Friday 31 July 2015

அம்மா அப்பா பிறந்தநாள்



நேத்து (29/07/2015) அம்மாவுக்கு பிறந்தநாள். அதுக்கு முன்னாடியே அப்பாவுக்கு ரெண்டு நாள் முன்னால பிறந்தநாள். இந்த விஷயம் நேத்து சாயங்காலம் வரைக்கும் சுத்தமா நியாபகம் இல்ல. நான் பாட்டுக்கு லேப்டாப்ல ஜாந்தி எப்படி குஜுன் ப்யோவ (கொரியன் சீரியல்) சுத்தல்ல விடுறான்னு பாத்துட்டு இருந்தேன்.

அதெப்படி ஒரு அம்மா அப்பா பிறந்தநாள், அதுவும் அடுத்தடுத்து வர்ற பிறந்தநாள மறப்பன்னு கேக்காதீங்க. எனக்கே இங்க பேஸ் புக்ல வர்ற வாழ்த்துக்கள வச்சு தான் அட, இன்னிக்கி நமக்கு பொறந்தநாள்லன்னு நியாபகம் வரும். சரி சரி ரொம்ப முறைக்காதீங்க, போன வருஷம் தான் ஒரு வாரம் முன்னாடியே நியாபகம் வச்சு கார்த்திக் கிட்ட ஒரு கிப்ட் கேட்டேன். அதுக்கு முந்தின வருஷம் வரைக்கும் எதையும் எதிர்பாத்ததே இல்ல.

எனக்கு நியாபகம் இருக்குற ஒரே பிறந்தநாள் செப்டம்பர் இருபத்தி எட்டு. அதுவும் கேட்டா மட்டும் தான் டக்குன்னு சொல்லுவேன், இல்லனா அதையும் மறந்துடுவேன். இவ்வளவு அதிமுக்கியமான பிறந்தநாள் யாரோடதுன்னு கடைசியா சொல்றேன்.

நான் சீரியல் பாத்துட்டு இருந்தேன்ல, அப்பா என்கிட்ட வந்து கொஞ்சம் வெளில போயிட்டு வருவோம் வான்னு கூப்ட்டாங்க. நாளைக்கு தான் ஹாஸ்பிட்டல் போறோமே, எதுக்குப்பா இன்னிக்கி? பரவால, அப்புறம் பாத்துக்கலாம்ப்பான்னு சொன்னேன்.

“வா சொல்றேன்ல”ன்னு சொல்லிட்டே என்னை தூக்கி உக்கார வச்சு, காலை பிடிச்சு மசாஜ் பண்ணி காட்டன் பேன்ட்யெட் சுத்தி விட்டு, ஸெல்ப்ல போய் ஒரு சுடிதார் எடுத்து வந்து, அது பாட்டம் காலை சுருட்டி, என் கால அதுல நுளைச்சுட்டே நீ சுடிதார் போட்டு நாளாச்சு. போட்டுட்டு கூப்டு, அப்பா கூட்டிட்டு போறேன்னு வெளில போய்ட்டார்.

என்ன விசேசம் இன்னிக்கின்னு மண்டைய போட்டு ரொம்ப குழப்பியும் சுத்தமா நியாபகம் வரல. சரி, கார்த்திக் கிட்ட சொல்லலாம்னு நினைச்சப்ப அவர் அப்ப தானே தூங்கினார், டிஸ்டர்ப் பண்ண வேணாம், வந்து சொல்லிக்கலாம்னு கிளம்பிட்டேன்.

கிளம்பினதும், “அப்பா”ன்னு குரல் குடுத்தேன். வாக்கர் எடுத்து தந்தாங்க. அத பிடிச்சுட்டே ஒத்த கால வச்சு ஹால் வந்து, அத தாண்டி வெளில வராண்டா வந்தாச்சு. இந்த பாட்டி எங்கன்னு சுத்தும் முத்தும் பாக்குறேன், காணல. நல்ல வேளைன்னு நினச்சுட்டே எப்படி படி இறங்கன்னு யோசிச்சேன். அதுக்குள்ள கார தொடச்சுட்டு இருந்த தம்பி இத பாத்துட்டு ஓடி வந்தான். அவனும் அப்பாவும் சேர்ந்து என்னை ரெண்டு பக்கமா பிடிச்சு கீழ இறக்கி விட்டுட்டாங்க.

கால் முறிஞ்சதுக்கப்புறம் கிட்டத்தட்ட ஒன்னரை மாசமா வீட்டை விட்டு வெளில போகணும்னா ஹாஸ்பிட்டல் மட்டும் தான் போவேன். அதுவும் ஆம்புலன்ஸ்ல படுக்க வச்சு ரெண்டு பேர் ஸ்ட்ரெக்சர்ல தான் தூக்கிட்டு போவாங்க. போன வாரம் தான் ரொம்ப பிடிவாதம் பிடிச்சி முதல் தடவையா கார்ல கொஞ்சம் ஊர் சுத்திட்டு வந்தேன். அதுக்கப்புறம் நேத்து தான் வெளில கிளம்புறேன். அதுவும், அப்பா, தம்பி நான் மட்டும். விஷயம் என்னன்னு தெரியலனாலும் ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.

நான் ட்ரைவ் பண்ணட்டான்னு நான் கேக்கவும், அடங்குன்னு தம்பி கைய தூக்கி சைகை காமிக்குறான். கொழுப்பு புடிச்சவன். பின் சீட்டை திறந்து வச்சு, அதுல என்னை ஏற சொல்லி, காலை சீட் மேலயே வச்சுக்கோன்னு சொன்னான். அப்புறம் ரெண்டு தலையணை எடுத்து கால் கீழ விழாம இருக்க அடை குடுக்குறானாம். எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்துச்சு. இல்ல, எனக்கு இப்படி உக்கார கஷ்டமா இருக்கு, நான் காலை கீழ வச்சுக்குறேன்னு சொன்னேன். போன வாரம் வெளில சுத்திட்டு அங்க வலிக்குது இங்க வலிக்குதுன்னு புலம்பிட்டு இருந்தல, இப்படி இருன்னு சொல்றான். பார்ரா, இந்த பய நம்மள அதிகாரம் பண்ற அளவு தேறிட்டான்ன்னு எனக்கு திரும்பவும் சிரிப்பு சிரிப்பா வந்துச்சு.

அப்பா போய் முன்னாடி உக்காந்துக்க, தம்பி கார எடுத்தான். எனக்கு நினைவு தெரிஞ்சி, எங்க கார்ல பின் சீட்ல நான் உக்காந்தது இதான் முதல் தடவ. இதுக்கு முன்னாடி எல்லாம் ஒண்ணு நான் ட்ரைவ் பண்ணுவேன், இல்லனா பக்கத்துல உக்காந்துட்டு இருப்பேன். நிஜமாவே எனக்கு அந்த மாதிரி கால நீட்டிட்டு பின் சீட்ல இருந்தது புது அனுபவமா இருந்துச்சு. பெருசா ஒண்ணும் வெளில வேடிக்கை பாக்கவே முடியல, கடுப்பாகிடுச்சு.

அரை மணி நேர ட்ராவல். அரைகொறையா பாத்துட்டு வந்ததுல கோவிலுக்கு போறோம்னு தெரிஞ்சுது. கார் கோவிலுக்கு வந்து நின்னதும், என்னப்பா விசேசம்னு அப்பா கிட்ட கேட்டேன். அம்மாவுக்கு பொறந்தநாள்ன்னு தம்பி சொன்னான். அம்மாவுக்கு பொறந்தநாள்னா அப்ப அப்பாவுக்கு முந்தாநேத்து பொறந்தநாள்லன்னு கேணத்தனமா சிரிச்சுட்டே ஹாப்பி பர்த்டே அப்பா-ன்னு சொன்னேன்.

..........................................

இந்த பொறந்தநாள் கொண்டாட்டங்கள எல்லாம் தலைமுழுகி ஏழெட்டு வருசத்துக்கு மேலயே இருக்கும். அப்பலாம் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரு நாள் விட்டு அடுத்தடுத்த நாள் பிறந்தநாள் வர்றதால எப்பவுமே மொத்தமா கொண்டாட இருபத்தியெட்டாம் தேதிய தான் செலக்ட் பண்ணுவோம். அதுவும் நான் எட்டாவது படிக்குறப்ப தான் ஆரம்பிச்சோம். உண்மைய சொன்னா அதுக்கு முன்னாடி என்னோடது, அப்புறம் தம்பியோட பிறந்தநாள கூட பெருசா கொண்டாடினது இல்ல. கோவிலுக்கு போறதோட சரி. அதென்னவோ அந்த மாதிரி கொண்டாட்டங்கள்ல ரொம்ப இன்ட்ரெஸ்ட் இருக்கல, எங்க ஏரியால அதெல்லாம் கொண்டாடுறதும் இல்ல. அப்பா குடும்பத்துல பாட்டிக்கு சுத்தமா இந்த மாதிரியான கொண்டாட்டங்கள் பிடிக்காது.

எய்த் படிக்குறப்ப, ப்ரெண்ட்ஸ், நான், அம்மா எல்லாரும் சேர்ந்து பேசிட்டு இருந்தப்ப தான் இந்த பிறந்தநாட்கள் பற்றி பேச்சு வந்துச்சு. அம்மா அப்ப தான் பாட்டியோட அடக்குமுறைல இருந்து கொஞ்சம் வெளில வந்திருந்தா. அதனால அப்பா கிட்ட இந்த பிறந்தநாட்கள ரொம்ப ஜாலியா கொண்டாடணும்னு சொல்லி ஒரு நாள் முழுக்க வெளில சுத்தினோம். பீச், பார்க், தியேட்டர், ஹோட்டல்ன்னு ரொம்ப சந்தோசமா கொண்டாடினோம். கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் தான் அதுக்கு ஆயுள். ஒவ்வொரு வருசமும் புதுசா பண்ணுவோம். எனக்கோ தம்பிக்கோ பர்த்டேனா வீட்லயே பார்டி இருக்கும். அம்மா கைமணத்தோட ப்ரெண்ட்ஸ், ஹோம் பசங்கன்னு செம ஜாலியா இருக்கும். ராத்திரி எல்லாருக்கும் கண்டிப்பா அம்மா கையால நிலா சோறு உண்டு. அப்புறம் எல்லாத்தையும் மறந்தாச்சு.
..............................................

கார விட்டு இறங்கணும்னா வாக்கர் கொண்டு வரலலப்பான்னு நான் கேட்டதும், இல்லல, கீழ எல்லாம் இறங்க வேண்டாம், இங்க இருந்தே கும்பிட்டுக்கன்னு சொன்னாங்க. மூணு பேரும் வெளில இருந்துட்டே கோபுரத்த பாத்து ஒரு கும்பிடு போட்டு போட்டதும் காரை பார்க் பண்ணிட்டு அவங்க ரெண்டு பேரும் சாமி கும்பிடப் போவாங்கன்னு நினச்சேன். ஆனா தம்பி கார ஸ்டார்ட் பண்ணி, நேரா சுடல்கடைகாரர் முன்னால கொண்டு போய் நிறுத்தினான். கோவிலுக்கு உள்ள போகலயான்னு கேட்டதும், இல்லல, இது போதும்னு சொல்லிட்டே, கிழங்கு வத்தல் ரெண்டு பாக்கெட்டும், அவிச்ச நிலக்கடலை மூணு பாக்கெட்டும் வாங்கிட்டு ஐநூறு ரூபா நோட்டை எடுத்து நீட்டினான். அவரு சில்லற இல்லப்பான்னு சொல்லிட்டே, அவன் கைல இருந்த பொட்டலத்த எல்லாம் படக்குன்னு புடிங்கிட்டாரு. எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. காலை எடுத்து மெதுவா கீழ தொங்க போட்டுட்டு சீட்ல சாஞ்சு உக்காந்தேன்.

தம்பி விறுவிறுன்னு நடந்து போனான், போன வேகத்துல ஒரு பொட்டலத்தோட திரும்பி வந்தான். சுண்டல்காரர் கிட்ட போனான், காசை குடுத்து பொட்டலம் போட்டு வச்சிருந்தத திருப்பி வாங்கினான், அவன் பாட்டுக்கு கார்ல ஏறி உக்காந்தான். ஆளுக்கு ஒரு பொட்டலத்த பிரிச்சு சாப்பிட ஆரம்பிச்சுட்டோம்.

நான் மெதுவா, சில்லறை எங்க வாங்கினன்னு கேட்டேன். அவன் பஜ்ஜி பொட்டலத்த எடுத்து காட்டி, அந்த பஜ்ஜி கடைல போய் அங்க இருந்த அம்மா கிட்ட மூணு பஜ்ஜி கேட்டேன், மடிச்சு தந்துட்டு பதினெட்டு ரூபா கேட்டாங்க, நான் ஐநூறு ரூபாவ நீட்டினேன். அவங்க சிரிச்சுட்டே, இதுக்கு தான் பஜ்ஜி வாங்க வந்தீங்களான்னு கேட்டுட்டு ஐநூறு ரூபாய்க்கும் சில்லறை தந்தாங்க. பஜ்ஜிக்கு ரூபான்னேன், இல்ல பரவால வச்சுக்கோங்கன்னு தந்துட்டாங்கன்னு சொன்னான். ஆச்சர்யமா இருந்துச்சு. அந்த இடத்துல கட்டாயப்படுத்தி காசை குடுத்துருக்கலாம், ஆனா இந்த மாதிரியான சில விசயங்கள அவங்கள அவங்க போக்குல விட்டுரணும்னு அம்மா அடிக்கடி சொல்லுவா. யாராவது மனசார நமக்கு ஒண்ணு தந்தா வேணாம்னு மறுக்க கூடாது, அது அவமரியாதைன்னும் சொல்லுவா. தம்பி அதனால தான் வாங்கிட்டு வந்துட்டான். ஒருத்தனுக்கு காசு வாங்காம பஜ்ஜி குடுத்த சந்தோசம் அந்த அம்மாவுக்கு கிடைக்கட்டுமே.

நான் உடனே ஆசையா அந்த பஜ்ஜிய எடுத்து சாப்பிட ஆரம்பிச்சேன். ஒரு கடி கடிச்சுட்டு நிமிர்ந்து பாக்குறேன், எனக்கு நேரா ஒரு தாத்தா, சாப்பிட ஏதாவது தான்னு கேக்குற மாதிரி கையேந்தி நிக்குறாரு. நான் திருட்டு முழி முழிச்சுட்டே கைல இருக்குற பஜ்ஜிய பாக்குறேன், தாத்தாவ பாக்குறேன். அப்பா எட்டிப் பாத்துட்டு, கார்ல இருந்து இறங்கி, பெரியவரே வாங்கன்னு சொல்லிட்டு பக்கத்து ஹோட்டல் கூட்டிட்டு போனாங்க. தம்பி, நான் காரை பார்க் பண்ணிடுறேன்ப்பான்னு சொல்லிட்டு கொஞ்சம் தள்ளி ஓரமா ஒதுக்கி விட்டுட்டு உனக்கு என்ன வேணும்னு கேட்டான். நான் பானி பூரின்னு சொன்னேன். அதெல்லாம் இங்க கிடைக்காது, சரி, இரு வர்றேன்னு சொல்லிட்டு அவனும் இறங்கி போய்ட்டான்.

அப்பா கண்டிப்பா அந்த தாத்தாவுக்கு சாப்பாடு வாங்கி குடுத்துருப்பாங்க. அவங்க திரும்பி வந்தப்ப நான் பஜ்ஜி, கடலை, கிழங்கு வத்தல் எல்லாத்தையும் (என் பங்கை தான்) காலி பண்ணியிருந்தேன். தம்பி காரை ஸ்டார்ட் பண்ணிட்டே திரும்பி பாத்தவன், காலை தூக்கி மேல வைக்கட்டான்னு கேட்டான். இல்ல, வேணாம் இருக்கட்டும்னு சொல்லிட்டேன்.

அப்புறமா, கோவில்ல இன்னொரு இடத்துல போய் தேடினா, இன்னிக்கின்னு பாத்து பானி பூரி விக்குற ஆள காணோம். எனக்கு ஏமாத்தமா போச்சு. என் மூஞ்சி வாடினத பாத்தோ என்னவோ மூணு நாலு கிலோமீட்டர் தள்ளிப் போய் ஒரு கடைல கேக்க, அங்கயும் பானி பூரி இல்ல. சரி, வந்ததுக்கு மசால் பூரியாவது சாப்பிடுவோம்னு அதுல ஒரு ப்ளேட் வாங்கி சாப்ட்டேன். அங்க இருந்து திரும்பி வந்தப்ப என்ன நினைச்சானோ, மறுபடியும் காரை கோவில் ஸ்ட்ரீட்ல ஒரு ரவுண்டு அடிக்க, அட, பானிப்பூரி விக்குற பையன் மாட்டிகிட்டான்.

அதான், மாட்டிகிட்டான்ல, அப்புறம் பானி பூரி சாப்டாம திரும்பி வந்துருப்பேன்னா நினைக்குறீங்க? ரெண்டு ப்ளேட் வாங்கி, புளிப்பு சுவை நாக்குல எச்சி ஊற ஊற காலி பண்ணியாச்சு. என்னடா இவ, ஒரு பானி பூரிக்கு இவ்வளவு அக்கப்போரான்னு நினைக்காதீங்க, என் லைப்ல ரெண்டாவது தடவையா தான் பானி பூரிய நான் சாப்ட்டேன்.

வீட்டுக்கு வந்து சேர்ந்தப்ப கால் பயங்கர வலி. நீர் போட்டு பயங்கரமா வீங்கி போயிருந்துச்சு. செம டயர்ட் வேற. ஆனாலும் அத எல்லாம் அப்பா கிட்டயும் தம்பி கிட்டயும் காட்டிக்க மனசு வரல. ரூமுக்குள்ள வந்து கட்டில்ல படுத்ததும் தான் தெரியும், ஹப்பா... எழுந்திரிக்கவே முடியல. ஆனாலும் இந்த நாளை என்னோட டைரி அதான் இங்க குறிச்சு வைக்கணும்னு மடமடன்னு எழுதி முடிச்சுட்டேன். கார்த்திக் கிட்ட இன்னும் எதுவும் சரியா சொல்லல. படிச்சு தெரிஞ்சுக்கட்டும். பின்ன, நாம எழுதுறத அவர வேறெப்படி படிக்க வைக்குறது?

ஆங், சொல்ல மறந்துட்டேனே, அந்த செப்டம்பர் இருபத்தி எட்டு யாருக்கு பிறந்தநாள்ன்னு தான கேக்குறீங்க? அச்சச்சோ, நான் அவன் பெயர சொல்லி கூப்பிடவே மாட்டேனே... அதனால சொல்ல மாட்டேன்... ஹஹா... டாட்டா....

Tuesday 28 July 2015

பார்த்திக்காக -7



பார்த்தீ... டேய் பார்த்தி...
என்னடா நினச்சுட்டு இருக்க?
தெரியாம தான் கேக்குறேன்
அப்படி என்ன நினச்சுட்டு இருக்க?

அப்படி என்ன தான்டா
நான் உன்கிட்ட கேட்டுட்டேன்?
வேலை முடிஞ்சிடுச்சா
இன்னுமாடா முடிக்கல,
ஏண்டா இப்படி இருக்கன்னு தான கேட்டேன்.

நீயா கோபப்படுற
நீயா எரிஞ்சு எரிஞ்சு விழுற
என்னன்னு கேட்டா
நீ என்னை நிம்மதியா
விட மாட்டேங்குறன்னு முறைக்குற.

சரி, எதுவுமே கேக்கவேணாம்னு
அமைதியா இருந்தா
ஏதாவது பேசுங்குற...
பேசினா,
ஏண்டி உயிரெடுக்குறங்குற.

நான் போறேன்,
விட்டுத் தொலைன்னு கிளம்பினா
ஏண்டி போறன்னு
பின்னாலயே வர்ற...

கட்டிப்புடிச்சுக்குற...
அப்புறம் வரிசையா
அடுக்க ஆராம்பிக்குற...

நீ சரியில்ல
உனக்கு பொறுப்பு இல்ல
உனக்கு அக்கறை இல்ல
புருஷன் என்னப்பண்றான்னு கேக்குறதில்ல,
வேலை செய்தியாடானு அதட்டுறதில்லன்னு
குற்றப் பத்திரிகை வாசிக்குற.

கோபத்துல முறைச்சா
அழகாயிருக்கங்குற...
வேலைய முடிச்சியான்னு கேட்டா
ஏண்டி நிம்மதியா இருக்க விடமாட்டேங்குறன்னு
முருங்கை மரம் ஏறிடுற...

அடக்கவே முடியாத
அடங்கா குதிரைடா நீ
இம்சை புடிச்சவனே...
இனிமேல் என்னை திட்டிப் பாரு
நறுக்குன்னு காதுல கடிச்சி வைக்குறேன்...


.

Monday 27 July 2015

பாகுபலி - ஹோனன ஹோனன



திரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக்கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ மனசுக்கு அவ்வளவு பிடிச்சு போச்சு.

சும்மாவே பட்டாம்பூச்சினா விட மாட்டேன். அதுவும் நீல கலர்ல பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சதுமே ஹா-ன்னு ஆர்வமா பாக்க ஆரம்பிச்சவ தான், மனசு அப்படியே அந்த பட்டாம்பூச்சி ட்ரெஸ்ல தமனாவ பாத்ததும் ஸ்ட்ரக் ஆகிடுச்சு.

“ஹோனன ஹோனன ஹோனன
ஹோ நான் செந்தேனா?
ஹோனன ஹோனன ஹோனன
ஹோ நீ வண்டுதானா?” ன்னு பட்டாம்பூச்சிகள் சிதற, தேவதையா தமனா திரும்புறப்ப ப்ப்ப்ப்பா.... விழுந்துட்டேன்.

“அந்தரத்தில் ஒரு வெண்மதியாய்
உன்னை அழைத்தேனா?
இந்திரலோகத்துச் சுந்தரி
உனக்கே உனக்காய் முளைத்தேனா?”ன்னு தமனா வைக்குற அந்த ஸ்டெப்ஸ் செம. கூடவே அந்த அருவி, மலை, மரம்ன்னு பேக்ரௌண்ட்ஸ் அவ்வளவு அட்டகாசம்.

முந்தாநேத்து குரூப்ல பிரெண்ட் கூட பேசிட்டு இருக்குறப்ப அந்த ஹீரோயின் இன்ட்ரோ சாங் தேவையில்லன்னு நினைக்குறேன்னு சொன்னார். அய்யய்யோ, எனக்கு அந்த பாட்டு ரொம்ப பிடிச்சிருக்கே, அதுல தமனா அவ்வளவு அழகுன்னு சொன்னேன். ஆமா அழகு தான், ஆனா அந்த இடத்துல அந்த பாட்டு செட் ஆகலன்னு சொன்னார். என்ன கவனத்துல இருந்தேனோ, கவனம் திசை மாறிப் போச்சு.

ஆனா அந்த பாட்டு தானே படத்தோட ஸ்டார்டிங்கே. நூறு தடவ அந்த அருவிய தாண்டி மலையேற முயற்சி பண்ணி முயற்சி பண்ணி தோத்துப் போற ஹீரோ, தமனாவோட முகமூடிய பாத்ததும் அவள கண்டிப்பா பாத்துடணும்னு ஒரு உத்வேகத்தோட மலையேற ஆரம்பிக்குறார். கண்டிப்பா அவர் மலையேறுற சீனை வேற எப்படி காட்டியிருந்தாலும் போர் அடிச்சியிருக்கும். ஆனா ஒவ்வொரு தடவ அவ்வளவு பெரிய நீர் மலைல இருந்து அவர் விழுந்தாலும்

“வீரனே! உலகம் உந்தன் கீழே....

தீரனே! நீ நினைத்தாலே!”ன்னு தமனாவோட நினைப்பு அவர ஏற வச்சிடுது. அதே மாதிரி காட்டு புல்லை வச்சி வில்லும் அம்பும் செய்து, அப்படியே அந்தரத்துல குதிச்சி, உச்சில இருக்குற மரத்த நோக்கி அம்பு விடுற சீன், ஹப்பா.. சான்சே இல்ல. டாட்....

நான் இங்க படத்த பத்தி எதுவுமே சொல்லல, காரணம் அப்படியே நிமிர்ந்து உக்காந்து ஸ்க்ரீனையே வெறிச்சு பாத்துட்டு இருக்கும் போதே படம் முடிஞ்சு போய்டுது. சீக்கிரமா செகண்ட் பார்ட் கொண்டு வந்துடுங்கப்பா. இல்லனா படத்த திரும்ப திரும்ப படத்த பாத்து என் பென்-ட்ரைவ் தேய்ஞ்சுட போகுது.


ஆமா, கட்டப்பா ஏன் பாகுபலிய கொன்னார்?


.

Saturday 25 July 2015

என் பொண்ணு பெரிய மனுசி ஆகிட்டா



ப்ரேமி. கிட்டத்தட்ட பத்து பனிரெண்டு வருஷம் இருக்கும், அவள நான் பாத்தப்ப. ஒரு பிரவுன் கலர் நைட்டி போட்ருந்ததா நியாபகம். அவள பாக்க மூர்த்தி தான் கூட்டிட்டு போயிருந்தான்.

மூர்த்தி எங்களோட க்ளாஸ் மேட். எங்க பிரெண்ட்ஸ் வட்டத்துல அவன் தான் பேமஸ். எங்க எல்லாரோட இன்ஸ்பிரேசன். வெறுமனே பிறந்தோம், வாழ்ந்தோம்ன்னு வாழ்ந்துட்டு போறது வாழ்க்கை இல்லன்னு கத்துக் குடுத்தவன். ஏதாவது ஒரு லட்சியத்தோட வாழணும்னு அவன் தான் சொல்லிக் குடுத்தான்.

அது ஒரு வீடு. கொஞ்சம் பெருசாவே இருந்துச்சு. அந்த வீட்டு ஓனர் நாதனுக்கு ஒரு முப்பது வயசு இருக்கும். அவரும் அவரோட மனைவி லதாவும் தான் அந்த ஹோம் வச்சிருந்தாங்க. லதா அம்மாவுக்கு முதல் பிரசவத்துல ரொம்ப பிரச்சனை ஆகி, குழந்தை இறந்து பிறந்ததோட கர்ப்பப்பையையும் எடுக்க வேண்டியதா போச்சாம். இனி குழந்தைங்க பிறக்காதுன்னு இருந்தப்பதான் அவங்க இந்த ஹோம் ஆரம்பிச்சிருக்காங்க. கொஞ்சம் வசதியாவே இருந்ததால அவங்களுக்கு யாரோட உதவியும் தேவைப்படல.

நாங்க அங்கப் போய் உள்ள எட்டிப் பாத்தா ரெண்டு பிள்ளைங்க ஒண்ணு தவழ்ந்துட்டும் ஒண்ணு ஓடிட்டும் இருந்துச்சு. தொட்டில்ல ஒரு குழந்தை தூங்கிட்டு இருந்திருக்கணும். மூர்த்தி அவங்கள எல்லாம் அறிமுகப் படுத்திட்டு சுசிலாவையும் அறிமுகப்படுத்தி வச்சான்.

சுசிலாவுக்கு எங்க வயசு இருக்கும். அந்த ஹோம்ல பெரியவ அவ தான். அதனால எல்லா புள்ளைங்களையும் அவ தான் பாத்துப்பா. பக்கத்து கவர்ன்மென்ட் ஸ்கூல்ல அப்ப ஒன்பதாவது படிச்சுட்டு இருந்தா.

திடீர்னு ஒரு அழுகை சத்தம். என்னாச்சு ஏதாச்சுன்னு நானும் என்னோட ப்ரெண்ட்ஸ்சும் பதறிட்டு இருந்தப்ப, ப்ரேமி எங்கன்னு மூர்த்தி தான் முதல்ல கேட்டான். அவ அங்க இருந்த ஒரே பெண் குழந்தை. ரெண்டு வயசு இருக்கும் அவளுக்கு. தோட்டத்துல செம்பருத்தி பூ பறிக்கப் போறேன்னு போய் ஒரு தென்னம்பிள்ளை நட்டு வச்சிருந்த குழிக்குள்ள விழுந்து கிடந்தா. உடம்பெல்லாம் ஒரே சகதி.

அவள தூக்கிட்டு வந்து அங்க இருந்த தண்ணித் தொட்டியில ஒரே முக்கா முக்கி எடுத்துட்டாங்க லதா அம்மா. அதான் புள்ள போட்ருந்த ட்ரெஸ் எனக்கு பிரவுன் கலர்ல தெரிஞ்சிருக்கலாம். அவள கூட்டிட்டு போய் தலை துவட்டி, கைய கால வச்சுட்டு சும்மாவே இருக்க மாட்டியான்னு கண்ண உருட்டி பயங்காட்டிட்டு இருந்தான் மூர்த்தி.

எங்க டீம்ல சுமதி தான் தைரியசாலி. நானெல்லாம் வாய் வார்த்தைல தான் வீரத்த காட்டுவேன். மத்தப்படி எப்பவுமே ஒன் ஸ்டெப் பேக் தான். அவ்வளவு நேரம் எல்லாரையும் பாத்துட்டே இருந்தேனே தவிர எந்த புள்ளையையும் கைல எடுக்கணும்னு தோணவேயில்ல. சுமதி தொட்டில்ல கிடந்த குழந்தைய தோள்ல போட்டுருந்தா.

"காயு, இங்க வா. இவங்க எல்லாரும் என்னோட் பிள்ளைங்க. வந்து ஹல்லோ சொல்லு"ன்னு மூர்த்தி கூப்பிட்டான். அவன் அப்படி சொன்னப்ப ஏனோ எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துச்சு. கண்ணு கொஞ்சம் கலங்கிடுச்சு. வளர்ந்து பெரியவனாகி இந்த புள்ளைங்களுக்காகவே வாழணும்னு அவன் சொன்னப்ப எல்லாருமே ஒவ்வொரு புள்ளைங்கள கட்டிகிட்டாங்க.

அதுல இருந்து நேரம் கிடைக்குறப்ப எல்லாம் அந்த ஹோமுக்கு போய்டுவோம். எங்களால முடிஞ்ச அளவு காசு சேர்த்து முட்டாய், மிக்சர், ஜாங்கிரின்னு வாங்குவோம். எங்க வீட்ல அவங்க பங்குக்கு முறுக்கு அதிரசம்னு சுட்டுத் தருவாங்க. பொருளாதார சிக்கல் எல்லாருக்கும் இருந்தும் பிள்ளைங்க பண்ற காரியங்கள தடுக்காம முடிஞ்ச அளவு ஊக்கம் குடுக்குற பெத்தவங்க அமையுறது வரம் தானே. எங்க எல்லாருக்கும் அந்த வரம் அமைஞ்சிருந்துச்சு.



அப்புறம் ஸ்கூல் முடிச்சுட்டு ஆளாளுக்கு வேற வேற லட்சியம், வேற வேற இடம்ன்னு எங்க நட்பு வட்டம் கொஞ்சம் கொஞ்சமா பிரிய ஆரம்பிச்சிடுச்சு. கிட்டத்தட்ட எல்லாரும் போய் நான் மட்டும் மிஞ்சியிருந்த அந்த நாலஞ்சு வருசத்துல ஹோம்ல பிள்ளைங்களோட எண்ணிக்கை பதிமூணா ஆகிடிச்சு. அம்மா, இந்த பிள்ளைங்களுக்கு பெருசா ஏதாவது செய்யணும்மான்னு அம்மா கிட்ட அடிக்கடி சொல்லுவேன். நீ சம்பாதிச்சு அந்த புள்ளைங்களுக்கு ஏதாவது பண்ணுன்னு அம்மா சொல்லுவா.

அவங்களோட தேவைகள நாதன் அங்கிளே பாத்துகிட்டாலும் நாமளும் ஏதாவது செய்யணும்னு தான் காலேஜ் சேர்ந்தப்பவே சம்பாதிக்க ஆரம்பிச்சேன். மனுசப்பிறவியா பொறந்தா ஒரு லட்சியம் இருக்கணும் தானே. எனக்கு உயிரோட இருக்குறதுக்கே ஒரு லட்சியம் தேவைப்பட்டுச்சு.

கிட்டத்தட்ட அஞ்சு வருசமா அவங்களோட ஸ்கூல் யூனிபார்ம், நோட்டு, ஜியாமட்டரி பாக்ஸ்ன்னு சின்ன சின்ன விஷயங்களுக்கு காசு குடுப்பேன். விசேச நாட்கள்ல ஒரு வேன் பிடிச்சி பீச், கோவில்ன்னு கூட்டிட்டு போவேன். அக்கா அக்கான்னு அவங்க என்னை கூப்ட்டாலும் எல்லாரையும் என்னோட பிள்ளைங்களா தான் நினைப்பேன்.

சுசிலாவும் அப்படி தான். அம்மா அப்பா இல்லாம, ஒரே பாட்டியும் செத்துப் போய் அங்க வந்து சேர்ந்தவ. என் வயசு தான் அவளுக்குங்குறதால எனக்கு ட்ரெஸ் எடுத்தா அவளுக்கும் எடுப்பேன். ட்ரெஸ் எடுக்குறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல, ஆனா காஸ்ட்லி ட்ரெஸ் போட அவளும் ஆசைப் படுவா. அதுக்காகவே சில நேரம் அவளுக்கு மட்டும் எடுத்து குடுத்துட்டு நான் சும்மா இருந்துருவேன். அவங்க எல்லாம் காஸ்ட்லியா ஆசைப்படக் கூடாதுன்னு யார் சொன்னா?

அத்தனை பிள்ளைங்களையும் பாசத்தோட கூடவே இருந்து பாத்துட்டு தன்னோட படிப்பையும் பாத்துட்டு இருந்த சுசிலாவுக்கு ரெண்டு வருஷம் முன்னாடி கல்யாணம் ஆச்சு. நான் அந்த நேரம் ஹாஸ்பிட்டல்ல இருந்ததால முதல் முதலா நான் சம்பாதிச்சு வாங்கியிருந்த ஒரு பவுன் குட்டி செயின அவளுக்கு கிப்டா குடுக்க சொல்லி அப்பா கிட்ட சொன்னேன். அவ்வளவு தான், அதோட நான் அந்த ஹோமுக்கு போறது குறைஞ்சே போச்சு.

அதுக்கப்புறம் தம்பியும் அப்பாவும் தான் அப்பப்ப அந்த புள்ளைங்களுக்கு வேண்டியத செய்துட்டு இருக்காங்க. நான் ரெண்டு தடவ போனதோட சரி.

சரி, இதெல்லாம் நான் ஏன் இப்ப சொல்றேன்னா, காலைல ஆறரை மணிக்கு அப்பாவுக்கு ஒரு போன் கால். ப்ரேமி பெரிய மனுசி ஆகிட்டாளாம். மனசு முழுக்க ஒரு மாதிரி படபடப்பா இருக்கு. நான் ஒரு அம்மான்னு தோணிகிட்டே இருக்கு. தானே சிரிப்பு சிரிப்பா வருது. நம்ம புள்ளைங்களுக்கு ஒரு விசேசம்னு வந்தா அந்த சந்தோசமே தனி தானே. அவளோட ஒவ்வொரு ஸ்டெப்பும் அவ ஆசைப்படுற மாதிரி அமையணும்னு நான் ஆசைப்படுறேன்.

சாயங்காலமா போய் மாமன் முறைக்கு தம்பி சடங்கு செய்துட்டு வருவான். நானும் போகணும்னு நினைச்சிருக்கேன். ஹோம்க்குள்ள போக முடியலனாலும் கார்ல இருந்தே அவள பாத்துட்டு வரணும்.

என் பொண்ணு பெரிய மனுசி ஆகிட்டா.


.

Wednesday 22 July 2015

பட்டாம்பூச்சிகள் பேசுவதில்லை




நீண்டு நெடிந்து கிடக்கும்
மலைப்பாம்பை போல தான்
இருண்டிருக்கும் இரவு
என் மொத்த உணர்வுகளையும்
விழுங்கி விட்டு அசைவற்று கிடக்கிறது.

பாரமாய் அழுத்திக் கொண்டிருக்கும்
இந்த கற்பாறை
உன் ஒரே ஒரு அணைப்பினில்
துகள்களாய் காணாது
போய் விடவும் கூடும்.

இருந்தும்
உன் கண் பார்க்கத் தயக்கம்
உன் மடி சாயத் தயக்கம்
எல்லாத்துக்கும் மேலாய்
மடைதிறந்து கண்ணீர்விட்டு
அழுது விடத் தயக்கம்.

நீ சொல்வதைப் போல்
சோகங்களை தூக்கி சுமக்க
எனக்கு பிடித்திருக்கிறது போலும்.

இதோ இந்த பட்டாம்பூச்சி
தன் இறகுகளை நெருஞ்சிமுள் வைத்து
துளையிட்டுக் கொண்டிருக்கிறது.

காரணங்கள் கேட்டு விடாதே
சொல்லத் தெரியாது
முக்கியமாய்
பட்டாம்பூச்சிகள் பேசுவதில்லை.

Wednesday 15 July 2015

தீனி பண்டாரங்கள்



ரொம்ப நாள் அப்புறம் இன்னிக்கி தான் பரோட்டாவும் சிக்கனும் சாப்ட்ருக்கேன். அதுக்கான காரணத்த சொன்னா யாரும் சிரிக்கக் கூடாது சொல்லிட்டேன்.

சாயங்காலமா கார்த்திக்கும் எனக்கும் சண்டை. நான் பாட்டுக்கு கோபத்துல இருக்கேன், அவர் கிச்சிலி காட்டுற மாதிரி சமாதான கொடி காட்டிட்டு இருக்கார், நான் விடுவனா கோபத்துல திட்டிட்டு இருக்கும் போதே பரோட்டா நியாபகம் வந்துடுச்சு. உடனே இன்னொரு மொபைல கைல எடுத்து அப்பாவுக்கு கால் பண்ணினேன். ரிங் போய்ட்டே இருக்கு, அப்பா அட்டென்ட் பண்ணின மாதிரி இல்ல. சரின்னு நந்து வீட்டுக்கு கால் பண்ணேன். நந்து எடுத்துட்டு தாத்தா கடைக்கு போய்ட்டாங்கன்னு சொல்லிட்டா. விடுவனா, எப்பவும் அப்பா போய் இருக்குற கடைக்கு கால் பண்ணி அப்பா கிட்ட பரோட்டா வாங்கிட்டு வர சொல்லிட்டு தான் கார்த்திக் கூட சமாதானத்துக்கே வந்தேன். திங்குற விசயத்துல நான் என்னிக்கும் வஞ்சம் வச்சதே இல்லன்னு உங்களுக்கு எல்லாம் இப்ப நல்லா தெரிஞ்சிருக்கும்.

சின்ன வயசுல வீட்ல அம்மாவுக்கும் எனக்கும் எப்பவாவது பயங்கரமா சண்டை நடக்கும். அப்ப எல்லாம் நான் கோபத்துல மூஞ்சிய தூக்கி வச்சுப்பேன். சாப்பாட்டு நேரம் வந்ததும் அம்மா என்னை சாப்பிட வர சொல்ல மாட்டா. “எம்பொண்ணு ரோசக்காரி, இன்னிக்கி சாப்பிட மாட்டா”ன்னு சொல்லிட்டே மத்தவங்களுக்கு எல்லாம் தட்டு எடுத்து வைப்பா. நான் அப்படியே ஹால்ல சோபால உர்ர்ர்ன்னு உக்காந்துட்டு இருப்பேன்.

அம்மா, முதல் தோசைய சுட்டு அப்பா தட்டுல வைப்பா. நான் விடுவனா, விறுவிறுன்னு எழுந்து போய் அப்பா முதல் வாய் வைக்குறதுக்கு முன்னாடியே தட்டை பறிச்சு நான் திங்க ஆரம்பிச்சுடுவேன். அம்மா உள்ளுக்குள்ள சிரிச்சாலும் முறைச்சுட்டே இன்னொரு தட்டுல இன்னொரு தோசைய அப்பாவுக்கு கொண்டு வந்து வைப்பா. நான் விடுவனா, அதையும் தூக்கிடுவேன்.

வழக்கமா ரெண்டு தோசைக்கு மேல திங்க மாட்டேன். ஆனா சண்டைன்னு வந்துட்டா கோபம் தலைக்கேறிடும். அதனால கிட்டத்தட்ட ஏழு தோசைய பிடுங்கி பறிச்சு தின்னா தான் என் கோபம் அடங்கும். இதுல தோசைக்கு பதில் சப்பாத்தி, புட்டு, பூரி, தாளிச்ச கப்பக்கிழங்கு, கோதுமை ரவை எத வேணா போட்டு ஃபில் பண்ணிக்கலாம்.

அப்பவும் வெறும் தோசைய தின்னா நல்லாயிருக்குமா, கிட்சன் உள்ள புகுந்து மிக்சர் டப்பா, சிப்ஸ் டப்பா, ஜாங்கிரி, அதிரசம்னு இருக்குறத எல்லாம் பதம் பாப்பேன். அம்மா ஜாடைலயே தீனிப் பண்டாரம்ன்னு சொல்லுவா. விடக் கூடாதுன்னு பாட்டியோட பொறிக்கடலை, திரிச்சி வச்ச அவல், முறுக்கு, சீவி வச்ச பனங்கிழங்குன்னு உள்ளப் போகும்.

ஆனா தம்பி இதுக்கு நேர் எதிர். என்னை விட பெரிய தீனி பண்டாரம் அவன்தானாலும் கோபம்னு வந்துட்டா தொர ஒரு நாள் ஆனாலும் பச்சை தண்ணி கூட குடிக்க மாட்டாரு. யார் வீட்டுக்கு போனாலும் தம்பி எதையுமே சாப்பிட தயங்கி தயங்கி நிப்பான். நான் தான் தட்டோட எடுத்துட்டு வந்து திங்க ஆரம்பிப்பேன். சரி போனா போகுதுன்னு அவனுக்கும் எதையாவது எடுத்து நீட்டினா பயபக்கி கூச்சத்துல தொடக்கூட செய்யாம நெளிஞ்சுட்டு நிப்பான். அவன பாக்க வச்சு தின்னா பாவம்னு போனா போகுதுன்னு நானும் ஒரு முக்கா தட்ட காலி பண்ணிட்டு மிச்சம் வச்சிடுவேன். ஆனா வீட்டுக்குள்ள மட்டும் வாங்கிட்டு வர்றதெல்லாம் அவன் கிட்ட முதல்ல போயே ஆகணும். அப்புறமா தான் அம்மா அத வாங்கி ரெண்டு பேருக்குமா பங்கு வச்சு தருவா. கொரங்கு, அவன் பங்க எப்பவும் வச்சி வச்சி தின்னு என்னை வெறுப்பேத்துவான். நான் தான் எல்லாத்தையும் ஒரே வாய்ல போடுற ராகமாச்சே, அடுத்த நேரத்துக்கு திங்க ஒண்ணும் மிச்சம் இருக்காது. கொஞ்சம் தாலேன்னு கேட்டா மனசிருந்தா தருவான், இல்லனா மாங்கு மாங்குன்னு அழுது காட்டிக் குடுத்துடுவான்.

ஒரு நாளு இப்படி தான், தம்பி கிட்ட பக்கத்து வீட்டு பொண்ணு சண்டைக்கு போயிருக்கா. விஷயம் வேற ஒண்ணுமில்ல, அவ எங்க வீட்ல பூனை போட்ட குட்டி ஒண்ணை தூக்கிட்டு அவ வீட்டுக்கு போய்ட்டா. இவன் அவங்க வீட்டு வாசல்லயே நின்னு அழுதுட்டு நின்னுருக்கான். பூனைக் குட்டி வேணும்னும் கேக்கல. அந்த பொண்ணு அங்க இருந்தே குட்டிய தூக்கி காட்டி அளவம் (வெவ்வவே) காட்டிட்டு இருக்கா. அப்புறம் மூஞ்சிய பாரு மூஞ்சிய, நல்லா அனுமார் மாதிரி இருக்க, என் முன்னால நிக்காத போன்னு அவன திட்டியும் விட்டுருக்கா. அவனோ பூனைக்குட்டி கிடைக்காத வரைக்கும் அந்த இடத்த விட்டு நகருறதா இல்ல.

விசயம் இன்னொரு பக்கத்து வீட்டு பையன் மூலமா எனக்கு வந்துச்சு. நேரா அவ வீட்டுக்கு போனேன். தம்பிய பாத்தேன். பாத்துட்டே அவ வீட்டுக்குள்ள போனேன். அங்க கிட்சனுக்குள்ள நுழைஞ்சேன். நல்லா கருவாட்டு குழம்பு வாசனை அடிச்சுது. சுத்தி முத்திப் பாத்தேன். புள்ள பூனைக்குட்டிய தூக்கிட்டு வெளில போயிடுச்சு போல.

தம்பி வான்னு அவன் கைய புடிச்சு இழுத்து வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் ரெண்டு பேருமா சேர்ந்து கருவாட்டு குழம்பையும் சோத்தையும் சுத்தமா வழிச்சு சாப்ட்டோம். அடுத்து என்ன இருக்குன்னு பாத்தேன். ஒரு டப்பால கடலை முட்டாய், பொறி உருண்டை எல்லாம் இருந்துச்சு. கேக்கணுமா, டப்பா காலி. இனி இத இப்படியே விடக் கூடாதுன்னு அடுப்பு பக்கத்துல பப்படம் இருந்துச்சு. கூடவே எண்ணெய் சட்டியும். அடுப்ப பத்த வச்சு பப்படத்தையும் பொரிச்சு சாப்ட்டு காலிப் பண்ணினோம்.

அதுக்குள்ள அந்த புள்ள வீட்டுக்குள்ள வந்துடுச்சு. அய்யய்யோ இவங்க எல்லாத்தையும் திங்குறாங்கன்னு கூச்சல் போட்டா. முதல்ல எங்க பூனை குட்டிய குடு, அப்புறம் வெளில போறோம்னு சொன்னேன். ஓடிப் போய் கடவாப்பெட்டி (பனை ஓலைல செய்த பெரிய பெட்டி) வச்சு கமத்தி வச்சிருந்த பூனைக் குட்டிய எடுத்து நீட்டிட்டு இருங்க, அம்மா வரட்டும் சொல்லிக் குடுக்குறேன்னு அழுதா.

அவ அழுறத எல்லாம் யாரு கணக்குல எடுக்குறது, நமக்கு பூனைக் குட்டி தான முக்கியம். தம்பிக்கு அவ அழுறத பாத்து ஒரே சந்தோசம். அன்னிக்கி தான் நம்மள அழ வச்சவங்கள எப்படி அழ வச்சு பழி வாங்கனும்னு தம்பிக்கு க்ளாஸ் எடுத்தேன்.

வீட்டுக்கு வந்தா அப்பா சாப்பிடக் கூப்ட்டாங்க. நல்ல புள்ளைங்களா போய் டைனிங் டேபிள்ல உக்காந்து அம்மா பொரிச்சு தந்த பூரில நால ஒரு வெட்டு வெட்டினோம். சொல்ல மறந்துட்டேனே, அந்த கருவாட்டுக் குழம்பு படு சூப்பரு.



Tuesday 14 July 2015

பேஸ் புக் ஆபத்துகள் - அறியாத ஆபத்துகள்




எப்.பி-ல ஒரு ரௌண்ட்ஸ் வந்தப்போ அந்த ஐடி கண்ணுல பட்டுச்சு. தெரிஞ்ச பொண்ணோட போட்டோ. அவளா இருக்காதே, ஒரு வேளை யாராவது அவ போட்டோ போட்டு பேக் ஐடி க்ரியேட் பண்ணிட்டாங்களோன்னு ஒரு ஷாக்...

காரணம், போன ஆறு மாசம் முன்னாடி தான் அவ ப்ளஸ் டூ முடிச்சா. வீட்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஒரு மொபைல்ல கூட அவளால பேச முடியாது. அவள எனக்கு புக்கும் கையுமா தான் தெரியும். ப்ளஸ் டூ முடிச்சு, இப்போ ஹாஸ்டல்ல தங்கி இஞ்சினியரிங் படிச்சுட்டு இருக்கா.

சரி, யாருன்னு உள்ள போய் பாத்தா, ப்ரோபைல் பிக்சர்ல இருந்து கவர் போட்டோ வரைக்கும் பப்ளிக்ல போட்டு வச்சிருக்கா. அதுவும் கவர் போட்டோல ப்ரெண்ட்ஸ் கூட கூல் ட்ரிங்க்ஸ் குடிக்குற மாதிரி, மண்டை மேல கொம்பு வச்ச மாதிரி, கொரியன் ஸ்டைல்ன்னு ஆள் காட்டி விரல நீட்டுற மாதிரி இப்படி ஏகப்பட்ட போஸ் வேற....

அதுல இருக்குற கமண்ட்ஸ் எல்லாம் நிறைய டபுள் மீனிங் டயலாக்ஸ்... அவளுக்கு புரிஞ்சுதா இல்லையான்னு தெரியல, ஹிஹி-ன்னு சிரிச்சு வச்சிருக்கா. அதுவும் கமன்ட்லயே சாட் மாதிரி காலைல எழுந்ததுல இருந்து தூங்கப் போறது வரைக்கும் விலாவாரியா பேசி வச்சிருக்கா... வீட்டு அட்ரெஸ் முதல் கொண்டு போன் நம்பர் வரைக்கும் ஷேர் பண்ணி வச்சிருக்கா...

சும்மாவே காலம் கெட்டுக்கிடக்கு, இதுல இவ பண்றதெல்லாம் தெரியாம தான் பண்ணுறான்னு நம்புறேன். காரணம் அவள வளர்த்த விதம் தெரிஞ்சதால... நாளைக்கு முதல் வேலையா அவள கண்டிச்சு ஐடிய டி-ஆக்டிவேட் பண்ண சொல்லணும்.

...............................................

எப்.பி-ல எத்தனையோ பக்கங்கள்ல இந்த மாதிரி பொம்பள புள்ளைங்க போட்டோவ தனியாவோ இல்ல ப்ரெண்ட்ஸ் கூட இருக்குற மாதிரியோ உள்ள போட்டோவ போட்டு கண்டமட்டுக்கு கன்னாபின்னான்னு கமண்ட்ஸ் போட்டு வச்சிருக்காங்க. அவங்க கைக்கு எல்லாம் ஈசியா மாட்டுற மாதிரி ஏன் போட்டோஸ் போடணும்? அதுவும் பப்ளிக்ல போடுறதால ஈசியா டவுன்லோட் வேற பண்ணிடுவாங்க...

இந்த மாதிரி தன்னோட போட்டோஸ் போட்டு தன்னை பத்தி தப்பு தப்பா பேசுறாங்கன்னு தெரிஞ்சா தாங்கிக்க முடியுமான்னே தெரியல...

...................................................
நமக்கு தெரியாமலே நம்மள பத்தி அசிங்க அசிங்கமா கனவு காண நம்மள அறியாம நாமளே காரணமாகிடுறோம்....

.....................................................

சுதந்திரமா இருப்போம் தப்பில்ல, ஆனா கொஞ்சம் கவனமாவும் இருக்கலாமே...

Friday 10 July 2015

“பாய்ஸ் பிபோர் ப்ளவேர்ஸ்” (Boys before flowers) - விமர்சனம்
































நேரெதிர் குணம் கொண்ட ரெண்டு ஹை-ப்ரொபைல் நண்பர்கள். அவங்க லைப்ல வர்ற லோ-ப்ரொபைல் பொண்ணு. மூணு பேருக்கும் இடைல வர்ற காதல்... அத மொத்தமா இருபத்தி அஞ்சு மணி நேரம் ரசிக்க வச்சிருக்காங்க.


ரொம்ப குழம்ப வேணாம், இவ எத பத்தி பேசுறான்னு. நெட் கனெக்சன் சரியா கிடைக்காததால மூணு நாளா உக்காந்து  ஒரு கொரியன் சீரியல் இருபத்தியஞ்சி எப்பிசோட் பாத்து முடிச்சிருக்கேன். விறுவிறுப்பு, பயம், சந்தோசம், அழுகை, கலாட்டான்னு  செம இன்ட்ரெஸ்ட்டிங்கா போன முதல் நாலு எப்பிசோட் தான் என்னை தொடர்ந்து அந்த சீரியல பாக்க வச்சுது.


பொதுவா நம்ம இடங்கள்ல முக்கோண காதல்னாலே ரெண்டு பேரு ஹீரோயின/ ஹீரோவ லவ் பண்ணுவாங்க. ஆனா அடுத்த பக்கம் யாராவது ஒருத்தர் மேல தான் காதல் வரும். இங்க ஹீரோயின் தன்னை லவ் பண்ற ரெண்டு பேரையும் காதலிக்குறா. ஆனா  சீக்கிரமே தன்னோட உண்மையான காதல் யார் மேல இருக்குங்குறத புரிஞ்சுக்குறா.

சரி, உங்கள எல்லாம் குழப்புறதுக்கு முன்னாடி கதைய கொஞ்சம் சுருக்கமா சொல்லிடுறேன். என்ன ஒண்ணு, இந்த கேரக்டர்களோட பெயர்கள பாத்தா தான் வாய்லயே நுழைய மாட்டேங்குது.

கொரியாவோட மிக சிறந்த ஸ்கூல்கள்ல ஒண்ணான ஷின்வா ஹை-ஸ்கூல ஹை-ப்ரொபைல் ஆளுங்களோட பசங்க தான் படிக்க முடியும். அந்த ஸ்கூலயே கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிருக்காங்க அங்க படிக்குற நாலு அழகான பணக்கார திமிர்பிடிச்ச பசங்க (F4 டீம்). அதுல “குஜுன் ப்யோ” ஷின்வா க்ரூப்ஸ் ஓனரோட பையன். இன்னொருத்தன் “ஜின் ஹோ” கொரிய முன்னாள் ஜனாதிபதியோட பேரன். மத்த ரெண்டு பசங்களும் கூட நாட்டோட முக்கிய பணக்கார வம்சங்கள் தான்.

இந்த நாலு பசங்களும் சேர்ந்து பண்ற அட்டகாசத்துல ஒரு பையன் பலியாக, மாடில இருந்து  குதிச்சிடுறான். அந்த நேரம் அவனோட யூனிபார்ம்ம டெலிவரி குடுக்க வந்த லாண்டரி கடை ஓனரோட பொண்ணு அவன காப்பாத்திடுறா. விஷயம் கொரியா முழுக்க பரவ, நிலைமைய சமாளிக்க அந்த பொண்ணுக்கு ஷின்வா ஹை-ஸ்கூல்ல ஒரு அட்மிசன்ன போட்டுக் குடுத்து சம்பவத்த அமுக்கிடுறாங்க நிர்வாகத்தார். அப்படி தான் “கும் ஜாண்டி” அந்த நாலு பசங்க லைப்ல என்ட்டர் ஆகுறா.

“ஜாண்டி” பத்தி நம்ம நாட்டாம ஸ்டைல்ல சொல்லனும்னா ஒரு அடம்புடிச்ச கழுத. எதுக்கும் பிடிவாதம், அத்தனை அடம். எப்ப பாத்தாலும் ஓ-ன்னு கத்தி தான் பேசுவா. ஆனா எல்லாத்துலயும்  நேர்மை இருக்கும்.  ஸ்கூலுக்குள்ள நுழைஞ்ச உடனே “குஜூன் ப்யோ” கூட மோதல் ஆரம்பிச்சுடுது. கூடவே “ஜின் ஹோ” கூட ஒரு இனம்புரியாத அன்பு ஏற்படுது.  
பொண்ணுங்க எல்லாருக்கும் F4 டீம் மேல ஒரு க்ரேஸ் இருக்க, “குஜூன் ப்யோ” மூஞ்சிலயே ஐஸ்க்ரீம தேய்ச்சி உன் ட்ரெஸ் கிளீன் பண்ண இவ்வளவு காசு தான் இருக்கும், போய் கிளீன் பண்ணிக்கோ, இல்லனா எங்ககிட்ட அனுப்பு நாங்க கிளீன் பண்ணித் தரோம்ன்னு பணத்தையும் விசிறியடிச்சுட்டு போய்டுறா.

சும்மாவே “குஜூன் ப்யோ” யாரையும் விட்டு வைக்க மாட்டான், அவன் கிட்டயே மோதினா விடுவானா, அவ சரண்டர் ஆகி மன்னிப்பு கேக்குற வரைக்கும் அவள விடக் கூடாதுன்னு F4 டீமோட ரெட் கார்ட் “ஜாண்டி”க்கு குடுக்கப்படுது.

தன் மேல எறியப்படுற முட்டை, மாவு எல்லாத்தையும் “ஜாண்டி” தாங்கிக்குறா. உணவுப் பொருட்களோட மதிப்பு தெரியாத அவங்க மேல இன்னும் கோபப்படுறா. அவள செக்சுவல் அபியூஸ் பண்ண வர்ற பசங்க கிட்ட இருந்து “ஜின் ஹோ” காப்பாத்துறான். கடைசியா அவ கர்ப்பிணின்னும் பல பசங்க கூட சுத்துறவன்னும் கேவலப்படுத்துறான் “குஜுன் ப்யோ”.

ஒவ்வொரு இக்கட்டுலயும் தனக்கு ஆதரவா இருக்குற “ஜின் ஹோ” மேல ஜாண்டிக்கு ஒரு பரிவு வர்ற அதே நேரத்துல, எவ்வளவு தொல்லை பண்ணியும் தன்கிட்ட சரண்டர் ஆகாம செருப்பு காலால மூஞ்சில எட்டி உதச்ச “ஜாண்டி” மேல “குஜுன் ப்யோ”வுக்கு காதல் வருது. “நான் ஆண்கள் கூட தூங்கினதையும், பசங்க கூட கைகோர்த்து சுத்தினதையும் நீ பாத்தியாடா, ஒரு சுத்தமான இன்னமும் முதல் முத்தம் கூட வாங்காத ஒரு பொண்ண பாத்து இப்படி பழி போட உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு”ன்னு கேட்ட அவ குரல் திரும்ப திரும்ப அவனுக்குள்ள எதிரொலிக்குது.

இந்த சீரியலோட ரெண்டாவது எப்பிசோட்ல என் ஓட்டு மொத்தமா “குஜுன் ப்யோ”வுக்கு தான். ஒரு முரடன், ஈவு இரக்கமே இல்லாதவன் காதல் வயப்பட்டா சரியான இளிச்சவாயன் ஆகிடுறான். மூஞ்சில செருப்பு காலால பஞ்ச் வாங்குன நிமிசத்துல இருந்து கேனத்தனமா சிரிச்சுட்டே இருக்கான். அவன் சிரிக்க ஆரம்பிச்ச அந்த நிமிஷம் நமக்கும் சிரிப்பு தொத்திக்குது. உனக்கெல்லாம் காதலிக்க கூட தெரியலடான்னு செல்லமா அவன் மூஞ்சி மேலயே குத்தணும் போல இருந்துச்சு.

அவனோட அந்தஸ்த்த காட்ட “ஜாண்டி”ய தூக்கிட்டு போய் முழு மேக் அப் போட்டு அழகாக்கி அவன் முன்னால கொண்டு வந்து நிக்க வச்சுட்டு “இப்ப சொல்லு, உன் காதல, நான் ஒத்துக்குறேன்”ன்னு அவ கிட்ட சொல்றான். இவரா ப்ரொபோஸ் பண்ண மாட்டாராமாம். ஒரு இடத்துக்கு அவள வர சொல்லிட்டு நாலு மணி கழிச்சு வர்ற அவ கிட்ட கோச்சுக்காம ஒரு குழந்தை மாதிரி குழையுறான். அவ கிட்டயே சொல்லாம ஹாலிடே ட்ரிப்ன்னு பிரெண்ட்ஸ் கூட அவளையும் தூக்கிட்டு பறந்துடுறான். அவளுக்கு சர்ப்ரைஸ் குடுக்கணும்னு அவன் செய்ற ஒவ்வொரு நடவடிக்கையும் பாத்துட்டு “ஜாண்டி” “எனக்கு என்ன தேவைன்னு நீ முடிவு பண்ணாத, எப்பவாவது என் கிட்ட என்ன பிடிக்கும்னு கேட்டுருக்கியாடா”ன்னு எகிறி குதிக்குறா. அவன் பக்கத்துல வந்தாலே ஆஆஆஆ-ன்னு கத்தியே அவன ஓட விடுறா.

அந்த ஹாலிடே ட்ரிப்ல வச்சு “ஜாண்டி”ய லவ் பண்றதா சொல்றான் “ஜின் ஹோ”. “ஜாண்டி” தன்னோட முதல் முத்தத்த “ஜின் ஹோ”கிட்ட வாங்கிக்குறா.  அப்புறம் என்ன, இத “குஜுன் ப்யோ” பாத்துட, பிரச்சனை ஆரம்பிச்சுடுது. இவங்க ரெண்டு பேரையும் அவன் எதிர்க்க, தங்களோட முதல் டேட்டிங்காக லவ் ஜோடி ரெண்டும்  
வெளில போகுது. “ஜாண்டி”யோட தயக்கத்தையும் “குஜுன் ப்யோ”வோட பதற்றத்தையும் பாத்து அவள விட்டுக் குடுக்குறான் “ஜின் ஹோ”.

“ஜாண்டி” “ஜின் ஹோ” மேல தனக்கிருக்குறது வெறும் பிரெண்ட்ஷிப் தான், தான் “குஜுன் ப்யோ”வ தான் விரும்புறத உணர்ந்துக்குறா. லவ் ஜோடி சேர்ந்தாங்களாங்குறது தான் மீதிக் கதை.

இதுல வில்லியா வர்ற “குஜுன் ப்யோ”வோட அம்மாவ பாத்தாலே ஆத்திரம் ஆத்திரமா வருது. இப்படியும் கூட ஒரு லேடி இருப்பாளான்னு திட்டணும் போல இருக்கு. “ஜாண்டி குடும்பத்த சிதைக்குறதோட இல்லாம அவ பிரெண்ட்ஸ் எல்லாரோட குடும்பத்தையும் ஆட்டி வைக்குறா.

காதலிக்குறேன்னு சொன்னதோட சரி, அப்புறம் அவ என்ன பண்றா, ஏது பண்றா, எப்படி கஷ்டப்படுறா எதையும் கண்டுக்காத ஒரு காதலன் “குஜுன் ப்யோ”. அவன் ஏன் இப்படி இருக்கான்னு கேட்டா அவனுக்கே தெரியாது. அவன் வளர்ப்பே அப்படி தான். தனிமை தவிர அவன் வாழ்க்கைல எதையும் அனுபவிச்சது கிடையாது. அவன் வாழ்க்கைல வந்த முதல் பொண்ணு “ஜாண்டி”. அவள எப்படி பாதுகாக்கணும்னு கூட தெரியாத ஒரு பிடிவாத குழந்தை அவன். ஒவ்வொரு கஷ்டத்துலயும் அவ கூட இருக்குற “ஜின் ஹோ”வ பாத்து பொறாமை மட்டும் படத் தெரியும். அத கூட அவனால ஒழுங்கா படத் தெரியாது. அம்மாவுக்கு பயந்த ஒரு பணக்கார கோழை.

“ஜின் ஹோ”. கடைசி வரைக்கும் அவள காதலிச்சுட்டு, அவளுக்காக எதுவும் செய்யும் ஒரு கேரக்டர். அவளுக்காக தன்னோட காதலையே விட்டுக் குடுக்குறான். “குஜுன் ப்யோ”வ “ஜாண்டி” தேடி அலையுறப்ப அவ கூடவே அலையுறான் “ஜின் ஹோ”. அவ அழுற ஒவ்வொரு நிமிசமும் அவளுக்கு ஆறுதலா இருக்கான். இப்படி ஒருத்தன் இருப்பானா, இந்த அளவு ஒரு பொண்ணை காதலிக்க முடியுமான்னு மலைக்க வைக்குற கேரக்டர் “ஜின் ஹோ”வோடது. இந்த சீரியல பாத்துட்டு இருக்குற நமக்கு பேசாம இவங்க ரெண்டு பேரும் மறுபடியும் லவ் பண்ணினா என்னன்னு தோணும். ஆனா எல்லாத்தையும் இழந்துட்டு “குஜுன் ப்யோ”வையும் விட்டுக் குடுத்துட்டு வர்ற “ஜாண்டி” அவன தவிர தன்னோட மனசுல யாருக்குமே இடம் இல்லன்னு சொல்லிடுறா.

ரெண்டாவது எப்பிசோட்ல எனக்கு “குஜுன் ப்யோ” மேல இருந்த க்ரேஸ் கொஞ்சம் கொஞ்சமா போக போக இறங்கியிருந்துச்சு. காதலிக்கவும் தெரியாத, அடுத்தவங்க உணர்ச்சிகள புரிஞ்சுக்கவும் தெரியாத, அம்மாவுக்கு பயந்து வாயே தொறக்காத அவன் எல்லாம் ஏன் காதலிக்கணும்னு தோணிச்சு. தன் காதலிய விட்டுகுடுக்கவும் மாட்டானாம், அவள பாதுகாக்கவும் மாட்டானாம். ஆனா, தன்னோட நிலை என்னன்னு அவன் முழுசா உணர்ந்த அந்த நொடி கண்ணுல தண்ணி வந்துடுச்சு. “என்னை மாதிரியான ஒரு கோழை, ஒரு அரக்க குடும்பத்துல பிறந்தவன் காதலிக்கவே தகுதி இல்லாதவன். எனக்கு அவளுக்கு என்ன தேவை, அவள என்ன பண்ணனும்னு கூட தெரியலயே”ன்னு அவன் கண் கலங்குரப்ப “இல்லடா, ஜாண்டி உனக்கு தான்”னு சீரியல் பாத்த நானே வாய் விட்டு சொல்லிட்டேன்.

காதலிக்காக அவன் எதுவுமே செய்யாத மாதிரி தோணினாலும் அவளுக்காக அவன் பண்ற ஒவ்வொரு விசயமும் கவிதை தான். கடல்ல மாட்டின “ஜாண்டி”ய “ஜின் ஹோ” காப்பாத்துறப்ப அடுத்த தடவ என் காதலிய எவனும் தொடக் கூடாதுன்னு நீச்சல் கத்துக்குறான், பனி மலைல அவ மாட்டிகிட்டப்ப பதறி போய் தூக்கிட்டு வர்றான், அட, எப்ப பாத்தாலும் ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டே இருக்காங்க. ஒரு டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி. அதாவது பரவால, டேட்டிங் போனாலும் சண்டைப் போடுற ஜோடி இந்த ஜோடியா தான் இருக்கும். ஒரு முத்தம் குடுக்க கூட அவ அனுமதி வேணும்னு எதிர்பாக்குறான். அவன் நினச்சா அவள என்ன வேணா பண்ணலாம், ஆனா தள்ளி நின்னே ரசிக்குறான்.

கடைசில “ஜாண்டி”ய பொறுப்பா பாத்துக்க தெரிஞ்ச ஒரே ஆள் “ஜின் ஹோ” தான்னு உணர்ந்துக்குறான். “உன்னைத் தவிர வேற யாராலயும் அவள பாதுகாக்க முடியாது”ன்னு நேரா சொல்றான். அந்த இடத்துல “குஜுன் ப்யோ” ஸ்கோர் பண்ணிட்டான்.


ஒரு சாதாரண குடிமகன்ல இருந்து இந்த பணக்கார பசங்க வாழ்க்கை எப்படி வேறுபட்டு இருக்குங்குறத ஒரு வித்யாசமான கோணத்துல சொல்லியிருக்காங்க. டெய்லி சாப்பிடுற சாப்பாட்டையே இங்க சேர்ந்து உக்காந்து சாப்பிடுறாங்க ஆனா அங்க கிறிஸ்மஸ் நாள்ல கூட அஞ்சு வயசுலயே தனியா உக்காந்து கேக் வெட்ட வேண்டியிருக்கு. அப்புறம் அந்த குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை எப்படி வரும்?


எப்படியோ, ஆரம்ப நாலு எப்பிசோட் குடுத்த அந்த பரபரப்பும் சந்தோசமும் அடுத்தடுத்து வந்த எப்பிசோட்ஸ் குடுக்கலனாலும் கடைசி வரைக்கும் பாக்க வைக்குற சுவாரஸ்யம் அந்த சீரியல் முழுக்க இருக்கு. ஆக  மொத்தம்  என்  மூணு நாளை முழுசா எடுத்துகிடுச்சு இந்த  சீரியல். பாத்தீங்களா, எந்த சீரியல்ன்னு சொல்ல மறந்தே  போயிட்டேன். சீரியல் பேரு “பாய்ஸ் பிபோர் ப்ளவேர்ஸ்” (Boys before flowers).

Saturday 4 July 2015

கேன்சர் என்னும் மரணம் - சந்தித்த மனிதர்கள்



கொஞ்ச நாளாவே எதுவுமே எழுதல. எழுத தோணவும் இல்ல. சும்மா வெட்டியா லேப்டாப்ல படங்கள போட்டு விட்டுட்டு நான் இந்த பக்கமா தூங்கிட்டு இருந்தேன்.

மகேஷ் கூட இன்பாக்ஸ்ல வந்து ஏதாவது எழுதுங்க அக்கான்னு சொன்னான். சரிமான்னு அவன்கிட்ட சொன்னாலும் என்ன எழுத ஏது எழுதன்னு இந்த நிமிஷம் வரைக்கும் தெரியாம தான் இருந்தேன். அப்ப தான் ஒரு போஸ்ட் பாத்தேன். கேன்சரால பாதிக்கப்பட்டு பக்கத்து வீட்ல ஒருத்தங்க இறந்துட்டாங்கன்னு தோழி ஒருத்தங்க போட்ட போஸ்ட் அது. அதுல கமன்ட் போட்ருந்தவங்கள்ல ஒருத்தங்க கேன்சர் பேசியன்ட். அவங்களோட பேச்சு கூட உற்சாகமா தான் இருந்துச்சு. சியர்ஸ்.

என்னைக் கேட்டா மனச எப்பவுமே உற்சாகமா வச்சுகிட்டா நோயோட வீரியம் பாதி இல்ல முழுசாவே குறைஞ்சிடும். இதே வார்த்தைய சொல்லி மறுபடியும் உங்கள போர் அடிக்க விரும்பல. நானும் இன்னிக்கி ஒரு மரணத்த பத்தி எழுதலாம்னு நினைக்குறேன்.

மரணம் – இந்த வார்த்தைய கேட்டாலே மனசு பதறத் தான் செய்யுது. ஆனா நான் இந்த வார்த்தைய நேசிச்சவ. நேசிக்க வச்சவ அம்மா. அதனால தானோ என்னவோ அவளோட மரணம் கூட என்னை அதிகம் பாதிக்கலன்னு சொல்லலாம். இல்லனா அப்படி நான் சொல்ல பழகியிருக்கேன். நான் சந்திச்ச வலியால துடிச்ச அத்தன ஆத்மாவும் வலியில்லாம செத்துப் போகணும்னு ப்ரே பண்ணியிருக்கேன். ஆனா என்னோட அந்த பிரார்த்தனைகள புரட்டிப் போட்டவ காய்த்துங்குற காயத்ரி. அவள பத்தி இன்னொரு நாள் கண்டிப்பா சொல்றேன். இப்ப நாம பாக்கப் போறது வித்யா.

கடைசியா ரெண்டு வருஷம் முன்னாடி நான் ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப சந்திச்சவ தான் வித்யா. கிட்டத்தட்ட ஏழு வயசு இருக்கும். அவ கண்ணு எப்பவும் துறுதுறுன்னு இருக்கும். அப்படி ஒரு புன்னகை முகத்த பாத்துட்டே இருக்கலாம். நான் அவள பாத்தப்பவே அவ தலைமுடி எல்லாம் உதிர்ந்து போயிருந்துது. கீமோ குடுத்துட்டு வீல் செயர்ல வச்சு தள்ளிட்டு வந்தாங்க. என் ரூம் கதவு திறந்து இருந்துச்சு அப்ப. திடீர்னு அதுல இருந்து எழுந்து ஓடினா. அவள தூக்கிட்டு வந்து மறுபடியும் வீல் செயர்ல வச்சு தள்ளிட்டு போய்ட்டாங்க.

அப்பா கிட்ட அது யாருப்பான்னு கேட்டேன். பக்கத்து ரூம் தான். பாவம் புள்ள வாடிப் போய் இருக்கான்னு சொன்னாங்க. ஹாஸ்பிட்டல் ரொம்ப ஸ்ட்ரிக்ட். யாரும் யாரையும் அவ்வளவு சீக்கிரம் பாத்துட முடியாது. எனக்கு ரூமுக்குள்ள இருந்து இருந்து போர் அடிச்சு போயிடுச்சு. மெதுவா நான் போய் பாக்கலாமான்னு அப்பா கிட்ட கேட்டேன். இல்ல, நீ பேசாம படுன்னு அப்பா சொல்லிட்டாங்க.

அது ஒரு தீபாவளி நேரம். ஊர்ல எல்லாரும் கண்டிப்பா தீபாவளி கொண்டாடிட்டு இருப்பாங்க. நான் அம்மாவ நினைச்சுகிட்டேன். நான் தீபாவளி கொண்டாடுறது இல்லனாலும் என்னைப் பாக்க வந்த யாரோ ஒருத்தர் கொண்டு வந்த ஸ்வீட்ஸ் இருந்துச்சு. அப்பாவும் வெளில போயிட்டு வரேன்னு போய்ட்டார். ரூம்ல நான் மட்டும் தான்.

திருட்டுத்தனம் பண்ண இதான் நல்ல வாய்ப்புன்னு அந்த ஸ்வீட் பாக்ஸ் எடுத்துட்டு பக்கத்து ரூம்ல நுழைஞ்சேன். வித்யா ஆரஞ்ச் சுளைகள சாப்ட்டுட்டு இருந்தா. கதவுக்கு பின்னால என்னை பாத்ததும் அச்சா-ன்னு அவ அப்பாவ கூப்ட்டு என்னை கைகாட்டினா. அவருக்கு என்னை ஏற்கனவே தெரியும் போல (பெரியவங்க பேசியிருப்பாங்கன்னு நினைக்குறேன்), வரு-னு உள்ள கூப்பிட்டார்.

ஹாய் குட்டி, உன் பேர் என்னன்னு கேட்டேன். வித்துன்னு சொல்லிட்டு வாய்ல ஆரஞ்ச் சுளையோட முழிச்சா. நான் லட்டு பேக் எடுத்துக் குடுத்து சாப்பிடுவாளான்னு கேட்டேன். அவ ஆசைப்பட்டு கேட்டா குடுத்துடுறேன்னு சொல்லி அவர் வாங்கி வச்சுகிட்டார். அவ்வளவு தான் லேட் ஆகிடுச்சுன்னு நான் வந்துட்டேன்.

அன்னிக்கி ராத்திரி அப்பா வரல, தம்பி தான் வந்தான். எட்டு மணி இருக்கும். லேப் டாப் எடுத்துட்டு வெளில போனான். எனக்கு செம போர். என்னன்னு மெதுவா வந்து எட்டிப் பாத்தா, வித்யா ரூம்ல காய்த்து, தம்பி, இன்னும் ரெண்டு மூணு குட்டிங்க. அப்புறம் வித்யாவோட அம்மா. காய்த்து என்னைப் பாத்ததும் வரு சேச்சின்னு கூப்ட்டா. அன்னிக்கி நாங்க தீபாவளி கொண்டாடின மாதிரி யாரும் கொண்டாடியிருக்க மாட்டாங்க.

அவன் லேப்டாப்ல ஒரு கேம் வச்சிருந்தான். நமக்கு என்ன பட்டாசு வேணுமோ அத கிளிக் பண்ணினா அது விதம் விதமா வெடிச்சு சிதறும். மத்தாப்பு, சரவெடின்னு ஆளாளுக்கு கொளுத்தி தள்ளிட்டாங்க. ஒவ்வொரு பட்டாசு வெடிக்கும் போதும் ஹை-ன்னு கைத்தட்டி சந்தோசித்த அந்த சின்ன மொட்டுகள நான் பாத்துட்டே இருந்தேன். இந்த புள்ளைங்க தான் எவ்வளவு அழகு. எப்படி கள்ளம்கபடமே இல்லாம சிரிக்குதுங்க. அப்ப கூட நான் இந்த புள்ளைங்க முடிவு என்னவா வேணா இருக்கட்டும் ஆனா வலியோட மட்டும் சாவு வந்துடக் கூடாதுன்னு தான் வேண்டிகிட்டேன்.

நாலு நாள் அப்புறம் வித்யாவுக்கு பிறந்தநாள் வந்துச்சு. ஹாஸ்பிட்டல்ல அவ பிறந்தநாளை கொண்டாட தம்பி தான் பெர்மிசன் வாங்கிட்டு வந்தான். சும்மா சொல்லக் கூடாது, அந்த வார்ட்ல இருந்த எல்லாருமே அவங்கவங்க பங்குக்கு பலூன், பேப்பர் டெகரேசன்ன்னு பண்ணி அசத்திட்டாங்க. ஏழு மெழுகுவர்த்தி ஏத்தி வச்சு ஹாப்பி பர்த்டே பாட்டு பாட வித்யா பிறந்தநாள் கேக் வெட்டினா. அன்னிக்கி முழுக்க அவ சந்தோசமா இருந்தா. அவள பாக்க வந்தவங்க கழுத்த கட்டி முத்தம் குடுத்தா. ராத்திரி ஆனதும் அப்படியே தூக்கம் சொல்லிட்டு வர ஆரம்பிச்சதும் நாங்களும் ரூமுக்கு வந்துட்டோம்.

அடுத்த நாள் காலைல அப்பாவும் தம்பியும் பேசிட்டு இருந்தாங்க. அப்பா முகம் அழுத மாதிரி இருந்துச்சு. தம்பியும் சோகமா இருந்தான். என்ன விசயம்னு கேட்டேன். வித்யா ராத்திரியே செத்துட்டதா அப்பா சொன்னாங்க. மனசுக்குள்ள ஒரு பெரிய பாரம் தூக்கி வச்ச மாதிரி இருந்துச்சு. மொத்தமே நாலு நாள் பாத்த பொண்ணு. நான் அதிகம் பழகவும் இல்ல. ஆனா திடீர்னு அவள இனி பாக்கவே முடியாதுன்னு தெரிஞ்சா?

வித்யாவுக்கு ஒரு தங்கச்சி உண்டு. அந்த பொண்ணு நூறு வயசு வாழட்டும்னு நினைச்சுகிட்டே வித்யாவோட அந்த வலியில்லா மரணத்துக்காக கடவுளுக்கு நன்றி சொன்னேன்.

அதெப்படி அந்த பொண்ணோட மரணம் உன்னை பாதிக்கவே இல்லையான்னு கேட்டா எந்த மரணமும் என்னை அந்த நேரம் சலனப்படுத்தலன்னு தான் சொல்லுவேன். அந்த உயிர் கடைசி நிமிசத்துல சந்தோசமா இருந்தது போதும்னு நினச்சேன். அது நானாவே இருந்தாலும் அப்படித் தான் நினைச்சிருப்பேன். என்னோட அப்போதைய மனநிலை அப்படி தான் இருந்துச்சு.

இதே மாதிரியான ஒரு சூழ்நிலை இதுக்கு முன்னாடியும் நான் பாத்துருக்கேன். ஆனா நேர்ல இல்ல. பேஸ்புக்ல. பதிமூணு வயசு ஆன சிவசங்கர்ங்குற பையன். அவனுக்கு ரெத்த புற்றுநோய்ன்னு கேள்விப் பட்டதும் அவனுக்காக இங்க நிறைய பேர் பிரார்த்தனை செய்தாங்க. பண உதவி, ரெத்தம் எல்லாம் குடுத்து அவன் பிழைச்சு வரணும்னு வேண்டிகிட்டாங்க. அவனுக்கு ரெண்டு ரவுண்டு ஹீமோ கொடுக்கப்பட்டு ட்ரீட்மென்ட்ல இருந்தப்ப நானும் அவனுக்காக வேண்டிகிட்டு இருந்தேன். ஒவ்வொரு நாளும் அவனோட நிலைமை என்னன்னு கேட்டுத் தெரிஞ்சுப்பேன்.

அவனோட பிறந்தநாளையும் ஒரு பார்க்ல வச்சு எல்லாரும் கொண்டாடினாங்க. அந்த பையன் தான் எவ்வளவு சந்தோசமா இருந்தான். எனக்கு அவன பாக்குறப்ப எல்லாம் என்னையே பாத்த உணர்வு. ஆனாலும் ஒரு நாலு நாள் கூட அந்த சந்தோசம் நிலைக்கல. ஒரு நாள் ராத்திரி தூக்கத்துலயே அவன் உயிர் போயிடுச்சு.

அவனோட ட்ரீட்மென்ட்க்கு குடுத்த காச கூட அவன் அம்மா வேற யாருக்காவது உதவுங்கன்னு திருப்பிக் குடுத்துட்டதா கேள்விப் பட்டேன். ஒரே புள்ளைய இழந்துட்டு நின்ன அந்த தாய்க்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?

ஆனா எல்லா சோகமும் அப்படியே முடிஞ்சி போறதில்ல. கொஞ்ச நாள்லயே சிவசங்கரோட அம்மா அத்தனை வயசுக்கப்புறம் மறுபடியும் கருத்தரிச்சு ரெட்டைப் புள்ளைங்கள பெத்தெடுத்தாங்க. இந்த விசயத்த கேள்விப் பட்ட அன்னிக்கி நான் அவ்வளவு சந்தோசப்பட்டேன்.



வாழுறதுலயும் ஒரு அர்த்தம் இருக்கத் தான் செய்யுது. மரணங்கள பாத்தும் கூட.