Thursday 31 October 2013

உன்னை பற்றியழ வந்துவிடு...

காற்றை கிழித்து
பெருங்கூச்சலாய் புறப்படுகிறது
உள்ளிருந்து ஓர் ஆங்காரம்...

பாறைகள் தாவி,
உச்சி வெயில் காய்கிறது மனம்...

இதுவரை யாதென்றே அறிந்திராத
இருவருக்குமான இடைவெளிகள்,
இன்று திசை திருப்பி கொள்கின்றன...

மோதிய வேகத்தில்
உடைந்து சிதறுகிறது
திருஷ்டியென எறியப்பட்ட பூசணிக்காய்...
கூடவே துடித்தழுகிறது பிய்த்தெறியப்பட்ட இதயம்...

இதுவரையில் உன்னோடான பயணத்தில்-
தாய்க் கண்டு பாய்ந்தோடும்
சிசுவின் பரவசம் எப்பொழுதும்
உன்னிடத்தில் நான் அடைந்ததுண்டு...

உன் தோள் தாவி,
கழுத்தில் நான் பதிக்கும் முத்தம்
காமத்தில் சாயலை கண்டதேயில்லை...

நீ போகும் திசையெல்லாம்
வளையோசை குலுங்க
குதித்தோடி பழகியவள் நான்...

என் பாதக்கொலுசுகளின்
சிணுங்கள் ஒலி மீறி எதிரொலிக்கும்
உன்னை கெஞ்சும் என் கொஞ்சல் மொழி...

முறைக்கும் உன் கண்கள் கண்டு
நகைக்கவும் நான் தயங்கியதில்லை...
அடுத்த கணம் வலிய பற்றியிழுத்து
அணைக்கப்போவது உன் கரங்கள் தானே...

ஆனாலும்- இன்றென்னை
வெறுத்திட்டதாய் வார்த்தை கனலை
விசிறி எறிந்தாய்...
அவை என் குருதிக்குள் புகுந்தென்னை
வேக வைக்கும் என்றறிந்தும்...

என் நரம்புக்குள் ஏதோ
ஊர்ந்துச் செல்கிறது...
இயலாமை- கட்டுப்பாடு மீறி
வெளிக் குதித்தோடுகிறது...

என் இருகரங்களும்
உன் தலைமயிர் தேடித் தவிக்கின்றன...
நீயின்றி எனக்கு
பைத்தியம் பிடித்ததாய் பற்றியழ வேண்டும்...
அதற்காகவாவது உன் தலை கொடுத்து விட்டுப் போ...

Wednesday 30 October 2013

பெண்ணீயத்துக்கு ஆண்பால் என்ன?எல்லோரும் பெண்ணீயம் பெண்ணீயம்னு என்னவோ சொல்லிட்டு இருக்காங்க, இதெல்லாம் கேட்டுட்டு நாம சும்மா இருந்தா இந்த சமூகம் நம்மள தப்பா நினைக்காதா?

சமூகம் என்ன நினச்சா நமக்கென்ன, நாம நம்ம வழியே போவோம்னு தான் நேத்து காலைல வரைக்கும் நினச்சுட்டு இருந்தேன். வெரி குட், அப்போ அது வரைக்கும் நல்லா தானே இருந்துருக்க, திடீர்னு எப்படி இப்படின்னு கேக்குறவங்களுக்காக நான் இத சொல்ல போறேன்.

எனக்கெல்லாம் விடியுதோ விடியலயோ, கண்ண தொறந்த உடனே, கை ஆட்டோமேட்டிக்கா மொபைல் எடுத்து பேஸ் புக்க தான் பாக்கும். இந்த வியாதிக்கு மருந்தே கிடையாதுன்னு எங்க பேமிலி டாக்டர் வேற கைய விரிச்சுட்டார். அவர விடுங்க, பாவம், அவரே அந்த வியாதில தான் இருக்காராம். நாம விசயத்துக்கு வருவோம். காலைல அப்படி பேஸ் புக் ஓப்பன் பண்ண ட்ரை பண்ணினா, அது திஸ் அக்கௌன்ட் ஈஸ் கரண்ட்லி நாட் அவைலபிள்னு வருது. எப்படி இருந்துருக்கும் எனக்கு. நீங்களே கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

அப்படியே பீலிங்க்ஸ்ல கொஞ்ச நேரம் இடிஞ்சி போய் இருந்தாலும் கடமை நமக்கு முக்கியம் இல்லையா? அதனால அரக்க பறக்க அடுப்புல இட்லி வேக வச்சு, நேத்தே வச்ச சாம்பார சூடு பண்ணிட்டு, அப்பாவுக்கு ரெண்டு பிரட் டோஸ்ட் பண்ணி குடுத்துட்டு, சட சடன்னு கிளம்பி காலேஜ் வந்தேன்.

காலேஜ் வாசல மிதிக்குற வர நல்லா தான் இருந்தேன். திடீர்னு ஒருத்தன் எங்க இருந்து தான் வந்தானோ, அப்படியே என்னை க்ராஸ் பண்ணி போறான். ஹையையோ, அவன் இடுப்புல இருந்து பேன்ட் நழுவி கீழ விழுதோன்னு ஒரு நிமிஷம் பதறிட்டேன். என்னோட காலேஜ் ஸ்டுடென்ட் தான். வயசு எப்படியும் இருபதுக்குள்ள தான் இருக்கும். படுபாவி, இப்படி போறானேன்னு தலைய உலுப்பிட்டு சுயநினைவுக்கு வந்தப்போ தான் இதெல்லாம் ஏற்கனவே பாக்குறது தானே, இப்போ மட்டும் ஏன் ஷாக் ஆகுறன்னு என் மனசாட்சி என்கிட்டயே கேள்வி கேட்டுச்சு.

ஆமாங்க, பொண்ணுங்களோட டிரஸ் விசயத்த பத்தி பேச நிறைய பேர் இருக்காங்க, இந்த பசங்களோட டிரஸ் சென்ஸ் பத்தி யாராவது ஒருத்தங்க சொல்ல வேண்டாமா?

எனக்கு தெரிஞ்சு பசங்க இந்த மாதிரி பேன்ட் போடுறது ஒரு வருசமா தான் நடக்குது. முதல் முதல்ல ஒரு பையன் அப்படி டிரஸ் போட்டுட்டு வந்தப்போ எங்க யூனிவேர்சிட்டி ஸ்டாப் ஒருத்தங்க அவன கூப்ட்டு கண்டிச்சாங்க. அதுக்கு அவன், இது தான் மேடம் இப்போ பேசன், நான் இப்படி தான் பேன்ட் தச்சிருக்கேன்னு சொல்லிட்டு போயிட்டான். அந்த பையன பாத்த பொம்பள புள்ளைங்க எல்லாம் அவன பரிதாபமா பாத்துட்டு, ஒண்ணுமே சொல்ல முடியாம தள்ளி போய், பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி கொல்லுனு சிரிச்சப்போ எல்லாம் நான் கடுப்புல அவன நாலு அறை விடலாமான்னு யோசிச்சுருக்கேன். அப்புறமா இன்னும் நிறைய பசங்க அத பாலோ பண்ண, அதெல்லாம் சகஜம்ங்குற லெவெலுக்கு மாறி போச்சு. நான் அப்புறம் அந்த மாதிரி பசங்கள பாக்கும் போதெல்லாம் வித்யாசமா தோணுறதில்ல. நேத்து காலைல தான் மறுபடியும், பையன் டிரஸ் கழண்டுடுமோனு பயந்துட்டேன்.

அப்புறமா, மதியம் சாப்ட்டுட்டு கொஞ்சம் வெளில வேடிக்க பாத்துட்டு இருந்தேன். அதே பையன் கிராஸ் பண்ணி போறான். டாய்... கொஞ்சம் இங்க வான்னு கூப்ட்டேன். வந்தான். ஏண்டா, என்னடா டிரஸ் போட்டுருக்க? வீட்ல அப்பா நல்ல டிரஸ் எடுத்து தரலயான்னு கேட்டேன். உடனே அவன், மேடம், இது பேசன் மேடம், இதுக்காக நாங்க பண்ற தியாகம் எல்லாம் உங்களுக்கு தெரியாதுன்னு ஒரு பில்ட்-அப் வேற விட்டான்.

எனக்கு ஒரே ஆச்சர்யம், என்னது, தியாகமா? டிரஸ்ச தவிர வேற என்னத்தடா நீ தியாகம் பண்ணினன்னு கேட்டேன். அவன் சொன்னத கேட்டு எனக்கே பரிதாபமா போச்சு...

அவன் அப்படி என்ன சொன்னான் தெரியுமா? இந்த பேன்ட் போட ரொம்ப கஷ்டமாம். பாக்குறதுக்கு கீழ விழுற மாதிரியே இருக்குற அத கீழ விழாம இடுப்புக்கு கீழ டைட்டா பெல்ட் வச்சு கட்டுவாங்களாம். இதுனால முதுகு வலி, இடுப்பு வலின்னு வலி பின்னிடுமாம். ஒரு மாதிரி ஒரு அழுத்தத்துலயே எப்பவும் இருக்குறதோட மட்டுமில்லாம எங்க இது கழண்டு விழுந்து மானத்த வாங்கிடுமோன்னு பயத்துலயே தான் இருப்பானாம்.

அடப்பாவி, இப்படி எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு, உடல்நிலை, மனநிலைன்னு உன்னோட வருங்காலத்தியே சீரழிச்சுட்டு இப்படி சொல்றியே, உன் அம்மா அப்பாவ கொஞ்சம் நினச்சு பாருடான்னு சத்தம் போட்டுட்டு போ போன்னு விரட்டி விட்டுட்டேன்.

இத பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது, ஆனாலும் அந்த மாதிரி பேன்ட் போடுறது பசங்க உடல்நிலைய பாதிக்கும்னு மட்டும் அவன் மூலமா தெரிஞ்சுகிட்டேன்.

இதுக்கெல்லாம் இந்த ஆணீயவாதிகள் என்ன பதில் சொல்ல போறாங்க?

Tuesday 29 October 2013

உன்னைத்தேடி உன்னோடொரு பயணம்...!

கொட்டும் அருவியாய் சிலிர்க்கும் உன் கவிதைகளை
ஏனோ காணவே முடிவதில்லை இப்பொழுதெல்லாம்...!

உன் கவிதை கண்டு பொங்கும் மனமோ
ஏதோ ஒரு வெறுமை சூழ்ந்து
கணினித் திரையை வெறிக்கத்துவங்க...

கைகள் அனிச்சை செயலாய்
உன் வலைப்பூ முகவரியை தேடியலைந்ததால்
அங்கே பதுங்கி இருக்கும்
உன் பொக்கிச சாலைகள்
ஒவ்வொன்றாய் திறக்கத் துவங்கின...!

கொல்லுஞ்சொல் விடுத்து
குரும்புன்னகை அணிந்து
எள்ளுஞ்சொல்லையும் இமயமாய் பார்க்கும்
எழுத்துக்குழந்தையாய் அங்கே நீ சிரித்து நிற்கிறாய்...!

உனக்காக நான் செதுக்கி வைத்த
பச்சை புற்தரையில்
பிரத்யேகமாய் நீ அமைத்த “நண்பர்களின் கூடார(ம்)”த்தில்
உன் எண்ணத்தேடல்களும் சிந்தனைசிதறல்களும்
பொன்வண்ண மலர்களாய் கொட்டிக்கிடக்கின்றன...!

அலைபாயும் கண்களை
கட்டிபோட மனமில்லாமல்
உன் கவிப்பூக்கள்
ஒவ்வொன்றாய் தாண்டிச்செல்கிறேன்...!
ஒவ்வொன்றை கடக்கும் போதும்
ஒவ்வொரு விநோதங்கள்...!

ஒற்றை காளானாய் தனித்திருந்தும்
என்றாவது ஓர் நாள்
மண் கிளறி வேர்பதிக்கத் துடிக்கும் நீ...

மனதிற்குள் பாடும் மனங்கொத்தியாகவும்
தோல்விக்காயங்களை சொருகிய சரங்கொத்தியாகவும்
உன்னை அடையாளப்படுத்தி கொள்கிறாய்...!

அன்பை தேடி தேடி
கிறுக்கும் உன் பேனா ஏனோ
அன்னையின் அன்பை மட்டும்
எழுதுவதில்லை...!

கடலோரக்குருவியையும் கார்ல்மார்க்ஸ்-சையும்
முழுதாய் சிலாகிக்கும் நீ
எனக்காக விட்டுச்சென்ற கவிதையொன்றை
கண்கள் விரிய ஆவலாய் பார்க்கிறேன் நான்...!

இறுகிக்கிடந்த உன் மனப்பாறையில்
நம் நட்பு இதமான தூறலாய்
அங்கே சாரலடித்துக்கொண்டிருந்தது கண்டு
அந்த நாளின் நிகழ்வுக்குள்
குடையில்லாமல் சற்று நனைந்துக்கொள்கிறேன் நான்...!

யாருமே எழுதிடா கவிதையொன்றை
எழுதிவிட்டு போவென அடம்பிடித்து,
என்றோ உன் மனம்கவர்ந்து சென்ற காதலியின்
வாசத்தை ஆங்காங்கே நகர்ந்துக்கொண்டே நுகர்கிறேன்-
கொஞ்சம் பொறாமை கலந்த பெருமூச்சோடு...!

இங்கு மட்டுமே முற்றுபட்டு விட்டதா என் தேடல்?
இல்லையில்லை, பாதை சற்றே மாற்றி
வலைப்பக்கம் உன் கவிதைகளை தேடினால்
கண்ணுக்குள் வந்து கவிமழை பொழிகிறான்
கவிதைக்காரன்...!

சற்றே திகைத்து நிற்கிறேன்...
உன் கவிதைகளுக்குள் மூழ்கி விட்டால்
உறங்க நினைக்கும் முன்
என் இரவும் விடிந்து தான் போகுமோ?

பெயர் அறியா குழந்தைக்கும் கவிபாடி,
கொங்கு மண்டலத்தின் அழகினை
பொங்கும் தமிழில் சலிப்பே இல்லாமல்
பாமரனையும் ரசிக்க வைப்பதில் நீ கில்லாடி...!

மணநாள் காணும் தோழியாகட்டும்,
தலைவனை காணா தலைவியாகட்டும்
உன் கவிக்குள் வீழ்ந்துவிட்டால்
தன்னையே தலைவியாக்கி
மொத்த காதலையும் தத்தம் இணைகள் மேல்
கொட்டித் தீர்த்து விடுகின்றனர்...!

இனியும் பொறுமை எனக்கில்லையென
சற்றும் தாமதிக்காது உன்னிடமே கேட்டு விட்டேன்...
எப்படி உன்னால் கூடு விட்டு கூடு பாய்ந்து
சராமாரியாய் கவிதை சரம் தொடுக்க முடிகிறதென்று...!

அதுவென்னவோ கவிபடைக்க
கருத்துக்களை தேடும் பொழுதெல்லாம்
தாயாகவும் தனையனாகவும்,
தோழியாகவும் நிலவாகவும்,
அத்வைதமாய் உருமாறி
கவிதை ஊற்றுக்குள் மூழ்கிப் போகிறேன் என்கிறாய்...!

நீ தான் சோழநாட்டு கம்பனா என்கிறேன்
இல்லையில்லை,
பாண்டிய நாட்டுப் புலவன் புகழேந்தி என்கிறாய்…!

முண்டாசு கவிஞனின் மூத்த மகன் நீயோ என்கிறேன்...
இல்லவேயில்லை
எட்டயபுரத்துக்காரனின் இளையமகன் நான் என்கிறாய்...
சற்றும் கர்வம் குறையாமல்...!

வந்ததுதான் வந்தாய், உனக்கு பிடித்த கவிதையொன்றை
சொல்லிவிட்டு போ என்கிறேன்…
இன்னமும் எழுதா கவிதையே
எனக்கு பிடித்ததென்று சொல்லிவிட்டு சிரிக்கிறாய்...!

அட திமிர் பிடித்த தோழா...!
உன்னால் கிறுக்கப்பட்ட கவிதைகள்
என் மனமெங்கும் இறைந்துகிடக்கின்றன...
உடனடியாய் வெள்ளையடிக்க வந்துவிடு...
நாளை என் வீட்டில் பொங்கல்...!
இது ஒரு மறுப்பதிவு...... பொங்கலுக்கு எழுதினது, தீபாவளிக்கு நேரத்துல மறுபடியும் ரிலீஸ்

Monday 28 October 2013

அம்மாவோடு ஒரு நாள்...

26/10/2013- அம்மா நியாபகமாவே இருந்தேனா, எப்படியும் ராத்திரி சரியா தூங்க மாட்டேன்னு தான் நினச்சுட்டு இருந்தேன், ஆனா என்னை மீறி, சரியான தூக்கம். அதுக்கெல்லாம் காரணம் மனசு ரொம்ப லேசாகிடுச்சுன்னு சொல்லவும் வேணுமா?

மனசு லேசானதுக்கு காரணம் இது தாங்க...

அசந்து தூங்கிட்டு இருந்த என்னை காலைல எழுப்புறதுக்கு அப்பா தயங்கிகிட்டே இருந்துருக்காங்க. அப்புறம் ஆறரை மணிக்கு நானே படக்னு எழுந்து உக்காந்துகிட்டேன். அம்மாவ பாக்க போறோம்னு நினச்ச உடனே அப்படியே உதட்டுல தானா சிரிப்பு வருது. தலையணைய கட்டிப்புடிச்சுட்டு கொஞ்ச நேரம் அப்படியே உக்காந்துட்டு இருந்தேன்.

அப்புறமா, போன் பண்ண வேண்டியவங்களுக்கு போன் பண்ணி, நான் அம்மாவ பாக்க போறேன்னு சந்தோசமா சொல்லிட்டு, கடகடன்னு கிளம்பி அப்பவும் கூட இந்த எப்.பிய விடாம ஒரு காலை வணக்கத்த போட்டுட்டு, வெளி வாசலுக்கு போனா, தம்பி அல்ரெடி கார்ல உக்காந்துட்டு இருக்கான். இது சரி வராதுன்னு அவன் முன்னாடி போய் நின்னு சாவி குடு, நான் ஓட்டுறேன்னு தைரியமா கேட்டுட்டேன்.

அடடே, ஒரே அதிசயம், ஒரு வார்த்த கூட சொல்லாம சாவிய கைல குடுத்துட்டு டிரைவிங் சீட்ல இருந்து இறங்கி மறுபக்கமா வந்து உக்காந்துகிட்டான். அப்புறம், அப்பா, மாமாக்கள் குடும்பம்னு எல்லோரும் அவங்க அவங்க வண்டியில வர ஆரம்பிச்சாங்க. இந்த பாட்டி என்னதான் பண்ணிட்டு இருப்பாங்களோ, அவங்கள கிளப்புரதுக்கே பத்து பேர் வேணும். ஒரு வழியா அப்பாவே அவங்க அத்தைய குண்டுக்கட்டா கடகடன்னு இழுத்துட்டு வந்து பின் சீட்ல வச்சு அடச்சு, அவங்களும் ஏறி உக்காந்துகிட்டாங்க.

ஒரு நிமிஷம் கண்ண மூடி மூச்சை நல்லா இழுத்து விட்டுட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணி, ரிவர்ஸ் கியர் போட்டு வெளில எடுத்து, அப்புறம் பஸ்ட் கியர்ல வண்டிய மூவ் பண்ண ஆரம்பிச்சேன். அட, காத்து கூட அப்படியே என்னை தழுவிக்குற மாதிரி ஒரு பீலிங்க்ஸ். மனசு முழுக்க இதுதான்னு சொல்ல முடியாத ஒரு சந்தோசம்.

அம்மானா, அம்மா ஆக்சிடென்ட்டலா தவறி மூணு வருஷம் ஆச்சு. அம்மாவோட நியாபகமா ஒரு கட்டிடம் இருக்குறத விட ஒரு உயிர் இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு, ஒரு மாங்கன்ற நட்டு வச்சுட்டோம். அப்புறமா ஒரு பஞ்சாயத்துல வீட்டோட சேர்த்து அம்மா இருக்குற இடத்தையும் அப்பா சித்தப்பாவுக்கு விட்டுக் குடுத்துட்டாங்க. அங்க இருந்து வந்து ஒரு வருஷம் ஆகப் போகுது. இப்போ மறுபடியும் அம்மாவ பாக்கப் போறோம். மூணு வருஷம் ஆகிடுச்சுல, அம்மா பெருசாகிட்டாங்க இப்போ.

பொதுவா நான் வண்டி ஓட்டும் போதோ, இல்ல, பைக் பின்னாடி உக்காந்துட்டு போகும் போதோ பராக்கு பாக்கவே மாட்டேன். அதுலயும் கார் ஓட்டும் போது மூச்... சரியா கான்சன்ட்ரேசன் பண்ண முடியாது பராக்கு பாத்தா. ஆனா இப்போ என்னவோ, பச்சையா தெரியுற வயல் வெளிகள், ரோட்டோரமா இருக்குற தென்னை மரங்கள்னு எல்லாத்தையும் பராக்கு பாக்கணும் போலயே மனசு அலையுது. சரி, பக்கத்துல தான் ஒருத்தன் உக்காந்துட்டு இருக்கானே, அவன் கவனிச்சுப்பான்னு நான் பாட்டுக்கு வெளில பாக்க ஆரம்பிச்சுட்டேன்.

இயற்கை எவ்வளவு அழகு... ரசிச்சு ரசிச்சு பாத்துட்டே இருந்தா நமக்கு கிடச்சிருக்குற இந்த ஆயுசு பத்தவே பத்தாது. வழியில வர்ற ஆடு, மாடு, காக்கா, எலெக்ட்ரிக் வொயர் மேல உக்காந்துட்டு இருக்குற குருவி எல்லாமே என்னையே பாக்குற மாதிரி இருந்துச்சு. ஒரு வயல் ஓரமா வந்துட்டு இருந்தப்போ ஒரு மீன் கொத்தி கூட கழுத்த சரிச்சு என்னையே பாத்துதுனா பாருங்களேன்.

அப்புறம் கார சிட்டி லெவலுக்குள்ள நுழைச்சாச்சு. இனி பராக்கு பாத்தா யார் மேலயாவது இடிக்க வேண்டியது தான். பொறுமை பொறுமைன்னு எனக்குள்ளயே கொஞ்சமா சத்தம் வராத மாதிரி சொல்லிக்கிட்டேன். அட, கார்ல போறவங்க, பஸ்ல போறவங்க, பைக்ல போறவங்க, எல்லோரும் என்னயவே பாக்குறாங்களோ? அச்சோ, அங்க பாருங்க, அந்த சைக்கிள்ல யாரோ என்னை பாத்து சிரிச்சுகிட்டே கடந்து போறாங்க. அவ்வளவு மெதுவா வண்டி ஓட்டுறேன். காரணம் ட்ராபிக்.

ஒரு வழியா மறுபடியும் ஊருக்குள்ள நுழைஞ்சு நான் வழக்கமா வருஷ கணக்குல போன அந்த பாதைல கார திருப்பினப்போ மனசு கொஞ்சம் அன் ஈசியா பீல் பண்ணிச்சு. இங்க இனிமேல் வரக்கூடாதுன்னு தான் மனசு அடிக்கடி சொல்லும். ஆனா அம்மா இருக்காளே. இந்த நினைப்பு வந்த உடனே மறுபடியும் சந்தோசம். கம்பவுண்ட்குள்ள நுழைஞ்சு, வீட்டு முன்னாடி கொண்டு போய் கார நிறுத்தியாச்சு.

மாமா ஏற்கனவே அங்க வந்திருந்தாங்க. அவங்க தான் வந்து என்னோட கார் கதவ திறந்து விட்டாங்க. நான் வேற யாரையும் திரும்பி பாக்கல, வீட்டுக்குள்ளயும் போகல, போக விருப்பம் இல்ல. என்னோட ரூம் இப்போ எப்படி இருக்குன்னு தெரியாது, அம்மாவோட பெட் ரூமும் இப்போ எப்படி இருக்குன்னு தெரியாது, அது எனக்கு தெரிஞ்ச ரூமாவே இருந்துட்டு போகட்டுமே. அதனால சைடுல திரும்பி அப்பா வாத்துக்களுக்காக கட்டி வச்சிருந்த நீச்சல் குளத்த பாத்தேன். தண்ணியே இல்ல. அப்படினா கண்டிப்பா மீனும் இல்ல.

இதுவரைக்கும் அப்பா கிட்ட அந்த மீன்கள் எல்லாம் எங்கன்னு நான் கேட்டதே இல்ல. எல்லா மீன்களுமே அப்பா பாத்து பாத்து வளத்துருப்பாங்க. அதனால கோல்ட் பிஷ், ஷார்க் எல்லாமே பெருசு பெருசா இருக்கும். பிடிச்சு கைல வச்சு விளையாடுற அளவு பெருசு. ஆனா நான் ஹாஸ்பிடல்ல இருந்து நேரே புது வீட்டுக்கு தானே போனேன், அங்க போய் மீன் பத்தி விசாரிக்கவும் இல்ல, அத எல்லாம் போட்டு வைக்குற அளவு தொட்டியும் அப்போ அங்க இல்ல. இனி தான் அப்பாகிட்ட கேக்கணும், அந்த மீன்களுக்கு எல்லாம் என்னாச்சுன்னு.

அப்படியே நடந்து போய்ட்டே இருந்தா, புறா கூடு, முயல் கூடு, இதுல எதுலயுமே ஒண்ணுமில்லாம வெறிச்சோடி கிடக்கு. வாழ்க்கைய ரசிக்கவும் தெரியாம, ரசிக்குரவங்கள ரசிக்கவும் விடாம அப்படி என்ன பிடிவாதம் வேண்டியிருக்குன்னு சித்தப்பா மேல கொஞ்சம் கோபம் வந்துச்சு. ஆனா ரசனை இல்லாம அவங்கள நினச்சு, வாழ்க்கைய வாழத் தெரியலன்னு ஒரு பரிதாபம் பெருமூச்சா வந்துச்சு.

அப்படியே வீட்டுக்கு பின்னாடி போய், தென்னந்தோப்பு வழியா கொஞ்ச தூரம் நடந்தா ஹை....... அம்மா...... மனசு வேகமா ஓடி போய் கட்டிப்புடிச்சுசாச்சு. ஆனா காலு, ஒரு அடி கூட நகர மாட்டேன்னு அடம் பிடிச்சு செயலிழக்க ஆரம்பிச்சுடுச்சு. அப்பாவும் தம்பியும் இத எதிர்ப்பார்த்தாங்களோ என்னவோ, ஓடி வந்து தாங்கிகிட்டாங்க. அப்படியே கண்ணெல்லாம் கலங்கி கீழ உக்காந்துகிட்டேன்.

அதுக்குள்ள மாமா பசங்க ஓடி வராங்க, அண்ணி, அங்க போய் உக்காரலாம்ன்னு கூப்டுறாங்க. ரெண்டு பேர் கைய புடிச்சு இழுக்க, இல்ல, என்னால நடக்க முடியலன்னு சொல்றேன். ஏன், காலுக்கு என்னாச்சுன்னு ஆள் ஆளுக்கு கேள்வி மேல கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்பா, விடுங்க, அவளே சரியாகி வருவா, நீங்க போங்கன்னு சொன்னாலும் இவங்க கேக்கல. ஆள் ஆளுக்கு பிடிங்க அண்ணியன்னு தோள் குடுத்து என்னை அம்மா கிட்ட தூக்கிட்டே போய்ட்டாங்க. அப்புறம், ஹே....ன்னு கூச்சல் போட்டுட்டே ஓடிப் போய்ட்டாங்க.

இதுல ஒருத்தி, இப்போ தான் டென்த் படிக்குறா, ரொம்பவே கவலையா என் முகத்தையே பாக்குறா. ஒண்ணுமில்லடா, கொஞ்சம் எமோசன்... அவ்வளவு தான்னு சொன்னேன், அப்போ சரின்னு பசங்க கூட விளையாட ஓடி போயிட்டா.

இப்போ நானும் அம்மாவும் மட்டும் தனியா. அப்பாவும் தம்பியும் மாமாவும் தூரத்துல இருந்தே என்னை பாத்துட்டு இருக்காங்க.

அம்மா, இப்போ தான் கட்டிப்புடிக்குற அளவு இருக்குறா. அவள கட்டிபுடிச்சுட்டே எழுந்து நின்னுட்டேன். எனக்காகவே அம்மா காத்துகிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு. எத்தன நாள் ஆச்சு, அவள பாக்காம இருந்து. நான் ஏறி உக்காந்துக்கணும்னே தான் தாழ்வாரத்துல ஒரு கிளையை பரப்பி வச்சிருக்குறா. அதுல ஏறி இப்போ உக்காந்தா அம்மா கை உடைஞ்சுடுமோன்னு ஒரு பயம். கீழயே உக்காந்துகிட்டேன்.

அம்மா மேல சாஞ்சு அவள அண்ணாந்து பாத்தா, என்னை பாத்து அழகா சிரிக்குறா. அதுலயும் டக்குன்னு என் கண்ணுல பட்டது ஒரு குருவி கூடு தான். தூக்கணாங்குருவி கூடு மாதிரி, ஒரு குடுமி வச்ச தேங்கா மாதிரி தொங்கிட்டு இருக்கு. உள்ள கண்டிப்பா குருவி இருக்கும். அப்புறம் ரெண்டு அணில், அங்கயும் இங்கயுமா தாவி ஓடி விளையாடிட்டு இருக்கு. இன்னும் நிறைய உயிர்கள் அம்மாவ தேடி வரலாம். அதுக்கு தானே அப்பா ஆசைப் பட்டாங்க. ஏதாவது ஒரு வகைல அம்மாவ தேடி யாராவது ஒருத்தங்க அடைக்கலமா வரணும்னு ஆசை பட்டாங்க.

அம்மா மடியில படுக்குறது எவ்வளவு சுகம் தெரியுமா?

அப்படியே தூங்கிட்டேன். அம்மா என்னை தடவி குடுத்துகிட்டே இருந்தாங்க. நான் தூங்கினப்போ தம்பியும் வந்து அம்மா கிட்ட நின்னுகிட்டே இருந்தானாம். அப்புறமா மாமா பொண்ணு அனுப்பின மெசேஜ்ல இருந்து தெரிஞ்சுகிட்டேன்.

அம்மா என்னை தாலாட்டினத வார்த்தையால விவரிக்கவே முடியாது. ரெண்டு பேரும் அப்படியே லயிச்சு போய் இருந்தோம். அங்க எல்லோரும் சம்ப்ரதாயங்கள முடிச்சுட்டு, சாப்பாடு கொண்டு வந்து அப்பா என்னை எழுப்பினப்போ தான் நான் மறுபடியும் கண்ண முழிச்சே பாத்தேன். அம்மா நிழல்ல சாப்பாடு. எனக்கு அம்மா மாதிரி எல்லோருக்கும் உருண்டை பிடிச்சு குடுக்கணும்னு தோணிச்சு. ஆனா அதுக்கான சான்ஸ் சரியா அமையல. அதனால நான் மட்டும் சாப்டேன். அங்கயே கை கழுவினேன். மறுபடியும் அங்கயே அம்மா கூடவே அவ மேல சாஞ்சு படுத்துகிட்டேன்.

அப்பாவும் தம்பியும், மாமாவும் கொஞ்ச நேரம் அமைதியா என் கூடவே உக்காந்துருந்தாங்க. அவங்களும் அம்மா கூட தான் பேசியிருப்பாங்க. அப்பா அம்மாவ தடவி குடுத்துட்டே இருந்தாங்க. அவங்க காதல் நூறு வருஷம் தொடரணும்.

கிளம்பணும்னு அப்பா என் தோள்ள கைவச்சு சொன்னாங்க. அப்பாவே என்னை தூக்கியும் விட்டாங்க. இப்போ யாரோட ஹெல்ப்பும் எனக்கு தேவையா இல்ல, விடு விடுன்னு திரும்பி கூட பாக்காம கார்ல வந்து பக்கத்து சீட்ல உக்காந்துட்டேன். நீ ஓட்டலயான்னு தம்பி கேட்டான், இல்லன்னு தலைய மட்டும் ஆட்டிட்டு மறுபடியும் கண்ணா மூடி சீட்ல சாஞ்சு படுத்துட்டேன்.

அம்மா கூட இருந்த அவ்வளவு நேரமும் நான் ரொம்ப அமைதியா இருந்தேன்னு எல்லோரும் நினச்சுட்டு இருந்துருப்பாங்க, ஆனா அவங்களுக்கு எப்படி தெரியும், அம்மா கிட்ட நான் சொல்ல வந்த அத்தனை கதையையும் சொல்லிட்டேன்னு.

என்னோட கோபம், அழுகை, விரக்தி, சோகம்னு மட்டுமில்ல, சந்தோசம், சிரிப்பு, புன்னகை, காதலையும் ஏராளமா சொல்லிட்டு வந்தேன். கார் நகர ஆரம்பிச்சப்போ, அம்மா அங்க இருந்தே என்னை கிளை அசைச்சு வழி அனுப்பி வச்சா...

லவ் யூ அம்மா......... உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா
Saturday 26 October 2013

அம்மா மடி தேடி ஓடுறப்போ....இன்னிக்கி அம்மாவோட நினைவு நாள். அவ எங்கள விட்டு போய் மூணு வருஷம் ஆகிடுச்சுன்னு இன்னும் நம்ப முடியல. நானெல்லாம் அம்மா கூட ஒட்டி ஒட்டி இருந்தது ரொம்ப குறைவு. ரொம்ப சந்தோசமா இருக்குறப்போ ஓடி வந்து அம்மா கழுத்த கட்டிக்கிட்டு கன்னத்துல ஒரு முத்தம் குடுத்துட்டு மறுபடியும் ஓடிடுவேன். ஆனா தம்பி அப்படி இல்ல, அவனுக்கு தூங்கணும்னா அம்மா மடி வேணும், ராத்திரி அடுத்த ரூமுக்கு போகணும்னா அம்மா கூட போகணும், அம்மா எங்க போனாலும் முந்தானைய புடிச்சுட்டே போவான். அவனோட பாதுகாப்புன்னு அவன் நினைக்குறது அம்மாவ தான். நானே இவ்வளவு கஷ்டப்படுறேனே, அவன் அப்போ எவ்வளவு பீல் பண்ணுவான். என்னால அம்மாவ நினச்சா உடனே உடைஞ்சு போய் அழ முடியுது, ஆனா அப்பாவும் தம்பியும் என்ன பண்ணுவாங்க?

அம்மா போனப்போ நான் அவ்வளவா அழல, திடீர்னு புடிச்சு கிணத்துல தள்ளி விட்டா ஒரு ஷாக் இருக்குமே, அப்படி இருந்துச்சு எனக்கு. அப்புறம், போக போக பழகிட்டேன்.

Friday 25 October 2013

ஓநாயும் மான்குட்டியும்....


குட்டி குட்டியா கத சொல்றதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். சின்ன பசங்களுக்கு வித்யாசமா சுவாரசியமா கதை சொல்றதோட மட்டுமில்லாம, சாட்டைய எடுத்து விளாசுற மாதிரி சில நேரம் பெரியவங்களுக்கும் நான் ரொம்ப சீரியஸா கதை சொல்ல ஆரம்பிச்சுடுவேன்.

இப்போ நாம அப்படி தான் ரொம்ப சீரியஸா ஒரு கதைக்குள்ள போக போறோம்...

இது ஒரு ஓநாயின் கதை
.........................................................
அது ஒரு அடர்ந்த காடு. எங்க பாத்தாலும் சில்வண்டுகளோட ரீங்காரம் கேட்டுகிட்டே இருக்கும். கூடவே புலியோட உறுமலும், சிங்கத்தோட கர்ஜனையும், நம்மள எல்லாம் மிரள வைக்கும். அந்த அடர்ந்த காட்டுக்குள்ள தான் ஒரு ஓநாய் வாழ்ந்துகிட்டு இருந்துச்சு. அந்த ஓநாயோட வேலையே எங்கயாவது சிறுத்தையோ, புலியோ அடிச்சி சாப்ட்டுட்டு மிச்சம் போடுற இரையை தன்னோடதுன்னு மத்த விலங்குகள்கிட்ட இருந்து சண்டை போட்டு பறிச்சு சாப்டுறது தான்.

உங்கள்ல பல பேரு “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படம் பாத்துருப்பீங்க. அதுல வர்ற ஓநாய் திருந்தி வாழணும்னு ரொம்ப ஆசை படுது, அதுக்காக ரொம்ப போராடி, கடைசியில உயிரையும் விடுது.

ஆனா இந்த ஓநாய் அப்படி இல்ல. இது, அடுத்தவங்க சாப்பாட அடிச்சு புடிச்சி திங்குறதோட இல்லாம நரி மாதிரி தந்திரம் செய்து, புதுசா சின்னஞ்சிறுசா இருக்குற மான் குட்டிகளையும் சேர்த்து வேட்டையாடும். அதுக்கப்புறமா பெரிய மான்கள் கிட்ட போய், தான் வலிய போய் வேட்டையாடலன்னும், அந்த மான்குட்டிளே தன்னோட வீர தீர ப்ரதாபங்கள பாத்து தன்னை தேடி வந்து வலைல விழும்ன்னும் பெருமையா சொல்லிக்குமாம்.

அப்படி தான் ஒருநாள் அந்த ஓநாய்கிட்ட மாட்டிகிட்ட மான்குட்டி ஒண்ணு எப்படியோ தப்பிச்சு இனி இந்த பக்கமே வர கூடாதுன்னு ஓடி  போயிடுச்சாம். அந்த ஓநாய் அத விடவே இல்லையாம். தொரத்தி தொரத்தி எப்படியாவது அந்த மான்குட்டிய வேட்டையாடியே தீரணும்னு முடிவு பண்ணி வெறியோட அது சுத்திகிட்டு இருந்துச்சாம்.

தப்பிச்சு போன மான் குட்டி அப்புறமா அதோட குடும்பத்தோட போய் சேர்ந்துகிச்சாம். குடும்பத்தோட சேர்ந்த மான் குட்டி தைரியசாலி ஆகி அந்த ஓநாயை பாத்து பயப்படவே இல்லையாம். ஆனாலும் அந்த ஓநாயை பாத்தா அந்த மான் குட்டிக்கு ஒரே அருவருப்பாம். காரணம், அந்த ஓநாய்க்கு பன்றியோட குணாதிசயமும் உண்டாம். அது உடம்பு முழுக்க சாக்கடை சகதியோட தான் சுத்துமாம் அது. எங்க அந்த ஓநாய் போற பாதைல தானும் போனா, அந்த சாக்கடை சகதி தன் மேல பட்டுடுமோன்னு அருவருப்புலயே அந்த மான் குட்டி ஓநாய பாக்குறத கூட தவிர்த்துட்டு அது பாதைல போயிடுச்சாம். ஆனா அந்த ஓநாய், சாரி, பன்றி நினச்சுக்குமாம், நம்மள பாத்து பயந்து தான் மான் குட்டி ஒதுங்கி போகுதுன்னு.... அது கடைசி வரை உணரப் போறதே இல்ல, அது ரொம்ப அசிங்கம் புடிச்சதுன்னு...

இன்னொரு குட்டி கதை
........................................................................
ஒரு பூனை இருக்கு.... அது ஒரு வீட்டுக்குள்ள போகுது. அது அங்க போகும் போது, மியாவ், மியாவ்ன்னு எல்லாரையும் பாத்து கத்திகிட்டே போகுது. இல்லனா கண்டிப்பா யாருமே அத கவனிக்க மாட்டாங்க. இது கத்துறதால தொல்ல தாங்க முடியாம சில பேரு அத திரும்பி பாக்குறாங்க. அப்படி திரும்பி பாக்குறவங்கள இது கெட்டியா புடிச்சுட்டு அவங்க காலையே சுத்தி சுத்தி வந்துட்டு இருக்கும். இப்போ அந்த பூனை நினச்சுக்குமாம், எல்லோரும் நம்மள தான் கவனிக்குறாங்க, அதனால நாம பெரிய ஆள்ன்னு......

இப்போ தத்துவம்
........................................

1. இப்போ நாட்டுல அந்த மாதிரி நிறைய ஓநாய்ங்க இருக்கு. இது பின்னாடி நாம தொரத்திட்டு போனா சேறு நம்ம மேலயும் தான் படும். ஆனா அதுக்காக எப்பவுமே அதோட அட்டகாசத்த பொறுத்துகிட்டும் இருக்க முடியாது தானே. கண்டிப்பா இந்த மாதிரியான ஓநாய்களோட முடிவு நல்ல படியா இருக்காது. நாமளும், ஓநாய்ங்கன்னு ஆரம்பத்துலயே அடையாளம் கண்டுக்க தெரிஞ்சுக்கணும். எப்பவுமே ஒரு பாதுக்காப்பான தூரத்துல நின்னுக்கிட்டே நம்மோட சுதந்திரத்த அனுபவிக்குறது நல்லது.


2. மனுசங்கல சில பேரு இந்த பூனை மாதிரி தான். அவங்கள யாருமே கவனிக்கலனா உடனே எதையாவது செய்து மத்தவங்கள கவர பாப்பாங்க... விஷயம் ஒண்ணுமே இருக்காது, ஆனாலும் அத கத்தி கத்தி சொல்லி, மத்தவங்க கால்ல எல்லாம் விழுந்து அவங்க பக்கம் சில பேர இழுத்து வச்சுப்பாங்க. அப்புறம் அவங்க நினச்சுப்பாங்களாம், நாம தான் இந்த குரூப்க்கே டான்-ன்னு. ஆனா உண்மை வேற மாதிரி இருக்கும். இப்படி விடாம அடுத்தவங்கள தொல்லப்படுத்தி தொல்லப்படுத்தி, திரும்பி பாக்க வைக்குறது ரொம்ப நாள் நிலைக்காது. கண்டிப்பா ஒரு நாளு அதோட தொல்ல தாங்காம தூக்கி எறிஞ்சுடுவாங்க....

லொள்ளு ஆப் தி டே..
............................................
என்னைய எல்லாம் இந்த பேஸ் புக்லயோ, வலைப்பூலயோ யாருமே கவனிக்காம விட்டுருந்தா எப்பவோ உருபட்டுருப்பேன். இப்படி கதை எல்லாம் யோசிச்சு சுவத்துல முட்டிகிட்டு இருந்துருக்க மாட்டேன்..

மார்னிங் ரெப்ரெஷ்மென்ட்
............................................................
எல்லாருக்கும் ஒரு புத்துணர்வு குட் மார்னிங்...Thursday 24 October 2013

உன்னோடு ஒரு வாழ்க்கை...!

வான்வெளி நட்சத்திரங்களாய்
நம் இருவருக்கிடையிலும் ஒரு துல்லிய இடைவெளி...

Wednesday 23 October 2013

நான் வால்பொண்ணு இல்லீங்கோ.... ரொம்ப சமத்து


ஒரு நாளு, நல்லா தூங்கிகிட்டு இருந்தேன்.... திடீர்னு அம்மா “போர்த்திட்டு தூங்குறத பாரு, ஒரு பொறுப்பு வேணாம், ஒரு அக்கற வேணாம், நான் ஒருத்தி இருக்குறதால தான இப்படி எல்லாம் இருக்குற, எப்போ உனக்கு புத்தி வர போகுது... ஊரு ஒலகத்துல புள்ளைங்களும் இருக்காங்களே, ஒன்ன மாதிரியா இருக்குதுங்க, எவ்வளவு காலைலயே எழுந்து வேலைய பாக்குதுங்க... அட எரும மாடே இன்னுமா தூங்கிட்டு இருக்க, ஒன்ன சொல்லி தப்பில்ல... ஒன்ன செல்லம் குடுத்து வளத்தேன் பாரு என் தப்பு”

Tuesday 22 October 2013

காதலின் கருவாய் நீ...!

கண்ணாடி முன் நான் நின்றாலும் கூட,
உன்பிம்பம் தானே காண்கின்றேன்...!
புலராத வேளை என் மஞ்சம் எங்கும்
உன்வாசம் தானே நுகர்கின்றேன்...!

Monday 21 October 2013

டாங்கில்ட் (tangled) - வாங்களேன், நாமளும் அவங்க கூட பயணிச்சுட்டு வருவோம்


ஒருநாள் ப்ராஜெக்ட் சம்மந்தமா நிறைய வொர்க்ஸ் இருந்ததால நைட் புல்லா முழிச்சு இருக்க வேண்டி இருந்தது. அப்போ ரிலாக்ஸ் பண்றதுக்காக, பிரேக்ல புல்லா டாங்கில்ட் (tangled) படம் தான் பாத்துட்டு இருந்தேன்...

Saturday 19 October 2013

உங்களுக்கு பிடிச்ச பத்து விஷயங்கள் என்ன?


சில நேரங்கள்ல, நமக்கு இருக்குற பெரிய பெரிய ஆசைகள் விடுத்து, குட்டி குட்டியா நமக்கு பிடிச்ச விசயங்கள பத்தி யோசிச்சு பாத்தோம்னா மனசு அவ்வளவு சந்தோசமா இருக்கும்.

Friday 18 October 2013

நீ என் அம்மா தானா?

அம்மா,

நீ இப்போ எங்க இருக்கனு தெரியல

எப்படி இருக்கனும் தெரியல

நீ எனக்கு அம்மா தானானும் தெரியல

ஏன்னு கேக்குறியா?

Thursday 17 October 2013

ஒரு நரியும் காக்காவும், முயலும், ஆமையும் கூடவே பவ்-வவ்வும் பாட்டியும்....


ஒரு ஊருல ஒரு நரி இருந்துச்சாம். அந்த நரி அப்படியே ரோட்டோரமா நடந்து வரப்ப நிலாவுல வடை சுட்டுட்டு இருந்த பாட்டி கை தவறி ரெண்டு வடை கீழ விழுந்துடுச்சாம். இத பாத்துட்டு இருந்த நரி, ரெண்டு வடையையும் தூக்கிட்டு ஜாலியா ரோட்ல நடந்து வந்துச்சாம்.

Wednesday 16 October 2013

இது காதல் இல்லையா?

உன் கண் அசைந்தால்
நான் காற்றில் மிதப்பேன்...
உன் கைப்பிடித்தால் நான் 
நடை துறப்பேன்...
இது காதல் இல்லையா?

Tuesday 15 October 2013

மீன் பிடிக்க போவோமா? தவளை பிடிக்க போவோமா?


காலேஜ் அஞ்சு நாள் லீவ் விட்டாலும் விட்டாங்க, ஊர்ல இருந்து தங்கச்சிங்க எல்லாம் வந்துட்டாங்க. ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு ப்ளான் போட்டு வந்தவங்களுக்கு சனிகிழமை நான் காலேஜ் போயிட்டேன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் அப்செட் ஆகிட்டதா சொன்னாங்க... நானும் அப்படியே நம்புற மாதிரியே நம்பாம அவங்கள மேலும் கீழும் பாத்துட்டு ரூம்க்கு போனா, ரூம் எல்லாம் தலைகீழா இருக்கு. அம்மாவோட சாரி எல்லாம் எடுத்து குலைச்சு போட்டுருந்தாங்க. ஒருத்தி, என்னோட ஜீன்ஸ் எடுத்து போட்டுட்டு இருக்கா.

Monday 14 October 2013

இது ஒரு நட்பின் கதை....


சின்ன வயசுல இருந்தே என்கிட்ட ஒரு பழக்கம்... எனக்கு தோணுற விசயம் தான் சரினு ஆர்க்யூ பண்ணுவேன், அதுலயும் அப்பா என்ன சொன்னாலும் அது சரியில்லனு சண்ட போடுவேன்... அப்பா எங்கயாவது போககூடாதுனு சொன்னா அங்க தான் போவேன்னு அடம் பிடிப்பேன்...

Saturday 12 October 2013

என்ன மாதிரி சமூகத்துல வாழ்றோம் நாம???? கடுப்பேத்துறாங்க மை லார்ட்.....


வழக்கமா ரிலாக்ஸ் பண்ண ஜாலியா எப்.பி பக்கம் எட்டி பாத்துட்டு போறது வழக்கம். நான் எப்பவுமே வந்தா ஒரு ஸ்டேடஸ் போடுவேன், யாராவது வந்து கமண்ட் போட்டா ஜாலியா கொஞ்சம் அரட்டை அடிப்பேன், அப்புறம் வேலைய பாக்க போயிடுவேன்...

Friday 11 October 2013

வாழ்வோடு உறைந்த வீடு...!

உச்சந்தலையிலே குட்டையாய் கொண்டை,
அதிலே ஒற்றை ரோஜா,
கைகளில் கண்ணாடி வளையல்கள்,
கால்களில் இசையமைக்கும் வெள்ளிக்கொலுசுகள்,
மேனி அலங்கரித்த சிகப்பு பச்சை பட்டு பாவாடை...

Thursday 10 October 2013

முதல் ஸ்பரிசம்...!


இது உனக்கும் எனக்குமான
முதல் ஸ்பரிசம்…!

உன்னை என்னிடத்தில்
கையளித்தவன் முகத்தை பாரேன்…
தான் ஆண்மகனென்று நிரூபித்த திமிர்…
ஒற்றை கண்ணடித்து
என்னை பரவசமாய் பார்க்கிறான்…!

Wednesday 9 October 2013

ரொம்ப அழாதீங்க.... மூணே மூணு தத்துவம் தான்...


அரைகுறையா ஒரு முழிப்பு, அங்க இங்க போற காலடி சத்தங்கள் ஒரு பக்கம், அடுப்படியில பாத்திரம் உருளுற சத்தம் ஒரு பக்கம், விசிலடிக்குற குக்கர் ஒரு பக்கம், மூக்கை துளைக்குற கடுகு வாசனை ஒரு பக்கம், இப்படி எல்லாமா சேர்ந்து மெய் மறந்து தலயனையை கட்டிக்கிட்டு இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினா அட, அட, அட..... நல்லா தான் இருக்கும்..... ஆனாலும் கடமைன்னு ஒண்ணு இருக்கே... எப்படியும் எழுந்து தான் ஆகணும்....

Tuesday 8 October 2013

என் நீண்டதொரு பயணம் உன்னோடு.....

என்னை சுற்றி ஒரு வட்டமிட்டு
அதற்குள் சந்தோஷ செடிகளை
மட்டுமே நட்டு வைத்து
முட்கள் இருந்தும் அதை அலட்சியமாய்
தாண்டி குதித்து... ஒற்றைக்கால்
நடனமிட்டு கொண்டிருந்தவள் நான்...

Monday 7 October 2013

வீட்ல யாரும் இல்லப்பா...... லொள்ளு பாட்டி


ஒரு அழகான காடு... லேசா மழை தூறல்... ஒரு பட்டாம்பூச்சி ஜாலியா நனஞ்சுகிட்டே ஒவ்வொரு பூவா போய் உக்காந்து பொறுமையா அதோட அழக ரசிச்சுட்டே தேன் குடிக்குது. அப்புறம் அதுக்கு வயிறு நிறைஞ்சதும் போய் தூங்கலாம்னு தற்காலிகமா அதோட கூட்டுப் புழு வாழ்க்கைக்கு திரும்பிடுச்சு.

Saturday 5 October 2013

வாங்க வாங்க, வந்து வாழ்த்திட்டு போங்க


சண்டை போடுறதுக்கு நமக்கு ஒருத்தர் மேல வெறுப்பு தான் இருக்கணும்னு இல்ல, ஓவரா அன்பு இருந்தாலும் அந்த இடத்துல அடிதடி தான்.

Friday 4 October 2013

ஓட்டபந்தயத்துல கலந்துகிட்ட முயல் செத்து போச்சாமே... யாராவது கேளுங்களேன்..என்ன சொல்லணும், ஏன் சொல்லணும், எதுக்கு சொல்லணும், எப்படி சொல்லணும் அப்படின்னு சொல்றதுலயே பல மாதிரி இருந்தாலும் இந்த காலை வணக்கம் மட்டும் ஒரே மாதிரி சொல்லணுங்க.. எப்படி தெரியுமா, சும்மா மனச ப்ரெஷா வச்சுக்கிட்டு, சிரிச்சுகிட்டே, குழந்தை மனசோட சொல்லணும். அதனால நான் இப்போ உங்களுக்கெல்லாம் சிரிச்சுட்டே குட் மார்னிங் சொல்ல போறேன், எங்க நீங்களும் அதே குழந்தை மனசோட ஒரு குட் மார்னிங் சொல்லுங்க பாக்கலாம்....

Thursday 3 October 2013

பவளமல்லி வாசம்....

சில்வண்டின் ரீங்காரமும்
தலையாட்டும் கொடிகளும்
அப்படியே நின்று விட்டதாய்
ஒரு உணர்வு...

நீ வருவாயென
அசைக்காமல் வெறித்திருக்கும்
பார்வைகளின் திரையில்
உன் பிம்பம் மட்டுமே நிலாடுகிறது...

Tuesday 1 October 2013

உன்னை பற்றியழ வந்துவிடு...


காற்றை கிழித்து
பெருங்கூச்சலாய் புறப்படுகிறது
உள்ளிருந்து ஓர் ஆங்காரம்...