சாயங்காலம். மணி ஆறு பத்து. நான் பாட்டுக்கு பேஸ்புக்ல குரூப் மெஸ்சேஜ் போட்டுட்டு அப்படியே ராஜா ராணி படத்தை பாத்துட்டு இருந்தேன்.
திடீர்னு ஹோய்ன்னு ஒரு குரல். அதுவும் என் ரொம்ப பக்கத்துல. பட்டுன்னு ஒரு நிமிஷம் இதயத்துடிப்பு நின்னுடுச்சு. யார்ரா அது நம்ம பெட் ரூமுக்குள்ள நம்ம பக்கத்துலன்னு. பாத்தா பக்கத்து வீட்டுப் பொண்ணு. இவ எப்ப என் ரூம் கதவ தொறந்தா, எப்ப பக்கத்துல வந்தான்னு ஒண்ணுமே கவனிக்காம தேமேன்னு படத்தப் பாத்துட்டு இருந்துருக்கேன்னா பாத்துக்கோங்களேன்.
எங்கயாவது வெளில போவோமான்னு கேட்டா. இல்ல, இருட்ட ஆரம்பிச்சிடுச்சு. இனி வெளில போனா வீட்ல பாட்டி திட்டுவாங்கன்னு சொன்னேன். பாட்டி எங்கயோ போன மாதிரி இருந்துச்சே, இப்ப எல்லாம் வர மாட்டாங்கன்னு சொன்னா. அடப் பாவிகளா, என்னை விட பாட்டிய நீங்க அதிகமா வாட்ச் பண்ணுவீங்க போலயேன்னு நினச்சுட்டு, நான் அப்பா கிட்ட பெர்மிசன் கேக்கணும்னேன். என்ன நினச்சாளோ, சரி, நான் போயிட்டு வரேன்னு போய்ட்டா.
அவ பாட்டுக்கு சொல்லிட்டு போய்ட்டா. இப்ப என் மனசுக்குள்ள ஒரு ஆசை. வீட்டை விட்டு இப்படி ராத்திரி நேரம் வெளில கிளம்பி ரொம்ப நாள் ஆகிடுச்சே, போய் தான் பாப்போமான்னு. நந்து வீட்டுக்கு போன் அடிச்சேன், “அடியே வெளில போறேன், வரியா”ன்னு கேட்டு.
அடுத்த பத்தாவது நிமிசத்துல நந்துவும், அவ ப்ரெண்ட் முருகேசும் என் வீட்ல ஆஜர். இந்த கார் சாவி எங்கன்னு தெரியலயேன்னு நான் சொல்ல, அவ ஓடிப் போய் பாட்டி ஒளிச்சு வச்சிருந்த கார் சாவிய எடுத்துட்டு வந்துட்டா. வெளில போறோம், எதுக்கும் செலவுக்கு கொஞ்சம் காசு எடுத்து வைப்போம்னு இருநூறு ரூபாய பேக்ல இருந்து எடுத்து யார் கிட்டயோ குடுத்தேன்.
அப்புறம் மடமடன்னு கால்ல பேன்ட்-எய்ட் சுத்தி, ஒரு சுடிதார எடுத்து போட்டுட்டு ஆறரை மணிக்கு கிளம்பிட்டேன். வாக்கர் வச்சு, வாசலுக்கு வந்து, அங்க இருந்து படி இறங்கி, கார் செட்ல போய் கார எடுத்துட்டு வெளில வந்தோம்.
நல்ல மழை பெஞ்சு, அப்பவே கும்மிருட்டு பரவ ஆரம்பிச்சிடுச்சு. சரி, எங்கப் போகலாம்னு யோசிச்சா ஒரு ஐடியாவும் தெரியல. நந்து மெதுவா பானிபூரி சாப்பிடப் போவோமா அக்கான்னு கேட்டா. அதுவும் சரி தான், கடைசியா அத சாப்ட்டு ஒரு வாரம் ஆகிடுச்சுன்னு முடிவெடுத்து, மெயின் ரோட்டுல போனா என்ன த்ரில் இருக்கு, நாம ஊர் காட்டுக்குள்ளோட வண்டிய எடுத்துட்டு போவோம்னு முடிவு பண்ணி தெருவுக்குள்ள வண்டிய விட்டேன்.
வழக்கமா நான் கொக்கு, மைனா, காக்கா, வாத்து எல்லாம் பாக்கப் போற வழி தான். ஆனாலும் இருட்டா இருந்ததால அந்த குளக்கரையையும், வயக்காட்டையும் கொஞ்சம் வேகமாவே கடந்துப் போனேன். எதிர்ல வர்ற வண்டி எல்லாம் அவ்வளவு பாஸ்ட்டா வருது. கொஞ்சம் பாதைல இருந்து விலகினாலும் கடக்காலுக்குள்ள வண்டியோட விழ வேண்டியது தான். ஆனாலும் எப்படியோ வேகவேகமா எல்லாத்தையும் கடந்து சிட்டிக்குள்ள நுழைஞ்சு, பானிப்பூரி விக்குற வண்டிகிட்ட கொண்டு போய் காரை நிறுத்தினேன்.
சரி, காசு எங்கன்னு தேடினா காச காணோம். வீட்ல வச்சு யார் கிட்டயோ குடுத்தேனேன்னு ஒரே யோசனையா போச்சு. நந்துகிட்ட ஏய், காச உன்கிட்ட தான குடுத்தேன்னேன். அவ, நீ எங்க என்கிட்ட குடுத்த, நான் சாவி எடுக்கல போனேன்னா. முருகேசு, என்கிட்ட குடுக்கலன்னு படபடன்னு தலையாட்டினான். எப்பவுமே கார் டேஷ் போர்ட்ல ஐநூறு ரூபா எமர்ஜென்சி வச்சிருப்பேன். காசு எங்க போச்சுன்னு குழம்பிட்டே சரி, அந்த ஐநூறு ரூபாய வச்சு அட்ஜஸ்ட் பண்ண வேண்டியது தான்னு குழப்பத்தோடவே கார விட்டு இறங்கினேன். அந்த பய முருகேசு கலகலன்னு சிரிக்கான்.
என்னலேன்னு கேட்டா, காச என்கிட்ட தான் குடுத்த, எப்படியும் நீ மறந்துருவ, அதான் உன்னை டெஸ்ட் பண்ணினேன்ங்குறான் கொரங்கு. கிர்ர்ர்ர்.... காச வெடுக்குன்னு அவன் கைல இருந்து பிடிங்கிட்டு ஒரு முறை முறைச்சேன். அவன் அசராம வெவேவேங்குறான். இந்த பயல என்ன பண்ண. என்ன சொன்னாலும் நமக்கு தான் பல்ப் குடுப்பான். சரி மன்னிச்சு விட்ருவோம்னு நினச்சு மன்னிச்சு விட்டுட்டேன்.
எனக்கு ரெண்டு ப்ளேட் மசாலா பூரி, நந்துவுக்கு ஒண்ணு, முருகேசுக்கு ஒண்ணுன்னு ஆர்டர் பண்ணினேன். ஹலோ, அதென்ன உங்களுக்கு மட்டும் ரெண்டு, எனக்கும் வேணும்னு முருகேஷ் அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டான். முதல்ல இத தின்னுடா, அப்புறமா வாங்கித் தரேன்னு அவன் தலைல ஒரு குட்டு வச்சு, மசாலாபூரி தின்னு முடிச்சாச்சு. நந்து மெதுவா அக்கா பானிபூரின்னு இழுக்க, சரின்னு ஆளுக்கு ஒரு ப்ளேட் பானிபூரி ஆர்டர் பண்ணி அதையும் காலிப் பண்ணியாச்சு.
எல்லாம் முடிஞ்சு கிளம்பலாம்னு நினச்சா, முருகேஷ் மறுபடியும் மசாலா பூரி வாங்கித் தருவேன்னு சொன்னல, அத வாங்கிக் குடுன்னு அடம் பிடிக்குறான். எனக்கா, ஒரே கோவம். டேய், இந்தா பாரு, வாங்கித் தரத பத்தி ஒண்ணும் பிரச்சனை இல்ல, ஆனா எல்லாத்தையும் திங்கணும், தெரிஞ்சுதான்னு மிரட்டினதும் பய, நீ மட்டும் ரெண்டு ப்ளேட் தின்னல, சின்னப் புள்ளைக்கு வாங்கித் தராம ஏமாத்துறன்னு பொசுக்குன்னு கூட்டத்துல வச்சு மானத்த வாங்கிட்டான். சரி, சரின்னு அவனுக்கு இன்னொரு ப்ளேட் ஆர்டர் பண்ணினேன். ரெண்டு வாய் எடுத்து தின்னவன், எனக்கு போதும் இந்தான்னு என்கிட்ட நீட்டிட்டான்.
எனக்கு அத வாங்கி தின்ன ஆசை தான், ஆனாலும் மூணு ப்ளேட் மசாலா பூரி தின்னான்னு யார் கிட்டயாவது இவன் போட்டுக் குடுத்துட்டா மானம் மரியாத எல்லாம் போயிடுமேன்னு கொஞ்சம் யோசிச்சேன். அப்புறம், அட, இதெல்லாம் நமக்கு புதுசா என்னன்னு மானம் மரியாதைய எல்லாம் தூக்கி ஓரமா வச்சுட்டு மசாலா பூரிய ஒரு பிடி பிடிச்சேன். நந்து அக்கா எனக்கு சாக்லேட் வேணும்னு அடம்பிடிக்க, அதையும் வாங்கிக் குடுத்து வண்டிய ஸ்டார்ட் பண்ணினேன்.
அப்ப பாத்து கோவில் யானை ஒண்ணு க்ராஸ் ஆச்சு. ஹை யான யானைன்னு நந்து குதிக்க ஆரம்பிச்சுட்டா. ஆமா, இவ பெரிய அஞ்சலி பாப்பா, யானைய கண்டதும் சீன் போடுறான்னு முருகேசு அவள நக்கல் அடிக்க, போல, நான் யானைய போய் தொடப்போறேன்னு டக்குன்னு கார் கதவ தொறந்துட்டு ஓட ஆரம்பிச்சுட்டா.
ஏய், ஏய், நந்துன்னு நான் உக்காந்துட்டே கத்துறேன். முருகேசு எங்கன்னு பாத்தா பயத்துல கோழி குஞ்சு மாதிரி பதுங்கி போய் கிடக்கான் பின்னால உள்ள சீட்ல. ஹஹா... இந்தாடி, காசு குடுன்னு மிச்சம் இருந்த ஒரே அஞ்சு ரூபாயையும் அவ கிட்ட நீட்ட, ஓடிட்டு இருந்தவ அப்படியே திரும்பி வந்து காச பிடிங்கிட்டு மறுபடியும் யானை கிட்ட ஓடினா.
அப்புறமா, கொஞ்ச நேரம் யானைய தடவி பாத்து, அது துதிக்கைய எடுத்து அவ தலைல வைக்க, பிள்ளைக்கு சந்தோசம் தாங்கல. யானை அப்படியே நடந்து போய்ட்டே இருக்க, இவ திரும்பி திரும்பி பாத்து அதுக்கு டாட்டா காட்டிகிட்டே வந்தா.
இப்ப மணி ஏழரை. கும் இருட்டு. அப்படியே மெயின் ரோடு பிடிச்சு போனா பயம் இல்லாம வீடு போய் சேர்ந்துடலாம். ஆனாலும் என்னவோ ஒரு அசாத்திய துணிச்சல் மனசுக்குள்ள. மறுபடியும் வந்த வழியே போனா என்னன்னு. ரைட்டு, முடிவு எடுத்தாச்சு. இனி மாறக் கூடாது.
அந்த வழி மனுசங்க அதிகமா போகாத வழி. ஒரு சின்ன கார் போற அளவு தான் இடம் இருக்கும். எதுத்தாப்புல ஒரு வண்டி வந்துச்சுனாலே க்ராஸ் பண்ணி வர ரொம்ப கஷ்டம். இப்படி தான் போன வாரம் ஒருநாள் பகல் நேரத்துலயே ஒரு டூ-வீலர் மேல கொண்டு போய் மோதினேன். ஆனா தப்பு அவர் மேலங்குரதால ஒண்ணுமே சொல்லாம சாரி கேட்டுட்டு போயிருந்தார். இப்ப அங்க தான் போயிட்டு இருக்கேன். ஹெட் லைட் வேற டிம்மா வச்சுட்டு ஆம வேகத்துல தடக் தடக்ன்னு பதைபதைக்க ஓட்டிகிட்டு இருக்கேன். வழில ஆள் நடமாட்டமே இல்ல. வலது பக்கமா இருக்குற வயல்ல தண்ணி சலம்புர சத்தம். என்னடான்னு பாத்தா ரெண்டு நாய்ங்க பட்டுன்னு வண்டி குறுக்க ஓடி வந்துடுச்சு.
பட்டுன்னு பிரேக் அடிச்சு வண்டிய நிறுத்தினா இந்த முருகேசு ஊஊஊ....ன்னு ஊளை போடுறான். டேய், அடங்குடா, நாம இப்ப சுடுகாட்ட க்ராஸ் பண்ணப் போறோம், இரு இரு, பேய் கிட்ட உன்னை புடிச்சு குடுக்குறேன்னு சொன்னதும் பையன் பயத்துல கப்சிப்.
சுடுகாட்டை க்ராஸ் பண்ணும் போது கொஞ்சம் தூரமா உத்துப் பாத்தேன். எங்கயோ ஒரு விளக்கு வெளிச்சத்துல என்னவோ அசைஞ்ச மாதிரி இருந்துச்சு. ஒரு வேளை பேயா இருக்குமோ? அடி ஆத்தி.... வேணாம் காயு, பேய் எல்லாம் உனக்கு பிரெண்ட் தான், ஆனா இந்த நேரத்துல உனக்கு அந்த பிரெண்ட்ஷிப் தேவையான்னு எனக்கு நானே கேள்விக் கேட்டுகிட்டேன். வேணாம், வேணாம், எதுக்கும் நாளைக்கு காலைல வந்து பேய்க்கு ஹாய் சொல்லலாம்னு அப்படியே பார்வைய பாதைக்கு திருப்பி பொம்ம மாதிரி ஸ்டியரிங்க பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.
அடுத்து வந்தது குளம். இந்த பக்கம் குளம். அந்த பக்கம் வயல். அதுவும் அதள பாதாளத்துல இருக்கு. இருக்குறதுலயே அது தான் குறுகலான பாதை. ஒரு நிமிசப் பயணம். அத தாண்டிட்டேன்னா அப்புறம் ஊருக்குள்ள நுழஞ்சிடலாம். திடீர்னு முருகேசு அக்கா, வேகமா போக்கான்னான். அடேய், இருடா, நானே பயத்துல தவந்துட்டு இருக்கேன், இன்னும் கொஞ்சம் தான், தாண்டிடலாம்னு சொல்லிட்டு இருக்கும் போதே, நந்து ஹாஹான்னு சிரிக்க ஆரம்பிச்சுட்டா.
என்னடி, பேய் மாதிரி சிரிக்குறன்னு நான் கேட்டதும், வேகமா போனா, அப்படியே மேல போய்டலாம்க்கா. அங்க எல்லாம் நமக்கு ப்ரீ டிக்கெட். ப்ரீயோ ப்ரீன்னு மறுபடியும் சிரிக்குறா. வெளில இந்த சில்வண்டுங்க வேற கர்ட் கர்ட்ன்னு சத்தம் போடுதுங்க. அவ்வ்வ்வ், தெரியாம வந்துட்டோமோ, சரி, இன்னும் பத்தடி தானன்னு யோசிச்சுட்டு இருக்குறப்பவே எதுத்தாப்புல ஒரு ஆட்டோ. அய்யயோ, இப்ப என்ன பண்றதுன்னு வண்டிய அப்படியே நிறுத்திட்டேன். அப்புறம் ஆட்டோக்காரர் என்ன நினச்சாரோ, அவர் வண்டிய ரிவேர்ஸ் எடுக்க, நான் பாட்டுக்கு அந்த இடத்த கிராஸ் பண்ணி வந்துட்டேன்.
வீட்டுக்கு வந்ததும் பாட்டி, எங்க போய் தொலைஞ்சீங்கன்னு கத்துனாங்க. அக்காவோட பாய் ப்ரெண்ட பாத்துட்டு வரோம் பாட்டின்னு நந்து சொன்னா. ஆஹா, இது நல்ல ஐடியாவா இருக்கே. பிற்காலத்துல ஒரு நாள் உதவும்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன்.
பை நந்து, பை முருகேஷ்ன்னு சொல்லிட்டே ரூமுக்குள்ள வந்து கதவ அடச்சுட்டேன். ஒரு பொட்டப்புள்ள இப்படியா வீட்டுக்கு அடங்காம திரியுறதுன்னு பாட்டி குரல் கொஞ்ச நேரம் கேட்டுட்டு இருந்துச்சு.
நமக்கு எதுக்கு அதெல்லாம்.... கொர்ர்ர்ர்....
.