூக்கி போய் கடாசுங்குற மாதிரியான எண்ணம் அவங்களுக்கு. அதுலயும் அந்த தாத்தா என்னை தூக்கி பெட்ல எறிஞ்சுட்டு காசு குடுங்கன்னு அப்பா கிட்ட அதிகாரமா கேக்குறார். ச்சே... நானும் மனுசி தான், எனக்கும் கால் முறிஞ்சா வலிக்கும். கொஞ்சம் மனிதாபிமானத்தோட நடந்துக்கோங்க, அப்புறம் காசு கேக்கலாம்னு நான் அந்த வலிலயும் கத்தினேன்.

அங்க இருந்து நேரே எக்ஸ் ரே எடுக்க தூக்கிட்டு போனாங்க. இந்த தடவ தாத்தா சளசளன்னு பேசாம அமைதியா வந்தார். அங்க இருந்து என்னைத் தூக்கி எக்ஸ் ரே டேபிள் மேல படுக்க வச்சாங்க. ஆ...ன்னு நான் கத்தவும் ஒருத்தன் மெதுவா என் காலை பிடிச்சான். நெத்தில கை வச்சு ரிலாஸ்னு சொன்னான். கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கோங்கன்னு சொல்லிட்டே மெதுவா காலை நகட்டி எக்ஸ் ரே எடுக்க வசதியா வச்சான். அவ்வளவு தான், அவ்வளவு தான், ரிலாக்ஸ் ரிலாக்ஸ்னு சொல்லி சொல்லியே அஞ்சாறு நேரம் அங்கயும் இங்கயுமா திருப்பி எக்ஸ் ரே எடுத்துகிட்டான். அப்பப்ப கன்னத்துல தட்டி ஒரு சிரிப்பு. வலில ஸ்ஸ்ன்னு முனங்குறப்ப எல்லாம் உள்ளங்கைய பிடிச்சு அழுத்தி விட்டான். என் வலி எங்க போச்சுனே தெரியல. அவன் முகத்த பாத்தப்ப அம்மா தான் நியாபகத்துக்கு வந்தா. மறுபடியும் தூக்கிட்டு போக தாத்தா க்ரூப்ஸ் வர, “கெட் வெல் சூன்” சொல்லி வழி அனுப்பி வச்சான். அப்பவே என் முகத்துல புன்னகை வர ஆரம்பிச்சிடுச்சு.

அடுத்து மறுபடியும் ஓ.பி. ரெண்டு நர்ஸ் வந்து உங்கள ஆப்பரேசன் தியேட்டர் கொண்டு வர சொல்லிட்டாங்கன்னு சொல்லி என்னை ரெடி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஆப்பரேசன் ட்ரெஸ் மாட்டி விட்டதும் ஒருத்தி “பயமா இருக்கா”ன்னு கேக்க, இல்லன்னு தலையாட்டினேன்.

உள்ளப் போய் பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிஞ்சி கைல நரம்பு தேடிப்புடிச்சி மருந்து அடைச்சி, மெதுவா எழுந்து உக்காருங்க, ஒரு சின்ன ஊசி தான் முதுகுலன்னு டாக்டர் சொன்னதும் தான் நான் நோ நோ எனக்கு இந்த அனஸ்தீசியா வேணாம், புல்லா குடுங்கன்னு மறுக்க ஆரம்பிச்சுட்டேன். டாக்டர் திகைச்சு, இதான் ஈசிமா, வலியே தெரியாது, ரிலாக்ஸ் பண்ணிக்கோங்கனு சொன்னா யார் கேக்குறா. அப்புறம் சீப் டாக்டர அவங்க கூப்ட்டு விட, உங்க மெடிக்கல் ஹிஸ்டரி எல்லாம் படிச்சுட்டு நான் தான் சஜஸ்ட் பண்ணினேன். பயப்படாதீங்கன்னு அவர் கன்வின்ஸ் பண்ணினதுக்கு அப்புறம் தான் ஊசிப் போட சம்மதிச்சேன்.

கொஞ்சம் தான் வலிச்சுது. பொறுத்துகிட்டேன். கொஞ்ச நேரத்துல கால் பக்கம் பரபரன்னு இருந்துச்சு. அப்புறம் மரத்து போய்டுச்சு. கண்ணை மூடிகிட்டு படுத்துகிட்டேன். பேச்சு சத்தங்கள், கிர்ர்ர்ன்னு மரம் அறுக்குற மிசின் மாதிரி ஒரு சத்தம், அதுலயும் யாரோ ஒருத்தன் நான் அவங்கள பிரிச்சே தீருவேன், நான் தான் அவங்க காதலுக்கு வில்லன்னு சொல்றான். ஒரு பெண் குரல் பாவி, அதுல உனக்கு என்னடா சந்தோசம்னு கேக்குது, ஏன்னா நான் அந்த பொண்ண லவ் பண்றேன்னு இவன் சொல்றான். எல்லாரும் சிரிக்குறாங்க. “ஏண்டா டேய், என் காலை அறுத்து பிளந்துட்டு வச்சுட்டு என்ன பேச்சு பேசுறீங்க, ஒழுங்கா வேலைய பாருங்கடா”ன்னு சொல்லணும் போல இருந்துச்சு. சரி இவங்க பேசுறத கேட்டுட்டு இருந்தா டென்சன் ஆகிடுவோம்னு தூங்கிட்டேன்.

முழிச்சு பாத்தா ஆப்பரேசன் கிட்டத்தட்ட முடிஞ்சி என் காலை தூக்கி பேன்ட்டெய்ட் சுத்திட்டு இருந்தாங்க. அங்க இருந்து மறுபடியும் எக்ஸ் ரே ரூம் போக, இந்த தடவையும் அவன் தான் சிரிச்சுகிட்டே “ஆர் யு ஓகே”ன்னு வரவேற்றான். இந்த தடவ சுத்தமா வலி இல்ல. கால்கள் ரெண்டும் உணர்ச்சியே இல்லாம மரத்து போயிருக்கு. ஈசியா எக்ஸ் ரே எடுத்து முடிச்சு “டேக் கேர்” சொல்லி அனுப்பி வச்சுட்டான். ரூம் போற வரைக்கும் அப்பாவும் தம்பியும் கூடவே வந்தாங்க.

ஆப்பரேசன் அஞ்சு மணில இருந்து எட்டு மணி வரை. கால்ல சென்சேசன் வர பதினோரு மணி ஆகிடுச்சு. அதுவரைக்கும் மத்த பெசியன்ட்ஸ் எல்லாம் ஐயோ அம்மா வலிக்குதேன்னு புலம்புறத எல்லாம் வேடிக்கை பாத்தேன். அப்புறம் தான் இங்க வலிக்க ஆரம்பிச்சுது. பெயின் கில்லர் போடுங்கன்னு சொல்லி, அதுக்கு இன்ஜெக்சன் போட்டாங்க.

அப்புறம் என்ன, அடுத்த நாள் ஒரே சொந்தக்காரங்க கூட்டம் தான். ஆளாளுக்கு கைல ஆப்பிளும் ஆரஞ்சுமா பாக்க வர, மூணாவது நாளே வீட்டுக்கு போங்கன்னு தொரத்த ஆரம்பிச்சுட்டாங்க.

ஒரு மாசம் காலை கீழ ஊனவே கூடாதாம். படுத்து கிடந்து லேப் டாப் பாக்கவும் டைப் பண்ணவும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனாலும் விடுறதாயில்ல. ரெண்டு நாளா கஷ்டப்பட்டு உக்காந்து எழுதி முடிச்சுட்டேன்.

இப்போதைக்கு டாடா.... மறுபடியும் வருவேன்.
.

Tuesday 9 June 2015

கேன்சர் - சந்தித்த மனிதர்கள்அப்போ நான் பி.எஸ்.சி தேர்ட் இயர் படிச்சுட்டு இருந்தேன். அப்பா மொபைலுக்கு ஒரு போன் கால்.

ஹலோ, நான் டாக்டர் பெர்னாண்டஸ் பேசுறேன், காயுகிட்ட பேச முடியுமா?

ஒன் மினிட்ன்னு சொல்லி அப்பா என் கிட்ட போனை குடுத்தாங்க.

இட்ஸ் ஜஸ்ட் சிம்பிள் சார், ஐ வில் டூ இட்ன்னு சொல்லிட்டு போனை வச்சேன்.

விஷயம் வேறொன்னுமில்ல, அவர் கிட்ட ஒரு பேசியென்ட் போயிருக்கார். அவருக்கு வயித்துல கேன்சர் பிரிலிமினரி ஸ்டேஜ்ல (தொடக்க நிலைல) இருக்குன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. குணமாக்குறது ரொம்ப ஈசி. ஒரு சின்ன சர்ஜரி, அதோட, டாக்டர்ஸ் சொல்ற மருந்துகள தவறாம எடுத்துகிட்டா ரொம்ப சீக்கிரம் மீண்டு வந்துடலாம். ஆனா இவர் பயப்படுறார். அவர் பயத்த போக்க உங்க நம்பர அவர்கிட்டயும் அவர் நம்பர உங்ககிட்டயும் குடுக்கவா, நீங்க பேசுங்களேன்னு தான் டாக்டர் கேட்டார். இதென்ன பெரிய விஷயம், ரொம்ப சிம்பிளாச்சேன்னு தான் சரின்னு சொன்னேன்.

அன்னிக்கி முழுக்க எனக்கு எந்த காலும் வரல. அடுத்த நாள் அம்மா தான் சொன்னா, நீயே கூப்ட்டு பேசேன்னு. அவர்கிட்ட போய் நானா எப்படிமா பேசன்னு கேட்டதுக்கு, நோ நோ, ஒரு வேளை அவர் தயங்கலாம், டாக்டர் உன்கிட்ட சொல்லியிருக்கார்னா ஏதாவது காரணம் இருக்கும், நீ கண்டிப்பா கூப்ட்டு பேசுன்னு சொல்லி அவளே டயல் பண்ணித் தந்தா.

கால் அட்டென்ட் பண்ணினது ஒரு பொண்ணு. மாதவன் சார் இருக்காங்களான்னு கேட்டேன்.

நீங்க? – இது மறுமுனை

“நான் காயு பேசுறேன், டாக்டர் பெர்னாண்டஸ் இந்த நம்பர் தந்தார்”ன்னு நான் சொன்னதும் அந்த பக்கம் பேச்சு சத்தம் கேக்குது. திடீர்னு ஒருத்தர் கோபமா கத்துறார். குழந்தை ஒண்ணு வீல்ன்னு அலறுது.

“சாரி மேம், நானே அப்புறமா கூப்பிடுறேன்”னு சொல்லிட்டு அந்த பக்கம் லைன் கட்டாகிடுச்சு.

என்னடா இதுன்னு கொஞ்ச நேரம் அப்படியே அமைதியா உக்காந்துட்டேன். பிரச்சனை என்னவோ பெருசு மாதிரி தோண ஆரம்பிச்சிடுச்சு.

அம்மா ஜூஸ் கொண்டு வந்து தந்தா. விஷயம் என்னன்னு கேட்டுட்டு, நீ அவர் கிட்ட பேசுறதுக்கு முன்னாடி அவரப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கோ, மறுபடியும் கூப்ட்டு பேசு, தயங்காதன்னு தைரியம் சொன்னா.

இந்த மாதிரியான கௌன்ஸ்லிங்ல என்னை நானே ஈடுபடுத்தி அப்ப ரெண்டு வருஷம் ஆகியிருந்துது. சில பேரை ஹாஸ்பிடல் செக் அப் போகும் போது பாத்து பேச சொல்லுவாங்க. தன்னம்பிக்கையும் புன்னகையும் இருந்தா எதையும் கடந்து வந்துடலாம்ங்குறது என்னோட நிலைப்பாடா இருந்துச்சு. அத அவங்களுக்கும் புரிய வச்சப்ப மனசு நிறைஞ்சு நன்றியும் வாழ்த்தும் சொல்லிட்டு போவாங்க. சிலர் போன்ல பேசுவாங்க. நானே அப்பப்ப கூப்ட்டு நலம் விசாரிச்சுப்பேன். ஆனா இவர் விஷயம் வேறா இருந்துச்சு. பேசவே தயங்குறார். அதுவும் ரொம்ப சிம்பிளான விசயத்துக்கு.

அரைமணி நேரம் கழிச்சு மறுபடியும் கூப்ட்டேன். மறுபடியும் அதே குரல். அவர் தூங்குறார்ங்களேன்னு சின்ன தயக்கத்தோட.

இல்ல, நான் உங்க கிட்ட தான் பேசணும்ன்னேன்.

என்கிட்டயா? என்கிட்ட பேச என்ன இருக்கு? – மறுமுனை.

உங்க பேரு? – நான்

“ஹேமா”

நல்ல பெயர். நீங்க மாதவன் சாருக்கு என்ன வேணும்?

அவர் வொய்ப்

அப்படினா கண்டிப்பா உங்க கிட்ட தான் நான் பேசணும். அவர் என்ன வொர்க் பண்றார், என்ன படிச்சிருக்கார், உங்க கல்யாணம் லவ் மேரேஜா இல்ல அரேஞ்ச்ட் மேரேஜா? பசங்க இருக்காங்களா? – அடுக்கடுக்கா கேள்விகள் கேட்டு அவர பத்தின ஹிஸ்டரிய முதல்ல வாங்குனேன்.

அவர் படிச்சது எம்.பி.ஏ. ஒரு தனியார் பேங்க்ல வேலை பாத்துட்டு இருக்கார். லவ் மேரேஜ், ஒன்னரை வயசுல ஒரு பொண்ணு. அளவான குடும்பம், வசதியான குடும்பமும் கூட. ட்ரீட்மென்ட் செலவுன்னு பெருசா கஷ்டப்பட தேவையுமில்ல. எல்லாமே நல்லா தானே இருக்கு. அதுவும் ஒரு படிச்ச ஆளுக்கு தனக்கு வந்துருக்குறது ரொம்ப சுலபமா சரியாகுற விஷயம்ன்னு தெரிஞ்சிருக்க வேணாமா? அவர்தானே தன்னோட மனைவிய சமாதானப் படுத்தணும். ஆனா இவர் பயப்படுறார். கண்டிப்பா செத்துப் போவேன்னு புலம்புறார். அதுவும் ஹாஸ்பிடல் போனா கொன்னுடுவாங்கன்னு வேற பயம். கேட்டா ஹீமோதெரபி நல்ல செல்ஸ்ச அழிச்சிடும், சாவு நிச்சயம்னு எந்த ட்ரீட்மென்ட்க்கும் ஒத்துழைக்க மறுக்குறார்.

பொண்ணுக்கு ஒன்னரை வயசு. அவ கிட்ட போய் நான் செத்துப் போவேன், உனக்கு இனி அப்பா இருக்க மாட்டார், நீ அனாதையா திரிவன்னு சொல்றார் மேடம். இப்ப பொண்ணும் புலம்ப ஆரம்பிச்சுட்டா. அப்பா செத்துப் போவாங்கன்னு வர்றவங்க போறவங்க கிட்ட எல்லாம் மழலைல சொல்றா. எப்பவும் அப்பா அப்பான்னு அழுதுட்டு இருக்கா. இப்படி எல்லாம் பேசாதீங்கன்னு நான் கொஞ்சம் எடுத்து சொன்னாலும் நான் செத்துட்டா உனக்கு ஜாலி தான, இன்னொரு கல்யாணம் பண்ணிப்பியான்னு கேக்குறார். எனக்கு இவர் நோயை சமாளிக்குறத விட இவர சமாளிக்குறது பெரிய விசயமா இருக்கு, என் குழந்தை நிலமைய நினச்சா இன்னும் பரிதாபமா இருக்குன்னு சொன்னாங்க. உங்ககிட்ட பேச சொன்னா, ஒரு சின்ன பொண்ணுகிட்ட எல்லாம் என்னால பேச முடியாது, என்னை விட அவ என்ன பெரிய இவளான்னு கேக்குறார்ன்னும் சொன்னாங்க.

சரி, நீங்க எந்த ஊர்ன்னு கேட்டேன். சொன்னாங்க. கிட்டத்தட்ட பதினஞ்சு கிலோமீட்டர் தூரம். மீட் பண்ணனும்னா கூட பண்ணிடலாம். அம்மாவும் அதான் சரின்னு ஐடியா குடுத்தாங்க. எப்படியாவது சாயங்காலம் குறிப்பிட்ட பார்க்குக்கு அவர கூட்டிட்டு வர முடியுமான்னு கேக்க சொன்னாங்க. கிட்டத்தட்ட பத்து நாளா அவர் மனைவி எவ்வளவு ட்ரை பண்ணியும் அவர் வரவேயில்ல.

அந்த பத்து நாள்லயே அவர் நாலு கிலோ எடை குறைஞ்சு போயிருக்கார். ராத்திரி தூக்கம் கிடையாது, ஐயோ வயித்த வலிக்குது, தலைய சுத்துதுன்னு எந்நேரமும் புலம்புவாராம்.

அப்ப தான் ஒரு நாள் அவங்க ஹாஸ்பிட்டல் போறதா தகவல் வந்துச்சு. எனக்கும் அந்த நேரம் ஹாஸ்பிடல் போக வேண்டியிருந்துச்சு. அதனால நாங்களும் கிளம்பி போனோம். ஹேமா அவங்க ரிசப்சன்ல உக்காந்துட்டு இருக்குற இடத்துல இருந்து கைகாட்டினாங்க. நாங்களும் நேரே ஹாய் சொல்லிட்டே அவங்க கூட போய் உக்காந்துகிட்டோம்.

ஹேமா நல்ல அழகு. அவங்க குழந்தை செம க்யூட். ஒன்னரை வயசுன்னு உருவத்தை வச்சு வேணா நம்பலாம், ஆனா பேச்சு செம வாய். அந்த வயசுலயே வாக்கியம் அமைச்சு பேசுது. நான் அதையே பாத்துட்டு இருந்தப்ப சிகப்பு கலர் மீன் நீந்துதுன்னு சொல்லுது. பேர் மதுமிதாவாம்.

மாதவன நான் பாத்த மாதிரியே காட்டிக்கல. அம்மாவும் அப்பாவும் தான் போய் ஹாய் சொன்னாங்க. அம்மாவே கூப்ட்டு காயு இதான் டாக்டர் சொன்ன மாதவன் சார்னு அறிமுகப்படுத்தி வச்சாங்க. நான் தெரியாத மாதிரி அலட்சியமா ஓ-ன்னு கேட்டுகிட்டேன். அதோட அவர் பக்கமே திரும்பல. அவர் பொண்ணு கிட்ட பூச்சாண்டி மாதிரி விளையாட்டு காட்டி பயமுறுத்திகிட்டு இருந்தேன்.

அம்மா தான் மெதுவா ஆரம்பிச்சா. ரொம்ப தலை வலிக்குதுன்னு சொன்னா. அடிக்கடி வாந்தி எடுக்குறா. வெயில்ல போய்ட்டாலே அன்னிக்கி முழுக்க படாதபாடு பட்டுடுவான்னு சொல்லிட்டு இருந்தப்பவே, “ம்மா, ரெண்டு நாள்ல காலேஜ்ல அசோசியேசன் டே-மா. லேப்டாப் எடுத்துட்டு வந்துருந்தா கொஞ்சம் வேலை பாத்துருப்பேன். இன்னும் ப்ரசன்டேசன் ரெடி பண்ணல”ன்னு குறுக்க பேசினேன்.

இப்படி தான் தலைவலினா வீட்ல இருன்னு சொன்னா கேக்க மாட்டா. அதுவா நானா பாத்துடுறேன்மான்னு அதுக்கே சவால் விடுவான்னு அம்மா அடுத்த கொக்கிய போட்டா. “பின்ன அது பாட்டுக்கு வலிச்சுட்டு இருக்கப் போகுது, அதுக்காக எல்லாம் நான் ஒரு இடத்துல இருக்கணும்னு நினச்சா எப்படி. எனக்கு வேலை நிறைய இருக்கே”ன்னு நான் பதில் குடுத்தேன்.

“கண்டுபிடிச்சப்ப கிட்டத்தட்ட பைனல் ஸ்டேஜ். யாருக்கும் நம்பிக்கை இல்ல, பொழச்சு வருவான்னு. ஆனா இப்ப பீனிக்ஸ் மாதிரி மீண்டு காலேஜ் போயிட்டு இருக்கா. சும்மா இல்ல, அவ டிபார்ட்மென்ட் லீடர் அவ தான். எல்லா வேலையையும் தலைல இழுத்துப் போட்டுட்டு செய்றா” – இது அம்மா

நான் இப்ப நிமிர்ந்து மாதவனை பாத்தேன். அவர் அம்மா சொல்றத கொஞ்சம் ஆர்வத்தோட கேட்டுக்குற மாதிரி தோணிச்சு. “பின்ன என்ன சார், நீங்களே சொல்லுங்க, மனுசனா பொறந்தா எதையாவது சாதிச்சுட்டு தான் போகணும். அதுக்குள்ள சாவு நம்மள பாத்து வா வான்னு கூப்ட்டா போய்ட முடியுமா என்ன? என்னோட லட்சியமே, நான் சாகுறப்ப உலகம் அழுதோ இல்லையோ அட்லீஸ்ட் ஒரு ஊரு அழணும், அதுக்காவது ஏதாவது சாதிச்சுட்டு தான் சார் சாகணும். அதனால தான் வந்த எமனை இன்னிக்கி போயிட்டு கூப்ட்ரப்ப வான்னு திருப்பி அனுப்பி வச்சுட்டேன்”னேன்.

ஹேமா க்ளுக்ன்னு சிரிச்சுட்டாங்க.

அப்படியே நானும் உற்சாகத்த வரவழைச்சுட்டு “சரி, சாருக்கு என்ன பிரச்சனை”ன்னு தெரியாத மாதிரி கேட்டேன். அவரோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் கைல வாங்கி பெரியமனுசித் தனமா ஒரு பார்வை பாத்தேன் (நிஜமாவே எனக்கு அப்ப ரிப்போர்ட் பாத்து ஒரு நோயோட தன்மைய எல்லாம் தெரிஞ்சுக்குற அளவு பக்குவம் கிடையாது).

“இது சிம்பிள் விசயமாச்சே”ன்னு எல்லாம் தெரிஞ்சவ மாதிரி அலட்சியமா சொன்னேன். அவர் முகத்துல கொஞ்சம் எரிச்சல் தெரிஞ்சுது. என்னோட பிரச்சனை பத்தி உனக்கு என்ன தெரியும்ன்னு அவர் நினச்சது அவர் காட்டின கோபத்துல புரிஞ்சுது.

நான் உடனே மதுவை தூக்கிட்டு மீன் தொட்டி பக்கமா போய் அவளுக்கு வேடிக்கை காட்டுற மாதிரி நடிக்க ஆரம்பிச்சுட்டேன்.

அம்மா மறுபடியும் ஆரம்பிச்சா.

“அவளுக்கு சர்ஜரியோட ஹீமோவும் குடுத்தோம். அடுத்த தடவ வராம இருந்தா அவ இன்னும் கொஞ்ச நாள் இருக்கலாம்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. ஆனா இப்ப மறுபடியும் வளர ஆரம்பிச்சிடுச்சு. அஞ்சு ரவுண்டு ஹீமோ குடுத்துப் பாப்போம்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. அதுக்கு கன்சல்ட் பண்ணத் தான் வந்துருக்கோம்”ன்னு சொன்னதும் அவர் பதற ஆரம்பிச்சுட்டார்.

“அய்யயோ, அப்படினா இனி அவ்வளவு தான். இந்த மாதிரி கேஸ் எல்லாம் பொழைக்காது”ன்னு.

“அவ செத்துப் போறதா இருந்தா முதல்லயே செத்துப் போயிருப்பா. இப்ப அவ கிட்ட எமனால நெருங்க முடியாது, அவ அனுமதிக்க மாட்டான்னு அவளே சொன்னத கேட்டீங்க தானே. எனக்கும் அந்த நம்பிக்கை தான். என் பொண்ணு அவ்வளவு சீக்கிரம் சாகுறவ இல்ல”ன்னு அம்மா சொன்னாங்க.

அம்மா பொதுவா இப்படி என்னைப் பத்தி யார் கிட்டயும் பேசவும் விரும்ப மாட்டா. ஆனா அவரை விட நான் எவ்வளவு பெரிய ஆபத்தான நிலைல இருக்கேன், அப்படியும் எவ்வளவு தன்னம்பிக்கையோட இருக்கேன்னு அவருக்கு புரிய வைக்க வேண்டியிருந்துது. அதனால என்னைப் பத்தி பேச வேண்டியதாயிருந்துது.

ரெண்டு பேருமே டாக்டர பாத்து முடிச்சுட்டு ஊருக்கு கிளம்புறப்ப ஒரு நாள் மீட் பண்ணலாம்ன்னு கைகுலுக்கிகிட்டோம். அன்னிக்கி நான் அவர் கிட்ட கேட்டுகிட்டது ஒண்ணே ஒண்ணு தான், மனச ரிலாக்ஸ் பண்ணிக்க எங்கயாவது வெளில போங்க, எனக்கும் ரிலாக்ஸ்சேசன் தேவைப்படுது. பார்க் அடிக்கடி போவேன் (சுத்தப் பொய்), அதனால நீங்களும் பார்க் வாங்க, சும்மா பேசிட்டு இருக்கலாம்னு சொன்னேன்.

அடுத்து ஒரு நாள் மீட் பண்ணினப்ப காலேஜ்ல நடந்த அசோசியேசன் டே பத்தி மட்டும் தான் பேசினேன். எனக்கு இருக்குற கனவுகள், அடுத்து என்ன படிக்கணும், பி.ஹச்.டி எதுல பண்ணணும், எதிர்கால திட்டம்ன்னு நிறைய பேசினேன். அதுக்கு அடுத்த மீட்ல அவரோட காலேஜ் லைப், அவங்களோட லவ் ஸ்டோரி இதெல்லாம் பேசி நிறைய சிரிச்சோம். மறந்தும் அவரோட உடல்நிலை பத்தி நாங்க பேசிக்கவே இல்ல.

ஒரு நாள் அவரே கேட்டார். “அப்போ சர்ஜரி பண்ணினா பொழச்சுக்கலாமா?”

“உங்களுக்கு சர்ஜரியே தேவ இல்ல. ஹீமோ போதும், ஆனா ரொம்ப ரொம்ப தைரியமா இனி திரும்பி வரவே வராதுன்னு அத தொரத்தி விடுறதுக்கு தான் சர்ஜரி. அதெல்லாம் பாத்து பயப்பட தேவையே இல்ல. இப்ப எல்லாம் ஊசி போட்டுக்குற மாதிரி தான் சர்ஜரி பண்றதும்”ன்னு நான் சொன்னதும் அம்மா, நான் ஊசி போடுறப்ப பண்ற கலாட்டா எல்லாம் சொல்லி அவர சிரிக்க வச்சுட்டா.

அவர் சிரிச்சுட்டே, “நீயே பெரிய பயந்தாங்கொள்ளி, நீ எனக்கு அட்வைஸ் பண்றியா”ன்னு கேக்க, ஹலோ, இப்ப வந்து குத்த சொல்லுங்க ஊசிய, நாங்கெல்லாம் எவ்வளவு பெரிய தைரியசாலின்னு தெரியும்”னு நான் பதிலுக்கு சவால் விட்டேன்.

மாதவன் சார் விஷயம் நிஜமாவே எனக்கு புது அனுபவம் தான். நேர்ல இதுக்காகவே ஒருத்தர மீட் பண்ணி, அவருக்கே தெரியாம அவருக்குள்ள தன்னம்பிக்கைய விதைக்க ரொம்பவே இயல்பா இருக்கவேண்டியிருந்தது.

ஒரு நாள் அவரே கேட்டார், “எப்பப் பாத்தாலும் வேலை இருக்கு வேலை இருக்குன்னு சொல்லிட்டே இருக்கியே, உனக்கு இருக்குற தலைவலிக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கலாம்ல”ன்னு.

“என்னைப் பொருத்தவரைக்கும் எனக்கு தலைவலிக்குதுன்னு நான் உணர கூட நேரம் இருக்கக் கூடாது சார், இருக்குற வரைக்கும் எதையாவது செய்துட்டே இருக்கணும். எப்ப நமக்கு ரெஸ்ட் வேணும்னு நினைக்குறோமோ, எப்ப நம்மோட உடல் தளர்ந்துடுச்சுன்னு நினைக்குறோமோ அப்பவே நம்மோட நம்பிக்கை குலைய ஆரம்பிச்சுடும். அப்போ நம்ம நோய் நம்மள ஜெய்க்க ஆரம்பிச்சுடும். அத நாம ஜெய்க்க விடக் கூடாது”ன்னேன்.

“எனக்கு இப்படி ஒண்ணு வந்துடுச்சு, நான் ஒரு நோயாளின்னு மனசுக்குள்ள பிக்ஸ் பண்ணிட்டா நாம அப்படி தான் ஆவோம். அத விட்டுட்டு அத பத்தி யோசிக்கவே நேரம் இல்லாம ஓடிப் பாருங்க, அதால தூரமா நின்னு நம்மள வேடிக்கை மட்டும் தான் பாக்க முடியும். கிட்ட நெருங்க முடியாது. அதுக்காக அதுக்கான ட்ரீட்மென்ட் எடுக்கக் கூடாதுன்னு இல்ல, அதையும் சரியான நேரத்துக்கு எடுத்துக்கணும், அடுத்த செகண்ட் அத பத்தி மறந்துடணும். சாக இது ஒரு ரீசன்னா வாழ பல ரீசன் இருக்கு சார், வாழ்ந்துடலாமே”ன்னும் சொன்னேன்.

அவர் கொஞ்சம் சகஜமாக ஆரம்பிச்சார். அவரோட முகத்துல புன்னகைய பாத்தப்ப எனக்கு நம்பிக்கை வந்துச்சு. முதல் கட்டமா அவருக்கு சர்ஜரி நடந்துச்சு. ரொம்ப ஈசியா பதினஞ்சே நாள்ல சகஜமாகிட்டார். எனக்கு அந்த நேரம் ஹீமோ ஆரம்பிச்சிருந்ததால மொட்டை போட்ருந்தேன். நாங்க அங்கயே தங்கியிருந்தோம். அவர் கன்சல்டிங் நேரத்துல வந்து பாத்துட்டு போவார். “ஏன் முதல்ல மொட்டைப் போட்டுட்ட”ன்னு அவர் கேட்டா, முடி கொஞ்சம் கொஞ்சமா கழிஞ்சு போறத பாத்தா மனசு கஷ்டமா போய்டும். உயிருக்கே பயப்பட மாட்டோம், ஆனா முடி போகுதேன்னு கவலை வந்துடும். இப்ப பாருங்க, ஒரே நாள்ல எல்லாம் போச்சு. இனி இத பத்தி கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லல”ன்னு நான் கேட்டப்ப அவரும் ஹீமோ ஆரம்பிக்குற முதல் நாள் மொட்டைப் போட தயாராகிட்டார்.

எப்பவும் எங்க அப்பா செத்துப் போய்டுவார், செத்துப் போய்டுவார்னு சொல்லிட்டு இருந்த மது அத எல்லாம் மறந்துருந்தா. அப்பா சாக்லேட், அப்பா ஐஸ்க்ரீம்னு கேக்குற அடம்பிடிக்குற குழந்தையா அவ வயசுக்கேத்த மாதிரி மாறி போயிருந்தா.

மாதவன் சார் ரொம்ப சீக்கிரம் குணமாகிட்டார். அப்படியே அவருக்கு அவர் சொந்தக்காரர் மூலமா பெக்ரைன்ல வேலை கிடைச்சு, கொஞ்ச நாள்ல திரும்பி வந்து குடும்பத்தயும் அங்கயே கூட்டிட்டு போய்ட்டார்.

கடைசியா ஏர்போர்ட்ல வச்சு அவர் கிட்ட போன்ல பேசினது. தேங்க்ஸ்மா, என் உயிரை மீட்டுக் குடுத்ததுக்குன்னு அம்மாவுக்கு நன்றி சொன்னார். எனக்கு சொல்லவேயில்ல. ஒரு வேளை அது சின்னப் புள்ள, அதுக்குகிட்ட நாம என்ன தேங்க்ஸ் சொல்றதுன்னு ஈகோ இருந்துருக்கும் அவருக்கு. ஹேமா எனக்கு தேங்க்ஸ் சொன்னப்ப அழுதது எனக்கு புரிஞ்சுது. மது பை அக்கா, உம்மான்னு முத்தம் குடுத்தப்ப நான் சாதிக்க நினச்ச எதுவோ ஒண்ணு முழுமையாகிட்டத உணர முடிஞ்சுது.

மாதவன் சார் குடும்பம் நலம்.


Friday 5 June 2015

அது ஒரு விபத்து


அது ஒரு விபத்து...

காலைல எட்டரை இருக்கும். அப்ப தான் எழும்பி வெளில வந்து நின்னு பல் தேய்ச்சுட்டு இருந்தேன். அந்தப் பக்கமா சைக்கிள்ல வந்த கனகவேலும் பிரான்சிசும் ஹாய்ன்னு கை காட்டிட்டு போனானுங்க. ஒருத்தன் தூங்கு மூஞ்சி வெவ்வெவேன்னு பழிப்பு காட்டிட்டு போனான். சீ ப்பே, செருப்பு பிஞ்சுடும்னு நான் இங்க இருந்து சைகை காட்டினேன்.

அப்ப தான் அது நடந்துச்சு. எதுக்க வந்த லாரிய கவனிக்காம சல்லுன்னு ரோட்டுல ஏறுன அந்த டூ வீலர் காரர அது பாட்டுக்கு தட்டி விட்டுட்டு லாரி போய்ட்டே இருந்துச்சு.

ஹே ஹேன்னு பசங்க ரெண்டு பேரும் சைக்கிள கீழ போட்டுட்டு ஓடுறானுங்க. நானும் என்ன நடந்துச்சுன்னு பாக்க ஓடுறேன். பின்னால அம்மா ஓடி வர்றா.

உயிர் இருக்கான்னு தெரியல. அப்படியே மல்லாந்து விழுந்து கிடக்கார். தலைல அடி. ரெத்தம் மெதுவா எட்டிப் பாக்க ஆரம்பிச்சிருந்துச்சு.

செத்துட்டான் போலயேன்னு பிரான்சிஸ் கைய பிடிச்சு பாக்கான். திடீர்னு விலுக்குன்னு உடம்பு தூக்கி வாரி போட்டுச்சு. அதோட இப்ப மெல்லுசா மூச்சு ஹெக்ஹெக்ன்னு இழுக்க ஆரம்பிச்சுது.

ஞாயிற்று கிழமை, பக்கத்துல ஆம்பளைங்க யாரும் இல்ல. எல்லாரும் தோப்பு, வயல்ன்னு தண்ணி பாய்க்க, புல்லு வெட்டன்னு காலைலயே போய்டுவாங்க. அப்படியும் இல்லனா சர்ச் வாசல், இல்லனா கோவில் வாசல்ல சீட்டு விளையாடிட்டு இருப்பாங்க.

ஏய், உசிரு இருக்கு. யாராவது வண்டி புடிச்சுட்டு வாங்க, தூக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டுப் போய்டுவோம்ன்னு கனகவேல் அவர தூக்கி மடில கிடத்தி பதமா தலைய பிடிச்சு பக்கத்து பைப்ல அம்மா பிடிச்சுட்டு வந்த தண்ணிய தெளிக்கான்.

கூடி நின்னவங்க பூராவும் பொம்பளைங்க. அதிகமா வண்டிகளும் அந்த தெரு பக்கம் வராது. என்னப் பண்ணலாம்? நான் ஓடி வீட்டுக்குள்ள வந்து அப்பாவ தேடினா காணோம். அப்படியே அம்மா மொபைல் எடுத்து அப்பாவுக்கு கூப்பிட ஆரம்பிச்சேன்.

இல்ல, அவசரத்துல டயல் கூட பண்ண முடியல, கை எல்லாம் நடுங்குது. எப்படியாவது அந்த உயிர் பொழைச்சு வந்துடணும்ன்னு மட்டும் தான் மனசும் வாயும் முணுமுணுத்துட்டு இருக்கு. டக்குன்னு கார் சாவிய எடுத்தேன், வெளில வெறித்தனமா ஓடி வந்தேன்.

அம்மா, கேட்டை தொறன்னு கத்திகிட்டே கார்ல ஏறி வண்டிய ஸ்டார்ட் பண்ணினேன். அம்மாவும் ஓடி வந்து கேட்டை திறந்து விட, நான் நேரே வண்டிய கொண்டு வந்து அந்த ஆள் பக்கமா நிறுத்திட்டு, ஏத்துங்கடா, நாமளே போய்டுவோம்ங்குறேன்.

ரெத்தம், ரெத்தம் ரெத்தம். தேங்கி நின்ன ரெத்தத்த பாத்தா அப்படியே மயக்கம் வந்துது. அதுக்குள்ள ஒரு வேஷ்டி கொண்டு வந்து தந்த பாட்டி, நீ பொட்ட புள்ள தாயி, அந்த பயலுவள ஓட்ட சொல்லு, நாளபின்ன ஒரு பிரச்சனையாகிடப் போகுதுன்னு சொன்னதுக்கு இல்ல, நான் பாத்துக்குறேன்னு வண்டிய ஸ்டார்ட் பண்ணி சீறிப் பாய ஆரம்பிச்சுட்டேன்.

டேய், ஹாஸ்பிடல் எங்க இருக்கு, வழி சொல்லு, எனக்கு தெரியாதுன்னு நான் சொல்ல, பிரான்சிஸ் தான் லெப்ட் ரைட் சொல்லிட்டே, அந்த வேஷ்டிய அடிபட்டவர் தலைய சுத்தி கட்ட ஆரம்பிச்சான். கனகவேல் அவர் கால் ரெண்டயும் பிடிச்சு உள்ளங்கால பரபரன்னு தேய்ச்சு குடுத்துட்டு வந்தான்.

யாருடா இது, இவர் வீட்டுக்கு சொல்ல வேணாமா?

புதுசா இருக்காரு, நான் இதுவரைக்கும் இவர பாத்தது இல்ல - இது கனகவேல்.

நல்லவேளை, ட்ராபிக் அவ்வளவா இல்ல, பத்தே நிமிசத்துல ஹாஸ்பிடல் அடைஞ்சு, எமெர்ஜென்சி எமர்ஜென்சின்னு கனகவேல் இறங்கி ஓடுறான். ஒரு நர்ஸ் டீமோட திரும்பி வந்தவன் மெதுவா அடிபட்டவர காலை பிடிச்சுக்க, பிரான்சிஸ் மெதுவா தூக்கி குடுத்து, ஸ்டெச்சர்ல கிடத்தினாங்க. அப்புறம் வேக வேகமா உள்ள கொண்டுப் போய்ட்டாங்க.

உசிரு இருக்கான்னு நர்ஸ் ஒருத்தங்க கேக்க, ஓடிகிட்டே பிரான்சிஸ் தெரியலன்னு சொல்லிட்டுப் போறான்.

நான் காருக்குள்ளயே உக்காந்துட்டு இருக்கேன். அப்படியே ஸ்டியரிங் மேல கவுந்து படுத்துகிட்டேன். பல் தேச்சுட்டு இருந்த அந்த நிமிஷம் எவ்வளவு ரம்மியமா இருந்துச்சு. எப்படி ஒரே ஒரு நொடி அத தலைகீழா புரட்டிப் போட்டுடுச்சு.

அடிபட்டவருக்கு அப்படி ஒண்ணும் பெரிய வயசு இல்ல, ஒருவேளை கல்யாணம் ஆகியிருந்தா ஒண்ணோ ரெண்டு பொடியா பிள்ளைங்க இருக்கும். அவ்வளவு தான். அவங்க அப்பா அம்மா எப்படி துடிச்சுப் போவாங்க. தலைல வேற அடி. ஆண்டவா, பொழைச்சுக்கணும்ன்னு வேண்ட மட்டும் தான் முடிஞ்சுது என்னால.

கிட்டத்தட்ட பதினஞ்சு நிமிஷம் ஆகியிருக்கும்னு நினைக்குறேன், கனகவேல் ஓடி வந்தான். ஆள் உயிரோட தான் இருக்கார். பின் மண்டைல அடி, கல் எதுவோ வெட்டி சதை பிளந்திருக்கு. இப்ப ஓ பாசிட்டிவ் ரெத்தம் வேணும். மொபைல் இருக்கான்னு கேட்டான்.

"இல்ல, எதுவும் எடுத்துட்டு வரல, அம்மா மொபைல கூட அங்கயே விட்டுட்டு வந்துட்டேன், அப்பா நம்பர் தவிர வேற எதுவும் மனப்பாடமா தெரியவும் செய்யாது".

"சரி, வா, அப்பாவுக்கு கால் பண்ணு" கதவ தொறந்து, என்னை வெளில இழுத்து கதவ சாத்திட்டு ஓடிட்டே சொன்னான் கனகவேல்.

ஹாஸ்பிடல்ல இருந்த காயின் பாக்ஸ்ல போய், நம்பர் சொல்லுன்னு சொல்ல, நான் சொல்ல ஆரம்பிச்சேன். அதுக்குள்ள அப்பாவும், என்னோட பிரெண்ட்ஸ் ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்துட்டாங்க. எந்த ஹாஸ்பிட்டல் போனோம்னு தெரியாம தான் முழிச்சுட்டு இருந்துருக்காங்க.

ஹாஸ்பிடல் எதுன்னு சொன்னதும், பத்தே நிமிசத்துல அங்க வந்தவங்க, ஓ பாசிட்டிவ் ரெத்தம் கிடைக்குமான்னு தேட ஆரம்பிச்சுட்டாங்க.

எங்கள்ல எனக்கும் அப்பாவுக்கும் தான் ஓ பாசிட்டிவ். தம்பி சென்னைல இருக்கான். என்னால ரெத்தம் குடுக்க முடியாது, அப்பாவுக்கு சுகர். அப்படியும் போய் கேட்டோம், ரெத்தம் எடுத்துக்கோங்கன்னு. முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

ஓ பாசிட்டிவ் ஒண்ணும் கிடைக்காத ரேர் க்ரூப் எல்லாம் இல்ல. ஆனா அன்னிக்கின்னு பாத்து ஒரு பயலும் பக்கத்துல இல்ல. மாப்ள நான் குற்றாலத்துல இருக்கேண்டா, மதுரைல இருக்கேன்டான்னு ஆளாளுக்கு ஒரு இடத்த சொல்றானுங்க.

என் பிரெண்ட் சுந்தர் ஹாஸ்பிட்டல் வராண்டால இருக்குறவங்ககிட்ட எல்லாம் விசாரிக்க ஆரம்பிச்சுட்டான். எல்லாருமே ப்ச்ன்னு உதடு தான் பிதுக்கினாங்க.

பரபரப்பா இன்னும் பத்து நிமிஷம் ஓடிப் போய்டுச்சு. அந்த ஆளு எப்படி இருக்காரோ? எனக்கு மனசுக்குள்ள ஒரு மாதிரி பயம். கை எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. தலைய புடிச்சுட்டு அப்படியே ஒரு சுவர்ல சாஞ்சு தரையோட தரையா உக்காந்துட்டேன்.

அப்ப தான் அந்த அம்மா வந்தாங்க. பிரசவத்துக்காக பொண்ணை அங்க சேர்த்துருக்காங்களாம். என்னோட ரெத்தம் என்ன வகைன்னு தெரியாது தம்பி, ஆனா வேணும்னா எடுத்துக்கோங்கன்னு சொன்னாங்க. அவங்கள கூட்டிட்டு போய் ப்ளாட் குரூப் டெஸ்ட் பண்ணி பாத்தா, நன்றி சேசுவேன்னு பிரான்சிஸ் மேல பாத்து சிலுவை போடுறான்.

அப்பவே தெரிஞ்சிடுச்சு, ஓ பாசிட்டிவ் கிடச்சிடுச்சுன்னு.

அப்புறமா நிறைய பார்மாலிட்டீஸ்.போலிஸ் அது இதுன்னு. பசங்க தான் சுத்தி சுத்தி பரபரப்பா இயங்கினானுங்க. ஆனாலும் ஆள் யாருன்னு தெரியவே சாயங்காலம் ஆகியிருந்துச்சு. இங்க யார் வீட்லயோ நாய் குட்டி இருக்குன்னு கேள்விப் பட்டு அத வாங்க கிட்டத்தட்ட பதினஞ்சு கிலோமீட்டர் தூரத்துல இருந்து வந்தாராம். இடுப்புல ஒரு புள்ளைய வச்சுட்டு அவங்க மனைவி அழுதது அப்படியே கண் முன்ன நிக்குது. பாவம் அந்த புள்ளையால நடக்க முடியாது, கால் ரெண்டும் சூம்பிப் போய் இருக்கு. அதுக்கு விளையாட தான் நாய்க்குட்டியாம்.

நல்லவேளை, தலைல அடி அவ்வளவு பலமா இல்ல. தலைல சதைகள் தான் சிதைஞ்சு போய் இருந்துச்சு.

ஒரு வாரம் கழிச்சு அம்மாவோட ஹாஸ்பிட்டல் போயிருந்தேன். தலை முழுக்க கட்டோட அவர் கட்டில்ல படுத்து கிடந்தார். அவர் வயித்துல அவர் பொண்ணு ஏறி உக்காந்துகிட்டு அப்பா, நாய் குட்டி எப்பப்பா வாங்கித் தருவன்னு கேட்டுட்டு இருக்கா.

Thursday 4 June 2015

மாமலையும் ஓர் கடுகாம்
வேக வேகமா இல்லாம ஆமை வேகத்துல என்னோட "தென்னங்கீற்றுகளின் சாட்சியாக" கவிதை புக் ரெடி ஆகிட்டு இருக்கு.

அது வெளி வரப்போற நாளை ஆவலோட எதிர்பாத்துக்கிட்டு இருந்தாலும், அடுத்த புத்தகத்துக்கான கவிதைகள தொகுத்துடலாமா இல்ல வேணாமான்னு ஆலோசனைல இருக்கேன்.

எதோ ஒரு தைரியத்துல என்னோட கவிதை புக்கை நானே பப்ளிஷ் பண்றேன்னு மங்காத்தா முன் வந்தாலும் அவருக்கு அச்சடிச்ச காசாவது மிச்சம் கிடைக்கணுமேன்னு எனக்கு பயமா இருக்கு. அதனால தான் கிட்டத்தட்ட ரெண்டு வருசமா, உங்க கவிதைகள புத்தகமா போட தாங்களேன்ன்னு அவர் கேட்டும் நான் ஒத்துக்கல...

இப்ப தான் ஒரு தைரியம் வந்திருக்கு. சொந்த காசைப் போட்டு கவிதை புக் அச்சடிக்குற இந்த  காலத்துல நம்ம கவிதைகள அவரே புக்கா  போடுறாரே, அப்படினா  நம்ம எழுத்துல என்னமோ கண்டிப்பா இருக்கும்ங்குற நம்பிக்கை பூத்திருக்கு.

சரி, அத எல்லாம் விடுங்க, இந்த புக்ல கார்த்திக் பணிந்துரை எழுதிருக்கார். அதென்ன பணிந்துரைன்னு கேக்குறீங்களா?

இந்தா நீங்களே படிச்சுக்கோங்க....
.............................................................................

இதுவே சங்ககாலமாக இருந்தால் தலைவியின் கவிதைகளுக்குத் தலைவன் அணிந்துரை எழுதுகிறான் என்று சொல்லியிருக்கலாம். சமகாலத்தில் அப்படிச் சொன்னால் எந்த அரசியல்கட்சித் தலைவன் என்று கேட்பார்கள். ஆகவே காதலியின் கவிதைத் தொகுப்புக்கு ஒரு காதலனாக பணிந்து உரை எழுதுகிறேன்.

உலகில் மெய்ப்பிக்க முடியாத பிரச்சனைகள் பல. பிரச்சனையாக அல்லாமல் அல்லும் பகலும் நம்மை உலுக்கியெடுக்கும் ஒன்றாக இருப்பது நம் உணர்வுகள். இந்த உணர்வுகளை இப்படி அப்படி புரட்டுப் போட்டு நிறைய கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொண்டுதான் இந்த நாகரீகம் கலாச்சாரம் பண்பாடு பாஸ்பரஸ் பயோ கெமிஸ்ட்ரி சமீப நெருக்கமாக நானோ டெக்னாலஜி வரைக்கும் நுட்பங்கள் பல உருப்பெற்றிருக்கின்றன.

பன்முக உணர்வுகளின் ஆகச் சிறந்த கிறுக்குத்தனம் கவிதை எழுதுவதென நம்பிக் கொண்டிருப்பவன் நான். ஆதியிலிருந்தெல்லாமில்லாமல் பாதியிலிருந்து கவிதை எழுதத் தொடங்கினவன். ஆனால் அவைகளை எல்லாம் தொகுத்து புத்தகமாக்கும் தைரியம் இந்த நிமிடம் வரை எனக்கு வரவே இல்லை. காயத்ரிக்கு அந்த தைரியமிருப்பது எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். உணர்வுகளின் மொழி தான் காயத்ரி தேவியின் கவிதைகளின் பாடுபொருள். அவற்றை பேசுபொருள் என்றுகூட அழைக்கலாம். ஆம் இக்கவிதைகள் உங்களோடு பேசக் கூடும். இந்த உத்திரவாதம் தருவதற்குக் காரணம் இவை என்னோடும் பேசியிருக்கின்றன.

அத்துவானக் காட்டில் அடக்கமாட்டாத சிறுகுழந்தையின் ரீங்காரமிசைக்கும் குரல் போல ஒலிக்கும் காயத்ரியினது கவிதைகளை அளவுகடந்து நேசிப்பவன் நான். ஆனால் அதனை ஒருபோதும் வெளிச் சொன்னதில்லை, எப்போதாவது பொங்கும் கங்கைபோல் வார்த்தைகள் என்னையும் மீறி வெளிப்பட்டிருக்கின்றது. அம்மாவுக்கு ஒரு கவிதை எழுதி இருப்பார்; ஒரு மகளின் கேவல்களை எல்லாம் அசட்டையான கேள்விகளால் கடக்கச் சொல்லும் காலத்தின் வலியை பரிபூரணமாய் வெளிப்படுத்துமந்தக் கவிதை. பின்பொருநாள் தந்தைக்கு மகள் எழுதும் வேண்டலாக ஒன்று, தாய்மையோடொன்று, ஏராளமாக காதலோடு பல கவிதைகள் எழுதி இருக்கிறார்.

இந்தத் தொகுப்பில் நீங்கள் கவிதைகள் இருக்கும் வாசிக்கலாம் என்று நினைத்தால் பெரும்பாலும் நீங்கள் ஏமாற்றமடையலாம். இவை அத்தனையும் உணர்வுகள். காற்று சுழன்றடிப்பதை கண்முன்னே காண முடிந்தும் அதன் அரூபத்தை ஏற்றுக்கொள்ளமுடியும் உணர்வுகள். அவைதான் இங்கே கவிதைகளெனச் சொல்லப்பட்டிருக்கின்றன காயத்ரியால்..

இந்த பணிந்துரை எழுதுவதற்கு மட்டும் தான் வலியுறுத்தப்பட்டேன். மற்றபடி என்ன எழுதவேண்டுமென்பதெல்லாம் என் விருப்பங்கள் தான். ஆக நீங்கள் என்னை பயந்த சுபாவமுடையவன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்” என்ற பாரதிதாசன் கூற்றை ஏற்றுக் கொள்வீர்கள் தானே!

மிகமுக்கியமாக இந்தத் தொகுப்பின் தலைப்பு பற்றிச் சொல்லியாகவேண்டும். பெளர்ணமி நிலவு ஓர் நாள் ஊரில் உள்ள அத்தனைப் பெண்களிலும் இவளொருத்தியை மட்டும் பேரழகியாகப் பிரதிபலித்துக் கொண்டிருந்தபோது இவள் விழிப்பார்வைக்கு அடங்க மாட்டாமல் “ உன்னைப் பிடித்திருக்கிறது. எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று கேட்டு வைத்தேன். அந்த இரவில் எங்களுக்கிடையில் சாட்சியாக இருந்தது அந்த மொட்டைமாடி நிலவும், தென்னங்கீற்றசைவுகளும் தான்... நான் நிலவின் மீது கொஞ்சம் போதை கொண்டிருந்ததால், இவள் தென்னங்கீற்றை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டுவிட்டாள். முதலாம் தொகுப்புக்கு வாழ்த்துகள் காயு. மலர்போல் வாழ்க. என்ன மலரென்று சொல்லவில்லையே..! அதை உனது அடுத்த புத்தகத்திலெழுதுகிறேன்...


- கார்த்திக் புகழேந்தி
.